உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்கோவையார்/எட்டாம் அதிகாரம் - நாண நாட்டம்

விக்கிமூலம் இலிருந்து

எட்டாம் அதிகாரம்
8. நாண நாட்டம்

பேரின்பக் கிளவி
நாண நாட்டத் துறையோர் ஐந்து
மருள சிவத்தை அதிசயத்(து) உயிரின்
பக்குவந் தன்னைப் பலவும் வியந்தது.

1. பிறை தொழுகென்றல்
மைவார் கருங்கண்ணி செங்கரம் கூப்பு மறந்துமற்றப்
பொய்வா னவரிற் புகாதுதன் பொற்கழற் கேயடியேன்
உய்வான் புகவொளிர் தில்லைநின் றோன்சடை மேல(து)ஒத்துச்
செவ்வான் அடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறுபிறைக்கே. .. 67


கொளு
பிறைதொழு கென்று பேதை மாதரை
நறுநுதற் பாங்கி நாண நாட்டியது 1

2. வேறுபடுத்துக் கூறல்
அக்கின்ற வாமணி சேர்கண்டன் அம்பல வன்மலயத்து
இக்குன்ற வாணர் கொழுந்திச் செழுந்தண் புனமுடையாள்
அக்குன்ற ஆ(று)அமர்ந்(து) ஆடச்சென் றாள்அங்கம் அவ்அவையே
ஒக்கின்ற ஆரணங் கேஇணங் காகும் உனக்கவளே. .. 68


கொளு
வேய்வளைத் தோளியை வேறு பாடுகண்(டு)
ஆய்வளைத் தோழி அணங்கென்றது.

3. கனையாடல் கூறி நகைத்தல்
செந்நிற மேனிவெண் ணீறணி வோன்தில்லை அம்பலம்போல்
அந்நிற மேனிநின் கொங்கையில் அங்கழி குங்குமமும்
மைந்நிற வார்குழல் மாலையும் தாதும் வளாய்மதஞ்சேர்
இந்நிற மும்பெறின் யானும் குடைவன் இருஞ்சுனையே. .. 69


கொளு
மாண நாட்டிய வார்குழல் பேதையை
நாண நாட்டி நகைசெய்தது.

4. புணர்ச்சி உரைத்தல்
பருங்கண் கவர்கொலை வேழப் படையோன் படப்படர்தீத்
தருங்கண் ணுதல்தில்லை அம்பலத் தோன்தட மால்வரைவாய்க்
கருங்கண் சிவப்பக் கனிவாய் விளர்ப்பகண் ணார்அளிபின்
வருங்கண் மலைமலர் சூட்டவற் றோமற்றவ் வான்கனையே. .. 70


கொளு
மணக்குறி நோக்கிப் புணர்ச்சி உரைத்தது.

5. மதியுடம் படுதல்
காகத்(து) இருகண் ணிற்(கு) ஒன்றே மணிகலந் தாங்(கு)இருவர்
ஆகத்து ளோர்உயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம்
ஏகத்தொருவன் இரும்பொழில் அம்பல வன்மலையில்
தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வரும்இன்பத் துன்பங்களே. .. 71


கொளு
அயில்வே கண்ணியடு ஆடவன் தனக்கு உயிர் ஒன்றென
மயிலியல் தோழி மதியுடம் பட்டது.