வேங்கடம் முதல் குமரி வரை 3/024-033

விக்கிமூலம் இலிருந்து

24. சிராப்பள்ளிக் குன்றுடையான்

பாண்டிய மன்னன் ஒருவன் தன் பட்ட மகிஷியுடன் அரண்மனையின் உப்பரிகையிலே இருக்கிறான், மாலை நேரம் அது. அப்போது மந்தமாருதம் மெல்லெனத் தவழ்ந்து வருகின்றது. அந்தத் தென்றலூடே இனிய மணம் ஒன்றுமே மிதக்கிறது. அந்த நறுமணம் எங்கிருந்து வந்தது? இனிமையும் குளிர்ச்சியும் தவிர, தென்றலுக்கு என்று ஒரு நறுமணம் கிடையாதே என்று எண்ணுகிறான். ஒருவேளை தன் மனைவி அவளது கூந்தலில் நறுமலர் ஏதாவது சூடியிருப்பாளோ என்று அவள் தன் கூந்தலைப் பார்க்கிறான். அவள் அன்று கூந்தலில் மலர் ஒன்றும் அணிந்திருக்கவில்லை.

அப்படி யானால் மணம் எங்கிருந்து வந்தது என்று மீண்டும் பிறக்கிறது கேள்வி. இரவு முழுதும் இதே சிந்தனையில் இருந்த மன்னன் விடிந்ததும், தன் ஆஸ்தான மண்டபத்தில் பொற்கிழி ஒன்றைக் கட்டித் தொங்க விட்டு, தன் உள்ளத்தில் எழுந்த எண்ணத்தையும் அதற்குரிய விடையையும் கூறுவார்க்கு அந்த பொற்கிழி உரியது என்று சங்கப் புலவர்களிடம் தெரிவிக்கிறான். பல நாட்கள் கிழி அறுபடாமலேயே தொங்கிக் கொண்டிருக்கிறது. ஒருநாள் தருமி என்று ஒரு கோவில் அர்ச்சகன் வருகிறான். ஓர் ஓலையை நீட்டுகிறான். அந்த ஓலையில்,

கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறைத் தும்பி! காமம் செப்பாது கண்டது மொழிமோ?
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறி எயிற்று அரியை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே?

என்ற பாட்டு எழுதி யிருக்கிறது. தும்பியை நோக்கி, பெண்ணின் கூந்தல் மணத்தை விடச் சிறப்பான மணம் உடைய பூ வேறு உண்டோ என்று கேள்வி கேட்பது போல், மன்னன் சந்தேகத்துக்கே அல்லவா விடை இருக்கிறது பாட்டில். ஆதலால் பரிசை தருமிக்கு வழங்க விரைகிறான் மன்னன். ஆனால் இடை புகுந்து தடுக்கிறான் சங்கப் புலவன் நக்கீரன். அவனது ஆட்சேபணை, 'பெண்கள் கூந்தலுக்கு இயற்கை மணம் கிடையாது. அதனால் அப்பாடலில் பொருள் குற்றம் உண்டு' என்பதுதான். தருமிக்கோ பதில் சொல்லத் தெரியவில்லை, பாட்டு அவன் எழுதியது அல்லவே? அதை எழுதியது ஆலவாய் மேவும் அவிர் சடைக் கடவுள அல்லவா; அதனால் அவரிடமே சென்று முறையிடுகிறான். அவரே கிளம்பி வந்து சங்கப் புலவராம் நக்கீரனைச் சந்திக்கிறார்.

அவனோ இறைவனே வந்தாலும் சாற்றிய செய்யுள் குற்றமே என்று சொல்கிறான். சிவபெருமானோ, 'நீ வணங்கி வரும் உமையின் கூந்தல் கூடவா இயற்கை மணம் வாய்ந்ததில்லை?' என்கிறார். 'அதற்குமே கிடையாது நறுமணம் இயற்கையில்' என்று சாதித்து விடுகிறான். அப்படித் தருக்கிக் கூறியதால் நக்கீரன் இறைவன் கோபத்துக்கு உள்ளானதும், தொழுநோயால் துன்பமுற்றதும் சாப விமேசானம் பெற்றதும் ஒரு தனிக் கதை. இந்தக் கதையைப் படித்தபின் இயற்கையிலேயே நறுமணம் உடைய கூந்தலுடன் கூடிய அம்பிகையைக் கண்டு தரிசிக்க விரும்பினேன் நான். பல தலங்களில் கூந்தல் அழகிகளான தேவியர் பலரைக் கண்டு வணங்கியிருக்கிறேன். அவர்கள் எல்லாம் வண்டார் பூங்குழலி என்றும், ஏலவார் குழலி என்றும், கொந்தார் பூங்குழலி என்றும், குரவங்கமழ் குழலி என்றே பெயர் பெற்றவர்கள். பெற்ற பெயருக்கு ஏற்ப மலர்ச் சேர்க்கையால் ஏற்பட்ட மணம் நிறை கூந்தல் உடையவர்களே அவர்கள். இயற்கையிலேயே நறுமணம் உடைய கூந்தல் அழகி ஒருத்தியும் இருக்கவே செய்கிறாள். அவளே சுகந்த குந்தலாம்பிகை, மட்டுவார் குழலி. அவள் கோயில் கொண்டிருக்கும் இடமே சிராப்பள்ளி குன்று. அந்தச் சிராப்பள்ளி குன்றுக்கே செல்கிறோம் நாம் இன்று.

