உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 3/004-033

விக்கிமூலம் இலிருந்து

4. தாராசுரத்து ஐராவதேசுரர்

திருக்குடந்தை மான்மியம் என்று ஒரு புத்தகம். அதில் தாரேச்சுரப் படலம் என்று ஒரு படலம். அப்படலத்தில் ஒரு வரலாறு. தாரன் என்று ஓர் அசுரன். அவன் தேவர்களை அடக்கி ஆள விரும்புகிறான். அதற்குச் சிவபெருமானை நோக்கித் தவம் புரிகிறான். அவன் மாத்திரம் என்ன அவனுடைய மனைவியர் நூறு பேருமே இறைவன் திருவடிகளைப் பூசிக்கின்றனர். அவர்கள் எல்லாம் விரும்பிய சிவலோக வாழ்வை அளிக்கிறார் இறைவனும். பலம் மிக்க அந்தத் தாரன் என்ற அசுரன் பூசித்த தலம் தாரேச்சுரம் என்று பெயர் பெறுவதாயிற்று. தாரன் மாத்திரம் என்ன அவன் மகன் மேகதாரனும் அத் தலத்திலிருந்தே அரசாண்டு சாயுஜ்ஜியம் பெற்றிருக்கிறான் என்று மான்மியம் கூறுகிறது.

ஆனால் சரித்திரம் இதை ஒத்துக் கொள்வதில்லை. தாராசுரம் என்ற பெயர் வந்ததற்குச் சரித்திரம் கூறும் காரணம் வேறு. சோழ மன்னனான இரண்டாம் ராஜராஜன் இங்கிருந்து அரசாண்டிருக்கிறான். அவன் ஆண்ட காலம் 1146 முதல் 1163 வரை பதினோழு வருஷங்கள். அவனே இரண்டாம் குலோத்துங்கன் புதல்வனான பரகேசரி ராஜராஜன். கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர்வரை இவன் ராஜ்யம் பரவியிருக்கிறது. கொங்குநாடு கங்கநாடு எல்லாம் இவன் ஆட்சிக்கு உட்பட்டு இருந்திருக்கின்றன. இவன் முதலில் கங்கை கொண்ட சோழபுரத்தையே தலை நகராகக் கொண்டு ஆண்டிருக்கிறான். பின்னர் பழைய பழையாறையைத் தேர்ந்தெடுத்து அங்கிருந்து அரசாண்டிருக்கிறான். அந்தப் பழையாறையை ‘எண்டிசைத் தேவரும் புகுதும் ராஜராஜபுரி' என்றே தன் பெயரால் அழைத்திருக்கிறான்.

அவன் காலத்தில் போர் ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால் தமிழ், சமஸ்கிருதம் கற்பதிலும், கலை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டியிருக்கிறான். 'முத்தமிழுக்குத் தலைவன்' 'ராஜ பண்டிதன்' என்ற விருதுப் பெயர்கள் பெற்றிருக்கிறான். அந்தப் பழையாறை வட்டத்தில் வடகீழ்ப் பகுதியில் ஒரு கோயில் எடுப்பித்து அதை ராஜராஜேச்சுரம் என்று அழைத்திருக்கிறான். அங்கு பிரதிஷ்டை செய்த இறைவனை. ராஜராஜேச்சுரமுடையார் என்றே வணங்கி யிருக்கிறான்,

ஒரு மருங்குடைய மூல நாயகி
ஒற்றை வெள்விடை ஊர்திமேல்
இரு மருங்கு மறை தொழ
எழுந்தருள் இராசராசபுரி ஈசனே

என்று அவனது அவைக்களப் புலவர் ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணியில் இந்த இறைவனைப் பாடியிருக்கிறார். இந்த ராசராசபுரி ஈசுவரரே புராணம் பாடியவர்களால் ஐராவதேசுவரர் என்று பாராட்டப்பட்டிருக்கிறார். ராஜேசுவரமே நாளடைவில் ராராசுரம் என்று திரிந்து பின்னர் தாராசுரம் ஆயிற்று. இது தலத்தைப் பற்றிச் சரித்திரம் கூறும் செய்தி. நாம் சரித்திரத்துக்கே மதிப்புக் கொடுக்கலாம். அதையே நம்பலாம். இந்தத் தாராசுரம் என்ற தலத்தில் உள்ள ஐராவதேசுவரரைக் காணவே இன்று சொல்கிறோம் நாம்.

