உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தை பெரியார் சிந்தனைகள்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

தந்தை பெரியார் சிந்தனைகள்




சென்னைப் பல்கலைக் கழகப்
பேராசிரியர் சி. அ.பெருமாள்
அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் 2001



'தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி'
பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார்
M.A., B.Sc., LT, Vidwan, Ph.D.D.Lit.
தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம்
சென்னைப் பல்கலைக் கழகம்



யாழ் வெளியீடு
1108 ஏ.பி, தென்றல் குடியிருப்பு
3ஆவது தெரு, மேற்கு அண்ணாநகர்,
சென்னை-40.

நூல் விவரம்


நூற்பெயர்: தந்தை பெரியார் சிந்தனைகள்

ஆசிரியர்: டாக்டர் ந. சுப்புரெட்டியார்

பொருள்: சொற்பொழிவுகள்

© உரிமை: ஆசிரியர்க்கு

பதிப்பு: முதற்பதிப்பு, நவம்பர் 2001

பக்கங்கள்: XVI + 184 = 200

தாள் வகை: வெள்ளைத்தாள் 11.6 கி.கி.

அச்சுப் புள்ளி: 11 Pt

வெளியீடு:
யாழ் வெளியீடு
1108, ஏ.பி, தென்றல் குடியிருப்பு,
3ஆவது தெரு, மேற்கு அண்ணாநகர்,
சென்னை-40.

தொலைபேசி: 6267768

_______________________________________________________________
விலை: ரூ.85.00
_______________________________________________________________


ஒளி அச்சு: சிவா கிராஃபிக்ஸ், சென்னை-600 024.
அச்சிட்பேர்: ரவிராஜா ஆப்செட், சென்னை - 600 014.



‘'ஏறக்குறைய எண்பதாண்டுக்காலம்'’
தொடர்ந்து நடைபெற்ற'’
தந்தை பெரியார் அவர்களின்'’
‘'நல்லுபதேச மொழிகளால் விழிப்படைந்த'’
‘'பெரியார்வழி நடப்பவர்க்கு'’

அன்புப் படையல்


‘'புறத்தினில் வெளுத்தும் அகத்தினில் கறுத்தும்'’
பொய்தனை மெய்யெனப் பேசும்'’
‘'திறத்தொடு நாளும் தீமையே புரிந்து'’
திரிந்திடு மாந்தர்கள் நடுவே'’
‘'புறத்தினில் கறுத்தும் அகத்தினில் வெளுத்தும்'’
பொருந்திய சொல்லோடும் செயல்களை'’
‘'அறத்தினிற் பிறழா துணர்ந்தநம் பெரியார்'’
அன்பர்கட் கிந்தநூல் படையல்!'’

இராம வீரப்பன்

9, திருமலை சாலை,

சென்னை-600 017.

தொலைபேசி: 8266866

நாள் 10.10.2001


வாழ்த்துரை


தமிழ் மூதறிஞரும், அறிவியல் இலக்கிய ஆர்வலருமாக விளங்குகிற பெரியவர் பேராசிரியர் டாக்டர் ந.சுப்புரெட்டியார் அவர்கள். “தந்தை பெரியார் சிந்தனைகள்” என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவுகள் நூலாக உருப்பெற்றிருக்கிறது.

இந்த நூலில் மொத்தம் 194 தலைப்புகளில் கருத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்ச்செம்மல் கலைமாமணி டாக்டர் சுப்புரெட்டியார் அவர்கள் அருமையான பல தமிழ் நூல்களை ஆக்கியிருக்கிறார்கள். என்றாலும் தந்தை பெரியாரைப் பற்றிய இந்த ஆய்வு நூல் பல வகையிலும் சிறப்புப் பெறுகிற நூலாகும்.

ஏனெனில் தமிழ் இலக்கியங்களில் அல்லது தமிழ்நாட்டில், எந்தத் தலைப்பிலும் யாரைப் பற்றியும் எழுதுவது அல்லது ஆய்வு செய்வது மிக எளிதாகும்.

ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமுதாயத்தைத் தட்டி எழுப்பிய தந்தை பெரியாரைப் பற்றி, அவருடைய சிந்தனைகளைக் குறித்து ஆய்வு செய்வது என்பது, சர்க்கஸ்காரன் கம்பி மேல் நடப்பது போன்ற ஒரு காரியமாகும்.

