வேங்கடம் முதல் குமரி வரை 3/009-033
9. கண்ணமங்கை பக்தவத்ஸலன்
பல வருஷங்களுக்கு முன் ஒரு நடன நாட்டிய நிகழ்ச்சியைக் காணச் சென்றிருந்தேன். புதிய முறையில் பல புராணக் கதைகளை நடன நாட்டியமாக நடித்துக் காண்பித்தனர் நடிகர்கள், ஆண்டாள் திருக்கல்யாணம், பஸ்மாசுரமோகினி முதலிய புராணக் கதைகளை நடனமாடியே விளக்கம் செய்தனர். பஸ்மாசுர மோகினி கதையை அடுத்துக் கஜேந்திர மோட்சம் என்று கண்டிருந்தது நிகழ்ச்சி நிரலில், பஸ்மாசுர மோகினியின் பஸ்மாசுரன், சிவன், மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணு எல்லாருமே மேடைமீது தோன்றி நடனம் ஆடினர்.
அது போல் கஜேந்திர மோட்சத்திலும் கஜேந்திரன், முதலை, கருடன், மகாவிஷ்ணு எல்லோருமே மேடைமீது தோன்றுவார்களோ என்று எண்ணினேன் நான், விஷ்ணுவின் வேடத்தை வேண்டுமானால் நடிகர்கள். போட்டுக் கொள்ளலாம்; யானை, முதலை, கருடன் வேடங்களை எல்லாம் மனிதர்கள் போட்டு நடித்தால் நன்றாயிருக்குமா என்று நினைத்தேன். அதற்குள் நிகழ்ச்சியின் அறிவிப்பு தெரிவிக்கப்பட்டது. திரையும் விலகியது. ஒரே ஒரு நடிகர் தான் மேடைமீது தோன்றினார், பின்னணி வாத்தியங்கள் மெதுவாக ஒலிக்க ஆரம்பித்தன. நடிகர் தம் இரண்டு கைகளையும் நீர் நிறைந்த தடாகம் ஒன்று இருக்கிறது என்று காட்டிவிட்டு மலரும் தாமரைகளையும் ஹஸ்த முத்திரை மூலமாகவே காண்பித்தார். இதன் மூலம் தாமரை மலர்ந்த தடாகமே காண்பித்தார். சிறிது நேரத்தில் அந்த நடிகரே மேடையில் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்கு நடந்தார். இரண்டு காலால்தான் நடந்தார்.
என்றாலும் உடல் அசைவு வலதுகையைத் தும்பிக்கை போல் அங்குமிங்கும் ஆட்டுவதன் மூலம் அசைந்து ஆடிவரும் யானையையே கண்முன் கொண்டு வந்துவிட்டார். இனி இந்த யானையே தடாகத்தில் இறங்குகிறது. படிக்கட்டில் யானை எப்படி மெதுவாக இறங்குமோ அப்படியே இறங்குவது போல் அபிநயித்தார். பின்னர் யானை தும்பிக்கை மூலம் நீர் குடிப்பது, வாரி இறைப்பதுயெல்லாம் காட்டினார் நடிகர். எல்லாம் கை அசைவு, கால் அசைவு, உடல் அசைவுகளினாலேயே, இப்படி நடித்த நடிகரே இன்னும் சில நிமிஷ நேரங்களில் முதலையாக மாறிவிட்டார்.
முதலை தண்ணீருக்குள் எப்படி வளைந்து வளைந்து வருமோ அந்தக் காட்சியைக் கண்முன் கொண்டு வந்தார். சிறிது நேரத்தில் அவரே முதலை காலைப் பிடித்துக்கொள்ள அதனால் வீறிட்டு அலறும் யானையாகவும் மாறினார். பின்னர் அவரே கருடனாகவும், கருடன்மேல் ஆரோகணித்து வரும் பெருமாளாகவும் மாறி விட்டார், மேடைமீது 'ஆதிமூலமே' என்று அழைத்த கஜேந்திரனை முதலைப் பிடியினின்றும் விடுவித்து மோக்ஷமும் அளித்து விடுகிறார். இத்தனையையும் ஒரு நடிகரே பத்து நிமிஷ நேரத்தில் அங்கு எழும் இன்னிசைக்கேற்ப நடனம் ஆடி நடித்து மேடைமீது காட்டி விடுகிறார்.
