உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 3/006-033

விக்கிமூலம் இலிருந்து

6. விண்ணகர் ஒப்பிலியப்பன்

க்த குசேலர் கதை நாம் அறிந்த ஒன்று. அதிலும் குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி ஏகமாகப் பிரசாரம் நடக்கும் இந்நாளில் அவரது கதையை அறியாதிருப்போமா? அப்படி யாராவது தெரியாதிருந்தால் அவர்களுக்காகவே சொல்கிறேன். அவந்தி நகரிலே சுதாமா என்று ஓர் அந்தணர். அவருக்குச் சுசீலை என்று ஒரு மனைவி, இவர்களுக்கு இருபத்து ஏழு பிள்ளைகள், பின்னர் வீட்டில் வறுமை தாண்டவம் ஆடக் கேட்பானேன்? கூழுக்கும் கஞ்சிக்கும் ஏக அடிபிடி சுதாமாவோ எதிலுமே பற்றுடையவராக இல்லை. உண்ணும் உணவிலே பற்றாக்குறை என்றால், உடுக்கும் உடையைப் பற்றிக் கேட்கவாவேணும், ஏதோ கிழிந்த துணிகளை ஒட்டுப்போட்டு அணிந்திருப்பார். அப்படிப் பொலிவற்ற ஆடை அணிந்தது காரணமாகவே குசேலர் என்று அழைக்கப்பட்டார். அந்தப் பெயரே நிலைக்கவும் செய்தது.

இந்தக் குசேலரை ஒருநாள் அவரது மனைவி அணுகினாள். உண்ண உணவின்றி மக்கள் தவிப்பதை எடுத்துக் கூறினாள், முன்னாள் சாந்தீப முனிவரிடம் அவரோடு ஒரு சாலை மாணாக்கனாக இருந்த கண்ணன் இன்று துவாரகையில் யாதவ மன்னனாக இருந்து செல்வம் கொழிக்க வாழ்வதை எடுத்துக் காட்டினாள். அந்தப் பழைய பள்ளித் தோழனிடம் தன் நிலைமையை எடுத்துக் கூறினால் ஏதாவது அவன் செய்ய மாட்டானா? என்று கேட்டாள். குசேலரும் மனைவியின் விருப்பப்படியே துவாரகை சென்றுவர இசைந்தார்; புறப்பட்டார். பெரியவர்களைப் காணப் போகும்போது சும்மா போகக் கூடாதே என்று கொஞ்சம் அவல் இடித்து அதை ஒரு சிறு மூட்டையாகக் கட்டிக் கொடுத்து அனுப்பினாள் மனைவி. எத்தனையோ அல்லல்களையெல்லாம் சமாளித்துத் துவாரகைக்கு வந்து சேர்ந்து விடுகிறர் குசேலர். அரண்மனைக்குள் நுழைந்ததும் கண்ணன் எதிர் கொண்டழைத்து மார்புறத் தழுவிக் குசலம் விசாரிக்கிறான்.

அப்படிக் கொஞ்ச நேரம் அளவளாவிய பின், ‘எனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறாய்? அண்ணி சும்மா அனுப்பி யிருக்க மாட்டாளே!' என்று துளைத்துத் துளைத்து, அவர் கொண்டு வந்திருந்த அவல் பொட்டணத்தை அவிழ்த்து அதில் ஒரு பிடி அவல் எடுத்து வாயில் போட்டு, மென்று சுவைக்க ஆரம்பித்து விடுகிறார் கண்ணன். இதை வல்லூர் தேவராஜுப் பிள்ளை,

மலிதரும் அன்பின் தந்த
வண்பொதி அவிழ்த்து நோக்கி
வலிதரும் அவற்றுள் நன்று
வாய்த்தது நமக்கு இது என்னா
ஒலிதரு கழற்கால் ஐயன்
ஒரு பிடி அவலை, காதல்
பொலிதர எடுத்து வாயில்
போட்டுக் கொண்டான் மாதோ.

