கம்பன் சுயசரிதம்/008-012
8கம்பனும் டி.கே.சியும்
ராமனும் அனுமனும் ஒருநாள் அயோத்தியிலிருந்து வெளியூருக்குப் புறப்படுகிறார்கள். போகிற வழியில் ஒரு ஆற்றைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஆற்றிலோ வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. படகு இல்லாமல் ஆற்றைக் கடக்க முடியாது என்று படுகிறது ராமனுக்கு. ஆனால் அனுமனோ ராமா, ராமா என்று சொல்லிக்கொண்டே ஆற்றில் இறங்கி விடுகிறான். ஆற்றில் ஓடிய வெள்ளமும் அப்படியே ஸ்தம்பித்து நின்று ஓர் ஆள் போகக்கூடிய அளவிற்கு வழி அமைத்துக் கொடுக்கிறது. அனுமன் ஆற்றைக் கடக்கிறான், ராம நாம ஸ்மரணை செய்து கொண்டே, ராமனும் அவன் பின்னாலேயே இறங்கி, நடந்தே கடக்கிறான் ஆற்றை.
இப்படி ஒரு கதை. கதை உண்மையாய் இருக்க வேண்டும் என்பதில்லை. ராமனால் சாதிக்க முடியாத ஒன்றை, ராமநாமத்தில உள்ள அளவற்ற நம்பிக்கை காரணமாக, அனுமனால் சாதிக்க முடிந்தது என்பதுதான் விஷயம். ராம பக்தியில் அத்துணை அசையாத நம்பிக்கை அனுமனுக்கு.
இதேபோலத்தான் கம்பனுக்கும் டிகேசிக்கும் இருந்த உறவு. டிகேசிக்குக் கம்பன் கவிதையில் இருந்த நம்பிக்கை, கம்பனுக்கே அவன் கவிதையில் இருந்திருக்கும் என்று சொல்ல முடியாது. கம்பன் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டவர்கள், ஈடுபடுகிறவர்கள், ஈடுபட இருக்கின்றவர்கள் எத்துணையோ பேர். ஆனால் அத்தனை. பேருடைய சேவையையும் விஞ்சி நிற்கிறது ரசிகமணியின் சேவை. இருவருக்கும் ஏற்பட்டுள்ள உறவு, ஏதோ ஊனிற்கலந்த உறவாக இல்லை. உயிரில் கலந்த உறவாக உணர்வில் கலந்த உறவாக இருக்கிறது. அதனால் தான் அத்துணை ஈடுபாடு, ஆர்வம் எல்லாம், அவர்களுக்குக் கம்பன் கவிதையில், இந்த உறவைப் பற்றி எழுதும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது எனக்கு.
ஐம்பது, அறுபது வருஷத்திற்கு முன்னால் தமிழ் படிக்கிறது, பாடம் கேட்கிறது என்றெல்லாம் இருந்தது தமிழ்நாட்டில். சிறந்த வித்துவான்களை அடுத்து, அவர்களுடனேயே குருகுலவாசம் செய்து வருஷக்கணக்காகத் தமிழ் படித்தவர்களும் உண்டு. மேலும் புலவர் பலர் கூடி ஒரு வள்ளலின் ஆதரவில் வளர்ந்து, பாட்டுக்களும் சீட்டுக் கவிகளுமாக பொழுதுபோக்கிய காலமும் உண்டு. அங்கெல்லாம் அடிபடுவது யமகம் திரிபுகள்தாம். அந்தச் செய்யுள்களுக்குப் பொருள் உரைப்பது என்பதே பெரிய வெற்றி என்று எண்ணியிருந்தவர்களும் உண்டு. இப்படிப்பட்ட புலவர் குழாத்திடையே எல்லாம் கம்பன் தலை காட்டியதில்லை. கம்பன் என்ன எல்லாம் வெள்ளைக்கவி பாடியவன் தானே, யமகம் திரிபுகள் எல்லாம் பாடவில்லையே என்று ஒதுக்கியே வைத்திருந்தார்கள். இவர்களைவிட, சைவப் பெருமக்கள், கம்பன் காவியம் பக்கமே வரமாட்டார்கள். அக்காலத்தில் கம்பராமாயணம் படித்தவர்கள், முக்காடிட்டுக் கொண்டே படித்தார்கள். காலம் மாறியது. ஆனால் வேறொரு திசையை நோக்கி.
முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன், ஆங்கிலம் நம் நாட்டில் ஆதிக்கம் பெறலாயிற்று. ஆங்கிலம் கற்ற தமிழர்கள் எல்லாம், தமிழில் என்ன இருக்கிறது? என்று நினைக்க ஆரம்பித்தார்கள். வீட்டிலிருந்தாலும் சரி, வெளியில் ரயில் பயணம் செய்தாலும் சரி, ஆங்கிலப் புத்தகங்களையே வாங்கிப் படித்தார்கள். நண்பர்களோடு அளவளாவிய போதெல்லாம் ஆங்கிலத்திலேயே உரையாடினார்கள். மேடைகளிலே ஏறி, எனக்குத் தமிழ் பேச வராது என்று சொல்லி ஆங்கிலத்திலேயே பேசினார்கள். அதுதான் கவுரவம் என்று கூடக் கருதினார்கள். இத்தனைக் காரியங்களுக்கும் உலை வைத்தார் டிகேசி.
தமிழ்ப் புலவர்கள் எல்லோரையும் தம் பக்கம் இழுத்துக் கொள்வதில் டிகேசி பூரண வெற்றி பெறாவிட்டாலும் ஆங்கிலம் கற்ற மேதைகளை எல்லாம், தமிழ் மொழியில், தமிழ்க் கவிதையில், கம்பராமாயணத்தில் மோகம் கொள்ளச் செய்தார். கவிதையைக் கருவியாக வைத்து, அடிப்படைத் தத்தவங்களையும், காவிய ரசனைகளையும் அவர்கள் விளக்க ஆரம்பித்த பின்தான், தமிழில் இப்படி எல்லாமா இருக்கிறது? என்று அதிசயித்தார்கள் அநேகர்.
நதியின் பிழை அன்று
நறும்புனல் இன்மை அற்றே
பதியின் பிழை அன்று
மகன் பிழை அன்று, மைந்த
விதியின் பிழை, நீ இதற்கு
என்னை வெகுண்டது? என்றான்
என்ற பாட்டை வைத்து இறைவனின் நியதியை என்றோ விளக்கியதை ஆங்கில மோகமும், சமஸ்கிருதக் காதலும் நிறைந்திருக்கும் திரு. கே. பாலசுப்பிரமணிய அய்யர் அவர்கள் இன்றும் சொல்லிச் சொல்லி மகிழ்கிறார்கள். ராஜாஜி அவர்களைக் கம்பன் கவியில் ஈடுபடுத்தியதை எல்லாம் தமிழ் உலகம் நன்கு அறியும்.
