வேங்கடம் முதல் குமரி வரை 3/025-033

விக்கிமூலம் இலிருந்து

25. கந்தனை அனைய கடம்பந்துறையார்

ர் அரசவை. அங்கே புலவர் பலர் குழுமியிருக்கின்றனர். புலவர்கள் கூடியதால் பாடல், எதிர்ப் பாடல் இடையிடையே ‘சமுத்தி' என்றெல்லாம் நடக்கிறது. சமுத்தி என்றால்தான் தெரியுமே ஒருவர் கடை அடி கொடுக்க, மற்றவர் பாட்டை முடிக்க; ஒருவர் அடியெடுத்துக் கொடுக்க மற்றவர் பாட்டை முடிக்க; ஒருவர் அடியெடுத்துக் கொடுக்க மற்றவர் தொடர்ந்து பாட; ஒருவர் ஒரு கருத்தைச் சொல்ல அந்தக் கருத்தை அமைத்து மற்றவர் பாட என்று அமையும் அல்லவா? அந்த அவையில் ஒரு புலவர் விரும்புகிறார். சூரியன் செல்லும் கதி முழுதும் வரும்படி ஒரு வெண்பாப் பாடவேண்டும் என்று. உடனே பாடுகிறார் ஒரு புலவர்.

குண கடலில் தேன்றி
கோகனப் போதை
மணமுடனே நன்றாய்
மலர்த்தி -வணமாக

நாற்றிசைகள் எங்கும்
நன்றாய் ஒளி பரப்பி
மேற்றிசைக்கு செல்லும்
வெய்யோன்

என்பது பாட்டு. ஆம்! காலை சூரிய உதயத்திலிருந்து மாலை அஸ்தமனம் வரை சூரியனின் கதியை அல்லவா பாடல் கூறுகிறது. நாமும்தான் சூரிய உதயத்துக்கு முன்னமேயே எழுந்திருக்கிறோம். அவன் வான வீதியில் உலா வரும்போது உடல் உழைத்துப் பணிபுரிகிறோம். அவன் மாலையில் மறைந்ததும் அயர்ந்து திரும்பவும் படுக்கைக்குச் செல்லுகிறோம். இதற்கிடையிலேதான் கோயில், குளம், பூசை, புனஸ்காரம் எல்லாம். ஆனால் இப்போது நான் உங்களை வேண்டுவது ஒருநாள் முழுவதும் கோயில் வழிபாட்டுக்கு என்று ஒதுக்கி வைக்க வேண்டும் என்று. வேண்டுமானால் அதுவும் ஞாயிற்றுக்கிழமையாக இருக்கட்டும்.

வாரத்துக்கு ஒரு நாளாகிய ஞாயிற்றுக் கிழமைதான் எல்லாத் துறையில் உள்ளவர்களுக்கும் ஓய்வுண்டே. எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், திருச்சி மாவட்டத்திலே உள்ள மூன்று கோயில்களுக்குக் காலையில் ஒன்றுக்கும் மதியத்தில் ஒன்றுக்கும் மாலையில் ஒன்றுக்கும் சென்று அங்குள்ள சந்நிதிகளில் வழிபாடு செய்தால் பலனுண்டு என்று ஒரு நியதி இருக்கிறதே; அந்த நியதியையும் அந்த வட்டார மக்கள் ஒரு நல்ல பழமொழியாக அல்லவா சொல்கிறார்கள். 'காலைக் கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தித் திருவேங்கி நாதர்' என்பதுதான் பழமொழி. கடம்பர் இருப்பது குழித்தலையிலே, சொக்கர் இருப்பது சிவாய மலையிலே, திருவேங்கிநாதர் இருப்பது திருஈங்கோய் மலையிலே. இவற்றைக் கடம்பந்துறை, வாட்போக்கி, மரகதமலை என்றும் புராணங்கள் கூறும். இவை மூன்றையும் ஒரே நாளில் மக்கள் ஏன் வணங்க வேண்டும் என்பதற்குக் காரணமும் கூறுவர். இந்த மூன்று தலங்களும் சோமாஸ்கந்த மூர்த்தம் போல் அமைந்திருக்கின்றனவாம். உண்மைதான். தெற்கேயுள்ள வாட்போக்கி சிவனது உருவத்தில் உயர்ந்த மலைமேல் இருக்கிறது. வடக்கேயுள்ள ஈங்கோயும் சக்தி உருவில் மலையாக உயர்ந்திருக்கிறது. இடையே உள்ள கடம்பந்துறைதான் தரையோடு தரையாய்க் கந்தன் உருவத்தில் இருக்கிறது. அதனால் தான் இம்மூன்று தலங்களையும் அங்குள்ள மூர்த்திகளையும் ஒரே நாளில் கண்டு வணங்கினால் சோமாஸ்கந்த மூர்த்தியையே வணங்கிய பலன் கிடைக்கும். சரிதான் புறப்படுவோம் மூன்று தலங்களையும் ஒரே நாளில் கண்டு தரிசிக்க.

