பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/'ஒப்புரவு மொழி மாறா ஓலை'

விக்கிமூலம் இலிருந்து

‘28. ஒப்புரவு மொழி மாறா ஒலை’[1]

காய்ந்த மரத்தில் நான்கு புறத்திலிருந்தும் கல்லெறி விழும் என்பார்கள். பழுத்த மரமாக இருந்து விட்டாலோ இன்னும் அதிகமான துன்பம்தான். எதற்கும் அடங்காத அறிவின் கூர்மையை வைத்துக்கொண்டு வாழ்கிறவர்கள் எவ்வளவோ எதிரிகளை உண்டாக்கிக் கொள்ளவும் தயாராகத்தான் இருக்கவேண்டும். எட்ட முடியாத உயரத்தில் புரிந்து கொள்ள முடியாத சாமர்த்தியத்தோடு நெஞ்சின் பலத்தால் நிமிர்ந்து நிற்பவர்களுக்குச் சுற்றியுள்ளவர்களின் பகையும் வெறுப்பும் கிடைக்கத்தான் செய்யும்.

பொருட்செறிவுள்ள செழுமையான சொற்களால் உட்பொருள் நயம் பொருந்த ஒரு மகாகவி காவியம் ஒன்று எழுதியிருந்தால் அதைப் புரிந்து கொள்ளத் தகுதியற்றவர்களும், புரிந்து கொள்ள முடியாதவர்களும் காரணமின்றி அதன்மேல் வெறுப்படைவது போல் தென்பாண்டி நாட்டின் மகா மண்டலேசுவரர் மேல் சிலருக்கு வெறுப்பு உண்டாகியிருந்தது.

“மக்களின் மனப் பண்பு தாழ்ந்து கீழ்த்தரமாகப் போய் விட்டால் உயர்வும், தரமும் உள்ள எல்லாப் பொருள்களின் மேலும் ஏதோ ஒரு வகை வெறுப்பு வந்துவிடுகிறது. மண்ணில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் மனத்தில் மண்படாமல் வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் பேதமையின் காரணமாகப் பெரும்பாலோர் மனத்தையும் மண்ணில் புரட்டிக் கொண்டு விடுகிறார்கள்” என்று கோட்டாற்றுச் சமணப் பண்டிதர் அடிக்கடி மகாராணியிடம் சொல்லுவார்.

அன்றைக்குக் காலையில் இந்த வார்த்தைகளை மீண்டும் நினைத்துப் பார்க்கவேண்டிய நிலை மகாராணி வானவன் மாதேவிக்கு ஏற்பட்டது. சுசீந்திரம், காந்தளூர் முதலிய இடங்களுக்குச் சென்றுவிட்டு முன் சிறை வழியாக அரண்மனைக்குத் திரும்பி வந்து சில நாட்கள் ஆகியிருந்தன. - திரும்பி வந்த அன்றைக்கு மறுநாளே திருவாட்டாற்றுத் தாயின் மகனுக்காகச் செலுத்த வேண்டிய அபாரதப் பொன் அனுப்பப்பட்டது. உதவியைத் தாம் செய்வது யாருக்கும் தெரியாமல் செய்தார் வானவன்மாதேவி. அபராதப்பொன் அனுப்பப்பட்ட தினத்தன்று மாலையே சுசீந்திரம் அர்ச்சகர் அரண்மனைக்கு வந்து மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்து அங்கு நடந்ததையெல்லாம் விவரித்துவிட்டுச் சென்றார். ஒரு தாயின் உள்ளமும் அவள் மகனின் கைகளும் வெந்து போகாமல் காப்பாற்றி விட்டோம் என்ற நினைவு இன்பமாகத்தான் இருந்தது மகாராணிக்கு அருள் மயமான வானவன்மாதேவியின் மனம் அப்படிப் பிறருக்கு உதவி செய்தும், பிறருக்காகத் தன்னை இழந்தும் வாழும் பண்பை இயல்பாகவே பெற்றிருந்தது. வெயில் பட்டவுடன் வாடும் பூப்போலப் பிறர் துன்பத்தை உண்ர்ந்து இரங்கும் மனம் அது. . . . . . . . . . . . . . . . . . . . . . .

