உள்ளடக்கத்துக்குச் செல்

1. சிவஞானபோதம்- சூத்திரம்- 01 இன் உரை

விக்கிமூலம் இலிருந்து

மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம்

[தொகு]

1.பொது அதிகாரம்

[தொகு]

பிரமாணவியல்

[தொகு]

சூத்திரம்-01 இன் மாபாடிய உரை

[தொகு]

உரையாசிரியர்: மாதவச் சிவஞானயோகிகள்

[தொகு]

சூத்திரம்- 01

[தொகு]

ஈண்டு வடமொழிச் சிவஞானபோதத்துள் கூறியவாறே பொது, உண்மை என்று இரண்டதிகாரமாகப் பகுத்துக்கொண்டு, பிரமாணம் இலக்கணம் சாதனம் பயன் என நான்கு திறத்தாற் பொருள் இயல்பு உரைப்பான் எடுத்துக்கொண்ட ஆசிரியர், அவற்றுள் முப்பொருளின் வைத்து, முதற்கண் பதி உண்மைக்குப் பிரமாணம் கூறும் முதற்சூத்திரத்துக்கு வார்த்திகமாகிய பொழிப்பு உரைப்பான் புகுந்து, சூத்திரத்தை மொழிபெயர்த்து அருளிச் செய்கின்றார்:-

 அவனவ ளதுவெனு மவைமூ வினைமையிற்|| அவன் அவள் அது எனும் அவை மூ வினைமையின்
றோற்றிய திதியே யொடுங்கிமலத் துளதா|| தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
மந்த மாதி யென்மனார் புலவர். || அந்தம் ஆதி என்மனார் புலவர்.

- எனவரும்.

இங்ஙனம் பாடத்தை மொழிபெயர்த்துக்கொண்டு, என்பது சூத்திரம் எனக்காட்டி, இனி அதன் கருத்துரைக்கின்றார்:-

என்பது சூத்திரம்; என்னுதலிற்றோவெனின், சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாகவுடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல் நுதலிற்று

-எனவரும்.

ஐவகை சங்காரம்:

[தொகு]

சங்காரம் ஐவகைப்படும்; அவற்றுள் முதலாவது, நிவிர்த்திகலையில் அடங்கிய தத்துவ புவனங்களின் சங்காரம்; இரண்டாவது,பிரதிட்டாகலையில் அடங்கிய தத்துவ புவனங்களின் சங்காரம்; மூன்றாவது, வித்தியாகலையில் அடங்கிய தத்துவ புவனங்களின் சங்காரம்; நான்காவது, சாத்திகலையில் அடங்கிய தத்துவ புவனங்களின் சங்காரம்; இறுதியது, சாந்தியதீதகலையில் அடங்கிய தத்துவ புவனங்களின் சங்காரம்.

அவற்றுள், ஈண்டைக்கு ஏற்புடையது இறுதிக்கண்ணதாகலின், ஈண்டுச் சங்காரகாரணன் என்றது, சுத்தமாயா புவனாந்தம் சங்கரிக்குஞ் சங்கார காரணனாகிய பரமசிவனை; அயன் மாலொடுங்கூடக் குணதத்துவத்தின் வைகிப் பிரகிருதிபுவனாந்தஞ் சங்கரிக்குங் குணிருத்திரனை அன்று என உணர்க. என்னை? அவன் பிரகிருதியின் மேற்பட்ட புவனங்கட்குச் சங்காரகாரணன் அன்மையானும், பரமசிவன் இலயம் போகம் அதிகாரம் என்னும் மூன்று அவத்தையினும் முறையே அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூன்று திருமேனி கொண்டு, சத்தன் உத்தியுத்தன் பிரவிருத்தன் எனவும், சிவன் சதாசிவன் மகேசன் எனவும் பெயர்பெற்று நிற்பன் என்றும், இங்ஙனம் தொழிலான் வேறுபட்டதன்றிப் பொருளான் வேறுபாடில்லை யென்றும், பசுவர்க்கத்திற் பிரளயாகலரில் பக்குவமுடையவன் சீகண்ட ருத்திரன் என்றுஞ் சைவ ஆகமங்கள் எல்லாம் ஓதுதலின், மகேசுர மூர்த்தி இறுவாயான திருமேனியே பரமசிவனுக்குச் சுதந்திர வடிவம், ஏனையவை அல்லவென்பது பெறப்படுதலானும் என்பது; இவ்வேறுபாடு உணர்தற்கன்றே பொதுப்படச் சங்காரகாரணனை என்றொழியாது சங்காரகாரணனாயுள்ள முதலையே என விதந்து ஓதியதூஉமென்க.

இவ்வேறுபாடு உணராது மகாருத்திரனாகிய பரமசிவனைக் குணிருத்திரனாக வைத்து எண்ணுவோரை நோக்கி,

 “நம்மவ ரவரே,
மூவரன் றேயெம் பிரானொடு மெண்ணிவிண் ணாண்டுமண்மேல்
தேவரென் றேயிறு மாந்தென்ன பாவந் திரிதவரே”

(திருவாசகம், திருச்சதகம், 4)

- என வாதவூரடிகள் இரங்கிக் கூறிய திருவாக்கும் அறிக.

இன்னும்,

“தேவரில் ஒருவன் என்பர் திருவுருச் சிவனைத் தேவர்
மூவராய் நின்றது ஓரார்”

(சிவஞான சித்தியார், 1-ஆம் சூத்திரம், 49)

- எனவும்,

“தேவராயும் அசுரராயும் சித்தர்செழு மறைசேர்
நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரி கால்நீரும்
மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும்
மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே”

(சம்பந்தர் தேவாரம், திருமுதுகுன்றம், பழந்தக்கராகம், 1)

-எனவும்,

“வரியாய மலரானும் வையந் தன்னை
யுரிதாய வளந்தானும் உள்ளு தற்குஅங்கு
அரியானும் அறியாத கள்ளின் மேயான்
பெரியான்என்(ற) அறிவார்கள் பேசு வோரே.”

(சம்பந்தர் தேவாரம், திருக்கள்ளில், 9)

-எனவும்,

“மாவை உரித்ததள் கொண்டங்கம் அணிந்தவனை வஞ்சர் மனத்திறையு நெஞ்சணு காதவனை
மூவருருத் தனதா மூல முதற்கருவை”

(சுந்தரர் தேவாரம், திருக்கானப்பேர், 7)

-எனவும்,

“படைத்தளித் தழிப்ப மும்மூர்த்திக ளாயினை”

(சம்பந்தர் தேவாரம், திருப்பிரமபுரம், திருவெழுகூற்றிருக்கை, 4)

-எனவும்,

“தேவர்கோ அறியாத தேவதேவன் செழும்பொழில்கள் பயந்துகாத்து அழிக்கும் மற்றை
மூவர்கோ னாய்நின்ற முதல்வன்”

(திருவாசகம், திருச்சதகம், 30)

-எனவும்,

“முந்து நடுவு முடிவு மாகிய மூவர் அறியாச்
சிந்துரச் சேவடி யானை”

(திருவாசகம், குயிற்பத்து, 5.)

- எனவும்,

“முந்திய முதனடு விறுதியு மானாய் மூவரு மறிகிலர்”

(திருவாசகம், திருப்பள்ளியெழுச்சி, 8.)

- எனவும்,

“அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
அரனாய் அழிப்பவனுத் தானே”

(திருக்கைலாய ஞானவுலா, 9.)

- எனவும்,

“வீரனயனரி . . . . யாரு மறியா வகையெங்களீசர் பரிசுகளே”

(பொன்வண்ணத்தந்தாதி, 65.)

-எனவும், வரும் திருவாக்குக்களானும் ஓர்ந்துணர்க. இதுவே சுருதி, மிருதி, புராணம், இதிகாசம் எல்லாவற்றிற்குங் கருத்தென்பது, சிவதத்துவ விவேகமுடையார் (13-ஆம் சுலோகம்) “குணாதீதன்” என்னுஞ் சுலோகத்திற் கடாவிடைகளான் விரித்துக்காட்டியவாற்றான் அறிக.

இங்ஙனமாயினும், சீகண்டருத்திரன் அயன்மால்போலச் சகலரின்றிப் பிரளயாகலரிற் பக்குவம் உடையோனாய்க் கட்டுநீங்கி முத்திபெற்ற கடவுளாகலானும், பரமசிவனுக்குரிய எல்லாப் பெயர்களும் வடிவமுந் தொழிலும் பெற்றுடையவனாகலானும், சைவாகமங்களை அறிவுறுக்குங் குரவனாகலானும், அயன்மாலிருவர்க்கும் மேலாய்ச், சைவத்தின் எய்திச் சமயதீக்கை பெற்றோரால் வழிபடப்பபடும் கடவுளாயினான் என்க.

இங்ஙனம் கருத்துரைத்துக் கண்ணழித்துரைப்பான் புகுந்து ஈண்டு முதற்கண் உரைவகையாமாறு உணர்த்துகின்றார்:-

இதன் பொழிப்பு உரைத்துக் கொள்க

-எனவரும்.

கண்ணழித்துரை:

[தொகு]

இச்சூத்திரத்தின் பிண்டப்பொருள் முன்னர்க் கண்ணழித்துரைக்கும் உரைபற்றி உரைத்துக்கொள்க என்றவாறு. எனவே, பொழிப்புரை இங்ஙனம் இருவகைப்படும். அவற்றுள், கண்ணழித்துரைக்கும் பொழிப்புரை மாத்திரையே யாம் ஈண்டு உரைக்கின்றாம். பிண்டமாகக் கொண்டு உரைக்கும் பொழிப்புரை இதுபற்றி உணர்ந்துகோடல் எளிதாம் ஆகலின், அஃது யாம் உரைக்கின்றலம் என மாணாக்கர்க்கு அறிவுறுத்தவாறாயிற்று.

இங்ஙனம் பொழிப்புரை இருவகைப்படும் என்பது,

“பொழிப்பெனப்படுவது பொருந்திய பொருளைப்
பிண்டமாகக் கொண்டுரைப் பதுவே” (திவாகரம், ஒலிபற்றிய பெயர்த்தொகுதி, சூத்திரம்,90.)

- எனவும்,

“பாடங் கண்ணழி வுதாரண மென்றிவை
நாடிற் றிரிபில வாகுதல் பொழிப்பே” (தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம், நச்சினார்க்கினியருரை மேற்கோள், பக்கம், 12.)

