வேங்கடம் முதல் குமரி வரை 3/026-033

விக்கிமூலம் இலிருந்து

26. கருவூர் பசுபதீஸ்வரர்

ரு வீட்டின் பின்புறம் படரும் செடிகள் சில வைத்திருக்கிறார்கள். அவரை, புடல், பீர்க்கு, சுரை முதலிய காய்கறித் தோட்டம் அது. தோட்டத்திற்கோ பெரிய வேலி ஒன்றும் இல்லை. அடுத்த வீட்டுக் கன்றுக் குட்டி ஒன்று இந்தத் தோட்டத்தில் நுழைந்து பசுமையாய் இருந்த செடிகளைத் தின்று விடுகிறது. தோட்டம் போட்டிருந்தவர் இதனைக் காண்கிறார். கோபம் பிறக்கிறது அவருக்கு, கன்றுக் குட்டியை விரட்ட, பக்கத்தில் கிடந்த கம்பு ஒன்றை எடுத்துக் கன்றுக்குட்டியின் மீது விசுகிறார். வேகத்தோடு வீழ்ந்த கம்பு கன்றின் கால் ஒன்றை முறித்துவிடுகிறது. அவ்வளவுதான்; கன்றுக்குட்டியின் சொந்தக்காரர், 'ஆம் அடுத்த வீட்டுக்காரர்தான் - எப்படி என் கன்றுக்குட்டியின் காலை முறிக்கலாம்?' என்று வெளியே வருகிறார்.

இரண்டு வீட்டுக்காரர்களுக்குமே கலகம். இந்தக் கலகம் காரணமாக ஒருவரை இன்னொருவர் கொலை செய்கிறார்; கொலை செய்தவர் நீதி ஸ்தலத்தில் குற்றம் சாட்டப்பட்டுக் கடைசியில் தூக்குத் தண்டனையே பெறுகிறார். இரு குடும்பங்களும் ஒரு சிறு தோட்டம் காரணமாக அழிந்தே போகின்றன. இது நடந்தது சென்ற சில வருஷங்களுக்கு முன்னால். ஆனால் பல வருஷங்களுக்கு முன்னால் ஓர் அதிசய சம்பவமே நிகழ்ந் திருக்கிறது. ஒரு குட்டிக் கலகம் காரணமாக. அக்கலகத்தில் ஈடுபட்டவர்கள் நல்ல பக்தியுடைய பெருமக்கள் ஆனதினாலே, பெருந்தன்மையோடு நடந்து புகழ் பெற்றிருக்கிறார்கள். அறுபத்து மூன்று அடியார்களில் இருவராகத் திருத்தொண்டர் புராணத்திலேயே இடம் பெற்று விடுகிறார்கள். அவர்கள் தாம் எறிபக்தர், புகழ்ச்சோழர் என்பவர்கள், அவர்களது கதை இதுதான். எறிபக்தர் சிறந்த சிவபக்தர். சிவ அபசாரம் ஏதேனும் நடந்தால் அவர் சகிக்கமாட்டார்.