என்று தமது குசேலோபாக்கியானத்தில் பாடுகிறார். ஆம்! அன்று கோகுலத்தில் உறியில் உள்ள வெண்ணெயை எல்லாம் வாரி உண்டு சுவைத்தவன் இன்று குசேலர் கொண்டு வந்த அவலையும் அள்ளி அள்ளித் தின்றான். அன்றே குசேலர் வறுமை நீங்குகிறது என்பது கதை. பக்தர் கொண்டு வரும் பொருள் அருமையானதாக இருக்க வேண்டும் என்பதில்லை கண்ணனுக்கு. பக்தி பூர்வமாக அர்ப்பணிக்க வேண்டுவது தான் முக்கியம். இல்லாவிட்டால் சர்க்கரையோ தேங்காய்த் துருவலோ கலவாத சாதாரண அவலைச் சுவையுடையது என்று விருப்போடு உண்டிருப்பானா? அவலாவது போகட்டும். ஏதோ கொஞ்சம் சுவையுடையதாக இருக்கும். உப்பே இல்லாத பண்டம் சுவையாக இருக்குமா? அப்படி உப்பில்லாத உணவையே ஏற்று அதை உண்டு மகிழ்ந்ததோடு, பின்னரும் தனக்குச் சமைக்கும்போது உப்பில்லாமலே சமைக்கட்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறானே, இது மாத்திரமா? இது காரணமாக உப்பிலியப்பனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறானே அவன். ஆம்! அந்த உப்பிலியப்பன் கோயில் கொண்டிருக்கும் திருவிண்ணகர் என்னும் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

உப்பிலியப்பன் கோயிலுக்குக் கும்பகோணத்திலிருந்தே பஸ் போகிறது. அல்லது திருநாகேசுவரம் ஸ்டேஷனிலும் இறங்கலாம். இரயில்வே நிர்வாகிகளே உப்பிலியப்பன் கோயிலுக்கு இங்கே இறங்கவும் என்று பலகையில் எழுதி விளம்பரப்படுத்தி யிருக்கிறார்கள். வண்டிகள் எல்லாம் சௌகரியமாகக் கிடைக்கும். அங்கிருந்து கிழக்கே இரண்டு மைல் தூரத்தில் உப்பிலி அப்பன் கோயில் இருக்கிறது. அந்தக் கோயில் செல்லும் வழியிலே திருநாகேசுரத்துக் கோயில் வேறே இருக்கிறது. சந்திரன், சூரியன், ஐந்து தலை நாகம் எல்லாம் பூஜித்த தலம். சம்பந்தர், அப்பர், சுந்தரர் எல்லாம் வந்து வழிபாடு செய்திருக்கிறார்கள்,

சந்திரனோடு சூரியர் தாம் உடன்
வந்துசீர் வழிபாடுகள் செய்தபின்

ஐந்தலை அரவின் பணிகொண்டு அருள்
மைந்தர் போல் மேனி நாகேச்சுரரே

என்று அப்பர் பாடியிருக்கிறார். சேக்கிழார் மிக மிக ஈடுபட்டிருக்கிறார் இக்கோயிலில். அது காரணமாகவே தம் சொந்த ஊராகிய குன்றத்தூரிலே கோயில் ஒன்று கட்டுவித்து அதற்குத் திருநாகேச்சுரம் என்றே பெயரிட்டிருக்கிறார், ஆதலால் நாமும் வண்டியை விட்டு இறங்கிக் கோயிலுள் சென்று சண்பகாரண்யேசுரர், குன்றமுலைநாயகி முதலியோரை வணங்கிய பின்பே மேல் செல்லலாம்.

இக்கோயிலுக்குத் தெற்கே அரை மைல் தூரத்தில் தான் உப்பிலியப்பன் கோயில் இருக்கிறது. கோயில் வாயிலை ஒரு நல்ல கோபுரம் அணி செய்கிறது. இதனைப் பிரமனே அமைத்து விண்ணகரம் என்றே அழைத்திருக்கிறான். ஆழ்வார்களும் அப்படியே மங்களாசாஸனம் செய்திருக் கிறார்கள். இன்னும் இதனைத் துளசி வனம், மார்க்கண்டேய க்ஷேத்திரம் என்றும் கூறுவார்கள். பெண்ணுருவம் கொண்ட துளசிக்குப் பெருமானிடம் மிகுந்த ஈடுபாடு. இலக்குமியை மட்டும் மார்பில் அணிந்திருக்கிறாரே எனக்கும் ஏன் அங்கு இடம் தரக்கூடாது? என்பது அவளது பிரார்த்தனை. அதற்குப் பகவான் சொன்ன பதில் இதுதான் : 'பூலோகத்தில் பூதேவி என்னை மணக்க விரும்பிக் காவிரிக்கரையிலே அவதரிப்பாள், அவளையும் முந்திக்கொண்டு அங்கு ஒரு துளசிச் செடியாகச் சென்று நீ இரு. உன் காலடியிலே பூமிதேவி அவதரிப்பாள். அன்று முதல் உனக்கு ஒரு புனிதம் ஏற்பட்டு விடும். உன் இதழ்களை என் மார்பில் அணிந்து கொள்கிறேன். மேலும் உன் இதழ்களால் என்னை அர்ச்சிக்கிறவர்கள் எல்லா நலமும் பெறுவர்' என்று அனுக்கிரகிக்கிறார்.