தமிழ்நாட்டின் கவி உலகில் கம்பன் அன்று முதல் இன்று வரை ஏக சக்ராதிபத்யம் செய்து வருகிறான். பண்டிதரும் பாமரரும் ரசிக்கும் வகையில், அவன் கவிதையைப் பாடுவோர் தொகை பெருகி இருக்கிறது. கம்பன் காவியத்தில் ஈடுபட்டவர்களை எல்லாம் மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். தாமே படித்துச் சுவைத்து, அனுபவித்து அந்தக் கவிதைச் சுகத்திலேயே அமிழ்ந்து கிடப்பவர்கள் ஒரு சாரார். படித்து அனுபவித்ததைப் பலருக்கும் எடுத்துச் சொல்லி தான் பெற்ற இன்பத்தைப் பிறருடனும் பகிர்ந்து மகிழ்பவர்கள் மற்றொரு கூட்டத்தார். இனி, படித்து அறிந்த விஷயத்தை எல்லாம் அற்புதம் அற்புதமாக எழுதி வெளியிட்டு நேரிலே கேட்க வாய்ப்பு அற்றவர்களும் படித்து அனுபவிக்கும்படி செய்யும் ஆற்றல் பெற்றவர்கள் மூன்றாவது கூட்டத்தார். இந்த மூன்று கூட்டத்திலும் அக்ர ஸ்தானம் டிகேசிக்குத்தான். டிகேசி கம்பனைப் படித்தார்கள் என்றால் உண்மையில் அவர்கள்தான் படித்தார்கள். ஏதோ ரயிலுக்குப் போகிற அவசரத்தில், பக்கங்களைப் புரட்டிப் புரட்டி நாவல் படிக்கிற மாதிரி படிக்காமல், ஆர அமர இருந்து ஐம்பது ஆண்டுகளாகப் படித்தார்கள். காண்டம் காண்டமாக, படலம் படலமாக, பாடல் பாடலாக படித்தார்கள். வீட்டில் இருக்கும்போதும் படித்தார்கள், கோர்ட்டிற்குப் போகும்போதும் படித்தார்கள், சட்டசபைக் கூட்டத்திற்குச் சென்றும் படித்தார்கள். விஷயம் பலருக்குத் தெரிந்திருக்கும். டிகேசி அவர்கள் 1927 - 28 இல் சட்டசபை அங்கத்தினராக இருந்தபோது, அங்குள்ள தமிழ் அன்பர்களுக்கு மட்டுமல்ல, ஆந்திர நண்பர்களுக்குமே கம்பன் மோகம் ஏற்படும்படி செய்தார்கள் என்பதும், அதில் ஒரு ஆந்திர எம்எல்ஏ டிகேசியை சட்டசபைக் கட்டிடத்தில் சந்திக்கும் போதெல்லாம் தலைமேல் கைகூப்பி கங்கை இருகரையுடையான் என்ற பாடலைப் பாடியே வரவேற்பார் என்பதும் பலரும் அறிந்ததுதானே. வீட்டிலே மலேரியாக் காய்ச்சலால் வாடி வதங்கிப் படுக்கையில் கிடந்த காலத்தும் படித்தார்கள். அப்போதுதான் தீவிரமாகப் படித்தார்கள். கம்பன் யார்? என்று இனம் கண்டுபிடித்தார்கள்.
கம்பன் பாடல்களை அவர்கள் படிக்கிறது என்றால், அதற்கு நேரம், காலம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. தனியே இருந்து படிப்பார்கள். காண வந்திருக்கும் நண்பரை உடன் வைத்துக்கொண்டு படிப்பார்கள், பல நண்பர்களைக் கூட்டி வைத்துக்கொண்டு படிப்பார்கள். அப்படி அவர்கள் உடன் இருந்து அவர்கள் படிப்பதைக் கேட்டவர்கள், அப்படியே அவர்களிடம் பாடம் கேட்டவர்கள்தான் வட்டத்தொட்டி அங்கத்தினர்கள்.
1924 ம் வருஷம் ஆம் முப்பது வருஷத்திற்கு முன்பே இலக்கிய சங்கம் கூடிற்று திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் டிகேசி அவர்கள் வீட்டில், பல நண்பர்கள், எல்லோரும் ஆங்கிலம் கற்றவர்கள்தான் இலக்கிய சங்கத்தின் அங்கத்தினர்கள். அவர்களை உடன் வைத்துக் கொண்டு கம்பனைப் படித்தார்கள். டிகேசி கம்பன் திருநாள் நடத்தினார்கள். (கம்பனுக்குத் திருநாள் நடத்த வேண்டும் என்று முதல் முதல் திட்டமிட்டவர்கள் அவர்கள்தானே) அதன் பின் சென்னை சென்றார்கள். இந்துமத அறநிலையக் காப்பாளராக இருந்துவிட்டு ஊர் திரும்பியபின், இதே இலக்கிய சங்கம் திரும்பவும் கூடிற்று டிகேசி அவர்கள் வீட்டில். மூன்று நான்கு பேரோடு ஆரம்பித்த கூட்டம் வாரா வாரம் பெருகிக்கொண்டே போயிற்று. முப்பது நாற்பது பேர் இந்த வட்டத்தொட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்வது என்பது வழக்கமாகிவிட்டது. இந்த வட்டத்தொட்டியில் இருந்துதான் டிகேசி அயோத்தியா காண்டம் ஆரண்ய காண்டம் முழுவதையும் முறையாகப் படித்தார்கள். மற்றவர்களுக்கும் பாடம் சொன்னார்கள்.
டிகேசி கம்பன் பாடல்களைப் படித்தார்கள். ஆனால் அதை மற்றவர்களுக்குப் படித்துக் காட்டவில்லை பாடிக்காட்டினார்கள். கவிதையைப் படிப்பது என்பது அவர்களுக்குப் பிடிக்காத காரியங்களில் முதன்மையானது. கவி என்றால் பாடுவதற்கு என்று அமைந்ததே ஒழிய படித்து ஆராய்வதற்கு என்று ஏற்பட்டது அல்ல என்பது அவர்களுடைய தீர்மானமான அபிப்பிராயம். அதனால்தான், அவர்கள் முன்னிலையில் ஐந்தாறு பேர் இருந்தாலும் சரி, ஆயிரக்கணக்கானவர்கள் இருந்தாலும் சரி, எல்லோரும் அனுபவிக்கும்படி கம்பன் பாடல்களைப் பாடுவார்கள். பாடும்போது தாளலயம் (Rhythm) அறிந்து பாடுவார்கள். பாடும் கவிதையில் ஜீவநாடியான தாளலயத்தை மற்றவர்களும் அறிந்து அனுபவிக்கும் முறையில் பாடுவார்கள். பாடல்களை, பாடல்கள் உள்ள வரிகளை ஒரு தரம் அல்ல, பலமுறை மடக்கி மடக்கிப் பாடுவார்கள். கேட்பவர்கள் எல்லாம் இனிதாக, எளிதாக மனனம் பண்ணிவிடக்கூடிய வகையில் பாடுவார்கள். பாடல்களில் பிரதிபலிக்கும் கம்பனின் இதயத்துடிப்பை எல்லோரும் உணரும்படிப் பாடுவார்கள். அவர்களுடைய பாவம் நிறைந்த சரீரத்தில், ஒரு பாட்டை நிதானமான நடையில் ஆங்காங்கே நிறுத்தி இரண்டு மூன்று தடவை மடக்கி மடக்கிப் பாடுவதைக் கேட்டாலே அந்தப் பாட்டின் பொருள், அதன் அழகு, பாவம் எல்லாம் தெரிவதுடன் நம் கண்முன் ஓர் அற்புதச் சித்திரமே உருவாகும். அப்படித் தோன்றும் சொற் சித்திரங்களைப் பகைப்புலனாக வைத்து உயர்ந்த தத்தவங்களை விளக்கும்போது சுவர்க்கபோக அனுபவமே பெறுவோம் நாம்.
