வேண்டும் விடுதலை/நேரம் வந்துவிட்டது படைமுகத்துக்கு வாருங்கள்!
படைமுகத்துக்கு வாருங்கள்!
என்னைப் பற்றி எண்ணிப் பார்க்க எனக்கு எவ்வளவு உரிமை உண்டோ, அப்படியே என் நாட்டைப் பற்றி- என் இனத்தைப் பற்றி என் மொழியைப் பற்றி எண்ணிப் பார்க்கவும், கருத்தறிவிக்கவும் எனக்கு முழு உரிமை உண்டு. இந்த இயற்கை உணர்வின் அடிப்படையிலேயே பிறரையும் எண்ணிப் பார்க்கின்றேன். என் போல் பிறரும் அப்படி எண்ணிப் பார்த்துக் கொண்டிருப்பர் என்பதையும் உணர்கின்றேன். அவ்வாறு எண்ணிப் பார்த்துக் கூறும் அவர்களின் கருத்துகளிலும் உண்மை இருக்கவே செய்யும் என்பதையும்கூட என்னால் அறிந்து கொள்ளமுடியும் ஆனால் இவ்வாறு ஒவ்வொருவரும் தம்மளவில் தாமே எண்ணிப் பார்க்கும். இயல் முறையை விடுத்து, என்னைப் பற்றிப் பிறரும், பிறரைப் பற்றி நானும் எண்ணுகின்ற முறையில் எல்லாமே இயற்கைக்குப் பொருத்தமாக இருந்து விடும் என்று எவரும் கூறிவிட முடியாது. நாட்டைப் பற்றிய செய்தியிலும் மொழியைப் பற்றிய செய்தியிலும் இனத்தைப் பற்றிய செய்தியிலும்கூட இந்த உண்மைகளைத்தான் மாந்தன் கடைப்பிடித்தாக வேண்டும். அல்லாக்கால் குழப்பங்கள் மிஞ்சும்; ஒன்றுக்கொன்று போராட்டங்கள் மிகும்; ஒன்றால் ஒன்றுக்கு நேரும் அழிவுகள் தவிர்க்க முடியாதன வாகிவிடும்.
நான் மொழியால் தமிழன்; எனவே இனத்தாலும் தமிழன், இன்னுஞ்சொன்னால் நான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலத்தாலும் தமிழன். இப்படிப்பட்ட உரிமைகளை எண்ணிப் பார்ப்பதிலும், அவற்றைத் தேடிப் பெறுவதிலும் அவை கிடைக்காமற் போகுமிடத்து அவற்றிற்காகப் போராடுவதிலும் என்னைப் பிழையென்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை. மாந்தன் வகுத்துக் கொண்ட உலகியல் சட்டங்கள் எல்லாமே ஓரினத்துக்காக ஓரினத்தாரே வகுத்துக் கொண்டதில்லை. ஓரினத்தை அடிப்படுத்தி ஆள முயன்ற பிறிதோர் இனம் அமைத்துக் கொடுத்தவையாகத் தான் பெரும்பாலும் காணப் பெறுகின்றன. மாந்தர் யாவரும் ஒரே இனத்தவரே என்பதினும் ஒரே உலகத்தவர் என்பதில் தான் பசையிருக்கின்றது. அவ்வாறு தருக்கத்திற்காக வேனும் உலக மக்கள் யாவரும் ஒன்றென்று கருதிக் கொள்ள வேண்டும் என்பதாகக் கூறப் பெறுமானால், அப்படிக் கூறுபவன் என் நம்பிக்கைக்கு முற்றும் உகந்தவனாக இருக்க வேண்டும் அப்படிப்பட்டவனுக்கு மொழி, இனம், நாடு என்பதாக ஒன்றுமே இருக்கக்கூடாது. அவன் கால் நடையை எந்த எல்லைச் சுவரும் தடுத்து நிறுத்திவிடக் கூடாது. அவன் பேசுகின்ற மொழி நான் பேசுகின்ற மொழியாக இருக்க வேண்டும். அவன் என்போல் உண்ண வேண்டும். என்போல் உடுக்க வேண்டும். என்போல் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். என்னைக் கீழாக வைத்துத் தன்னை மேலாக வைத்துக் கொண்டிருப்பவனின் அறிவுரையை என்றும் நான் ஏற்றுக் கொள்ளுவதற்கில்லை. எனவே அப்படிப்பட்ட ஒருவன் இவ்வுலகத்தில் எந்த ஊழியிலும் வாழ்ந்து விடமுடியாது.
