கலைக்களஞ்சியம்/அருணாசலக் கவிராயர்
அருணாசலக் கவிராயர் (1712-79) சோழ நாட்டிலே தரங்கம்பாடியையடுத்த தில்லையாடியில் வேளாளர் மரபில் பிறந்தவர். தந்தை நல்லதம்பிப் பிள்ளை ; தாயார் வள்ளியம்மை. தந்தை இளமையில் ஜைனராக இருந்து பின்னர்ச் சைவரானவர். அருணாசலர் சிறுவயதிலேயே இசையுடன் பாடக்கூடியவராக இருந்தார். இவருக்குப் பன்னிரண்டாம் வயதில் தாய் தந்தையர் இறக்கவே, இவர் கல்வி கற்பதற்காகத் தருமபுர ஆதீனம் சென்றார். அங்கு இலக்கிய இலக்கணங்களிலும் சமய நூல்களிலும் தக்க புலமை எய்தினார். வடமொழியிலும் வடுகிலும் ஓரளவு பயிற்சி பெற்றார். இயற்றமிழ்ப் பாடல்களும் இசைத் தமிழ்ப் பாடல்களும் இயற்றும் ஆற்றல் உடையவராயிருந்தார். முப்பதாவது வயதில் திருமணம் செய்துகொண்டு, காசுக்கடை வைத்து இல்வாழ்க்கை நடத்தி வந்தார். ஒரு சமயம் சீகாழி சென்றபொழுது அங்கிருந்த சிதம் பரத்தம்பிரான் இவருடைய புலமையைக் கண்டு வியந்து, அவ்வூரில் வீடு கட்டிக் கொடுத்து, அங்கேயே வதியுமாறு செய்தார். அதனாலேயே இவர் சீகாழி அருணாசலக் கவிராயர் என அழைக்கப்படுவர். சீகாழிக்கு அடுத்த சட்டநாதபுரத்திலிருந்த வேங்கட ராமய்யரும் கோதண்டராமய்யரும் இவரிடம் பாடம் கேட்டனர். அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி இவர் இராம நாடகக் கீர்த்தனை என்ற நூலைச் செய்தார். அது எளிய இனிய சொற்களால் அமைந்து, இசை நாடகங்கட்கு ஏற்ற முறையில் இயற்றப்பட்டிருத்தலால் எல்லோராலும் களிப்புடன் வரவேற்கப்பட்டது. கம்பர் தமது இராமாயணத்தை அரங்கேற்றிய திருவரங்கத்திலேயே அதை இவர் அரங்கேற்றினார். அதன்பின் பல குறுநில மன்னர்களுடைய அவையிலும் பல பிரபுக்கள் முன்னிலையிலும் விவரித்துப் பல பரிசுகள் பெற்றார். இவர் இராம நாடகக் கீர்த்தனை பாடியது தமது அறுபதாம் வயதிலாகும். அதன் பின்னர் ஏழு ஆண்டுகள் வாழ்ந்து இறைவன் திருவடி அடைந்தார். இவர் பல தனிப்பாடல்கள் பாடியிருப்பதுடன் அசோமுகி நாடகம், சீகாழித் தலபுராணம், சீகாழிக் கோவை, அனுமார் பிள்ளைத்தமிழ் முதலிய பல நூல்களும் இயற்றியுள்ளார்.