உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 3/032-033

விக்கிமூலம் இலிருந்து

32. அவிநாசி அப்பர்

சைவ சமயக் குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் சேரமான்பெருமாள் என்னும் மலைநாட்டு மன்னனுடைய சிறந்த நண்பர். அந்த நண்பரது அழைப்பின்பேரில் அவர் இருந்து அரசு செய்த திருவிஞ்சைக் களத்துக்கே செல்கிறார். சோழ நாட்டிலிருந்து சேரநாடு செல்லும் வழியில் கொங்கு நாட்டையும் கடக்கிறார். வழியில் புக்கொளியூர் என்ற சிற்றூருக்கு வருகிறார். அங்கு அந்தணர்கள் வாழ்கிற ஒரு தெருவழியாக அவரும் அடியவர்களும் நடக்கும்போது ஒரு வீட்டில் மங்கல வாத்தியங்கள் ஒலிப்பதைக் கேட்கிறார். அதே சமயத்தில் எதிர் வீட்டிலிருந்து அழுகை ஒலி எழுவதையுமே கேட்கிறார். அங்கு சற்றுத் தயங்கி நின்று இப்படி ஒரு குடும்பத்தினர் குதூகலிக்கவும் மற்றொருவர் கதறி அழவும் காரணம் என்ன என வினவுகிறார். அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள். *ஐந்தாண்டுகளுக்கு முன் ஐந்து வயது நிரம்பிய அந்தணச் சிறுவர்கள் இருவர் பக்கத்தில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றனர். குளித்துக் கொண்டிருக்கும் போது அவர்களில் ஒருவனைக் குளத்தில் கிடந்த முதலை இழுத்துச் சென்று விழுங்கிவிட்டது. மற்றொருவன் மட்டும் வீடு வந்து சேர்ந்துவிட்டான். அப்படித் தப்பிப் பிழைத்த பையனுக்கு இன்று உபநயனம் நடக்கிறது. அதுதான் அந்த வீட்டில் மங்கல ஒலி. முதலையுண்ட பையனைப் பெற்றவர்கள் எதிர்வீட்டுக்காரர்கள். தங்கள் பிள்ளையிருந்தால் அவனுக்கும் உபநயனம் செய்து மகிழ்ந்திருப்போமே என்று எண்ணியிருக்கிறார்கள். அந்த ஏக்கம் காரணமாகவே அவனது பெற்றோர் அழுகின்றனர்' என்கிறார்கள். இதைக் கேட்ட சுந்தரரின் உள்ளம் கருணையால் நெகிழ்ந்திருக்கிறது. அந்தப் பிள்ளைகள் இருவரும் நீராடிய குளம் எங்கேயிருக்கிறது என்று கேட்டு அக்குளக்கரைக்கே நடந்திருக்கிறார். அவர்பின் ஊரே திரளாகச் சென்றிருக்கிறது. குளக்கரை சென்று சேர்ந்ததும் பாடத் தொடங்கியிருக்கிறார். அவரோ இறைவன் விரும்புகிறபடியெல்லாம் தமிழ்ப் பாக்கள் பாடி அவரை மகிழ்விக்கிறவர் ஆயிற்றே. பாட்டு ஒன்று, இரண்டு, மூன்று என்று வளர்ந்திருக்கின்றது ; பின்னர் நான்காவது பாட்டு வருகிறது. பாட்டிலே வேண்டுகோள் ஒன்றும் இல்லை. ஒரு கட்டளையே பிறக்கிறது.

உரைப்பார் உரைப்பவை
உள்க வல்வார் தங்கள் உச்சியாய்
அரைக்காடு அரவா? ஆதியும்
அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப்
புக்கொளியூர் அவிநாசியே
கரைக்கால் முதலையைப்
பிள்ளைதரச் சொல்லு காலனையே.