இதில் இருந்தது ஒரு கஷ்டம், நடன நாடகத்தை நடித்த நடிகருக்கு எவ்வளவு கற்பனை வேண்டியிருந்ததோ அத்தனை கற்பனையுடையவர்களாகப் பார்ப்பவர்களும் அமைய வேண்டியிருந்தது. நடன நாடகத்தைக் கண்டவர்களும் கற்பனை பண்ணியே கதையைத் தெரிந்துகொள்ள, உணர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. குளமாக, யானையாக, முதலையாக, கருடனாக, காத்தற் கடவுளாம் திருமாலாக எல்லாம் ஒரே நடிகர் மாறி மாறி நடித்ததைக் கண்டு மகிழ்ந்ததோடு வியப்பிலும் ஆழ்ந்து விட்டேன். அத்தனை கலை அழகு இருந்தது, அந்த நடன நாடக நிகழ்ச்சியில்.
இத்தனை கலை அழகையும் பின்னர் ஒரு சிற்ப வடிவில் கண்டபோது அப்படியே அதிசயித்து நின்றேன். அந்தச் சிற்ப வடிவம் அமைந்திருப்பதே ஒரு தனி அழகு. ஒரு சிற்பிக்கு நான்கு அடி நீளம், இரண்டு அடி அகலம் உள்ள ஒரு கல் கிடைக்கிறது.
கல்லின் கனம் எல்லாம் ஒன்றரை அடிதான். இந்தக் கல்லைப் பார்ப்பதற்கு முன் சிற்பி கஜேந்திர மோக்ஷக் கதையைக் தன் மனக்கண்ணில் கண்டிருக்கிறான். ஆம்! 'உள்ளக் கிழியில் உரு எழுதி' வைத்திருக்கிறான். கிடைத்த கல்லில் உருவாக்கிக்காட்ட முனைந்திருக்கிறான். இருப்பதோ ஒரு சிறிய கல், அதில் உருவத்தால் பெரிய யானை, அந்த யானையின் காலைப் பிடித்து இழுக்கும் முதலை, யானையைக் காக்க வருகின்ற பெருமான், அந்தப் பெருமானைத் 'தூக்கி வருகின்ற கருடன் எல்லோரையும் உருவாக்க வேண்டுமே என்று சிற்பி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கல்லிலே பெரும் பகுதியைப் பெருமானுக்கும் கருடனுக்கும் ஒதுக்கி விடுகிறான். அடித்தளத்தில் ஒரு சிறு இடத்தில் வீறிட்டு அலறும் யானை உருவாகிறது. அந்த யானையின் காலைப் பிடிக்கும் முதலையும், இருக்கிற கொஞ்ச இடத்துக்குள்ளேயே உடலை வளைத்துக் கொண்டு நெளிவதற்கு ஆரம்பித்து விடுகிறது. அவ்வளவுதான்; அதன்பின் பறந்து வருகின்ற கருடன்மேல் ஆரோகணித்து வரும் அந்தப் பெருமானின் கோலம் எல்லாம் உருவாகிவிடுகிறது சிற்பியின் சிற்றுளியால். பெருமான் வருகின்ற வேகம் கூடத் தெரிகிறது கருடனது வரவைச் சித்திரித்திருப்பதிலே.
சங்கு சக்கரம் ஏந்திய கைகள் இரண்டோடு அபய வரத முத்திரைகளோடு இரண்டுகைகள். கருடனது வடிவ அமைப்பே ஒரு கவர்ச்சி; பெருமானது மேனியிலே ஓர் அழகு; எல்லாவற்றையும் அல்லவா சிற்பி செதுக்கியிருக்கிறான். கலைஞனாகிய சிற்பி, யானை, முதலைகளைச் செதுக்குவதிலும் மிக்ககவனமே செலுத்தி யிருக்கிறான், அதனால் தானே உயிருள்ள முதலையையும் வளர்ச்சி குறை யாத யானையையுமே காண்கிறோம் கல்லுருவில். இப்படி அற்புதமாக ஒரே கல்லில் இத்தனையும் உருவாக்கி இருக்கும் சிலையைக் கண்ட்பின்தான், ஒரே நடிகர் அத்தனை கோலங்களிலும் அவர் ஒருவராகவே நடித்தது அதிசயமாகப் படவில்லை. இத்தகைய அற்புதச் சிற்ப வடிவைக் காண விரும்பினால் நீங்கள் செல்லவேண்டுவது திருக்கண்ண மங்கைக்கு அந்தத் திருக்கண்ண மங்கைக்கே செல்கிறோம் நாம் இன்று.