ஆம். முதல் முதலில் கடம்பந்துறைக்கே செல்வோம். அத்துறை கந்தனின் அம்சமாக இருப்பதினால் அல்ல. அங்கு செல்லத்தான் ரயில் வசதி இருக்கிறது. திருச்சி ஈரோடு லயனில் இருக்கிறது கடம்பந்துறை, ரயில்வே ஸ்டேஷனில் கடம்பந்துறைக்கு ஒரு டிக்கட் என்று கேட்டால், புக்கிங் கிளார்க் பரக்கப் பரக்க விழிப்பார். ஆதலால் டிக்கட்டைக் குழித்தலைக்குத்தான் எடுக்கவேணும். குழித்தலை என்ற பெயரில் தானே கடம்பந்துறை இன்று விளங்குகிறது. இக்குழித்தலை திருச்சிக்கு மேற்கே இருபத்திரண்டு மைல் தொலைவில் ஒரு தாலுகாவின் தலைநகராய் விளங்குகிறது.

ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி வடக்கு நோக்கி ஒரு மைல் நடந்தால் அங்குள்ள கடம்ப வனநாதர் கோயில் வாயில் வந்து சேரலாம். கோயில் காவிரிக் கரையிலே இருக்கிறது. சிவன் கோயில்களெல்லாம் ஒன்று கிழக்கு நோக்கி, இல்லை, மேற்கு நோக்கி இருப்பதைத்தான் பார்த்திருக்கிறோம். இந்தக் கோயில் மாத்திரம் வடக்கு நோக்கி இருக்கிறது. கங்கைக் கரையில் காசி விசுவநாதர் கோயில் வடக்கு நோக்கியிருப்பது போல் காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கும் கோயில் இது ஒன்றுதான். இங்குள்ள இறைவன் வட்டக்கு நோக்கியிருந்தால், இறைவியாம் முற்றிலா முலையம்மை கிழக்கு நோக்கியே நிற்கிறாள். கோயிலுக்குள் நுழையுமுன், ஏன் இத்தலம் குழித்தலை என்றும் கடம்பந்துறை என்றும் பெயர் பெற்றது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? குளிர்ந்த சோலைகளையுடையதால் குழித்தண்டலை என்று பெயர் பெற்றிருக்கிறது. குழித்தண்டலையே குழித்தலை எனறு குறுகியிருக்கிறது. ஆதியில் இந்தப் பிரதேசம் கடம்பவனமாக இருந்திருக்கிறது. இன்றும் இக்கோயிலின் தல விருட்சம் கடம்ப மரமே. கடம்பவனத்திடையே அமர்ந்தவர் கடம்பவன நாதராகியிருக்கிறார். காவிரிக் கரையில் கட்டப்பட்ட கோயில் ஆனதினால் கடம்பந்துறை என்று பெயர் பெற்றிருக்கிறது. இத்தலத்துக்கு வந்த அப்பர்,

பூமென் கோதை உமை ஒரு பாகனை
ஓமம் செய்து உணர்மின்கள் உள்ளத்தால்;
காமன் காய்ந்த பிரான் கடம்பந்துறை
நாமம் ஏத்த நம் தீவினை நாசமே.

என்று பாடியிருக்கிறார்.