உலகம் முழுவதுமே வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாகத்தான் இயங்கிக் கொண்டிருக்ககின்றதே தவிர வேற்றுமையற்ற ஒற்றுமையுடன் திகழ்வதாக எவரும் கூறமுடியாது. ஆனால் என்மொழி, என் இனம், என்நாடு என்பதாகக் கூறப் பெறும் உள்ளுணர்வை எவரும் எளிதில் சுட்டுப் பொசுக்கிவிட முடியாது. வேண்டுமானால் ஒரு பொழுதில் தூங்கி ஒரு பொழுதில் விழித்துக் கொள்வதைப் போல் ஒரு கால கட்டத்தில், ஒரு நில எல்லைக்குள் அதைச் செயற்படுத்தி, அடுத்த கால வட்டத்தில், அடுத்த நில எல்லைக்குள் அதைத் தகர்த்துவிட வேண்டியதாக இருக்கும். இவ்வியற்கை அமைதிக்குள்தான் உயிரினத்தின் உரிமை உணர்வும் விடுதலை உணர்வும் அடக்கப் பெற்றுக் கிடக்கின்றன.
இவ்வடிப்படையிலேயே தென்மொழி தன் மொழி உரிமையையும் இன் உரிமையையும் கடந்த பதினான்கு ஆண்டுக் காலமாக முழக்கி வருகின்றது. இக் கடுமையான தொடர்ந்த முயற்சியால் விளைந்த விளைவுகள் எத்தனையோ உள மொழியைப் பொறுத்தவரையில் இதன் முழக்கங்கள் எவ்கையான போராட்டமுமின்றி ஓரளவு வெற்றி பெற்று வருகின்றன என்று கூறி மகிழலாம். ஆனால் இனத்தைப் பொறுத்த அளவில் இதன் நோக்கம் ஓர் இம்மியளவும் நிறைவேறியதாகக் கூற முடியாது. ஏனெனில் தமிழனின் வரலாறு அத்துணை இறுக்கம் வாய்ந்த ஓர் அடிமை வரலாறாக ஆக்கப்பெற்றுக் கிடக்கின்றது. இவ் விறுக்கத்தை இலக செய்ய எடுத்துக் கொண்ட முயற்சிகள் பல. அவ்வாறு எடுத்துக் கொண்ட தலைவர்கள் பலர். இன்னும் அத்தகைய முயற்சி நடந்து கொண்டே இருக்கின்றது. இவ்விடத்தில் ஒன்றை மறந்து விடக்கூடாது. தமிழனின் வரலாறு பிற நாட்டவனின் பிறநாட்டவன் ஏதோ ஓர் இனத்தானிடம் ஏதோ ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தான் அடிமைப்பட்டுக் கிடந்திருப்பான். ஆனால் தமிழனின் அடிமை வரலாறு ஏறத்தாழ மூவாயிரமாண்டுத் தொடர்கதை. இவனின் ஆண்டைகள் பல பேர் ஒவ்வோர் இனத்தானிடமும் இவன் மாறி மாறித் தொழும்பு வேலைகள் செய்திருக்கின்றான். இக்கால் இவனுக்கு ஆண்டையாக வந்து அமர்ந்தவன் வடநாட்டான். அதிலும் ஆரியப் பார்ப்பான். இவனிடத்திலிருந்து இவன் தன்னை விடுவித்துக் கொள்வது அவ்வளவு எளியதன்று - சட்டத்தாலும் அதிகார நெருக்கத்தாலும் பொருளியல் முட்டுப் பாட்டாலும் இவன் அடிமைத்தனம் மூச்சு முட்டக் கிடக்கின்றது. இவன் தன்னைத்தானே அடிமைப்படுத்திக் கொண்டு கிடக்கின்ற நிலைகள் வேறு. அவை இவனை என்றும் உயர்த்திக் கொள்ளாதபடி அழுத்திக் கொண்டுள்ளன. இத்தனைக்கும் மீறி இவனை அவற்றினின்று விடுவிக்கும். ஒரு பேராற்றல் வாய்ந்த ஒருவனை எந்த ஆற்றலாலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவனை எத்தகைய கொடுமைகளுக்கும் ஏச்சுப் பேச்சுகளுக்கும் அஞ்சாத அசையாத ஒருவனை எவ்வகையான