உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 3/003-033

விக்கிமூலம் இலிருந்து

3. சுவாமிமலை சுவாமிநாதன்

சரதச் சக்கவரவர்த்தி அயோத்தியிலிருந்து அரசாள்கிறார். சக்கரவர்த்தித் திருமகனான ராமன் மிதிலை சென்று வில்லொடித்து ஜனகனது மகளாகிய சீதையை மணம் முடித்துத் திரும்புகிறான். வரும் வழியில் எதிர்த்த பரசுராமனது கர்வத்தையும் அடக்கி, வெற்றி காணுகிறான். இதனால் எல்லாம் மகிழ்ச்சியுற்ற தசரதர், தமக்கு வயது முதிர்ந்துவிட்டது என்ற காரணம் காட்டி ராஜ்ய பாரத்தைத் தம் சீமந்த புத்திரனான ராமனிடம் கொடுத்துவிட்டுக் காடு சென்று தவம் செய்ய விரும்புகிறார்.

அதற்காகக் குலகுருவாகிய வசிட்டர், சுமந்திரர் முதலான மந்திரி பிரதானிகளையெல்லாம் அழைத்து அவர்களிடம் கலந்து ஆலோசிக்கிறார். ராமனுக்குப் பட்டம் சூட்டுவதற்கு எல்லாரும் ஏகமனதாகச் சம்மதம் தெரிவிக்கிறார்கள். 'அறத்தின் மூர்த்தியாயிற்றே அவன், மன்னுயிர்க்கு ராமனிற் சிறந்தவர் உண்டோ ?' என்றெல்லாம் பாராட்டுகிறார்கள். இதனைக் கேட்ட தசரதர் பெருமகிழ்ச்சி அடைகிறார், ராமனைப் பெற்ற நாளிலும், அவன் அன்று அரனது வில்லை ஒடித்துத் தன் வீரத்தைக் காட்டிய நாளிலும், ஏன், பின்னர் பரசுராமனது கர்வத்தை அடக்கிய நாளிலும் பெற்ற மகிழ்ச்சியைவிடத் தம் மந்திரிக் கிழவர்கள் அவனைப் பாராட்டியபோது பெற்ற மகிழ்ச்சி பெரிதாக இருந்தது. இதைக் கவிச் சக்கரவர்த்தி கம்பன் அழகாகப் பாடுகிறான்.

மற்று, அவன் சொன்ன
வாசகம் கேட்டலும்; மகனைப்
பெற்ற அன்றினும், பிஞ்ஞகன்
பிடித்த அப் பெருவில்
இற்ற அன்றினும் எறி
மழுவாளன் இழுக்கம்
உற்ற அன்றினும், பெரியது ஓர்
உவகையன் ஆனான்.

இந்தப் பாட்டைப் படிக்கும்போது, வள்ளுவர் சொன்ன,

ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும் - தன் மகனைச் .
சான்றோன் எனக் கேட்ட தாய்!

என்ற குறள் ஞாபகத்துக்கு வராமல் போகாது. இப்படிப் பெற்ற தாய் மகிழ்கிறாள்; பெற்ற தந்தை மகிழ்கிறார், தம் மகனைப் பிறர் சான்றோன் என்று சொல்லக் கேட்டபோது. ஆனால் தம் பிள்ளையையே குருவாக ஏற்றுக் கொண்ட தந்தை ஒருவரும் உண்டு. அவரைப் பற்றி இந்த வள்ளுவரும் கம்பனும் ஒன்றுமே சொல்கின்றார்கள் இல்லை. 'தம்மில் தம் மக்கள் அறிவுடையராக' இருப்பதைப் பெற்றோர் விரும்புவது இயல்பு. ஆனால் பிள்ளையே தனக்குக் குருவாக முனைந்து எழுவதை எந்தத் தந்தையும் விரும்புவதில்லை. ஆனால் இறைவனாகிய தந்தை எல்லாத் தந்தைகளுக்கும் மேம்பட்டவராயிற்றே.