கருவூரார்

சிவபெருமானை வழிபடுவதும், சிவனடியார்களுக்குத் துன்பம் ஒன்றும் வராமல் காப்பதுமே அவர் பணியாக இருக்கிறது. சிவகாமி ஆண்டார் என்பவரோ சிவபெருமானுக்கு மலர் மாலை சாத்தும் பணி செய்பவர். ஒருநாள் நந்தவனத்தில் மலர் பறித்து வரும்போது நாட்டை ஆளும் மன்னன் புகழ்ச் சோழனது பட்டத்து யானை சிவகாமி ஆண்டார் கையிலிருந்த மலர்க் கூடையைப் பறித்து மலரையெல்லாம் சிதறி விடுகிறது. பாகன் இதனைத் தடுக்க வில்லை. இதைக் கண்ட எறிபக்தர் தம் கையிலுள்ள மழுவால் யானையின் துதிக்கையை வெட்டியதோடு பாகனையும் தாக்குகிறார். யானையும் பாகனும் அந்த இடத்திலேயே மாண்டுவிடுகின்றனர். சேதி அறிந்த மன்னன் தலத்துக்கு விரைகிறான். மழுவுடன் நின்றகொண்டிருந்த எறிபத்தரைக் காண்கிறார். உடனே அவர் திருவடியில் விழுந்து யானையையும் பாகனையையும் கொன்றது போதாது, அவர்கள் செய்த சிவ அபசாரத்துக்குத் தம்மையுமே பலிவாங்க வேண்டுமென்று வேண்டுகிறார். எறி பக்தர் மன்னின் சிவபக்தியைக் கண்டு மாழ்குகிறார். இறைவனும் இருவரது பக்தியை மெச்சி அவர்களுக்குத் தரிசனம் தருகிறான். இத்துடன் நிற்கவில்லை புகழ்ச் சோழனது புகழ், பகையரசனாகிய அதிகன் பேரில் படைகொடு சென்று வெற்றி பெறுகிறான். போர்க்களம் சென்ற சோழன், தம் படையினர் கொன்று குவித்த வீரர்களிடையே சடைமுடியுடைய ஒரு தலையைக் காண்கின்றான். 'ஐயோ! இது என்ன அபசாரம்? சிவபக்தரை அல்லவா மடியச் செய்து விட்டார்கள் நம் வீரர்கள் என்று வருந்துகிறான். பின்னர் எரி வளர்த்து அச்சடை முடியுடைய தலையை ஏந்திய வண்ணமே தீக்குளித்து முத்தி எய்துகிறான். இப்படிப் புகழ்ச்சோழன் புகழ் பெறுகிறான். இந்த இரண்டு தொண்டர்களது. வரலாற்றையும் சேக்கிழார் விரித்து உரைக்கிறார், அவரது பெரிய புராணத்தில். இந்த இருவரும் வாழ்ந்த தலமே கருவூர், அந்தக் கருவூரிலே இருப்பவர் பசுபதி ஈசுவரர், அவரது திருக்கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று .

கருவூர் கொங்கு நாட்டுத் திருத்தலங்களில் ஒன்று. கிட்டத்தட்ட ஒரு வருஷ காலமாகச் சோழநாட்டுத் திருத்தலங்கள் பலவற்றைக் கண்டு களித்த நாம், சோழநாட்டை விட்டுக் கொங்கு நாட்டில் புகுகிறோம். கொங்கு நாட்டில் நமது தலயாத்திரை கருவூர் பசுபதீசுவரரை முன் நிறுத்தித்தொடங்கு கிறது மகிழ்ச்சி தருகின்றது. கருவூர் திருச்சிக்கு நேர் மேற்கே ஐம்பது மைல் தொலைவில் இருக்கிறது.
புகழ்ச் சோழர்

திருச்சி ஈரோடு ரயில் பாதையில் கரூர் என்ற . ஸ்டேஷனில் இறங்கி மேற்கு நோக்கி ஒரு மைல் நடந்தால் கோயில் வாயில் வந்து சேரலாம்.. கோயில் பெரிய கோயில். நல்ல சுற்று மதிலோடு கூடியது. மதில் கிழமேல் 465 அடி நீளமும் தென் வடல் 250 அடி அகலமும் உடையது என்றால் அதன் அளவு கொஞ்சம் தெரியும் அல்லவா? இந்தக் கோயிலை ஆனிலை என்றும் இக்கோயில் இருக்கும் கருவூரை வஞ்சி, பசுபதீச்சுரம், பாஸ்கரபுரம் என்றெல்லாம் கூறுகிறார்கள், காமதேனு பூசை செயது வழிபட்டதால், கோயிலை ஆனிலை என்றும் கற்பந்தோறும் தவம் செய்த பிரமன் படைப்புத் தொழில் செய்யக் கரு உற்பத்தி செய்த இடம் ஆதலின் கருவூர் என்றும் பெயர் பெற்றிருக்கிறது. இத்தலம் முழுதும் வஞ்சுள வனமாக இருந்த காரணத்தால் இதனை வஞ்சி என்றும் அழைத்திருக்கின்றனர் (சேரர் தலைநகரம் வஞ்சி இத்தலமே என்றும், அது சரியில்லை அத்தலை நகரம் திருவிஞ்சைக் களமே என்றும் ஆராய்ச்சியாளர்கள் அன்றுமுதல் இன்றுவரை வாதிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வாதத்தில் எல்லாம் நாம் இறங்க வேண்டாம்.) இத்தலத்தின் சிறப்பு என்னவென்றால் பழைய சோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொள்வது ஐந்து ஊர்கள்தாம். அதில் இந்தக் கருவூலம் ஒன்று என்பது. மற்றவை காவிரிப்பூம்பட்டினம், திருவாரூர், உறையூர், சேய்ஞலூர் என்றும் கூறுவர். இங்கிருந்து அரசாண்ட சோழ மன்னனுக்குத் தெய்வ யானையார் திருமணநாளிலே தேவேந்திரனே அழைப்பு அனுப்பி வைத்திருந்தான் என்ற பெருமையும் உண்டு.

