வேண்டும் விடுதலை/யாருமில்லை நாங்கள்தாம்!

விக்கிமூலம் இலிருந்து


 
யாருமில்லை; நாங்கள்தாம்!


ண்மையில், தமிழகப்பிரிவினைப் பற்றித் தமிழ் நாட்டின் உள்முகக் கிளர்ச்சி ஒன்று சூடு பிடித்துக்கொண்டு வருகின்றது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாநிலத்தன்னாட்சி முறையை ஆங்காங்கே வலியுறுத்தி வருகின்றார். அவர் கொள்கைக்குச் சில கட்சிகளின் தவைர்கள் வலிவான எதிர்ப்புக் காட்டி வருகின்றார்கள். அந்த எதிர்ப்புகளைத் தற்காலிகமாகச் சரிகட்ட வேண்டியோ, வேறு கரணியம் பற்றியோ தமிழக முதல்வர். தாம் கேட்கும் மாநிலத் தன்னாட்சிக்குப் பல வகையான கொள்கை விளக்கங்களைக் கூறி வருகின்றார். அத்துடன் நம் நாட்டு ஒற்றுமைக்குத்தான் முதலிடம் கொடுக்க விரும்புவதாகவும் தன்னாட்சிக்கு அடுத்த இடந்தான் என்றும் எடுத்துக்கூறித் தாம் கேட்கும் மாநிலத் தன்னாட்சி என்பது தமிழகம் இந்திய ஆட்சியினின்று தனியாகப் பிரிய வேண்டும் என்னும் கருத்தில் கூறப்படுவதன்று மாநிலங்களுக்குத் தன்னிறைவான அதிகாரங்கள் வழங்கப் பெற்று. அவை நாட்டு முன்னேற்றத்திற்கெனத் தன்விருப்பமாகச் செயற்பட வேண்டும் என்னும் வகையில் கூறப்படுவதாகும் என்று தெளிவாக விளக்கியுள்ளார். அதுவுமன்றிப் பிரிவினைக் கோட்பாட்டைத் தம் கட்சி எப்பொழுதோ கைவிட்டுவிட்டது என்றும். எனவே நாட்டில் வேறு சிலரால் எழுதப்பப் பெறும் அத்தகைய கொள்கை முழக்கங்களுக்குத் தம் கட்சி பொறுப்பாகாதென்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இக்கொள்கைக் குழப்பங்களைக் கண்டஎதிர்க்கட்சிகள் சிலவும். இந்திய ஒற்றமை என்னவோ தம்மால்தான் கட்டுண்டுக் கிடப்பதாக எண்ணிப் பெருமிதப்பட்டுக் கொள்ளும் ஒருசில செய்தித்தாள்களும், முதலமைச்சரின் தன்னாட்சிக் கொள்கையைப் பகடி செய்வதுடன், நீறு பூத்தநெருப்பாய்க் கனன்றுக் கொண்டிருக்கும் தமிழக விடுதலையுணர்வையே இழித்தும் பழித்தும் பேசி வரத் தலைப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் மொழியடிப்படையில் தனித்தமிழ்க் கொள்கையையும் அரசியல் அடிப்படையில் தனித்தமிழ் நாட்டுக் கொள்கையையுமே தன் தலையாய கொள்கைகளாக கொண்டுள்ள தென்மொழி, மக்களின் கொள்கைக் குழப்ப இடிபாடுகளுக்கிடையில் சிக்கிய ஓர் உயர்ந்த மாந்த உரிமைக் கோட்பாட்டை விளக்கத் தன்னை அணியப்படுத்திக்கொண்டு முன்வர வேண்டியுள்ளது.