-எனவும் ஓதியவற்றான் அறிக.

இஃது ஏனைச் சூத்திரங்களினும் உய்த்துரைத்தற் பொருட்டு முன்வைக்கப்பட்டது. பிண்டப்பொருளெனினும் பதப்பொருள் எனினும் ஒக்கும்.

உரைத்துக்கொள்க என்புழிக் ‘கொள்’ என்பது, தற்பொருட்டுப் பொருட்கண் வந்த விகுதியாய்ப், பகுதியோடியைதற்குரிய துச் சாரியை பெற்று உரைத்துக்கொள் என நின்றவழி, அதுவும் பகுதித்தன்மைப்பட்டு மேல்வரும் வியங்கோள் விகுதி ஏற்றுத் தற்பொருட்டுப் பொருள் இனிது விளங்குதற்பொருட்டு உரைக்க என்னும் பொருட்டாய்நின்றது. இது சூத்திரவிருத்தியுள் உரைத்தாம். தொல்காப்பிய சூத்திரவிருத்தி, 41, 42-ஆம் பக்கம்). ஆண்டுக் காண்க.

இங்ஙனம் ஆசிரியர் ஆணைதந்தமையிற் கண்ணழித்துரை பற்றிச் சூத்திரத்திற்குப் பதப்பொருள் கூறுதும்.

“அவன் அவள் அது எனும் அவை மூ வினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்”

-என்பது, ஆண் பெண் அலி என்றாற் போலும் உலகத்தொகுதி, தோற்றம் நிலை இறுதி என்னும் முத்தொழில் உடைமையான், ஒருவனால் தோற்றப்பட்டு நின்று உள்ளதேயாம். அஃதேல் அஃது யாவனின் உளதாம் எனின், தான் ஒடுங்குதற்கு நிலைக்களமான கடவுளினின்றும் உளதாம். ஒடுங்கியவாறே ஒழியாது மீள உளதாவது எதனால் எனின், சகசமான ஆணவமலந் தீர்ந்து ஒடுங்காமையான் உளதாம். இங்ஙனமாகலின், சங்காரத் தொழிலைச் செய்யுங் கடவுளே முதற்கடவுள் என்று கூறுவர் அறிவுடையோர் என்றவாறு.

எனும் என்பது இடைச்சொல்லடியாய்ப் பிறந்த பெயரெச்சமாய், இவ்வாறு என்னும் பொருள்குறித்து நின்றது. வடமொழிச் சூத்திரத்தில் “ஆதி” என்றதும் அப்பொருட்டு. அவை என்பது தொகுதி; அஃறிணைப் பன்மைச் சுட்டுப் பெயரெனக் கொள்ளின், உள எனப் பிரித்துப் பயனிலையாக்கித் தாம் என்பது அசையாகக் கொள்க. வினைமை - வினையுடைமை. உடைமை - உடைத்தாந்தன்மை.

அவ்வக்காலத்தன்றி மூவினையும் ஒருகாலத்துப்படுதல் கண்டிலம் என்பாரை நோக்கித் தன்மையின் வைத்து ஓதினார்.

தோற்றிய எனப் பிறவினை வாய்பாட்டான் ஓதுதலின், அதற்குரிய வினைமுதல் வருவித்து உரைக்கப்பட்டது.. தோற்றிய என்புழிப் படுசொல் தொக்குநின்றது, “இல்வாழ்வான் என்பான்” திருக்குறள், 5-ஆம் அதிகாரம், இல்வாழ்க்கை, 1.)என்புழிப்போல. திதிப் படும் உலகத்தைத் திதி எனவும், அந்தத்தைச் செய்யும் கடவுளை அந்தம் எனவும் உபசரித்தார்.

காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், தோற்றிய திதியே யொடுங்கி உளதாம் என உலகின்மேல் வைத்துக் கூறினார். சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்றதும் இக்கருத்தே பற்றி என்க. “தோற்றுவான் ஒருவன் உளன்; அவன் ஒடுக்கி உளதாக்குவன்” எனக் கடவுளின் மேல் வைத்து ஓதிய வடமொழிச் சூத்திரத்திற்கும் தாற்பரியம் இதுவே எனக் கொள்க.

காரம் தேற்றம். ஒடுங்கி என்பது பெயர். ஒடுங்கி என்புழி இன்னுருபும், மலத்து என்புழி ஆன் உருபுந் தொக்கு நின்றன. ஆம் என்பதனை முன்னும் கூட்டுக. என்மனார் என்பது, செய்யுண்முடிபாயதோர் ஆரீற்று முற்றுச்சொல். மன் எதிர்கால இடைநிலை. அது “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே” (தொல்காப்பியம், சொல்லதிகாரம், கிளவியாக்கம், 1.) என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் உரையானும் அறிக.

ஈண்டுப் புலவர் என்றது அளவையின் இயல்பு உணர்ந்தோரை.

அதிகரணம்

[தொகு]

இதனுள் அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின் என்பது ஓர் அதிகரணம்;

தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம் என்பது ஓர் அதிகரணம்;

அந்தமாதி என்பது ஓர் அதிகரணம்; ஆக மூன்று அதிகரணத்தது இச்சூத்திரம் என்று உணர்க. இம்மூன்றும் ஒன்றற்கொன்று முறையே ஏதுவும் பயனுமாய் ஒரு பொருள்மேல் வருதலின், ஒரு சூத்திரத்தாற் கூறினார். வருஞ்சூத்திரங்களினும் இவ்வாறே கண்டுகொள்க.

தன்னாற் கூறப்படும் பொருளும், அதன்கண் ஐயப்பாடும், அதற்குப் பிறர்கூறும் பக்கமும், அதனை மறுத்துக் கூறும் சித்தாந்தத் துணிபும், இயைபும் என்னும் இவற்றிற்கு நிலைக்களம் ஈண்டு அதிகரணம் எனப்படும். இவற்றுள் இயைபு, நூலியைபும் அதிகாரவியைபும், ஓத்து இயைபும், பாதவியைபும், அதிகரணவியைபும் என ஐவகைப்படும். அவையெல்லாம் ஆண்டாண்டுக் காட்டுதும்.

இவற்றை வடநூலார் முறையே விடயம், சம்சயம், பூர்வபக்கம், சித்தாந்த நிர்ணயம், சங்கதி என்பர்; சீகண்டபாடியம் முதலதிகரண ஆரம்பத்தினும் காண்க.



முதல் அதிகரணம்

முதல் அதிகரணம்

[தொகு]

இம் முதல் அதிகரணத்தாற் கூறப்படும் பொருளாவது, மேற் கருத்தாவின் உண்மை சாதித்தற் பொருட்டு உலகிற்கு முத்தொழில் உண்மை சாதித்தலாம்.

அதற்கு அவை உளவோ இலவோ என்று இரட்டுறத் தோன்றும் ஐயப்பாடு.

ஈண்டு மீமாஞ்சை நூலாரும், உலகாயத நூலாரும், உலகம் தோன்றுதலும் அழிதலும் இன்றி என்றும் இவ்வாறே நிலைபெறுவதாகலின், உலகம் காரியப் பொருள் ஆதல் இல்லை எனவும், எனவே இதுகொண்டு கருத்தாவின் உண்மை சாதித்தல் “முயல் கோடுடைத்து, ஆன் வயிற்றுப் பிறத்தலான்” என்பதனோடு ஒக்கும் எனவும் கூறுவர்.

அவருள் மீமாஞ்சை நூலார் கூறும் மாறாவது:- உலகம் தோன்றி நின்று அழியும் என்பது காட்சி அளவையாற் பெறப்படுவதும் அன்று; அவிநாபாவம் ஆகிய ஏதுக் காணாமையின், வழியளவையாற் பெறப்படுவதும் அன்று; வேதத்துள் கூறப்படுதலாற் பெறுதும் எனின், வேதத்தில் “நடாத்துக,” “நிறுவுக,” “செய்க,” என்றாற்போலத் தொழிற்படுத்தும் வாக்கியங்களே சொற்பொருள் உணரும் வேட்கையாளர்க்கு அங்ஙனம் ஏவுவோர் சொற்கேட்டு இயற்றும் தொழிலானே அவ்வச் சொற் பொருள் உணர நிற்றலிற் பிரமாணமாம்; அவ்வாறன்றிப் பொருள் இயல்பு கூறும் வாக்கியங்களாற் சொற்பொருள் உணரப்படாமையின் அவை பிரமாணம் ஆகாவாயினும், தொழிற்படுத்தும் வாக்கியங்கட்கு யாதானும் ஒருவாற்றான் உபகாரம் ஆதலுடைமையான் உபசரித்துப் பிரமாணமெனக் கொள்ளப்படும் ஆகலான், அது பற்றி உரையளவையாற் பெறப்படும் என்பதும் இன்று; ஆகலான், உலகிற்கு முத்தொழில் உண்மை பெறப்படாது என்பதாம்.

இவ்வாறு ஆசங்கை நிகழ்ந்தவழி, அதனை நீக்குதற்குக் கண்ணழித்து எடுத்துக்கொண்ட மேற்கோள்:-

ஈண்டு, உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்து என்றது எனவரும்.

ஈண்டு என்றது, இவ்வதிகரணம் மூன்றனுள்வைத்து முதற்கண் என்பதாம்.

அவயவப் பகுப்பு உடைமையான் முத்தொழில் உடைமை துணியப்படும் என்று உணர்த்துவார் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் எனச் சூத்திரத்தின் ஓதியவாறே உடம்பொடுபுணர்த்து ஓதினார். எனவே, “உலகம் தோன்றி நின்று அழியும், அவன் அவள் அது என்று இவ்வாறு பகுக்கப்படும் அவயவப் பகுப்பு உடைமையின், ஆடைபோலும்” என்னும் அநுமானத்தானே மூவினையுடைமை துணியப்படும் என்பதாயிற்று.

சொற்பொருள் உணர்ச்சி, தொழிற்படுத்தும் சொன்மாத்திரையானே துணியப்படும் என்னும் வரையறை இன்றித், தாய் தந்தை முதலியோர் இச்சொற்கு இதுபொருள், இச்சொற்கு இதுபொருள்எனத் தெரிவித்தலானும், நிகண்டு நூல் முதலியவற்றானும் துணியப்படும் ஆகலின், அதுபற்றிப் பொருளியல்பு கூறும் வாக்கியங்கள் பிரமாணம் அல்ல என்றல் பொருந்தாமையின், உரையளவையே பிரமாணமென்று ஓத அமையும்; அமையுமாயினும், அவர் மதமே பற்றி அவரை மறுத்தற் பொருட்டு மூவினையுடைமையும் வழியளவையாற் சாதித்தார்.

