வேண்டும் விடுதலை/தமிழகப் பிரிவினை தேவையே

விக்கிமூலம் இலிருந்து


 
தமிழகப் பிரிவினை தேவையே!


ருவரோடொருவர் சேர்ந்து வாழ்வது எப்படி ஒரு மெய்ப்பொருளோ, அப்படியே பிரிந்து வாழ்வதும் ஒரு மெய்ப்பொருளே! சேர்ந்து வாழ்வதால் நன்மைகள் சில பெறுவதைப் போலவே, பிரிந்து வாழ்வதிலும் நன்மை யுண்டு. இவ்விடத்தில் 'சேர்ந்து' என்பதற்கு எப்படி 'வேற்றுமை யற்ற முறையில் இணைந்து' என்று பொருள் கொண்டுவிடக் கூடாதோ, அல்லது அவ்வாறு மட்டுந்தான் பொருள் படுத்திக் கொள்ளக் கூடாதோ, அப்படியே ‘பிரிந்து’ என்பதற்கும் 'பகைமையுற்ற நிலையில் வேறுபட்டு' என்று பொருள் கொண்டுவிடக் கூடாது; அல்லது அப்படி மட்டுந்தான் என்று பொருள்படாது. தனிமொழி, பண்பாடு, வரலாற்று அடிப்படை, குமுகாயப் பொருளியல் அரசியல் அடிப்படைகளே ஓர் இணைந்துள்ள நாட்டின் பகுதி மக்களைப் பிரிவினை எண்ணத்திற்குத் தூண்டுகின்றன. இணைந்து வாழ்வதற்கும் அவையே அடிப்படைகளாகின்றன. இவ்வடிப்படைகளால் இணைப்பு நிலைக்கு எப்படிச் சார்பு நிலைக் கரணியங்கள் காட்ட முடியுமோ அப்படியே அதே அடிப்படைகளைக் கொண்டு பிரிவு நிலைக்கும் சார்பு நிலைக் கரணியங்கள் காட்ட முடியும். இப்படிப்பட்ட நிலையில் பிரிவு வேண்டும் என்ற எண்ண. எழுச்சிக்குத்தான் அடிப்படைக்கான வேண்டுமேயன்றி, பிரிந்து போகக்கூடாது என்பதற்கான அடிப்படையை எவரும் ஆராய்தல் தேவையில்லாதது. மாந்தனின் தனிப்பட்ட ஒரு நிலைப்பாடு என்பது வேறு, ஒரு நாட்டின் தனிப்பட்ட ஒரு நிலைப்பாடு என்பது வேறு. இரு வேறுபட்ட அடிப்படை அமைப்புகள் அமைந்த இரு நாடுகளோ, இனங்களோ ஒன்றோடு ஒன்றை இணைப்புச் செய்து கொள்ள விரும்புவதால் எப்படிச் சிலர்க்கு சில நன்மைகள் விளையத்தான் செய்யுமோ, அப்படியே அவை இரண்டும் தம்முள் தனித்தனிப் போக்குகளை ஏற்படுத்திக்கொள்ள முனைவதாலும் சில நன்மைகள் விளையத்தான் செய்யும். முன்னைய நன்மைகளைக் காட்டிப் பின்னைய நன்மைகளை மறுப்பது அறியாமையாகும். அவ்வறியாமை நல்ல அரசியல் அறிவாகாது; மாந்த மெய்ப்பாட்டியலுக்கு ஒத்ததாகவும் கருதப்பெறாது.