தாராசுரம் செல்வது மிகமிக எளிது. கும்பகோணத்துக்கு அடுத்த தென்பக்கம் இருக்கும் தாராசுரம் ஸ்டேஷனில் இறங்கினால் அங்கிருந்து கூப்பிடு தொலையிலேயே கோயில் இருக்கிறது. கோயிலை இனம் கண்டு பிடிப்பதும் எளிது. கலசம், ஸ்தூபி எல்லாம் இல்லாத விமானத்தோடு அந்த வட்டாரத்தில் இருக்கும் கோயில் இது ஒன்றுதான். இதை அடையாளமாக வைத்துக்கொண்டு இடையில் இருக்கும் தோப்பைக் கடந்தால் கோயில் வாயில் வந்து சேர்ந்து விடலாம். கோயில் எடுப்பித்த காலத்தில் பல பிராகாரங்கள் எல்லாம் எடுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் ஒரு மதில் சிதைந்து கோயில் வாயிலுக்குக் கிழக்கே இன்றும் இருக்கிறது. இடிந்து கிடக்கும் அந்த மதிலைப் பார்த்தே அது எவ்வளவு கம்பீரமாக எழுந்திருக்கவேண்டும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.

இக்கோயில் வாயில் எப்போதும் திறந்திருக்காது. அர்ச்சருக்குச் சொல்லி விட்டுத்தான். அவரை வருவிக்சு வேண்டும். அதுவரை கோயில் வாயிலுக்கு வெளியே இருக்கும் பலிபீடத்தையும் நந்தியோடு கூடிய மண்டபத்தையும் பார்க்கலாம். நந்தி எழுந்து எங்கே ஓடி விடுகிறதோ என்று மூங்கில் தட்டி வைத்துக் கட்டிப் பதனப்படுத்தியிருப்பார்கள். அர்ச்சகர் வந்து நாம் கலை அழகைக் காண வந்தவர்கள் என்று தெரிந்து கொண்டால், அந்தப் பலி பீடத்தையே பல இடங்களில் தட்டி அதில் சப்த ஸ்வரமும் பேசுகிறது என்பார். நமக்கு ஸ்வரங்களில் எல்லாம் வித்தியாசம் தோன்றாது. 'இது கூடத் தாரன் கதை போலத்தானோ?' என்று எண்ணத் தோன்றும். ஆனால் கோயிலுள் நுழைந்தால் எவ்வளவோ அதிசயம் காத்து நிற்கும். கோயிலுள் கருவறையில் இருப்பவர் ஐராவதேசுவர்.

துர்வாச முனிவர் சாபத்தால் தேவேந்திரனது ஐராவதத்தின் நிறம் மாற அதனால் மனக் கவலையுற்ற ஐராவதம் இத்தலத்துக்கு வந்து இங்குள்ள இறைவனைப் பூசித்துப் பேறுபெற்றிருக்கிறது. அன்று முதல் இறைவனே ஐராவதேசுவரர் என்ற பெயரில் நிலைத்து விடுகிறார். மேலும் முனிவர்களது கோபத்துக்கு ஆளாகிய அந்த யமதருமனுக்கு வெம்மை நோய் வர, அந்நோய் தீர அவன் பல தலங்களுக்குச் சென்று அலைந்து கடைசியாக இங்கு வந்து சிவபெருமானின் திரிசூலம் ஊன்றிய இடத்தில் தோன்றிய திருக்குளத்தில் மூழ்கி வெம்மை நோய் தீர்ந்தான் என்று புராணம் கூறும்.

இந்தப் புராண வரலாறுகளைத் தவிர வேறு சிறப்பான வரலாறு இந்தக் கோயிலைப்பற்றி இல்லைதான். ஆனால் கோயில், கோயில் அமைப்பு, அங்குள்ள சிற்பச் செல்வங்கள் எல்லாம் ஒரு நாளில் பார்த்து அனுபவித்து விட்டுத் திரும்பி விடக் கூடியவை அல்ல. பல நாட்கள் அங்கே தங்கியிருந்து ஒவ்வொன்றையும் அங்குலம் அங்குலமாகப் பார்த்துக்களிக்க வேண்டியவை. ஆதலால் கொஞ்சம் ஆற ஆமரவே இருந்து பார்க்கலாம் இச்சிற்ப வடிவங்களையெல்லாம்.