திருக்கண்ணமங்கை திருவாரூருக்கு மேற்கே நான்கு, ஐந்து மைல் தொலைவில் இருக்கிறது. திருவாரூர் ஜங்ஷனில் இறங்கிவண்டியோ, காரோ வைத்துக் கொண்டு சென்றாலும் போய்ச் சேரலாம். இல்லை, கும்பகோணத்தில் இறங்கி, நாச்சியார் கோயில், திருச்சேறை கோயில்களுக்கு எல்லாம் போய்த் தரிசித்துவிட்டுப் போய்ச் சேரலாம். இந்த வழியில் போனால் - வசதி இருந்தால், நாலூர், நாலூர் மயானம், குடவாயில் முதலிய பாடல் பெற்ற கோயில்களுக்குமே போய்த் தரிசனம் பண்ணிவிட்டு இங்கு வந்து சேரலாம். எப்படி வத்நாலும் சாலையில் இறங்கி மேற்கே கொஞ்ச தூரம் நடக்க வேண்டும்.
அப்படி நடந்தால் முதலில் தர்சன புஷ்கரணியைத் தரிசனம் பண்ணலாம். இந்தப் புஷ்கரணி தரிசனம் பண்ணுவதற்குத்தான் ஏற்றது. இறங்கித் துளாவிக் குளிப்பதற்கெல்லாம் ஏற்றது அல்ல. ஆதலால் 'விறு விறு' என்று கோயிலுக்குள்ளே நுழையலாம். அங்கு கோயில் கொண்டிருப்பவர் பக்தவத்ஸலர்; அவரையே பத்தாரவிப் பெருமாள் என்பார்கள் அங்குள்ளவர்கள். கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் இவரைக் கண்டு வணங்கிக் கொள்ளலாம். இவரையே மங்கை மன்னன் பதினான்கு பாசுரங்களில் பாடிப் பரவியிருக்கிறார். கண்ண மங்கைக் கண்ணனை, மங்கை மன்னன் பாடுவது பொருத்தம் தானே.
பண்ணினை, பண்ணில் நின்றதோர்
பான்மையை, பாலுள் நெய்யினை
மால் உருவாய் நின்ற
விண்ணினை, விளங்கும் சுடர்
சோதியை, வேள்வியை,
விளக்கின் ஒளிதன்னை
மண்ணினை, மலையை அலை
நீரினை, மாலை மாமதியை
மறையோர் தங்கள்
கண்ணினை; கண்களாரவும்
நின்று கண்ண மங்கையுள்
கண்டு கொண்டேனே
மோக்ஷக் காட்சியைக் காண்போம். இந்த ஒரு காட்சிதானா? இன்னும் பல மாடங்களில் பல கோலங்களில் பெருமாள் நின்றுகொண்டிருப்பார். ‘தாயெடுத்த சிறு கோலுக்குக் குழைந்து ஓடி, தயிர் உண்டு வாய் துடைத்த மைந்தனாம்' கண்ணனை வேணு கோபாலனாகக் காண்போம். இத்துடன் பூமா தேவியைக் காத்தளிக்கின்ற வராக மூர்த்தி, இரணியன் உடல் கிழித்து உதிரம் உறிஞ்சிய நரசிம்மன், சேம மதிள் சூழ் இலங்கையர் கோன் கரமும் சிரமும் துணித்த அந்தக் கோதண்டராமன் முதலியவர்களையெல்லாம் நல்ல நல்ல கல்லுருவில் காண்போம். இத்தனை சிலைகளையும் தூக்கி அடிக்கும் சிலை ஒன்றும் இங்கு உண்டு. ஆதிசேஷனை நினைத்தால் அவன் விரித்த படுக்கையில் படுத்து அறிதுயில் கொள்ளும் அனந்த சயனன் தான் ஞாபகத்துக்கு வருவான். ‘பாற்கடலில் பாம்பணைமேல் பையத் துயின்றான் பரமன்' என்பது தானே கலைஞன் கற்பனை. ஆனால் இங்குள்ள பரமனோ நிரம்பவும் உஷாராகப் படுக்கையை விட்டே எழுந்து உட்கார்ந்திருக்கிறான். பாயாகச் சுருண்டு கிடந்த பாம்பே இங்கே 'கோப்புடைய சீரிய சிங்காதனமாக' அமைந்திருக்கிறது இந்த வைகுண்டநாதனுக்கு. ஒரு காலை ஊன்றி ஒரு காலைத் தொங்க விட்டு உட்கார்ந்திருப்பதிலேயே ஒரு காம்பீர்யம். ஊன்றிய காலின் மேல் நீட்டிய கையோ அவன்றன் உல்லாசத்தைக் காட்டுகிறது. சங்கு சக்ரதாரியாய்த் திருமாமணி மகுடம் தாங்கிப் புன்னகை தவழ இருக்கும் இந்த வைகுண்டநாதனின் திருஓலக்கம் அழகுணர்ச்சி உடையார் எல்லாம் கண்டு களிக்கும் ஒரு கலைச் சிகரம். கஜேந்திர மோக்ஷத்திலே கலைஞனின் கற்பனை வளம் நிரம்பியிருந்தால் இந்த வைகுண்டநாதன் தோற்றத்திலே ஓர் அற்புத சௌந்தர்யம் நிறைந்திருக்கிறது. இந்த அழகனை வழுத்தி வாழ்த்தாத மானுடர் மானுடரே அல்ல என்பது மங்கை மன்னன் சிததாந்தம். அப்படியே அவர் பாடுகிறாரே,
மண்ணாடும், விண்ணாடும், வானவரும்,
தானவரும், மற்றும் எல்லாம்
உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல்,
தான் விழுங்கி உய்யக் கொண்ட
கண்ணாளன், கண்ணமங்கை நகராளன்
கழல் சூடி, அவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத
போதெல்லாம் இனிய வாறே.
