வேங்கடம் முதல் குமரி வரை 3/005-033
5. பழையாறை பட்டீச்சுரர்
வாழ்வில் ஏழைமை மிகவும் கசப்பானது. உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாமல் தவிக்கும் நிலை விரும்பத்தகாததொன்று மாத்திரம் அல்ல, வருந்தத் தக்கதொன்றும்தான். ஆனால் அந்த வாழ்வைக் கலைக்கு ஒரு பொருளாக பாட்டாக வடித்தோ, சித்திரமாகத் தீட்டியோ காட்டினால் ரஸிகர்கள் அனுபவிக்கிறார்கள்; ஆனந்தம் கொள்கிறார்கள். இல்லாவிட்டால் இன்றையத் திரை வானிலே இந்த ஏழை எளியவர்கள் வாழ்வே அதிகம் இடம் பெறுவானேன்? 'அம்மா பசிக்குதே, ஐயா பசிக்குதே' என்று ஒரு பிச்சைக்காரன் - ஆம்-குஷ்டரோகியும், நொண்டியுமான பிச்சைக்காரனது பாட்டு பிரபல மடைவானேன்? ஆனால் இப்படி எளிய வாழ்வைக்கூட, பார்ப்பவர்கள் உள்ளத்தில் விரசம் தோன்றாதவாறு நல்ல கலை அழகோடு காட்டலாம் என்று நினைக்கிறார் ஒரு கவிஞர்.
அவர் பெயர் தெரியவில்லை . ஆனால் ஊர் தெரிகிறது. அவர் பிறந்து வளர்ந்தது சக்திமுற்றத்தில். அதனால் சக்திமுற்றப் புலவர் என்றே பெயர் பெறுகிறார். இந்தப் புலவர் வறுமையால் வாடிப் பாண்டி நாடு வருகிறார். உண்ண உணவு கிடைக்கவில்லை. உடுக்க உடையில்லை. அடங்கி ஒடுங்கி ஒரு தேர் முட்டியில் விழுந்து கிடக்கிறார். இரவு நடுச்சாமம். வான வீதியில் நாரைகள் தெற்கு நோக்கிப் பறந்து செல்வதைப் பார்க்கிறார். கவிதை பிறக்கிறது உள்ளத்தில். சுரக்கும் கவிதை ஊற்று வற்றி விட வில்லையே. தம் நிலையைப் போய்ச் சக்திமுற்றத்தில் இருக்கும் தம் மனைவிக்குச் சொல்ல வேண்டுகிறார் நாரையை. பாட்டு இதுதான்:
நாராய்! நாராய்! செங்கால் நாராய்!
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!
நீயும் நின் மனையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்,
எம்மூர் சக்திமுத்த வாவியுள் தங்கி
நனை சுவர்க் கூறை கனை குரல் பல்லி
பாடு பார்த்திருக்கும் எம்மனைவியைக் கண்டே
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து,
கையது கொண்டு மெய்யது பொத்தி,
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டதும் எனுமே.
இந்த நாரைவிடு தூதைக் கேட்கிறார் நகர் சோதனைக்கு வந்த பாண்டிய மன்னன். கவிஞனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று உண்டி, உடை முதலியன கொடுத்து மேலும் வேண்டும் திரவியங்களெல்லாம் கொடுத்து அவன் ஊருக்கு அனுப்பி வைக்கிறார். கவிஞனது வறுமையைப் போக்கி யிருக்கிறது இந்தப் பாட்டு. கவிதை உலகுக்கு ஒரு நல்ல பாட்டை உதவியிருக்கிறார் கவிஞர். இவரால், இவர், பாட்டால் இலக்கியப் பிரசித்தி பெற்றிருக்கிறது ஒரு சிறு ஊர், அந்த ஊர்தான் சக்திமுற்றம். அந்தச் சக்திமுற்றம் அதை யொட்டிய பட்டீச்சுரம், பழையாறை முதலிய ஊர்களுக்கே செல்கிறோம் நாம்.
