உள்ளடக்கத்துக்குச் செல்

வேண்டும் விடுதலை/பிரிவினை தவிர வேறுவழியில்லை

விக்கிமூலம் இலிருந்து


பிரிவினை தவிர வேறுவழியில்லை!


மானமுள்ள தமிழர்களாகிய நாம் ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாட்டின் அரசியல் அமைதி பார்ப்பனரால் சீர் குலைக்கப்பட்டுவிட்டது. ஆரியப்பார்ப்பான் ஒவ்வொருவனும் இன்று நஞ்சைக் கக்கத்தொடங்கிவிட்டான். அரசியல் நிலையிலும் குமுகாய நிலையிலும் அவன் தமிழர்களில் தனக்குகந்தவர்களைத் தேடிப்பிடித்துத் துணையாக்கிக்கொள்ள முனைந்துவிட்டான். பயிற்சிமொழிச் சிக்கல் என்ற பெயரால் பார்ப்பான் தன் இனத்தை ஒன்றிணைத்து வருகின்றான். தமிழர்களிடையே தப்பிப் பிறந்த சில வீடணப் பிரகலாதன்கள், பார்ப்பானின் வீடு தேடிப்போய், அவன் திட்டத்திற்குக் கைகொடுக்க முன் வந்து விட்டனர். தம் காலில் தாமே நிற்கத் தகுதியுடையவர்களாகக் கருதப் பெற்றவர்கள் பார்ப்பான் துணையுடன் தாமிழந்த பட்டம் பதவிகளுக்காகத் தமிழர்களின் அனைத்து நலன்களையும் அடிகு வைக்க முற்பட்டு வருகின்றனர். ஆம், பேராயக் கட்சியின் தன்னலமற்ற ஒரே தலைவர் என்று பெரியார் ஈ.வே.இரா.வால் பாராட்டப் பெற்ற காமராசர் கூடத் தம் பதவி வேட்கைக்காகத் தமிழர் நல எதிரியாகிய இராசாசியுடன் இணைந்து செயலாற்ற முடிவு செய்து விட்டார். 'கல்வியறிவற்ற கருப்புக் காக்கை' என்றும் "அரசியலிலிருந்தே கல்லால்லடித்துத் துரத்தப்பட வேண்டியவர்.' என்றும் எந்தக் காமராசரைப் பார்த்து இராசாசி நேற்றுவரை கூறிவந்தாரோ, அந்தக் கருப்புக் காக்கையுடன் இந்தப் பார்ப்பனக் கிழட்டுக் கழுகு இணையத் தொடங்கி விட்டது. 'காமராசும் நானும் ஒன்றே' என்று அறிக்கைமேல் அறிக்கை விட்டுத் தன் ஆராக் காதலைப் புலப்படுத்தி வருகின்றது.

'காமராசும் நானும் ஒன்றே' என்று கூறும் அந்த ஆரியக் கழுகின் மனநிலையைத் தமிழர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். காமராசும் தாமும் ஒன்று என்றால் எதில் ஒன்று? என்ற கேள்விக்குத் தமிழர்கள் உடனடியாக விடை கண்டுபிடித்தல் வேண்டும். காமராசு என்னும் மரமேறிக் கள்ளிறக்கும் ஒருவரும் இராசாசி என்னும் பூணூல் அணிந்த ஆரியப் 'புரோகிதர்' ஒருவரும் ஒன்றாகிவிட்டனர் என்றால், அதற்கு என்ன பொருள் என்பதைத் தமிழர்கள் விளங்கிக்கொள்ளுதல் வேண்டும். இராசாசியின் குடும்பத்தில் காமராசர் பெண்னெடுத்துக் கொள்ளலாம் என்பது பொருளா? அல்லது இராசாசி இனத்துடன் காமராசரின் இனம் கொள்வினை கொடுப்பினை வைத்துக்கொள்ள ஒப்பந்தம் செய்தாயிற்று என்றும் கருமாதி கல்லெடுப்புகளுக்குப் ‘புரோகிதம்’ பண்ணலாம் என்பதும் பொருளா? அல்லது காமராசரும் பூணூல் அணிந்து கொண்டு ஐயர், ஐயங்கார் என்று பட்டங்கள் சூட்டிக் கொள்ளலாம் என்பதும் பொருளா?- இவற்றில் எந்தப் பொருளின் அடிப்படையில் இராசாசியும் காமராசும் ஒன்றாகி விட்டனர் என்பதைத் தமிழர் எனப்படும் ஒவ்வொருவரும் நன்கு அறிந்துகொண்டே ஆகல் வேண்டும்.