இறைவனாகிய தந்தைக்கும் பிரணவத்தின் பொருள் உரைக்கிறேன் என்று குமரனாம் பிள்ளை .கூறியபொழுது, 'சரி அப்பா! நீ குருவாகவும் நான் சீடனாகவும் இருந்து கேட்கிறேன்' என்று சொன்னவர் அல்லவா? இப்படி மகன் குருவாகவும், தந்தை சீடனாகவும் அமைந்த கதை ரஸமான ஒன்று. கதை இதுதான், சிருஷ்டித் தொழில் செய்கிறவன் பிரமன். அவன் குமரனைச் சிறு பிள்ளை தானே என்று மதிக்காமல் நடக்கிறார். குமரனோ பிரமனை அழைத்து, பிரவணப் பொருளுக்கு உரை கேட்கிறான். பிரமன் விழிக்கிறான். உடனே குமரன் பிரமனைக் குட்டிச் சிறையிருத்தி விட்டுத் தானே சிருஷ்டித் தொழிலை நடத்துகிறான்.

இதை அறிகிறார் சிவபெருமான். குமரனை அழைத்து, பிரமனைச் சிறையில் அடைத்ததற்குக் காரணம் கேட்கிறார். 'அவனுக்குப் பிரணவப் பொருள் தெரியவில்லை. அவனை வைத்து என்ன பண்ணுவது?' என்கிறான். இறைவனோ 'அப்போ உனக்குத் தெரியுமா? என்கிறார். 'ஓ! தெரியுமே' என்கிறான் குமரன். 'அதைச் சொல்லு, பார்ப்போம்' என்று கேட்கிறார். ஓ! உமக்குமே தெரியாதா? அதைத் தெரிய வேண்டுமானால் நீர் முறைப்படி சீடனாக அடங்கி நின்று கேட்டால் சொல்லுவோம்' என்கிறான். அப்படியே நின்று கேட்கிறார். முருகனும் பிரணவப் பொருளை இறைவனாகிய தந்தைக்கு உபதேசிக்கிறான். இப்படித்தான் சாமிக்கும் நாதனாக அமைந்து அந்தச் சாமிநாதன் குருமூர்த்தியாக, ஞானப் பண்டிதனாக இருந்தருளுகிறான். இந்தச் சாமிநாதனைக் கண்டு தொழுது, நாமும் பிரணவப் பொருள் தெரிந்து கொள்ள - விரும்பினால் சுவாமிமலைக்குச் செல்லவேண்டும் அந்தச் சுவாமிமலை என்னும் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

சுவாமிமலை தஞ்சை ஜில்லாவில் கும்பகோணத்துக்கு மூன்று மைல் தொலைவில் உள்ள சிறிய ஊர். கும்பகோணத்தில் இறங்கி, கும்பகோணம் - திருவையாறு ரோட்டில் மூன்று மைல் மேற்கு நோக்கிச் சென்றாலும் தலத்துக்கு வந்து சேரலாம். ரயிலில் செல்பவர்கள் எல்லாம் சுவாமிமலை ஸ்டேஷனிலே இறங்கி ஒரு. மைல் வடக்கு நோக்கிச் சென்றாலும் சென்று சேரலாம். நாம் ரயிலிலேயே போகலாம். அதுதானே சௌகரியமானது. ஸ்டேஷனில் வண்டிகள் கிடைக்கும். வண்டியைவிடக் கால் வண்டியே சிறப்பானது. காலாலே நடந்து சென்றால் இன்னொரு கோயிலையும் பார்த்து விடலாம். தம்பியைக் கண்டு தரிசிக்கப் போகிறவர்கள் அண்ணனைத் தரிசிக்காமல் போகலாமா? அப்படி நேரே வருவதைச் சுவாமிநாதனே விரும்ப மாட்டானே, அவன் சூடு கண்ட பூனையாயிற்றே. வள்ளியை மணக்க விரும்பிய போது அண்ணனை மறந்தது காரணமாகத்தானே. அவனுக்கு இடையூறுக்குமேல் இடையூறு நிகழ்ந்தது. பின்னர் அண்ணன் விநாயகரை வணங்கியபின்தானே காதலில் வெற்றி பெறவும் முடிந்தது.

ஆதலால் நாமும் வழியில் உள்ள வலஞ்சுழி விநாயகரை வணங்கி விடை பெற்று மேல் நடக்கலாம். இங்குள்ள விநாயகர் சுவேத விநாயகர் என்னும் வெள்ளை நாயகர், மூர்த்தி சிறிதுதான் என்றாலும் கீர்த்தி பெரிது. அமுதக்கலசம் கொண்டு வந்தவர் என்ற புகழ் பெற்றவர். தேவேந்திரன் ஏரண்ட முனிவர் முதலியோர். வணங்கி அருள் பெற்றிருக்கிறார்கள். அந்தப் பழைய காலத்தில் காவிரி அங்கு வலம் சுழித்துச் சென்றிருக்கிறது. அதனால் வலஞ்சுழி என்று பெயர் பெற்றிருக்கிறது.