பெரும்பாலும், இரு வேறு நிலப்பகுதிகளின் இணைப்பு நிலைக்கு எப்படி வரவேற்பு இருக்குமோ, அப்படியே பிரிவு நிலைக்கும் வரவேற்பு இருக்கத்தான் செய்யும். இதில், இரு நிலைகளையும் நன்கு விளங்கிக் கொண்டு செயலாற்றுவதில்தான் அறிவு துணைநிற்க வேண்டுமே தவிர, மட்டையடித்தனமாக ஒன்றிற்காக ஒன்றைத் தவிர்த்து விட முயற்சி செய்வதற்கு அறிவுத் துணை தேவையே இல்லை. குருட்டுத்தன்மை என்பது அறிவு நிலையில் இருசாரார்க்கும் பொதுவே! ஆள்பவனுக்கு அந்நிலை குறைவாக இருக்குமென்றோ, ஆளப்பெறுவோர்க்கு அது மிகுந்திருக்கு மென்றோ கருதுகின்றவன் காலப்போக்கில் புறந்தள்ளப் பட்டு விடுவது இயற்கை. பிரிவு என்பது பகையாகாது: இணைப்பு என்பது நட்பும் ஆகிவிடாது. எனவே பிரிவு என்றவுடன் வெகுண்டெழுக் கூடியவனோ, முகத்தைச் சுளிப்பவனோ, இணைப்பு நிலைபற்றிப் பேசுவதற்குத் தகுதியற்றவனாவான். தாயை மகள் பிரிவதற்கும் காலம் ஒன்று உண்டு என்பதையும், குஞ்சைத் தாய் தனித்து வாழ விடுவதற்கும் அடிப்படை உண்டு என்பதையும் அரசியல் மூடர்கள் எண்ணிப் பார்த்தல் வேண்டும். பிரிந்து போவதைத் தடுப்பவன் ஒருகால் இணைந்திருக்கும் நிலையினால் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ அந்நிலையினால் ஊதியம் பெறுவோனாகத்தான் இருக்க வேண்டும், தாய்மைப் பாசத்துடன் பிரிவைத் தடுப்பவன் ஓரின மக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் அறியாமையைச் செய்கின்றான். தனி மாந்த நிலையிலும் பொதுமாந்த அல்லது குமுகாய நிலையிலும் பிரிவு என்பதையும் 'இணைப்பு’ என்பதையும் ஒரே பொருளுடைய சொற்களாகக் கருதிக்கொள்ளக் கூடாது. அதனால் பிழைகளும் கடுமையான விளைவுகளுமே எஞ்சும்.

