உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 3/008-033

விக்கிமூலம் இலிருந்து

8. திருச்சேறை சாரநாதன்

முன்னர் நாம் வட ஆர்க்காடு மாவட்டத்தில் பாலாற்றின் கரையில் உள்ள பள்ளிகொண்டானுக்குப் போயிருந்த பொழுது ஒரு வரலாற்றைக் கேட்ட ஞாபகம் இருக்கும். அங்கு பள்ளி கொண்டிருப்பவர் ரங்கநாதன். காவிரியிலே துயிலும் ரங்கநாதரிடமிருந்து இவரைப் பிரித்துக்காட்ட இவரை உத்தர ரங்கநாதன் என்கிறார்கள். இந்த ரங்கநாதர் கோயிலிலே ஒரு சிறு இடம், கஸ்தூரி ரங்கநாதருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. விசாரித்தால் இந்தக் கஸ்தூரி ரங்கநாதரே அந்த உத்தர ரங்கநாதரைக் காப்பாற்றிக் கொடுத்தவர் என்பார்கள். (ஆம். காத்தற் கடவுளான ரங்கநாதரே இன்னொரு ரங்கநாதரால் காப்பாற்றப்பட வேண்டியவராக இருந்திருக்கிறார் என்பது விசித்திரம்தானே.)

அதாவது முஸ்லிம் மன்னர்கள் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து இங்குள்ள கோயில்களை இடித்துத் தகர்த்து மூர்த்திகளை உடைத்து எறிந்து கொண்டு வந்திருக்கிறார்கள். பள்ளிக்கொண்டானுக்கு வந்து விடுவார்கள் என்று அஞ்சிய பக்தர் மூலவர் படுத்துக் கிடக்கும் வாயிலை நன்றாகச் சுவர் வைத்து மறைத்துக் கட்டி விட்டு ஒரு சிறு ரங்கநாதரை உருவாக்கி அவரை ஒரு மடத்தில் கிடத்தி யிருக்கிறார்கள். படை எடுத்து வந்த முஸ்லிம் வெறியர்கள் கோயிலுள் நுழைந்ததும் அந்தச் சிறுரங்கநாதரே அங்கு கோயில் கொண்டிருப்பவர் என்று காட்டியிருக்கிறார்கள். 'ஓ! இது என்ன சோட்டா சாமி' என்று அவரை அலட்சியப்படுத்திவிட்டு மேல் நடந்திருக்கிறார்கள் வந்தவர்கள். இப்படித்தான் இந்தச் சோட்டா சாமியாம் கஸ்தூரி ரங்கநாதர் மோட்டா சாமியாம் உத்தர ரங்கநாதரைக் காப்பாற்றியிருக்கிறார். இதைப்போலவே இன்னொரு கதை, திருச்சேறை என்ற தலத்திலே கோயில் கொண்டிருப்பவர் சாரநாதன்.

இந்தச் சாரநாதன் கோயிலிலே முன் மண்டபத்திலே ஒரு சிறு கோயில் ராஜகோபாலனுக்கு, இந்த ராஜகோபாலனே சாரநாதன் கோயில் உருவாவதற்குக் காரணமாக இருந்திருக்கிறான் என்பது வரலாறு. கதை இதுதான். தஞ்சையை ஆளுகிறான் அழகிய மணவாள நாயக்கன். இவன் மன்னார்குடியில் ராஜகோபாலன் கோயில் கட்டுவதில் முனைந்திருக்கிறான், தஞ்சை ஜில்லாவில் கல் கிடைப்பது அரிதாயிற்றே! அதற்காக வடக்கே எங்கிருந்தோ வண்டிகளில் கல் கொண்டுவர ஏற்பாடு செய்திருக்கிறான்.

நாயக்க மன்னனின் மந்திரி நரச பூபாலனுக்குச் சாரநாதனிடம் ஈடுபாடு. அந்தச் சாரநாதனுக்குத் திருச் சேறையில் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்ற ஆசை. ஆதலால் மன்னார்குடிக்குச் செல்லும் கற்களில் வண்டிக்கு ஒரு கல்லைத் திருச் சேறையில் இறக்க உத்தர விடுகிறான். அரசர் பெருமக்களை அடுத்துத்தான் கோள் சொல்பவர்கள் இருப்பார்களே. அவர்களில் ஒருவன் மன்னனின் பணத்தையெல்லாம் மந்திரி திருச்சேறை சாரநாதனுக்குக் கோயில் கட்டுவதில் செலவு செய்கிறான் என்று கோள் சொல்லுகிறான்.