ஒரு சபையில் அவர்கள் பேசுகிறார்களென்றால் கம்பன் அங்கு வராமல் இரான். கம்பன் வருகிறான் என்றால் அவன் பாடல் வருகிறது என்றுதானே அர்த்தம்? பாடல் வந்தால் நல்ல சவுக்கமாகவே வரும். என்னுடைய முதல் அனுபவம் 1925 ஆம் வருஷம் நான் திருநெல்வேலி இந்து கல்லூரியில் மாணவன். அங்கு எங்கள் கல்லூரி மாணவர் கழகத்தின் ஆண்டு விழாவில் டிகேசி பேசினார்கள். நூற்றுக்கணக்கான மாணவர்கள் உட்கார்ந்து பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தோம். ராமனுக்கு மகுடம் சூட்டத் தீர்மானித்துவிட்டார் தசரதர். சிற்றரசர்களும் மந்திரக் கிழவர்களும் இசைந்துவிட்டார்கள். அவர்களுக்கு எல்லாம் ஒரே எக்களிப்பு. கோசலையின் தாதிப் பெண்கள் நால்வருக்குச் செய்தி தெரிய வருகிறது. அதைக் கோசலையிடம் சொல்ல விரைகிறார்கள். ஓடுகிறார்கள். அவர்கள் நிலையை வர்ணிக்கிறான் கம்பன். அதைச் சொல்கிறார்கள் டிகேசி. விஷயத்தைத் தெளிவாக்கிவிட்டுப் பாட ஆரம்பித்தார்கள்.
ஆடு கின்றனர், பண் அடைவு இன்றியே
பாடு கின்றனர், பார்த்தவர்க்கே கரம்
சூடு கின்றனர், சொல்லுவது ஓர்கிலர்
மாடு சென்றனர் மங்கையர் நால்வரே.
இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, எண்ணற்ற கம்பன் பாடல்களை, அவர்கள் மேடைமீது நின்று பாடும்போது கேட்டிருக்கிறேன். என்னைப்போல் கேட்டவர்களும் பலர் இருப்பார்கள்.
கானாள நிலமகளைக் கைவிட்டுப்
போனவனைக் காத்துப் பின்பு
போனானும் ஒரு தம்பி போனவர்கள்
வரும்அவதி போயிற்று என்னா
ஆனாத உயிர்விடஎன்று அமைவானும்
ஒருதம்பி அயலே நாணாது
யானோஇவ் வரசுஆள்வென் என்னே
இவ்அரசாட்சி இனிதே அம்மா
என்பது போன்ற கம்பன் பாடல்கள் எல்லாம், அவர்கள் பாடிக் காட்டியதால், தமிழ் அன்பர்களிடையே பிரசித்தமானவை. இந்தப் பாடலை அவர்கள் பாடிக் காட்டினார்கள் என்றால்; கவிதையில் தாளலயம் எப்படி அமைந்து கிடக்கிறது, அப்படி அமைந்து கிடப்பது காரணமாகவே எப்படி அது கவிதையாகிறது, என்கிற விஷயம் எல்லாம் விளங்கிவிடும்.
நாமும் மேடைகளில் பலர் பேச்சைக் கேட்டிருக்கிறோம். அதிலும் கம்பராமாயணப் பிரசங்கம் என்றால், சொல்ல விரும்பும் பாடலை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து, சொல்லுக்குச் சொல் ஐந்தாறு அர்த்தங்கள் சொல்லி, கேட்பவர்களை எல்லாம் பிரமிக்க வைப்பது என்பதுதான் தமிழ்நாட்டில் நிலவி வந்திருக்கிறது. இன்னும் அந்தப் பழக்கம் இருக்கிறது ஒரு சிலரிடம். இந்தப் பிரசங்கங்களுக்குப் பக்கபலமாக பாரதம் பாட்டு அறாது, ராமாயணம் பொருள் அறாது என்று பழமொழிகூட எழுந்துவிட்டது. ஆனால் டிகேசியின் பேச்சு இப்படிப் பிரசங்கமாகவோ சொற்பொழிவாகேவா இருக்காது. பேச்சில் பதவுரையோ பொழிப்புரையோ கருத்துரையோ வரவே வராது. ஆனால் சொல்லால் விவரிக்க முடியாத உணர்ச்சிகளை உருவாக்கும் கவிதையின் சொல்லழகு, சந்த அழகு எல்லாம் மெல்ல மெல்லத் தோன்றும். ஏன், கவிதையே அந்தக் கவிதையைப் பாடிய கம்பனே தன்னை விளக்கிக் கொள்வதாகத் தோன்றும். உயர்ந்த கவிதை எப்படித் தெளிவாக இருக்குமோ அப்படியே டிகேசியின் பேச்சும் இருக்கும். எளிமையான நடையிலே பேச்சு, ஆனால் இதயத்தைத் தொட்டுத் தொட்டுப் பேசும் பேச்சு. பேச்சின் மூலம், பேச்சில் வரும் விளக்கங்கள் உதாரணங்கள் மூலம் கம்பன் கவிதையின் உண்மையான வடிவம் எழும் நம் இதயத்துள்ளே. அவர் செய்வதெல்லாம் பேச்சின் மூலம்தான். பெரிய மாயாஜாலமாக இருக்கும்.
ஒருநாள் ஆங்கிலப் பேராசிரியர் டிகேசி அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு கம்பராமாயணம் படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அவர் “என்ன சார் கம்பன் கவியே கவி என்றெல்லாம் சொல்லி வருகிறீர்கள். உங்கள் கம்பன் எளிமையாக இல்லையே” என்று கேட்டுவிட்டார். அவ்வளவுதான். எளிமை என்ன என்பதை விளக்க முனைந்துவிட்டார்கள் டிகேசி. விளக்கம் என்றால் ஏதோ வின்னியாசமாக, வெறும் சொல்லால் விளக்கும் விளக்கம் இல்லை.