என்பது மங்கை மன்னன் பாடல், இத்தகைய சிற்ப வடிவங்களெல்லாம் நிறைந்து இந்தக் கோயிலை ஒரு கலைக் கூடமாகவே அமைத்து வைத்திருக்கிறார்கள் நமது சிற்பிகள்.
இப்படியே கண்ணமங்கைக் காராளனைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீரே, இங்குள்ளதாயாரைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்றுதானே நினைக்கிறீர்கள். அவரசப்பட வேண்டாம். அவளைத்தான் பார்க்க இப்போது உடனடியாகவே அழைத்துச் செல்கிறேன். பக்தவத்ஸலருக்கு வடபக்கத்தில் தனிக்கோயிலில் அபஷேகவல்லித் தாயார் இருக்கிறாள். அங்கு சென்று அவளை வணங்குபவர்களுக்கு ஓர் அதிசயம் காத்து நிற்கும். இந்தத் தாயார் சந்நிதியிலே ஒரு பெரிய தேன் கூடு; இந்தத் தேன் கூடு இங்கே எப்போது கட்டப்பட்டது என்று சொல்வார் ஒருவரும் இல்லை. ஆனால் இந்தத் தேன் கூடு இங்கே கட்டப்பட்டதற்கு ஒரு கதை மட்டும் உண்டு.
கண்ணமங்கை நகராளனைப் பிரிய விரும்பாத முனிபுங்கவர் பலர் தேனியாகப் பிறக்க வரம் வாங்கிக் கொண்டார்களாம். அவர்களே இங்கே கூடு கட்டி அனவரத காலமும் பக்தவத்ஸலன், அபிஷேக வல்லி இருவரையும் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு ரீங்காரம் செய்து வாழ்கிறார்கள். அவர்களுக்குத் தேன் கிடைப்பதும் அவ்வளவு சிரமமானதாக இல்லை . பெருமானின் மார்பை அலங்கரிக்கும் அலங்கல் மாலையிலே தான் அளவிறந்த தேன் உண்டே. அந்தத் தேனையே உண்டு உண்டு திளைத்து எந்நேரமும் பாடிக்கொண்டே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். இத்தேன் கூட்டுக்கு இல்லை, இத்தேன் கூட்டில் வாழும் முனிவர்களுக்குத் தினமும் பூசை நடக்கிறது.
திருக்கண்ண மங்கை செல்வோர் இந்தத் தேன் கூட்டைக் கண்டு தொழாமல் திரும்புவதில்லை. நாம் மட்டும் தொழாமல் திரும்புவானேன்? தேனை உண்ண வழியில்லை என்றால் நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டே திரும்பி விடலாம். கண்ணமங்கை வைணவத் திருப்பதிகளாம் நூற்றெட்டில் ஒன்று. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி பாடிய திவ்ய கவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார், இந்தத் திருப்பதியையும் பாடியிருக்கிறார்.
கருத்தினால் வாக்கினால்
நான் மறையும் காணா
ஒருத்தனை நீ! நெஞ்சே!
உணரில் பெருத்த முகில்
வண்ணமங்கை கண் கால்
வனசத் திருவரங்கம்
கண்ண மங்கை ஊர் என்று காண்.
என்பது அவரது பாட்டு. கண்ணமங்கை செல்பவர்களுக்குக் கலையழகைக் காணும் வாய்ப்பு உண்டு. பக்த வத்ஸலனையும் அபிஷேகவல்லியையும் வணங்கும் பேறு உண்டு. இந்தத் தலத்திலே சிறப்பான திருவிழா வைகுண்ட ஏகாதசிதான். ஆம்! வைகுண்டநாதன் கம்பீரமாகக் கொலுவிருக்கும் தலம் அல்லவா! ஆதலால் வசதி செய்து கொள்ளக் கூடியவர்கள் வைகுண்ட ஏகாதசி அன்றே செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு நான் நின்று கொள்கிறேன்.