இதன் உண்மை அறிய விரும்புகிறான் அழகிய மணவாள நாயக்கன். விஷயம் தெரிந்துவிடுகிறது மந்திரி நரச பூபாலனுக்கு. மன்னன் வரப்போகிறான் என்ற உடனே இரவோடு இரவாய் ஒரு ராஜகோபாலன் தம்பதிகளை உருவாக்கி அவர்களுக்கு ஒரு சிறு கோயில் கட்டிப் பிரதிஷ்டை செய்து தயாராய் வைத்திருக்கிறான்; மன்னன் வந்ததும் அந்தக்கோயிலைக் காட்டி மன்னனின் இஷ்ட தெய்வமான ராஜகோபாலன் கைங்கரியமே அங்கும் நடக்கிறது என்று காட்டியிருக்கிறான். மன்னனும் மகிழ்ந்து அந்தக் கோயில் கட்டும் செலவு முழுவதையுமே கொடுத்துத் திருப்பணியைப் பூர்த்தி செய்திருக்கிறான்.

இப்படித்தான் ராஜகோபாலனை முன் நிறுத்தித் திருச்சேறை சாரநாதன் தனக்குக் கோயில் கட்டிக் கொண்டிருக்கிறான். பள்ளி கொண்டானில் இடிக்க வந்தவர்களைத் தடுத்திருக்கிறான் கஸ்தூரி ரங்கநாதன். இங்கோ பணியைத் தடுக்க வந்த மன்னனை உற்சாகமாகப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறான் ராஜகோபாலன், சாரநாதன் இவர்களையே காணச் செல்கிறோம் நாம் இன்று.

திருச்சேறை கும்பகோணத்துக்குத் தென்கிழக்கே திருவாரூர் செல்லும் பாதையில் எட்டு மைல் தூரத்தில் இருக்கிறது. காரிலோ, பஸ்ஸிலோ, இல்லை வண்டியிலோ வசதியாகச் செல்லலாம். கோயிலுக்கு முன்னாலே ஒரு பெரிய தெப்பக் குளம், அதையே சார புஷ்கரணி என்பார்கள். இதைச் சுற்றிவளைத்துக்கொண்டே சென்று புஷ்கரணிக்கரையில் இறங்கலாம். இங்கு கோயிலை விடப் புஷ்கரணியே சிறப்புடையது. நல்ல விசாலமான படிக்கட்டுகள் எல்லாம் கட்டி வைத்திருக்கிறார்கள். மற்ற புஷ்கரணிபோல் அல்லாமல் தெளிவான தண்ணீரையும் நிரப்பியிருப்பார்கள். கோயிலுக்கு வடக்கில் முடி கொண்டான் ஆறும், தெற்கே குடமுருட்டி ஆறும் ஓடுகின்றனவே! தெளிந்த தண்ணீர் நிறைவதற்குக் கேட்டானேன். இந்தச் சார புஷ்கரணி எப்படி உருவாயிற்று என்று தெரியவேண்டாமா? யுகப் பிரளய காலத்தில் மகாவிஷ்ணு பிரும்மாவை அழைத்து விரைவில் மண் எடுத்து அதில் ஒரு கடம் பண்ணி அதற்குள் சகல வேத ஆகட், சாஸ்திர புராண கலைஞானங்களையெல்லாம் ஆவாகனம் பண்ணிப் பத்திரப்படுத்தச் சொல்லியிருக்கிறார். அவரும் அப்படியே பல இடங்களில் மண் எடுத்துக் கடங்கள் பண்ணிப் பார்த்திருக்கிறார். அத்தனை கடங்களும் நிலைத்து நிற்காமல் உடைந்து உடைந்து போயிருக்கின்றன. கடைசியில் வியாசர், மார்க்கண்டேயர், பராசரர் முதலியோர் தவம் செய்த இடத்திற்கு வந்து மண் எடுத்துக் கடம் பண்ணியிருக்கிக்கிறார். அந்தக் கடம் பின்னம் அடையாமல் நிலைத்திருக்கிறது. அதில் வேதங்கள், ஆகமங்கள் எல்லாம் பதனப்படுத்தப் பட்டிருக்கின்றன. அதனாலேயே யுகப் பிரளய காலத்தில் அவை அழியாமல் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.