வேதியர் தமைத் தொழும்
வேந்தரைத் தொழும்
தாதியர் தமைத் தொழும்
தன்னையே தான்தொழும்
ஏதும்ஒன்ற உணர்வு உறாது
இருக்கும் நிற்குமால்
காதல் என்பதுவும் ஓர்
கள்ளின் தோற்றிற்றே
என்ற பாடலை இரண்டு மூன்று தடவை மடக்கி மடக்கிப் பாடினார்கள். நந்திக் கிராமத்தில் இருக்கிறான் பரதன். ராமன் குறித்த தவணையில் வரவில்லை. ஆதலால், தன்னுடைய பிரதிக்ஞையின்படி தீ வளர்த்து அதில் குளித்துவிட தீர்மானித்துவிட்டான். சுற்றியுள்ளவர்களோ அவனைத் தடுக்கும் வகை தெரியாமல் மலைத்து நிற்கிறார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் ராமன் அனுப்பிய தூதுவன் அனுமன் வந்து சேர்கிறான். ராமன் வந்து கொண்டிருக்கும் தகவலைத் தெரிவிக்கிறான். அவ்வளவுதான். பரதனது உள்ளத்தின் பாரம் நீங்கி, என்றும் இல்லாத ஒரு திருப்தி, களிப்பு, எக்களிப்பு ஏற்பட்டு விடுகிறது. அந்தக் களிவெறியில் அவன் செய்கிற காரியந்தான், வேதியரைத் தொழுவதும், தாதியரைத் தொழுவதும், தன்னையே தொழுவதும் என்றெல்லாம் விளக்கம் கூறினார்கள். காதல் வேகமும் கள்ளின் வெறியும் எப்படி எல்லாம் ஆளை ஆட்டுவிக்கும் என்று குறிப்பிட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல கவிதை என்றாலே எளிமையாகத்தான் இருக்கும். கவிதையில் எளிமை இருந்தாலே அது கம்பன் கவி என்றுதான் அர்த்தம், ஏன் எளிமை என்ற ஒன்றை வைத்தே கம்பன் கவியை இனம் கண்டுபிடித்து விடலாமே என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்கள். Good poetry is always simple; simplicity is the test of kamban; Kamban is the test of simplicity என்பதுதான் அவர்கள் ஆங்கிலத்தில் அன்று வைத்த முத்தாய்ப்பு.
இந்த வியாக்கியானத்தை நான் நினைக்கும்போதெல்லாம் தனிப்பாடல் ஒன்று ஞாபகத்துக்கு வரும். அந்தப் பாடல் இதுதான்.
காரென்று பேர்படைத்தாய்
ககனத்து உறும்போது
நீரென்று பேர்படைத்தாய்
நீள்நிலத்தில் வந்ததற்பின்
வாரொன்று மென்மயில்நேர்
ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
மோரென்று பேர்படைத்தாய்
முப்பேரும் பெற்றாயே
இந்தப் பாட்டை, தனிப்பாடல் திரட்டில் காளமேகம் பாடிய பாட்டு என்று போட்டிருக்கும். இல்லை இது கம்பன் பாட்டுத்தான் என்று சாதிப்பார்கள் டிகேசி. ஏன்? சத்தியம் கூட செய்வார்கள். வேம்புக்கும் பாம்புக்கும் சிலேடை பாடும் காளமேகத்தால் இப்படிப் பாட வரவே வராது. இந்தப் பாடல் எளிமையாக இருப்பதினாலே தான் இதைக் கம்பன் பாடல் என்று முடிவு கட்டுகிறேன். தனிப்பாடல் திரட்டில் காளமேகம் பாடிய பாடல்களோடு சேர்த்துவிட்டால், அந்தப் பாடலில் உள்ள கம்பன் முத்திரை, ஆம், எளிமை என்னும் அதே அற்புதமான முத்திரை தெரியாமலா போய்விடும்? என்பார்கள் டிகேசி நாமும் சரி என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இல்லை என்று சொல்ல நம்மால் இயலவே இயலாது.
டிகேசியின் பேச்சைப் பற்றி இன்னும் என்ன என்ன எல்லாமோ சொல்லலாம். பேச்சுத்தானே அவர்கள் ஜீவன், மூச்சு எல்லாம். முப்பது வருஷ காலமாக நான் அவர்களிடம் கேட்ட பேச்சின் சாரத்தை எல்லாம் முப்பது பக்கங்களில் சொல்லிவிட முடியுமா என்ன?
டிகேசி கம்பன் பாடல்களைப் படித்தார்கள். கம்பன் பாடல்களைப் பற்றிப் பேசினார்கள், கம்பன் பாடல்களைப் பற்றி எழுதவும் செய்தார்கள். அவர்கள் எழுதியதைப் பலர் படித்தார்கள். படித்தவர்கள் அனுபவித்தார்கள், அனுபவித்தவர்கள் அதனால் பயன் பெற்றார்கள்.
ஆனால் கம்பன் பாடல்களுக்குத் தாம் விளக்கம் எழுதுவதைப் பற்றி டிகேசி என்ன நினைத்தார்கள் தெரியுமா? அவர்கள் அபிப்பிராயம், கவிதை, அதிலும் கம்பன் பாடல்களை விளக்கம் எழுதிப் பிறருக்கு விளங்க வைத்துவிடக் கூடும் என்று எனக்குத் தோன்றவில்லை. கம்பன் பாடல்களைப் பிறர் தெரிந்தகொள்ள வேண்டும் என்றால் நேருக்குநேர் இருந்து நான் சொல்வதை, பாடுவதைக் கேட்க வேண்டுமே ஒழிய எழுதுவதைப் படித்துப் புரிந்துகொண்டார் என்பதெல்லாம் சவுடால்த்தனம் என்பதே. இதனாலேதான் பல வருஷ காலம் கம்பன் கவிதையைப் பற்றி எழுதவில்லை. ஏதோ ஆண்டுக்கொரு முறை, ஆனந்தவிகடன், கல்வி, கலைமகள் போன்ற பத்திரிக்கைளில் ஆண்டு மலர்களுக்கு எழுதுவார்கள். ரேடியோவில் ஒன்றிரண்டு பேச்சுக்கள் பேசுவார்கள். அதுவும் ஒரு பாட்டு இரண்டு பாட்டிற்குத்தான் விளக்கம் பெறுவோம் நாம். அதையே வாசகர்களால் ஆம் அச்செழுத்தில் படிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது என்பது அவர்கள் எண்ணம். பின்னர் பலருடைய வற்புறுத்தலுக்கு இணங்கித்தான் கம்பர் தரும் காட்சியைத் தொடர்ந்து கல்கியில் எழுதினார்கள். எழுதினார்கள் என்றால் கம்பனை நமக்கு அறிமுகம் செய்து வைத்து அவனையே நம்மிடம் நேரே பேசச் செய்தார்கள். அதற்குத் தகுந்தாற்போல விளக்கம் கொடுத்தார்கள். தங்கள் தங்கள் புலமையையும் கலையறிவையும் வெளிப்படுத்துவதையே முக்கியமாக வைத்து கம்பன் பாடல்களை எடுத்துச் சொல்லும் மற்ற வியாக்கியான கர்த்தர்களைப் போல் அவர்கள் எழுதுவதில்லை. கம்பன் பாடல்களை விளக்கும்போது மூடியிருக்கும் திரையை விலக்கிவிட்டுத் தான் ஒதுங்கி நின்று காட்சிகளையெல்லாம் நம்மை நேராக அனுபவிக்க விட்டுவிடுவார்கள். அதுவே அவர்கள் விளக்கங்களின் வெற்றிக்குக் காரணம்.