ஈண்டு அவயவம் என்றது, ஆடையின் ஏகதேசமாய்த் தனித்தனிப் பிரிக்கப்படும் நூல்போல ஒரு பொருளின் ஏகதேசமாய்த் தனித்தனி பிரிக்கப்படும் தகுதியுடையவற்றை. நிலம் மலை கடல் முதலியவற்றில் ஏகதேசமாகிய மண் சிலை நீர் முதலியன தொடுதல் போழ்தல் முகத்தல் முதலிய தொழில்களானே தனித்தனி பிரித்தற்குரியவாமாறு காண்க. கலை ஆணவமலத்தின் ஏகதேசத்தை நீக்கிக் கிரியையை எழுப்பும் எனவும், பரமசிவன் சுத்தமாயையின் ஏகதேசத்தைக் கலக்கிச் சுத்த தத்துவங்களைத் தோற்றுவிப்பன் எனவும், அநந்த தேவன் அசுத்த மாயையின் ஏகதேசத்தைக் கலக்கிக் கலை முதலியவற்றைத் தோற்றுவிப்பன் எனவும் வழங்குவது பற்றி அவயவம் எனப்படா; வேறு வேறு பிரித்தற்கு உரியன அன்மையின். இவற்றை நீக்குதற்கன்றே ஒருபொருளின் ஏகதேசம் என்றொழியாது, வேறுவேறு பிரித்தற்குரியன அவயவம் என்றதூஉம் என்க.

இங்ஙனமாயினும், தார்க்கிகர் மதத்திற் பரமாணுக்கள் அவயவம் உடையன அல்லவாகலான் அவை தோன்றி நின்று அழியும் என்பது பெறப்படாமையின், அவயவமுடைமை காரியப்பாட்டிற்கு ஏதுவென்றல் யாண்டும் செல்லாதால் எனின், - அற்றன்று; அவன் என்றும், அவள் என்றும், அது என்றும் இவ்வாறு சடமுமாய்ப் பலவுமாய் உரைக்கப்படுவனவெல்லாம் தோன்றிநின்று அழியும் என்பது கருத்தாகக் கொள்க.

“இன்னுழை கதிரின் துன்னணு”க்களே பரமாணுக்களாம். அவற்றை மும்மையணுவெனக் கொண்டு அவற்றினும் நுண்ணியவாய்க் கட்புலன் ஆகாதன உள என்றற்குப் பிரமாணம் இன்மையின், பரமாணுக்களும் அவயவம் உடையனவேயாம். அல்லவெனக் கொள்ளினும், அவை சடமுமாய்ப் பலவுமாகலாற் தோன்றி நின்று அழிவனவேயாம் என்க. ஆணவமலம் சடமாயினும் பலவன்று; ஆன்மாக்கள் பலவாயினும் சடமல்ல; ஆகலான் அவற்றின்கட் செல்லாமை அறிக. திருவாசகம், திருவண்டப்பகுதி, 5.

இங்ஙனமாயினும், மாயை சுத்தமாயை அசுத்தமாயை என இரண்டாய்ச் சடமும் ஆகலான் அவை காரியப்பொருள் ஆவான் செல்லும். அவை தனித்தனி ஒன்றேயாம் எனில் குடம் முதலியனவும் தனித்தனி ஒன்றேயாகலாற் பலவாதல் யாண்டையது என்பதாய் முடியுமாலோவெனின், - அற்றன்று, அவன் என்றும், அவள் என்றும், அது என்றும் இவ்வாறு சுட்டியறியப்படுவன எல்லாம் தோன்றி நின்று அழியும் என்பதே சித்தாந்த முடிபு எனக் கொள்க.இது விளங்குதற் பொருட்டன்றே ஆண் பெண் அலி என்றாதல், ஒருவன் ஒருத்தி ஒன்று என்றாதல் ஓதாது, அவன் அவள் அது எனச் சுட்டுப் பெயர்களான் ஓதியதூஉம் என்க. இதற்கிதுவே பொருளாதல் உணர்த்துதற்கன்றே ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் என உரைசெய்து எடுத்துக்கொண்டதூஉம் என்க. “அசத்தாம் சுட்டி உணர்பொருளான எல்லாம்” ((❖சிவஞான சித்தி. 6-ஆம் சூ. 2), “அறிவினால் அறிந்த யாவும் அசத்தாதல் அறிதி,” (சிவப்பிரகாசம், உண்மை.5). என்னுந் திருவாக்குக்களானும் இதுவே இதற்குச் சிறந்த ஏதுவாதல் கண்டுகொள்க.

அற்றேல், “அவனே தானே”1 எனவும், “அவன்இவனாய் நின்ற முறை”2 எனவும், “அவன் இவன் ஆனது”3 எனவும், “அது நானானேன் என்று பாவிக்கச் சொல்லுவது”4 எனவும், கூறுமாற்றால் நித்தப் பொருள்களும் சுட்டியறியப்படுமலோவெனின், - அற்றன்று; அவை அங்ஙனம் பொதுமையிற் சுட்டியறியப் படுமாயினும் அநுபவநிலையிற் சுட்டி அறியப்படாவென்பது, “உரையுணர் விறந்து நின்று உணர்வதோர் உணர்வே”5 எனவும், “அறிவிறந்தங் கறிந்திடீர்” 6 எனவும், “பாவனை யிறந்து நின்று-பாவிக்கப் படுவதாகும்”7 எனவும், “ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும் - கேட்பான் புகின் அளவில்லை கிளக்க வேண்டா”8 எனவும், “ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் - சோதிக்க வேண்டா”9 எனவும், ஓதுவனவற்றான் அறிக.

[அடிக்குறிப்பு:1. சிவஞான போதம், 10-ஆம் சூ. / 2. சிவஞான சித்தி, 10-ஆம் சூ. 1; / 3. திருவுந்தியார், 40;/ 4. சிவஞான சித்தி, 6-ஆம் சூ. 7;/ 5. திருவாசகம், கோயில் திருப்பதிகம், 3; / 6. சிவஞான சித்தி. 9-ஆம் சூ. 3;/ 7. சிவஞான சித்தி. 6-ஆம் சூ. 7; / 8. சம்பந்தர் தேவாரம், பொது. 4;/ 9. சம்பந்தர் தேவாரம், பொது. 5.]

பிரபஞ்சம் அவ்வாறன்றிச் சிறப்பியல்புபற்றி அநுபவமாய் உண்மையாற் சுட்டப்படும் என்னும் கருத்தானன்றே, ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம்என்று ஒழியாது, உளதாய் என விசேடித்ததூஉம் என்க. நித்தப்பொருள் சுட்டியறியப்படாது என்பது ஆறாம் சூத்திரத்திற் காண்க.

இங்ஙனம் வழியளவையானே உலகம் தோன்றி நின்று அழியும் எனச் சாதித்து மீமாஞ்சை நூலாரை மறுத்தவழி, உலகாயத நூலார் காட்சியளவே ஒன்றே பிரமாணம் அன்றி வழியளவை முதலியன பிரமாணம்அல்ல ஆகலான் அவற்றாற் சாதிப்பன பொருள்படாவாம் என்பர். வழியளவையின்றாயின், மேல்வரும் பயனைக் குறித்து முயற்சி செய்வார் இல்லையாதல் வேண்டும். “இம்மையின் முயற்சியாலே யிருநிதி யீட்”டப்படும் என்பதே அவர் கொள்கையாகலான் வழியளவையும்(☎. சிவஞானசித்தி. 2-ஆம் சூத்திரம், 7.), அதுபற்றி உரையளவையும் பிரமாணம் எனக் காட்டியவழி, அவரும் அதனானே மறுக்கப்படுவாராயினும், அவர் மதமே பற்றி அவரை மறுத்தற்பொருட்டுத் தோன்றியழிதல் கண்கூடாகக் காட்டுவார், வேறுமோர் ஏதுக் கூறுகின்றார்:-

தோற்றமும் ஈறும் உள்ளதன் பாலே கிடத்தலின்

எனவரும்.

ஈண்டுஉள்ளது என்றது, திதியினை. கிடத்தல் - அதனோடு உடனிகழ்தல். அஃது எங்ஙனமெனின், - ஏதுவை வலியுறுத்துதற்கு எடுத்துக்காட்டுவது உதாரணம் என்று அறிக.

வார்த்திகப் பொழிப்பு:

[தொகு]

வார்த்திகப் பொழிப்பாவது உரைச்செய்யுளானும் பாச்செய்யுளானும் செய்யப்படும் என்னும் வடமொழி மதம்பற்றிக் கருத்துரையும் மேற்கோளும் ஏதுவும் உரைச்செய்யுளான் உரைத்து, உதாரணம் பாச்செய்யுளான் உரைக்கின்றார்:-

பூதாதி ஈறு முதலுந் துணையாகப்
பேதாய் திதியாகும் பெற்றிமையின் - ஓதாரோ
ஒன்றொன்றிற் றோன்றி யுளதாய் இறக்கண்டும்
அன்றென்றும் உண்டென்ன ஆய்ந்து

- எனவரும்.

ஈறும் முதலும் துணைக்காரணமாகக் கொண்டே திதி நிகழும். அற்றாயினும் ஒன்று தோன்ற ஒன்று நிற்ப ஒன்று அழிவதன்றி, ஒருங்கே தோன்றி ஒருங்கே நின்று ஒருங்கே அழியக் கண்டிலமால் எனின், - ஒவ்வொரு கால விசேடத்திற் சாதிபற்றி ஒருங்கே தோன்றி ஒருங்கே நின்று ஒருங்கே அழிவதனைக் காண்டலால், என்றாயினும் அதற்குரிய காலம்வரும் என்று உலகத்திற்கும் அங்ஙனம் உண்டாதல் உண்டென்று அக்காட்சிபற்றி அறியப்படும் என்பதாம்.