பற்றுப் பாசங்களுக்கும் அடிமைப்படாத ஒருவனை-எத்தகைய அகப்புறப் பகையுணர்வுகளுக்கும் சலிப்படையாத ஒருவனைத் தமிழகம் எதிர் நோக்கிக் கொண்டுள்ளது. அவனே தமிழக அடிமை வரலாற்றிற்கு முற்றுப்புள்ளி இட வேண்டி யவனாவான். ஆனாலும் அத்தகைய ஒருவனும் நம்முடைய வயிற்றினின்று தான் தோன்றித் தீர வேண்டும். எனவே இன்றைக்குப் புடைத்தெழும் நம்நாடி நரம்புகளின் வேகம் நாளைக்கு அப்படிப்பட்ட ஒருவனைச் சமைத்துக் கொடுக்காதா என்று எண்ணி நான் அங்காந்து அலமந்து கிடக்கின்றேன். அதன் முடிவாகவே இவ்வளவு நாட்கள் என் எண்ணங்கள் யாருக்கும் கட்டுப்படாமல் வெடித்துச் சிதறின. பொங்கிப் புடைநிரம்பின. ஆனால் எத்தனை நாட்களுத்தான் இப்படி எண்ணத்திலும் எழுத்திலும் உணர்ச்சிகளை ஓட விடுவது? எனவே இறுதியாக ஒரு முயற்சி.
வரும் சூன் மாதம் 10, 11ஆம் பக்கல்களில் திருச்சித் தேவர் மன்றத்தில் ஒரு மாநாடு நடைபெறும், என்னைப் போல், எண்ணங்கொண்ட அல்லது என் எண்ணத்தையே எளிது என்று கருதும் படியான ஓர் உள்ளம் அல்லது உள்ளங்கள் எத்தனையோ இருக்கலாம். அவற்றிற்குப் போதிய துணையில்லாமலும் இருக்கலாம். அவற்றை யெல்லாம் ஒன்று கூட்டி ஒரு முடிவு காண்பதில் பிழையென்ன என்று எண்ணிக் கூட்டப் பெறுவது இம் மாநாடு. முன்பொரு முறை இப்டியொரு சிறு முயற்சி நடந்தது. ஆனால் மறைமுகமாக- எவருக்கும் தெரியாத முறையில் நடந்து முடிந்த அம்முயற்சி அப்பொழுதைய நிலையில் ஒரு பட்டறிவை எனக்குத் தந்தது. அதன் அடிப்படையில் அம் முனைப்பை இவ்விடைக் காலமெல்லாம் ஆறப் போட்டேன். அதற்குள் என்னை எனக்கு நேரெதிராகக் கருதிக் கொண்டவர் சிலர் பயனற்றவன் என்று ஏகடியம் பேசியவர் சிலர்; வெறும் வாய்ச் சொல்லில் வீரன் என்று ஏளனம் செய்தவர் சிலர்; உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு மக்களை ஏமாற்றி வாழ்கின்றவன் என்று குற்றம் சாட்டியவர் சிலர்; பெருந்தன்மையான திருடன் 'தகவிலாதவன்' என்று ஏசி வக்கனைப் பேசியவர் சிலர். இருப்பினும் என் வேலை தொடர்ந்தது. என்னால் ஏதோ ஒன்று நடைபெற வேண்டும் என்று மட்டும் என் உள்ளுணர்வு அடிக்கடி கூறி வந்தது. அதைச் செயற்படுத்திப் பார்த்து விடத் துடித்தேன். ஆனால் என் மன உணர்வுக்குத் தகுந்த வகையில் நான் நெருங்குகின்ற சிக்கல்களைத் தீர்த்துக்கொடுக்க முன்வருவோர் எவரும் கண்களில் படவில்லை. தமிழகத்துத் தலைவர்களை யெல்லாம் தனித்தனியாக எண்ணிப் பார்த்தேன். வல்லடிமைப் பட்டுக் கிடக்கும் இத் தமிழகத்தை விடுவிக்கும் ஒருவர்க்கு என்னென்ன திறமை தகுதி இருக்க வேண்டும் என்று என் மன இலக்கணம் சொல்கின்றதோ அதற்குப் பொருத்தமான ஒருவரைத் தேடிப் பார்த்தேன். எல்லாரும் ஏதோ ஒருவகையில் மக்களையும் தங்களையும் ஒட்டு மொத்தமாக