இவ்வுலகம் தோன்றியதிலிருந்து தன்னுடன் இணைந்துள்ள ஒரு நாட்டைப் பிரிந்து போவதற்கு மன நிறைவோடு இசைவளித்த வேறொரு நாடு இருந்ததே இல்லை. அந்த நாடு தன்னொடு சேர்ந்திருப்பதால் தன் நாட்டுக்கு ஏதோ ஒரு வகையில் இழப்பு என்பதை உணர்ந்தாலன்றி, சேர்ந்துள்ள நாட்டின் நன்மைக்காக. தனிநிலைக் கோட்பாட்டின்படி உரிமைக்கு ஒப்பிய நாடோ, ஒரு தலைவனோ முன்னறிவோடு நடந்து கொண்டதாக இன்று வரை வரலாறு இல்லை. ஒவ்வொரு நிலையிலும் கண்ணீரும் குருதியும் சிந்தப் பெற்றுத்தான் ஒரு நாட்டின் வல்லதிகாரத்தினின்று அதன் பகுதி நாடுகள் விடுபாடு கொண்டிருக்கின்றன. இந்நிலைக்கு மாந்த முன்னறிவோடு ஒப்புதல் தரக்கூடிய பேரறிஞன் ஒரு நாட்டின் தலைவனாக இருந்ததில்லை, என்றும் அதனாலேயே ஒரு நிலத்தில் பல கொடிகள் அடுத்தடுத்துப் பறந்திருக்கின்றன; கிழித்தெறியப் பட்டிருக்கின்றன. இப்பொது மெய்ப்பாட்டியல்களின் அடிப்படையில் தான் தமிழகப் பிரிவினையை விளங்கிக் கொள்ளல் வேண்டுமேயன்றி, மனச்செருக்குடனோ அறிவுச்செருக்குடனோ ஆளுமை அதிகாரச் செருக்குடனோ இச் சிக்கலைத் தீர்க்க முனைவது யாகியாக்கானின் மூடத்தனத்தைப் போன்றது; அயூப்கானின் அகங்காரத்தைப் போன்றது; சார்மன்னனின் கொடுமையைப் போன்றது. அத்தகையோர்க்கு இத்தகு மெய்ப்பாட்டியல் (உண்மைக்கூறுபாடு) களால் விடை சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை; வேறு வகை மெய்ப் பாட்டு இயல் (உடல் முயற்சிக்கூறுபாடு)களாலேயே விடை சொல்லுதல் வேண்டும். உண்மையின் வலிவைப் புறக்கணிப்பவர்கள், உடல் வலிமையை என்றும் புறக்கணித்ததில்லை. வரலாறு முன்னோக்கித் தான் போகுமேயன்றி, பின்னோக்கிப் போனதில்லை. எனவே தான் தமிழகப் பிரிவினையை ஏதோ தீண்டத்தகாதவனின் கோரிக்கையைப் போல் கருதிக்கொண்டு குதிக்கும் இந்திரா அம்மையாருக்கும். அவரைப் போன்ற பிறர்க்கும் ஒன்று சொல்விக்கொள்ள விரும்புகின்றோம். தீண்டத்தகாதவனையும் தீண்டவேண்டும் என்று சட்டமியற்றும் காலம் இது. அதற்குத் தகுந்தவாறு மக்களின் இயற்கையான கூர்தலற மனவெழுச்சிகளை விளங்கிக்கொண்டு அவற்றிற்குச் செவிசாயுங்கள். இல்லையெனில் யாகியாக்கானைப் புறங்கண்ட உங்களை, அதே மெய்ப்பாட்டுக்காக நாங்கள் புறங் காண நேரும். எங்கள் இனத்திலும் உங்களிடம் வந்து பொறுக்கித் தின்ன நினைக்கும் ஓரிரண்டு சுப்பிரமணியன்களும், பக்தவத்சலங்களும், அண்டேக்களும் இருக்கலாம். தமிழ் மக்களின் குடுமி வடவனின் கைகளில் சிக்கியிருப்பதால் அத்தகையோர்க்கு ஏதாகிலும் நன்மைகள் கிடைத்து வரலாம். அவற்றுக்காக அவர்களின் வாய்கள் இப் பிரிவினையெழுச்சியின் மேல் குப்பைகளையும் சருகுகளையும் வாரியெறியலாம். ஆனால் அவற்றையே பற்றிக்கொண்டு கனன்றெழுகின்ற உரிமைத்தீ, விடுதலை உணர்வு அவர்களையும் தீய்த்து. உங்களையும் முகங்கருக்குகின்ற நாள் ஒன்று வரத்தான் வரும். அந்த நல்ல நாளை வரவேற்க, அணியமாகிக் கொள்ளுங்கள் என்பதையே தென்மொழி உங்கட்கு முன் எச்சரிக்கையாக முழங்குகின்றது. என்று கருதிக்கொள்ளுங்கள்.