தமிழகத்தின் பிரிவினை எண்ணம் இன்று நேற்று ஏற்பட்டதன்று; ஏறத்தாழ கடந்த ஐம்பது ஆண்டுக்காலமாகவே, தமிழ் நலமும், தமிழர் நலமும் கருதி வருகின்ற தமிழகத் தலைவர்களிடையில் அரசியல் முறைப்படி தமிழகத்தை வடஇந்திய ஆட்சித் தொடர்புகளின்று துண்டித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அரசியல் கருத்துப்படியும். பொருளியல் அடிப்படையிலும், குமுகாய அமைப்பு படியும் அதற்குப் பெருத்த வலிவான கரணியங்கள் பல இருந்தன. இன்னும் இருந்து வருகின்றன. ஆனால் நாடு அப்போது வெள்ளைக்காரனின் கையில் இருந்ததாலும் ஒட்டு மொத்தமாக இந்தியாவுக்கே விடுதலை வேண்டும் என்ற வேட்கை நாடு முழுவதும் பரந்துபட்டிருந்ததாலும், தென்னிந்தியா வடவர் தொடர்பின்று தனியே பிரிக்கபட வேண்டுமென்ற கோரிக்கை வலியுறுத்தப்பெறாமல் வெறும் கருத்தளவிலே மட்டும் ஒப்புக்கொள்ளப் பெற்ற கொள்கையாக இருந்துவந்தது. அக்கொள்கைக்கு அரணாக நின்ற தூண்கள் தமிழகத்தும், ஆந்திரத்தும் கேரளத்தும் கன்னடத்தும் தம் கால்களை ஊன்றிக்கொண்டு நின்றன. அவை அனைத்தும் தங்கள் ஒட்டுமொத்த கொள்கைக்கு இட்டுக் கொண்ட பெயர் திராவிட நாட்டுப் பிரிவினை என்பதே ஆகும். ஆனால் காலச் சிதைவினாலும், காந்தியின் சூழ்ச்சியினாலும் வெள்ளைக்காரன் வடவர்களிடத்தும், முசுலீம்களிடத்தும் இந்தியாவையும் பாக்கித்தானையும் ஒப்படைத்து விட்டுப்போக வேண்டியானது. இதன் பின்னும் இக்கொள்கை மேலும் வலுப்பெற்றுத் தீப்பற்றி எரியலானது. தென்னாட்டு மக்களிடையே குறிப்பாகத் தமிழரிடையே இவ்வெண்ணம் பெரியார் ஈ.வே.இரா. அவர்களாலும் நெய்யூட்டி வளர்க்கப் பெற்றது. பாவேந்தரால் நாட்டுப் பண்ணும் முழங்கப்பெற்றது. ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்துச் சிதைவாலும், கட்சிக் குலைப்பாலும், திராவிட நாட்டுப் போர் முழக்கம் சிறிது சிறிதாகத் தேய்ந்து போனது, திராவிட நாட்டுப் பிரிவினைத் தீ கொழுந்துவிட்டு எரிந்த அந்த நிலையில் அறிஞர் அண்ணா முன்னறிவுடன் ஒரு தவற்றைக் செய்யாமலிருந்திருப்பபாரானால், இந்நேரம் தமிழர்கள் தனித்தமிழ்க் கொடிபறக்கும் தன்னுரிமைத் தமிழ் நிலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பர்; தம் நிலையிலும் பெருத்த முன்னேற்தைக் கண்டிருப்பர்.