'இராசாசியும் காமராசரும் ஒன்றே' - என்று இராசாசியும் வாயினிக்கக் கூறிக்கொள்ளலாம்; காமராசரும் வயிறு குளிரக் கூறிக்கொள்ளலாம். ஆனால் 'அவர்கள் இருவரும் ஒன்றாக மாட்டார்கள்; அப்படி இருவரும் சேர்ந்து தமிழர்களை ஏதுமறியாப் பொதுமக்களை எப்படியோ ஏமாற்றத் திட்டமிட்டிருக்கின்றனர்' என்பதை மட்டும் அவர்களின் கரவான எண்ணங்களால் ஏமாறி நிற்கும் ஒருசிலர் தவிர, உண்மைத் தமிழர் ஒவ்வொருவரும் சரியாகப் புரிந்து கொள்வார் என்றே உறுதியாக நம்புகின்றோம். காமராசருக்கு வேண்டுமானால் இராசாசியின் நரித்தனம் புரியாமல் இருக்கலாம். அல்லது புரிந்துதான் இருக்கிறது என்று வெளிப்படையாகக் கூறும்ந்துணிவில்லாமல் இருக்கலாம். அல்லது, அவரை ஏதோ ஓர் அரசியல் காரணத்திற்காகத் துணைக்கழைக்கும் நம்பிக்கைக் குறைந்த தன்மையாகவும் இருக்கலாம், ஆனால் இங்குள்ள தன்மானத் தமிழர்கள் அவரைப்போல் புரியாதவர்களும் அல்லர்; துணிவற்றவர்களும் அல்லர் தன்னம்பிக்கை குறைந்த வர்களும் அல்லர். காமராசர் எப்படி தாம் இழந்த அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குத் தம் நேருக்கு நேரான அரசியல் எதிரியைக் கூட தோளுக்குத் தோளிணைய அணைக்க முற்பட்டாரோ, அப்படியே இங்குள்ள தன்மானத் தமிழர்களும், தாம் பெற்ற அரசியல் அதிகாரத்தைக் காப்பற்றிக் கொள்ள தத்தமக்குள்ள கருத்து வேறுபாடுகளையும் மறந்து, தோளோடு தோளிணைந்து போராடத் தெரிந்தவர்கள் என்று கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

வாழ்க்கை என்பது எப்படி வெறுமையாக இல்லாமல் ஓர் இலக்கு நோக்கிய வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்று நாம் சொல்லி வருகின்றோமோ, அப்படியே அரசியல் என்பதும் வெறும் பதவிப் பேராட்டமாக இல்லாமல் அறவியலை நோக்கியே போக வேண்டும் என்பதும் நம் கொள்கை. ஆனால் அரசியல் என்றாலே காற்றடித்த பக்கம் சாயும் கயவாளித் தனந்தான் என்று காமராசரும் இராசாசியும் பொருள் கொள்வார்களானால், நாமும் அதே கயவாளித்தனத்தைச் செய்தேனும் இன்றுள்ள அரசியல் நிலைமையைக் காத்துக்கொள்ள முடியும் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றோம். கண்ணுக்குக்கண்' 'பல்லுக்குப் பல்' - என்பதை மோசே-காலத்து நெறியாக இதுவரை நாம் நினைத்து வந்தோம். ஆனால் அதுதான் கீதையிலே சொல்லப்பெற்றிருக்கும் அரசியல் மாமந்திரம் என்பதாக இராசாசி கூறுவாரானால், அதைக் கடைப்பிடிக்க இராசாசிக்கு மேல் நமக்கும் தெரியும்; அப்படிக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நேரமும் தெரியும்.