இப்படிப் பட்ட காரணமாகவே அத்தலம் சாரக்ஷேத்திரம் என்று பெயர் பெற்றிருக்கிறது. கடம் செய்ய மண் எடுத்த இடத்தையே சார புஷ்கரணியாக்கியிருக்கிறார். (மக்களாகிய நம்மை யெல்லாம் இந்தப் பிரமன் இப்படி மண்ணெடுத்து மண் எடுத்துத்தானே உருவாக்கியிருக்கிறான்! நாம் கூட இந்தச் சாரபுஷ்கரணி மண்ணால் ஆனவர் தாமோ என்னமோ! நம்மில் பலர் எல்லா வகையிலும் சாரம் அற்றவர்களாயிருக்கிறார்களே என்கிறீர்களா? அவர்களைச் செய்ய பிரமன் வேறு இடத்தில் மண்ணெடுத்திருப்பான் போலும்!) இந்தச் சார புஷ்கரணியில் நீராடியதும் முதல் முதல் சென்று தரிசிக்க வேண்டியது, அக்குளத்தின் மேல் கரையில் தென் மேற்கு மூலையில் அரச மரத்தடியில் இருக்கும் காவிரித் தாயாரைத்தான். அவள் மாமதலைப் பிரானாக அவதரித்த குழந்தையை அணைத்த வண்ணம் இருக்கிறாள்.

பிரம்மாவும் விஷ்ணுவும் வேறே அங்கே நின்று கெண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் இங்கு எப்படி வந்தார்கள்? ஏன் வந்தார்கள் என்று தெரியத் தல புராணத்தையே புரட்ட வேண்டியதுதான். இந்தக் காவிரி இருக்கிறாளே, அவள் மிகவும் பெருமைக்காரி, பொறாமைக் காரியும் கூட. இவள் பொறாமையெல்லாம் அந்தக் கங்கை பேரிலேதான். கங்கையைப் பாடுபவர்கள் 'தெய்வப் பொன்னியே பொருவும் கங்கை' என்று பாடியிருந்தாலும், இவளது பொறாமை வளர்ந்தே வந்திருக்கிறது. ஒருநாள் விந்தியமலை அடிவாரத்தில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி முதலிய ஏழு கன்னிகைகளும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வான்வழிச் சென்ற விஸ்ரவசு என்ற கந்தர்வன் இக் கன்னிகையரை வணங்கியிருக்கிறான். 'யாரைக் கண்டு வணங்கினான் அவன்?' என்று ஒரு விவாதம் கிளம்பி யிருக்கிறது கன்னிகையரிடையே. விவாதத்துக்கு முடிவு காண பிரம்மாவையே அணுகியிருக்கிறார்கள்.

அவரோ மாவலியாம் அசுர மன்னனை வாழ்விக்க வந்த வாமனர் திரிவிக்கிரமனாக வளர்ந்து நின்ற போது அவரது திருவடியைத் திருமஞ்சனம் செய்து வைத்த கங்கையே புனிதமானவள் என்று சொல்லி விடுகிறார். மற்ற அறுவரில் ஐந்து பேர் மரியாதையாக ஒதுங்கிக் கொள்ளக் காவிரி மட்டும் இதை ஒப்புக் கொள்கிறாள் இல்லை. மிக்க ரோசத்தோடு கங்கையைவிடப் புனிதமானவளாகக் கருதப்பட வேண்டும் என்று நாராயணனை நோக்கித் தவம் புரிகிறாள். அவள் சாரக்ஷேத்திரத்தில் சார புஷ்கரணியின் கரையிலுள்ள அரச மரத்தடியில் இருந்து தவம் புரிகிறாள். அவள் தவத்துக்கு இரங்கி அந்த நாராயணன் தை மாதத்தில் புஷ்ய நக்ஷத்திரமும் குருவாரமும் பௌர்ணமியும் கூடிய சுபதினத்தில் ஒரு மதலையாய் அவதரித்து, காவிரித் தாயின் மடியில் தவழ்கிறான். அந்தக் குழந்தையே நாராயணன் எனக் காவிரி அறிகிறாள். அவள் விரும்பிய கருடாரூடராய் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய்க் காட்சி தருகிறார். காவிரியும் அதுதான் சமயம் என்று மூன்று வரங்கள் கேட்டுப் பெறுகிறாள்.