ஆனால் தமிழர் இனத்தின் மறுமலர்ச்சி வரலாற்றில் ஏனோ தெரியவில்லை, இப்படியொரு சறுக்கல் ஏற்பட்டு விட்டது. அன்று ஏற்பட்ட சறுக்கலுக்குப் பின் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி அதுவும் தேய்ந்து சிற்றெறும்பாகியதைப் போல் திராவிட நாட்டு விடுதலை முழக்கம், தமிழ்நாட்டு விடுதலை முழக்கமாகத் தேய்ந்து இக்கால் மாநிலத் தன்னாட்சிக் கொள்கையில் வந்து நின்று கொண்டுள்ளது. இனி இந்தச் சிற்றுெம்பும் கூட மேலும் தேய்ந்து ஒரேயடியாக இல்லாமல் போய் விடுமோ என்று எண்ணும் அளவிற்கு, அக்கொள்கைக்குப் பல விளக்கவுரை, விருத்தியுரைகள் சொல்லப் பெற்று, இறுதியில், “நாங்கள் கேட்பது நாட்டுப்பிரிவினை அன்று; அதிகாரப் பிரிவினையேயாகும்” என்று கருத்துரை கூறப்பெறுகின்றது. இனி, இன்னுஞ் சில ஆண்டுகள் போகுமானால் இக்கொள்கையும் போய், நாங்கள் கேட்பது அதிகாரப் பிரிவினை கூட அன்று வருமானப் பிரிவினைதான் என்று முடிவுரை கூறும்படி ஆனாலும் ஆகலாம். அதனால்தான் எதற்காகவோ தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தம் தோளில் சுமக்கப்படாதென்று கூறுகின்ற தன்னாட்சிக் கொள்கைளை, அஃதாவது பச்சையாகச் சொன்னால் பிரிவினைக் கொள்கையை (பிரிவினைத்தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளதென்பது எனக்குத் தெரியும்) தாம் அடிக்கடி போய் வருகின்ற வெளி நாட்டில் எங்காகிலும் அல்லது பறந்து வரும் வழியில் உள்ள கடல் நீரில் எங்காவது தூக்கியெறிந்து விடாமல், எங்கள் தோள்களின் மேல் இறக்கி வைத்துவிட்டு, அச்சமின்றி எங்கும் எவரிடத்தும் எதற்காகவும் சொற்கோட்டமும் உடற்கோட்டமுமின்றிப் போய் வரலாம். என்று வறிக்கொள்ள விரும்புகின்றோம். இந்நிலையில் உயர்திரு. கலைஞர் அவர்களை நான் ஏதோ பகடி பண்ணுவதாக எண்ணிக் கொள்ளக் கூடாது. உண்மையிலேயே சொல்கின்றேன் அவருக்கிருக்கும் பொறுப்பு பெரிது. மேலும் இதுவரை ஆற்றிய பணியும் (!) மிக மிகப் பெரிது அவருக்கு மேலும் பல திறமைகள் இருக்கலாம்! ஆனால் அவற்றை யெல்லாம் செயற்படுத்த நேரமிருக்குமோ இருக்காதோ, எதற்கும் இந்தப் பொறுப்பை அவர் எங்களிடம் ஒப்புவித்துவிட நேரடியாகவே வேண்டிக் கொள்கிறேன். “வேறு எவரெவரோ எழுப்புகின்ற பிரிவினைக் கூப்பாடுகளுக்கெல்லாம் எதிர்க்கட்சிகாரர்களும் மக்களும் எங்கள் மேல் பழி சுமத்துகின்றார்கள்; நாங்கள் பிரிவினைக் கொள்கையை என்றோ விட்டு விட்டோம்; அதில் ஐயப்பட வேண்டா என்று கலைஞர் அவர்கள். இலை மறை காயாகப் பேசியதைப் பார்த்து என் போன்றவர்கள் மனம் மிகவும் புழுங்கிச் சாகின்றது. இதில் என்ன தயக்கம் - இரக்கம் காட்ட வேண்டி வந்தது?