ஆனால் இராசாசியும் காமராசரும் இணைந்து ஒன்று சேர்வதற்குரிய காரணத்தை இருவருமே தனித்தனியாகக் கூறுவதிலிருந்துதான், அவர்கள் இருவருக்கும் அரசியலைக் கைப்பற்றுவது நோக்கமில்லை என்றும் அவ்வாறு அரசியலைக் கைப்பற்றும் துணிவு அவர்களுக்கு இல்லை என்றும் நாம் கருத வேண்டியிருக்கின்றது. எனவே அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ஒருங்கே நடுவணரசையும், தமிழக அரசையும் கைப்பற்றிவிடுவார்கள், அந்த நிலையில் நமக்கும் ஏதாவது கிடைக்காதா என்று நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு தமுக்கடித்துத் திரியும் அரசியல் தித்திருக்கக்காரர்களை அவ்வாறு எண்ணி ஏமாறி விட வேண்டா என்று எச்சரிக்கின்றோம்.

இனி, நானும் காமராசரும் ஒன்று. என்று இராசாசி கூறுவதற்குரிய அடிப்படை நோக்கம்தான் என்ன? அவர் அறிக்கைக் கூறுவது இது (தமிழ்ப் படுத்தாமல் அவரின் அம்மாமித்

தமிழிலேயே தருகிறோம் “முதலாவது என் எச்சரிக்கை நாஸ்திக வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பகவானுடைய கருணை இருந்தால் தான் எல்லாக் காரியங்களும் வெற்றி பெறும். கண்ணுக்கு எட்டாத ஒரு பரம்பொருள் பிரபஞ்சத்தையெல்லாம் ஆண்டு வருகின்றது. அந்த ஆதர்சயமான பரம்பொருள் வியக்த ரூபமாக ஸ்ர்வாச்சர்யமயமான ஆகாயத்தில் நம்முடைய பூவுலகத்தைப் பொறுத்தமட்டில் கண்ணைக் கூசும் ஜோதியாக சூரியன் ஜொலிக்கிறான். பௌதீக விஞ்ஞானிகளும் கூட சூரியனுடைய இயல்பை முற்றிலும் அறிந்ததாக சொல்ல மாட்டார்கள். சூரிய பகவான் இந்த பூவுலகத்திலுள்ள ஜீவன்களுக்கெல்லாம் மரம், செடி, கொடி உள்பட எல்லா ஜீவராசிகளுக்கும் தாயும் தகப்பனும் ஆவான். நம்முடைய உயிருக்கு வேண்டிய எல்லாவற்றையும் தரும் தெய்வம் சூரியன். அந்தத் தெய்வத்தின் தேஜஸை தாம் தியானிப்போமாக. பக்தியுடன் தியானித்தால் அது நாம் உள்ளங்களை யெல்லாம் சுத்தமாக்கி நம்முடைய எண்ணங்களை யெல்லாம் நல்ல முறையில் நடத்தும். சூரிய பகவான்தான் நமக்குப் பலம், விவேகம், அன்னம், ஆரோக்கியம், எல்லாம் தரும் தெய்வம், இதுவே மகாமுனிவர் உலகத்துக்குத் தந்த காயத்ரீ மந்திரம். சூரிய பகவானுக்கு நாம் செலுத்தும் பக்தி. நம்முடைய நோக்கங்கள் எல்லாம் வெற்றி பெறச் செய்வதாக இந்த மாநாட்டில் சுருக்கமாக நான் சொல்லும் செய்தி என்னவென்றால் இது முதற்கொண்டு நானும் காமராசரும் ஒன்று என்பதை உணர்வீர்களாக தேசம் அபாய நிலையில் இருக்கிறது. நாம் இருவரும் தேசத்தின் நலனுக்காக ஒரு நுகத்தடியின் கீழ் வண்டியை இழுத்துச் செல்வோமாக. எங்களுடன் உழைப்பவர்கள் எல்லாருக்கும் என்னுடைய ஆசீர்வாதம்”

எப்படி, அறிக்கை? ‘சத்வேத சதஸுக்கோ சூரிய பகவானின்’ கோடியார்ச்சனைக் கும்பாபிஷேகத் திருவுத்ளலவத் 'திற்கோ’ விடுக்கப்பெற்ற 'ஸூர்ய நாம ஸங்கீர்த்தனம்' அன்று இது, ஓர் அரசியல் மூதறிஞர் (!) என்று விளம்பரப்படுத்தப்பெறும் பூணூல் அறுக்காத, ஒரு ‘சுத்த' வைதீக' ஆரிய 'பிராமண'ராகிய இராசாசி என்னும் ஓர் அரசியல் கட்சியின் வழிகாட்டி, அண்மையில் சேலத்தில் கூட்டப்பெற்ற அவரது கட்சி மாநாட்டிற்கு விடுத்த செய்தி!