சுசீந்திரத்திலிருந்து திரும்பிய பின்பு சில நாட்கள் மகாராணி அந்தப்புரப் பகுதியிலிருந்து வெளியேறவே இல்லை. கோட்டாற்றுப்பண்டிதர் அன்றொரு நாள் ஒலையில் எழுதிக் கொடுத்துச் சென்றிருந்த அந்தச் செய்யுளையும் காந்தளூர் மணியம்பலத்தில் மறைந்து நின்று கேட்ட அறிவுரைகளையும் நினைத்துக் கொண்டே பொழுதைப் போக்கினார். அரண்மனையிலேயே மற்றொரு பகுதியில் தங்கியிருந்த மகாமண்டலேசுவரரைக்கூட அவர் சந்திக்க விரும்பவில்லை. எண்ணங்கள் பழுத்து முதிரும் ஒரு குறிப்பிட்ட நிலையில் யாரையும் சந்திக்காமல், யாரோடும் பேசாமல் தனக்குள்ளேயே, தன்னைத்தானே உள்முகமாக ஆழ்ந்து பார்க்கும் உயர்ந்த நிலை

ஏற்படும். அந்த நிலையில்தான் தென்பாண்டி நாட்டின் மாதேவியார் இப்போது இருந்தார்.

ஆனால் அவரது பேரின்ப மோன நிலையைக் கலைக்க அந்த அதிர்ச்சி தரும் ஒலையோடு அன்று காலையில் பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால் மாறனார் வந்து சேர்ந்தார். தென்பாண்டி நாட்டின் மற்றக் கூற்றத் தலைவர்களெல்லோரும் சேர்ந்து தங்களுடைய ஏகப் பிரதிநிதியாக அந்த ஒலையோடு அவரை மகாராணியாரிடம் அனுப்பியிருந்தனர்.

வைகறையில் நீராடி வழிபாடு முடித்துக்கொண்டு, புனிதமான நினைவுகளில் திளைத்துப்போய் வீற்றிருந்த மகாராணிக்கு முன் புவனமோகினி தோன்றி அந்தச் செய்தியைக் கூறினாள். - -

“தேவி! மிக முக்கியமான காரியமாகப் பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால் மாறனார் அவசரமாகத் தங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்.” - -- -

“கூற்றத் தலைவர் கூட்டம் நடந்து முடிந்த அன்றே அவர்களெல்லாரும் திரும்பிப் போய்விட்டார்களே! இப்போது கழற்கால் மாறனார் மட்டும் மறுபடியும் எதற்காக வந்திருக்கிறார்? தனியாகத்தான் வந்திருக்கிறாரா? அவரோடு வேறு யாராவது வந்திருக்கிறார்களா?’ என்று திகைப்புத்தொனிக்கும் குரலில் மகாராணி வண்ணமகளைப் பார்த்துக் கேட்டார். - ... . -

தேவி! அவர் மட்டும்தான் தனியாக வந்திருக்கிறார்” என்று புவனமோகினி பதில் கூறியதும், “அப்படியானால் நீ ஒன்று. செய், புவனமோகினி! அவரை அழைத்துக்கொண்டு போய் நேரே மகாமண்டலேசுவரர் தங்கியிருக்கும் மாளிகையில் விட்டுவிடு ஏதாவது அரசாங்க சம்பந்தமாகத்தான் பேசுவதற்கு வந்திருப்பார் நமக்கு எதற்கு இந்த வம்பெல்லாம்? நிம்மதியாகத் தெய்வீகச் சிந்தனைகளில் ஈடுபட்டிருக்கிற மனத்தை அரசியல் சேறு படவிடுவதற்கு இப்போது நான் சித்தமாயில்லை. திருவாசகத்தையும் திருக்குறளையும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தெற்கேயும், வடக்கேயும் யார் படையெடுக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டு புதிய கவலைகளைச் சுமக்கவேண்டாம். எதுவாக இருந்தாலும் சரி; வந்திருப்பவரை மகாமண்டலேசுவரரிடமே போய் விட்டு விடு. அவர் பாடு, வந்திருப்பவர் பாடு. பேசித் தீர்த்துக்கொள்ளட்டும்” என்று ஒட்டுதல் இல்லாமல் கூறினார் மகாராணி வானவன்மாதேவி. х