பூதாதி - அன்மொழித்தொகை. பூதாதிக்கு என நான்கன் உருபு விரித்து உரைக்க. ஆகும் என்பது முற்றுவினை; பெற்றிமை என்றது ஈண்டுச் சாதியை. ஓகாரம் - எதிர்மறை. ஒன்றொன்றின் என்பது, “ஒன்றொன்றாப் பார்த்துணர்வது உள்ளமே” என்புழிப்போல அடுக்குமொழி. கண்டும் என்னும் உம்மை சிறப்பு. பெற்றிமையின் ஒன்றொன்றிற் றோன்றி யுளதாய் இறுதலாவது, “பயில்வித் தெல்லாங்-காரிடமதனிற் காட்டும் அங்குரங் கழியும் வேனில்” என்றது பற்றி உணர்ந்து கொள்க. இங்ஙனம் சொற்பிரபஞ்சம், பொருட் பிரபஞ்சம் என்னும் இரண்டனுள் பொருட்பிரபஞ்சந் தோன்றி நின்று அழியும் என்பது ஏதுக்களாற் சாதிக்கப்பட்டது.

இனி இரட்டுறமொழிதலான், அவன்அவள் என்பதனாற் பெறப்படும் உயர்திணையும், அது என்பதனாற் பெறப்படும் அஃறிணையும் என்னும், இருதிணைப் பகுதித்தாய சொற்பிரபஞ்சம், இங்ஙனம் அவயவப் பகுப்புடைமையானும், சடமுமாய்ப் பலவும் ஆகலானும், சுட்டிஅறியப்படுதலானும், திதியின்பாற் ஏனையிரண்டும் காணப்படுதலானும் தோன்றி நின்று அழிதல் உடைத்து எனவும் பொருள் உரைத்துக்கொள்க.

அற்றேல், வேதம் நித்தியம் என்னுஞ் சுருதிகளோடு முரணும்பிறவெனின், - முரணாது; நித்தனாகிய பரமசிவனாற் செய்யப்பட்டமையானும், இறுதிக்காலத்துப் பரமசிவனித்து ஒடுங்கிய வேதம் படைப்புக்காலத்து முன்போலவே தோன்றுதலானும் நித்தம் என்று உபசரித்துக் கூறப்படும் ஆதலின், சிவாகமங்களை நித்தம் என்பதும் இக்கருத்தேபற்றி என்க. அங்ஙனம் அல்லாக்கால், வேதம் “பரமசிவனாற் செய்யப்பட்டது” என்னும் சுருதிகளோடும், “அட்டாதச வித்தைக்கும் முதற்கருத்தாவாகிய சூல பாணி” என்றற் றொடக்கத்துப் புராணவசனங்களோடும், ஈண்டுக் கூறும் வழியளவையோடும் முரணுமாறு அறிக.

பிருகதாரணியகம், அத்.2, பிராம்மணம் 4; சுவேதாசுவதரம், அத். 6.

சைவபுராணம், வாயுசங்கிதை, பூர்வபாகம், முதலாம் அத்தியாயம்.

வித்தை பதினெட்டாவன: - இருக்கு முதலிய வேதம் நான்கும் சிக்கை, கற்பசூத்திரம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம் என்னும் அங்கம் ஆறும், புராணம் நியாயநூல் மீமாஞ்சை மிருதி என்னும் உபாங்கம் நான்கும், ஆயுள்வேதம், வில் வேதம், காந்தருவ வேதம், அருத்தநூல் என்னும் இருக்கு முதலியவற்றிற்கு உபவேதம் நான்கும் என இவை.

இவற்றுள், வேதம் நான்கும் பிரமகாண்டமும், பிரம ஞானத்திற்கு நிமித்தமான கருமகாண்டமும் உணர்த்துவனவாம். சிவாகமங்களும் பிரமகாண்டமாய் அடங்கும் என்க.

வேதங்களை எடுத்தல் படுத்தல் முதலிய இசைவேறுபாட்டான் உச்சரிக்குமாறு உணர்த்துவது சிக்கை.

வேதங்களிற் கூறும் கருமங்களை அநுட்டிக்குமுறைமை உணர்த்துவது கற்பசூத்திரம். (ஆசுவலாயநீயம், போதாயநீயம் முதலியன).

வேதங்களின் எழுத்துச் சொற்பொருள் இயல்பு உணர்த்துவது வியாகரணம்.

வேதங்களின் சொற்பொருள் உணர்விப்பது நிருத்தம்.

வேத மந்திரங்களிற் காயத்திரி முதலிய சந்தங்களின் பெயரும் அவற்றிற்கு எழுத்து இனைத்தென்றலும் உணர்த்துவது சந்தோவிசிதி.

வேதத்திற் சொல்லப்படும் கருமங்கள் செய்தற்குரிய காலவிசேடங்களை உணர்த்துவது சோதிடம். இங்ஙனமாகலின் இவை ஆறும் வேதத்திற்கு அங்கம் எனப்பட்டன.

பரமசிவன் உலகத்தைப் படைக்குமாறு முதலாயின கூறும் வேத வாக்கியப் பொருள்களை வலியுறுத்து விரித்துணர்த்துவது புராணம். இதிகாசமும் ஈண்டு அடங்கும்.

வேதப்பொருளை நிச்சயித்தற்கு அநுகூலமான பிரமாண முதலியவற்றை உணர்த்துவது நியாயநூல்.

வேதப்பொருளின் தாற்பரியம் உணர்தற்கு அநுகூலமான நியாயங்களை ஆராய்ச்சி செய்து உணர்த்துவது மீமாஞ்சை. அது பூருவ மீமாஞ்சை, உத்தரமீமாஞ்சை என்று இருவகைப்படும். அவற்றுள், முன்னையது மீமாஞ்சை எனவும், வேதம் எனவும், பின்னையது வேதாந்தம் எனவும் வழங்கப்படும்.

அவ்வவ்வருணங்கட்கும் நிலைக்கும் உரிய தருமங்களை உணர்த்துவது மிருதிநூல். புராணம் முதலிய நான்கும் வேதத்திற்கு உபாங்கம் எனப்படும்.

எல்லாம் அநுட்டித்தற்குச் சாதனமான யாக்கையை நோயின்றி நிலைபெறச் செய்வது ஆயுள்வேதம்.

பகைவரான் நலிவின்றி உலகம் காத்தற்கு வேண்டப்படும் படைக்கலம் பயிறலை உணர்த்துவது வில்வேதம்.

எல்லாக் கடவுளர்க்கும் உவகை வரச்செய்யும் இசை முதலியவற்றை உணர்விப்பது காந்தருவ வேதம்.

இம்மைக்கும் மறுமைக்கும் ஏதுவாகிய பொருள்களை ஈட்டும் உபாயம் உணர்விப்பது அருத்தநூல். இவை நான்கும் உபவேதம் எனப்படும் என்று உணர்க.

முதல் அதிகரணம் முடிந்தது


இரண்டாம் அதிகரணம்

கருத்தா உண்மை

[தொகு]

முதல் அதிகரணத்திற் பிரபஞ்சம் நித்தியம் எனக்கொண்ட மீமாஞ்சை நூலாரையும், உலகாயத நூலாரையும் மறுத்துச், சொல்லும் பொருளும் என்று இருவகைப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி, திதி, நாசம் உடைத்து எனக் கருத்தாவின் உண்மை சாதித்தற்கு ஓதிய ஏதுவை ஏதுக்களாற் சாதித்தவழி, ஏது உண்டு; சாத்தியம் இல்லையெனப் பிணங்கும் புத்தர் முதலியோரை மறுத்துப் பொதுவகையானும் சிறப்புவகையானும் கருத்தாவுண்மை சாதித்தற்கு எழுந்தது இரண்டாம் அதிகரணம். அதிகரண இயைபும் இதனானே விளங்கும்.

இனி என்றது அதிகரண இயைபு உணர்த்துதற்பொருட்டு முன்வரும் அதிகரணங்களினும் இவ்வாறே கண்டுகொள்க.

இனி ஒடுங்கின சங்காரத்தினல்லது உற்பத்தி இல்லை என்றது எனவரும்.

சூத்திரத்தின் ஒடுங்கிஎன உலகவினைமேல் வைத்து ஓதினமையின், அதற்கேற்ப ஈண்டும் ஒடுக்கின என்னாது ஒடுங்கின உல உலகவினைமேல் வைத்து உரைத்தார். சங்காரகருத்தாவைச் சங்காரம் என்று உபசரித்தார். அல்லதுஇல்லை என எதிர்மறைமுகத்தாற் கூறினார், ஏனைக் கடவுளரிற் செல்லாமை அறிவுறுத்தற்பொருட்டு.

அற்றேல், உலகம் ஓரிடத்து ஒடுங்கி நின்று மீள உளதாம் என்றது என்னை? உள்ளதாயின் உண்டாக வேண்டுவது இல்லை ஆகலான், இல்லது உண்டாம்; உள்ளது அழியும்; இல்லவை தோன்றுங்கால் சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றி அழிவனவற்றுள், முற்கணத்தின் நின்று அழியும் பொருள் பிற்கணத்திற் றோன்றும் பொருட்குச் சார்பாகலின், அவை அவ்வச் சார்பிலே வித்தின் கேட்டின் அங்குரம்போல் தோன்றும்; இதற்கு ஒரு கருத்தா வேண்டுவது இல்லைஎனப் புத்தர் கூறுவர். அதனை மறுத்து மேற்கோளைச் சாதித்தற்கு எழுந்த ஏது:-

இல்லதற்குத் தோற்றம் இன்மையின்

என வரும்.

அற்றேல், உள்ளதற்கு உண்டாக வேண்டுவது என்னை என்றற் றொடக்கத்து ஆசங்கைகளை நீக்கி ஏதுவை வலியுறுத்துதற்கு எடுத்துக்காட்டும் உதாரணம்:-

இலயித்த தன்னிலில யித்ததாம லத்தா
லிலயித்த வாறுளதா வேண்டும்1

எனவரும்.

[1இலயித்த தன்னில் இலயித்ததாம் மலத்தால்/ இலயித்தவாறு உளதா வேண்டும்]

உள்ளதற்கு உண்டாக வேண்டுவது என்னை என்னும் ஆசங்கையை நீக்குதற்கு இலயித்தது இலயித்த தன்னில் ஆம் என்றும், அற்றேல், இலயித்தது இலயித்தவாறே ஒழியாது மீள உண்டாக வேண்டா, வேண்டுமாயின் முன் இலயித்தலின்றி நிலைபெறவே அமையும் என்னும் ஆசங்கையை நீக்குதற்கு மலத்தால் என்றும், நசித்தலேயன்றி ஒடுங்கிநின்று மீள உண்டாம் என்றற்குப் பிரமாணம் என்னை என்பாரை நோக்கி இலயித்தவாறு உளதா வேண்டும் என்றும் கூறினார். இலயித்தவாறன்றி உளதாகாது என்னும் நியமம் இல்லையாயின், நெற் கமுகாய் நீளாது நெல்லாயே நீளுதற்கு ஏதுவென்னை என்னும் தருக்க முகத்தானே அஃது அறியப்படும் என்பதாம்.