தேவாரத்தில் சிராப்பள்ளி என்று வழங்கும் தலமே பின்னர் திருச்சினாப்பள்ளி என்று மக்கள் வாயில் பயின்றிருக்கிறது. இன்று தமிழ் நாட்டின் நடு நாயகமாய்த் திருச்சிராப்பள்ளி என்னும் திருச்சிக்குச் செல்ல நான் வழி சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமா? சிராப்பள்ளி மலையும் மலைமேல் உள்ள தாயுமானார், அம்மலை உச்சியில் உள்ள பிள்ளையார் கோயில்களும் ரயிலில் வந்தாலும் சரி, ரோட்டில் வந்தாலும் சரி, பல மைல் தூரத்திலேயே தெரியும்.

ஜங்ஷனில் இறங்கி இரண்டு மைல் வடக்கே சென்றால் மலைக்கோட்டை கோயில் வாயில் வந்து சேரலாம். திருச்சி டவுன் ஸ்டேஷனில் இறங்கினால் கூப்பிடு தூரத்திலேயே தெரியும். ஜங்ஷனில் இறங்கி இரண்டு மைல் வடக்கே சென்றால் மலைக்கோட்டை கோயில் வாயில் வந்து சேரலாம். திருச்சி டவுன் ஸ்டேஷனில் இறங்கினால் கூப்பிடு தூரமே. இந்த மலைக்குத் திரிசிராமலை என்று ஏன் பெயர் வந்தது? அதுவா, இராவணனது ஒன்றுவிட்ட சகோதரர்கள் கரன், தூஷணன், திரிசிரா என்பவர்கள். இவர்களில் திரிசிரா இறைவனைப் பிரதிஷ்டை செய்து வணங்கிய தலம் இது

என்பர் ஒரு சாரார். இல்லை, இங்கு, உச்சிப்பிள்ளையார், இறைவன், இறைவி மூவரும் ஆளுக்கு ஒரு சிகரத்தின் மேல் இருக்கிறார்கள். அதனால் திரிசிகரம், திரிசிரா ஆயிற்று என்றும் கூறுவர். இதோடு பழைய கதையையுமே கேட்போம் அங்கு போனால். வாயுவுக்கும் ஆதிசேஷனுக்கும் பலப்பரீட்சை நடக்கிறது; ஆதிசேஷன் கயிலை மலையைக் கட்டிப் பிடித்துக்கொள்ள, வாயு வேகமாக அடிக்க, கடைசியில் ஆதிசேஷன் அசந்த சமயத்தில் கயிலை மலையிலிருந்து பெயர்ந்த மூன்று துண்டுகள் காளத்தியிலும், இங்கும், இலங்கை திரிகோண மலையிலும் விழுந்தன என ஒரு புராண வரலாறு. அப்படி விழுந்த துண்டே இங்கு குன்றாக நிற்கிறது என்றும் கூறுவர், பள்ளி என்பதால் ஜைன முனிவர்கள் தங்கியிருந்திருக்கலாம். இத்தனையும் தெரிந்தபின் நாம் மலை ஏறலாமே? இங்குள்ள கோயில், மலைமேல் இருக்கிறது. மலை காவிரிக்குத் தெற்கே ஒரு மைல் தூரத்தில் ஊருக்கு நடுவே இருக்கிறது. கோயிலுக்குச் செல்ல இரண்டு வழிகள். பெரிய கடை வீதி வழியாகப் படி ஏறி வந்த யானை கட்டும் மண்டபம் சேருவது ஒன்று. மற்றொன்று கீழை வீதியில் இருந்து பிரியும் வழியாக வந்து சேருவது. இங்கிருந்து மேலேயுள்ள தாயுமானார் கோயில்வரை மண்டபம் போல் மேலே மூடிய படிக்கட்டு வரிசை உண்டு.