தென்மொழியின் இந்தப் போக்கைப் பொறாமையும் பொச்சரிப்பும் உடைய சிலர் 'தன் முனைப்பு’ என்னலாம் 'தன்னழுத்தம்’ என்னலாம்; சிலரோ தம் கட்சித்தலைவர்களைக் கொண்டு மட்டுந்தான் இக்கோரிக்கை முழங்கப் பெறல் வேண்டும் என்று ‘கந்தாயம்' பேசலாம். ஆனால் தென்மொழியைப் பொறுத்தவரை இனி எந்தத் தமிழகத் தலைவரையும் நம்பிப் பயனில்லை என்ற நிலை தெளிவாக உணரப் பெற்றுவிட்டது. எதற்காகச் சட்டமன்றம் போக வேண்டும் என்று தொடக்க நிலையில் தமிழகப் பிரிவினை விரும்பிய தலைவர்கள் கரணியங்கள் காட்டினரோ, அந்தக் கரணியங்கள் அவர்கள் அமர்ந்த பதவி நாற்காலிகளுக்கு ஆணியாக அறையப் பெற்றுவிட்டன. அவர்களின் மனைவி மக்களுக்கும் எதிர்காலப் பிறங்கடைகளுக்குமான ஒப்பந்தப் பட்டயங்களாகவும், நில புலம் வீடுகளாகவும் மாற்றப் பெற்றுவிட்டன. இன்னும் விளக்கமாகச் சொன்னால் அவர்கள் தங்களுக்குள்ளேயே எவரெவர் முன்னே போவது; எவரெவர் பின்னே வருவது என்ற போராட்டத்தை வேறு எழுப்பிக்கொண்டு விட்டனர். தமிழர் வடவரோடு ஒட்டி உறவாட வேண்டியதற்காகக் கூறப்பெறும் ஒருமைப்பாட்டின் பகட்டான போலி உரைகளைப் போலவும் செயல்களைப் போலவும், நம்மையாள வந்த - வழி நடத்திச் செல்ல வந்த தலைவர்களிடையில் போலியான ஓர் உடன்பிறப்புப் பாசமும் ஒற்றுமையுணர்வும் பேசப்பெறுகின்றன; காட்டப் பெறுகின்றன. அவர்கள் உள்ளத்தி விருப்பதெல்லாம் ஒருவரை ஒருவர் எடுத்து விழுங்குவதற்கான கால ஆராய்ச்சியும், இட ஆராய்ச்சியுந்தான், இத்தகைய தலைவர்களை நோக்கிக் கைகாட்டும் குட்டித் தலைவர்களைப் பற்றியோ, குறும்புப் பேச்சுக்காரர்களைப் பற்றியோ நமக்குக் கவலையில்லை. அவர்களுடைய அறிவின் மேலும் நம்பிக்கையின் மேலும் அவர்களுக்கிருக்கும் அழுத்தமான பிடிப்புப் போலவே நமக்கும் நம் அறிவின் மேலும் நம்பிக்கையின் மேலும் வலிந்த இரும்புப் பிடி உண்டு. பிரிவினை என்ற சொல்லைச் சொல்லவும் அஞ்சுவதையும் அவ்வாறு அஞ்சுவதை 'அரசியல் விரகு' என்பதையும் நம்புகின்றவர்கள் மேலும் நம்பிக் கொண்டிருக்கட்டும், நம்பாமல் போகிறவர்கள் தனித்துப் போனால்தான் என்ன? கூட்டமாகப் போனால்தான் என்ன? இந்நிலையை இவர்கள் அணுகின்ற முறைக்கும், தமிழகத்தை இந்திராகாந்தி அணுகுகின்ற முறைக்கும் எள்ளளவும் வேறுபாடு இருப்பதாக நமக்குப் படவில்லை.

நமக்கு இரண்டில் ஒன்று தெரிய வேண்டும். ஆண்டாண்டுக் காலமாய் அடிமைப் பட்டுக் கிடக்கும் தமிழனுக்கு விடுதலை தேடித் தருவது யார். அல்லது எப்படி என்பதன்று - இப்பொழுதுள்ள சிக்கல், எப்பொழுது என்பதுதான், இப்பொழுதுள்ள கேள்வி. இந்நிலையில் நான் என்று வந்து எவரேனும் தலைமைப் பட்டயம் சாற்றிக் கொள்ளட்டும்; அல்லது தளபதிப்பட்டம் சூட்டிக் கொள்ளட்டும். நமக்குக் கலையில்லை. நமக்குள்ள கவலையெல்லாம், இந்தத் தலைமுறையிலேயே பெரியார் காலத்திலேயே நமக்கெல்லாம் மொழி உணர்வும் தமிழ் வரலாறும் ஊட்டிய பாவாணர் காலத்திலேயே நாம் விடுதலை பெற்றாக வேண்டும். அண்ணா தளபதியாக இருந்து முன் நடத்துவார் என்று நம்பியிருந்தோம். அண்ணா தம்மையே தாம் காத்துக் கொள்ள முடியாமல் தலை சாய்ந்தார். அவரின் தம்பிகளாகிலும் நம்மை வழி நடத்துவார்கள் என்று நம்பினோம். அவர்கள் தம் கைகளையும் கால்களையும் வலுப்படுத்திக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதாகத் தெரிகின்றது. அவர்கள் மேல் சாட்டப் பெற்ற அரசியல் குற்றச்சாட்டுகளுக்கிடையில், விடுதலை- பிரிவினை என்ற சொற்களைப் பலுக்குவதற்குக் கூட அவர்களுக்குத் திறமையிருக்குமோ? இருக்காதோ? நமக்கெல்லாம் உணர்வு கொளுத்திய பெரியாரோ கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தைப் பேசிப்பேசியே வீணடித்து விட்டதாக நாம் கருத வேண்டியுள்ளது. கத்தியை வைத்துக்கொள்; பயன்படுத்தாதே’ “-என்ற அவரின் அறநிலைப் போக்கிற்கு தர்மோபதேசத்திற்கு” எதிராளிகளில் எவனும் தலைசாய்த்ததாய்த் தெரியவில்லை. அவருடைய கட்டளை இன்று வரும் நாளை வரும் என்றெல்லாம் இனியும் ஏமாறிக் கொண்டிருப்பதற்கு நமக்கு அகவையில்லை; உடலும் உணர்வும் முதுமையுற்றுவிடும் போல் தெரிகின்றது. அதற்குப்பின் பெரியாரைப்போல் பிறரை நம்பித்தான் காலந்தள்ள வேண்டும் என்ற கட்டாயம் நமக்கு வந்து விடும் போல் தோன்றுகின்றது.!