பகவான் அந்தச் சாரக்ஷேத்திரத்திலேயே நித்ய வாசம் செய்ய வேண்டும் என்பது ஒன்று. அந்தத் தலத்திலே வாழ்கிற சகல உயிர்களுக்கும் மோட்சம் அளிக்க வேண்டும் என்பது மற்றொன்று. தனக்குக் கங்கையினும் மேம்பட்ட பதவி வேண்டும் என்றும் வேண்டுகிறாள். காவிரி காரியவாதிதான். ‘கங்கையிற் புனிதமாய காவிரி' என்று ஆழ்வார்களால் பாடப் பெறும் பேறு பெற்று விடுகிறாளே. அதற்குத் தகுதியுடையவள் தான். கங்கை பரந்தாமனது கால்களைக் கழுவித் தானே புனிதம் அடைகிறாள்! இவளது மடியிலே அல்லவா அவன் தவழ்ந்து விளையாடியிருக்கிறான். இவள் புகழ் அடைவதற்குக் கேட்பானேன்! ஆகவே புஷ்கரணியின் கரையிலுள்ள காவிரித்தாய்க்கே நமது முதல் வணக்கம். இந்தப் புஷ்கரணியின் கீழ்க் கரையில் அனுமாரும் வடகிழக்கு மூலையில் தும்பிக்கை ஆழ்வாரும் சிலா உருவத்தில் இருக்கிறார்கள், இவர்களையுமே வணங்கி விட்டு மேல் நடக்கலாம்.

புஷ்கரணியின் மேல் கரையிலே ராஜகோபுரம் சுமார் 120 அடி உயர்ந்து நிற்கிறது. இந்தக் கோபுரத்தைக் கடந்தே முதல் பிரகாரத்துக்குச் செல்ல வேணும். அங்கு இடை நிலைக் கோபுரம் வேறே இருக்கிறது. அதையும் கடந்தே இரண்டாம் பிரகாரம். அதை அடுத்தே கல்யாண மண்டபம். இந்த மண்டபத்தின் வடபக்கத்திலே தான் முன் சொன்ன ராஜகோபாலன் சந்திதி. அந்த ராஜகோபாலனையும் முந்திக்கொண்டு திருவேங்கடமுடையானும் இங்கு எழுந்தருளியிருக்கிறான். இவர்களை அடுத்தே சீதா லக்ஷ்மண சமேதனான ராமன், சேனை முதலியார், ஆழ்வார்கள் எல்லாம். எல்லோரும் நல்ல செப்புச் சிலை வடிவில் உருவாகியிருக்கிறார்கள். அவர்களில் ராமரும் சேனை முதலியாரும் அழகாயிருக்கிறார்கள். அடுத்த உள் கட்டிலே நுழைந்தால் நரசிம்மர், மணவாள மாமுனிகளை எல்லாம் தரிசிக்கலாம். இவர்களை எல்லாம் கடந்தே கருவறை சென்று சேரவேண்டும். அங்கு சாரநாதப்பெருமாள் சிலை உருவில் கம்பீரமாக நின்று கொண்டிருப்பார்.