சக்திமுற்றமும் பட்டீச்சுரமும் அடுத்தடுத்து இருக்கிற ஊர்கள், சக்திமுற்றத்தில் சிவக்கொழுந் தீசரும் பட்டீச்சுரத்தில் தேனு புரீசுவரரும் கோயில் கொண்டிருக்கிறார்கள், இந்தத் தலங்களை அடுத்தே சரித்திரப் பெருமையுடைய பழையாறை இருக்கிறது. இன்று இந்த வட்டாரத்தையே ஒரு சுற்றுச் சுற்றி விடலாம். பட்டீச்சுரம், சக்திமுற்றம் முதலிய தலங்களை உள்ளடக்கிய பெரும் பகுதியே பழையாறை என்ற பெயரில் விளங்கியிருக்கிறது அன்று. சோழ மன்னர்களின் சிறந்த தலை நகரங்கள், காவிரிப்பூம்பட்டினம், உறையூர், தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம் என்பதை அறிவோம். அவற்றை ஒத்த பெருமை உடையது பழையாறை, ராஜராஜனுக்கு முந்திய சோழர்கள் இருந்து ஆட்சி செலுத்திய இடம். ராஜராஜனே இங்கே இருந்துதான் வளர்ந்திருக்கிறான். காவிரியின் கிளை நதியான முடிகொண்டான், அரசிலாறு இவற்றுக்கிடையே ஐந்து மைல் நீளமும் மூன்று மைல் அகலமும் உள்ள பிரதேசமே பழையாறைப் பகுதி. இங்கே சோழ மன்னரது மாளிகைகள் இருந்திருக்கின்றன. அந்தப் பகுதியே சோழ மாளிகை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இன்னும் சோழர் படை எல்லாம் திரட்டி இங்கேயே நான்கு பிரிவாக வைத்திருக்கிறார்கள். அப் படைகள் இருந்த இடங்களே ஆரியப் படையூர், பம்பைப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர் என்று இன்றும் வழங்கி வருகின்றன.
பழையாறைப் பகுதி நான்கு சிறு பிரிவுகளுக்கு உட்பட்டிருக்கிறது; பழையாறை வடதளி, மேற்றளி,கீழ்த்தளி, தென் தளி என்று. தளி என்றால் கோயில் என்று பொருள். தாராசுரத்திலிருந்து தெற்கே மூன்று மைல் தொலைவில் இருக்கிறது வடதளி. ரோடு வளைந்து வளைந்து செல்லும். தாராசுரம் ஸ்டேஷனிலிருந்து வண்டி வைத்துக் கொண்டு செல்லலாம். கார் வசதி உள்ளவர்கள் காரிலும் போகலாம்.
தேரில் மேவிய செழுமணி
வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமை
சேர்பதி பழையாறை
என்று சேக்கிழார் பாடுகிறார். ஆனால் இன்று அங்கு தேரும் கிடையாது. தேரோடும் வீதிகளும் கிடையாது. முதன் முதல் நாம் பழையாறை வடதளி என்ற பகுதியையே சென்று சேருவோம். அங்கு ஊர் என்று சொல்லும் அளவுக்கே வீடுகள் கிடையாது. ஒரேயொரு மாடக்கோயில் இடிந்து சிதிலமான நிலையில் இருக்கும். கோச்செங்கணான் கட்டிய மாடக் கோயிலாக இருக்கலாம். இந்த இடத்துக்கு அப்பர் வந்திருக்கிறார். அவர் வந்த போது சமணர்கள் இந்த வடதளிக்கு முன்னால் தங்கள் மடத்தைக் கட்டிக் கோயிலை மறைத்ததோடு, மூர்த்தியையும் தாழி ஒன்றால் மூடி வைத்திருக்கிறார்கள்! ‘வண்ணங்கண்டு நான் உம்மை வணங்கி அன்றிப் போகேன்' என்று அப்பர் அங்கே சத்தியாக்கிரஹமே பண்ண ஆரம்பித்திருக்கிறார். இறைவனும் அந்த வட்டார அரசன் கனவில் தோன்றி, தான் இருக்குமிடத்தை அறிவித்துச் சமணரது குறும்பை அடக்குமாறு சொல்லியிருக்கிறார். அரசனும் மறுநாள் அங்கு வந்து தாழியை அகற்ற வடதளி ஈசுவரும் வெளி வந்திருக்கிறார். இவரையே அப்பர்,
நீதியைக் கெட நின்று
அமணே உணும்
சாதியைக் கெடுமாச்
செய்த சங்கரன்
ஆதியைப் பழையாறை
வட தளிச்
சோதியைத் தொழுவார்
துயர் தீருமே
இங்குள்ள சோமேசர்லோகாம்பிகை கோயில் பெரிய கோயில். சோழர் சிற்பப் பணிக்கு ஓர் எடுத்துக்காட்டு. வாயிலும் வாயிலை அடுத்த மதில் சுவரும் அச்சுவரில் உள்ள சிற்ப வடிவங்களுமே தக்க சான்று பகரும். ஆனால் கோயிலுள் நுழைந்தால், ஐயகோ! அந்தக் கோயில் சிதிலமாகக் கிடக்கும் நிலை கண்டு வருந்தவே செய்வோம். வெளிப் பிரகாரத்திலே தெற்கு நோக்கிய சந்நிதி, லோகாம்பிகை அம்மன் சந்நிதி, அது இருக்கிற நிலையில் அங்கு நுழையத் துணிவு வராது. என்றாலும் அங்குள்ள படிக்கட்டுகளிலே செதுக்கப்பட்டிருக்கும் பிரகலாத சரித்திரச் சிற்பங்களைக் காணாமல் நமக்குத் திரும்பவும் மனம் வராது. நரசிம்மன் இரணியன் போரில் பல காட்சிகள். கோயிலை வலம் வந்தால் நெருஞ்சிமுள் நம் காலைப் பதம் பார்க்கும். கருவறைக்குப் பின்னுள்ள சவரில் ஓர் அர்த்தநாரீசுவரர், அதையும் பார்த்துவிட்டுக் கோயிலுள் நுழைந்தால் முன் மண்டபத்திலேயே கயிலாய நாதர் நமக்குக் காட்சி கொடுப்பார். அவர் சாதாரணக் கயிலை நாதர் அல்ல.