வெள்ளை விநாயகர் கோயில் மண்டபம் எல்லாம் மிக்கச் சிற்ப வேலைகள் நிறைந்தது. மண்டப வாயிலில் கல்லிலே செய்திருக்கும் வேலைகளை யெல்லாம் தூக்கி அடிப்பதாய் இருக்கிறது. இந்த விநாயகர் நிழலிலேயே ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள் அங்குள்ள கற்பகநாதரும் பெரியநாயகியும், இத் தலத்துக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார்.

என்ன புண்ணியம் செய்தனை
நெஞ்சமே! இருங்கடல் வையத்து
முன்னம் நீ புரி நல்வினைப்
பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு
வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி ஆதரித்து ஏத்தியும் -
வழிபடும் அதனாலே!

என்று பாடியிருக்கிறார். நாமும் என்ன என்ன புண்ணியம் செய்திருக்கிறோமோ, வலஞ்சுழி வாணனையும் அவனுக்கும் முந்தி வாயில் முகப்பிலேயே வரவேற்கும். வெள்ளை விநாயகனையும் கண்டு தொழ? இனிமேல் நடக்கலாம் சோமசுந்தரனையும் முந்திக்கொண்டு குரு மூர்த்தியாக நிற்கும் சாமிநாதனைக் காண. போகும் வழியிலே அரசிலாறு காவிரியை எல்லாம் கடக்கவேண்டும், காவிரியையும் அதில் ஓடும் தண்ணீரையும் கண்டால் ஒரு முழுக்குப் போடத் தோன்றும். ஆதலால் காவிரியில் இறங்கி ஒரு முழுக்குப் போட்டுவிட்டு மேலும் நடந்தால், தெற்கு வீதியில் உள்ள கோயில் வாயிலை வந்து அடையலாம்.

கோயிலின் சந்நிதி வாயில் அது அல்ல. கீழ்ப் புறம்தான். ஆனால் அது எப்போதும் மூடியே வைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து கோயிலைப் பார்த்தால் ஏதோ ஒரு பங்களா மாதிரி இருக்குமே தவிர கோயிலாகத் தெரியாது. அதனால் தான் இந்தத் தெற்கு வாயிலில் சுவாமிநாதன் ஒரு கோபுரம் அமைத்து அதனையே பிரதான வாயிலாக அமைத்திருக்கிறார்கள். நிர்வாகிகள். மேலும் இந்த வாயிலையும் அதற்கடுத்த கல்யாண மண்டபத்தையும் கடந்து சென்றால், அன்னை மீனாட்சி நம்மை எதிர்நோக்கி வரவேற்பாள். பெரும்பெயர் முருகனாம். அவளது பிள்ளையைத் தரிசிக்க வருபவர்கள் ஆயிற்றே. அதனால்தான் பரிவோடேயே தன் பிள்ளையிருக்கும் மேல் தளத்துக்கும் வழிகாட்டுவாள்.

இத்தக் கோயில் உண்மையில் ஒரு மலை அல்ல, கல்லினால் கட்டப்பட்ட ஒரு கட்டு மலை. கோயில் மூன்று பிராகாரங்களுடன் விளங்குகிறது. மலையின் அடித் தளத்திலே சோமசுந்தரனும், மீனாட்சியும் கோயில் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சோமசுந்தரனை மதுரையரசன் வரகுண பாண்டியன் பிரதிஷ்டை செய்திருக்கிறான். அவன் பிரமஹத்தி தோஷம் நீங்கத் திருவிடைமருதூர் செல்லும் வழியில் ஒருநாள் அதிகாலையில் இங்கு வந்திருக்கிறான், தினசரி தன் குலதெய்வமான சோமசுந்தரனையும் மீனாட்சியையும் வழிபடுபவன் ஆயிற்றே. ஆதால் இருவரையும் இங்கு பிரதிஷ்டை பண்ணி வணங்கிவிட்டே மேல் நடந்திருக்கிறான். சோம சுந்தரர் கீழ்த்தளத்திலேயே இருந்து கொள்கிறார். மகன் குருநாதன் ஆயிற்றே. ஆதலால் அவனுக்குச் சமானமாய் மேல் தளத்திலேயே எப்படி இருப்பது என்று நினைத்துவிட்டார் போலும்!