இந்நாட்டில் பிரிவினைக் கொள்கையை உடும்புப் பிடியாக விடாமல் கூறிவருபவர் தமிழர் தந்தை பெரியார் ஒருவர்தாம். அடுத்தபடி ஆதித்தனார். ஏதோ வருமானத்திற்காகக் கொஞ்ச நாட்கள் கூப்பாடு போட்டுப் பார்த்தார். அதன் பின் கூப்பிட்ட குரல் வந்த பக்கம் போனவர் இது வரை திரும்பவே இல்லை; குரல் கொடுக்கவும் இல்லை. அவருக்கடுத்தபடி தமிழ்நாட்டைப் பிரித்தே ஆக வேண்டும் என்று முரண்டு பிடிப்பவர்கள் நாம்தாம்! அஃதாவது தனித் தமிழ்க் கொள்கைக்காரர்கள் தாம் பின் வேறுயார் இருக்கிறார்கள்? எங்களை எதற்குப் பெரியவர்களாகக் காட்டவேண்டும் என்பது கலைஞர் கருத்தோ என்னவோ? ‘யாரோ’ என்று சொல்லியிருக்கிறார் எஃது எப்படியானாலும் இங்குள்ள ஆட்சியாளர்கள் சிலர் சொல்வதைக் கேட்டும், பிரிவினைக் கொள்கையால் இந்தியாவுக்கே ஏதோ பெரிய கேடு வந்து விட்டதைப் போலும், இங்குள்ள தேசியத் (1)தலைவர்கள் சிலர் (அதுவும் திருவாளர் பக்தவத்சல, சுப்பிரமணியன்களை நினைத்தால் எனக்குச் சிரிப்பாக வருகிறது. ஐயோ, பிரிவினையா? 'ஆச்சா, போச்சா' என்று இருப்புச் சட்டியில் ஊற்றிய எண்ணெய் போலவும், எண்ணெயில் இட்டபலகாரம் போலவும் கொதிக்கவும் குதிக்கவும் செய்வதைப் பார்த்தால், இந்திராகாந்தி அம்மையார் யாரங்கே பிரிவினை கேட்பது? ஓ! மானெக்சா... ஓடிப் போய் அந்த முண்டத்தைப் போய்க் கட்டியிழுத்து வந்து பிண்டம் பிண்டமாக அறுத்துப் பிழிந்து எண்ணெயாக்கி எனக்குத் தலை முழுக்காட்டுங்கள்! என்று சொல்லி விடுவது போல ஏன் அஞ்சி அஞ்சித் தொலைக்க வேண்டும்? அப்படியே சொல்லி விட்டால் தான் என்ன கேட்டுப் போகிறது? இக்கேடு கெட்ட ஆட்சியில் உள்ளதை விட இந்திராகாந்தி தலைக்கு எண்ணெயாகப் போனாலும் நல்ல பயனில்லையா? அதுதான் நாங்களே - அதாவது நானே முந்திரிக் கொட்டைத்தனமாக இதைக் கூறவேண்டி வந்தது.

“ஐயா, பொதுமக்களே! (பழைய பாணியில் சொல்வதானால் மகாசனங்களே!) இந்தப் பிரிவினை கிரிவினை என்று கூறுவதுதெல்லாம் வேறு யாருமில்லை’ங்க, நாங்க, தாம் ஆமாம்; உறுதியாகச் சொல்வி விட்டோம். இதிலே ஒளிவு மறைவுக்கே இடமில்லை’ங்க” இங்கு ஒரு வேண்டுகோள்: இந்த என் மனச் சான்றுக்கு வேறுபாடில்லாத கருத்தைத் தினமணி சிவராமன்களும், துக்ளக் இராமசாமிகளும், இன்னும் பேராயக் கட்சித் தேசி.....யங்களும் அப்படியே மொழி பெயர்க்காமல் இந்திரகாந்திக்கு அனுப்பி வைக்கப்பார்களாக)

அடுத்தப்படியாக இன்னொன்றையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நான் அஃதாவது நானும் என்னை (அந்த ஒருவகையிலாகிலும்) பின்பற்ற விரும்புகிறவர்களும் (அப்படி யாராவது இருத்தால், அப்படி இல்லாத விடத்து ‘நான் ஒருவனே’ என்று பொருள் பண்ணிக் கொள்ளும்படி) எதிர்காலத்தில் என் மேல் வழக்குப் போட்டோ போடாமலோ மன்றில் கொண்டுப் போய் நிறுத்தி உசாவப் போகும் நடுவருக்குக் கூறிக் கொள்கின்றேன்) விரும்புவது தமிழக விடுதலையே. (இதில் யாரும் விருத்தியுரை விளக்கவுரை எதிர்பார்க்க வேண்டா) பச்சையான (காய்ந்து போன அன்று) தமிழகப் பிரிவினையே! அதற்குக் காரணங்கள் இவை:

முதலில், பிரிந்து போகும் உரிமை என்றன் பிறப்புரிமை. குடியரசு அமைப்பில் நானும் ஒரு குடி மகன். நானும் ஓர் ஆட்சியின் உறுப்பு. எனக்கு இந்த இந்திய நாட்டு ஆட்சியினின்று பிரிந்து போக வேண்டும் என்ற எண்ணம் வந்ததற்கே இந்த அரசு நான் குற்றவாளி. என்னைக் காட்டாயப்படுத்தி ஓர் ஆட்சியன் கீழ் (அது குடியரசாட்சியாக இருந்தாலும் சரி; வேறு எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி) என்னைக் குடிமகனாகச் செய்து கொள்ள, என்னைப் போல் உள்ள எவருக்கும் உரிமை இருக்கக்கூடாது.

இரண்டாவது, இவ்விந்திய ஆட்சி ஒரு சரியான குடியாட்சி அமைப்பில் அமைக்கப்பெற்ற ஆட்சியன்று. இங்குள்ள குடிமக்கள் எல்லாரும் வரலாற்று முறையாகவும் இன முறையாகவும் மொழி வழியாகவும், தாங்கள் அனைவரும் சமம் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் தங்களை வேறு வேறாகவே இன்னொருவருக்குத் தங்களை உயர்த்தியோ தாழ்த்தியோ, ஆண்டான் என்றோ அடிமை என்றோதான் இன்னும் கூறிக்கொள்கின்றனர். இவ்வாறு வரலாறு, இனம், சமயம், மொழி முதலியவற்றின் அடிப்படையாக உள்ள ஏற்றத்தாழ்வுகளை அறவே களைந்தெறியாமல், அரசியல் அமைப்பு ஒன்றினால் மட்டும் அனைவரும் சமம் என்பதும்; இது குடியரசு என்பதும், ஒரு பெரிய அரசியல் ஏமாற்று ஆகும். இதை என் மனச்சான்று சரியான ஆட்சியமைப்பாக ஒப்புக்கொள்ள மறுக்கின்றது.

மூன்றாவது, இந்நாட்டு மக்களின் ஒட்டு மொத்தமான மூடநம்பிக்கைகளுக்கு என்னால் கட்டுப்பட முடியாது. நான் இவர்களில் ஒருவன் என்பது என் விரும்பமின்றியே பறைசாற்றப்படுகின்றது. அப்படி என்னையறியாமலேயே நான் இவர்களைப் போலப் பகுத்தறிவற்றவனாகவும், திருந்தாத பண்பற்ற மாந்தனாகவும் ஒப்புக்கொள்ளவேண்டியிருக்கின்றது. நான் அல்லது என்னைப் போல் உள்ள தனிப்பட்ட ஒருவன் எவ்வளவுதான் அறிவாலும் பண்பாட்டாலும் உயர்ந்திருந்தாலும், என்னையும் சமய, குலப் பிரிவினைகளால் நெருக்குண்டு அறியாமைச் சேற்றில் அழுந்திக் கிடக்கும் இவர்களுடன் ஒப்பவைத்துக் கூறிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு நான் உட்பட வேண்டியிருக்கிறது. எனவே இம்மக்களிலிருந்து நான் பிரிந்து போகவே விரும்புகின்றேன். அல்லது என்னைப் போல் தன்னுரிமை விரும்பும் மக்களுடன் நான் ஒருங்கிணைய விரும்புகின்றேன். இப்படியிருப்பவர்களின் தொகைக் கேற்ப, ஒரு நிலப்பகுதியை இந்நாட்டிற்குள்ளேயே என் போன்றவர்களுடன் எங்கள் வாழ்விடமாக ஒதுக்கிக் கொள்ளவும் விரும்புகின்றேன்.