அண்மையில் கோவைத் தொழிலறிஞர் அறிவியல் முனைவர் கோ. து. (நாயுடு) அவர்களிடம் நேரில் போய், அவர் வைத்திருக்கும் வலிவுகளில் ஒரு பகுதியையாகிலும் அறிவியல் கருவிகளையாகிலும் எங்கட்குத் துணையாகத் தாருங்கள் என்று கேட்டுப்பார்த்து விட்டேன். அவ்வாறு கொடுக்காமற்போனால் எதிர்காலத்தில் அவர்கள் போன்றவர்களிடமே முதன் முதல் போராட வேண்டியிருக்கும் என்றும். அவர்களின் குவிந்த செல்வங்களையே முதன் முதலில் கரைக்க முற்பட வேண்டியிருக்கும் என்று நேருக்கு நேர் அச்சுறுத்திப் பார்த்து விட்டேன். அவர் நம் விடுதலைக் கொள்கையை முழுக்க முழுக்க வரவேற்றாராயினும் நம் உணர்ச்சியையும் முயற்சியையும் ஓர் ஐந்தாண்டுக் காலத்திற்குத் தள்ளிப்போடும் படி கேட்டுக்கொண்டார். அவ்வைந்தாண்டுக் காலத்திற்குள் நாம் விடுதலை கோருவதற்கான நோக்கங்கள் நிறைவு செய்யப் பெறாமல் போகுமானால் தாமும் நாம் தொடங்கவிருக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதாகக் கூறினார் அவ்வாறு கூறுவதை எழுத்தால் நான் சொல்லுகிற படி ஓர் ஒப்பந்தம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டு என்னை எழுதச் சொன்னார் நான் எழுதியது. (தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆங்கிலப் பெயர்ப்பு பாவலர் திரு. மகிழரசனுடையது)

கோவைத் தொழிலியற் பேரறிஞரும் அறிவியல் முனைவரும் ஆகிய கோ. துரைசாமி நாயுடு அவர்கள் தென்மொழி ஆசிரியர் திரு. பெருஞ்சித்திரனாருக்கு எழுதிக் கொடுத்த விடுதலை எழுச்சி நாள் கால நீட்டிப்பு ஒப்பந்த விளக்கம்.

தி.பி. 2003 கும்பம் 23 கி.பி. 1972 மார்ச்சு 6 ஆம்நாள் திங்கட்கிழமை, கோவை கோ. து. நாயுடு (G.D Naidu) ஆகிய நான் கடலூர் தென்மொழியிதழ் ஆசிரியர் திரு. பெருஞ்சித்திரனார் அவர்களுக்கு, இவவொப்பந்த வரைவின் வழி, அவர் மிக அண்மையில் தொடக்கவிருக்கும் இந்திய ஆட்சியின் அரசியல், இன, மொழி, சட்ட அமைப்புகளினின்று முற்றும் வேறுபட்ட தமிழகத் தனி ஆட்சியமைப்புப் போராட்டத்தை இவ்வொப்பந்த நாளினின்று அடுத்த ஐந்தாண்டுக் காலத்திற்குத் தள்ளிப் போட வேண்டும் என்று வேண்டிக் கொள்வதுடன் அவ் வைந்தாண்டுக் கால எல்லைக்குள் அவர் எதிர்பார்க்கும் தமிழ்நாட்டு விடுதலை, “ஏதோ ஒரு வகையில் “ கிடைக்கத் தவறுமானால் அவருடன் கையொடு கையும் தோளோடு தோளுமாக இணைந்து நிற்பதோடு நானே முன்னின்று அவர் கொள்கையை நிறைவேற்றும் வகையில் ஒரு கருவிப் புரட்சி போராட்டத்தைக் கட்டாயம் தொடங்குவேன் என்று உறுதியளிக்கின்றேன்.

