வேங்கடம் முதல் குமரி வரை 3/033-033

விக்கிமூலம் இலிருந்து

33. பேரூர்ப் பட்டீசர்

துரையில் வாழ்கிறார் ஒரு கவிஞர். அவருக்குக்குளிர் சுரம். அந்தக் காய்ச்சலில் துவண்டு விடுகிறார். பெரிய பெரிய டாக்டர்கள் எல்லாம் வந்து பார்க்கின்றனர், காய்ச்சல் குறையக் காணோம். ஒரு மாதம் முப்பது நாளுக்குமேல் நோயில் அவதி உறுகிறார். கடைசியில் நாட்டு வைத்தியர் ஒருவர் வருகிறார். ஏதோ சிந்தூர மருந்து ஒன்று கொடுக்கிறார். இரண்டே தினங்களில் குணம் அடைகிறார் கவிஞர். கவிஞருக்கு நாட்டு வைத்தியரிடம் மிக்க மதிப்பு உண்டாகிறது. நோய் முற்றிலும் குணம் அடைந்து தலைக்குத் தண்ணீர் விடுகின்ற நாளிலே வைத்தியர் கவிஞர் வீட்டுக்கு வருகிறார். அவரையும் அவரது வைத்தியத்தையும் பலரும் பலப்படப் பாராட்டுகிறார்கள். கவிஞர் குடும்பத்தாரும் வைத்தியருக்கு ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், பணம் எல்லாம் வைத்துக் கொடுத்து உபசரிக்கிறார்கள். ஆனால் வியாதியால் நலிவுற்ற உடல் தேறிய கவிஞரது பாராட்டு ஒரு பாட்டாகவே வருகிறது. வைத்தியர் பெயர் சொக்கலிங்கம் பிள்ளை. அவர் தந்தையார் பெயர் வீரபத்திரப் பிள்ளை என்பதையும் கவிஞர் தெரிந்து வைத்திருக்கிறார். அவர் பாடுகிறார்.

மிக்க மதுரைச் சிவனும்
வீரபத்திரன் சுதனும்
சொக்கர் இருவர் எனத்
தோன்றினார் - அக்கோன்
பிறவாமல் காப்பான்
பிறந்தாரை மண்மேல்
இறவாமல் காப்பான் இவன்.

என்பதுதான் பாட்டு. கவிஞரது பாராட்டுத்தான் எவ்வளவு நயமாக அமைந்து விடுகிறது? மதுரையில் கோயிலுள் இருக்கிறான் ஒரு சொக்கலிங்கம் ; அவனது திருவடிகளில் சென்று சேர்ந்தால், அப்படிச் சேரும் உயிர்களைப் பிறவியாகிய நோயிலிருந்து காக்க அவனுக்குத் தெரியும். அவ்வளவு தானே? அப்படி அவன் காக்கத் தவறிய உயிர்கள் மீண்டும் பிறந்து விட்டால் அந்த உயிர்களை இறவாமல் காக்க அல்லவா தெரிந்து வைத்திருக்கிறான், இந்த வீரபத்திரனின் பிள்ளை வைத்தியன் சொக்கலிங்கம். தன் உயிர் காத்ததற்கு நன்றியை இதைவிட அழகாகச் சொல்லிவிட முடியுமா என்ன? பிறவாமல் காக்கும் ஓர் இறைவனையும் இறவாமல் காக்கும் ஒரு வைத்தியனையும் அறிமுகம் செய்து கொள்கிறோம் இந்தப் பாட்டின் மூலம். ஆனால், பிறவாமை இறவாமை இரண்டையுமே செய்து கொண்டிருக்கிறாரே ஓர் இறைவன் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதுவும் பிறவாமையை ஒரு புளிய மரம் மூலமாகவும் இறவாமையை ஒரு பனை மரம் மூலமாகவும் காட்டிக் கொண்டிருக்கும் அதிசயம் என்னவென்று அறிய வேண்டாமா? அதைத் தெரிந்து கொள்ளப் பேரூருக்குச் செல்ல வேண்டும்.