நாம் இந்தச் சோமசுந்தரரை வணங்கிவிட்டு மலை ஏறலாம் என்றால் அர்ச்சகர்கள் சம்மதிக்க மாட்டார்கள். 'முதலிலே வணங்க வேண்டுவது சாமிநாதனையே. அவனை வணங்கிவிட்டு வாருங்கள்' என்று சொல்லி அனுப்பி விடுவார்கள். ஆதலால் கோயிலின் கீழ்ப்புறம் உள்ள படிக்கட்டுகளில் ஏறலாம். மொத்தம் 60 படிகள் அங்கு பிரபவ முதலிய அறுபது வருஷங்களை அவை குறிப்பிடுகின்றன. பாதிப்படிகளை ஏறிக் கடந்ததும் ஒரு திறந்த வெளிப் பிரகாரம் இருக்கும். அதைச் சுற்றிக்கொண்டு கீழ்ப்புறம் உள்ள மண்டபத்துக்கு வந்து கிழக்கே திரும்பினால் அதற்கும் கொஞ்சம் கிழக்கே சுதையால் செய்யப்பட்ட சிற்ப வடிவங்கள் தெரியும். இதற்கு வாயில் ஒன்று அமைத்து அதைப் பூட்டி வைத்திருப்பார்கள். செல்கிறவர்கள் செல்வாக்கு உடையவர்கள் என்றால் ஆள் அனுப்பிச் சாவி பெற்றுக் கதவைத் திறந்து அங்குள்ள சிற்ப வடிவங்களைக் காணலாம்.

சிவபெருமான் மடிமீதிருந்து சாமிநாதன் தந்தைக்குப் பிரணவப் பொருள் உபதேசிக்கிறார். பிரம்மாவும், விஷ்ணுவும் அடக்க ஒடுக்கமாக நிற்கிறார்கள். முன்னர் அங்கிருந்த சுதை வடிவில் சாமிநாதன் கால்மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பதாகவும், சிவபிரான் அவன் காலடியில் கைகட்டி வாய் பொத்தி நின்று உபதேசம் கேட்பதாகவும் அமைந்திருந்தது. இப்போதுள்ள நிர்வாகிகள் உட்கார வைத்து அவர் மடியில் சாமிநாதனை இருத்தியிருக்கிறார்கள் (அவர்கள் பக்திக்கு நான் கோயில் வாயில் தலை வணங்குகிறேன்). ஆனால் தந்தையே மகனைக் குருமூர்த்தி என்று ஒப்புக் கொண்டபின், அந்தச் சாமிநாதன் காலடியில் இறைவன் நின்று உபதேசம் கேட்பதுதான் சரி என்றுபடுகிறது எனக்கு; உங்களுக்கு என்ன படுகிறதோ? இந்தச் சாமிநாதனைப் பார்த்தபின் இன்னும் படி ஏறினால், நாம் தெற்கு நோக்கி இருக்கும் நேத்திர விநாயகர் சந்நிதி வந்து சேருவோம். இவரையே கண் கொடுத்த விநாயகர் என்பர். கொங்கு நாட்டுப் பிறவி குருடன் ஒருவன் வந்து வணங்கியபொழுது அவனுக்குக் கண் திறந்து வைத்தவர் ஆனதால் அவரைக் கண் கொடுத்த விநாயகர் என்று தலவரலாறு கூறுகிறது. -

கொங்கு நாடு மாத்திரம் என்ன, ஏனைய தமிழ்நாட்டுப் பகுதிகளிலும் கண்ணிருந்தும் குருடர்களாய் இருப்பவர்கள் எத்தனை பேர்? அத்தனை பேரும் கண் பெறவேண்டுமானால் (ஊனக் கண்ணையல்ல-ஞானக் கண்ணையே) சென்று வணங்க வேண்டுவது இந்த நேத்திர விநாயகரையே. அவரை வணங்கி விட்டுக் கோயிலுள் நுழைந்து மகா மண்டபத்துக்குள் வந்து நின்றால் கருவறையில் கம்பீரமாக நிற்கும் சுவாமிநாதனைக் கண்குளிரக் காணலாம்.