சற்காரிய வாதம்

உற்பத்திக்கு முன்னும் காரியம் உள்ளதென்று கொள்ளாக்கால், முயலின்கட் கோடு தோன்றாதவாறு போல, மண் முதலியவற்றிற் குடம் முதலியன தோன்றாது ஒழிதல் வேண்டும்.

அற்றேல், முன்னும் காரியம் உளதாயிற் காரகமுயற்சிகளாற் பயன் என்னையெனின், -கூவன் முதலியவற்றின் முயற்சிகளாற் புனல் வெளிப்படுமாறு போலக் காரியம் வெளிப்படுதல் பயன் என்க. அற்றேல், ஈரிடத்தினும் ஒப்பக் காரியம் உள்ளனவாயிற் கூவன் முதலியவற்றின் மண்தொடுதல் முதலிய முயற்சிகளாற் புனல் வெளிப்பட்டது என்னும் உணர்வு நிகழ்ச்சி போல, மண் முதலியவற்றினும் குடம் வெளிப்பட்டது என்னும் உணர்வு நிகழ்தல் வேண்டும். அங்ஙனமன்றி மண்ணிற் குடம் உண்டாயிற்று என்றும், கூவலிற் புனல் வெளிப்பட்டது என்றும் வெவ்வேறாய் உணர்வு நிகழ்தல் பொருந்தாதால் எனின், - அற்றன்று; முன்னர்த் தூலவடிவிற்றாய் நின்று பின் வெளிப்பட்டதன்கண் வெளிப்பட்டது என்னும் உணர்வும், முன்னர்ச் சூக்குமவடிவிற்றாய்நின்று பின்னர்த் தூலவடிவிற்றாய் வெளிப்பட்டதன்கண் உண்டாயிற்று என்னும் உணர்வும் நிகழ்தல் பொருந்தும் என்க.

இன்னும், காரணமாய் நின்ற அவத்தையான்அன்றி வேற்றுப் பொருளால் தடைப்பட்டு வெளிப்பட்டதன்கண் வெளிப்பட்டது என்னும் உணர்வு நிகழும். காரணமாய் நின்ற அவத்தை மாத்திரையானே தடைப்பட்டுநின்று வெளிப்பட்டதன்கண் உண்டாயிற்று என்னும் உணர்வு நிகழும். கூவன் முதலியவற்றிற் புனல், அவத்தையன்றி வேற்றுப் பொருளாகிய மண்ணே தடைசெய்து நிற்றலின், ஆண்டு வெளிப்பட்டது என்று வழங்கப்படும். அல்லுழிக் குடம் முதலியவற்றை மண்முதலியனவாய் நின்ற சூக்குமாவத்தையே தடைசெய்து நிற்றலின், ஆண்டுத் தோன்றினவென்று வழங்கப்படும் என்பது. குயவன் முதலியோர் முயற்சிக்கு முன்னும் மண் முதலியவற்றின்கட் குடம் முதலியன உளவெனக் கொள்ளின் அப்பொழுது காணப்படுக என்பதூஉம் இதனானே மறுக்கப்பட்டது; மண்முதலியனவாய் நின்ற அவத்தையானே மறைபட்டு நிற்கும்எனக் கோடலின்.

அற்றேல், கூவன் முதலியவற்றிற் புனன் முதலியன உண்மை பிரமாணத்தான் அறியப்படுதலின், ஆண்டு வெளிப்படாமைக்குக் காரணம் வேற்றுப்பொருளால் தடைப்பட்டு நிற்றல் என்பது பெறுதும். ஈண்டு அத்தன்மைத்தாகிய பிரமாணம் இன்மையின், மண் முதலியனவாய் நின்ற காரணாவத்தையே தடைசெய்து நிற்கும் என்பது பொருந்தாது; அவை இல்லையாகலிற் காணப்படவில்லை என்பதே பொருத்தம்உடைத்து எனின், -அற்றன்று; “குடம் மண்ணின்கண் முன்னும் உள்ளது; ஆண்டுத் தோன்றுதலின், யாது யாண்டில்லை அஃது ஆண்டுத் தோன்றாது; வெண்மணலில் தைலமும், முயிலின் சென்னியில் கோடும் போலும்” என்னும் அநுமானப் பிரமாணத்தானே முன்னும் குடம் முதலியன உண்மை ஒருதலையான் துணியப்படுதலின், அது வெளிப்படாமைக்குக் காரணம், மண் முதலிய காரணாவத்தையான் தடைப்பட்டு நிற்றலே என்பது பெறுதும் ஆகலின்.

அற்றேல், இங்ஙனம் சற்காரிய வாதத்தின் வெளிப்படுதற்கு முன்னும் உளது எனக் கோடலின், வேறு வேறு நிகழும் காரக முயற்சிகள் பயனிலவாய் முடியும் பிறவெனின், - முடியா; சூக்கும வடிவினவாய் உள்ளவை தூலரூபமாய் வெளிப்படுதல் பொருட்டு அவ்வவற்றிற்கு உரிய காரண முயற்சிகள் ஒருதலையான் வேண்டப்படும் ஆகலின். அல்லதூஉம், காரணத்தோடு இயைபுடைத்தாய்அன்றிக் காரியம் பிறவாமையின், முன்னும் காரியம் ஒருதலையான் உள்ளது என்று உணரப்படும். காரணத்தோடு இயைபு வேண்டாவாயின், எல்லாக் காரணத்தும் எல்லாக் காரியமும் தோன்றாமைக்கு ஏதுவென்னை என்க. அவ்வச் சத்தியுடையவற்றில் தோன்றுமெனின், சத்தியும் காரியத்தோடு இயைபுடைத்தாய் அன்றித் தோற்றுவியாது; தோற்றுவிக்கும் எனின், முற்கூறிய குற்றம் ஒழியாமை அறிக. இது ஞானாமிர்த நூலினும் கூறப்பட்டது:-

 “தந்து முதல காரகம் ஐந்துறக்
கோடல் ஆடை இன்றெனின் ஆடை
உளதேல் காரகம் என்னை என்ன
வளையாக் காரகம் அசத்துற் பத்திக்
குண்டே யாக வாயிடை யாவினும்
தண்டா தியாரும் தாம்வேண் டியமன்
கண்டோ ராயின் மன்ற கண்டிலம்
அன்ன தாயின் அதினஃது உண்டென
என்னை நியமம் இதின்உளது இவ்வலி
என்னிற் சித்த சாதன மன்னோ
அன்றெனிற் காரகக் குழுவும் வென்றி
தாரா தோடு மோட வேரிசை
யெல்லா முடையு முடைய நல்லோய்
சொல்லே யாகு நிற்க வல்லே
யுற்பா திக்கும் வலியுண் டில்லைச்
சத்தி ரூப மாகிக் கரும
மென்றிடின் விசேட நின்ற தொன்றிடைக்
கண்டில மொன்றும் வென்றியோ டொன்றக்
காரக மதற்குப் பேரிசை நியம
மாகத் தோற்று விக்குஞ் சீரிசை
வலியந் நுவய வெதிரே கத்து
மொலிகெழு முரூடி யானுங் கலிகொள
வறிய லாகு மவ்வெளிப் படுதல்
ஒலிகெழு தோற்றம் அதனாற் கலிகெழு
தந்துமுதல காரகம் வந்தி லாமையிற்
புடமடி மறைத்த தடமலிந் தகன்ற
வேம முதல தாமினி தகற்றத்
தூமடி விளங்கு மியாங்கு மாமரு
கடமிக மறைந்த படங்கட மகற்ற
விடமிக விளங்கி யாங்கு வடிவுற
வெல்லாக் காரக முறினு முயற்கோடு
இல்ல தில்ல தாகலின் வல்லே
கலைமுதன் மாயையி னிவண
நிலைமலி புடைய நினையுங் காலே.1

1ஞானாமிர்தம், 15.


இதனானே இல்லதும் உள்ளதும் அல்லாத பொருள் தோன்றும் என்னும் சூனியவாதிகளையும், இல்லதும் உள்ளதுமான பொருள் தோன்றும் என்னும் அநேகாந்த வாதிகளையும் மறுத்தவாறாயிற்று என்க.

பாஞ்ச ராத்திரிகள்

[தொகு]

இங்ஙனம்இல்லதற்குத் தோற்றம் இன்மையின் என்னும் ஏதுவானே புத்தர் முதலியோரை மறுத்துச் சற்காரியவாதத்தான்ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தியில்லை என்னும் மேற்கோளைச் சாதித்தவழிப், பாஞ்சராத்திரிகள் முதற்காரணத்தோடு இயைபுடைத்தாய்க் காரியந்தோன்றி அதன்கண் ஒடுங்கும் என்பதே பொருத்தம் உடைத்து ஆகலின், உலகிற்கு முதற்காரணம் மூலப்பகுதியாகலான் மூலப்பகுதி வாசுதேவனே ஆகலின், வாசுதேவன்பால் நின்றும் தோன்றி விரிந்த உலகம் ஆண்டு ஒடுங்கும் என்பதே பொருத்தம் உடைத்து; பரமசிவன் நிமித்தகாரண மாத்திரையேயன்றி, முதற்காரணம் என நும்மனோர் கொள்ளாமையின், நிமித்தகாரணத்தில் ஒடுங்கும் என்றல் பொருந்தாது என்பர். அதனை மறுத்து மேற்கோளிற் போந்த குறிப்பேதுவை வலியுறுத்துதற்கு எடுத்துக்காட்டும் உதாரணம்

. . . . இலயித்த(து)
அத்திதியில் என்னின் அழியா தவைஅழிவது
அத்திதியும் ஆதியுமாம் அங்கு.

-எனவரும்.

சித்தாகிய வாசுதேவனைச் சடமாகிய மூலப்பகுதி என்று நீ கொள்ளினும், மூலப்பகுதிக்குக் கீழ்உள்ள ஏகதேச மாத்திரையேயன்றி, அதன்மேலுள்ள புவனங்களும் உளப்பட முற்றும் ஆண்டு ஒடுங்காது என்பார் அழியாதவை எனவும்,முற்றும் ஒடுங்கும் இடம் இதுவென்பார் அழிவது அத்திதியும் ஆதியுமாம் அங்கு எனவும் கூறினார்.