நான்காவதாக, நான் சார்ந்துள்ள இந்நாட்டுச் சட்டத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. இச்சட்டம் இங்குள்ள என் போன்ற மக்கள் யாவருக்கும் பொதுவாக இயற்றப் பெற்ற சட்டம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. இதை இயற்றிய ஆறு பேர்களில் நான்கு பேர் இந்நாட்டின் மிகச் சிறுபான்மையராகவும் இங்குள்ள மிகப்பெரும்பான்மை மக்களைக் காலங்காலமாய் ஏமாற்றிக் கொண்டும் அடிமைப்படுத்திக் கொண்டும். அவர்களுக்குள் மேலும் மேலும் ஒற்றுமையும் முன்னேற்றமும் ஏற்படாதவாறு மடமைப் படுத்திக் கொண்டும் உள்ள ஆரியப் பார்ப்பன அஃதாவது பிராமண இனத்தின் காவலர்களாவர். அவர்கள் தங்கள் இனத்தைக் காத்துக்கொள்ள வேண்டியும் பிற இனத்தவர்களைத் தங்கட்கு அடிமைப்படுத்திக் கொள்ள வேண்டியும் தங்கள் முன்னோர்களால் எழுதிவைக்கப் பெற்ற வேத, புராண, இதிகாசங்களைப் போலவும் தங்களுக்கு முற்றும் உகந்ததும் இந்நாட்டிலுள்ள என் போன்ற பிறரை முற்றும் வஞ்சிப்பதும் ஆன 'மனு தரும சாத்திரம்' என்ற வருணாசிரம தர்மக்கோட்பாட்டு நூலை அடிப்படையாக வைத்தும் செய்து கொண்ட நூலே இந்நாட்டில் சட்டம் என்ற பெயரில் நடைமுறைப் படுத்தப்படுவதாக நான் ஐயுறுகின்றேன். அந்த ஐயத்தைப் போக்கும் வரையில் என் வாழ்வுரிமையில் தலையிட இந்த அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது. எனவே நான் நாட்டுப்பிரிவினையை வரவேற்கிறேன். ஐந்தாவதாக, என் தாய்மொழியில் எவ்வளவோ சிறப்புகளிருந்தும், அஃது இந்நாட்டின் தேசிய மொழிகளுள் ஒன்று என்று ஏற்கப் பெற்றும் இம்மொழியில் கல்விகற்றவர்கள் இந்நாட்டில் எங்கும் சென்று அரசினர் பணி செய்ய வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர். இதைவிட இன்னும் அவலமான நிலை என்னவென்றால், இம்மொழியில் படித்தவர்கள் இப்பொழுது நான் வாழும் பகுதியும், என் தாய் மொழி வழங்கும் மாநிலமும் ஆகிய தமிழ்நாட்டில் கூட அரசினர் பணியேற்பதற்கான வாய்ப்புகள் இந்நாட்டு அரசியல் சட்ட அமைப்புகளால் உறுதிப் படுத்தப்பெறவில்லை. இதற்கு நேர்மாறாக இந்த நாட்டின் வடமாநில மொழியான இந்திக்கும் வேற்று இனமொழி படித்தவர்களுக்குமே அரசு அலுவலங்களிலும் பிற துறைகளிலும் வாய்ப்பு ஏற்பட்டு வருகின்றது. இதை என் போன்றவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. இவ்வகையில் மேலோங்கி நிற்கும் இந்தி வல்லாண்மையை 1937 இலிருந்து போராடியும் இன்னும் அகற்ற முடியவில்லை. இங்குள்ள சட்டமன்ற, பாரளுமன்ற உறுப்பினர்களும் இவ்வகையில் என்ன முயற்சி செய்தும் ஒரு முடிவை ஏற்படுத்த முடியவில்லை. என்நாடு அஃதாவது நான் வாழும் இத் தமிழ்நாடு, இவ்விந்திய நாட்டிலிருந்து முழு விடுதலை பெற்றாலொழிய இச்சிக்கலுக்கெல்லாம் வழி பிறக்காதாகையால், நான் தமிழகப் பிரிவினையை முழு மூச்சோடு வற்புறுத்துகின்றேன்.