என்பது பாட்டு. உத்தரவு இறைவனுக்குத்தான். இறைவன், காலன் மூலமாக முதலையிடம் பிள்ளையைத் தரச்சொல்லவேண்டு மென உத்தரவு, வன்தொண்டராம் சுந்தரரின் உற்ற தோழன் ஆயிற்றே இறைவன், இந்த உத்தரவுக்கு அடிபணியாமல் இருப்பானா? முதலை குளத்தில் நீத்திக்கொண்டு வருகிறது. ஐந்து வருஷங்களுக்கு முன்னர் தான் உண்டு ஜீரணித்த பையனை அப்படியே உமிழ்கிறது. அதிலும் அதிசயம் என்னவென்றால் ஐந்து வருஷங்களுக்கு முன் ஐந்து வயதுப் பாலகனாக உண்ட பையனை இப்போது பத்து வயதுப் பையனாகவே உமிழ்கிறது. பெற்றோருக்கும் மற்றோருக்கும் ஒரே மகிழ்ச்சி. பையனை ஐந்தாண்டு வளர்க்க வேண்டிய சிரமம்கூட இல்லாமல் அல்லவா முதலை தன் வயிற்றிலேயே வளர்த்திருக்கிறது? இனி இரண்டு பையன்களுக்கும்குறிப்பிட்ட நல்ல முகூர்த்தத்திலேயே உபநயனம் நடக்கிறது. இப்படி ஓர் அதிசயம் நடந்திருக்கிறது புக்கொளியூர் என்னும் அவிநாசியில். அந்த அவிநாசியில் இருப்பவர் தான் அவிநாசி அப்பர். அந்த அவிநாசி அப்பரைக் கண்டு வணங்கவே செல்கிறோம் நாம் இன்று.

அவிநாசி, கோவை மாவட்டத்திலே அவிநாசித் தாலூகாவின் தலைநகரம். நகரம் என்று சொல்ல லாயக்கற்ற சிறிய ஊர்தான். கோயம்புத்தூரிலிருந்து வட கிழக்காய் இருபத்தைந்து மைல் பஸ்ஸிலோ காரிலோ சென்றால் இவ்வூர் வந்து சேரலாம். இவ்வூருக்கு நேரடி ரயில் பாதை கிடையாது என்றாலும் கோவை ஈரோடு ரயில் பாதையில் திருப்பூர் ஸ்டேஷனில் இறங்கி வட மேற்காய் எட்டு மைல் பஸ்ஸிலோ வண்டியிலோ போனாலும் வந்து சேரலாம். இந்தப் பாதையில் போவதில் ஒரு சௌகரியம். வழியில் மூன்றாவது மைலில் திரு முருகன் பூண்டி என்ற பாடல் பெற்றதலம் இருக்கிறது. முருகன் தன் தந்தையான சிவபெருமானை வழிபட்ட தலம். இங்குள்ள கோயில் சிறிய கோயில் தான். கோயில் வாயிலில் கோபுரம் இராது, சந்நிதி மேற்கு நோக்கியது; அங்கு கோயில் கொண்டிருப்பவர் முருகநாதர். அம்மை முயங்கு பூண் முலையாள். சுவாமி சந்நிதிக்குவலப்புறம் முருகனுக்குத் தனி சந்நிதி. இந்த முருகன் சிறந்த வரப்பிரசாதி. பைத்தியநோய் தீர்க்கும் சிறந்த வைத்தியனாகவே இன்றும் விளங்குகிறான். இக்கோயில் சுந்தரரோடு வரலாற்றுத் தொடர்புடையது. அவரது நண்பர் சேரமான் பெருமாள் கொடுத்த பொருளை எடுத்துக் கொண்டு இந்த வழியில் வந்திருக்கிறார் சுந்தரர். சிவபிரான் ஒரு வேடிக்கை செய்ய விரும்பியிருக்கிறார். தம் பூத கணங்களை வேடர்களாக்கி, சுந்தரர் கொண்டு வந்த பொருளைப் பறிக்கச் சொல்கிறார். பொருளைப் பறிகொடுத்த சுந்தரருக்கு ஒரே கோபம். அந்தச் சமயத்தில் பக்கத்திலிருந்த பிள்ளையார், சுந்தரரைக் கூப்பிட்டு, கொள்ளையடித்தவர் இருக்கும் இடத்தைச் சொல்கிறார். இந்தப் பிள்ளையார் இன்றும் ஊர்ப் பக்கத்திலுள்ள குன்றின்மேல் கூப்பிடு விநாயகர் என்ற பெயரோடு விளங்குகிறார், சுந்தரர் மிகுந்த கோபத்துடனேயே கோயில் வாயில் வந்து, 'எல்லை காப்பது ஒன்று இல்லையாகில், எத்துக்கு இருந்தீர் எம்பிரான் நீரே?' என்றே திட்டுகிறார். இவர் திட்டையெல்லாம் புகழ்மாலையாக ஏற்றுக் கொண்டு திருடிய பொருள்களையெல்லாம் திரும்பக் கொடுத்துச் சுந்தரரை வழியனுப்பியிருக்கிறார் முருகநாதர். இந்தக் கோயிலில் ஒரு சிறிய குடவரை, அங்கு வேட்டுவ உருவத்தில் வந்த இறைவன், பொருள் பறிகொடுத்த சுந்தரர் எல்லாருமே செதுக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்னும் ஐந்து மைல் நோக்கி நடந்துதான் அவிநாசியப்பர் கோயிலுக்கு வரவேணும். கோவை பவானிப் பெருஞ்சாலையில் வந்தால் தேர்முட்டி தெரியும். அதன் பக்கத்தில் ஒரு வாயிலும் தெரியும். ஆனால் அது கோயில் அல்ல. அந்த இடத்திலிருந்து கொஞ்சம் சுற்றி வளைத்துக்கொண்டு தெற்கே வந்தால்தான் கோயில் வாயில் வந்து சேரலாம். கோயில் கிழக்கு நோக்கியிருக்கும். கோயில் வாயிலில் கோபுரம் முழுதும் கட்டப்படாமல் அடித்தளத்துடனேயே இருக்கும். கோயிலைச் சுற்றி வீதிகள் இல்லை. கோயிலுள் இரண்டு பிரகாரங்கள் உண்டு. கோயில் வாயிலில் உள்ள செல்வவிநாயகர், மணிவாசகர், சுந்தரர் எல்லோரையும் வணங்கியே உள் செல்ல வேண்டும். சுவாமி
கருணாம்பிகை கோயில்