இப்பொழுது சொல்லுங்கள். அவர் அரசியலைப் பற்றி ஏதாவது கவலைப்படும் செய்தி இதில் எங்காவது வருகின்றதா? அல்லது ‘இந்நாட்டு மக்களெல்லாம் அறியாமையிலும் வறுமையிலும் சிக்கித் தொல்லைப்படுகின்றனர். அவர்களை மீட்பதற்கு எவரும் முன்வரவில்லை. நானும் காமராசரும் இந்நாள் வரையிற் பிரிந்திருந்தோம், ஆனால் இன்றைய மக்களோ நாளுக்கு நாள் முன்னேற்றம் அடையாமலேயே இருக்கின்ற நிலையைப் பார்க்கின்ற பொழுது, நாங்கள் இருவரும் பிரிந்திருப்பது எனக்குச் சரியாகப்படவில்லை; எனவே ஒன்று சேர்ந்து, மக்களெல்லாரும் தாங்கள் தாங்கள் கற்பித்துக்கொண்ட குல, இன வேறுபாடுகளை அறவே நீக்கிக் கொள்ளவும், சம வாய்ப்புடன் கல்வி கற்கவும் நாட்டு நலன்களை ஒருமித்து நுகரச் செய்யவும் பாடுபடுவோம். அதற்கு முன்னோடித்தனமாக இதோ பாருங்கள் என் மேனியிலிருந்த பூணூலைக் கழற்றி யெறிந்துவிட்டேன், விட்டு வைத்திருந்த ஓரிரண்டு வெள்ளை மயிர்களையும் பிடுங்கி எறிந்து விட்டேன்: இன்றிலிருந்து நானும் காமராசரும் ஒன்றே! - என்ற முறையில் இவ்வறிக்கையில் கூறப் பெற்றிருக்கின்றதா? இல்லையே! பின் காமராசரும் தாமும் ஒன்று என்று மக்கள் ஏன் கருதிக்கொள்ள வேண்டும் என்று இராசாசி குறிப்பிட்டிருக்கிறார் என்று கேட்கின்றீர்களா? மக்களே, தேசம் அபாயநிலையில் இருக்கின்றது, அஃதாவது நாஸ்திக வலைவிரிக்கப் பெற்றிருக்கின்றது. அதில் சிக்கிக்கொள்ளாதீர்கள். அதில் சிக்காமல் இருக்க வேண்டுமானால், சூரிய பகவானைக் காயத்ரீ மந்திரத்தால் பக்தி செய்து உங்களைச் சுத்தமாக்கிக் கொள்ளுங்கள். காயத்ரீ மாந்திரம் தெரியவில்லை என்று கவலைப்படத் தேவையில்லை என் ஜாதிக்காரர்கள் அங்கங்கே இருக்கிறார்கள்; இதோ என் பக்கத்தில் உள்ள கருப்புக் காக்கை காமராஜை நான் காயத்ரீ மந்திரத்தால் ஆசீர்வாதம் செய்து சுத்தப்படுத்தி விட வில்லையா? அப்படியே சுத்தப்படுத்துவார்கள், நீங்களும் உடனே சோப்பு சீப்பு என்று நன்றாக போட்டு 'ஸ்நானம்' பண்ணாமலேயே சுத்தமாகி விடுவீர்கள் என்று பச்சையாகப் பொருள் படும்படியும் 'இத்தகைய நம் இனக்காப்பு வேலைகளுக்காகவே காமராஜை விபீஷணத் தலைவரைத் துணையாக்கிக் கொண்டுள்ளேன்; அவரும் இனிமேல் என் சொற்படி நடப்பதாக உறுதி, கொடுத்துள்ளார்’ என்றும் அவர்களுக்கு விளக்கியிருக்கிறார். அந்தப்பொருளைத் தவிர அந்த அறிக்கையில் வேறு என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பதை எந்தச் சுதேசமித்திரனோவது, 'தினமணி'யாவது 'கல்கி'யாவது 'ஆனந்த விகட'னாவது 'துக்ளக்'காவது அல்லது எந்த வீபிடணப் பிரகலாதனாவது விளக்கிக் கூற முடியுமா?