“செய்யுட்கள் ஓசை சிதையுங்கால் ஈரளபும்
ஐயப்பா டின்றி அமையுமாம் - மைதீர்ஒற்(று)
இன்றியும் செய்யுட்கெடின் ஒற்றை உண்டாக்கு
குன்றுமேல் ஒற்றளபும் கொள்.”

“நீட்டம் வேண்டின்” என்னும் தொல்காப்பிய எழுத்ததிகாரச் சூத்திரத்து நச்சினார்க்கினியர் உரை மேற்கோள்.

-என்பது போலவே, இவ்வெண்பாவினை இருதொடராக்கி வேறுவைத்து உரைத்து இங்ஙனம் இருவகை அதிகரணப் பொருள் தருமாறு கண்டு கொள்க. ஈண்டு இலயித்த எனவும், தன்னிலில எனவும், யித்ததாம எனவும், லத்தா எனவும் வகையுளியாக வைத்துச் சீர்செய்து வெண்டளை சிதையாது தளையறுத்துக் கொள்க. அன்றி இதனை வெண்டுறைப் பாற்படுத்தினும் இழுக்காது.

இலயித்த தன்னிலில யித்தது என்புழி, இலயித்தது என்பது ஏதுப் பொருண்மை உணர நின்ற பெயர். இலயித்தது எனச் சற்காரியவாதம் கூறவே இலயித்த அவத்தையின் அவ்வக்காரிய சதிகள் எல்லாம் உடைய சமூகமாய்ச் சூக்குமமாய் நிற்பது ஒன்றுண்டு; அதுவே முதற்காரணம் எனப்படும் எனப் பிரபஞ்சத்திற்கு முதற்காரணமாகிய மாயையது உண்மையும் பெறப்பட்டது. அவை என்றது மாயாகாரியத் தொகுதியை. அழியாது அழிவது என்னும் ஒருமைகளோடு இயையாமை அறிக. ஆமங்கு என்பது பெயரெச்ச முடிபு. இரணிய கருப்ப மதத்தையும் மறுத்தற் பொருட்டுப் படைப்புக் கடவுளையும் உடன் கூறினார்; கூறவே, இவரோடு ஒருங்கு எண்ணப்படும் சங்காரக் கடவுளும் இவரோடு தோன்றி அழிவன் எனப் பாசுபதர் முதலியோரையும் இதனானே மறுத்தவாறாயிற்று. இம்மூவரையும் தோற்றுவிக்கும் காரணக் கடவுள், மகா சங்கார காரணனாகிய பரமசிவன் என்பது அதர்வசிகை உபநிடதம் முதலியவற்றுட் காண்க.

நிவர்த்தி முதலிய பஞ்சகலைகட்கும் அதிதெய்வமான பிரமன் முதலிய ஐவருள், பிரகிருதிமாயைகாறும் வியாபித்து நிற்கும் பிரதிட்டாகலைக்கு மாயோன் அதிதெய்வமாகலின் அப்பிரகிருதி மாயைக்கு அபிமான தேவதை என்னும் ஒற்றுமைபற்றிப் பிரகிருதிமாயையே வாசுதேவன் எனவும், அதன் காரியம் அவன்வடிவு எனவும், உபசரித்துக் கூறப்படும். அவ்வாறன்றிச் சித்தாகிய வாசுதேவனைச் சடமாகிய பிரகிருதியென்றற்குப் பிரமாணம் இன்மையானும், ஒற்றுமைபற்றிக் கொள்ளினும் பிரகிருதிக்கு மேலும் தத்துவங்கள் உண்மை முன்னர்க்காட்டுதும் ஆகலின் அவை ஆண்டு ஒடுங்குதல் கூடாமையின், திதிக்கடவுளே முழுவதும் சங்கரிக்குமாயின், திதிக்கடவுள் சங்காரக்கடவுள் படைப்புக்கடவுள் என்னும் பகுப்பு ஏலாமையானும், சங்காரக்கடவுள் முழுவதும் சங்கரித்தவழித் தானொருவனே நின்றமையிற் புனருற்பத்தி அவன்கண் நின்றே ஆகற்பாலது என்பது பொருத்தமுடைமையானும், பிரமன் முதலிய மூவரையும், சாக்கிரமூர்த்தி சொப்பனமூர்த்தி சுழுத்திமூர்த்தியெனக் கூறிப் பரமசிவனைத் துரியமூர்த்தியென உபநிடதங்கள் எல்லாம் மூவரின் வேறாக வைத்துக் கூறுதலானும், இவ்வாறு ஏனையோரைக் கூறாமையானும், சங்காரகாரணனாய் உள்ள முதல்வனே முதல்வன்; உலகமுழுவதும் அவன்பால் ஒடுங்கி அவன் இடத்தினின்றே தோன்றும் என்பது போந்தவாறு அறிக. நிமித்தகாரணனாகிய முதல்வன் உலகிற்கு முதற்காரணம் அல்லனாயினும், முதற்காரணமாகிய மாயைக்கு ஆதாரமாய் நிற்றலின், உலகம் ஆண்டு ஒடுங்கி ஆண்டுநின்று தோன்றுதல் அமையும் என்பது வித்துண்டாமூலம் எனவருகின்ற வெண்பாவிற் காட்டுதும் ஆகலின், அதுபற்றி ஆசங்கையின்மை உணர்க.

இரண்டாம் சூத்திரம், இரண்டாம் அதிகரணம்

பிரம்மோபநிசத், பரப்பிரம்மோபநிசத்

பஸ்மஜாபாலோபநிசத், பஞ்சப் பிரம்மோபநிசத்

இன்னும்,

“உயர்கா யத்திரிக்(கு) உரிப்பொருள் ஆகலின்
தசரதன் மதலை தாபித்(து) ஏத்தலிற்
கண்ணன் கயிலையின் நண்ணிநின்(று) இரப்பப்
புகழ்ச்சியின் அமைந்த மகப்பே(று) உதவலின்
தனாது விழியுடன் ஒராயிரம் கமலப்
புதுமலர் கொண்(டு)அரி பூசனை ஆற்றலின்
ஆங்கவற்(கு) இரங்கி ஆழியீந்(து) அருடலின்
ஐங்கணைக் கிழவனை அழல்விருந்(து) ஆக்கலின்
அமைப்பரும் கடுவிடம் அமுதுசெய் திடுதலின்
தென்திசைத் தலைவனைச் செகுத்துயிர் பருகலின்
அவுணர் முப்புரம் அழியவில் வாங்கலின்
தக்கன் வேள்வி தகர்த்தருள் செய்தலின்
தனஞ்செயன் தனக்குத் தன்படை வழங்கலின்
மானுட மடங்கல் வலிதபக் கோறலின்
மாயோன் மகடூஉ ஆகிய காலைத்
தடமுலை திளைத்துச் சாத்தனைத் தருதலின்
ஆழ்கடல் வரைப்பின் ஆன்றோர் அனேகர்
அன்புமீ தூர அருச்சனை ஆற்றலின்
நான்கிரு செல்வமும் ஆங்கவர்க்(கு)அருடலின்
ஐயிரு பிறப்பினும் அரிஅருச் சித்தலின்
இருவரும் அன்னமும் ஏனமும் ஆகி
அடிமுடி தேட அழற்பிழம்(பு) ஆகலிற்
பிறப்பிறப் பாதி உயிர்க்குணம் இன்மையிற்
கங்கைசூழ் கிடந்த காசிமால் வரைப்பிற்
பொய்புகல் வியாதன் கைதம் பித்தலின்
முப்புரம் இறுப்புழி முகுந்தப் புத்தேள்
மால்விடை யாகி ஞாலமொடு தாங்கலின்
அயன்சிர மாலை அளவில அணிதலின்
ஞானமும் வீடும் பேணினர்க்(கு) உதவலிற்
பசுபதிப் பெயரிய தனிமுதற் கடவுள்
உம்பர்கள் எவர்க்கும் உயர்ந்தோன்
என்பது தெளிப இயல்புணர்ந் தோரே.”

-என்று இங்ஙனம் அரதத்தாசாரியர் கூறிய இவ் இருபத்திரண்டு ஏதுக்களானும், பரமசிவனே பரம்பொருள் என்பது தெளியப்படுதலின், அவனே முழுவதும் ஒடுக்கி உளதாக்கும் சருவகாரணன் என்பது உணர்ந்து கொள்க. இவற்றை நாத்திகம் பேசி மறுத்துப் பாஞ்சராத்திரிகள் செய்த கிரந்தத்திற்கு மூலவசனம் இல்லையென்று ஒழிக.

பாஞ்சராத்திர மதமும் மறுப்பும்

[தொகு]

இன்னும் பாஞ்சராத்திரிகள் சிவபுராணம் தாமதபுராணம் ஆகலின், சாத்துவிக இராசத புராணமாகிய இரண்டு புராணங்களோடும் முரணியவழிப் பிரமாணம் ஆகா எனவும், நான்முகனுடைய ஒவ்வொருநாள் கற்பம் எனப் பெயர்பெறும், அவற்றுள், ஒரு கற்பத்திற் பிரமன் சாத்துவிக குணத்தான் மேற்பட்டிருப்பன், ஒரு கற்பத்திற் தாமத குணத்தான் மேற்பட்டிருப்பன், ஒரு கற்பத்தில் முக்குணங்களின் சங்கீரணத்தான் {{{1}}} மேற்பட்டிருப்பன் ஆகலின் அவ்வக் கற்பங்களின் அவ்வக் குணங்களையுடைய கடவுளர் புராணம் அவனால் விரித்துக் கூறப்பட்டனவாகலின், அவற்றுள், தாமத குணத்தினையுடைய சிவன் பெருமை கூறிய புராணம் தாமதபுராணம் என்பது துணியப்படும் எனவும்; இதற்கு மூலவசனம் மச்சபுராணத்திற் காணப்பட்டது எனவும் பிதற்றுவர். அது பகுத்தறிவில்லார் கூற்றேயாம் என மறுக்க. என்னை? அவ்வக் கற்பங்களின் அவ்வக் குணங்களான் மேற்பட்டிருப்பன் நான்முகக் கடவுள்என மச்சபுராணத்திற் கூறாமையின்; ஒவ்வொரு கற்பங்களின் ஒவ்வொரு குணம் மேற்பட்டு நிகழும் என்றது மாத்திரையே பற்றி, நான்முகனும் அவ்வக் குணங்களான் மேற்பட்டிருப்பன் என்றல் பொருந்தாமையின்; கார், கூதிர், பனி முதலியவற்றுள் ஒவ்வொன்று ஒவ்வொரு காலத்தின் மிக்கு நிகழ்தலும், அதுபற்றி அவ்வக் காலங்களும் அவ்வப் பெயர் பெறுதலும், கார் கூதிர் முதலியனபற்றிச் செழிப்பனவாகிய பூவும் புள்ளும் முதலாயின அவ்வக் காலங்களின் மிக்குத் தோன்றுதலும், அதுபற்றிக் காப்பியங்களின் அவற்றை வருணித்தலும் போலச், சாத்துவிக முதலிய குணங்களின் ஒவ்வொன்று ஒவ்வொரு கற்பத்தின் மிக்கு நிகழ்தலும், அதுபற்றி அவ்வக் கற்பங்களும் அவ்வப் பெயர் பெறுதலும், அவ்வக் கற்பங்களின் அவ்வக் குணமுடைய கடவுளர் மேன்மை மிக்குத் தோன்றுதலும், அங்ஙனம் மிக்குத் தோன்றுதல் பற்றி அவ்வவர் புராணங்களின் அவ்வவர் மேன்மை கூறுதலும் பொருந்துமாறு உணர்க.