அப்படியே துளசி வந்து செடியாக வளர்ந்து நின்ற தலமே இவ்விண்ணகர். அது சரிதான் 'அவர் ஏன் உப்பிலியப்பன் என்று பெயர் பெற்றார் என்று சொல்ல வில்லையே இன்னும்?' என்று நீங்கள் ஆதங்கப்படுவதை அறிவேன். இங்கு இத்தலத்தில்தான் மார்க்கண்டேயர் அமரத்துவம் பெற்றபின் வந்த தங்கியிருக்கிறார். பூதேவியையே தம் மகளாகப் பெறத் தவஞ் செய்திருக்கிறார். அவர் விரும்பியபடியே அந்தத் துளசி வனத்தில் ஒரு துளசிச் செடியின் அருகில் வந்து பெண் மகவாகப் பிறந்திருக்கிறார் பூதேவி. குழந்தையை எடுத்து வளர்க்கிறார்; பெண் மணப்பருவம் எய்துகிறாள். எம்பெருமான் கிழ வேதிய வடிவில் வந்த மார்க்கண்டேயரிடம் அவர் மகளாம் பூதேவியை தமக்கு மணம் முடித்துக் கொடுக்க வேண்டுகிறார். வந்திருக்கும் முதியவரின் கோலம் கண்டு, இல்லை என்று சொல்லாமல், ஏதாவது காரணம் சொல்லித் தட்டிக் கழிக்கலாமா என்று பார்க்கிறார் மார்க்கண்டேயர்.

'என் பெண் மிகமிக இளம் பெண் ஆயிற்றே. சரியாய்ச் சமைக்கத் தெரியாதே, உணவின் சுவையைக் கூட அறியாளே, நிரம்பச் சொல்வானேன். கறிகளில் உப்புச் சேர்க்கக்கூட அவளுக்குத் தெரியாதே' என்று கூறுகிறார். பெருமாளோ விடுகிறவராகக் காணோம். 'அது தெரியாதா! எனக்கு உணவில் உப்பே சேர்க்க வேண்டியதில்லையே, உப்பில்லாப் பத்தியச் சாப்பாடே சாப்பிட நான் தயார்' என்கிறார். அப்படியும் அவளை மணம் முடித்துத் தர இசையாவிட்டால் தம் உயிரையே விட்டு விடுவேன் என்கிறார்.

பின்னர் தம் நிஜ உருவையுமே காட்டுகிறார். ஆழியும் சங்கும் ஏந்தி நிற்கும் பரந்தாமனைக் கண்டு தொழுது தன் பெண்ணாம் பூமி தேவியை மணம் முடித்துக் கொடுக்கிறார் மார்க்கண்டேயர். பெருமாளும் சொன்ன சொல்லைக் காப்பாற்ற அன்று முதல் தமக்குச் செய்யும் நைவேத்தியங்களில் உப்பே சேர்க்க வேண்டாம் என்று உத்தரவிட்டு விடுகிறார். (அதனால் பரவாயில்லை. உப்பில்லாத வெண்பொங்கலைவிட உப்பேசேர்க்காத சர்க்கரைப் பொங்கலையே நிவேதனம் பண்ணச் சொல்லி வாங்கி நாம் சாப்பிட்டால் போகிறது.) இப்படித் தான் இங்குள்ள பெருமாள் உப்பிலி அப்பன் என்ற பெயரோடு நிலைத்திருக்கிறார். இது தல மான்மியம் கூறும் வரலாறு. ஆராய்ச்சியாளர்கள் கூறுவது மற்றொரு வரலாறு. அது இதுதான். இத்தலத்துக்கு நம்மாழ்வார் வந்திருக்கிறார்.

