கலைக்களஞ்சியம்/அட்டார்னி ஜெனரல்
அட்டார்னி ஜெனரல் (Attonrney General) : இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் அட்டார்னி ஜெனரல் என்பவர் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் தலையாய சட்ட உத்தியோகஸ்தராவர். அவர் அரசாங்கம் சம்பந்தப்பட்ட விசாரணைகளில் அரசாங்கத்துக்காக ஆஜராவார். இந்தியாவில் ஒவ்வொரு இராச்சியத்துக்கும் ஒரு அட்வொக்கேட்டு ஜெனரல் (த. ௧.) கவர்னரால் நியமிக்கப்படுகிறார். இந்திய அரசாங்கத்துக்காக அட்டார்னி ஜெனரல் நியமிக்கப்படுகிறார். இந்திய அரசியல் அமைப்பின் 76-வது பிரிவானது உச்ச நீதிமன்றத்தின் (Supreme Court) நியாயாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படத் தகுதியுடைய ஒருவரை ராஷ்டிரபதி அட்டார்னி ஜெனரலாக நியமிக்கவேண்டும் என்று கூறுகிறது. சட்ட சம்பந்தமாக எந்தக் கடமைகளைச் செய்யும்படி. ராஷ்டிரபதி அவரைக் கேட்டுக் கொள்கிறாரோ அவற்றையும், அரசியல் அமைப்புச் சட்டத்தின்படியோ மற்றச் சட்டங்களின்படியோ அவர் எந்தக் கடமைகளைச் செய்யவேண்டுமென்று இருக்கிறதோ அவற்றையும் செய்ய அவர் கடமைப்பட்டவர். அக்கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு அவர் இந்தியாவிலுள்ள எல்லா நீதிமன்றங்களிலும் ஆஜராக உரிமை உடையவர். ராஷ்டிரபதியின் விருப்பம் உள்ளவரை அவர் பதவி வகிப்பார். அவருடைய ஊதியம் என்னவென்று ராஷ்டிரபதி தீர்மானிப்பார். இப்போது அது மாதம் ரூபாய் 4000 என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர் சாதாரணமாக டெல்லியில் வசிப்பார்.
அட்டார்னி ஜெனரல் இந்திய அரசாங்கத்துக்கு விரோதமாகவுள்ள விசாரணைகளிலும், தமது ஆலோசனையை இந்திய அரசாங்கம் கேட்பதற்கு இடம் இருக்கக்கூடிய விசாரணைகளிலும் ஆஜராகக்கூடாது. அவர் இந்திய சர்க்காரின் உத்தரவின்றி எந்தக் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பிலும் ஆஜராகவும், எந்தக் கம்பெனியிலேனும் உத்தியோகம் ஏற்றுக்கொள்ளவும் கூடாது. எல்லா இராச்சியங்களிலும் கோர்ட்டுகளில் முதல் இடம் அட்டார்னி ஜெனரலுக்கும் அடுத்த இடம் இராச்சியத்திலுள்ள அட்வொக்கேட்டு ஜெனரலுக்கும் அளிக்கப்படும். உச்ச நீதிமன்றம் எந்த விசாரணையிலும் ஆஜராகும்படி அவருக்கு அறிவிப்பு அனுப்பலாம். அவர் தாம் அவசியம் ஆஜராக வேண்டுமென்று கருதுகிற எந்த விசாரணையிலும் தாம் பேச விரும்புவதாகக் கோர்ட்டுக்குத் தெரிவிக்கலாம். அவர் ஆஜராவது அவசியம் என்று உச்ச நீதிமன்றத்திற்குத் தோன்றினால் அது அவருக்கு அனுமதி தரும்.
அவர் டெல்லிச் சட்டசபைகளிலும், தாம் உறுப்பினராகவுள்ள சட்டசபைக் கமிட்டிகளிலும் பேசவும், கலந்து கொள்ளவும் அதிகாரம் உடையவர். ஆனால் இந்த அதிகாரம் அவருக்கு அந்தச் சபைகளில் வாக்குக் கொடுப்பதற்குள்ள உரிமையை அளிக்கமாட்டாது. ஏ. என். வீ.