அற்றேல், இங்ஙனம் கற்பங்களைப் பகுத்தோதிய மச்சபுராண வசனத்திற்குப் பயன் வேறின்மையின், அது பயனில்கூற்றாய் முடியுமாலோவெனின்,- அற்றன்று; புராணங்கள் ஒன்றற்கொன்று மாறுபடக் கூறுதலின், இவற்றுள் யாது பிரமாணம், யாது அப்பிரமாணம் என்னும் ஆசங்கையை நீக்கி, அவ்வக் குணமுடைய கற்பங்களின் அவ்வக் குணமூர்த்திகளின் மேன்மை மிக்குத் தோன்றுதல்பற்றி அவ்வப் புராணங்கள் அவ்வாறு கூறுதலிற் கற்ப வேறுபாடுபற்றி எல்லாப் புராணங்களும் பிரமாணமேயாம் என்று உணர்த்துதற்கு எழுந்ததாகலின், அதுவே பயன் என்க.

அற்றேல், மச்சபுராணத்திற் கற்பங்களின் இயல்பு வகுத்தோதிய வசனம்பற்றிக் கோடற்கு ஓர் இயைபு இல்லையாயினும், தாமத குணமுடைய உருத்திரன் மேன்மை கூறுதல்பற்றிப் பிரமனும் தாமத குணம்உடையன் என்னாமோவெனின், - என்னாம்; அங்ஙனம் கொள்வுழித், தாமத குணமுடைய அரக்கர் பெருமை ஆண்டாண்டுக் கூறுதல்பற்றி வியாசர் முதலியோரையும் தாமத குணமுடையர் என வேண்டுதலின். இதுவும் குணமூர்த்திகளை நோக்கிக் கூறியது. துரியமூர்த்தியாகிய பரமசிவன் முக்குணம்கடந்தவன் ஆதலின், அவ்விறைவன் பெருமை எல்லாக் கற்பத்தும் ஒப்ப நிகழ்தலின், ஆண்டு ஆசங்கையின்மை உணர்க.

இனிச் சங்கார உருத்திரனும் சங்கரித்தல் தொழிலின் பொருட்டுத் தாமதகுணத்தை மேற்கொண்டது அல்லது, இயல்பாக உடையன் அல்லன் என்க; தாமத குணத்தின் காரியமாகிய துயில், மயக்கம், வஞ்சனை முதலியன அவன்கண் இன்மையின். மாயோனுக்குச் சாத்துவிக குணம் கூறியது, காத்தல் தொழில் மாத்திரைக்கே எனக் கொள்க. இன்னோரன்னவை எல்லாம் “பிரமதருக்கத்தவம்” என்னும் வடநூலுள் விரித்துக் காட்டியவாற்றான் அறிக. இதனானே, வைணவம் நாரதீயம் கருடம் பாகவதம் பாற்மம் வராகம் என்னும் ஆறும் சாத்துவிக புராணம் எனவும், பிரமம், பிரமாண்டம், பிரமகைவர்த்தம், மார்க்கண்டேயம், பவுடிகம், வாமனம் என்னும் ஆறும் இராசதபுராணம் எனவும், இலிங்கம், சைவம், ஆக்கினேயம், காந்தம், கூர்மம், மச்சம் என்னும் ஆறும் தாமதபுராணம் எனவும் பகுத்துக்கூறுதல் பொருந்தாமை அறிக. என்னை? புராணங்கள் எல்லாம் பரமசிவன் அருளிச்செய்யப் பெற்று, நான்முகனால் ஒருங்கே விரித்துக் கூறப்பட்டனவன்றி, அவ்வக் கற்பங்களின் அவ்வப் புராணம் கூறப்பட்டன என்றற்கு ஓத்து இலாமையின், அவ்வக் குணமூர்த்திகளின் மேன்மைகூறும் புராணங்களை அவ்வக் கற்பங்களின் விளக்குவித்தான் என்பது மாத்திரையேபற்றி அங்ஙனங் கோடல் பொருந்தாமையின்.

இனிச், சத்துவகுண முதலியன உடைய கடவுளரைக் கூறுதல் பற்றி அங்ஙனம் பகுத்தாம்எனின், - அதனான் எமக்கு வருவதோர் இழுக்கின்று; எம்முடைய கடவுள் முக்குணங்களும் கடந்தவன் என்பது, வேதம் சிவாகமம் புராணம் இதிகாசம் எல்லாவற்றினும் முழங்குதலான் என்க.

சுவேதாசுவதரம்.

அல்லதூஉம், அவர் சாத்துவிக புராணம் எனக் கொண்ட கருடபுராணத்திற் சிவரகசியத்தினும், பாற்மபுராணத்திற் சிவகீதையினும், இன்னும் பல இடங்களினும் பரமசிவன் பெருமையை விரித்தெடுத்து இலிங்கபுராணம் முதலியவற்றினும் அதிகமாகக் கூறுதலின், இங்ஙனம் பகுத்ததனாலும் அவர் கருத்து நிரம்பாமை அறிக.

இனி, உண்மையான் நோக்குவார்க்குச் சிவபுராணங்கள் எல்லாம், வேதத்திற்கு உபப்பிருங்கணமாய் வேதப் பொருளையே விரித்து எடுத்தோதுதலிற் சிறந்த பிரமாணம் எனவும், ஏனைய புராணங்கள் அங்ஙனம் அல்லாமையின் இவற்றோடு முரணியவழி, முரணாதவாறு உய்த்துணர்ந்து பொருள்கொள்ளப் படும் எனவும், அவற்றுள், ஓரோர் இடங்களின் மாயோனுக்கும் பிரமனுக்கும் தாழ்வாக உருத்திரனைக் கூறுவனவெல்லாம் காத்தல் தொழிலும், படைத்தல் தொழிலும் இனிது நடாத்தற்பொருட்டுச் சங்கார உருத்திரன் கூறாய் அவர்பால் தோன்றிய நீலலோகிதன் முதலிய அவதார மூர்த்திகளை அவர்க்குப் புதல்வர் என்னும் உபசாரமேபற்றிக் கூறியனவாம் எனவும் ஓர்ந்து உணர்க.

பாரதத்தினும் ஓரோர் இடங்களின் அங்ஙனம் கூறுவனவற்றையும் இவ்வாறே பொருள்உரைத்துக் கொள்க; அல்லுழியெல்லாம் பாரதம் சிவன் பெருமையே விளக்குதலின். அது “பாரத தாற்பரிய சங்கிரக”த்துட் காண்க.

இங்ஙனம் அன்றி, “நாராயணன் நான்முகனைப் படைத்தான், நான்முகன் உருத்திரனைப் படைத்தான்” என்பது முக்கியப் பொருள் என்பாரை, “நாராயணன்பால் நின்றும் பிரமன் தோன்றினான், நாராயணன்பால் நின்றும் உருத்திரன் தோன்றினான்” என்புழி, உருத்திரன் என்றது யாரை எனவும், “நாராயணன்பால் நின்றும் உருத்திரன் தோன்றினான்” என்பது முக்கியப் பொருள்எனக் கொள்வாரை “நான்முகன் உருத்திரனைப் படைத்தான்” என்புழி, உருத்திரன் என்றது யாரை எனவும் கடாவி மறுக்க.

அதர்வசிகை முதலிய உபநிடதங்களிற் கூறும் பரமசிவன் “மும்மூர்த்திகளையும் படைத்தான்” என்றதுபோலக் குணமூர்த்திகளை இவ்வாறு கூறாது, தம்மையொழித்தொழிந்த இருவரையும் படைத்தார் எனவே கூறுதலாற் புராணங்கட்கும் அதுவே பொருள் எனக் கொள்க.

“அயனை முன்படைத் திடுமொரு கற்பத்(து)அரியை முன்படைத் திடு(ம்)ஒரு கற்பத்(து)
உயரு ருருத்திரன் தனைமுனம் படைப்பன் ஒருகற்ப மற்றொரு கற்பந் தன்னின்
முயலு மூவரை ஒருங்குடன் படைப்பன் முன்பிறந்தவர் மற்றிரு வரையும்
செயலி னாற்படைக் கவும்அருள் புரிவன் சிவபிரான்எனில் ஏற்றம்இங்(கு) எவனோ”

-எனச் சிவதத்துவ விவேகத்திற் கூறியதனையும் ஈண்டு விரித்துரைத்துக் கொள்க.

பாரதத்தில் “அளவில் பேரொளிப் பகவனாம் உருத்திரற்(கு) அச்சுதன்ஆன்மா” வாம் எனச் சிவனுக்கு விண்டு ஆன்மா என்றது, அபேதம் என்னும் பொருள்பட உபசரித்துக் கூறியது, சரீரம் என்னும் பொருட்டு எனினும் அமையும். இவ்வாறன்றி, ஆண்டு ஆன்மாவென்றது அந்தரியாமி என்னும் பொருட்டு எனக் கொள்ளின், “அளவில் பேரொளிப் பகவன்” என்று உயர்த்திக் கூறியதோடு முரணுமாறு அறிக. பாரதத்தின் மோக்கதருமத்தின்,

“ஆதலால் எனக்கான் மாவே யாம்உருத்திரனை முன்னர்க்
காதலால் அருச்சிக் கின்றேன் யான்”

-எனக் கண்ணன் கூறும் வாக்கியத்திற் சிவனைத் தனக்கு ஆன்மாவென்றுது அந்தரியாமி என்னும் பொருட்டேயாம்; தன்னாற் பூசிக்கப்படும் கடவுளாதற்கு உரியபொருள் அதுவேயாகலான் என்க.

