ஆளுடையவடிகள் அருள்மாலை
Appearance
ஆளுடைய அடிகள் அருள்மாலை
[தொகு]- (திருவருட்பா - நான்காந் திருமுறை)
- குறிப்பு: ஆளுடையவடிகள் என்று இங்குக் குறிக்கப்படுவோர் மாணி்க்கவாசக அடிகள் ஆவார்; திருவாசகம் அருளிய பெருந்தகை!)
- திருச்சிற்றம்பலம்
- (தரவுக் கொச்சகக் கலிப்பா)
பாடல் 01 (தேசகத்தில்)
[தொகு]- தேசகத்தி லினிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க
- வாசகனே யானந்த வடிவான மாதவனே
- மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்
- ஆசகன்ற வநுபவநா னநுபவிக்க வருளுதியே.
பாடல் 02 (கருவெளிக்குட்)
[தொகு]- கருவெளிக்குட் புறனாகிக் கரணமெலாங் கடந்துநின்ற
- பெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றோர்
- குருவெளிக்கே நின்றுழலக் கோதறநீ கலந்ததனி
- உருவெளிக்கே மறைபுகழு முயர்வாத வூர்மணியே.
பாடல் 03 (மன்புருவ)
[தொகு]- மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம்
- என்புருவாய்த் தவஞ்செய்வா ரெல்லாரு மேமாக்க
- அன்புருவம் பெற்றதன்பின் னருளுருவ மடைந்துபின்னர்
- இன்புருவ மாயினைநீ யெழில்வாத வூரிறையே.
பாடல் 04 (உருவண்டப்)
[தொகு]- உருவண்டப் பெருமறையென் றுலகமெலாம் புகழ்கின்ற
- திருவண்டப் பகுதியெனுந் திருவகவல் வாய்மலர்ந்த
- குருவென்றெப் பெருந்தவருங் கூறுகின்ற கோவேநீ
- இருவென்ற தனியகவ லெண்ணமெனக் கியம்புதியே.
பாடல் 05 (தேடுகின்ற)
[தொகு]- தேடுகின்ற வானந்தச் சிற்சபையிற் சின்மயமாய்
- ஆடுகின்ற சேவடிக்கீ ழாடுகின்ற வாரமுதே
- நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன்
- வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருக்கான் மாற்றுதியே.
பாடல் 06 (சேமமிகு)
[தொகு]- சேமமிகுந் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ்
- மாமணியே நீயுரைத்த வாசகத்தை யெண்ணுதொறுங்
- காமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற
- ஏமமுறு கற்புடையா ளின்பினுமின் பெய்துவதே.
பாடல் 07 (வான்கலந்த)
[தொகு]- வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
- நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
- தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
- ஊன்கலந்து வுயிர்கலந்து வுவட்டாம லினிப்பதுவே.
பாடல் 08 (வருமொழிசெய்)
[தொகு]- வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்
- ஒருமொழியே யென்னையுமென் னுடையனையு மொன்றுவித்துத்
- தருமொழியா மென்னிலினிச் சாதகமேன் சஞ்சலமேன்
- குருமொழியை விரும்பியயல் கூடுவதேன் கூறுதியே.
பாடல் 09 (பெண்சுமந்த)
[தொகு]- பெண்சுமந்த பாகப் பெருமா னொருமாமேல்
- எண்சுமந்த சேவகன்போ லெய்தியதும் வைகைநதி
- மண்சுமந்து நின்றதுமோர் மாறன் பிரம்படியாற்
- புண்சுமந்து கொண்டதுநின் பொருட்டன்றோ புண்ணியனே.
பாடல் 10 (வாட்டமிலா)
[தொகு]- வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசகத்தைக்
- கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
- வேட்டமுறும் பொல்லா விலங்குகளு மெய்ஞ்ஞான
- நாட்டுமுறு மென்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே.
- திருச்சிற்றம்பலம்
வள்ளற்பெருமான் அருளிய ஆளுடைய அடிகள் அருண்மாலை முற்றியது.
[தொகு]- பார்க்க
- [[]] [[]] [[]] [[]] [[]] [[]]