Agreement by Thiru. G. Duraiswamy Naidu the eminent Industrialist and the foremost Scientist, coimbatore pledged to Thiru, Perunchittiranar, Editor, Thenmozhi, Cuddalore bidding extenion of period for the Tamil Nadu Freedom upheaval : -

I. G. Duraiswamy Naidu, Coimbatore request Thiru. Perurichittiranar, Editor, Thenmozhi Cuddalore, on this day of 23rd Kumbam Thi. Pi. 2003 (Monday the Sixth of March 1972) Through this statement of Agreement, to postpone his new-proposed struggle to be started in the closer days demanding an Independant set-up of “Free Tamil Nadu Government” that entirely differs from the political, racial, linguistic and legal constitution of the Government of India, from this day of the Agreement to a period of next five years and that, in case the said Freedom of Tamil Nadu as he expected is not achieved in any way, within that stipulated period of five years, I pledge and agree to join him arm with arm and shoulder with shoulder, and to initiate and come forth for an armed revolution in the cause of fulfilling his aims to liberate Tamil Nadu, without fail.

ஆனால், எழுதியபின் அவர் தாம் அதிற் பின்னால் கையெழுத்திட்டு அனுப்புவதாகக் கூறி, நான் ஒப்பந்த அடிப்படையில் எழுதிய உறுதிப்பாட்டை மடல் அடிப்படையில் சுருக்கி எனக்கு விடுத்து வைத்தார். அம்மடலை இவ்விதழ் அட்டை மேற்புறத்தில் வெளியிட்டுள்ளேன். நானும் கோவை, கோ. து. நாயுடு அவர்களும் செய்து கொண்ட இவ்வொப்பந்தத்தின் போது தென்மொழி விடுதலை அரிமாக்களில் சிலரும் என்னுடன் வந்திருந்தனர். (சட்ட நெரிசல்களைக் கருதி அவர்கள் பெயர்களை இங்கு வெளியிடவில்லை. தேவையாகும் பொழுது அவர்களை வெளிப்படையாகப் பாராட்டுவேன்.) திரு. கோது. நாயுடு அவர்கள் எப்படிப்பட்டவர்’ என்பதை என்னை அவர் அறிந்ததை விட நான் நன்கு அறிவேன். எனவே அவர் போன்றர்கள் நம் தமிழகப் போராட்டத்தில் ஒதுங்கியிருந்து விட முடியாது. பெரியார். ஈ. வே. இரா அவர்கள் தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கையைத் தமிழக அரசினர் சார்பாக நிறுத்தி வைத்துள்ளதாகச் செய்தித் தாள்களில் பார்க்க நேர்ந்தது. தி.மு.க. தலைவர்களில் ஒருவரும் முன்னணிக் கொள்கையாளருமாகிய திரு. மனோகரன் அவர்கள் தம் கட்சி நாட்டுப் பிரிவினையைக் குழி தோண்டிப் புதைத்து விட்டதாகப் பேசியதையும் படிக்க நேர்ந்தது. இச்செய்தி எவ்வளவில் உண்மையோ நமக்குத் தெரியாது. அப்படியே உண்மையாக இருந்தாலும் ‘இஃதெல்லாம் ஓர் அரசியல் தந்திரம்’ என்று அடங்கிப் போகவும் முடியாது. அப்படித் தேற்றிக் கொண்டு நம்பிக் கிடப்பவர்களைப் பற்றியும் நமக்குக் கவலையில்லை. திரு மனேகரளைப் பொறுத்தவரை தமிழகப் பிரிவினை தேவையில்லாமல் இருக்கலாம்; ஏனெனில் அவர் ஒரு மலையாளி;” அல்லது திரு. கோ. து. நாயுடு அவர்களைப் பொறுத்தவரை தமிழகப் பிரிவினை தற்காலிகமாகவோ, நிலையானதாகவோ தள்ளிப் போடக் கூடியதாகவோ தள்ளிவிடக் கூடியதாகவோ (அவர்க்குத் தனிப்பட்ட நிலையில் நன்மை வருகிறபொழுது) இருக்கலாம்; ஏனெனில் அவரும் ஒரு தெலுங்கர், அப்படியே தான் பெரியாரையும் கருதிக் கொள்ள வேண்டியிருக்குமா என்பது தான் நமக்குத் தெரியவில்லை. அவரைப் பொறுத்தவரை, அவர் ஒரு கன்னடியர் என்பதையும் மறந்து. இந்தத் தமிழர்களுக்காக தமிழரோடு தமிழராய் ஓர் அரை நூற்றாண்டுக் காலம், உரிமையுணர்வுக்கு எருவிட்டும், விடுதலை எழுச்சி தழைக்கவும் பாடுபட்டாரே, அவரையும் அப்படித்ததான் கருதிக் கொள்ள வேண்டியிருக்குமோ என்பதை அவர் தான் நமக்கு விண்டு விளக்க வேண்டும்.