இனி, வேதத்துட் கரும காண்டத்தின் “விண்டு பரமன், அங்கி அவமன், அவ்விருவர்க்கும் இடையே யெல்லாத் தேவரும்” என்றது, ஆண்டுச் செய்வதொரு வேள்வி விசேடத்தின் அவிர்ப்பாகம் ஏற்கும் முறைமையின், “விண்டு முந்தினவன் அங்கி பிந்தினவன் அவ்விருவர்க்கும் இடையே ஏனைத் தேவர் எல்லாம்” என்னும் பொருட்டாகலின், ஆண்டுப் “பரமம் அவமம்” என்பன, “ஆதி அந்தம்” எனவே பொருள்படுமாறு காண்க. இவ்வாறன்றி ஆண்டுப் “பரமன்” என்றதற்கு விண்டு எல்லாக் கடவுளர்க்கும் மேற்பட்டவன் என்றும், “அங்கி அவமன்” என்றதற்கு அங்கி எல்லாக் கடவுளர்க்கும் கீழ்ப்பட்டவன் என்று பொருள் கொள்ளின், “அங்கி கடவுளர்க்குள் மேற்பட்டவன்” என்று ஆண்டாண்டுக் கூறும் சுருதி மிருதி புராணங்கள் பலவற்றோடும் முரணும் என்று ஒழிக. இவ்வாறு முன்னோடுபின் முரணாமைப் பொருள்கொள்ள அறியாது, “விண்டு ஆன்மா” என்றது பற்றியும், “விண்டு பரமன்” என்றது பற்றியும் விண்டுவுக்கு முதன்மை கோடல் பொருந்தாமை அறிக. இன்னும் வருவனவெல்லாம் இவ்வாறே ஓர்ந்து உணர்க.

சிவாக்கிர பாடியம், முதற்சூத்திரம்

பாஞ்சராத்திரிகள் இன்னும் கூறுமாறு:- அரசன் உலாப் போதுங்காலைத் தொகுதி தொகுதியாகச் செல்வாருள் அரசனாவான் இவன் என்பது ஆடை அணி யானை குதிரை முதலிய வைபவம் பற்றித் துணியப்படாதாம்; என்னை? அவை அமைச்சர் படைத்தலைவர் முதலியோர்க்கும் பொது; அல்லதூஉம், அரசன் உவகையுற்றுழி அமைச்சர் முதலாயினார்க்குத் தன்னினும் மிக்கவரிசைகள் அளித்தலும் உண்டு ஆகலின். அதுபோல, வேதத்துள் கூறப்படும் கடவுளருள் பரப்பிரமப்பொருளாவான் இவன் என்பது ஏனைப் பெருமைகளால் துணியப்படாதாம். மற்றுக் கிரீடம்கவித்து வெண்கொற்றக்குடை நிழற்கீழ் வருதல் ஒன்றேபற்றி அரசனாவான் இவன் என்பது துணியப்படுமாறு போலக், காரணவாக்கியங்களுட் படைப்பு முதலியவற்றிற்குக் காரணமாகக் கூறப்படுதல் ஒன்றேபற்றி அவனே பரப்பிரமம் என்பது துணியப்படும். காரணப்பொருளாவான் நாராயணனே என்பது சுபாலமுதலிய உபநிடதங்களிற் காணப்படும்.

அற்றேல், சில உபநிடங்களில் காணப்படும் காரணப்பொருள் “சத்து” என்றும், “பிரமம்” என்றும், “ஆன்மா” என்றும், இங்ஙனம் பொதுவகையானும்; “இரணியகருப்பன்” என்றும், “சிவன்” என்றும், “உருத்திரன்” என்றும் இங்ஙனம் சிறப்புவகையானும் வெவ்வேறு பெயரான் எடுத்தோதவும் படுமாலோ வெனின், - அற்றன்று; சுபால முதலியவற்றுள் காரணப்பொருள் நாராயணன் என்றது உலகம்|௯௨|தோன்றும் முறைமை எடுத்துக்கொண்டவழிக் கூறப்பட்டதாகலின் அதுவே உண்மைப்பொருள் எனவும், “சத்து” “பிரமம்” “ஆன்மா” என்றற் றொடக்கத்துப் பொதுப்பெயர்கள் சாகபசு நியாயம் பற்றி நாராயணனையே உணர்த்தி நிற்கும்; இரணியகருப்பன் முதலிய சிறப்புப் பெயர்களும் காரணப்பெயராய் நாராயணனையே உணர்த்தி நிற்கும்; அங்ஙனமன்றி இடுகுறிப்பெயர் காரணப்பெயரை காரணத்தை விலக்கும் எனக் கொள்ளினும் ஆகுபெயராய்த்தான், மாயோனுடைய ஆயிரம்பெயர்க்குள் சிவன் முதலிய நாமங்களும் எடுத்தோதுலின், இடுகுறியாய்த்தான், நாராயணனையே உணர்த்திநிற்கும் எனவும் கொள்ளப்படும் என்க.

அற்றேல், நாராயணன் முதலிய மாயோன் பெயர்களும் காரணக்குறியாய்ச் சிவனையே உணர்த்திநிற்கும் ஆகலின், காரணப்பொருள் சிவன் என்னும் உபநிடதங்களே வலியுடைய என மாறிக்கொள்ளிற் படும் இழுக்கு என்னையெனின்,- அற்றன்று; மாயோன் பெயருள் ஏனையவெல்லாம் காரணக்குறியாய் வேறொரு கடவுளை உணர்த்தும் எனக் கொள்ளினும், நாராயணன் என்னும் பெயர் இடுகுறிப் பெயர் ஆதலேயன்றி, ஏனைப்பெயர்கள் போலக் காரணப்பெயரும் ஆம் என்றற்கு ஏலாது. அஃது எங்ஙனம்எனின், - நாரம் என்பது நீர், அயனம் என்பது இடம், நாரம் அயனாக உடையவன் நாராயணன் என அன்மொழித் தொகையாய், இருமொழியும் புணர்ந்தவழி “ரகரத்தின் முன் வந்த நகரம் ஒருமொழிக் கண்ணதாயின் ணகரமாய்த் திரியும்; உயிரெழுத்துக்களும் யகரவகரங்களும் ககர பகர வருக்கங்களும் இடையே நிற்பினும் அங்ஙனம் திரியும்; ரகரம் நிலைமொழிக்கண்ணதாக நகரம் வருமொழிக்கண்ணதேல் இடுகுறிப்பெயராயின் ணகரமாய்த் திரியும்” என்பது பாணிநி சூத்திரமாகலின், நாராயணன் என்பதனைக் காரணக்குறியாக்குவார்க்கு நகரம் ணகரமாய்த் திரியும் என்றற்கு ஓத்தில்லை என்பது. அற்றாகலினன்றே சிவன் முதலிய பெயர்போல அவயவப்பொருள்பற்றிக் காரணக்குறியாய் மற்றொருகடவுளை உணர்த்துதல் பெறாத நாராயணன் என்னும் சிறப்புப்பெயரால் சுபாலமுதலியவற்றின் எடுத்தோதியதூஉம் என்க என்று இங்ஙனம் பிதற்றுவர். இவை அனைத்|௯௩|தும் சுவேதாச்சுவதரம் முதலிய உபநிடதங்களை ஓதி உணராத மடவோர் கூற்றேயாம் என மறுக்க.

படைப்பு முதலியவற்றிற்குக் காரணமாதல் ஒன்றே பிரமத்திற்குச் சிறந்த இலக்கணம் என்பது ஒக்கும். அதுபற்றியன்றே பரப்பிரமப்பொருள் பரமசிவனேயெனத் துணிந்தாம் என்க. சுபாலம் முதலிய உபநிடதங்கள் உலகம் தோன்றி ஒடுங்கும் முறைமை உணர்த்தப் புகுந்தனவன்றிக், காரணப்பொருளை உணர்த்தப் புகுந்தனவல்ல. இடையே இயைபுபற்றிக் காரணப்பொருளும் உடன்கூறப்பட்டது. சுவேதாச்சுவதரத்தின் அவ்வாறன்றிச், சுபாலம் முதலியவற்றுள் பொதுவகையான் உணர்ந்த காரணப்பொருளைச் சிறப்புவகையான் உணர்த்தற்பொருட்டுக், “காரணமாகிய பிரமம் யாது?” என முனிவர் வினாவும் வினாவை முதற்கண் எடுத்துக்கொண்டு, உபநிடதம் முழுவதும் பரமசிவனுக்குரிய சிறப்புப் பெயர்களாற் பரமேசுவரன் பெருமையை விளங்கக் கூறுதலானும், இவ்வாறு ஏனை உபநிடதங்களுள் முதற்கண் எடுத்துக்கொள்ளாமையானும், ஏனைய உபநிடதங்களினும் சுவேதாச்சுவதரம் வலியுடைத்து ஆகலான் அதனுள் கூறப்படும் காரணப்பொருளாகிய பரமசிவனே பரப்பிரமம் எனவும், ஏனைக் காரண வாக்கியங்களுள் கூறும் பெயர்கள் எல்லாம் சாகபசு நியாயத்தாற் பரமசிவனையே உணர்த்திநிற்கும் எனவும், இரணியகருப்பன் நாராயணன் முதலிய சிறப்புப்பெயர்களும் அவயவப்பொருள் பற்றிக் காரணப்பெயராய்த்தான், அங்ஙனமன்றி ஆகுபெயராய்த்தான், பரமசிவனையே உணர்த்திநிற்கும் எனவும் உணர்க. எல்லாப்பெயரும் பரமசிவன் பெயரென்பதே வேதத்தின் துணிபு என்பது ஆண்டுக்காண்க.



பார்க்க
[தொகு]

சிவஞான பாடியம்

சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம்

சிவஞான போதம்- மங்கலவாழ்த்து

சிவஞான போதம்- அவையடக்கம்

சிவஞானபோதம்