இந்தப் படிக்கட்டு மூலம் ஏறினால் முதலில் வாகன மண்டபத்தையும், அதன்பின் தருமபுரத்தாரது மௌன மடத்தையும் கடந்தே நூற்றுக்கால் மண்டபம் வந்து சேர வேணும். அங்குதான் உத்சவாதிகள் நிகழ்கின்றன. சமயச் சொற்பொழிவுகளும் சங்கீதக் கச்சேரிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதனை எட்டி நின்று பார்த்து விட்டே.. படிக்கட்டுகள் ஏறலாம்; இதன் பின் சித்திர மண்டபம். இங்குள்ள சிற்பங்களோ, சித்திரங்களோ கலை அழகு நிரம்பியவை அல்ல. இதையும் கடந்த பின் தாயுமானார் கோயிலின் பிரதான வாயில்.

அந்த வாயிலில் மேற்கு நோக்கி நடந்தால் பல படிக்கட்டுகள் ஏறி, பல மண்டபங்கள் கடந்து இறைவனாம் தாயுமானாரையும் இறைவியாம் மட்டுவார் குழலியையும் தரிசிக்கலாம். கீழ்ப்பக்கத்து வாயில் வழியாக நடந்தால் அந்த வழி உச்சிப் பிள்ளையாரிடம் கொண்டு சேர்க்கும். இந்தச் சிராப்பள்ளி மலையின் அடிவாரத்தில் ஒரு பிள்ளையார், உச்சியில் ஒரு பிள்ளையார். இந்த உச்சிப் பிள்ளையாரை முதலில் வணங்கி விட்டே, அதன்பின் அவரது அன்னையையும் அத்தனையும் கண்டு தொழலாம். உச்சிப் பிள்ளையார் கோயில் மலை அடிவாரத்திலிருந்து 273 அடி உயரம் என்று கணக்கிட்டிருக்கின்றனர். அடித்தளத்திலிருந்து 417 படிகள் ஏறியே அங்கு வந்து சேரவேணும். இங்கிருந்து திருச்சி, ஸ்ரீரங்கம், திருவானைக்கா, பொன்மலை, உறையூர் எல்லாவற்றையுமே ஒரு 'சர்வே' பண்ணலாம். இந்தப் பிள்ளையார் ஏன் இவ்வளவு உயரத்தில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்? அதற்கும் ஒரு கதை உண்டு.

தென்னிலங்கை மன்னனான விபீஷணன், ராமன் தந்த அரங்கநாதனை எடுத்து வந்திருக்கிறான். ராமனோ இலங்கை செல்லும்வரை ஓர் இடத்திலும் இந்த மூர்த்தியைக் கீழே வைத்து விடக்கூடாது என்று உத்தர விட்டிருக்கிறான். காவிரிக் கரைக்கு வந்ததும் விபீஷணனுக்கு நீராடும் ஆவல் பிறந்திருக்கிறது. அரங்கநாதனைக் கீழே வைக்க முடியாது தவித்திருக்கிறான். அச்சமயத்தில் பிள்ளையார் ஓர் அந்தணச் சிறுவன் வடிவில் அங்கு வந்திருக்கிறார். அவர் கையில் அரங்கனைக் கொடுத்துக் கீழே வைக்காமல் இருக்கச் சொல்லியிருக்கிறான், பிள்ளையாரோ குறும்புக்காரர். அவர் விபீஷணனிடம், 'உம்மை மூன்று முறை கூப்பிடுவேன். அதற்குள் வந்து வாங்கிக் கொள்ளாவிட்டால் கீழே வைத்து விடுவேன்' என்று எச்சரித்திருக்கிறார்.