புவனமோகினி திரும்பிச் சென்றாள். எந்த எந்தப் பற்றுக்களிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கிறோமோ அந்தந்தப் பற்றுக்களால் வரும் துன்பங்கள் நமக்கு இல்லை’ என்று முன்பொரு நாள் காந்தளூர் மணியம்பலத்தில் கேட்ட அந்தச் சொற்களை நினைத்துப் பெருமூச்சுவிட்டார் மகாராணி. நெஞ்சின் சுமையைக் குறைக்க அந்தப் பெருமூச்சை விட்டார் மகாராணி, நெஞ்சின் சுமையைக்குறைத்து அந்தப் பெருமூச்சு வெளியேறினபோது நிம்மதி உள்ளே குடிபுகுந்தாற்போல் இருந்தது. சிறிது நேரந்தான் அந்த நிலை. இரண்டாவதாக மற்றொரு பெருமூச்சை வெளியேற்றும் செய்தியைத் தாங்கிக் கொண்டு புவனமோகினி திரும்பி வந்தாள். “தேவி! அவர் மகாமண்டலேசுவரரைச் சந்திக்க விரும்பவில்லையாம். தங்களைத்தான் சந்தித்துப் பேசியாக வேண்டுமாம். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டேன்; அவர் கேட்கவில்லை. பிடிவாதமாக உங்களையே காணவேண்டுமென்கிறார்.”

அவளிடம் என்ன பதில் சொல்லி அனுப்புவதென்று சிறிது தயங்கியபின், “சரி வேறென்ன செய்ய முடியும்? நீ போய் அவரை இங்கேயே கூட்டிக்கொண்டு வா” என்று சொல்லி அனுப்பினார் மகாராணி. ‘மகாமண்டலேசுவரரைப் பார்க்க விரும்பவில்லை என்று வெறுத்துச் சொல்கிற அளவு சுழற்கால் மாறனாருக்கு அவர் மேல் அப்படி என்ன மனத்தாங்கல் ஏற்பட்டிருக்க முடியும் என்ற ஐயம் மகாராணிக்கு ஏற்பட்டது. திடீர் திடீரென்று தம்மைச் சுற்றியிருப்பவர்கள் இருப்பவைகள் எல்லாம் புதிர்களாக மாறிக்கொண்டு வருவதாகப் பட்டது அவருக்கு. உலகத்தில் ஒவ்வொரு மனிதரும் கண்ணின் நோக்கத்தில் எப்படிப் படுகிறார்களோ அப்படிக் கருத்தின் நோக்கத்தில் படுவதில்லையா? அல்லது மனிதர்களையும், சுற்றுப்புறத்தையும் அளந்து பார்த்து விளங்கிக்கொள்ளும் ஆற்றல் என்னுடைய மென்மையான மனத்துக்கு இல்லாமல் போய்விட்டதா என்று திகைத்தார் மகாராணி வானவன்மாதேவியார்,

அந்தச் சமயத்தில் புவனமோகினி, கழற்கால் மாறனாரை கூட்டிக்கொண்டு வந்து நிறுத்தினாள். தென்பாண்டி நாட்டின் ஐம்பெருங் கூற்றத் தலைவர்களுக்குள் செல்வாக்கு மிகுந்தவரும் பொன்மனைக் கூற்றத்துத் தலைவரும், வயது மூத்தவரும் தென்னவன் தமிழவேள் பாண்டிய மூவேந்தவேளார் என்ற சிறப்புப்பட்டம் பெற்றவரும் ஆகிய கழற்கால் மாறனார் முன்வந்து மகாராணியை வணங்கினார். அவர் கையில் உறையிட்டு இலைச்சினை பொறித்த ஒலைச் சுருள் இருந்தது. அவருடைய வயதுக்கும், அநுபவத்துக்கும் மரியாதை கொடுத்து எழுந்து நின்று வணங்கினார் மகாராணி.