சந்நிதியை அழகிய வேலைப்பாடமைந்த நவரங்க மண்டபம் அழகு செய்யும். அங்கு ஊர்த்துவ தாண்டவர், காளி, வீரபத்திரர் முதலியோரது சிலைகள் உண்டு. இந்த மண்டபம், அர்த்த மண்டபம் எல்லாம் கடந்தே கருவறையில் உள்ள இறைவனைக் காண வேணும். அவிநாசி அப்பர் சுயம்பு மூர்த்தி, காசி விகவநாதரது வேரில் கிளைத்த மூர்த்தி என்பார்கள் இதனால்தானே 'காசியில் வாசி அவிநாசி' என்றும், இத்தலத்தையே தென்காசி, வாரணாசி என்றும் கூறுகின்றனர்? இந்த இறைவனைத்தான் 'அரிய பொருளே! அவிநாசி அப்பா!' என்று கூவியழைத்திருக்கிறார் மணிவாசகர். அவிநாசி அப்பரை வணங்கி விட்டு, வெளி வந்து நவரங்க மண்டபத்தைக் கடந்தே அம்மன் சந்நிதிக்குச் செல்ல வேணும். செல்லும் வழியில் ஒரு மண்டபம்; திருக்கல்யாண மண்டபம் என்பார்கள், இந்த மண்டபத்துக்குள் ஒரு மேடை. மண்டபத்தில் ஏறினாலும் இந்த மேடைமீது ஏற முடியாது. அங்கு தான் கோயிலின் செப்புச் சிலைகளையெல்லாம் வைத்து நல்ல இரும்புக் கிராதி போட்ட கதவுகளால் பூட்டி வைத்திருக்கிறார்களே. கொஞ்ச நேரம் காத்திருந்தாவது நிர்வாகிகளைத் திறவு கோல் கொண்டு வரச் செய்து அங்குள்ள செப்பு வடிவங்களையெல்லாம் பார்த்து விடவேண்டியதுதான். அங்கு, வழக்கமாக உள்ள சோமாஸ்கந்தர், சந்திரசேகரர் இவர்களுடன் பிக்ஷாடனர், பைரவர், வில்லேந்திய வேலன், இரண்டு அம்பிகைகள் எல்லாம் இருப்பர். அத்துடன் அறுபத்து மூவரும், நல்ல பெரிய செப்புப் படிமங்களாக நிற்பர். இவர்களோடு முதலை வாயிலிருந்து பிள்ளையை அழைத்த சுந்தரருமே நிற்கிறார். சுந்தரரை வடித்தவன் முதலையை வடிக்க மறந்திருக்கிறான், ஆனால் சமீபகாலத்தில் ஒரு முதலையையும் செய்து வைத்திருக்கிறார்கள்; அந்த முதலை உடல் பருத்துக் கட்டு குட்டென்று இருக்கும். ஆம், ஐந்து வயதுப் பையனைப் பத்து வயது வரை வயிற்றுக்குள்ளேயே வைத்து வளர்க்கும் பொறுப்பு அல்லவா இருந்திருக்கிறது அந்த முதலைக்கு? இவற்றை யெல்லாம் பார்த்துவிட்டே அன்னை கருணாம்பிகை சந்நிதிக்கு நடக்க வேணும்.