டிகேசி கம்பனைப் படித்தார்கள், அவன் காவியத்தைப் பற்றிப் பேசினார்கள், எழுதினார்கள் என்பதோடு டிகேசியின் சேவை நின்றுவிடவில்லை. டிகேசி கம்பனுக்குச் செய்த சேவைகளில் எல்லாம் சிறந்த சேவை, அவன் காவியத்தில் உள்ள செருகு கவிகளைக் கண்டுபிடித்து, அவைகளைத் துணிந்து களைந்ததுதான். கம்பராமாயணத்தில் செருகு கவிகள் உண்டென்பதையோ, அவைகளை அகற்ற வேண்டுவது அவசியம் என்பதையோ, மறுப்பவர்கள் இல்லை. டிகேசியின் பேரில் புகார் சொல்கிறவர் கூட களையை வெட்டுகிற வேகத்தில் கொஞ்சம் பயிரையும் சேர்த்து வெட்டிவிடுகிறார்கள். இவ்வளவு கவிகளைச் செருகு கவிகள் என்று தள்ளியிருக்க வேண்டாம் என்றுதான் அங்கலாய்க்கிறார்கள். டிகேசிக்கு முன்னால் எத்தனையோ பேர் கம்பராமாயணத்தைக் கற்றிருக்கிறார்கள், பேசி இருக்கிறார்கள். பதிப்பித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் நினைவு கூற வேண்டியவர்கள் வ.வெ.சு அய்யர், டாக்டர் சாமினாத அய்யர், வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், ரா. ராகவ அய்யங்கார், கோவிந்தராஜ அய்யங்கார், டி.என். சேஷாசலம் முதலியவர்கள். இவர்களில் பலருக்குக் கம்பராமாயணத்தில் செருகுகவிகள் உண்டென்று தெரியும். அதைச் சொல்லவோ அல்லது களையவோ துணிவு பிறக்கவில்லை. அவ்வளவுதான். ஆனால் அந்தக் காரியத்தை மிக்க துணிவோடு திறம்பட நிறைவேற்றியவர்கள் டிகேசி.
கம்பராமாயணத்தில் உள்ள செருகு கவிகளை எப்படி எப்படி டிகேசி கண்டுபிடித்தார்கள்? அதை அவர்களே சொல்கிறார்கள்.
“கம்பருடைய கவிகளுக்குத் தனியான ஒரு சுவை உண்டு செய்யுளினங்கள் பூர்வமானவைதான். ஆனால் இதய பாவத்தை உட்கொண்ட செய்யுள்கள் அடியெடுத்து வைக்கும்போது, தனியான கதிநயங்களைக் காண்கிறோம். அவைகளின் பாவமும் வேகமும் எங்கேயோ இருந்து வந்த மாதிரி புத்தம் புதியவையாய் இருக்கும். ஒவ்வொரு செய்யுளிலும் ஒரு தனியான ரசம், கவிக்கு ஏதோ நவரஸம் என்கிறார்கள். ஆனால் கம்பருடைய கவிகளைப் பார்க்கும்போது ஆயிரக்கணக்கான ரஸங்கள் உண்டென்று சொல்ல வேண்டி இருக்கிறது. இப்படித் தனித்த ரஸம் வாய்ந்த, உயிர்த் தத்துவம் வாய்ந்த கவிகளாய் இருப்பதாலேயே கம்பருடைய கவிகளை இனம் கண்டு கொள்ள முடிகிறது.”
கம்பருடைய பாடல்களை இனம் கண்டுபிடித்த பின் மற்றவைகளைச் செருகு கவிகள் என்று ஒதுக்குவதில் சிரமம் இருக்காதல்லவா? இதைப் பற்றி நல்ல நகைச்சுவையோடு ஒரு கதை சொல்வார்கள்.
கம்பர் ஏதோ ஒதுங்கலான ஒரு குக்கிராமத்தில் ஒரு பிரபுவோடு தங்கியிருந்தார். மாலையில் ஒரு புலவர் கோயிலில் கம்பராமாயணப் பிரசங்கம் செய்யப் போவதாகவும் அதற்குப் போய்வரலாம் என்றும் அந்தப் பிரபு கம்பரிடம் சொன்னார். கம்பரும் இசைந்தார். இருவருமாகப் போனார்கள். புலவர் வெகு தடபுடலாய்ப் பிரசங்கம் செய்தார். அநேக பாடல்களை அபாரமாக அனுபவித்துப் பாடினார். பிரசங்கம் முடிந்ததும் புலவருக்கு கம்பரை அறிமுக்கப்படுத்தினார் பிரபு. புலவர் ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டவராய் கம்பரைப் பார்த்து, “அடடா தங்கள் கவிகள் அனைத்தும் அற்புதமாய் அமைந்திருக்கின்றன. அன்னை கலைமகளின் அருள் கொழித்த அருமை கவிகள்தான் அவை” என்று பாராட்டினார். அதற்கு கம்பர், தாங்கள் பாடிய பாடல்களில் ஒன்றிரண்டு என்னுடையதாகவும் இருக்கின்றன. ரொம்ப சந்தோஷம் என்று பதில் சொன்னார்.
இதிலிருந்து கம்பன் காலத்திலேயே அவர் காவியத்தில் செருகு கவிகளைச் செருக முனைந்துவிட்டார்கள் மற்ற கவிஞர்கள் என்று தெரிகிறதல்லவா? செருகு கவிகளை அகற்ற வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அவர்களே சொல்லியிருக்கிறார்கள் அருமையான நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில்
“அயோத்தியா காண்டத்தில் விட்டது விடாதது எல்லாவற்றையும் நன்றாய்க் கணக்குப் போட்டுப் பார்த்திருக்கிறீர்கள். ஐயோ 627 செய்யுள்கள் போய்விட்டதே என்று வருத்தப்படவில்லை, கையை நெரிக்கவில்லை. என்னுடைய கிராமத்தில் (தென்காசியில்) நல்ல நீர்வளம் உள்ள புஞ்சை ஒன்று, ஒரு அடிக்குக் கீழ் தண்ணீர். அதில் பூர்வமாக வளர்ந்த பனைகள் காடாய் நின்றன. பிறகு பனைகளுக்கு இடையில் தென்னங்கன்றுகளை வைத்தார்கள். சரியான முறையிலே முப்பது அடிக்கு ஒன்றாய் வளர்த்தார்கள். தென்னைகள் உண்டாய்விட்டன. தென்னை வைத்து இருபது வருஷம் ஆய்விட்டது, காய்ப்பே இல்லை. நான் முதன்முதலாகப் போய்ப் பார்த்தபோது இப்படி இருந்தது. சரி, இதற்குப் பனைகளையெல்லாம் வெட்ட வேண்டியதுதான் என்றேன். கணக்குப் பிள்ளை காவல்காரர் எல்லோரும் ஆதிகாலத்துப் பனையை வெட்டலாமா என்று ஆட்சேபித்தார்கள். தென்னைகளைக் காய்க்க விடாமல் அவைகள் செய்து கொண்டு நிற்கலாமா என்று கேட்டு உடனே பனை வெட்டுக்காரனுக்கு அச்சாரம் கொடுத்துவிட்டேன். ஒரு வாரத்தில் பனைகளை அப்புறப்படுத்திவிட்டார்கள். அதுமுதல் தென்னை மரங்கள் வீரியமாய் வளர ஆரம்பித்தன. சுற்று வட்டகையில் அவ்வளவு வளமான தோப்பும் இல்லை, காய்ப்பும் இல்லைதான். களையாய் இருக்கிறவைகளைக் களைந்தெறிந்தாய் விட்டது என்று சந்தோஷப்பட வேண்டியதுதானே. மிஞ்சிய 584 கவிகளும் வாடாத கற்பகத் தருக்கள் அல்லவா? என்றும் வாசனைதான். இதயத்தைப் போஷிப்பதுதான்.”