இத்தனை தகவலையும் தெரிந்துகொண்ட பின் கோயில் வாயிலைக் கடந்து உள்ளே செல்லலாம். சென்றால் ஒரு பெரிய திறந்த வெளி முற்றம் இருக்கிறது. அதில் வடப்பக்கம் நூற்றுக்கால் மண்டபம் அழகு செய்கிறது. இடை நிலைக் கோபுரத்தின் முன்னர் ஒரு மண்டபம் சமீபத்தில் கட்டியிருக்கிறார்கள். அங்குதான் ஒவ்வொரு ஞாயிறு மாலையும் பொதுச் சமய சன்மார்க்க சங்கத்தார் கூடுகின்றனர். வாரம் தவறாது சமயச் சொற்பொழிவுகளும் நடக்கின்றன.

இனி இடைநிலைக் கோபுரத்தையும், மகா மண்டபத்தையும் கடந்து கருவறை வந்தால் அங்கு பசுபதி ஈசுவரர் லிங்க உருவில் இருப்பார். இவர் கொஞ்சம் வலப்பக்கமாகச் சாய்ந்திருக்கிறார். திருமுடியில் பசுவின் கொம்பு பட்ட வடுவேறே இருக்கிறது. காமதேனு வழிபடும்போது கொம்பு பட்டிருக்கும்போலும். அது காரணமாகவே கொஞ்சம் சாய்வும் ஏற்பட்டிருக்க வேணும். காமதேனு வழிபட்ட இவ்விறைவனைப் பங்குனி மாதத்தில் மூன்று தினங்கள் சூரியனும் வழிபடுகிறான். காலை 6-30 மணிக்கெல்லாம் சூரியகிரணம் வாயில் கொடிமரம் எல்லாவற்றையும் கடந்து வந்து இறைவன் திருமேனியைத் தழுவுகிறது. சரிதான். ஏன் இத்தலம் பாஸ்கரபுரம் என்று பெயர் பெற்றிருக்கிறது? என்பது இப்போதல்லவா விளக்கமுறுகிறது. இங்குள்ள பசுபதி லிங்கரைத் தவிர வேறு நான்கு லிங்கத் திருவுருவங்கள் உண்டு. ஆதி நாயகராகிய பசுபதிக்குக் கீழ்ப்பக்கத்தில் கோடீச்சுரர், அதற்கும் கீழ்பால் கயிலாய நாதர், அதற்கும் தெற்கே கரியமாலீசர், அதற்கும் தெற்கே ஆம்பிரவதி நதிக்கரையிலே வஞ்சுளேச்சரர் என்பவர் எல்லாம் லிங்கத் திருவுருவில் இருக்கின்றனர். ஒன்று சொல்ல மறந்து விட்டேனே! இந்தப் பசுபதி ஈசுவரர் கோயில் ஆம்பிர நதிக்கரையிலே இருக்கிது. ஆனமலைத் தொடரிலே உற்பத்தியாகி மாமரங்கள் அடர்ந்த சோலை வழியாக ஓடிவருவதால் ஆம்பிரவதி என்று பெயர் பெற்றது போலும்! இதனையே மக்கள் அமராவதி என்று கூறுகின்றனர். இந்த நதி கருவூருக்குக் கிழக்கே திருமுக்கூடல் என்ற தலத்திலேயே காவிரியுடன் கலக்கிறது. இறைவன் சந்நிதியில் நின்று கொண்டிருந்த நாம் மனத்தை எங்கெல்லாமோ செல்ல விட்டுவிட்டோமே. கொஞ்சம் வேகமாவே இத்தலத்தில் உள்ள இறைவியைக் காணச் செல்வோம். கிழக்கு நோக்கிய ஈசன் சந்நிதியிலிருந்து வடக்கு நோக்கி நடந்து ஒரு வாயிலைக் கடந்தால் எதிரே நிற்பாள் சௌந்திரவல்லி தெற்கு நோக்கியவளாய். பெயருக்கு ஏற்ப அவள் நல்ல சௌந்தர்யவதிதான், அவளைப் பார்த்த கண்களைக் கொஞ்சம் இடப்பக்கம் திருப்பினால் அங்கு ஓர் அலங்காரவல்லி கிழக்கு நோக்கி நிற்பாள் திவ்ய அலங்கார பூஷிதையாக. என்ன? இந்த இறைவன் ஏகபத்னி விரதன் ஆயிற்றே, இவர் எப்போது இரண்டாவது தாரத்தை மணம் முடித்தார்? என்று நாம் அதிசயிப்போம்! இங்கு முதல் முதல் கோயில் கொண்டவள் அலங்காரவல்லிதான். அச்சிலை வடிவம் கொஞ்சம் பின்னம் அடைய அவளை ஒதுக்கிவிட்டுச் சௌந்தரவல்லியை உருவாக்கியிருக்கிறான் மன்னன். ஆனால் அவன் கனவில் அலங்காரவல்லி தோன்றி, தான் தன் இடத்தை விட்டு அசையமாட்டேன் என்று மறுத்திருக்கிறாள். அவ்வளவுதான்! அவளும் இருக்கட்டும் புதிதாய் உருவான செளந்திரவல்லியும் இருக்கட்டும்’ என்று செளந்தர வல்லியைத் தெற்கு நோக்கிப் பிரதிஷ்டை செய்திருக்கிறான். இந்தத் தலத்துக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார்.