வழக்கமாக இறைவனுக்கு இடப்பக்கத்தில் இருக்கும் அன்னை. இங்கு வலப் பக்கத்தில் கோயில் கொண்டிருக்கிறாள். இதற்கு ஒரு கதை. காசியில் இறைவனுக்கும் இறைவிக்குமே ஒரு பிணக்கு. இருவரும் அதனால் ஒருவரை விட்டு ஒருவர் விலகி வாழ்கிறார்கள். ‘டைவொர்ஸ்' ஒன்றும் செய்துகொண்டதாகத் தெரியவில்லை. அம்மை திரும்பவும் இறைவனை அடையத் தவம்புரிகிறாள். தவத்துக்கு இரங்கி காசி விசுவநாதர், அவிநாசிக்கு எழுந்தருளி அம்மையை ஏற்றுக் கொள்கிறார். 'கட்டிலின் தலை திருப்பி வைத்தால்
அவிநாசியப்பர்

தலைவலி போம்' என்பதற்கேற்ப இடம் மாறி உட்கார்ந்து பிணக்கைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்!

அம்பாள் கோயில் முன்பும் ஒரு பெரிய மண்டபம். அதிலும் சிற்ப வடிவங்கள். அவை சிறப்பானவை அல்ல. கருவறையிலுள்ள கருணாம்பிகையைத் தரிசிக்கலாம். அக்கருவறையின் மேல்புறச் சுவரில் ஒரு தேள் செதுக்கப்பட்டிருக்கிறது. அதையும் வணங்குகின்றனர் மக்கள், தேள் எப்படி இங்கு வந்தது என்பதற்குத் தல வரலாற்றில் விளக்கம் ஒன்றுமில்லை. தேளுக்கும் அருளும் கருணை வாய்ந்தவள் கருணாம்பிகை என்று விளக்க முனைந்த கலைஞன் கற்பனையில் உருவாகியிருக்கலாம் அந்தத் தேள். நாமும் அன்னையின் கருணையை நினைத்து வாழ்த்தி வணங்கிவிட்டு வெளியே வரலாம். இந்தக் கோயிலில் நான்கு தீர்த்தங்கள். கோயிலுக்கு உள்ளேயே காசிக் கங்கை என்னும் கிணறு, கோயிலுக்கு எதிரில் நீராழி மண்டபத்துடன் கூடிய திருக்குளம். நள்ளாறு கோயிலுக்கு வடபுறம் ஓடுகிறது. கோயிலுக்கு முன்புள்ள திருக்குளத்துக்கு எதிரில் கோயிலுக்கு வடபுறமாக ஒரு தனிக்கோயில் இருக்கிறது. அங்கு அம்பிகை தவக்கோலத்தில் இருக்கிறாள். இது அவளைக் கருணாம்பிகையாக இறைவன் ஏற்றுக்கொள்ளும் முன் இருந்த தவக்கோலம். இங்கு பாதிரிமரம் ஒன்றும் இருக்கிறது. அன்று திருப்பாதிப்புலியூரில் காணாமல் தவித்தோமே, அந்த மரத்தை இங்கேயாவது பார்க்க முடிந்ததே என்பதில் மகிழ்ச்சி.

இக்கோயிலைக் கட்டிய பெருமையைச் சோழ மன்னர்களே தட்டிக் கொண்டு போகிறார்கள். ஆதித்த சோழன் காலம் முதல் இருநூற்று ஐம்பது ஆண்டுகள் கொங்கு நாடு, சோழ கேரள மண்டலம் என்ற பெயரோடு சோழர் ஆட்சியில் இருந்திருக்கிறது. 1149 முதல் 1183 வரை சோழ மண்டலத்தை ஆண்ட குலோத்துங்கன் என்னும் கொங்குச் சோழன் காலத்தில் இக்கோயில் முதல் முதல் கட்டப்பட்டிருக்க வேண்டும். இவன்றன் சாமந்தகனான மருதன் மலையன் என்னும் குலோத்துங்க சோழ விக்கிரமன் இக்கோயிலில் நந்தா விளக்கு ஒன்று எரிய நிபந்தங்கள் ஏற்படுத்தியிருக்கிறான். இந்தக் குலோத்துங்கனுக்குப் பின் இந்த நாட்டையாண்ட வீரசோழன், வீரராஜேந்திரன் முதலியோர் காலத்தில் சீகாழியான், ஏரானபுரத்து வணிகன் ஆற்றலுடையான், திருப்புறம்பயமுடையான் முதலிய காரியஸ்தர்கள் பலவகைத் தானங்களை இக்கோயிலுக்குச் செய்திருக்கிறார்கள்.