இராசாசி என்ன 'சூரியபகவானு'க்குத் தாத்தாவா? அல்லது பெயரனா? அல்லது புரோகிதனா? சூரியன் 'ஜகஜ்ஜோதியாக' ஜொலிப்பது, மூதறிஞர் (!) இராசாசி சொல்லித்தான் உலகத்திற்குத் தெரியுமா? 'அவன்தான் இந்தப் பூலோகத்திலுள்ள ஜீவன்களுக்கெல்லாம், மரம், செடி கொடி உட்பட எல்லா ஜீவராசிகளுக்கும் தாயும் தகப்பனும் ஆவான்’ என்றால் அவன் பிள்ளைகளாக உள்ள நமக்குள் ஏன் பூணூல் தன்மையும் பூணூல்லற்ற தன்மையும்? பூணூல் போட்ட பார்ப்பனப் புரோகிதர்கள் எந்தச் சூரியனுக்குப் பிறந்தவர்கள்? போடாதவர்களு எந்தச் சூரியனுக்குப் பிறந்தவர்கள்? சூரியபகவான்தான் நமக்குப் பலம், விவேகம். அன்னம் ஆரோக்கியம் எல்லாம் என்றால், சீனனுக்கும், உருசியனுக்கும், அமெரிக்கர்க்கும் வேறு சூரிய பகவானா இவற்றைக் கொடுத்துவருகின்றான்? காயத்ரீ மந்திரத்தால் தினம் 'பக்தி செலுத்தித்தியானித்து' அவன் தேஜஸை பெறவிரும்பாத அவர்களுக்கு, இந்த இராசாசியின் தாத்தாவான சூரிய பகவான் எதற்காக நம்மை விடப் பலம், விவேகம், அன்னம் ஆரோக்கியம் முதலிய எல்லா நலன்களையும் தர வேண்டும்? நாள்தோறும் ஆயிரக்கணக்கான பிராமணப் 'புரோகிதர்கள் பல்லயிரக் கணக்கான நீர் நிலைகளில் நின்று கொண்டு காலையும் மாலையும் காயத்ரீ மந்திரத்தைச் சொல்லிப் பக்தியுடன் தியானிக்’கும் இந்நாட்டில் ஏன் அறியாமையும், பஞ்சமும், பட்டினியும் தாண்டவமாட வேண்டும்? சூரியத் தாத்தாவையே அளந்தறிய முற்படும் அறிவியல் காலத்தில் எதற்காக இந்தப் பித்தலாட்டமெல்லாம்? இராசாசிக்கு மூளைக்குழப்பமா என்ன? நாட்டின் மேலாளுநர் (Governer Genernaral) ஆக இருந்த ஒருவர், பச்சையாகப் புளுகி இந்த அளவில் மக்களை ஏமாற்றுவதா? இந்தக் கொடுமை எந்த நாட்டில் நடக்கும்? இவர் எப்படியோ உளறிக் கொட்டிக்கொண்டு கிடக்கட்டும்! இந்தக் காமராசருக்கு என்ன வந்தது? ஏன் அவருடைய மூளை இப்படி யெல்லாம் போனது? தெளிவான கொள்கையும், கருதியதைச் செய்யும் துணிவும், வல்லமையும் படைத்தவராகக் கருதப்பெற்று வந்த அவருக்கு ஏன் இந்த இழிநிலை வந்தது.?

'அவரவர் தலையெழுத்துப்படி படிக்கட்டுமே' என்று அன்று இராசாசி கூறியதற்கு வெகுண்டெழுந்து, "தலையெழுத்தா ? எவனதை எழுதினான் கொண்டுவா; நான் அதை மாற்றி எழுதுகிறேன்" என்று ‘67 தேர்தலில் கூட்டந்தொறும் முழங்கி வந்தவர் ‘1972 வருவதற்கு இரண்டாண்டு இருக்கையிலேயே, தம் தலையெழுத்தை மாற்றி யெழுதும்படி ஏன் இராசாசியிடம் போய்த் தலையைக் குனிந்து கொடுத்தார்? தூ..! இதுவும் ஓர் அரசியல் பிழைப்பா? இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற வீடணப் பிரகலாதன்களான பக்தவத்சல, சுப்பிரமணியன்களை ஏற்கனவே தலையாய 'சீடர்’ களாக ஏற்றுக் கொண்டிருக்கும் இராசாசியிடமே காமராசரும் மூன்றாந்தரச் சீடராகப் போய்ச் சேர்ந்ததைப்போல 'நல்லடிமைக் கதை' தமிழக வரலாற்றிலேயே இல்லை என்ற குறைபாட்டைக் காமராசர் நீக்க முற்பட்டு விட்டாரா? இத்துணை இழிவோடு அரசியல் நடத்தி எந்த மக்களை வாழ வைத்து விட உறுதி பூண்டுள்ளது இவ்வுருவம்? இந்த அரசியல் முல்லை (கற்பு) மாறித்தனங்களை யெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு. இத்தகைய அரசியல் நாடகமாடிகள் இக்கால் தலையாய அரசியல் சிக்கலாக்கி வாழ்வு நடத்த முற்பட்டிருக்கும் பயிற்சி மொழித் திட்டத்தைப் பற்றி சிறிது பார்ப்போம்.