“வரவேண்டும், பெரியவரே! அதிகாலையில் சிரமப்பட்டு வந்திருக்கிறீர்கள். அரசாங்க காரியமாக இருக்குமானால் மகாமண்டலேசுவரரைப் பார்த்தாலே போதுமான தென்றுதான் உங்களை அவரிடம் அழைத்துப்போகச் சொன்னேன். நீங்கள் என்னையே பார்க்க வேண்டுமென்று கூறினீர்களாம்.”

“ஆமாம்! நான் பார்க்க வந்தது தென்பாண்டி நாட்டு மகாராணியாரைத்தான்” என்று கழற்கால் மாறனார் கூறிய பதிலில் கடுமையும், சிறிது அழுத்தமும் ஒலித்தாற்போல் தோன்றியது மகாராணிக்கு.

“அது சரிதான்! ஆனால் ஓர் அரசாங்கக் காரியமாக என்னைச் சந்தித்து நீங்கள் அடைய முடிந்த பயனைக் காட்டிலும் மகாமண்டலேசுவரரைச் சந்தித்து அதிகமான பயனை அடையலாமே என்பதற்காகத்தான் சொன்னேன்.”

"இல்லை மகாராணி! நாங்கள் இனி என்றுமே மகாமண்டலேசுவரர் என்ற முறையில் அந்தப் பதவியில் வைத்து அவரைச் சந்திக்க விரும்பவில்லை. காரணம், அவர் மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவருடைய செயல்களையும் நாங்கள் புரிந்துகொள்ள முடிவதில்லை.”

இதைக் கேட்டதும் அமைதியான மகாராணியின் விழிகள் நீண்டு உயர்ந்து அகன்று விரிந்தன. தம் செவிகளையே அவரால் நம்ப முடியவில்லை. மறுபடியும் அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்துக் கேட்டார். “நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?”

“மகாமண்டலேசுவரர்மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லுகிறேன்.”

“ 'எங்களுக்கு' என்றால்..? உங்களுக்கும், இன்னும் வேறு யாருக்கும்? நீங்கள் ஒருவராய்த்தானே இங்கு வந்திருக்கிறீர்கள்?”

"மகாராணியவர்கள் என்னுடைய துணிச்சலுக்காக என்னை மன்னிக்கவேண்டும். நான் ஒருவனாக இங்கு வந்திருந்தாலும் மற்றக் கூற்றத்தலைவர்களோடு கூடிக் கலந்து கொண்டு, பேசி அவர்கள் கையொப்பமிட்ட ஒப்புரவு மொழி மாறா ஒலையையும் கொண்டுதான் வந்திருக்கிறேன். இதோ எங்கள் ஒலை...”

அவர் தாம் கையோடு கொண்டு வந்திருந்த ஒப்புரவு மொழி மாறா ஒலையை மகாராணியிடம் நீட்டினார். அந்த விநாடி வரையில் சாந்தமும், அமைதியும், கருணையும் கலந்து ஒரு பெரு மலர்ச்சி நிலவிக்கொண்டிருந்த மகாராணியின் முகத்தில் மண்ணுலகத்து உணர்ச்சிகளின் சிறுமைகள் படிந்தன. பயமும் கலவரமும், பதற்றமும் நெற்றியில் சுருக்கங்கள் இட அந்த ஒலையை அவரிடமிருந்து வாங்கினார் மகாராணி. அப்படி வாங்கும்போது அவருடை கைகள் மெல்ல நடுங்கின. மேலே இட்டிருந்த இலச்சினைகளை நீக்கி அரக்கை உதிர்த்து, அதைப் பிரிக்கும்போது கைகள் இன்னும் அதிகமாக நடுங்கின. நீர்ப்பரப்பில் ஏதேனும் ஒரு பொருள் விழுந்தால் முதலில் சிறிதாக உண்டாகும் அலைவட்டம் வளர்ந்து விரிந்து, பெரிதாகிக் கரைவரையில் நீள்வதைப்போல் அந்தப் பயங்கர ஒலைச் சுருள் விரிய மகாராணியின் பயமும் அதற்கேற்ப விரிந்தது.

