உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் மணக்குடவருரை/விருந்தோம்பல்

விக்கிமூலம் இலிருந்து

௯.-வது-விருந்தோம்பல்.

விருந்தோம்பலாவது, உண்ணுங்காலத்துப் புதியார் வந்தால் பகுத்துண்ணுதல், தென்புலத்தார் முதலிய ஐவருள் விருந்தினர் முதற்கண் ஓம்பப்படுதற் குரியராதலானும், அவரை ஓம்புதல் அன்புடைமை காரணமாக நிகழ்வதொன் றாகலானும் இஃது ஈண்டுக் கூறப்பட்டது.

ருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

இ-ள்:- இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - இல்லின் கண் இருந்து (பொருளைப்) போற்றி வாழும் வாழ்க்கையெல்லாம், விருந்து ஓம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு - (வந்த) விருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.

இஃது, இல்வாழ்வதே விருந்தினரை ஓம்புதற்காக என்றது. ௮௧.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டும்பாற் றன்று.

இ-ள்:- விருந்து புறத்ததாக தான் உண்டல் - விருந்தினர் இற்புறத்தாராகத் தானே உண்டல், சாவா மருந்து. எனினும் - சாவாமைக்காக உண்ணும் மருந்தாயினும், வேண்டும் பாற்று அன்று - வேண்டும் பகுதியுடைத் தன்று. [புறத்ததாக என்பது ஈறுகெட்டு நின்றது.] இஃது, அமிர்தமே யெனிதும் விருந்தினருக்கு அளியாது தான் உண்ணலாகா தென்றது. ௮௨.

ருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

இ-ள்:- வைகலும் வரு விருந்து ஓம்புவான் வாழ்க்கை - நாள் தோறும் வந்த விருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், பருவந்து பாழ்படுதல் இன்று - வருத்தமுற்றுக் கேடுபடுவ தில்லை.

இது, நாள்தோறும் விருந்தினரை ஓம்புவானது இல்வாழ்க்கை கேடுறா தென்றது. ௮௩.

கனமர்ந்து செய்யாள் உறையும், முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்.

இ-ள்:- செய்யாள் அகன் அமர்ந்து உறையும் - திருவினாள் மனம் பொருந்தி உறையும், நல் விருந்து முகன் அமர்ந்து ஓம்புவான் இல் - நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின் கண்.

இது, விருந்தோம்புவார்க்குக் கேடின்மையே யன்றிச் செல்வமும் உண்டாம் என்றது. ௮௪.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்?

இ-ள்:- விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - விருந்தினரை ஊட்டி மிச்சமான உணவை உண்ணுமவன் புலத்தின்கண், வித்தும் இடல் வேண்டுமோ - (விளைதல் பொருட்டு) விதைக்கவும் வேண்டுமோ ? (தானே விளையாதோ)? [கொல் - அசை.]

இது, விருந்தோம்புவான் பொருள் வருவாயாக இயற்றும் இடம் நன்றாகப் பயன்படு மென்றது. ௮௫.

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

இ-ள்:- செல் விருந்து ஓம்பி - வந்த விருந்தினரைப் போற்றி, வரு விருந்து பார்த்திருப்பான் - வரும் விருந்தினரைப் பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல் விருந்து - வானத்தவர்க்கு நல்ல விருந்தாவன்.

வரவு பார்த்தல் - விருந்தின்றி உண்ணாமை.

இது, விருந்தோம்புவானது மறுமைப் பயன் கூறிற்று. ௮௬.

னைத்துணைத் தென்பதொன் றில்லை; விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்,

இ-ள்:- இனை அணைத்து என்பது ஒன்று இல்லை - விருந்தினர்க்கு அளித்ததனால் ஆகும் பயன்) இன்ன அளவினை உடைத்தென்று சொல்லலாவது ஒன்று இல்லை; வேள்விப்பயன் விருந்தின் துணை துணை - விருந்தோம்பலின் பயன் விருந்தினர் யாதொரு தன்மையை உடையரோ அத்தன்மையின் அளவிற்று.

இது, விருந்தினரை ஓம்புவதன் பயன் விருந்தினரது தகுதியின் அளவிற்றா மென்றது. ௮௭.

ரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர், விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

இ-ள்:- விருந்து ஓம்பி வேள்வி தலைப்படா தார் - விருந்தினரைப் போற்றி உபகாரம் செய்யமாட்டா தார், பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் - வருந்தி (உடம்பொன்றையும்) ஓம்பிப் பொருளற்றோமென்று இரப்பர்.

இது, விருந்தினரை ஓம்பாதார் தம்பொருளை இழந்து இரந்து வருந்துவ ரென்றது. ௮௮.

டைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

இ-ள்:- உடைமையுள் இன்மை - உடைமையின் கண்ணே இல்லாமைபோல், விருந்து ஓம்பல் ஓம்பா மடமை - விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, மடவார்கண் உண்டு - பேதையார் மாட்டே உளதாம்.

[ஓம்பாத என்பது ஈறுகெட்டு நின்றது. இல்லாமைபோல - வறுமையுற்றிருந்தாற் போல.]

இது, விருந்தினரை ஓம்பாதார் அறிவிலா ரென்றது. ௮௯.

மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து,

இ-ள்:-அனிச்சம் மோப்ப குழையும் - (எல்லா மலரினும் மெல்லிதாகிய) அனிச்சப்பூ மோந்தால் வாடும்; முகம் திரிந்து நோக்க விருந்து குழையும் - முகம் திரிந்து நோக்க விருந்தினர் வாடுவர். [அனிச்சம் என்பது ஆகுபெயர்.]

இது, விருந்தினரைத் திரிதலில்லாத முகத்தோடு நோக்க வேண்டு மென்றது. ௯0.