சோழர்களுக்குப் பின் இக்கொங்கு நாட்டை ஆண்டவர்கள் பாண்டியர்கள். கொங்குச் சோழர்களுக்குச் சளைக்காமல் கொங்குப் பாண்டியர்களும் அவிநாசி அப்பர் ஆலயத்துக்குப் பல திருப்பணிகளையும், பல தானங்களையும் செய்திருக்கிறார்கள். இவர்களில் வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், குல சேகரப் பாண்டியன் முதலியோர் முக்கியமானவர்கள். பாண்டியர்களுக்குப் பின் ஹொய்சலர்களும், மைசூர் அரச வம்சத்தினர்களும் செய்த திருப்பணிகள் பலப்பல. இன்றும் மைசூர் மகாராஜா இந்தப் பக்கம் வரும்போதெலலாம் அவிநாசியப்பரைத் தரிசிக்காமல் செல்வதில்லை.

'என்ன என்னவெல்லாமோ கதை வளர்த்துக் கொண்டிருக்கிறீர். முதலையுண்ட பாலனை வரவழைத்த திருக்குளம்’ எங்கிருக்கிறது? என்று நீங்கள் முணு முணுப்பது காதில் கேட்கிறது. அங்கு அழைத்துப் போகாமல் இருப்பனோ? கோயிலிலிருந்து மூன்றுநான்கு பர்லாங் தூரத்தில் தென்மேற்குத் திசையில் ஓர் ஏரி இருக்கிறது. அதனை இன்று தாமரைக் குளம் என்று அழைக்கின்றனர். அந்தக் குளக்கரையில் ஒரு சிறு கோயில் இருக்கிறது. அக்கோயிலுள் சுந்தரர் இருக்கிறார். அவர் முன் முதலை வாயினின்றும் பிள்ளை வெளியே வருவது போன்ற சிலை உருவம் ஒன்றும் இருக்கிறது. குளக்கரையில் ஒரு பெரிய ஆலமரம். அங்கிருந்துதான் பாடியிருக்கிறார் சுந்தரர், தமது தேவாரப் பாடல்களை. இன்றும் பங்குனி உத்திரத்தில் அவிநாசியப்பர், அந்தக் குளக்கரைக்கு எழுந்தருளுகின்றார். முதலை வாய்ப் பிள்ளையை அழைத்த திருவியைாடல் உத்சவமாகவே கொண்டாடப்படுகிறது. இந்த வரலாற்றினை,

நாட்டார் அறிய முன்னாளில்
நன்னாள் உலந்த ஐம்படையின்
பூட்டார் மார்பில் சிறிய மறைப்
புதல்வன் தன்னைப் புக்கொளியூர்
தாட்டாமரையின் மடுவின்கண்
தனிமா முதலைவாய் நின்று
மீட்டார் கழல்கள் நினைவாரை
மீளா வழியில் மீட்பனவே.

என்று சேக்கிழார் பாடி மகிழ்கிறாரே, அந்தக் காலத்தில் தான் இந்த அதிசயம் நடந்ததென்றில்லை. சில நூறு ஆண்டுகளுக்கு முன் குருநாத பண்டாரம் என்பவர் அவிநாசியில் வாழ்ந்திருக்கிறார். குளத்தில் ஏற்பட்ட உடைப்பை அடைக்க வரவில்லை என்பதற்காக அரசாங்க ஊழியர்கள் அவர் பூசித்த சிவலிங்கத்தை எடுத்துக் குளத்தில் எறிந்திருக்கிறார்கள். குருநாத பண்டாரமோ பூசை செய்யாமல் உணவருந்துவதில்லை. பூசை செய்யவோ லிங்கம் இல்லை. பட்டினியாய்க் கிடந்திருக்கிறார். வேறு வழியில்லை அவிநாசியப்பருக்கு. பண்டாரத்தின் லிங்கத்தை ஒரு மீனை விழுங்கச் செய்து அந்த மீனை நீந்தி வந்து லிங்கத்தைக் கரையில் உமிழவும் செய்திருக்கிறார். இதற்குக்கூட ஒரு சிற்ப வடிவம் அங்கே இருக்கிறது.