மறு உற்ற பலர்க் குழவி
மடவார் அஞ்ச மலை துளங்க
திசை நடுங்கச் செறுத்து நோக்கி
செறுஉற்ற வாள் அரக்கன்
வவிதான் மாளத்திரு அடியின்
விரல் ஒன்றால் அலற ஊன்றிய
கயிலைநாதர் அல்லவா? ராவணன் கயிலையின் அடியில் கிடந்து நைவது, அம்மை அஞ்சி அத்தனை அணைவது, அத்தனோ அமைதியாய் இருப்பது எல்லாம் மிக்க அழகாகச் சிலை உருவில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைப் பார்த்ததுமே முன்னர் குத்திய முள்ளின் வலி எல்லாம் மறைந்து போகும். இன்னும் கோயில் அர்த்த மண்டபம் நுழைந்து அங்கு 'கானத்து எருமைக் கருந்தலைமேல் நிற்கும்' அந்தக் கரிய துர்க்கையையும் வணங்கி விட்டு வெளியே விரைவிலேயே வந்துவிடலாம். ஆம், எப்போது கீழே விழுவோம் என்று காத்து நிற்கும் மண்டபம் நம் தலைமேல் விழுந்து வைக்கக் கூடாதல்லவா? இந்தக் கோயிலைப் பார்த்து விட்டுத் திரும்பும்போது நம் உள்ளத்தை ஒன்று அழுத்தவே செய்யும். 'பண்டைப் பெருமையுடைய பழையாறைக் கோயிலிலே இண்டைச் செடி முளைத்து எழில் இழந்து நிற்பதெல்லாம் நம் கலை ஆர்வம் நலிந்ததற்குச் சான்றுதானே' என்று சொல்லவும் தோன்றும்.
இந்தப் பழையாறையைப் பார்த்த சூட்டிலேயே காலைக் கொஞ்சம் எட்டிப் போட்டுக் கிழக்கே ஒரு மைல் நடந்து நாதன் கோயில் என்று வழங்கும் நந்திபுர விண்ணகரையுமே பார்த்து விடலாம். இங்கே விண்ணகரப் பெருமாளும் சண்பக வல்லியும் கோயில் கொண்டிருக்கிறார்கள். இங்கே பெருமாளைத் திருமங்கை மன்னன் ஒரு பதிகம் பாடி மங்களாசாஸனம் செய்திருக்கிறார். இந்தப் பெருமாளையும் கண்டு தரிசித்து விட்டு மேற்கு நோக்கி விரைவாகவே வரலாம். அப்போது தானே இன்று இவ்வட்டாரத்தில் பிரபலமாக இருக்கும் பட்டீச்சுரம், சக்தி முற்றம் என்ற தலங்களைத் தரிசிக்கலாம்.