ஏனெனில் தந்தை பெரியார் இந்த மண்ணில் பல்வேறு வகையான சிந்தனை விதைகளை விதைத்திருக்கிறார். தந்தை பெரியாருடைய குணம், கருத்துக்களை விதைத்துவிட்டுச் செல்வாரே தவிர, அது முளை விட்டதா, வளர்ந்து வருகிறதா என்பதைப் பற்றிக் கவலைப்படாதவர்.

ஏனெனில் விதைப்பதுதான் அவருடைய நோக்கமே தவிர, அது விளைந்து பலன் தருகிறதா என்று பார்த்து, அந்தப் பலனை அனுபவிப்பதற்காகக் காத்திருப்பது அவருடைய நோக்கம் அல்ல; அவருடைய பழக்கமும் அல்ல.

அவர் விதைத்த விதைகள் முளையிட்டு, செடியாகி வளர்ந்து மரமாகி சிலவற்றில் பலன் தந்து கொண்டிருக்கிறது என்றால், அவரைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா போன்ற தலைசிறந்த தொண்டர்கள் தந்தை பெரியாருக்குக் கிடைத்த பலன்தான். 

ஆனால் தந்தை பெரியார் இந்த விதைகளை விதைப்பதற்குச் சந்தித்த எதிர்ப்புகள், நெருக்கடிகள், ஏளனங்கள், ஏசல்கள் இவைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு எதிர்த்து இக்கருத்துக்களை விதைப்பதற்குரிய வலிமையை தமிழ் மண்ணில் தந்தை பெரியார் மாத்திரமே பெற்றிருந்தார். அதனால்தான் ‘பெரியார்’ என்று புகழப்பட்டார். ‘செயற்கரிய செய்வர் பெரியார்’ என்று போற்றப்பட்டார்.

எனவேதான், தந்தை பெரியாருடைய கருத்துக்களை, சிந்தனைகளை எடுத்து ஆய்வு செய்வதென்பதிலேயே பல சிக்கல்கள் தோன்றுவது இயல்பு. ஆனால் பெரியவர் பேராசிரியர் சுப்புரெட்டியார் அவர்கள் மிக அருமையாக இந்த ஆய்வினை நிறைவேற்றியிருக்கிறார்.

ஏனெனில் பேராசிரியர் டாக்டர் சுப்புரெட்டியார் அவர்கள் ஆழ்ந்த தமிழறிவு படைத்தவர். விஞ்ஞான நூல்களைக் கற்றவர். தொன்மை எது, பழமை எது என்று பேதத்தைப் புரிந்தவர். தத்துவங்கள் சில நேரங்களில் நடைமுறை உண்மையோடு மோதுகின்ற சூழல்களை உணர்ந்தவர். பண்பாடு, நாகரிகம், கலை, கலாச்சாரம், இலக்கியம், அறிவியல் என்ற பல பெயர்களாலே அழைக்கப்படுகிற செயற்பாடுகளின் ஒட்டுமொத்தக் கலவைதான் மனித வாழ்க்கை என்பதிலே நம்பிக்கை உள்ளவர்- பற்றுள்ளவர். இவைகளுக்கிடையே சமரசம் காண வேண்டும் என்று கருதுபவர்.

ஆனால் தந்தை பெரியார் மனித வாழ்க்கைக்கு, முன்னேற்றத்திற்கு தடை என்று தோன்றுகிற எல்லாவற்றையுமே தகர்த்தெறிய வேண்டும் என்று எண்ணுகிறவர்.

இந்தச் சிந்தனை முரண்பாடுகளுக்கிடையில் தந்தை பெரியார் சிந்தனைகளைப் பற்றி ஒரு அற்புதமான ஆய்வை, பயனுள்ள ஆய்வை தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை மிகச் சிறப்பாக வழங்கியிருக்கிறார்.

பேராசிரியர் சுப்புரெட்டியார் அவர்களுடைய ஆழ்ந்த அறிவும், நீண்ட அனுபவமும், மிகுந்த பொறுப்புணர்வும் தமிழ் மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய இந்த நூலை உருவாக்கத் துணை நின்றிருக்கிறது. இந்தச் சிறந்த பணிக்காக என்னுடைய வணக்கத்தையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

வாழ்க பேராசிரியர் சுப்புரெட்டியார், வளர்க அவருடைய அறிவிலக்கிய ஆய்வு என்று மீண்டும் வாழ்த்துகிறேன்.