ஒருநாள் டிகேசி அவர்களுடன் நாங்கள் இரண்டு பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு கட்டத்தை விளக்கினார்கள் வழக்கம்போல, ராமன் காட்டுக்குப் புறப்படுகிறான், சுமித்திரையிடம் சென்று விடைபெறகிறான். சுமித்திரை இலக்குவனையும், ராமனுடன் போக அனுமதிக்கிறாள், இல்லை போகச் சொல்லி உத்திரவே போடுகிறாள். சுமித்திரை பேச்சு இரண்டு மூன்று பாடல்களில் இருக்கிறது. அதில் ஒரு பாட்டு
ஆகாதென்றால், உனக்கு
அவ்வனம் அயோத்தி
மாகாதல் இராமன் நம்
மன்னவன் வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம்
பூங்குழல் சீதை என்றே
ஏகாய், இனி இவ்வயின்
நிற்றலும் ஏதம்.
இந்தப் பாடலை, இராமன் மணிமுடி துறந்து காட்டுக்குப் புறப்படும்போது இலக்குவன் பேசுகிறானே அந்தப் பேச்சோடு, பாடல்களோடுதான் ஒப்பிட்டுச் சொன்னார்கள். அவர்கள் சொன்ன பாட்டு.
செல்லும் சொல்வல்லான் எதிர்
தம்பியும், தெவ்வர் தூற்றும்
சொல்லும் சுமந்தேன், இரு
தோள் எனச் சோம்பி ஓங்கும்
கல்லும் சுமந்தேன், கணைப்
புட்டிலும் கட்டமைந்த
வில்லும் சுமக்கப் பிறந்தேன்
வெகுண்டென்னை? என்றான்
இதைச் சொல்லிவிட்டு, கவிக்கு ஓர் உருவம் உண்டு. அந்த உருவத்துக்குப் பொருத்தமான அவயவங்களும் உண்டு. வார்த்தையும் தொனியும் கவி உருவத்துக்கு ஒத்துவரவேண்டும். எதுகை மோனைகள் உணர்ச்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் உறுப்புகளாய் இருக்க வேண்டும். உணர்ச்சி அம்சங்களுக்கும் பாவத்துக்கும் சந்தர்ப்பத்திற்கும் பொருந்தியவைகளாய்த் தொழில் செய்ய வேண்டும். அப்படி இருந்தால்தான் கவிக்கு உருவம் உண்டென்று சொல்லக்கூடும். செல்லும் சொல்வல்லான் நல்ல உருவத்தோடு கூடிய கவி. ஆனால் ஆகாதென்றால் என்று ஆரம்பிப்பது கவியே இல்லை. ஆகாதென்றால் என்பதில் வேகமே இல்லை, மாகாதல் இராமன் என்பது தமிழாகவே தோன்றவில்லை, வையம் ஈந்தும் போகா உயிர்த்தாயர் என்பதில் பொருள் முடிபோ இலக்கண முடிவோ இல்லை, இவ்வயின் நிற்றலும் ஏதம் என்று என் இவ்வளவு அவசரமாகத் துரத்துவானேன்? இத்தனையும் சொல்லிவிட்டு, களிமண்ணால் செய்த பிள்ளையாரைப் பிசைந்து அளித்த மாதிரி லட்சுமணன் என்னும் அரிய உருவத்தையே பிசைந்து அழித்துவிடுகிறது இந்தச் செய்யுள் என்றும் சொன்னார்கள். இப்படியே ஒவ்வொரு பாடலையும் சுண்டிப் பார்த்து உண்மையான கம்பன் பாட்டைக் கண்டுபிடித்தார்கள். செருகு கவி என அகற்றும் ஒவ்வொரு பாட்டிற்கும் அவர்கள் காரணம் சொல்லக்கூடும். அதைக் கேட்கும் வாய்ப்புப் பெறாதவர்கள்தான், அவர்கள் செருகு கவிகளை நீக்குவதைப் பற்றிப் புகார் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.
டிகேசி அவர்களுடைய அங்கலாய்ப்பு எல்லாம் செருகு கவிகள் சேர்ந்ததில் இல்லை. இந்தச் செருகு கவிகளைச் செருகுவதற்காக எத்தனை நல்ல கவிகளை, காவியத்திலிருந்து அகற்றினார்களோ என்பதைப் பற்றித்தான். செருகு கவிகளால் உண்மையான கவிகளுக்கே தீங்கு நேரிடுகிறது என்பது அவர்களுடைய தீர்மானமான அபிப்பிராயம். அந்த அபிப்பிராயம் இன்று வலுப்பெற்று வருகிறது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. திரு. சொ. முருகப்பா அவர்களது இராம காதைப் பதிப்பே சொல்லும்.
டிகேசி பேரில் இன்னொரு புகார், அவர்கள் கம்பன் பாடல்களைத் திருத்துகிறார்கள் என்று. பாடல்கள் எல்லாம் கம்பனோ கற்றுச் சொல்லியோ எழுதியவை. அப்படியே நம்மிடம் வந்துவிடவில்லை. இடையில் எத்தனையோ பேர் ஏடுகளை எழுதியிருக்க வேண்டும். எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்பதெலலாம் நமக்குத் தெரியும்தானே? அப்படி இருக்க கம்பன் பாடல்களில் எழுதியவர்கள் செய்த தப்பிதத்தால் பிழைகள் இருந்தால் பிழைகள் இருக்கின்றன என்று நம்பினால் அவைகளைத் திருத்துவதில் தப்பென்ன? சுந்தரர் தேவாரத்தில் ஒரு பாட்டு. பாட்டு இதுதான்.
மையார் கண்டத்தினாய் மத
மாவுரி போர்த்தவனே
பொய்யாதுழ என்னுயிருள் புகுந்தாய்
முன்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா கடவூர் தனுள்
வீரட்டத்து எம்
ஐயா, என் அமுதே எனக்கு
ஆர்துணை நீ அலதே
இதில் இரண்டாவது அடியில் இன்னம் போந்தறியாய் என்றிருந்ததை முன்னம் போந்தறியாய் என்று திருத்தியிருக்கிறார்கள். டிகேசி அதற்குக் காரணமும் சொல்கிறார்கள்.
இரண்டாவது அடியிலுள்ள விஷயம், உண்மையாகவே இப்போது என் உள்ளத்துக்குள் புகுந்து கொண்டாய் கடவுளே, ஏமாற்றமான காரியம் அல்ல. ரொம்ப ரொம்ப சந்தோஷம். இதற்குமுன் வர வழி தெரியாமல் தானே போயிற்று என்பதான ஹாஸ்யமும் எக்களிப்பும் கலந்த பாவத்தில் நிற்பது. முன்னம் போந்தறியாய் என்பதில் பொருள் தெரிகிறது அல்லவா? இதைக் காணாமல் இன்னும் போந்தறியாய் என்று பிழையாய் எழுதிவிட்டார் படி எடுத்தவர். இந்தப் பாடத்துக்குப் பொருள் ஏது? பொய்யாது என்னுயிருள் புகுந்தாய் என்பதோடு பொருந்தவில்லையல்லவா? பிழைபட்ட பாடத்தோடு சங்கடப்பட்டுக் கொண்டிருப்பதில் பிரயோஜனம் என்ன? copyist முக்கியமா? ஜட்ஜ் முக்கியமா? ஜட்ஜ் அபத்தமாக எழுதுவார் என்று சொல்வதில் என்ன புண்ணியமோ? பாடல் உண்மையான உணர்ச்சியிலிருந்து எழுந்தது. ஆயிரத்துச் சில்வானம் வருஷங்களுக்குப் பின் வந்த நமக்கு உண்மையைக் காட்டுகிறது. ஆனந்தத்தை அளிக்கிறது.