“ஐயோ! ஒரு மனிதர் மிக உயர்ந்த நிலையில் சாதாரண அறிவால் புரிந்துகொள்ள முடியாதவராக இருந்தால் அவருக்குத்தான் எத்தனை கெடுதல்கள்! எவ்வளவு பேருடைய பகை முதுகைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டிவிட்டுக் கால்களை வாரிவிடுகிற உலகமாகவல்லவா இருக்கிறது! மடையனைப் பார்த்து அறிவாளியாக வேண்டுமென்று உபதேசிக்கிறார்கள். அறிவாளியைப் பார்த்து அவன் ஏன் அவ்வளவு அறிவாளியாயிருக்கிறானென்று பொறாமைப் படுகிறார்கள். வளர்ச்சிக்குப் பாடுபட்டுக் கொண்டே தளர்ச்சி அடைகிறார்களே! பழங்காலப் புலவர் ஒருவர் திரி சொற்களால் பாடி வைத்த கடினமான அங்கதப் பாடல் பொருள் ஒளித்து வைக்கப்பட்ட பாடல் போல் சாமானியமானவர்களுக்கு விளங்கிக்கொள்ள முடியாதவராக இருக்கிறார். மகாமண்டலேசுவரர். அதனால்தான் இத்தனை குழப்பமும் ஏற்படுகிறது. இது என்ன கேவலமான உலகம்! எட்டாததாக, உயர்ந்ததாக, மேலே உள்ள பொருள்களை யெல்லாம் கீழே புழுதியிலும் அழுக்கிலும் புரளும்படி தரையில் இறக்கிப் பார்த்துவிட ஆசைப்படுகிறார்களே என்ன செய்வது? மனித இயல்பே அப்படி அமைந்துவிட்டது. உயரமான மரக்கிளைகளிலும், செடி, கொடிகளின் கொம்புகளிலும் இருக்கும் பழங்களையும் பூக்களையும், தரையில் உதிரச் செய்து பயன்படுத்துகிற வழக்கம் போலச் சில மேலான மனிதர்களையும் கீழே இறக்கித் தள்ளிப் பார்க்க ஆசைப்படுகிறார்கள் போலும். பெருமையும் வளர்ச்சியும் அடைய வேண்டுமானால் கீழே இருப்பவர்களையும் மேலே போகச் செய்யவேண்டும். மேலே இருப்பவர்களையும் கீழே இழுத்துத் தள்ளி என்ன பயன்? ஒரு நொண்டி, 'ஊரிலுள்ள கால் பெற்ற மனிதரெல்லாம் நொண்டியாக மாறவேண்டும்’ என்று ஆசைப்படுவது போலன்றோ இருக்கிறது?

“தாம் சாவதற்குள் ஒரு நாளாவது, அல்லது ஒரு சில நாழிகைகளாவது 'தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரர்' என்ற பெயரோடு பதவி வகித்து விட்டுச் சாக வேண்டுமென்று இந்தக் கழற்கால் மாறனாருக்கு ஆசை. அந்த ஆசையின் விளைவுதான் வயது முதிர்ந்த காலத்தில் இப்படி மனம் முதிராத செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. பெரிய மனிதராக இருந்துகொண்டு சிறிய காரியத்தைச் செய்கிறாரே! பாவம் இவர் என்ன செய்வார்? பதவி ஆசை, பெயர் ஆசை, அதிகார ஆசை மற்றக் கூற்றத் தலைவர்களின் தூண்டுதல் எல்லாம் சேர்ந்து இந்த ஒப்புரவு மொழி மாறா ஒலையோடு இவரை இங்கே அனுப்பியிருக்கின்றன.