அப்படியே விபீஷணன் குளித்துக் கரையேறு வதற்குமுன் மூன்று முறை கூப்பிட்டிருக்கிறார். விபீஷணன் காதில் இவரது குரல் விழவில்லை. பிள்ளையார் அரங்கனைக் கீழே வைத்திருக்கிறார். விபீஷணன் எழுந்து பார்த்ததும் பிள்ளையார் ஓடியிருக்கிறார். விபீஷணன் துரத்தியிருக்கிறான். இவர் விழுந்தடித்து மலை மேலேயே ஏறி நின்றிருக்கிறார். துரத்தி வந்த விபீஷணனும் பிள்ளையார் தலையில் குட்டி இருத்தி இருக்கிறான். என்ன குட்டுப்பட்டால் என்ன? அரங்கனை இலங்கை செல்ல விடாமல் காவிரிக் கரையிலே இருத்திய பெருமையை அல்லவா தட்டிக் கொண்டு போய்விடுகிறார் இவர். அன்று மலையில் ஏறி அமர்ந்தவர்தான். பின்னர் இறங்கவே இல்லை, அர்ச்சகர் தயவிருந்தால் உச்சிப்பிள்ளையார் தலையில் குட்டுப்பட்ட வடுவையும் பார்க்கலாம். மாலை நேரமாகப் போனால் சந்நிதி திறந்திருக்கும். அவரைத் தரிசித்து விட்டே திரும்பலாம். திரும்பும் வழியில் உள்ள மணி மண்டபம் பதினாறுகால் மண்டபங்களையும் பார்க்கலாம்.

மணி மண்டபத்தில் உள்ள மணி, நாலு அடி எட்டு அங்குலம் உயரம் உள்ளது. இரண்டரை டன் நிறையுள்ளது என்பர். இதையெல்லாம் கணிக்கத் தவறினாலும் வழியில் உள்ள பல்லவ குடைவரையைக் காணத் தவறக்கூடாது. இக் குடைவரை தாயுமானார் கோயிலிலிருந்து உச்சிப் பிள்ளையார் கோயில் போகும் வழியில் முதலிலேயே இருக்கிறது. இதனை லளிதாங்குர பல்லவேசுவர கிருஹம் என்று புதைபொருள் இலாகாவினர் போர்டு போட்டு நமக்கு அறிவிக்கிறார்கள். பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் அமைத்த குடைவரை; இக் குடைவரையில் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் சுவர் முழுதும் கல்வெட்டுக்கள்; அதில் 104 செய்யுள்கள் தமிழில் அந்தாதித் தொடையாகவே இருக்கின்றன.

இன்னும் இங்குதான் பிரசித்தி பெற்ற கங்காதரரது சிற்ப வடிவம் உப்புச உருவில் இருக்கிறது. அவர் நிற்கும்

கங்காதரர்
கம்பீரமான தோற்றமும் அவரது தலையில் கங்கை அடங்கி ஓடுங்கியிருப்பதும், அவரைச் சுற்றி தேவர்கள் எல்லாம் தொழுது நிற்பதும் கண் கொள்ளாக் காட்சி. பல்லவர்களது கலை ஆர்வத்துக்குச் சிறந்த எடுத்துக் காட்டு இந்தச் சிற்பவடிவம். இதனைக் காணும்போதே மலைமீதுள்ள திருவீதியில் தென் பக்க வாயிலுக்கு மேற்கே உள்ள குடைவரையும் ஞாபகம் வரும். அது அவ்வளவு சிறப்பானது அல்ல என்றாலும் அங்கு திரிமூர்த்திகள் மூவரும் உருவாகியிருக்கிறார்கள். இக்குடை வரையை மலையை விட்டு இறங்கி வீடு திரும்பும் போது அவகாசம் இருந்தால் பார்த்துக் கொள்ளலாம். லளிதாங்குரபல்லவேசுர கிருஹத்தை விட்டு இறங்கி வந்து மேற்கு நோக்கி விரைந்தால் பிரதானக் கோயிலுக்குள் நுழையலாம். இந்தக் கோயில் மலைமேல் நூற்று ஐம்பது அடி உயரத்துக்கு மேல் கற்களாலேயே சுவர்கள் எழுப்பிக் கட்டப்பட்டிருக்கிறது. இது கி.பி. 10 முதல் 12-ம் நூற்றாண்டுக்குள் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது சரித்திர ஆராய்ச்சியாளரது அபிப்பிராயம். நமக்கு வியப்பெல்லாம் சரிவான மலையின்மீது செங்குத்தான சுவர்களை எப்படி எழுப்பி மண்டபங்கள் அமைத்தார்கள் என்பதுதான்.