இந்த விளக்கத்தைக் கேட்டபின் இந்தச் சின்னத்திருத்தம் அவசியமே என்று தோன்றுகிறதல்லவா? இப்படியேதான் அவர்கள் செய்த ஒவ்வொரு திருத்தத்திற்கும் காரணம் சொல்வார்கள்.
இன்னும் ஒரு சந்தர்ப்பம். ஒருநாள் நான் உடனிருந்து அவர்களிடம் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஜனகனது பேரவையில் விசுவாமித்திரன், ராமன், லட்சுமணன் மூவரும் இருக்கிறார்கள். காட்டிற்குத் தன்னுடன் வந்த ராமன் தாடகையை வதம் செய்தது, அகலிகை சாபந் தீர்த்தது எல்லாவற்றையும் சொல்லிவிட்டுப் பின்னால் ராம லட்சுமணருடைய குலமுறை கிளத்தத் துவங்குகிறான் விசுவாமித்திரன். இதைக் கம்பன் சொல்கிறான். பாட்டு இதுதான்
கோத மன்தன் பன்னிக்கு
முன்னை உருக் கொடுத்தது, இவன்
போது வென்றதுஎனப் பொலிந்த
பொலன் கழற்கால் பொடிகண்டாய்
காதல் என்றன் உயிர்மேலும்
இக்கரியவன் பால் உண்டால்
ஈது இவன்தன் வரலாறும்
புயவலியும் என உரைத்தான்
இந்தப் பாட்டில் மூன்றாம் அடியில் காதல் என்றன் உயிர் மேலும் இக்கரியவன் பாலுண்டால் என்ற அடிகளைப் படிக்கும்போது என்னவோ தட்டுகிறது. மேலும் விசுவாமித்திரன் ராமன் பேரில் உள்ள அன்பை, இப்படித் தமுக்குப் போட்டுத் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லைதானே. ஆதலால் டிகேசி இந்த வரியையே எடுத்துப் போட்டுவிட்டு அந்த இடத்தில் வேதம் என்ற உருவுடையாய் மிதிலையர்தம் உயிர் அனையாய் என்று ஜனகனை விளிப்பதாக அமைத்துவிட்டார்கள். இந்தத் திருத்தத்தோடு பாடலைப் பாடினார்கள். அவ்வளவுதான். அந்தப் பாடலை அன்றிரவு எத்தனை தரம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள்? பாட்டு புதிய உருவமே பெற்று விடுகிறது இந்தத் திருத்தத்தால் என்று சொன்னால் அது மிகையே ஆகாது.
கம்பன் கவியைத் திருத்துகிறார்கள், திருத்துகிறார்கள் என்று குறைகூறும் அன்பர் பலர். ஒரு சிலர் கம்பராமாயணத்தைப் படித்தே இருக்கமாட்டார்கள். ஏன் தமிழ்க் கவிதைப் பக்கமே நெருங்கியிருக்க மாட்டார்கள். அதன் குளிர் நிழலிலே தங்கியிருக்க மாட்டார்கள். இவர்களும் நிரம்பத் தெரிந்தவர்கள்போல டிகேசி கம்பனை எப்படித் திருத்தலாம்? அவர் பல பாடல்களைக் கம்பன் பாட்டல்ல என்று ஒதுக்கலாம்? என்று கூக்குரல் போடுவார்கள். மற்றொரு கூட்டத்தார் அச்சில் கண்டது அத்தனையும் சத்தியம் என்ற மனப்பான்மையோடே பல வருஷ காலம் கம்பராமாயணத்தைப் படித்தவர்கள், பாடல்களை மனனம் பண்ணியவர்கள், மேடைகளில் ஏறி அவைகளை வெளுத்துக் கட்டியவர்கள். இவர்கள் கம்பன் பாடல்களை டிகேசி திருத்துகிறாரே என்று குறைபடுவதில் அர்த்தம் உண்டு. அத்தகைய அன்பர்கள் டிகேசியை அணுகி விளக்கங்கள் கேட்டால் அவர்கள் சொல்லத்தான் சொல்லுவார்கள். சொன்னதைக் கேட்டுத் திருப்தி அடைவதோ அன்றி, திருப்தி அடையாமல் இருப்பதோ அது அவர்களுடைய மனப்பக்குவத்தையும் பண்பையும் பொறுத்தது.இன்றைய தமிழ்க்கவி உலகில் டிகேசி மதித்த கவிஞர் இருவர் தான். பாரதியும் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களுமே. பாரதியாரோடு நெருங்கிய தொடர்பு டிகேசிக்கு இருந்திருக்க வேண்டும். நேரில் அறியேன். ஆனால் கவிமணி அவர்களை டிகேசி எப்படிப் பாராட்டினார்கள் என்பதை அறிவேன். அதைப்போலவே கவிமணியும் டிகேசியை மிகவும் மதித்தார்கள். பாடிப்படித்தமுதம் பாவில் வடித்தெடுத்து நாடி நமக்குதவும் நல்லறிஞன் என்று கூறுவார்கள் ஒரு தரம் அதில் திருப்தி அடையாமல் கம்பன் கவியின் கவி அமுதம் ஊட்டி நம்மை அம்புவியில் தேவராய் ஆக்கிடுவான் என்று பாராட்டுவார்கள். கவிமணியவர்கள் டிகேசி கம்பராமாயணத்திலிருந்து செருகு கவிகள் அகற்றுவது பற்றியும், திருத்தங்கள் செய்வது பற்றியும் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் அறிய வேண்டுவதுதானே. கவிமணியவர்கள் அமரர் ஆவதற்கு இரண்டு மாதத்திற்கு முன்னே நான் அவர்களைச் சென்று கண்டேன். பலவிஷயங்கள் பேசிய போது இதைப் பற்றியும் பேசினோம். என்ன தம்பி என்ன நினைக்கிறாய் டிகேசி அவர்கள் செய்துள்ள திருத்தங்களைப் பற்றி, செருகு கவிகளை கம்பரமாயணத்திலிருந்து அகற்றியதைப் பற்றி என்று கேட்டார்கள். நான் என்ன சொல்வது, டிகேசி சொன்னது அத்தனையும் சரி என்றுதான் சத்தியம் செய்பவன் ஆயிற்றே நான் என்றேன். அவர்கள் சொன்னார்கள், டிகேசி சொல்வது போல கம்பன் சப்பைப் பாடல்களையே பாடி இருக்க முடியாது என்று சொல்வது சரியல்ல, சில சமயம் வெறும் செய்யுள்களாகவே அவன் பாடி இருக்கவும் கூடும். ஆனால் டிகேசி அவர்கள் கம்பனை ஒரு சமயம் தன் அருமந்த குழந்தையாகவும், ஒரு சமயம் தன் வழிபடுதெய்வமாகவும் வைத்திருந்திருக்கிறார்கள். அதனால்தான் இத்தனை துணிவோடு காரியங்கள் செய்தார்கள் என்றார்கள். இதற்கு விளக்கம் கேட்டேன் நான். சொன்னார்கள். குழந்தையிடம் தந்தைக்கு இருக்கும் அன்பு இருக்கிறதே அது அலாதியானது, குழந்தை செய்யும் தவறுகள் எல்லாம் தந்தைக்குத் தெரிவதே இல்லை. அதிலும் பிறர் எடுத்துக்காட்டிவிட்டாலோ கன கோபம்தான் வரும். தவறை தவறு அல்ல என்று சாதிப்பதில் தந்தை முனைந்து விடுவார். ஏன் சண்டைக்கே புறப்பட்டு விடுவார். இதேபோலத்தான் தெய்வத்தினிடமும், தெய்வம் செய்கின்ற காரியங்கள் பல நமக்குப்புரிவதில்லை. ஆனால் ஒரு அசையாத நம்பிக்கை, அது செய்கின்ற காரியங்கள் அத்தனையும் சோடையல்ல என்று. சோடையாக இருந்தால் அது தெய்வம் செய்ததல்ல என்று திடமான அபிப்பிராயம் என்றார்கள். டிகேசியின் கம்பன் பக்திக்கு எவ்வளவு அற்புதமான வியாக்யானம். இந்த வியாக்யானத்தைப் புரிந்துகொண்டால் டிகேசியோடேயோ அல்லது டிகேசியுடைய திருத்தங்களோடேயோ எவரும் முட்ட வேண்டிய அவசியமே இருக்காதே.