என்னப்பன் எனக்காய் இருளாய்
என்னைப் பெற்றவனாய்
பொன்னப்பன், மணியப்பன்
மூத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன் மதில் சூழ்
திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்
தன் ஒப்பார் இல் அப்பன்
தந்தனன் தன் தாள் நிழலே

என்று பாடியிருக்கிறார். தன்னை ஒப்பார் இல்லாத அப்பனாக அவன் விளங்குவதால் ஒப்பிலி அப்பன் என்று வழங்கப்பட்டிருக்கிறான். அந்த ஒப்பிவி அப்பனே நாளடைவில் திரிந்து உப்பிலி அப்பன் ஆகியிருக்கிறான் என்பர். கோயில் நிர்வாகிகள் விசாரித்தால் அவன் ஒப்பிலி அப்பன் மாத்திரமல்ல, உப்பிலி அப்பனும் கூடத்தான் என்பார்கள். நம்மாழ்வாருக்கு இத்தலத்துப் பெருமான் ஐவகைக் கோலம் காட்டியிருக்கிறான். அதனால் தானே பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன் என்றெல்லாம் பாடியிருக்கிறார். அவன் ஐந்து அப்பன் மாத்திரம் என்ன? ஆறு அப்பனாகவே இருக்கட்டுமே. நிர்வாகிகள் மனம் வருந்தாமல் இருக்க உப்பிலி அப்பனையுமே ஒப்புக் கொள்வோமே.

இனி நாம் கோயிலுள் நுழையலாம். நுழைந்ததும் கோயிலின் வடபுறம் இருப்பது 'அஹோராத்ர புஷ்கரிணி.' இதைப்பற்றி ஒரு வரலாறு. தேவசர்மா என்பவன் ஜைமினி முனிவரின் சாபத்தால் கிரௌஞ்சப் பட்சியாகி இந்தப் புஷ்கரிணியை அடுத்துள்ள ஒரு மரத்தின் கிளையில் இருந்திருக்கிறான். ஒரு நாள் இரவு புயல் அடித்து மரத்தின் கிளை ஒடிந்தபோது புஷ்கரிணியில் விழுந்து தன் சாபம் நீங்கியிருக்கிறான். புண்ணிய தீர்த்தங்களில் இரவில் நீராடக்கூடாது என்பது பொது விதி. அதற்கு விலக்காக இரவில் நீராடிய கிரௌஞ்சப் பட்சியும் சாப விமோசனம் பெற்றதால் இந்தப் புஷ்கரிணி அஹோராத்ர புஷ்கரிணி என்று பெயர் பெற்றிருக்கிறது.

கோயிலுள் நுழையலாம். கருவறையிலே ஒப்பிலி அப்பன். கிழக்கு நோக்கி நின்ற கோலத்திலும் பூமிதேவி நாச்சியார். வடக்கு நோக்கி இருந்த கோலத்திலும், மார்க்கண்டேயர் கன்னிகாதானம் செய்து கொடுக்கும் கோலத்திலும் காட்சி கொடுக்கின்றனர். ஒப்பிலி அப்பன் உண்மையிலேயே தன் ஒப்பார் இல் அப்பன் தான். கிட்டத்தட்ட எட்டடி உயரம். கம்பீரமான தோற்றம், பால் வடியும் முக விலாசம். அரையிலே பொன்னாடை, இரண்டு கைகளில் ஆழியும் சங்கமும், ஒரு கை அரையில் பொருந்த மற்றொன்று கன்னிகாதானத்தை ஏற்கும் முறையில் அமைந்திருக்கிறது . அழகனுக்கு ஏற்ற அழகி பூதேவி. இக்கோயிலில் அம்மைக் கென்று தனிச் சந்நிதி கிடையாது. இருவரும் அத்தனை ஐக்கியம்! இங்கு நடக்கும் திருநாட்களில் சிறப்பானது திருக் கல்யாண மகோத்சவம்தான். ஐப்பசி மாதம் திருவோணத்தில் தொடங்கிப் பத்து நாட்கள் சிறப்பாக நடக்கும்.