கையில் வாங்கிய ஒலையைச் சிறிது சிறிதாக விரித்துக் கொண்டே இவ்வளவு நினைவுகளையும் மனத்தில் ஒடவிட்டுச் சிந்தித்தார் மகாராணி. ஒலையைப் படிக்கத் தொடங்குவதற்கு முன்னால் தலையை நிமிர்த்தி எதிரே நின்று கொண்டிருந்த கழற்கால் மாறனாரை வானவன்மாதேவி கூர்ந்து நோக்கினார். நோக்கிக்கொண்டே கேட்டார்:-இந்த ஓலையை நான் படித்துத்தானாகவேண்டும் என்று நீன் விரும்புகிறீர்களா? நன்றாகச் சிந்தித்து விட்டு என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள், அவசரமில்லை.” மகாராணியாரின் இந்தக் கேள்வியைச் செவியுற்றுக் கழற்கால் மாறனார் சிறிது மிரண்டார். பின்பு சமாளித்துக் கொண்டு கூறினார்:

“மகாராணியவர்கள் உடனடியாக இந்த ஒலையைப் படித்து மகாமண்டலேசுவரருடைய பொறுப்புக்களைக் கைமாற்றி அமைக்கவேண்டுமென்பது என் விருப்பம் மட்டும் இல்லை; எல்லாக் கூற்றத் தலைவர்களும் ஒரு மனத்தோடு அப்படி விரும்பியே என்னை இங்கே அனுப்பியிருக்கிறார்கள். இதில் இனிமேலும் சிந்திக்க எதுவுமில்லை.”

அவருடைய பதிலைக் கேட்டதும் மகாராணி அந்த ஒலையைப் படிக்கத் தொடங்கிவிட்டார்.

“திருவளர, நலம் வளரக் குமரி கன்னியா பகவதியார் அருள் பரவி நிற்கும் தென்பாண்டி நாட்டின் மகாராணியார் திருமுன்பு பொன்மனையிற் கூடிய கூற்றத் தலைவர்கள் தம்முள் ஒரு நினைவாய், ஒருமனமாய், ஒன்றுபட்டு நிலை நிறுவி நிறைவேற்றி அனுப்பும் ஒப்புரவு மொழி மாறா ஒலை.

“காலஞ்சென்ற மகாமன்னர் நாள் தொட்டு இன்று காறும் நம்முள் தலை நின்று அறிவும், சூழ்ச்சியும் வல்லாராய் மருங்கூர்க் கூற்றத்து முதன்மை பூண்டு இடையாற்று மங்கலத்திலிருந்து மகாமண்டலேசுவரராயிருக்கும் நம்பியானவர் அண்மையிற் சிறிது காலமாய் மற்றக் கூற்றத் தலைவர்களைக் கலக்காமலும், பொருட்படுத்தாமலும், தாமே நினைந்து தாமே செயற்பட்டு வருதலை நினைத்து வருந்துகிறோம்.