விண் உலா மதிசூடி வேதமே
பண் உளார் பரமாய பண்பினர்
கண் உளார் கருவூருள் ஆனிலை
அண்ணலார் அடியார்க்கு நல்லரே

என்று பாடியிருக்கிறார். இத்தலத்திலுள்ள முருகனை அருணகிரியார் திருப்புகழ் பாடிப் பரவியிருக்கிறார். கருவூர் என்றாலே கருவூர்த் தேவர் நினைவுக்கு வருவாரே. அவரைப் பற்றித் தெரிய வேண்டாமா? அவரது சந்நிதி வெளிப்பிரகாரத்தில் தென்பக்கம் ஒரு சிறிய கோயிலாக இருக்கிறது. இவர்தான் அன்று திருவிசைப்பா பாடியவர். எண்ணற்ற அதிசயங்கள் செய்து காட்டியவர். தஞ்சைப் பெருவுடையாரை ஆவுடையாரில் பொருந்தச் செய்தவர். கடைசியில் பசுபதி ஈசுவரரோடு இரண்டறக் கலந்தவர். இவருக்கும் நம் வணக்கங்களைச் செலுத்திவிட்டு வெளியே வரலாம். இக்கோயிலிலும் நிறையக் கல்வெட்டுக்கள் உண்டு. சோழ மன்னர்களான வீர ராஜேந்திரன், மூன்றாம் குலோத்துங்கன், விக்கிரமன் முதலியவர்களோடு வீர பாண்டியன், சுந்தர பாண்டியன், மீனாக்ஷி நாயக்க மன்னர்கள் நிபந்தங்களைப்பற்றிக் கல்வெட்டுக்களிலிருந்து அறியலாம்.

வந்ததே வந்தோம், இத்தலத்திலுள்ள ரங்கநாதரையும், இத்தலத்தின் பக்கத்தில் உள்ள தான்தோன்றிமலை கல்யாண வேங்கடரமணரையும் வெண்ணெய்மலை பால சுப்பிரமணியரையும் வணங்கிவிட்டே திரும்பலாமே. பசுபதீசுவரர் கோயிலுக்குக் கீழக்கே ஆறு பர்லாங்கு தொலைவில் அரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கிறார். இவரையே அபயப்பிரதான ரங்கநாதர் என்று அழைக்கிறார்கள். கோயிலின் மேலப் பிரகாரத்தில் சிலை உருவத்திலும் ரங்கநாதர் இருக்கிறார். கோயில் கட்டப் பூமியைத் தோண்டும்போது கிடைத்தவராம். பத்தடி நீளம் உள்ள கம்பீரமான வடிவம். இங்கு ஓர் இலந்தை மரம். இந்த மரத்தின்கனி பலவிதமான 'சைஸ்'களிலும் பலவிதமான சுவைகளிலும் கிடைக்கின்ற தென்கிறார்கள்.