- இராம. வீரப்பன்

அணிந்துரை
(பேராசிரியர் டாக்டர் இரா. தாண்டவன் அவர்கள்)

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறது குறிஞ்சி மலர். பன்னூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பன்னூறு ஆயிரம் பேர்களில் ஒருவர் தலைவர் ஆகிறார். தமிழர்க்கு காலம் தவமிருந்து பெற்றளித்த தலைவர் தந்தை பெரியார், ஈ.வெ.ரா. அவர்கள்.

நூற்றுக்கணக்கான மலைகள் ஆயினும் நோக்கமுடியாத உயரம் இமயம்! அலைகள் ஆயிரக்கணக்கானவைகள் எனினும் அளக்கமுடியாத ஆழம் கடல்! இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய தலைவர்கள் எண்ணற்றோர்! மக்களின் மனதில் நிற்பவர்களோ மிகச் சிலரே. மிகச் சிலரில் முதன்மை இடம் வகிப்பவர் தந்தை பெரியார்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன்முதலில் பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பிய பெருமை சித்தர்களைச் சாரும். “கோயிலாவதேதடா! குளங்களாவதேதடா!” “நட்ட கல்லும் பேசுமோ - நாதன் உள்ளிருக்கையில்” என்று பல நிலைகளில் எடுத்தியம்பினர். ஆனால் சித்தர்களின் சித்தாந்தங்களினால் பாமரமக்களின் மத்தியில் பயன் பெரிய அளவில் விளையவில்லை என்றே கூறலாம். சித்தர்களுக்குப் பிறகு பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பத் தமிழில் எளிய வழிகளில் எல்லோரும் புரிந்துகொள்ளும்படி விளங்கப்பேசி மக்களைத் தட்டியெழுப்பிய பெரும்ை தந்தை பெரியாரையே சாரும்.

சென்னை பல்கலைக் கழக அண்ணா பொதுவாழ்வியல் மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள பேராசிரியர் சி.அ. பெருமாள் அவர்களின் அறக்கட்டளைச் சொற்பொழிவுக்காக (2001) பேராசிரியர் டாக்டர் ந.சுப்புரெட்டியார் அவர்களை அணுகியபோது அவர் “வெண்தாடி வேந்தர் ஈ.வெ.ராவைப் பற்றிப் பேச முன்வந்தார். தள்ளாத வயதிலும் தமிழ்ப் பணியாற்றும் பல்துறை அறிஞர், பல்கலைச் செம்மல் பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் மிகுந்த ஆராய்ச்சிப் பாங்கோடு தந்தைப் பெரியாரைப்பற்றி அரியதொரு ஆய்வுப் பேருரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய மூன்று சொற்பொழிவுகளைத் தொகுத்து ‘தந்தை பெரியார் சிந்தனைகள்’ எனத் தலைப்பிட்டு மிகச் சிறந்த இந்த நூலை உருவாக்கியுள்ளார். திருமிகு வே.ஆனைமுத்து அவர்களின் ‘ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ என்ற நூலை தமிழுலகம் நன்கறியும். அது ஒருமுறையில் சம்பிரதாயப் போக்கில் அமைந்தது. பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் புதிய நோக்கிலே, புதிய சிந்தனையுடன் தந்தை அவர்களின் சிந்தனைகளை நூலாக அமைத்து வெளியிடுவதை எண்ணி நெஞ்சு மகிழ்கின்றேன்.

ஈ.வெ.ரா. அவர்கள் தொடாத துறைகள் இல்லை. அவர் தொட்ட துறைகள் துலங்காமல் போனதும் இல்லை. அத்தகையாரின் சிந்தனைகளை மூன்று பெரும் தலைப்புகளின்கீழ் அமைத்து ஈ.வெ.ரா.வின் கொள்கைகளில் உள்ள ஆழ்ந்த சிந்தனைகள் என்ன என்பதை தமிழுலகிற்கு நூலாசிரியர் தெளிவுபடுத்துகிறார்.

பெரியாரின் சிந்தனைகளில் முதலிடம் வகிப்பது கடவுள் மறுப்புக் கொள்கை. தந்தை பெரியார் என்றாலே கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர் என்றுதான் இன்றும் தமிழுலகம் எண்ணிக் கொண்டுள்ளது. அவரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளின் பின்னணியில் அமைந்த அடிப்படைக் காரணங்களை மிக விரிவாகத் தெளிவுபடுத்தியுள்ளார் பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் அவர்கள்.