ஏமாற்றிக் கொண்டு செல்பவர்களாகவே எனக்குப் பட்டனர். மக்களை எண்ணுபவர் மொழியைப் பற்றிக் கவலையில்லாதவராக இருக்கின்றார். மொழியைப் பற்றி நினைப்பவர் மக்களைப் பற்றிக் கருத்தில்லாதவராக இருக்கின்றார். இரண்டைப் பற்றியும் இணைத்து நினைப்பவர் பதவிக்காகத் தன்னைக் காவுகொடுத்துக் கொள்பவராக இருக்கின்றார். மூன்றிலும் தன்னை நெறிப்படுத்தி கொண்டவர் செல்வ நாட்டம் உடையவராக மக்களை ஏமாற்றிப் பணம் பண்ணிக் கொண்டு வாழ்கின்றார். இப்படி எல்லாரும் ஏதோ ஒரு வகையில் அல்லது சிலவகையில் உயர்ந்தும், பிறிதொன்றில் அல்லது பலவகையில் தாழ்ந்துமே என் கண்களில் படுகின்றனர். இனி என்னைப் பொறுத்தவகையிலும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளும் இருக்கத்தானே செய்யும் என்று நானே என்னைக் கேட்காமவில்லை. ஏற்றத் தாழ்வுகள் என்பன பலவகைப்பட்டன. என் மூக்கு நீளமாக இருக்கலாம். அதனால் என் பார்வை கோளாறு உள்ளதாகக் கூற முடியாது. என்நாக்கு நீளமென்று சிலர் கூறலாம். அதனால் என் கருத்தில் கூனல் விழுந்து விட்டது என்று எவரும் கூறிவிட முடியாது. இதுவரை எவரையும் எதற்காகவும் நான் வஞ்சித்ததில்லை. எவர்க்காகவும் எதற்காகவும் நான் என் கருத்தை மாற்றிக் கொண்டதில்லை. முன்னொன்று பேசி அதனைத் தவறு என்று உணர்ந்ததாக இதுவரை எனக்கு நினைவில்லை. அவ்வாறு உணரும் பொழுது அதைத் திருத்திக் கொள்ளவும் நான் அணியமாகவே இருக்கின்றேன். அன்றிலிருந்து இன்று வரை என் குணங்கள் மாறுபட்டதில்லை. எதற்காகவும் என்னை நான் பணித்துக் கொண்டதில்லை. கட்டுப்படுத்திக் கொண்டவனும் இல்லை. பதவியையும் செல்வத்தையும் தானே என் காலில் வந்து ஒட்டிக் கொள்ளும் தூசைவிடக் கீழானவையாகவே என் மனம் நினைக்கின்றது பணம் என் வினைபடு கருவி; வழிபடுகருவியன்று.
என்னை என்றும் தலைவன் என்ற சொல்லுக்கு அணிமைப்படுத்திக் கொண்டதே இல்லை. என்னை விட, இங்குள்ள யாவரையும் விட ஒரு பேராற்றல் இவ்வுலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதாக நான் என்று மெய்யறிவால் கண்டு கொண்டேனோ, அன்றிலிருந்தே என்னை ஒரு கருவிப் பொருளாகக் கருதிக் கொண்டிருகின்றேனேயன்றி, ஒரு கருத்தா அஃதாவது ஒரு தலைமைப் பொருளாக என்னை ஒரு நொடிப் பொழுதேனும் நினைத்துப் பார்த்ததே இல்லை. என்னை அப்படிக் கூறுபவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு அப்படியொரு தலைவன் தேவையாக இருக்கின்றது போலும் என்று கருதிக் கொண்டு இருக்கின்றேனே தவிர, என்னையே அவர்களின் விளிப் பொருளுக்கு உகந்தவனாகக் கருதிக் கொள்ளவில்லை. இவ் வகையில் எனக்கு நேர்மாறான பொருளைக் கற்பித்துக் கூறிக்கொண்டிருப்பவர்கள் மேல் எனக்கு அவர்களின் அறியாமையைப் பற்றி இரக்கமே ஏற்பட்டுள்ளது.