ஆறாவதாக, இவ்விந்தியக் குடியரசாட்சி மத, இன வேறுபாடற்ற ஆட்சியாகும் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. பெரிய ஆலைகள் திறக்கப்படும் பொழுதும், புதிய புதிய கப்பல்கள், வானூர்திகள், புகைவண்டிகள் முதலியன செயலாற்ற விடுவதற்கு முன்னும், அவற்றிற்கு அரசுச்சார்பில் பூசை வழிபாடுகள் முதலிய மூடத்தனமான செயல்களைக் கைக்கொள்ளுவதிலும், தேவையற்ற சாதி, சமய, புராண, இன ஆரவாரப் பண்டிகைகளைத் தேசியத் திருவிழாக்கள் என்றாக்கி அவற்றிற்கு விடுமுறைகள் விடுவதன் வழி ஏராளமான பொருட்செலவுகளையும், பொழுதுச் செலவுகளையும் வருவித்து, இந்நாட்டு மக்களை மேலும்மேலும் ஏழைகளாகவும் - அடிமைகளாகவும் மூடர்களாகவுமே வைத்திருக்க விரும்புகின்றஅல்லது வைத்திருப்பதைத் தவிர வேறு வகையற்ற ஆட்சியை எப்படி மதவேறுபாடற்ற குடியாட்சி என்று ஒப்புக்கொள்ள முடியும்”; எனவே இத்தகையப் பழைய அடிமைப் பழக்க வழக்க ஆட்சியினின்று என்னையும் நான் பிறந்த மொழி வழங்கும் இந்நாட்டையும் வேறு பிரித்து, அரசியல் பொருளியல், ஆகியவற்றில் சமத்துவம் வாய்ந்ததும், குமுகாயவியலில் சாதி, சமய, வேறுபாடற்ற பொதுமை நிறைந்ததும், மொழியுரிமை பெற்றதும் பண்பாட்டில் தலைசிறந்ததுமான ஓர் ஆட்சியை நிறுவிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஏழாவதாக, ஒரு பெரிய நிலமாக இருப்பதாலும், இந்தியா விடுதலை பெற்று இருபத்தைந்து ஆண்டுகளாக, பெரும்பாலும் வடவர்களே ஆட்சியின் தலைமைப் பொறுப்பைக் கைக்கொண்டு வருவதாலும், ஆட்சி வரலாற்றில் சிறந்ததும், மூத்த நாகரிகம் உடையதும் முதன்மையான மொழிச்சிறப்புடையதும் ஆகிய என் தமிழினத்திலிருந்து ஒருவருக்கும் இதுவரை ஆட்சியின் தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்காமல் ஏமாற்றிவருவதாலும், பொருளியல் நிலையில் இன்னும் என் தாய் மாநிலம் முன்னேறாது இடருற்று வருகின்ற இந்த அவல நிலையை மாற்ற, இவ்விந்திய நாட்டினின்று நாங்கள் விடுதலை பெற்றேயாக வேண்டும் என்ற முழக்கத்தை எப்பொழுதும் வற்புறுத்த அணியமாக உள்ளோம் என்பதை யாவர்க்கும் வெளிப்படையாக மிக மிகப் பச்சையாகக் கூறிக்கொள்கின்றேன். இக்கோரிக்கை வங்காள தேசம் போல் போராடித்தான் நிறைவேற்றப் படவேண்டும் என்பதும், வழக்காடியும் பெற்றுக் கொள்ளலாம் என்பதும் இவ்விந்திய ஆட்சியினரையும், காலத்தையும், இடத்தையும் பொறுத்ததாகும் என்று கூறி முடிக்கிறேன். அதுவரை என் தோள்கள் அமைந்திருக்குமாக!

- தென்மொழி, சுவடி :9, ஓலை 9-10, 1972