தமிழினை முட்டாள் ஆக்குவது கடவுள்; அதை ஒழிப்பதுதான் எங்கள் வேலை. தமிழனை இழிவுபடுத்துவது சாத்திரம், மதம், புராணம். அவற்றை ஒழிப்பதும் நெருப்பிலிட்டுக் கொளுத்துவதும்தான் எங்கள் வேலை. (ப. 42)

“மனிதனை இழிவுபடுத்துவதற்கும் பகுத்தறிவற்ற தன்மைக்கும் கடவுள் நம்பிக்கை காரணமாக அமைவதால் அதை ஒழித்துக்கட்ட வேண்டும்; கடவுள்மேல் எங்களுக்கு எவ்வித கோபமும் இல்லை” என்ற வரிகளின் மூலம் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையின் பின்னணியில் மனித சமுதாயத்தின் உயர்வுதான் அடிப்படையாக அமைந்துள்ளது என நிறுவுகிறார் நூலாசிரியர் சுப்புரெட்டியார் அவர்கள். சமயம் என்ற நிலையில் பெரியார் அவர்கள் “மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி - மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி - மதமே மனித சமூக சமதர்மத்திற்கு விரோதி” (ப. 45) என்றும் “இன்று மதமானது ஒருவரையொருவர் ஏய்க்கப் பயன்படுத்தப்பெறுகின்றதே அல்லாமல் தொல்லையில்லாதிருக்க நிம்மதியான வாழ்வு வாழ உதவுவதாக இல்லை. போலி வாழ்க்கைக்காரருக்குத் திரையாகவே மதமும் பத்திரிகையும் உதவுகின்றன” (ப.45) போன்ற பெரியாரின் சிந்தனைகளை தம் நூலில் ஆணித்தரமாகக் கூறி நிறுவுகிறார் நூலாசிரியர்.

“மக்கள் முன்னேற்றத்தில் மதம் வந்து தடைசெய்தால் அஃது எந்த மதமாக இருந்தாலும் ஒழித்துத்தான் ஆகவேண்டும். உன்னைப் பறையனாய்ப் படைத்தார்; அவனைப் பார்ப்பனனாய்ப் படைத்தார்; என்னைச் சூத்திரனாய்ப் படைத்தார்” என்று கடவுள்மேல் பழிபோடும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் கடவுள் ஒழிக்கப்பட வேண்டும்”(பக். 49) என்று தந்தை பெரியார் சிந்தித்ததை தெளிவாக விளக்குகிறார் நூலாசிரியர்.

தந்தை பெரியாரின் சமூகச் சிந்தனைகளை இரண்டாவது தலைப்பின்கீழ் விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார் நூலாசிரியர். சமூகம் என்ன என்பதைப் பெரியார்வழி நின்று விளக்குகிறார். மனிதன் ஒருபோதும் தனித்து வாழக்கூடியவன் அல்லன் - அப்படி வாழவும் அவனால் முடியாது; இங்ஙனம் வாழ்நாள் முழுவதும் சமூகப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் பெரியார். “நான் ஒரு நாத்திகன் அல்லன், தாராள எண்ணமுடையோன். நான் ஒரு தேசியவாதியும் அல்லன்; தேசாபிமானியும் அல்லன்; ஆனால் தீவிர சீவாதார எண்ணமுடையவன். எனக்குச் சாதி என்பதோ உயர்வு தாழ்வு என்பதோ இல்லை; அத்தகைய எண்ணத்தையே நான் எதிர்ப்பவன்; ஆதரிப்பவன் அல்லன்.” (ப. 57) எனக் கூறும் பெரியாரின் உள்ளக்கிடக்கையை நூலாசிரியர் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார்.

இதுபோன்று நாட்டில் எப்படிப்பட்ட ஆட்சிமுறை இருக்கவேண்டும்; திருமணம் எப்படி அமையவேண்டும்; திருமணத்திலுள்ள சமூக இழிவுக் கொடுமைகள் எப்படி ஒழிய வேண்டும்; மற்றும் மதுவிலக்கு ஆகியன பற்றிய பெரியாரின் சிந்தனகளை இந்நூலில் மிகவும் விரிவாக ஆய்வு செய்துள்ளார் நூலாசிரியர்.