எனவே, எதைப்பற்றியுமே எண்ணிச் செருக்குறாத நினைவுடன், தமிழர்களின் இயற்கை மெய்ப்பாட்டியலுக்கு மாறுபடாத விடுதலை நோக்குடன், ஒரு மாநாட்டைத் திருச்சியில் கூட்டியுள்ளேன். அது முழுக்க முழுக்க விடுதலை மாநாடுதான். ஆனால் அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காகத் “தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு” என்று பெயர் கொடுத்துள்ளேன். அவர்களின் கண்களுக்கு இப்பெயர் மட்டும் தெரிந்து இதன்நோக்கம் தப்ப வேண்டும் என்று நான் எண்ணியது. இம் மாநாட்டிற்குக் கிடைக்க வேண்டிய எல்லா வகை இசைவுகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். (இப்படி வெளிப்படையாக எழுதுவதை அவர்கள் படித்துத் தெரிந்து கொள்ள மாட்டார்களா என்பதை நான் எண்ணாமல் இல்லை. அவர்கள் தங்களைப் பற்றிய கருத்துரைகளில் கவனம் செலுத்துவதில்லை என்பதை நான் நமக்கு ஆக்கமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளேன். அவ்வளவுதான்) எப்படியாவது மாநாடு நடக்க வேண்டும்; நாமெல்லாம் ஒன்று கூடவேண்டும்; மனம் விட்டுப் பேச வேண்டும்; நம் உரிமைகளை நாம் போராடிப் பெற வேண்டும். என்பவைதான் என் உயிர் நோக்கம். மாநாட்டிற்குத் தலைவராக ஒருவரையும் அமர்த்தவில்லை. வரப்போகும் அன்பர்களில் ஒருவர் அங்கேயே தலைவராக அமர்த்தப்பெறுவர். மாநாட்டின் அறிக்கை வேறு பக்கங்களில் அச்சாகியுள்ளது. இம் மாநாடு உ. த. க. மாநாடு அன்று. அதற்கு எதிரானதும் அன்று. விடுதலை நோக்கம் அதில் இணையாமையால் இப்படித் தனி மாநாடாக இதை நடத்த வேண்டியுள்ளது.
மற்றப்படி தமிழகத்தின் எல்லாக் கட்சித் தலைவர்களுக்குமே மாநாட்டின் அழைப்பு அச்சிட்டு விடுக்கப் பெறும். என் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய சிலரை மட்டும் மாநாட்டுச் செயற்குழு உறுப்பினர்களாக, அவர்களைக் கேளாமலேயே, தெரிந்தெடுத்துள்ளேன். விருப்பமில்லையானால் அவர்கள் தங்களுக்குத் தந்த பொறுப்பினின்று விலகிக் கொள்வதாக எனக்கு எழுதலாம். அவற்றை அடுத்த இதழில் அறிவித்து விடுவேன். மாநாட்டுத் தொடர்புடைய பிற செய்திகளைப் பற்றி அடுத்த இதழிலும் எழுதுவேன். நான் உங்களைத் தலைவணங்கி வேண்டிக் கொள்வதெல்லாம் ஒவ்வொருவரும் தவறாமல் மாநாட்டிற்கு வரவேண்டும்; நாம் இனிசெய்ய விருப்பதைப் பற்றி எண்ணம் வேண்டும் என்பது தான்! நேரம் வந்துவிட்டது; படை முகத்துக்கு வந்து சேருங்கள்.
- தென்மொழி, சுவடி :9, ஓலை 12. 1972