காமதேனுவின் புதல்வியர் நால்வரில் பட்டி ஒருத்தி, அவள் பூஜித்த தலம் பட்டீச்சுரம். இறைவன் பெயர் பட்டீச்சுரர். அவரைத் தேனுபுரீசர் என்றும் அழைப்பார்கள். அம்பிகை பல்வளைநாயகி, ஞானாம்பிகை என்றும் அழைக்கிறார்கள். இராவணனை வதஞ் செய்த ராமரை சாயஹத்தி பற்றிக்கொள்கிறது. அவர் இத்தலத்துக்கு வந்து பட்டீச்சுரரை வணங்கி தோஷம் நீங்கியிருக்கிறார். அவரது கோதண்டத்தால் கீறிய இடத்திலே ஒரு கிணறு. அதுவே தனுஷ்கோடி தீர்த்தம். தொலை தூரத்தில் உள்ள தனுஷ்கோடி செல்ல இயலாதவர்கள், இக்கிணற்று நீரிலே மார்கழி அமாவாசை அன்று மூழ்கி, அத் தனுஷ்கோடியிலே நீராடிய பலனைப் பெறுகிறார்கள்.
கோயிலை நான்கு கோபுரங்கள் அலங்கரிக்கின்றன. மேலப் பிரகாரத்தில் கருவறைக்குத் தெற்கே சண்முகர் வள்ளி தெய்வயானையோடு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். நல்ல கம்பீரமான திருஉரு. இந்தக் கோயிலில் பார்க்க வேண்டிய கற்சிலை பைரவர் திரு உருவம். கண்டாரை அஞ்சவைக்கும் கோலம்; பெரிய வடிவம். இவற்றை எல்லாம்விட வடக்கு வாயிலில் கோயில் கொண்டிருக்கும் துர்க்கையே இங்குள்ள பிரபலமான தேவதை. எட்டுக் கரங்கள், சூலம், தனு, கசம், அங்குசம், சங்கு ஏந்திய கோலம், மகிஷன் தலைமேல் ஏறி நிற்கிறாள்.
ஏழு எட்டு அடி உயரத்தில் கருணை பொழியும் வதனம், அவள் பெரிய வரப்பிரசாதி என்பதைக்காட்டும். பழைய சோழ மன்னர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவள். சோழ மாளிகையின் காவல் தெய்வமாக நின்றவளையே இக்கோயில் கோட்டை வாயில் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றனர். பட்டீச்சுரம் கோயிலில் யாரைப் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் துர்க்கையைத் தரிசியாது வந்து விடாதீர்கள்.
தேனுபுரீசுவரரை வணங்கிவிட்டு அடுத்துள்ள தனிக்கோயிலில் இருக்கும் பல்வளை நாயகியையும் சென்று வணங்கலாம். இங்கு மகாமண்டபத்தில் தம்பதிகள் இருவர் இருப்பர். அவர்களே நாயக்க மன்னரிடம் அமைச்சராக இருந்த கோவிந்தப்ப தீக்ஷிதரும் அவர் மனைவியும், இவரே இக்கோயிலின்பெரும் பகுதியைத் திருப்பணி செய்திருக்கிறார்.
இனிக் கொஞ்சம் வடக்கு நோக்கி நடந்தால் சக்தி முற்றம் வந்து சேரலாம். சக்திமுற்றம் இயற் பெயரா? காரணப் பெயரா? என்று ஒரு கேள்வி. இயற் பெயரே என்பர் ஒரு சிலர். ஆனால் கோயில் நிர்வாகிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அன்று கம்பை நதிக் கரையில் அம்மை தவ்ஞ்செய்ய, அப்போது ஆறு பெருகிவர அதற்கு அஞ்சாது அம்மை பூஜித்த லிங்கத்தையே கட்டித் தழுவ, அதனால் இறைவன் அம்மையின் வளைத்தழும்பும் முலைத்தழும்பும் பெற்றார் என்பது புராணக் கதை. அப்படி சக்தி. தழுவி முத்தம் கொடுத்த தலமே இது என்பர். இதற்கு ஆதாரமாகக் கோயிலுள் சென்றதும் அர்த்த மண்டபத்தை அடுத்த இடத்துக்கு அழைத்துச் செல்வர். அங்க ஒரு மாடக்குழியில் அம்மையின் தவக்கோலம் செதுக்கப்பட்டிருக்கும். மேலும் நிர்வாகிகள் கூற்றை வலியுறுத்த, அத்தனைத் தழுவிக் கட்டிப்பிடிக்கும் அன்னையுமே சிலை உருவில் அங்கே இருப்பர். இன்னும் இத்தலத்துக்கு வந்த அப்பர்,
{{left margin|2em|
மட்டார் குழலி மலைமகள்
பூசை மகிழ்ந்து அருளும்
இட்டா திருச்சக்தி முத்தத்து
உறையும் சிவக்கொழுந்தே
என்று வேறு பாடிவிட்டுப் போயிருக்கிறார். இனியும் சந்தேகம் ஏன்? சக்தி முத்தம்- காரணப் பெயரே என்று முடிவுகட்டி விடலாமே?