பேரூர்ப் பட்டீசர் கோயில் வாயிலேயே ஒரு புளிய மரம். நல்ல மேடை யிட்டுக் கட்டி மரத்தைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அதுதான் பிறவாப் புளி. அது என்னவென்றால் அந்த மரத்தின் கொட்டைகளை முளைக்கப் போட்டால் முளைக்கிறதே இல்லையாம். அந்தப் புளிய மரத்துக்கு இனிப் பிறவியே கிடையாது என்பது இறைவன் ஆக்ஞை போலும். அதனால் அது பிறவாப் புளியாகவே நின்று கொண்டிருக்கிறது. இனிக் கோயிலுக்கு வடக்கே ஆற்றங்கரையில் உள்ள வட கயிலாயம் என்னும் சிற்றாலயத்துக்கு வந்தால் வெளி முற்றத்தில் ஒரு பனை மரம் நிற்கிறது. அதற்கு இறவாப் பனை என்று பெயர். இந்தப் பனையின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால் தீராத வியாதி எல்லாம் தீருகிறது. இப்படி மக்களை அவர்களுக்கு வரும் நோயினின்றும் காப்பாற்றி இறவாது காக்கும் பெருமை உடையது. இந்த இறவாப் பனை, அந்த பிறவாப் புளி இருக்கும் கோயிலே பேரூர்ப் பட்டீசர் கோயில். அந்தப் பேரூருக்கே செல்கிறோம் நாம் இன்று.

பேரூர், கோயம்புத்தூருக்கு மேற்கே மூன்று மைல் தொலைவில் இருக்கிறது. கோவை செல்பவர்கள் ரயிலிலோ, காரிலோ மூன்று மைல் சென்று பேரூரைச் சேரலாம். போகிற வழியில் நொய்யல் என்று வழங்கும் காஞ்சிமா நதியைக் கடக்க வேணும். அந்த நதிக்கரையிலே பிதுருக்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பானது என்று கூறுவர். நொய்யல் நதியைக் கடந்ததும் சாந்தலிங்க சுவாமிகள் திருமடமும் அம்மடத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்லூரியும் வரும். அவகாசம் இருந்தால் அவற்றையும் சென்று காணலாம். இல்லாவிட்டால் நேரே கோயில் வாயிலுக்கே போகலாம். கோயில் வாயிலில் தென்பக்கமாக ஒரு கல்கட்டு மேடையில், முன்னரே குறித்த பிறவாப் புளி இருக்கிறது. அதைச் சுற்றிக் கொண்டு வந்தால் கோயில் வாயில் வந்து சேருவோம். வாயிலை ஓர் ஐந்து நிலைக் கோபுரம் அழகு செய்கிறது. கோயிலுக்கு முன்னால் நல்ல படிக்கட்டுகளுடன் கூடிய ஒரு பெரிய தெப்பக்குளம் வேறே இருக்கிறது.

ஊரைப் பார்த்தால் பேரூர் என்று சொல்வதற்கே லாயக்கற்றது என்றுதான் தோன்றும். என்றாலும்முத்தி உலகை அளிக்கவல்ல இறைவன் பட்டீசர் பச்சைநாயகியுடன் கோயில் கொண்டிருக்கும் தலம் ஆதலால் பேரூர் என்று பெயர் பெற்றது பொருத்தந்தான். இந்தக் கோயிலில் நுழைந்து கொஞ்சம் நடந்ததும் நம் கண்முன் வருவது வெள்ளி மன்றம்தான். இது கோயிலின் வட பக்கம் உள்ள பெரிய மண்டபம், 94 அடி நீளமும் 38 அடி அகலமும் உள்ள இந்த மண்டபத்தை 16 அடி உயரமுள்ள 36 பெரிய கற்றுண்கள் தாங்கி நிற்கின்றன என்றால் மண்டபத்தைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த மண்டபந்தான் பேரூரின் பெருஞ் சிறப்புக்கே காரணமானது.

அந்த மண்டபத்தை ஒட்டித்தான் சிற்றம்பலம் இருக்கிறது. அங்குதான் நடராஜர் அன்னை சிவகாமியுடனும் கோமுனி பட்டி முனியுடனும் கொலுவிருக்கிறார். இந்த நடராஜனை ஆடவல்லான் என்றே அழைத்திருக்கின்றனர். ராஜராஜ சோழன் கட்டிய அந்த தஞ்சைப் பெரு உடையார் கோயிலிலே இருக்கும் ஆடவல்லான் நமக்கு முன்னரே அறிமுகமானவன். அடுத்த ஆடவல்லானை இக்கொங்கு நாட்டில்தான் காண்கிறோம். இந்த ஆடவல்லான் தமிழ் நாட்டில் உள்ள நடராஜத் திருவுருவங்களில் சிறந்த ஒன்று. நடராஜருக்கும் சிவகாமிக்கும் வெள்ளிக் கவசம் எல்லாம் சாத்தி எப்போதுமே அலங்கரித்து வைத்திருப்பார்கள். நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும் காலம் அறிந்து சென்று ஆனந்திக்கலாம்.