பத்து வருஷங்களுக்கு முன் இந்துஸ்தான் கம்பெனியார் விமானம் கட்ட இரண்டு ஜெர்மன் எஞ்சினீயர்களை அமர்த்தியிருந்தார்கள். அவர்களைத் திருச்சி மலைக் கோட்டையில் ஏற்றி அங்கு கட்டப்பட்டுள்ள கோயிலைக் காட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த எஞ்சினீயர்களில் ஒருவரான ஸ்கிமிடிட் என்பவர், இப்படி மலைமேல் செங்குத்தாகச் சுவர் எழுப்பியிருப்பதைக் கண்டு மூக்கில் விரலை வைத்து அப்படியே அதிசயித்து நின்று விட்டார். இப்படியெல்லாம் கட்டடக் கலையில் வல்லவர்களுக்கு விமானத்தளம் கட்டுவதுதானா பிரமாதமான காரியம் என்பதே அவர் வாய்விட்டுச் சொன்ன அபிப்பிராயம். ஆதலால் கோயிலின் கட்டடக் கலையினைப் பார்த்தே மெற்மறக்கலாம், தலை நிமிர்ந்து நடக்கலாம் நாம்.

இந்தக் கோயிலில் மூலவர் மாத்ருபூதேசுவரர், தாயுமானவர், செவ்வந்தி நாதர், திருமலைக் கொழுந்தீசர் என்றும் பெயர் பெறுவர். இவர் உயிர்களுக்கெல்லாம் தந்தையாவர் என்பது நமக்குத் தெரியும். தாயும் எப்படி ஆனார் என்று தெரிய வேண்டாமா? காவிரிப் பூம்பட்டினத்திலே ரத்தின குப்தன் என்ற ஒரு செட்டியார்; நல்ல சிவபக்தர். அவருக்கு ரத்னாவதி என்று ஓர் அருமை மகள்; அவளைத் திரிச்சிராப்பள்ளியில் உள்ள தனகுப்தன் என்பவனுக்கு மணம் முடித்துக் கொடுக்கிறார்; பின்னர் இறந்து போகிறார். ரத்தினாவதி கருப்பவதி ஆகிறாள். பேறு காலத்துக்குத் தன் தாயின் வரவை எதிர்பார்க்கிறாள்; தாயும் வருகிறாள். வரும் வழியில் காவிரியாற்றிலோ பெருவெள்ளம். கடக்க முடியவில்லை. அக்கரையிலே நிற்கிறாள். இதற்குள் பிரசவ நேரம் நெருங்குகிறது. சிராமலை இறைவனே, ரத்தினாவதியின் தாய் வடிவில் வந்து அவளுக்கு வேண்டியதை எல்லாம் செய்கிறார். அவளும் சுகமாக ஓர் ஆண்மகவைப் பெற்றெடுக்கிறாள். ஆற்றில் வெள்ளம் குறைந்ததும் உண்மைத் தாயார் வருகிறாள்.

தாயின் வடிவில் வந்த இறைவன் தன்னுருக் காட்டி மறைகிறார். இப்படி உலகுயிர் அனைத்துக்கும் தந்தையாக இருப்பவர், செட்டிப் பெண்ணுக்குத் தாயாகவும் வந்து அவள் பிரசவ காலத்தில் உதவி புரிந்ததனால்தான் ‘தாயுமானார்' என்று பெயர் பெறுகிறார். இந்த இறைவனது லிங்கத்திரு உரு நல்ல காத்திரமான வடிவம். இத்தலத்தில் கோயில் வாயில் எல்லாம் கிழக்கு நோக்கி இருந்தாலும் இறைவனும் இறைவியும் மேற்கு நோக்கியே நிற்கிறார்கள். மேற்கு நோக்கிய மூல லிங்கத்தின்மீது ஒவ்வொரு வருஷமும் பங்குனி மாதம் 23, 24, 25-ம் தேதிகளில் மாலைச் சூரியனது கிரணம் விழுவதுண்டு . அப்படி விழும் வகையில் கோயில் மதிலைக் கட்டியிருக்கிறார்கள், கயிலையில் உள்ள உமை இத்தலத்தில் தாமரை மலர் ஒன்றில் பிறந்து காத்தியாயான முனிவரின் மகளாய் வளர்ந்து, மட்டுவார் குழலி என்ற பெயரோடு இறைவனை, ஆம்! தாயுமானவரைத்தான், திருமணம் செய்துகொள்கிறாள். அன்னையின் வடிவம் அழகியது. இவ்விருவரையும் தவிர மற்றக் கற்சிலைகளும் செப்புச் சிலைகளும் ஏராளமாக இருக்கின்றன, வேதாரண்யத்தில் பிறந்து இந்தக் கோயிலில் வந்து தங்கிய அந்தத் தவயோகி தாயுமானாருக்கும் ஒரு சிலை அமைத்து வைத்திருக்கிறார்கள்.