தமிழக அரசின் பயிற்சி மொழித் திட்டம், மிகத் தெளிவானதும் செப்பமானதுமாகும். இஃது ஏற்கனவே இருந்த பேராயக் கட்சியின் ஆட்சியிலேயே உறுதிப்படுத்தப் பெற்ற திட்டமேயாகும். இத் திட்டச் செயற்பாட்டில் எவ்வகைப் பதற்றமோ, உணர்ச்சி வயப்பட்ட நிலையோ இன்றுவரை ஏற்பட்டதே இல்லை. இதுபற்றிய இன்றைய அரசின் கொள்கை இது:

(1) தாய்மொழி (அஃதாவது தமிழ் நாட்டிற்கு) தமிழ், நாட்டு மொழி (அஃதாவது இந்தியாவில் மிகுதியான பெயர்களால் பேசப்படுவதாக நடுவணரசின் வெறியர்களால் விளம்பரப்படுத்தப் பெற்ற) இந்தி, உலக மொழியாகவும், அறிவியல் மொழியாகவும் உள்ள ஆங்கிலம் என்னும் மும்மொழித் திட்டம் தேவையற்றது. தமிழும் ஆங்கிலமுமே போதும் என்ற இரு மொழிக் கொள்கையே சரியான கொள்கை என ஏற்கப் பெற்றது. இக்கொள்கையையே மக்கள் ஏற்றுக்கொண்டனர். என்பதற்கு மும்மொழித் திட்டத்தை ஏற்றுக்கொண்ட பேராயக் கட்சியைத் தேர்தலில் தோல்வியுறச் செய்து மூலையில் அமர வைத்ததே சான்றாகும்.

(2) தாய்மொழியாகிய தமிழைப் பல வகையிலும் ஆங்கில மொழிக்கு ஈடான மொழியாக ஆக்குவதும், உலகத் தொடர்புக்குரிய ஆங்கிலத்தில் போதிய அளவு திறமையுள்ளவர்களாக எதிர்காலக் குடிமக்களாகிய மாணவர்களை ஆக்குவதும்.

(3) இதுவரை ஆங்கில மொழிவழியாகப் பயிற்றுவித்தமையைப் படிப்படியாக மாற்றித் தமிழில் அறிவியலையும் பிற துறைகளையும் கற்பிப்பது.

ஆங்கிலத்தில் திறமையுள்ள மாணவர்களும் மாணவர்கள் விரும்பினால் ஆங்கிலமொழியிலேயே கல்லூரிக் கல்வியைக் கற்பிப்பது, ஆங்கிலத்தில் திறமைக்குறைவான மாணவ மாணவிகள் மட்டும் அவர்கள் தாய் மொழியாகிய தமிழிலேயே கற்கலாம்.