“கன்னியாகுமரித் தேவ கோட்டத்தில் இந்த நாட்டு அரசியைப் பகைவர் வேலெறிந்து கொல்ல முயலும் அளவு கவனக் குறைவாக இருக்க நேர்ந்தது, காணமற்போன இளவரசரைத் தேடி அழைத்துவர முயற்சி செய்யாமலிருந்தது, பாண்டி நாட்டின் மதிப்புக்குரிய அரசுரிமைப் பொருள்களைத் தம்முடைய மாளிகையிலிருந்து கொள்ளை போகும்படி விட்டது, கரவந்தபுரத்தார் கண்காணிப்பில் இருக்கும் கொற்கை முத்துச் சலாபத்தில் பகைவர் புகுந்து குழப்பம் விளைவிக்கும் அளவுக்குப் பாதுகாப்புக் குறைவாக இருந்தது போன்ற காரணங்களால் இனி மகாமண்டலேசுவரர்மேல் நாங்கள் நம்பிக்கை கொள்வதற்கில்லை என்பதை எல்லோரும் கூடிக் கையொப்பம் நாட்டிய இந்த ஒப்புரவு மொழி மாறா ஒலை மூலம் மாதேவியாகிய மகாராணியாருக்கு அறிவித்துக் கொள்கிறோம். இவ்வோலை கொண்டு சமூகத்துக்கு வருபவர், முதுகுரவரும் பொன்மனைக் கூற்றத் தலைவருமாகிய கழற்கால் மாறனார் ஆவார். இவ்வண்ணம் இவ்வோலை கூடியெழுதுவித்த நாளும், எழுதுவித்தவர் பெயர்களும் வருமாறு” என்று முடிந்திருந்த அந்த ஒலையின் கீழே இடையாற்றுமங்க்லம் நம்பி நீங்கலாக மற்ற நால்வருடைய பெயர்களும், எழுதிய நாளும் காணப்பட்டன. மகாராணி வேதனேயோடு கூடிய சிரிப்புடன், “நல்லது உங்கள் ஒலையை நான் படித்துவிட்டேன், பெரியவரே” என்று கழற்கால் மாறனாரைப் பார்த்துச் சொன்னார்.

“படித்ததும் மகாராணியாருக்கு என்ன தோன்றுகிறதென்று எளியேன் அறியலாமோ?” என்று அவர் கேட்டார்.

“ஆகா! தாராளமாக அறியலாம். இதோ சொல்கிறேன்! கேளுங்கள். எந்த ஒரே ஒரு மனிதருடைய சிந்தனைக் கூர்மையினால் இந்த நாடும், நானும், நம்பிக்கைகளும் காப்பாற்றப்படுகின்றோமோ அந்த ஒரு மனிதரை அந்தப் பதவியிலிருந்து இழக்க எனக்கு விருப்பமில்லை.”

“அப்படியானால் தென்பாண்டி நாட்டு மகாராணியார் எங்களையெல்லாம் இழந்துவிடத்தான் நேரும்.”

“நான் உங்களை இழந்துவிடுவதுதான் நல்லதென்றோ அல்லது நீங்கள் என்னை இழந்துவிடுவதுதான் உங்களுக்கு நல்லதென்றோ தோன்றினால் அப்படியே வைத்துக் கொள்ளுங்களேன்!” என்றார் மகாராணி.

“எங்கள் ஒத்துழையாமையின் விளைவு மிகவும் பயங்கரமாக இருக்குமென்பதை இப்போதே கூறிக்கொள்ள விரும்புகிறேன்.”

“அதற்கு நான் என்ன செய்யட்டும்! நீங்களே உங்களைப் பயங்கரமாக்கிக் கொள்கிறீர்கள் ?”

“சரி! நான் வருகிறேன்.” கிழட்டுப் புலி பின்நோக்கிப் பாய்வதுபோல் விறுட்டென்று கோபமாகத் திரும்பினார் கழற்கால் மாறனார்.

“எங்கே அவ்வளவு அவசரம்? கொஞ்சம் இருங்கள்; போகலாம்” என்று சிரித்துக்கொண்டே அப்போதுதான் உள்ளே நுழைந்த மகாமண்டலேசுவரரைப் பார்த்தபோது பூதம் கண்ட சிறு பிள்ளைபோல் நடுங்கினார் கழற்கால் மாறனார்.

  1. இந்தக் காலத்தில் அரசாங்கத்தின் மேல் கொண்டு வருகிற நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மாதிரி அந்த நாளில் தென்பாண்டி நாட்டில் அரசர்கள் மீதோ, பொறுப்பு ஒதுக்கப்பட்ட மகாமண்டலேசுவரர் போன்றவர் மீதோ கொண்டு வரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஒப்புரவு மொழி மாறா ஒலை என்று பெயர் கூற்றத் தலைவர்கள் ஒன்று கூடி ஒப்புரவு மொழி மாறா ஒலை கொண்டுவருவர். Ref:No73. Olai document of Kollam 878 T.A.S. Vol.V.P215