மூன்றாவது நிலையில் தமிழ் மொழியின்மீது அவர் கொண்ட எண்ணம் என்ன என்பதை விளக்குகிறார். பெரியார் ஒரு காலகட்டத்தில் தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று கூறியவர் என்பதும் எண்ணத்தக்கது.

“நான் தமிழுக்குத் தொண்டு செய்வது தமிழுக்காக அல்ல; தாய்மொழியைப் பாதுகாத்தல் ஒவ்வொருவருடைய கடனுமாகும். நம் தமிழ்மொழி தாய்மொழி என்று மட்டுமல்லாமல் எல்லா வனப்புகளும் கொண்ட சிறந்த மொழி என்பதாலேயே” (ப. 131) என்ற பெரியாரின் கருத்துகளையும் “அவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர்; கட்டாய இந்தியை கல்லறைக்கு அனுப்பியவர்” போன்ற செய்திகளையும் தெளிவுபடுத்துகிறார் நூலாசிரியர். தந்தை பெரியார் தமிழை விமர்சனம் செய்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் யாரும் எண்ணிப் பார்க்காத காலகட்டத்தில் தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தன்னுடைய குடியரசு இதழில் வெளியிட்டு நடைமுறைப் படுத்தியவர். இவ்வெழுத்துச் சீர்திருத்தம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் அனைத்து நிலைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

தீண்டாமை, சாதி ஒழிப்பு, வருணாச்சிரமதர்மம் போன்றவற்றைப்பற்றிப் பெரியாரின் கருத்துகளைக் கூறும் நூலாசிரியர் மிகவும் தெளிந்த பார்வையோடு அவற்றை விளக்குகிறார். நம் நாட்டில் சாதி என்று எடுத்துக்கொண்டால் பார்ப்பான், சூத்திரன் என்கிற இரண்டுதான்: செட்டி, முதலி, பறையன், நாவிதன், வண்ணான் என்பவன் எல்லாம் அவனவன் செய்கிற தொழிலால் பிரிந்திருந்தவனே தவிர - பிரிக்கப்பெற்றவனே தவிர - மற்றபடி அவர்களுக்குள் எந்த பேதமும் இல்லை (பக். 86). “உத்தியோகத்தினால் ஒருவன் மேல்சாதியானால், கீழ்ச்சாதிக்காரனுக்கும் மேல்சாதியான் பெற்றிருக்கும் அளவுப்படியே உத்தியோகம் கொடுத்துக் கீழ்சாதித் தன்மையை ஒழி என்கிறேன். தகுதியால் ஒருவன் மேல்சாதியானால், மேல்சாதியான் பெற்றிருக்கும் தகுதிமுறையைக் கீழ்சாதியானும் பெறும் அளவுக்குத் தகுதியைக் கொடுத்து கீழ்ச்சாதித் தன்மையை ஒழி என்றுதான் நான் கூறுகிறேன்” (பக். 87) என்பன போன்ற பெரியாரின் கருத்துகளைப் பொருத்தமான முறையில் வகைப்படுத்தி விளக்கியுள்ள நூலாசிரியரின் திறமை வியந்து பாராட்டத்தக்கது.

தந்தை பெரியாரின் சிந்தனைகள் முழுவதையும் அப்படியே எழுதுவதாக இருந்தால் பல்லாயிரம் பக்கங்களாக நீளும் என்பதாலேயே நூலாசிரியர் பெரியாரின் சிந்தனைகளின் சாரங்களை மட்டும் அவற்றின் அசல் தன்மை மாறாமல் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.

இறுதியாக, தந்தை பெரியார் பற்றி, அறிஞர்களின் கருத்துகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளார் பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் அவர்கள்.

பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் அவர்கள் அறிவுத் தெளிவும் ஆழ்ந்த நுட்பமும் வாய்க்கப்பெற்றவர். முயன்று முடிக்கும் முயற்சியர். தான் ஆற்றிய மூன்று பொழிவுகளையும் காற்றில் கரைந்துவிடாமல் அதை நூலாக்கித் தமிழ்ச் சமுதாயத்திற்கு அளித்துள்ள பேராசிரியரை வாழ்த்த எனக்கு வயதில்லை என்பதால் வணங்கி மகிழ்கின்றேன். பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் மொழிக்காகவும், இனத்திற்காகவும் நாட்டிற்காகவும் நூல்கள் பல படைத்து அணி செய்ய வேண்டும் என்பது என் ஆழமான விழைவு.