இத்திட்டங்கள் தாம் தமிழக அரசின் பயிற்சிமொழித்திட்டம் இத்திட்டத்தில் எல்லாரும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். கல்வி என்பது ஒரு மொழியைக் கற்பது அன்று ? ஏதாவது தாய் மொழி வழியே உலக அறிவைப் பெறுவதே கல்வி. எனவே உலகத்திலுள்ள எல்லாத்துறை அறிவையும் தமிழ் மொழியாகிய தாய்மொழி வழியாகவே கற்பிக்க வேண்டித் தமிழ்மொழியில் அதற்குரிய கலைச் சொல்லாக்கம் நடைபெற்றுக் கல்லூரிக் கல்விக்கான பாடநூல்களை ஆக்கும் வேலையில் கவனம் செலுத்தப் பெற்று, இத்திட்டம் நன்றாகச் செயல்பட ஊக்கமளிக்கப் பெற்று வருகின்றது. ஆங்கில மொழியில் வழிவழியாகத் திறம்பெற்று வருபவர்கள் இராசாசி இனத்துப் பார்ப்பனர்களே என்பதாலும், அவர்கள் ஆங்கிலக் கல்வி கற்று எத்துறையிலும் நம் தமிழ் மாணவர்களை விஞ்சக்கூடும் என்று கண்டதாலும் , தமிழ்வழிக் கல்வி கற்கும் தமிழ் மாணவர்கள் வாழ்க்கை நிலையில் பின் தங்கிவிடக் கூடாதே என்பதற்காகத் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்லூரிக் கல்வி கற்றவர்களுக்கே, தமிழை ஆட்சி மொழியாகக்கொண்ட அரசினர் அலுவல் துறைகளில் முதலிடம் தருவது என்று அரசு முடிவு செய்தது. இதில் இராசாசி இனத்தார் கொதிப்படைவதிலேனும் கொஞ்சம் பொருளுண்டு. காமராசர் கொதிப்பதற்கு என்ன பொருள் என்று நமக்கு விளங்கவில்லை. ஆரியப் பார்ப்பனர்களே எல்லா மாநிலங்களிலும் எல்லா நாடுகளிலும் எல்லாத் துறைகளிலும் புகுந்து வாழ்நலன்களை நுகர்ந்து கொண்டு வருகையில், தமிழ்வழிக் கல்வி பயிலும் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டில் கூட வாழ்வதற்கு வழி செய்யாத நிலை எப்படிச் சரியாகும்? இதைப் புரிந்து கொள்ளாத தமிழ்மாணவர் சிலரும், பார்ப்பன மாணவர்களுடனும் காமராசர் போன்ற காட்டிக் கொடுப்பான்களுடனும் சேர்ந்து கொண்டு தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கே வளங்கொடுக்கும் இத்திட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? பதற்ற மடைந்துள்ள மாணவர்கள் நன்கு எண்ணிப்பார்க்க வேண்டுகின்றோம்.

இத்தகைய குழப்பங்களை யெல்லாம் நோக்குகையில் பார்ப்பனர்களுடன் இணைந்து வாழும்வரை - அவர்களின் தனி நலத்திலேயே முழுக் கவனமும் செலுத்திக் கோடிக் கோடியாகப் பொதுப் பணத்தைக் கொட்டி அழும் நடுவணரசுடன் இணைந்து போகும் வரை நம் மக்களுக்கென்று எந்தத் தனித் திட்டத்தையும் வகுத்துக் கொள்ளக்கூட நமக்கு உரிமை கிடையாது என்றே எண்ண வேண்டியுள்ளது. கோயில் பூசனை முறைகள் போன்ற ஒரு சில துறைகளில் ஏற்படும் திருத்தங்களுக்குக்கூட எதிர்ப்புக் காட்டும் இப்பார்ப்பனர் சலசலப்புக்கெல்லாம் இனி விடை சொல்லிக் கொண்டிருக்க தேவையில்லை என்றே நாம் கருதுகின்றோம்.

எனவே நம் தமிழக அரசினரும் தன்மானம் மிக்கத் தமிழர்களும் இனி தமிழகப் பிரிவினைக்குப் போராடித்தான் தீரல் வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது. எனவே தன்மானத் தலைவர் பெரியார் அவர்கள் விடுதலைப் போராட்டத்தை உடனடியாகத் தொடங்கி, எதிர்காலத் தமிழ் மக்களையேனும் முழுவுரிமை பெற்று தமிழ் நாட்டில் வாழச் செய்வதற்கு வழிவகுக்க முன் வருதல் வேண்டும் என்று தலைவணங்கிக் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு போராடத் தொடங்கின் நாமும் எம்மைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மறவர்களும் அவர்தம் கட்டளைக்குத் தலைவணங்கி, அவர் இட்ட கட்டளையை ஏற்று, எந்தமிழுக்காகவும் இந்நாட்டிற்காகவும் போராடுவோம் என்று சூளுரைத்துக் கூறுகின்றோம். அந்த நல்ல நாள் விரைவில் வருவதாகுக!

- தென்மொழி : சுவடி : 8, ஓலை 7, 1970