இனி, கோயிலுள் நுழையலாம். கோயில் பெரிய கோயில் அல்ல. கருவறையில் லிங்கத் திருவுருவுக்குப் பின்னே சப்த கன்னியர் உருவச் சிலைகள் இருக்கின்றன. வெளிப் பிரகாரத்தின் வடமேற்குப் பகுதியிலேதான் இறைவியின் சந்நிதி. அம்மையின் சந்நிதிக்கு முன் பரமநாதர் வடிவம் இருக்கிறது. இவரே இத்தலத்தின் காவல் தெய்வம். ஆனால் இவரோ நாம் அவரை அணுகுமுன்பே வலக்கையை நேரே உயர்த்திச் சலாம்போடும் பாவனையில் நிற்கிறார். சலாம் போட்டுவிட்டே நடக்கலாம். இக்கோயிலில் இரண்டு சோமாஸ்கந்த மூர்த்திகள், இரண்டு நடராஜ மூர்த்திகள். இரண்டு நடராஜரில் ஒருவர் காலடியில் முயலகன் இருக்க மாட்டான். ஏதோ அயர்ந்து மறந்திருந்தபொழுது எழுந்து ஓடியிருப்பான் போலும்! இந்த நடராஜ வடிவம் பல வருஷங்களுக்கு முன் பூமியின் அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது என்கிறார்கள்.

இக்கோயிலில் பார்க்க வேண்டியவை வேறு ஒன்றும் இல்லை, இக்கோயில்களில் உள்ள கல்வெட்டுக்களில் ஒன்று 1552-ல் விஜயநகர மன்னன் கிருஷ்ணதேவராயனது, அதில் இத்தலத்தை ‘ராஜகெம்பீர வளநாட்டுக் குழித்தண்டலைச் சீமையான கணபதி நல்லூர்' என்று குறித்திருக்கிறது. காலை ஏழு மணிக்கே இங்கு வந்திருக்கிறோம். இப்போது மணி ஒன்பது. இன்னும் இரண்டு கோயில்களை மாலை மங்குவதற்குள் சென்று காணவேண்டும். நீர் என்னடா வென்றால் இப்போதுதான் கல்வெட்டுக்களை ஆராய முனைகிறீர்' என்று நீங்கள் சொல்வது என் காதில் விழத்தான் செய்கிறது. ஆதலால் இத்தலத்தை விட்டுப் புறப்படலாம். மத்தியானச் சொக்கரைக் காண்பதற்கு.

ஐயர் மலை

மத்தியானச் சொக்கர் முன்னமேயே சொன்னது போல் தரையில் இருப்பவர் அல்ல, ஒரு நல்ல மலைமீது ஏறியே நிற்கிறார். அந்த மலையையே ரத்தினகிரி என்பார்கள். அந்த மலையே மணப்பாறை செல்லும் ரோட்டில் குழித்தலைக்குத் தெற்கே ஆறுமைல் தூரத்தில் இருக்கிறது. அத்தலத்துக்குக் காரிலும் போகலாம்; பஸ்ஸிலும் போகலாம்; மாட்டு வண்டியிலும் போகலாம். மாட்டு வண்டியிலும் போனாலும் காலை பத்துப் பத்தரைக்குள் சென்று சேர்ந்து விடலாம். தூரத்தில் போகும்போதே மலை தெரியும். ஆம். அம்மலைதான் 1200 அடி உயரம் உயர்ந்திருக்கிறதே. இந்த மலையைத்தான் சிவாயமலை, ஐயர்மலை, வாள் போக்கி, ரத்தினகிரி என்றெல்லாம் அழைத்திருக்கிறார்கள்.