-இரா. தாண்டவன்

சென்னை - 600 040
அக்டோபர் 17, 2001

நூல் முகம்


எவன் உயிர்க்கு உயிராய் எள்ளும்எண் ணெயும்போல்
எங்கணும் இடையுறா நின்றான்
எவன் அனைத்து உலகும் என்றுகாத் தளிக்க
இறைமைசால் மூவுருவு எடுத்தான்
எவன்முதல் இடைஈறு இன்றிஎஞ் ஞான்றும்
ஈறிலா மறைமுடி இருப்பான்
அவன்எனைப் புறக்கத் திருக்களா நீழல்
அமர்ந்தருள் புரிந்தனன் உள்ளே[குறிப்பு 1]

-அதிவீரராம பாண்டியன்


தந்தைப் பெரியாருடன் என் இளமைக் காலத்திலிருந்து அவர்தம் சொற்பொழிவைக் கேட்டும், நேரில் உரையாடியும், வாதிட்டும் பழகியவன். அதனால் வள்ளுவரின் ‘பெரியாரைத் துணைக்கோடல்’ (அதி. 45) குறிப்பிடும் ‘பெரியாருக்கு’ இவர் இலக்கியமாகின்றார் என்பது என் அசைக்க முடியாத முடிவு. அத்தகைய பெரியாரைப்பற்றி அண்ணா பொது வாழ்வியல் மையத்தில் (சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் டாக்டர் சி.அ.பெருமாள் அறக்கட்டளைப் பொழிவுகளாகப் 2001) பேசும் வாய்ப்பு தந்தமைக்குத் துணைவேந்தர் பேராசிரியர் பொன்.கோதண்டராமன் அவர்கட்கும் மையத்தின் துறைத் தலைவர் பேராசிரியர் இரா.தாண்டவன் அவர்கட்கும் என் உளங்கனிந்த நன்றியை உரித்தாக்குகின்றேன். தேசீய சொத்தாக வழங்கியுள்ள இராமாநுசர், தாயுமானவர், இராமலிங்க அடிகள், இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்களின் படைப்புகளை அறிஞர்கள் ஆராய்ந்து வருவதைப் போல் தந்தை பெரியாரின் எழுத்து, பேச்சுகளை அறிஞர்கள் என்றும் ஆய்ந்து வர வேண்டும் என்பது என் அகத்தில் படிந்துள்ள ஆழமான விழைவு. அவரை நாத்திகன் என்று ஒதுக்கிவிடுவது அறியாமை.

இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய திரு இராம. வீரப்பன் (எம்.ஜி.ஆர். கழகத் தலைவர்) அவர் அமைச்சராக இருந்த காலம் முதல் நான் அறிவேன். சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டையாண்ட நல்ல அமைச்சர்கள் சிலருள் இவர் முன்னணியில் நிற்பவர். எம்.ஜி.ஆர். ஐப் போலவே விரிந்த மனம் உள்ளவர். ஏழை, எளியவர்கள்பால் பாசமும் நேசமும் மிக்கவர். அவர்கள் வாழ்வு செழிக்க வேண்டும் என்ற பெருநோக்கம் கொண்டவர். பெரியார் வழி நின்று சாதி வேறுபாட்டைக் கடிபவர். பெரியார் கொள்கைகளுள் பலவற்றை ஏற்று நடப்பவர். பொது அறிவு (common sense) மிக்கவர். தமிழ்ப்பற்று மிக்கவர். தமிழ் வளர்ச்சிக்காகத் தம் வீட்டையும் ஈந்தவர் (வள்ளல் அழகப்பரைப் போல்). இத்தகைய பேரன்பர் இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியது இந்நூலின் பேறு; என் பேறும் கூட. வாழ்த்துரை வழங்கிய வள்ளலுக்கு என் மனங்கனிந்த நன்றி உரியது.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்தவர் அண்ணா பொதுவாழ்வியல் மையப் பேராசிரியர் துறைத் தலைவர் டாக்டர் இரா.தாண்டவன் அவர்கள். பேராசிரியர் துறைத் தலைவராக இருந்து ஆற்றும் பணிகளைப் போல்- அவற்றை விடவும்- பொதுத் தொண்டு ஆற்றி வருவது அதிகம். அறிஞர் அண்ணாவைப்போல் விரிந்த மனத்துடன் தம்மிடம் வரும் அனைவருக்கும் அவர்கள் எத்துறையைச் சார்ந்தவர்களாயினும் வேண்டிய உதவிகளைச் சிறிதும் தயங்காது செய்து வருபவர். ஒருமுறை ஒரு மூன்றாண்டுக் காலம் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவிலும் (Syndicate) இடம் பெற்றுச் செய்த தொண்டினை அனைவரும் அறிவர். இத்தகைய அன்பர்- நல்லவர்- வல்லவர்- இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியது நூலின் பேறு; என் பேறும் கூட. இத்தகைய பண்பாளருக்கு என் நெஞ்சு நெகிழ்ந்த நன்றி என்றும் உரியது.