இந்த ஆடவல்லானின் சந்நிதியை அழகு செய்யும் எட்டுத் தூண்களில் எட்டு சிலைவடிவங்கள். ஆகு வாகனத்தில் ஐங்கரன், மயில் வாகனத்தில் அறுமாமுகன், இரண்டு தூண்களில் இன்னும் இரண்டு தூண்களில் அக்கினி வீரபத்திரன், அகோர வீரபத்திரன். மற்றும் இன்னும் இரண்டு தூண்களில் கஜசம்ஹாரனும் பிக்ஷாடனனும். இவை தவிர ஊர்த்துவதாண்டவ மூர்த்தியும் ஆலங்காட்டுக் காளியும் எதிர் எதிரே. இந்தச் சிற்ப வடிவங்கள் சோழர் காலத்திய சிற்பத்துக்கு ஈடுகொடுப்பவை அல்ல. சிற்பக்கலை வளர்ச்சி குன்றி வருகின்ற பதினாறாம் நூற்றாண்டிலே சிறப்பாக எழுந்திருக்கின்றன. இச் சிற்ப வடிவங்களைப் பற்றி பெர்கூஸன் என்ற கலா விமர்சகர், 'பேரூர் வெள்ளி மன்றத்துச் சிற்பங்கள் சிற்பக்கலை மலினமடைந்த காலத்தில் உருவானவை. என்றாலும், அவை சிற்பக்கலை உச்ச நிலையில் உயர்ந்து விளங்கிய உன்னத காலத்தைச் சேர்ந்தவைதாம்' என்று கூறுகிறார். இந்த விமரிசனமே இச்சிற்ப வடிவங்களின் சிறப்புக்குத் தக்க சான்று பகர்வதாகும்.

இச்சிற்ப வடிவங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஆடவல்லான் இருக்கும் அம்பலத்தின் முகப்பை நோக்கினால் ஓர் அதிசயம் காண்போம். அங்கு இரண்டு கல் தூண்கள், ஒரு தூணிலே குதிரைமீது ஆரோகணித்து வரும் வீரன் ஒருவன் கம்பீரமாகக் காட்சி கொடுப்பான். அதற்கொப்ப இருக்கும் மற்றொரு தூணிலே குதிரையின் கால் இருக்கும், அதன் வால் இருக்கும். ஆனால் குதிரையையோ, வீரனையோ காண இயலாது. 'எப்படி அந்தத் தூண்சிதைந்தது?' என்று விசாரித்தால் ஓர் அழகிய கதையைச் சொல்வார்கள் அங்குள்ளவர்கள்.