ஓம் என்னும் பிரணவ எழுத்தைப்போல் மலையும் படியும் அமைந்திருப்பதால் சிவாயமலை என்றார்களாம். மலையில் ஒரு பக்கம் சமண முனிவர் படுக்கைகள் ஐந்து இருப்பதைப் பார்த்து இதனைப் பஞ்ச பாண்டவர் மலை என்றிருக்கிறார்கள். இந்தப் பஞ்ச பாண்டவரே பின்னர் ஐவர் என்றும் அதன் பின்னர் ஐயர் என்றும் திரிந்து இம்மலைக்கு ஐயர்மலை என்ற பெயரையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

இம் மலைக்கு ஏன் ரத்தினகிரி என்றும் வாள்போக்கி என்றும் பெயர் வந்தது? அதுவா, ஆரிய மன்னன் ஒருவனது மணிமுடி காணாமல் போய்விட்டது. புதிய மகுடம் செய்து கொள்ள நல்ல ரத்தினங்கள் தேடி இப்பக்கம் வந்திருக்கிறான் அவன். அவன் முன்னால் இறைவன் ஓர் அந்தணன் வடிவில் தோன்றி, தொட்டி ஒன்றைச் சுட்டிக்காட்டி அதைக் காவிரி நீரால் நிரப்பினால் ரத்தினங்கள் தருவதாகக் கூறியிருக்கிறார். அப்படியே மன்னன் நீர் கொணர்ந்து குடம் குடமாய்க் கொட்டியும் தொட்டி நிறையக் காணோம். அதனால் கோபமுற்ற மன்னன் தன் உடைவாளை உருவி அந்தணன் தலையில் வெட்டியிருக்கிறான். உடனே இறைவனாம் அந்தணன் மறைய, மன்னன் தான் செய்த தவறுக்காக வருந்துகிறான். அதன்பின் மன்னனுக்கு இறைவன் மாணிக்கம் ரத்தினம் எல்லாம் அருளுகிறான். வாளால் ஏற்பட்ட தழும்பு இன்னும் இறைவன் திருமுடியில் இருக்கிறது. அதனால் முடித்தழும்பர் என்றும் அவன் அழைக்கப்படுகிறான். இப்படி மன்னன் வாள் போக்கிய காரணத்தால் வாள் போக்கி என்றும் மன்னனுக்கு ரத்தினம் கொடுத்ததால் ரத்தினகிரி என்றும் வழங்குகிறது.

இனி, மலை ஏறலாம். மலை ஏறுவது கொஞ்சம் கடினம். மொத்தம் 952 படிகள் ஏறிக் கடக்க வேணுமே. அடி வாரத்திலிருந்து மலை ஏறும் இடத்திலே ஒரு பெரிய உருண்டைப் பாறையிலே விநாயகர் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. இவருக்குப் பூசை போட்டால் மழை பெய்யுமாம். இன்னும் கொஞ்சம் ஏறினால் பொன்னிடும் பாறை என்று ஒரு பாறை. அதையும் கடந்து சென்றால் சப்த மாதர் கோயில். அதையும் கடந்து அதன்பின் உள்ள வசந்த மண்டபத்தையும் கடந்தால்தான் அம்பாள் சந்நிதி வந்து சேரலாம். அங்குதான் தலவிருட்சமான வேப்பமரம் இருக்கிறது. சரி, ஒரு மட்டும் கோயில் ஏறி வந்துவிட்டோம் என்று பெருமூச்சு விட்டால் உடன் வருபவர்கள் ‘இன்னும் கொஞ்சம் ஆம், எழுபது படிகள் மாத்திரம் ஏறிவிட்டால் சுவாமி சந்நிதி சேரலாம்' என்பார்கள். இன்னமா எழுபது படி? வந்ததோ வந்தோம், மூச்சைப் பிடித்துக்கொண்டு ஏறி உச்சிக் கால சேவைக்கு இறைவன் கோயிலுக்குச் சென்று சேர்ந்து விடலாம், அம்பாள் கிழக்கு நோக்கி நின்றால் இறைவன் மேற்கு நோக்கி நிற்கிறார். இவரையே ரத்தின கிரீசர், வாள் போக்கி முடித்தழும்பர், மலைக்கொழுந்தீசர், மத்தியானச் சொக்கர் என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