கைப்படியை அன்புடன் ஏற்று நூலைக் கற்போர் கைகளில் கவின் பெற்றுத் திகழும் முறையில் அழகுற அச்சிடச் செய்த யாழ் வெளியீட்டாளர் திருமதி நாச்சம்மைக்கும் நூலை அழகுறக் கோப்பிட்ட சிவா கிராஃபிக்ஸ் நிறுவனத்தாருக்கும் என் இதயங் கலந்த நன்றி.

இந்நூல் அச்சாகுங்கால் பார்வைப்படிகளை மூலப்படியுடன் ஒப்பு நோக்கியும், பார்வைப் படிகளில் எழுந்த பிழைகளைக் களைந்தும் உதவிய என் அபிமான புத்திரி டாக்டர் மு.ப.சியாமளாவுக்கு என் அன்புகலந்த நன்றி.

இந்த நூலைப் பெரியார் வழிநின்று வாழ்ந்த- வாழும்- வாழப் போகும் பெரியார் அன்பர்கட்கு அன்புப் படையலாக்கியதில் பெருமையும் பெருமிதமும் கொள்கின்றேன். இந்நூலை எழுதவும், வெளியிடவும் என்னையும் ஒரு கருவியாகக் கொண்டு இயக்கிய திருவருளை நினைந்து வணங்கி வாழ்த்தி அமைகின்றேன்.


களியுற்று நின்று, கடவுளே! இங்குப்
பழியற்று வாழ்ந்திடக்கண் பார்ப்பாய்-ஒளிபெற்றுக்
கல்விபல தேர்ந்து கடமையெலாம் நன்காற்றித்
தொல்வினைக்கட் டெல்லாம் துறந்து![1]

-பாரதியார்


-ந.சுப்புரெட்டியார்


‘வேங்கடம்’
AD-13, அண்ணாநகர்,
சென்னை-600040.
அக்டோபர் 2, 2001
[காந்தி பிறந்தநாள்]


  1. திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி - 16
  1. பா.க.தோ.பா.விநாயகர் நான்மணிமாலை-9

உள்ளுறை


அன்புப் படையல் IV
வாழ்த்துரை V
அணிந்துரை VII
நூல்முகம் XII

1. கடவுள் சமயம் பற்றிய சிந்தனைகள்:

என்னைப் பற்றி (1) - சி. அ. பெருமாள் பற்றி (2) - பெரியார் அறிகமும் - பாவேந்தர் (3) - என் அறிமுகம் (3) - (i) ஏழை மாணாக்கர்க்கு உதவும் வகையில் (4) - பள்ளிக்கு உதவுதல் (4) - மூன்று சுவையான நிகழ்ச்சிகள் (5-6) - கடவுள் பற்றிய சிந்தனைகள் (8) - கடவுள் சைவம் (8) - சிவக்குமாரர்கள் (8) - சைவம்-பதி (11) - சொரூப இலக்கணம் (12) - தடத்த நிலையில் சில (12) இறைவனின் திருமேனி பற்றி (13) - நவந்தரு பேதம் (14) - சிவக்குமாரர்கள் (14) - கணபதி (14) - முருகன் (16) - பிறப்பு (16) - சரவணபவன் (17) - பார்ப்பனர் (19) - வைணவம் (19) - திருமேனிகள்-ஐந்து நிலைகள் (19) - தேசிகர் கருத்து (20) - சக்கரபாணி (21) - திவ்வியகவி (22) - உருவவழிபாட்டுக்கு எதிர்ப்பு (23) சித்தர்கள் (23) - நாவுக்கரசர் (24) - தந்தை பெரியார் (25) - நம்பிக்கை (28) - எல்லாம் வல்லவர் (31) - உருவ வழிபாடு (33) - கோயில்கள் (35) - கடவுள் மறுப்பு (37) - கடவுள் ஒழிப்பு (40) - சமயம் (42) - மதக் கேடுகள் (44) - மதவாதிகளின் கொடுமை (46) - மத ஒழிப்பு (48) பெரியார் - இராமாநுசர் (50) - பெரியாருக்கு வீடுபேறு (52) - முடிவுரை (52).