கதை இது தான் : இந்த வெள்ளி மன்றத்தை மதுரை திருமலை நாயக்கரது சகோதரனான அளகாத்திரி நாயக்கன் நிர்மாணிக்க ஆசைப்பட்டிருக்கிறான். மண்டபம் கட்டும் வேலைச் சிற்பி கம்மனாச்சாரியிடம் ஒப்படைத்திருக்கிறான். ஸ்தபதியும் இரவு பகல் ஓயாது உழைத்து, அழகான சிற்ப வடிவங்களை அமைத்து மண்டபம் கட்டி முடித்திருக்கிறான். மண்டபம் கட்டி, அதன் குடமுழுக்குக்கு நாளும் குறித்திருக்கிறான் அளகாத்திரி நாயக்கன். அந்த நிலையிலே அங்கு வந்த ஓர் இளைஞன் இந்த மண்டபத்தை எல்லாம் கண்டு களித்துவிட்டு, இப்போது சிதைந்திருக்கும் தூணைப் பார்த்து, ஐயோ!' என்று அலறியிருக்கிறான். அப்படி அவன் அலறுவதற்குக் காரணம் கேட்டபோது அவன் சொல்லியிருக்கிறான் : எல்லாம் சரிதான். 'இந்தக் கல்லினுள் தேரையிருக்கிறதே. இது தெரியாமல் இக்கல்லைத் தேர்ந்தெடுத்துச் சிற்பம் அமைத்திருக்கிறானே சிற்பி' என்கிறான், சிற்பி கம்மனாச்சாரி இதனைக் கேட்டுக் கோபமுற்று, அவ்விளைஞனது கூற்றை மெய்ப்பிக்கச் சொல்லியிருக்கிறான். இளைஞனும் சளைக்காமல் கொஞ்சம் சந்தனம் கொண்டு வரச் சொல்லி, அந்தச் சந்தனத்தை அத்தூணில் உள்ள குதிரைமேலும் குதிரை வீரன் மேலும் பூசியிருக்கிறான். சிறிது நேரத்தில் சிற்பம் மீது பூசிய சந்தனம் உலர்ந்திருக்கிறது. உள்ளங்கை அகலம் உள்ள ஓர் இடம் மட்டும் உலராமலேயே நின்றிருக்கிறது. இளைஞன் சிற்பியிடம் இருந்த சுத்தியல் ஒன்றை வாங்கி அந்த இடத்தைத் தட்டியிருக்கிறான். குதிரை, குதிரை வீரன் எல்லாம் தவிடு பொடி ஆகியிருக்கின்றன. தேரை ஒன்றும் அக்கல்லினுள் இருந்து வெளியே குதித்திருக்கிறது. சிற்பி கம்மனாச்சாரி தலை கவிழ்ந்திருக்கிறான். பின்னர் இளைஞனது குலம், கோத்திரத்தை விசாரித்தால் அவன் கம்மனாச்சாரியின் புதல்வனே, என்றும் சிறு வயதில் வீட்டைவிட்டு ஓடியவனே திரும்ப வந்திருக்கிறான் என்றும் அறிகிறார்கள். முடிவில் சிற்பி மகன் சிற்பியே என்ற புகழையே அல்லவா நிலை நிறுத்திவிடுகிறான் இளைஞனான சிற்பி?

கோயிலுள் கருவறையில் இருப்பவர்தான் பட்டீசர், கோட்டீசர் என்றுபெயர் பெற்றவர். இவர் சுயம்பு மூர்த்தி. இவர் தலையிலே கன்றுக்குட்டிக் குளம்பின் சுவடும் பசுவின் கொம்புச் சுவடும் இருக்கின்றன. அபிஷேக காலத்தில் கூர்ந்து கவனித்தால் இச்சுவடுகளைக் காணலாம். இந்தச் சுவடுகள் - தழும்புகள் ஏற்படக் காரணம் என்னவென்று கேட்டால் அதற்குக் கிடைக்கும் விடையிலேயே அவரது பெயர்க் காரணமும் தெரியும். ஆதியில் இந்தப் பக்கம் முழுதும் ஒரே அரசமரங்கள் நிறைந்த காடாக இருந்திருக்கிறது. அதனால்
ஊர்த்துவ தாண்டவர் - பேரூர்

பிப்பிலாரண்யம் என்றே பெயர் பெற்றிருக்கிறது. காமதேனுவே இங்கு வந்து பட்டியிட்டு இறைவனைப் பூசித்திருக்கிறது. ஒருநாள் பசுவாகிய காமதேனுவின் இளங்கன்று இக்காட்டில் துள்ளிக் குதித்து அங்குள்ள மணல் புற்றில் வந்து சிக்கியிருகின்றது. கன்றை - விடுவிக்கும் ஆவலில் காமதேனு வந்து கொம்பால் குத்திப் புற்றை அகற்றி யிருக்கிறது. புற்றிடம் கொண்ட இறைவன் அன்று வெளிவந்திருக்கிறான். கன்றுக்குட்டியின் கால் தழும்பும், காம தேனுவின் கொம்புத் தழும்பும் உடையவனாக, பட்டீசனாக இருந்தவன் கோட்டீசன் என்றும் பெயர் பெற்றிருக்கிறான். கோயிலில் உள்ள அர்ச்சகர்கள் நாம் விரும்பினால் தமிழிலேயே அருச்சனை செய்வார்கள், அருச்சனை எல்லாம் முடித்துக்கொண்டு வெளிவந்து ஒரு சுற்றுச் சுற்றி, பச்சை நாயகியார் கோயிலுக்கு வரலாம். பச்சை நாயகி - மரகதவல்லி நல்ல அழகொழுகும் வடிவம். தனிக்கோயிலில் அவள் இருக்கிறாள். தன் சகோதரனான வரதராஜப் பெருமாளுக்கும் தன் கோயிலிலேயே கொஞ்சம் இடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறாள். இந்த அம்மாள் கோயிலுக்கும் சுவாமி கோயிலுக்கும் இடையேதான் கல்யாண மண்டபம். அங்குதான் செப்புச் சிலைகள் எல்லாம் சேர்த்துப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.