கோயில் வாயிலில் நுழைந்ததும் நேரே கருவறைக்குச் சென்றுவிட முடியாது. கோயில் ஒரு சிறிய அளவில் மாடக் கோயிலாக இருக்கும். கோயில் மாடத்தில் ஏறத் தெற்கு நோக்கிக் கொஞ்சம் நடந்து, அதன் பின்னரே மேற்கு நோக்கிப் படிகளில் ஏறவேண்டும். தெற்கு நோக்கி நடக்கும்போதே கிழக்கே பார்த்த ஒரு மாடத்தில் ஒரு கற்சிலை நிற்கும், பார்த்ததும் அதனை அர்த்தநாரியின் வடிவம் என்று கருதுவோம். இடப்பக்கம் மாத்திரம் விம்மிப் புடைத்திருக்கும் மார்பகத்தைக் கண்டு: கொஞ்சம் கூர்ந்து நோக்கினால் அவ்வுருவுக்கு மூன்று தலைகள் இருப்பதும் தெரியும். இது என்ன புதிதாக இருக்கிறதே? என்று அர்ச்சகரைக் கேட்போம். அவரும் நம்மைப் போலவே திரு திரு என்று விழிப்பாரே ஒழிய விளக்கம் சொல்ல மாட்டார்.

சிறிது சிந்தித்தால் தேவர் மூவரையும் அவர்களுடன் பராசக்தியையும் சேர்த்து அமைத்துக் காட்டிய விசுவரூபம் என்று தெரியும். இப்படி ஒரு அற்புதமான சிலை வேறு எந்தக் கோயிலிலும் இல்லை. அற்புதம் மாத்திரம் அல்ல; நல்ல அழகான சிலையும் கூட. அந்தச் சிலையின் அழகிலேயே மெய்மறந்து விடாமல் மேலும் நடந்து தெற்கு நோக்கிப் படி ஏறினால் ராஜகம்பீரன் மண்டபம் வந்துசேரலாம். அந்தப் படிக்கட்டு ஏறும்போதே வடக்குச் சுவரில், மூக்குப்போன அகத்தியர், அஞ்சுதலை ஆதிசேஷன் இவர்களின் உருவையும் காணலாம்.

பிறகு ராஜ கம்பீரன் மண்டபத்துத் தூண்களை, சுவரை, விதானத்தையெல்லாம் பார்த்தால் அப்படியே மலைத்து விடுவோம். ஒரு அங்குல இடங்கூட விடாமல் அத்தனை இடத்தையும் சிற்ப வடிவங்களாலேயே நிறைத்திருக்கிறான் ராஜராஜன். நர்த்தன விநாயகரே அவனது முத்திரையாக அமைந்திருக்கிறார். சிற்பிகள் ஒரு அங்குல விநாயகர் முதல், ஒரு முழ விநாயகர் வரை (பலர் நடம் ஆடிக்கொண்டே ) தூண்களை நிறைந்திருக்கிறார்கள். இன்னும் அத்தூண்களில் செதுக்கியிருக்கும் அழகு, அத்தூண்களில் வடித்திருக்கும் வடிவங்கள் எல்லாம் எவ்வளவோ வரலாறுகளைச் சொல்லும். இந்த மண்டபத்தின் வட பகுதிக்கே அழைத்துச் செல்ல விரும்புகிறேன். அங்கு தெற்கு நோக்கிய சந்நிதி வாயிலில் சாமரை ஏந்தி நிற்கும். பெண்கள் இருவர், அவர்களோடு யாதொரு தொடர்பும் கொள்ளாத ஒரு சிற்பவடிவம்-உச்சிஷ்ட கணபதி ஒன்றும் இருக்கும். இவை சாதாரணமானவை.