'சிவனார் மனம் குளிர உபதேச மந்திர மிகு, செவிமீதினும் பகர்செய் குருநாதன்' கோவணாண்டியாகத் தண்டேந்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அவரது சந்நிதியில் வழக்கமாக இருக்கும் மயில் இல்லை. தேவேந்திரன் வழிபட வந்தபோது தன் ஐராவதத்தையே நிறுத்தி விட்டுப் போயிருக்கிறான். சாமிநாதன் நல்ல ஆறு அடி உயரத்தில் உள்ள ஆஜானுபாகு. உயர்ந்த பீடத்திலே ஏறி நின்று கொண்டிருக்கிறார். முருகன் சிலைவடிவில் இவ்வளவு உயரமாக இருப்பது இங்குதான். இவனைவிட நீண்டு உயர்ந்து நிற்பவன் ஒருவன் இன்றையக் கன்னியா குமரி மாவட்டத்திலே உள்ள குமார கோயிலில் நிற்கிறான் என்பர். இப்படி ஆண்டியாக நிற்பவனை அழகொழுகும் ஆணழகனாக 'எல்லாம் அலங்காரம் பண்ணுவர். அதிலும் ‘ராஜ கம்பீர நாடாளும் நாயகனாக' அலங்காரம் பண்ணிப் பார்த்தால் நமது இதயம் குளிரும். ஏதோ அவன் ஆண்டிபோல வேஷமிட்டாலும் நல்ல நிறைந்த செல்வந்தனே. தங்கக் கவசம், கிரீடம், வைரவேல் எல்லாம் உடையவன்தான். ஆம் அத்தனையையும் உதறிவிட்டு ஆண்டியாக மாறி நின்றே, நாம் கேட்பதையெல்லாம் நமக்கு வாரி வாரிக் கொடுக்கிறான். அவன் நம்மிடம் கேட்கும் குருதக்ஷிணை கொடுப்பதில் நாம் ஏன் பிந்த வேண்டும்? இந்தச் சாமி நாதனை அருணகிரியார் கசிந்து கசிந்து பாடியிருக்கிறார், இங்கு அவர் வந்தபோதுதான் சம்பந்தாண்டான் அவரை வாதுக்கு அழைக்கிறான். அவரும் சாமிநாதன் அருளால் அவனை வாதில் வென்று வாகை சூடியிருக்கிறார். அவனது திவ்ய பாத தரிசனமும் கண்டிருக்கிறார்.

தகையாது எனக்கு உன்
அடிகாண வைத்த
தனி ஏரகத்தின் முருகோனே!

என்று பாடிப் பரவி இருக்கிறார்.

வரும்போது மகா மண்டபத்திலே வடக்குச் சுவர்ப் பக்கம் ஒரு பீடத்தில் ‘சபாபதி' என்ற பெயரோடு ஒரு மூர்த்தி நிற்பார், செப்புச் சிலை வடிவில் கேட்டால் மகனாம் குருநாதன் முன்பு காலைத் தூக்கவே அஞ்சி நிற்கிறார் நடராஜர் என்பார்கள். இது தவறு. இவரே பாகுலேய மூர்த்தி. சூர சம்ஹாரம் முடித்துத் தேவ குஞ்சரியை மணம் செய்து கொண்ட கோலத்திலே எழுந்தருளியிருக்கிறார். எடுத்திருப்பது போர்க்கோலம். பக்கத்தில் நிற்பவள் தேவயானை. இந்தக் கோயிலில் வள்ளி தெய்வயானைக்குத் தனி சந்நிதி இல்லை. இருவரும் வடக்குப் பிரகாரத்தில் அறுமுகன் பக்கத்தில் செப்புச்சிலை வடிவில் இருப்பதோடு திருப்தி அடைந்திருக்கிறார்கள். இங்குள்ள பிரகாரத்தில் கல்லிலே கஜலக்ஷ்மியும், சரஸ்வதியும் இருக்கிறார்கள். செப்புச்சிலை வடிவிலே வள்ளி, அவளை மணக்கவந்த வேடன் எல்லோரும் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் தரிசித்த பின் படிகளில் இறங்கி அடித்தளத்தில் உள்ள சோமசுந்தரர் மீனாக்ஷியம்மை இவர்களையும் தரிசித்து விட்டுத் திரும்பலாம்.