இந்த ரங்கநாதரைத் தரிசித்து விட்டு, ஆம்பிரவதி ஆற்றைக் கடந்து தெற்கு நோக்கி இரண்டு மைல்கள் நடந்தோ வண்டியில் ஏறியோ சென்றால் தான்தோன்றிமலை வந்து சேருவோம். மலை தானாகத் தோன்றியதாக இருக்கலாம். ஆனால் இங்குள்ள கல்யாண வேங்கடரமணர், சிற்பிகளால் ஆக்கப்பட்டவர்தான். மலையையே குடைந்து அதில் பெருமானைச் செதுக்கியிருக்கிறார்கள். சுமார் எட்டடி உயரத்தில், இவர் இங்கே தனித்தே நிற்கிறார். அவர் மேல் மங்கைத் தாயார் இல்லை, 'அம்மையை விட்டுத் தனித்து வந்திருக்கும் இவர் எப்படிக் கல்யாண வேங்கடரமணர் என்று பெயர் பெற்றார்?' என்று தெரியவில்லை. இவருடைய உற்சவமூர்த்தம் கருவூர் ரங்கநாதர் கோவிலிலேயே இருக்கிறது. இந்தத் தான்தோன்றி மலையைத் தென் திருப்பதி என்கிறார்கள். அந்த வடமலைமேல் நிற்கும் மாதவனைக் காணும் வாய்ப்புப் பெறாதவர்கள் இந்தத் தென் திருப்பதி யானையாவது கண்டு தரிசித்தால் போதும்.

வேங்கடரமணனைத் தரிசித்த பின் கருவூருக்கு வந்து பின்னும் இரண்டு மைல் வடகிழக்காகக் கருவூர் சேலம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். சென்றால் இடப்பக்கத்தில் சிறு பாறையும் அதன்மேல் ஒரு கோயிலும் தெரியும். இந்த மலையைத்தான் வெண்ணெய்மலை என்கிறார்கள். வெண்ணெய் போன்ற வெள்ளைக்கல் குன்று இது. இந்த மலையில் கோயில் கொண்டிருப்பவர் பாலசுப்பிரமணியர். இவருடன் காசி விசுவநாதர், விசாலாக்ஷி, கருவூர்த் தேவர் எல்லாம் இருக்கின்றனர். இவர்களை யெல்லாம் வணங்கியபடி இறங்கி வரலாம். சந்நிதிக்கு எதிரில் ஒரு சிறு குளம் இருக்கிறது, அதற்கும் வடகிழக்கில் தேனு தீர்த்தம் இருக்கிறது. இது புராணப் பிரசித்தி பெற்றது. பிரமனுக்குத் தான் இல்லாவிட்டால் படைப்புத் தொழிலே நடக்காது என்ற கர்வம் ஏற்பட்டிருக்கிறது. அதை அடக்க இறைவன் அந்த வேலையினின்று பிரமனை விலக்கிவிட்டுக் காமதேனுவையே 'அப்பாயிண்ட்' பண்ணியிருக்கிறார், காமதேனுவும் அப்படியே உயிர்களனைத்தையும் படைத்து விட்டு அந்த உயிர்களுக்கு உணவாக வெண்ணெயையே மலையாகப் படைத்திருக்கிறது. காம தேனுவுக்கு வேறு உணவு சமைக்கத் தெரியாது போய்விட்டது போலும்! அந்த வெண்ணெய் உண்டே உயிர்கள் எல்லாம் வாழ்ந்திருக்கின்றன. வெண்ணெய் உண்டவர்கள் விக்கிக்கொள்ளாமல் இருக்கக் காமதேனுவே தேனாக ஒரு தீர்த்தத்தையும் உருவாக்கியிருக்கிறது. இத்தனை விவரங்களையும் சொல்கிறது ஒரு பாட்டு.

பூத்திட உதித்த சராசரம் அனைத்தும்
பொசித்திட உள்ளிடை தெரிந்து
நீத்தவார் சடில நிருமலன் உறையும்
நீள் திருக்கோயில் உத்திரத்தில்
மீத்திகழ் அமுதம் தான் எனத் திரண்ட
வெண்ணெய் மால்வரை எனவிதித்துத்
தீர்த்தம் ஒன்று அதன் கீழ்பால் வகுத்து
அத் தீர்த்தமும் தேனுமாதீர்த்தம்

நாமும் வெண்ணெயையும் தேனையும் நினைத்துச் சப்புக் கொட்டிக்கொண்டே திரும்பலாம். இன்னும் அவகாசத்தோடு கரூர் செல்கிறவர்கள், பக்கத்திலுள்ள நெரூர் சென்று அங்குள்ள சதாசிவ பிரம்மேந்திரர் சமாதிக்கும் வணக்கம் செலுத்திவிட்டு வரலாம்.