எவரோ, எப்படியோ, இனியும் நாம் சாக்குப் போக்குகள் காட்டிக் காலத்தை நீட்டிப் போட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை. அப்படியிருக்கக் கூடவும் கூடாது. வடநாட்டினரின் வல்லாட்சி ஒரு சார்பு அதிகார உரிமை தமிழர்களையும், தமிழர் தம் பண்பாட்டு வளங்களையும் பூண்டோடு அழித்து, அவர்களை என்றென்றும் மொழி இன, பொருளியல், அரசியல் அடிமைகளாக அழுத்திவைத்துக் கொண்டிருக்கும் கரவு சான்றது, அதற்குத்தக சட்டங்கள் மாற்றி அமைக்கப் பெறுகின்றன; அரசியல் நடை முறைகள் தலை கீழாக்கப்படுகின்றன; நிலக் கூறுபாடுகள் பூசி மெழுகப் படுகின்றன. இவற்றின் இடிபாடுகளுக்கிடையில் அவர்களின் மொழி, இன, பண்பாடுகள் விரிவு படுத்தப்பெறுகின்றன. அறிவும் அக நோக்கும் அற்ற அவர்களைச் சேர்ந்த புல்லியர்களெல்லாரும் நாம் வணங்கத் தகுந்த தலைவர்களாக, வழிகாட்டிகளாக வந்து அமர்ந்து கொள்கின்றனர். நம் இன வழிகாட்டிகளும், நம்மின் பழம்பெரும் அறிஞர்களும் அவர்களுக்குக் கோமாளிகளாகவும் வாயில் காப்போர்களாகவுமே பயன்படுத்தப் பெறுகின்றனர். இந்நிலைகளை நன்கு உணராத அறிவு முண்டங்களாகிய பக்தவத்சல சுப்பிரமணியன்கள் தம் மண்டைப் புழுக்குடைச்சலினால் ஏற்படும் உளறல்களை யெல்லாம் நாம் அறிவுரை என்று ஏற்கத் தேவையில்லை. காமராசர் போலும் ஓரிரு பேராயக் கட்சித் தலைவர்கள் உண்மையிலேயே மக்கள் நலம் விரும்பிகள் என்றால், தாங்கள் தமிழகப் பிரிவினையை வலியுறுத்துவதைத் தவிர வேறு முயற்சிகளில் தங்களைக் கொண்டு செலுத்த வேண்டா என்று எச்சரிக்கின்றோம். ஒரு பெரும் அரசியல் மறுமலர்ச்சி வரலாறு உருவாவதை எந்தத் தலைவனோ தொண்டனோ தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை மட்டும் உறுதியாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். காலத்தின் விளைவு இது என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமேயல்லாமல் எந்த எதிர்விளைவுக்கும் முயற்சி செய்து வரலாற்று வெள்ளத்தில் மூழ்கிப் போக வேண்டா என்று எதிரது உணரும் ஆற்றல் உள்ளவர்களையும் வேண்டிக்கொள்கின்றோம்.

- தென்மொழி, சுவடி :9, ஓலை 11, 1972