இனி மேற்கு நோக்கிக் கோயிலுள் நுழைய விரும்பினால் நாம் உடனே போய்விட முடியாது. மூன்று அற்புதமான சிலைகள் வழி மறிக்கும். வாயிலுக்குத் தென் பக்கத்தில் உள்ள அன்னபூரணி, வடபக்கத்தில் உள்ள அதிகார நந்தி, கண்ணப்பர் எல்லாம் நான்கு அடி உயரத்தில் உள்ள அழகிய கற்சிலைகள். அதில் அன்னபூரணி ஓர் உயிர் ஓவியம். கையிலே அவள் அமுத கலசம் ஏந்தி நிற்கிற ஒயில் ஒன்றே போதும். அவளைப் பிரார்த்தித்துக் கொண்டே கோயிலுள் நுழையலாம். நேரே கருவறைக்கே செல்லலாம். கருவறை வாயிலிலே கல்லில் ஒரு சிலை. செம்பிலே ஒரு படிமம் முன்னையது கார்த்திகேயன். பின்னையது போக சக்தி அம்மன். இரண்டும் பார்த்துப் பார்த்து அனுபவிக்கத் தகுந்தவை. இவர்களைக் கண்டு களித்தபின் ஐராவதேசுவர ரையும் வணங்கிவிட்டு வெளியே வந்து ஒரு சுற்றுச் சுற்றலாம். ராஜ கம்பீரன் மண்டபத்தின் உள் தோற்றத்தைப் பார்த்தோம் முன்னால். வெளித் தோற்றம் ஒரு தேர் போலவே இருக்கும். தேர்ச்சக்கரங்கள் உருளும்; குதிரைகள் ஓடும். மேலும் ஒவ்வொரு வரிசையிலும் எண்ணிறந்த சிற்பவடிவங்கள், யாழ் வரிசைகள் எல்லாம் மிக்க அழகோடு அமைந்தவை. மேலும் நடந்தால் ஒரு மாடத்தில் அக்கினி உட்கார்ந்திருப்பார், இன்னொரு மாடத்தில் வீரபத்திரர் ஆடிக்கொண்டிருப்பார் திரிபுவனத்தில் கண்ட சரபர் வேறே ஒரு சிறு கோயிலுள்.

இவை தவிர யானை சிங்கம் போர், யானையின் மத்தகத்திலே பாய்ந்து அதனைக் கிழிக்கும் சிங்கம் எல்லாம் தத்ரூபம். இன்னும் சிற்ப உலகிலே எண்ணிறந்த வின்னியாசங்கள். ஒரே வடிவிலே யானையும் எருதும் என்றெல்லாம். இக்கோயில் வடபக்கத்து மண்டபத்திலேதான் பிக்ஷாடனரும், அவருடைய . அழகில் மயங்கிய ரிஷிபத்தினிகளும் இருந்திருக்கிறார்கள். இவர்களோடு திரிபுராந்தகர், கஜசம்ஹாரர் எல்லாம் நல்ல கல்லுருவில் ஆஜானுபாகுவாக நின்றிருக்கிறார்கள். இவர்கள் தலையில் மண்டபங்கள் விழுந்து விடக் கூடாதே என்று பக்குவமாக அவர்களை அடிபெயர்த்துத். தஞ்சையில் உருவான கலைக்கூடத்துக்கே கொண்டு சென்றிருக்கிறார்கள். தஞ்சை செல்லும்போது அவர்களைப் பார்த்துக் கொள்ளலாம்.

இத்தனையும் பார்த்துவிட்டோமே, இங்கே அம்பிகை கோயில் இல்லையா? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அம்பிகையாம் தெய்வநாயகிக்குத் தனியாக ஒரு கோயில் வடக்கே நூறு கஜ தூரத்தில் இருக்கிறது. இது நிரம்பப் பெரிய கோயில் அல்ல. சிற்ப வடிவங்கள் நிறைந்ததும் அல்ல. செல்வத்தையெல்லாம் தான் அள்ளிக் கொட்டி விட்டானே, ஐராவதேசுவரர் கோயிலிலேயே.