இறைவியோ கரும்பார் குழலி. கல்வெட்டுக்களில் மாணிக்க மலை உடைய நாயனார், ஹாலட்சேஸ்வரி என்ற பெயர்கள் காணப்படுகின்றன. இறைவனைத் தரிசித்து விட்டுக் கீழே இறங்கலாம். இறங்குவது சிரமமாக இராது. இருந்தாலும் கால்வலிக்கும் குறைவிராது. படி இறங்கிய பின் சாவதானமாக அடி வாரத்தில் இருக்கும் கருப்பண்ணர், வைரமேகப் பெருமாள், கோர உரு நாய்க்கர் முதலிய சந்நிதிகளுக்குச் செல்லலாம். இவர்களில் பிரசித்தி பெற்றவர் வைரமேகப் பெருமாளே, காஞ்சியிலுள்ள ஆயர்குலத்தினர் ஒருவர் ஒரு பிரார்த்தனை செய்து கொள்ளுகிறார். பிரார்த்தனை நிறைவேறினால் தலையையே தருவதாகப் பிரதிக்ஞை செய்கிறார். பிரார்த்தனையை முடித்து வைக்கிறார் ரத்னகிரீசர். சொன்னபடியே தம் தலையையே பலியாகக் கொடுக்கிறார் பிரார்த்தித்துக் கொண்டவர். அவரே வைரமேகப் பெருமாள் என்னும் பெயரில் இத்தலத்தின் காவல் தெய்வமாக இருக்கிறார்:ஆம், இத்தகைய வைர நெஞ்சம் படைத்தவரை வைர மேகப் பெருமாள் என்று அழைக்காமல் வேறு என்னபெயர் சொல்லி அழைப்பது?

இன்னும் இந்த வட்டாரத்தில் ஒரு வகுப்பினர் பன்னிரண்டாம் செட்டியார் என்று அழைக்கப்படுகின்றனர். எதற்காக இவர்களுக்கு இந்தப் பெயர் என்றால், என்றோ , எப்போதோ, பதினோரு வணிக மக்கள் தங்கள் சொத்தைப் பங்கு போட்டுக்கொள்ளத் தெரியாமல் திண்டாடியபோது இறைவனே ஒரு செட்டியாராக வந்து இருந்த சொத்துக்களைப் பன்னிரண்டு பங்கு வைத்து ஒரு பங்கைத் தாம் எடுத்துக்கொண்டு மறைந்திருக்கிறார். அதனால் மற்றப் பதினோரு பேருடைய பரம்பரையும் பன்னிரண்டாம் செட்டியார் என்று அழைக்கப்படுகின்றனர். இறைவன் கெட்டிக்காரர்தான், பன்னிரண்டாம் செட்டியாராக வந்து பொருளைச் சுற்றிக்கொண்டு போனதுடன் ஏமாந்த சோணகிரிகளான மற்றப் பதினோரு பேருக்கும் பன்னிரண்டாம் செட்டியார் என்ற பெயரையும் சூட்டிவிட்டல்லவா சென்றிருக்கிறார்.

என்ன? மணி ஒன்று ஒன்றரையாகிறதே! சாப்பாட்டிற்கு ஏதாவது வழி உண்டா? எப்போது ஈங்கோய் மலை போவது என்றுதானே நினைக்கிறீர்கள்? சாப்பாடு இந்தச் சிவாய மலையில் கிடைக்காது. வந்த வண்டியிலேயே திரும்பிக் குழித்தலை சென்று அங்குதான் உணவு அருந்த வேணும். ரத்தினகிரி மலை ஏறிய அலுப்புத் தீரக் குழித்தலையில் உள்ள ஜில்லா போர்ட் தங்கும் விடுதியில் வேண்டுமானால் கொஞ்சம் இளைப்பாறலாம். அதன் பின் மாலை நாலு மணிக்குத் திரும்பவும் பயணத்தைத் தொடங்கலாம். குழித்தலையிலிருந்து ஈங்கோய் மலை செல்லக் காவிரி ஆற்றைக் கடக்க வேணும். இத்தலம் காவிரியின் வடகரையில் இருக்கிறது. அத்துடன் இங்கே காவிரி ஒரு மைல் அகலம் உள்ளதாய் இருக்கிறது. இந்த அகண்ட காவிரியைக் கடக்க மணத்திட்டை என்ற இடத்திற்குச் சென்று பரிசல் ஏறித்தான் செல்ல வேணும்.