இந்த ஒப்பிலியப்பனைப் பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆக நால்வரும் பாடி மங்களாசாஸனம் செய்திருக்கிறார்கள். நம்மாழ்வார் பாடிய ஐவரைப் பற்றித்தான் முன்னமேயே தெரிந்து கொண்டிருக்கிறோமே. இவர்களின் மணி ஆப்பனுக்கு ஒரு சந்நிதி நந்தவனத்துக்குள் இருக்கிறது. அது சிதிலமாக இருப்பதால் திருப்பணி நடக்க ஏற்பாடாகியிருக்கிறது. அதனால்தானோ - என்னவோ செப்புச் சிலை வடிவில் உள்ள மணியப்பன் விண்ணகர் அப்பனோடு கருவறையிலேயே எழுந்தருளியிருக்கிறார். இங்குள்ள உற்சவர் ஏகபத்னி விரதரே. 'இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்' என்ற செவ்விய வரம்பில் நிற்கிறார் போலும். ஆனால் யார் கண்டார்கள்? அவருடைய மார்பில் வக்ஷஸ்தலத்தில் சிதேவி இல்லை என்பதை. அவர்தான் ஆடையும் நகைகளும் அணிந்து மார்பை நன்றாக மறைத்துக் கொண்டிருக்கிறாகே ஒப்பிலி, அப்பனாம். விண்ணகரப்பனை, மணியப்பனை எல்லாம் வணங்கியபின் இந்தக் கோயிலில் உள்ள மற்ற சந்நிதிகளிலும் வணங்கலாம். இங்குள்ள பெருமானை அர்ச்சகர்கள் 'சர்வாங்க சுந்தராய நம: ஓம், காவேரி தீர ரஸிகாய நம: ஓம் என்றெல்லாம் அருச்சிப்பார்கள். இவன் காவேரி தீரத்தை நாடி வந்ததால் இவனைத் தேடிக் கங்கை, யமுனை, கோதாவரியும் ஓடி வந்திருக்கிறார்கள். கோவிலுக்குத் தெற்கே ஓடும் நாட்டாறே தக்ஷிண கங்கை, அதற்கும் தெற்கே ஓடும் கீர்த்திமானாறே தக்ஷிண கோதாவரி, அதற்கும் தெற்கே ஓடும் அரசிலாறே தக்ஷிண் யமுனை. வசதி உள்ளவர்கள் எல்லாம் நதிகளில் மூழ்கி, புண்ணியப் பேறுகள் பெறட்டும்.

இந்த விண்ணகரத்துக் கார்மேனிக் கண்ணனை முப்பது பாசுரங்களால் பாடிய மங்கை மன்னன் வேண்டேன் மனை வாழ்க்கையை' என்று விரக்தியோடு பேசியிருக்கிறார். அந்த மனை வாழ்க்கையை அவர் விரும்பாதது எந்த நிலையில் என்று தெரிய அவர் பாசுரத்தையே படிக்கவேணும்.

அண்ணல் செய்து, அலைகடல்
கடைந்து, அதனுள் கண்ணுதல்
நஞ்சு உண்ணக் கண்டவனே!

விண்ணவர் அமுது உண்ண
அமுதில் வரும் பெண்ண முது
உண்ட எம்பெருமானே!

ஆண்டாய் உனைக் காண்பது
ஓர் அருள் எனக்கு
அருளிதியேல்

வேண்டேன் மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே!

என்பது அவரது பாடல். நடராஜனது எடுத்த பொற்பாதம் காணப் பெற்றால், மனிதப் பிறவி வேண்டுவதே என்று பாடினார் அப்பர். இவர் விண்ணகரப்பனைக் காணும் அருள் கிடைத்தால் வேண்டேன் மனை வாழ்க்கையை என்கிறார். நாம் யாரைப் பின்பற்ற? மனை வாழ்க்கையில் இருந்து வாழ்ந்துதான் அதில் உள்ள துயர்களை யெல்லாம் அறிவோமே. ஆதலால் நாம் விண்ணகரத்து ஒப்பிலியப்பனைத் தரிசித்துக் கொண்டே மகிழ்ச்சி பெறலாமே. நாம் மங்கை மன்னன் கட்சியிலேயே சேர்ந்து, வேண்டோம் இம்மனை வாழ்க்கை என்றே சொல்லுவோம். 'வேண்டின் உண்டாயில் துறக்க' என்றுதானே வள்ளுவரும் கூறியிருக்கிறார்.