இத்தலத்துக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார். அப்பர் வந்திருக்கிறார். இருவரும் பாடியிருக்கிறார்கள் :-

நன்றுடை யானைத்
தீயதில்லானை, நரைவெள்ளேறு
ஒன்றுடை யானை
உமையொருபாகம் உடையானை
சென்றடையாத திருஉடை
யானைச் சிராப்பள்ளி
குன்றுடையானைக்
கூறஎன் உள்ளம் குளிருமே

என்பது சம்பந்தர் தேவாரம். இப்பாடலை வைத்தே நன்றுடையான், தீயதில்லான் என்று இரண்டு தீர்த்தங்கள் வேறே அந்த வட்டாரத்தில் அமைத்திருக்கிறார்கள். தூர வரும்போதே சிறு பிள்ளையான சம்பந்தருக்கு, சிராப்பள்ளிமலை யானை போலத் தோன்றியிருக்க வேண்டும். அந்தத் தோற்றத்தில் பிறக்கிறது பாட்டு. சிராப்பள்ளிக் குன்றைச் சம்பந்தர் பாடினால், சிராப்பள்ளிச் செல்வரைப் பாடுகிறார் அப்பர்.

மட்டுவார் குழலாளொடு மால்விடை
இட்டமாக உகந்து ஏறும் இறைவனார்

கட்டு நீத்தவர்க்கு இன்னருளே செயும்
சிட்டர் போலும் சிராப்பள்ளி செல்வரே!

என்பது அப்பர் பாடல். இவ்விருவரையும் தவிர ஐயடிகள் காடவர்கோன், பொய்யா மொழிப் புலவர், தாயுமானவர் இன்னும் பலர் இத்தலத்து இறைவனைப் பாடியிருக்கிறார்கள். மாணிக்கவாசகரே தாயான ஈசர்க்கே சென்று ஊதாய், என்று கோத்தும்பியை வேண்டியிருக்கிறார். தாயுமானவரும்.

தெய்வ மறை வடிவான
பிரணவ சொரூபியே
சித்தாந்த வித்திமுதலே

சிரகிரி விளங்க வரு
தக்ஷிணா மூர்த்தியே
சின்மயானந்த குருவே.

என்று இங்குள்ள தக்ஷ்ணாமூர்த்தியையே பாடி மகிழ்ந்திருக்கிறார். இன்னும் இத்தலத்துக்கு, கோவை, உலா, யமக அந்நாதி என்றெல்லாம் புலவர்கள் பாடியிருக்கிறார்கள்.

புராணப் பிரசித்தியைவிட இச்சிராப்பள்ளி மலைமிக்க சரித்திரப் பிரசித்தியுடையது. இக்கோயிலில் பல கல்வெட்டுக்கள் உண்டு. குடைவரைக் கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் பல்லவ மன்னனுடைய பிரதாபங்களைக் கூறுகின்றன. காவிரியைப் பல்லவ மன்னன் தன் காதலி என்றே அழைக்கிறான். உறையூர்க் கூற்றத்துச் சிற்றம்பர் கொடுத்த நில தானத்தைப் பற்றிய கல்வெட்டு இங்கே இருக்கிறது. பாண்டிய மன்னன் மாறன் சடையன், வரகுணன் முதலியோர்களுடையதும், விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த வேங்கட தேவ மகாராயரது சாசனங்களும் இருக்கின்றன. இவைகளில் சில சிதைந்தும் போயிருக்கின்றன.

இத்துடன் ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரர்களும் தங்கள் ஆதிக்கத்தை இந்தியாவில் நிலைநாட்ட முயன்ற போது நடந்த சண்டையின் நிலைக்களன் இம்மலைக் கோட்டை. சந்தா சாகிபு, முகமதலி கதையெல்லாம் நாம் தாம் படித்திருக்கிறோமே. இவ்வரலாற்றையெல்லாம் ஆராய்பவர்கள் ஆராயட்டும். அதற்கெல்லாம் நமக்கு அவகாசம் ஏது? நாமே நானூறுக்கு மேற்பட்ட படிகள் ஏறி இறங்கி அலுத்து வந்திருக்கிறோம், என்றாலும் அதற்கெல்லாம் தக்க பலனாக, உச்சிப் பிள்ளையார், தாயுமானார், மட்டுவார் குழலி மூவரையும் தரிசித்து விட்டு வந்திருக்கிறோமே, அது போதாதா?