ஈங்கோய் மலைக்கோயில்

பரிசல் ஏற விருப்ப மில்லாதவர்கள் சொந்தக் கார் வைத்துக்கொண்டு திருச்சி வந்து அங்கிருந்து சேலம் செல்லும் நெடுஞ் சாலையில் 27 மைல் செல்லவேணும். நாம் தாம் ஆற்றைக் கடக்கத் துணிந்தவர்களாயிற்றே! ஆதலால் பரிசில் ஏறியே அக்கரை சென்று ஈங்கோய் மலை ஏறலாம். இந்த மலை ரத்தின கிரியைப் போல் அவ்வளவு உயரமில்லை சுமார் 500 படிகள் ஏறினால் போதும், கோயிலுக்கு வந்து சேரலாம். மாலையில் கட்டாயம் அர்ச்சகர் இருப்பார். மற்ற வேளைகளில் சென்றால் ஆள் அனுப்பி அவரைத் தேடிப் பிடிக்கத்தான் வேணும். கோயில் பெரிய கோயில் அல்ல என்றாலும் சமீபத்தில் புதுப்பித்திருக்கிறார்கள். அகத்தியர் 'ஈ' உருவத்தில் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் ஈங்கோய்மலை என்று பெயர் பெற்றிருக்கிறது என்று தலவரலாறு கூறும். ஆனால் மக்களோ இதனைத் திருவேங்கி மரகதமலை என்று தான் கூறுகிறார்கள். இதுதவிர இம்மலைக்கு மரகதமலை என்று வேறு பெயரும் உண்டு. இங்குள்ள இறைவன் மரகத அசல ஈசுவரர். அம்பிகையோ மரகதாம்பிகை. இங்கு இறைவன் இறைவி தவிரக் காண வேண்டியவர்கள் அதிகம் இல்லை. செப்புச் சிலைவடிவில் உள்ள சம்பந்தர் சோழர் காலத்தியவர். மற்றவர்கள் எல்லாம் பிற்காலத்தியவரே. இங்கு சமயக் குரவர் நால்வரும் வந்திருக்க வேணும். சம்பந்தர் மட்டும்தான் பதிகம் பாடியிருக்கிறார். மாணிக்கவாசகர் ஈங்கோய் மலையின் எழிலது காட்டுவதோடு திருப்தி அடைந்திருக்கிறார். சுந்தரர் வழக்கம்போல் கை நீட்டியிருக்கிறார். இறைவனும் அவருடன் விளையாட முதலில் புளியங் காயைத் கொடுத்துப் பின்னர் அதைப் பொன்னாக்கியிருக்கிறார். இந்த வரலாற்றை ஓர் அம்மானை கூறுகிறது.

சுந்தரர்க்கு புளியங்காய்
ஈந்தது காண் அம்மானை!
சுந்தரர்க்குப் புளியங்காய்
ஈந்ததுவே ஆமாயின்,
அத்தனையும் சொர்ணங்காண்
அம்மானை!

என்பது பாடல், நக்கீர தேவ நாயனார் ஈங்கோய்மலை எழுபது பாடியிருக்கிறார். அவரது அடியொற்றித் திருவாசகமணி ஈங்கோய் அந்தாதியே பாடியிருக்கிறார்.

இம்மூன்று கோயில்களுக்கும் சேர்ந்த பெருந் திருவிழா தைப்பூசம் தான். இம்மூவரைத் தவிர இன்னும் ராஜேந்திரம், பேட்டை வாய்த்தலை, கருப்பத்தூர், முசிரி, வெள்ளூர் கோயிலில் உள்ள மூர்த்திகளும் காவிரியின் தென்கரை வந்து, முகாம் அடித்து ஓர் இரவு முழுவதும் கூத்தடித்துவிட்டுத் திரும்புவர். மலை ஏற இறங்க எல்லாம் இயலாதவர்கள், காலை, மதியம், மாலை என்றெல்லாம் ஓடக்கூடாதவர்கள் எல்லாம் ஒரே இரவிலேயே எல்லோரையும் கண்டு தரிசித்து விரும்பிய பலனைப் பெற்று விடலாம். இந்த ரகசியத்தை நான் சொன்னேன் என்று மட்டும் இந்த மூவரில் எவரிடமும் சொல்லிவிடாதீர்கள்; அவ்வளவுதான்.