2. சமூகம் பற்றிய சிந்தனைகள்:

மனிதன் என்ற சீவப்பிராணி (54) - கூட்டு வாழ்க்கை (55) - பெரியார் அவரே அறிமுகம் (57) - சாதி ஒழிப்பு (58) - வந்த பதவிகளை உதறியது (58) - ஆட்சிமுறை (58) - திருமணம் (61) - காதல் மணம் (63) - கலப்பு மணம் (64) - சீர்திருத்தத் திருமணம் (66) - மறுமணம் (68) - விதவை மணம் (68) - குழந்தை மணம் (70) - அய்யா வாழ்க்கையில் (72) - மூடநம்பிக்கை (73) - நாகம்மையைத் திருத்துதல் (4) - சாதிக் கொள்கை (75) - இறையனார் களவியல் (76) - தொல்காப்பியர் (76) - சாதிபற்றிய பெயர்கள் (78) - சாதி (78) -தாழ்த்தப்பட்டோர் (79) - தீண்டாமை (81) - வள்ளி சிரித்தாள் (82) - சாதித்தொழில் (83) - சட்டத்தின் மூலம் (85) - பார்ப்பனர் (86) - வெறுப்புக்குக் காரணங்கள் (87) - அரசியல் (90) - பெரியாரின் ‘அருள்வாக்கு’ (91) - சாதி வேற்றுமையை வளர்ப்பவை (92) - சாதி ஒழிப்பு (95) - பொதுவானவை (97) - புதுமை வேட்கை (98) - மூடநம்பிக்கைகள் (99) - கடவுள் (99) - ஆன்மா (100) - சோதிடம் (101) - விழாக்கள் (103) - பொங்கல் (104) - தீபாவளி (105) - சரசுவதி பூசை (106) - தலைவர்கள் (108) - அறிஞர் அண்ணா (108) - அம்பேத்கார் (110) - காமராசர் (110) - கலைஞரைப் பற்றி (12) . பெரியார் (112) - மானசீகமாக (113) - முடிப்புரை (116).


3. மொழி பற்றிய சிந்தனைகள்

தந்தையின் வாழ்க்கைக் குறிப்புகள் விவரமாக (118) - திருமணம் (119) - வகித்த பதவிகள் (119) - காங்கிரசில் தொண்டு (120) - தாய்மொழி (கன்னடம்) - தமிழில் ஈடுபாடு (121) - மொழியின் தோற்றம் (122) - எது தமிழ் (124) - பல கால உழைப்பு (124) - மொழிக் கலப்பு (125) - மொழி ஆராய்ச்சி (125) - மூளை வளர்ச்சியே மொழி வளர்ச்சிக்கு அடிப்படை (126) - மொழி பற்றித் தந்தையின் கருத்துகள் (127) - தமிழ் (128) - தந்தையின் சிந்தனைகள் (129) - ஆங்கிலம் (132) - சாதிப்பெயர்கள் (134) - மொழி வழிக் கல்வி (134) - சமஸ்கிருதம் (135) - இந்தி எதிர்ப்பு (136) - 1926இல் (136) - திருவண்ணாமலை மாநாடு (137) - குடியரசு கட்டுரை (137) - 1930இல் நன்னில மாநாடு (138) - 1937 திருச்சிமாநாடு (139) -1938இல் காஞ்சி மாநாடு (140) - இந்தி எதிர்ப்புப் படை (140) - மகளிர் பங்கு (141) - பெரியார் மீது வழக்கு (141) - சிறை தண்டனை (142) - மணிவிழா (144) - நாச்சியப்பன் பாடல்கள் (145) - சிந்தனைகள் (149) - தமிழ் மொழியாராய்ச்சி (151) - எழுத்துச் சீர்திருத்தம் (152) - தமிழ்ப் புலவர்கள் (156) - இலக்கியம் (160) - பெரியார் பற்றி அறிஞர் கருத்துகள் (165) - நாரா.நாச்சியப்பன் பாடல்கள் (171) - முடிவுரை (172).