உள்ளடக்கத்துக்குச் செல்

ஆளுடையவடிகள் அருள்மாலை

விக்கிமூலம் இலிருந்து

ஆளுடைய அடிகள் அருள்மாலை

[தொகு]
(திருவருட்பா - நான்காந் திருமுறை)


குறிப்பு: ஆளுடையவடிகள் என்று இங்குக் குறிக்கப்படுவோர் மாணி்க்கவாசக அடிகள் ஆவார்; திருவாசகம் அருளிய பெருந்தகை!)


திருச்சிற்றம்பலம்


(தரவுக் கொச்சகக் கலிப்பா)


பாடல் 01 (தேசகத்தில்)

[தொகு]
தேசகத்தி லினிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க
வாசகனே யானந்த வடிவான மாதவனே
மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்
ஆசகன்ற வநுபவநா னநுபவிக்க வருளுதியே.


பாடல் 02 (கருவெளிக்குட்)

[தொகு]
கருவெளிக்குட் புறனாகிக் கரணமெலாங் கடந்துநின்ற
பெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றோர்
குருவெளிக்கே நின்றுழலக் கோதறநீ கலந்ததனி
உருவெளிக்கே மறைபுகழு முயர்வாத வூர்மணியே.


பாடல் 03 (மன்புருவ)

[தொகு]
மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம்
என்புருவாய்த் தவஞ்செய்வா ரெல்லாரு மேமாக்க
அன்புருவம் பெற்றதன்பின் னருளுருவ மடைந்துபின்னர்
இன்புருவ மாயினைநீ யெழில்வாத வூரிறையே.


பாடல் 04 (உருவண்டப்)

[தொகு]
உருவண்டப் பெருமறையென் றுலகமெலாம் புகழ்கின்ற
திருவண்டப் பகுதியெனுந் திருவகவல் வாய்மலர்ந்த
குருவென்றெப் பெருந்தவருங் கூறுகின்ற கோவேநீ
இருவென்ற தனியகவ லெண்ணமெனக் கியம்புதியே.


பாடல் 05 (தேடுகின்ற)

[தொகு]
தேடுகின்ற வானந்தச் சிற்சபையிற் சின்மயமாய்
ஆடுகின்ற சேவடிக்கீ ழாடுகின்ற வாரமுதே
நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன்
வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருக்கான் மாற்றுதியே.


பாடல் 06 (சேமமிகு)

[தொகு]
சேமமிகுந் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ்
மாமணியே நீயுரைத்த வாசகத்தை யெண்ணுதொறுங்
காமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற
ஏமமுறு கற்புடையா ளின்பினுமின் பெய்துவதே.

பாடல் 07 (வான்கலந்த)

[தொகு]
வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து வுயிர்கலந்து வுவட்டாம லினிப்பதுவே.


பாடல் 08 (வருமொழிசெய்)

[தொகு]
வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்
ஒருமொழியே யென்னையுமென் னுடையனையு மொன்றுவித்துத்
தருமொழியா மென்னிலினிச் சாதகமேன் சஞ்சலமேன்
குருமொழியை விரும்பியயல் கூடுவதேன் கூறுதியே.


பாடல் 09 (பெண்சுமந்த)

[தொகு]
பெண்சுமந்த பாகப் பெருமா னொருமாமேல்
எண்சுமந்த சேவகன்போ லெய்தியதும் வைகைநதி
மண்சுமந்து நின்றதுமோர் மாறன் பிரம்படியாற்
புண்சுமந்து கொண்டதுநின் பொருட்டன்றோ புண்ணியனே.


பாடல் 10 (வாட்டமிலா)

[தொகு]
வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசகத்தைக்
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளு மெய்ஞ்ஞான
நாட்டுமுறு மென்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே.


திருச்சிற்றம்பலம்


வள்ளற்பெருமான் அருளிய ஆளுடைய அடிகள் அருண்மாலை முற்றியது.

[தொகு]
பார்க்க

அருட்பிரகாச வள்ளலார் பாடல்கள்

வயித்தியநாதர் பதிகம்
திருவடிப் புகழ்ச்சி
வள்ளலார் பாடல்கள் - தெரிவுசெய்யப்பட்டவை
ஆளுடைய அரசுகள் அருள்மாலை
ஆளுடையநம்பிகள் அருள்மாலை
[[]] [[]] [[]] [[]] [[]] [[]]
"https://ta.wikisource.org/w/index.php?title=ஆளுடையவடிகள்_அருள்மாலை&oldid=17329" இலிருந்து மீள்விக்கப்பட்டது