இக்கோயிலில் 52 கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகளுள் பெரும்பாலானவை இரண்டாம் 'ராஜராஜன், இரண்டாம் ராஜாதி ராஜன், மூன்றாம் குலோத்துங்கன், வீரபாண்டியன் காலத்தியவையாகும். இவைகளை ஆராயுமிடத்து, இக்கோயில் இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்டுப் பின்னர் மூன்றாம் குலோத்துங்கனால் செப்பனிடப்பட்டிருக்கவேண்டும். கோயில் திருமாளிகைச் சுற்றுப் பகுதியில் கீழ்ப்புறம், இக்கோயிலை எழுப்பிய இரண்டாம் ராஜராஜன் அவனுடைய பட்டமகிஷி புவன முழுதுடையாள் இவர்களது சிலைகள் இருந்திருக்கின்றன. அவர்களையுமே எடுத்துச் சென்று விட்டார்கள் இந்தத் தஞ்சைக் கலைக்கூடத்தார். கோயிலின் கருவறையின் புறச்சுவரில் 63 நாயன்மார் வடிவங்களும் சைவ ஆச்சாரியார் 108 வடிவங்களும் இருக்கின்றன. பெரிய புராண வரலாறுகளை ஆராய்பவர்க்குப் பெரிதும் பயன்படும்.

ஐராவதேசுவரர் பாடல் பெறும் பாக்கியம் பெற்றவர் அல்லர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் இருந்த புலவர்களுக்கோ தலங்களில் அக்கறை இல்லை. அவர்கள் அக்கறை எல்லாம் அரசர்களிடத்தே. அதனால் அவர் பாடல் பெறாமலே நின்று விட்டார். ஆனால் அவரை உருவாக்கிய ராஜராஜன் பாடல் பெற்றவன், அதுவும் அவனது தந்தையின் அவைக்களப் புலவராக இருந்த ஒட்டக்கூத்தராலேயே. ராஜராஜன் உலாவிற்கு கண்ணிக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசு கொடுத்திருக்கிறான் அரசன். இதுதவிர, இவனுக்கும் இவனது மனைவிக்கும் நேர்ந்த பிணக்கைத் தீர்க்கவும் பாடியிருக்கிறார் அவர். இதைப்பற்றி ஒரு ரஸமான வரலாறு. இரண்டு நல்ல பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றன. அரசி அரசனோடு ஊடி அக்கோபத்தில் தன் அந்தப்புர வாயிலை அடைத்துக் கொள்கிறாள். அரசன் போய்க் கதவைத் தட்டினால் திறக்கிற வழியாகக் காணோம். அவைப் புலவர் ஒட்டக்கூத்தர் போகிறார்.

நானே இனி உனை வேண்டுவதில்லை
நளின மலர்த்
தேனே! கபாடம் திறந்திடுவாய்;
திறவா விடிலோ
வான் ஏறு அனைய இரவி
குலாதியன் வாயில் வந்தால்
தானே திறக்கும் நின் கைத்
தலம் ஆகிய தாமரையே.

என்று பாடுகிறார். தேவியோ இன்னும் கொஞ்சம் கோபமுற்று, “ஆ! அப்படியா சங்கதி? நானா திறப்பேன்! ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்” என்று மற்றொரு தாழ்ப்பாளையும் போட்டுக் கொள்கிறாள். அரசியுடன் வந்த சீதனக் கவிஞனான புகழேந்தி வருகிறார் பின்னால்,

இழை ஒன்று இரண்டு வகிர்செய்த
நுண்ணிடை ஏந்து வள்ளைக்
குழை ஒன்று இரண்டு விழி அணங்கே!
கொண்ட கோபமென்னோ!
மழை ஒன்று இரண்டு கை
மானாபரணன் உன்வாயில் வந்தால்
பிழை ஒன்று இரண்டு பொறாரோ?
குடியில் பிறந்தவரே!

என்று பக்குவமாகப் பாடுகிறார். கதவைத் திறக்கிறாள் அரசி. ஊடல் தீர்கிறது அவளுக்கு. இவ்விரண்டு பாட்டும் எந்தச் சோழ மன்னனைப் பற்றியது என்று பாட்டிலிருந்து தெரியவில்லை. அதனால் பரவாயில்லை. குலோத்துங்கனைப் பற்றி இருந்தால் என்ன? சுவையோடு அனுபவிக்கத் தகுந்தவைதானே.