இக்கோயில் சமயக் குரவர்களால் பாடல் பெற்ற கோயில் அல்ல. என்றாலும் சுந்தரரோடு வரலாற்றுத் தொடர்புடையது. சுந்தரருக்காகப் பட்டீசர் ஒரு திருவிளையாடலையே நிகழ்த்தியிருக்கிறார் இங்கே. இந்த சுந்தரர்தான் தம்பிரான் தோழர் ஆயிற்றே. அவருக்கோ எப்போதும் பணமுடை; எந்தத் தலத்துக்குச் சென்றாலும் அங்குள்ள இறைவனிடம் பணம் வேண்டிக் கையை நீட்டிவிடுவார். பேரூர் பக்கம் இவர் வருகிறார் என்ற உடனே பட்டீசருக்குக்கவலை. அவருடைய கஜானாவிலோ பணம் இல்லை. சுந்தரரோ கேட்காமல் இருக்கமாட்டார். கேட்டதைக் கொடுக்காமல் இருப்பதோ அழகில்லை. ஆதலால் சுந்தரரிடமிருந்து தப்பித்துக் கொள்ள, பட்டீசர் தன் துணைவி பச்சை நாயகியோடு பள்ளன் வடிவில் வயல் காட்டுக்குப் போய் நாற்று நடுவது போல் பாவனை - செய்கிறார்.

தலத்துக்கு வந்த சுந்தரர் விஷயமறிகிறார். அவரா விடுவார் இறைவனை? வயல் வெளிக்குச் சென்று, பட்டீசரைக் கண்டு பிடித்து இழுத்து வந்த விடுகிறார் கோயிலுக்கு. பின்னர் அவர் விரும்பியபடியே இறைவன் தன் ஆனந்தக் கூத்தையும் அம்பலத்தில் நடித்துக் காட்டுகின்றார். சுந்தரர் பேரூர் இறைவனைப் பாடியிருக்க வேண்டும். அப்பாடல்கள் கிடைக்கவில்லை. ஆனால் பேரூர்ப் பெருமானை நினைத்துத் தில்லைச் சிற்றம்பலத்திலே பாடிய அவரது பாடல் கிடைக்கிறது நமக்கு.

பாரூரும் அரவு அல்குல்
உமை நங்கை அவள் பங்கன் -
பைங்கண் ஏற்றன்

ஊர் ஊரான் தருமனார்
தமர் செக்கில் இடும்போது
தடுத்து ஆட்கொள்வான்
ஆரூரன் தம்பிரான்
ஆரூரன் மீ கொங்கில்
அணி காஞ்சி வாய்ப்
பேரூர்ப் பெருமானைப்
புலியூர் சிற்றம்பலத்தே
பெற்றாம் அன்றே.

கோயிலின் கருவறையையும், அர்த்த மண்டபத்தையும் பார்த்தால் சோழர்கள் கட்டிய கோயிலாகத் தெரிகிறது. கி.பி. பதினோராம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் மகனான ராஜேந்திரன் அரியணை ஏறி இருபத்திரண்டு ஆண்டுகள் கழித்து, இத்திருப்பணியை ஆரம்பித்திருக்கிறான். அர்த்த மண்டபத்தையும் மகா மண்டபத்தையும் கட்டி முடிக்க மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. மகாமண்டபம் கட்ட விழுமிய பட்டன் தனபாலன், கனபாட்டி அரசாண்டார், வீரசேகரதேவன், அகமுடையான் தேவி, சோழப் பிச்சன், அதிகமான் முதலியோர் உதவியிருக்கிறார்கள் என்று கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இப்படி ஆதியில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கோயிலே பின்னர், நாயக்க மன்னர்களால் சுற்றுப் பிரகாரம், முன் மண்டபம், வெள்ளிமன்றம் எல்லாம் கட்டப்பட்டு விரிவடைந்திருக்கிறது.