அவருக்கு வலப்பக்கத்தில் மார்க்கண்டேயரும், இடப் பக்கத்தில் காவேரித் தாயாரும் சிலை வடிவில் இருக்கிறார்கள். இவர்களுக்கு முன்னாலே தான் உத்சவ மூர்த்தியான சாரநாதர். இவர் நறையூர் நம்பியைப் போலவும் விண்ணகர் ஒப்பிலியப்பனைப் போலவும் ஏக்பத்னி விரதர் அல்ல. ஸ்ரீதேவி, பூதேவி, காணும் காணாததற்கு நீளாதேவி சமேதராகவே நிற்கிறார். காவிரியின் மடியில் தவழ்ந்த மாமதலைக் கோலத்திலும் இருக்கிறார். இன்னம் சந்தான கிருஷ்ணன், செல்வர் எல்லாம் அங்கே இருப்பர். இவர்களையெல்லாம் தரிசித்த பின்பே வெளியே வந்து வலப்புறம் சுற்றினால் சாரநாயகித் தாயாரைத் தரிசித்து வணங்கலாம். ஒப்பிலியப்பன் கோயிலிலும், நாச்சியார் கோயிலிலும் தனிச் சந்நிதி கேட்காத் பிராட்டி, இங்கு மட்டும் தனிக் குடித்தனத்தையே விரும்பியிருக்கிறாள். காரணம் தான் தெரியுமே. ஒன்றுக்கு இரண்டு உபத்திரவத்துக்கு மூன்று 'துணைவியரை அல்லவா சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார் கருவறையிலே சாரநாதர். சாரநாயகி தனிக் குடித்தனம் போடாமல் இருப்பாளா?

இத்தலத்துக்குத் திருமங்கை ஆழ்வார் வந்திருக்கிறார். சாரநாதன் சாரநாயகியைத் தொழுதிருக்கிறார். பத்துப் பாசுரங்கள் பாடியிருக்கிறார்.

வந்திக்கும், மற்றவர்க்கும் மாசுடம்பில்
வல் அமணர் தமக்கும் அல்லேன்,
முந்திச் சென்று அரி உருவாய் இரணியனை
முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்,
சந்தப் பூ மலர்ச்சோலை தண் சேறை .
எம் பெருமான் தனை நாளும்
சிந்திப் பார்க்கு என்னுள்ளம் தேனாகி
எப் பொழுதும் தித்திக்குமே..

என்ற பாடல், நமக்கும் தித்திக்கவே செய்கிறது. சாரநாதனைச் சிந்திப்பதிலேயே இனிமை கண்டவன் மங்கை மன்னன். அந்தப் பேராளன் பேரோதும் பெரியோர் வரிசையிலே பிள்ளைப் பெருமாள் அய்யங்காரும் இடம் பெறுகிறார். தமிழ் எதற்குப் பயன்பட வேண்டும்? உணவுக்கும் உடைக்கும் இரந்து நிற்பதற்குத்தானா? இல்லை, சேறை வாழ் சாரநாதன் பேர் சொல்ல உதவினால்தான் அந்தத் தமிழ் இனிக்கும் என்கிறார் அவர்.

சென்று சென்று செல்வம்
செருக்கு வார் வாயில் தொறும்
நின்று நின்று தூங்கும் மட
நெஞ்சே; - இன் தமிழைக்
கூறைக்கும் சோற்றுக்கும்
கூறாதே, பேறு ஆக
சேறைக்கு நாயகன் பேர் செப்பு

என்கிறார்; நம்மையுமே கூவி அழைக்கிறார்.

ஊரை விட்டுக் கிளம்பு முன், ஊருக்கு வடபுறம் கொஞ்சம் ஒதுங்கி வாழ்கின்ற சிவ பெருமானையும் தரிசித்துவிட்டே. புறப்படலாமே. நெடுஞ்சாலைக்கு வடபுறம் கொஞ்சம் இறங்கி மேற்கு நோக்கி நடந்தால் செந்நெறி அப்பர் ஞானவல்லியுடன் இருக்கும் கோவிலுக்கு வந்து சேரலாம். சாரநாதன் கோயிலுடன் ஒப்பிட்டால் இக்கோயில் பெரிய கோயில் அல்லதான். என்றாலும் இக்கோயிலுக்கு ஒருவருக்கு இருவராக, சம்பந்தரும், அப்பரும் வந்து வணங்கியிருக்கிறார்கள்; இறைவனைப் பாடியிருக்கிறார்கள்.

விரித்த பல் கதிர் கொள்
வெடி படு தமரு கங்கை
தரித்த தோர் கோல கால
பயிரவனாகி, வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திரு மணி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வர் தாமே.

என்பது அப்பர் தேவாரம். நாமும் அந்த அழியாச் செல்வரை வணங்கி வரலாம்.

சார புஷ்கரணி - திருச்சேறை