டிகேசி கம்பனோடு நாற்பது வருஷ காலத்திற்கு மேலாக வாழ்ந்தவர்கள். அவன் காவியத்தில் நுழைந்திருக்கும் செருகு கவிகளை அகற்றவோ, அவன் கவிகள் எழுதுபவரது கவனக்குறைவால் பிழைபட எழுதப்பட்டிருந்தால் அந்தப் பிழைகளைத் திருத்தவோ தகுதி உடையவர்கள், உரிமையும் உடையவர்கள். இந்த உரிமையை மறுக்க, நாம் யார்? என்று தான் கேட்கத் தோன்றுகிறது எனக்கு.
“கம்பருக்கு நான் செய்த சேவைகளில் எல்லாம் பெரிய சேவை அவரை அனுபவித்ததுதான். நான் அறிந்த காரியத்தை ஊரார் அறிந்ததில்லையே என்று சொன்னால் ஈடுபாட்டைக் குறிக்கிறதே ஒழிய அகம்பாவத்தைக் குறிக்காது” என்று அவர்கள் சொல்லும்போது அவர்கள் உள்ளத்தையல்லவா அப்படியே திறந்து காட்டுகிறார்கள்? இது போதாதா நமக்கு?
கம்பர் பிறந்தது திருவழுந்துரிலே, வளர்ந்தது வெண்ணெய் நல்லூரிலே வள்ளல் சடையப்பர் இல்லத்தில். கம்பன் காவியம் பாடியது யாருக்காக என்றால், முதலில் தன் ஆத்ம திருப்திக்காக. தன் ஆத்ம அனுபவங்களை வெளியிடுவதற்காக. நல்ல கதை என்பதற்காக, உத்தமமோத்தமனான ராமனை உருவாக்கிக் காட்டலாம் என்பதற்காக, தெய்வமாக்கவி வள்ளுவன் வையத்தில் வாழ்வாங்கு வாழ வகுத்த வழிகளை நல்ல கவிதை உருவத்தில், கதை மூலமாகச் சொல்லலாம் என்பதற்காக, எல்லாவற்றிற்கும் மேலாக கவிதையை அனுபவிக்கும் வள்ளல் சடையப்பர் கேட்டு இன்புறுதற்காக, இந்த உண்மையைத் தெரிந்திருந்தார் திருநெல்வேலியில் ஒரு அன்பர். டிகேசி அவர்களின் பள்ளித்தோழர். திரு. பி. ஆவுடையப்ப பிள்ளையவர்கள். அவர் தமிழ்க் கவிஞர் அன்று, என்றாலும் அவருக்குப் பாட வந்தது. பாட்டு இதுதான்
கம்பனும் வெண்ணெய் நல்லூர்
வள்ளலும் கலந்து பேசி
இம்பரில் பிறப்போ மாயின்
இருகுணம் ஒருங்கு சேர
உம்பரின் தேவ தேவை
ஒருவரம் கசிந்து கேட்க
செம்பது மத்தோன் செய்தான்
சிதம்பர நாத மாலை.
உண்மைதான். வள்ளன்மையும், கவிதா ரஸம் அறியும் ஆற்றலும் நிறைந்திருந்த ரசிகமணியவர்களைக் கம்பனும் சடையப்பரும் சேர்ந்தமைந்த ஓருரு என்று கொள்வதில் வியப்பில்லைதானே.
ஆனால் நான் மேலும் ஒன்று சொல்வேன். அசோகவனத்தில் சிறை இருக்கிறாள் சீதை. அவளைத் தேடித் தென்திசை வந்த வானர வீரர்களில் அனுமன் கடல் கடந்து வந்து, இலங்கையில் அசோகவனத்தில் காண்கின்றான். அனுமனை அனுப்பும்போது, சீதையைக் கண்டு வருவான் என்று நம்பினான் காகுத்தன். ஆனால் அனுமன் ஆற்றலை அறிந்த கவிகுலக் கோனாகிய சுக்ரீவனோ கண்டுவிட்டால் சீதையைக் கொண்டே வந்துவிடுவான் என்று எண்ணினான். இதை உணர்ந்த அனுமனும் சீதையை அவள் இருந்த பர்ணசாலையை, ஏன் பர்ணசாலையிலிருந்த அசோக வனத்தையே பெயர்த்து எடுத்துச் செல்லத் துடிக்கிறான். அந்த ஆற்றல் உடையவனே தான் என்பதை சீதைக்குப் புலப்படுத்த தன் பேருருவைக் காட்டுகிறான். அனுமனுடைய அந்த பேருருவைப் பார்த்துவிட்டு, சீதை சொல்கிறாள். “என்னைக் கண்டுபிடிக்க நீ ஒருவன் இருந்தாய். நீ ஒருவன் இல்லாது போயிருந்தால் ராமனுடைய புகழை யார் அறியப் போகிறார்கள்? ராமனுடைய அருளும் புகழும் உன்னாலன்றோ உலகம் உள்ளளவும் நிலைபெறுகிறது” என்று. இதைச் சொல்கிறான் கம்பன்.
ஆழி நெடுந்தகை ஆண்தகைதன்
அருளும் புகழும் அழிவின்றி
ஊழி பலவும் நிலை நிறுத்தற்கு
ஒருவன் நீயே உளயானாய்
என்று. இந்தப் பாடலைப் பாடும்போது, கம்பன் தனக்குப் பின்னால் ஆயிரம் வருஷத்துக்கு அப்பால் தோன்ற இருக்கும் டிகேசியை நினைத்திருக்க வேண்டும். ஆம் அப்பா என் புகழை நிலைநிறுத்த நீயே ஒருவன் உளயானாய் என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்திருக்கவும் வேண்டும், இல்லையா?
வாழி கம்பனும் டிகேசியும்.
❖❖❖