ஆளுடையநம்பிகள் அருள்மாலை
Appearance
ஆளுடைய நம்பிகள் அருள்மாலை
[தொகு]- (ஆளுடைய நம்பிகள் என்று குறிக்கப்படுவோர் சுந்தரர் ஆவார். இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்ட பெருமையுடையவர். வன்றொண்டர் எனும் சிறப்புப்பெயர் பெற்றவர்.)
- திருச்சிற்றம்பலம்
- (கொச்சகக்கலிப்பா)
பாடல் 01 (மதியணிசெஞ்)
[தொகு]- மதியணிசெஞ் சடைக்கனியை மன்றுணடம் புரிமருந்தைத்
- துதியணிசெஞ் சுவைப்பொருளிற் சொன்மாலை தொடுத்தருளி
- விதியணிமா மறைநெறியு மெய்ந்நிலையா கமநெறியும்
- வதியணிந்து விளங்கவைத்த வன்றொண்டப் பெருந்தகையே.
பாடல் 02 (நீற்றிலிட்ட)
[தொகு]- நீற்றிலிட்ட நிலையாப்புன் னெறியுடையார் தமைக்கூடிச்
- சேற்றிலிட்ட கம்பமெனத் தியங்குற்றேன் றனியாளாய்
- ஏற்றிலிட்ட திருவடியை யெண்ணியரும் பொன்னையெலாம்
- ஆற்றிலிட்டுக் குளத்தெடுத்த வருட்டலைமைப் பெருந்தகையே.
பாடல் 03 (இலைக்குளநீ)
[தொகு]- இலைக்குளநீ ரழைத்ததனி லிடங்கருற வழைத்ததன்வாய்த்
- தலைக்குதலை மதலையுயிர் தழைப்பவழைத் தருளியநின்
- கலைக்கும்வட கலையின்முதற் கலைக்குமுறு கணக்குயர்பொன்
- மலைக்குமணு நிலைக்குமுறா வன்றொண்டப் பெருந்தகையே.
பாடல் 04 (வேதமுதற்)
[தொகு]- வேதமுதற் கலைகளெலாம் விரைந்துவிரைந் தனந்தமுறை
- ஓதவவைக் கணுத்துணையு முணர்வரிதா மெம் பெருமான்
- பாதமலர் நினதுதிருப் பணிமுடிமேற் படப்புரிந்த
- மாதவம்யா துரைத்தருளாய் வன்றொண்டப் பெருந்தகையே.
பாடல் 05 (ஏழிசையாய்)
[தொகு]- ஏழிசையா யிசைப்பயனா யின்னமுதா யென்னுடைய
- தோழனுமா யென்றுமுன்னீ சொன்னபெருஞ் சொற்பொருளை
- ஆழநினைத் திடிலடியே னருங்கரணங் கரைந்துகரைந்
- தூழியிலின் புறுவதுகா ணுயர்கருணைப் பெருந்தகையே.
பாடல் 06 (வான்காண)
[தொகு]- வான்காண விந்திரனு மாலயனு மாதவருந்
- தான்காண விறையருளாற் றனித்தவள யானையின்மேற்
- கோன்காண வெழுந்தருளிக் குலவியநின் கோலமதை
- நான்காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே.
பாடல் 07 (தேன்படிக்கு)
[தொகு]- தேன்படிக்கு மமுதாமுன் றிருப்பாட்டைத் தினந்தோறும்
- நான்படிக்கும் போதென்னை நானறியே னாவொன்றோ
- ஊன்படிக்கு முளம்படிக்கு முயிர்படிக்கு முயிர்க்குயிருந்
- தான்படிக்கு மநுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே.
பாடல் 08 (இன்பாட்டுத்)
[தொகு]- இன்பாட்டுத் தொழிற்பொதுவி லியற்றுகின்ற வெம்பெருமான்
- உன்பாட்டுக் குவப்புறல்போ லூர்பாட்டுக் குவந்திலரென்
- றென்பாட்டுக் கிசைப்பினுமென் னிடும்பாட்டுக் கரணமெலாம்
- அன்பாட்டுக் கிசைவதுகா ணருட்பாட்டுப் பெருந்தகையே.
பாடல் 09 (பரம்பரமாந்)
[தொகு]- பரம்பரமாந் துரியமெனும் பதத்திருந்த பரம்பொருளை
- உரம்பெறத்தோ ழமைகொண்ட வுன்பெருமை தனைமதித்து
- வரம்பெறநற் றெய்வமெலாம் வந்திக்கு மென்றாலென்
- தரம்பெறவென் புகல்வேனான் றனித்தலைமைப் பெருந்தகையே.
பாடல் 10 (பேரூரும்)
[தொகு]- பேரூரும் பரவைமனப் பிணக்கறவெம் பெருமானை
- ஊரூரும் பலபுகல வோரிரவிற் றூதனெனத்
- தேரூருந் திருவாரூர்த் தெருவுதொறு நடப்பித்தாய்
- ஆரூர நின்பெருமை யயன்மாலு மளப்பரிதே.
- திருச்சிற்றம்பலம்
அருட்பிரகாச வள்ளலார் பாடியருளிய ஆளுடையநம்பிகள் அருள்மாலை முற்றும்.
[தொகு]- பார்க்க