கலைக்களஞ்சியம்/அன்னியன்
அன்னியன் (Alien) தான் வசிக்கும் நாட்டின் குடியாக இல்லாதவன். அவனை அயலான், அயல் நாட்டான் என்றும் கூறுவர். அவனுடைய சட்ட நிலைமை நாட்டுக்கு நாடு வேறுபடுவதுண்டு. அன்னியர் தாம் வசிக்கும் நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கக்கடவர். அவர்கள் வசிக்கும் நாட்டின் அரசாங்கம் அவர்களுடைய உடல், பொருள், மானம் மூன்றையும் பாதுகாத்துத் தரக் கடமைப்பட்டதாகும். அன்னியர் அடிபட்டாலும், அவதூறு செய்யப்பட்டாலும், திருடப்பட்டாலும், கோர்ட்டுக்களில் வழக்குத் தொடரலாம். அன்னியர் வியாபாரம் செய்யலாம், தொழில் புரியலாம், சொத்து வாங்கலாம், விற்கலாம். ஆனால் அந்த உரிமைகளைப் பறித்துக்கொள்ள அவர்கள் தங்கும் நாட்டுக்கு உரிமையுண்டு. இந்த உரிமைகள் பெறுவதால் அவர்கள் தங்கும் காலம் முழுவதும் தங்கியிருக்கும் நாட்டுக்கு விசுவாசமாயிருக்கக் கடவர். எடுத்துக்காட்டாக, இந்திய யூனியனில் வாழும் அன்னியர் இந்த யூனியனுக்கு உண்மையாக இருக்கவேண்டும். அப்படியில்லா விட்டால் அவர்கள் தேசத்துரோகக் குற்றத்திற்கும் வேறு குற்றங்கட்கும் தண்டிக்கப்படலாம். நாட்டை விட்டு அன்னியரை அகன்று விடும்படி சொல்ல எப்பொழுதும் அரசாங்கத்துக்கு அதிகாரமுண்டு. அன்னியர், தேர்தலில் அபேட்சகராக நிற்கவும், வாக்களிக்கவும், சிவில் உத்தியோகமோ, ராணுவ உத்தியோகமோ வகிக்கவும் முடியாது.
இந்தியாவில் ஓர் அன்னியன் வாழ்ந்து வருகிறான் என்று வைத்துக்கொள்ளுவோம். இந்த அரசாங்கம் அவனுக்குச் சட்டத்துக்கு விரோதமாகத் தீங்கு ஏதாவது செய்தால், அதுபற்றிக் கோர்ட்டில் அரசாங்கத்தின்மீது வழக்குத்தொடுக்க அவனுக்கு உரிமையுண்டு. ஆனால் அப்படிப்பட்ட அன்னியன் வெளிநாட்டுக்குச் சென்றிருக்கும்போது இந்திய அரசாங்கத்தால் அவனுக்கு ஏதாவது இந்தியாவில் தீங்கு நேருமாயின், அதைக் குறித்து இந்திய அரசாங்கத்தின்மீது வழக்குத் தொடர அவனுக்கு உரிமை கிடையாது. அவ்வாறு அவன் வெளியே வசிக்கும்போது இந்தியாவிலுள்ள யாரோ ஒரு தனி மனிதனால் அவனுக்குத் தீங்கு விளைந்தால் அதுபற்றி அவன் இந்தியக் கோர்ட்டில் வழக்குத் தொடரலாம். ஆனால் அன்னிய அரசர்மீதும், அன்னியத் தூதர் மீதும் இந்தியக் கோர்ட்டுக்களில் வழக்குத் தொடர முடியாது. அரசாங்கம் அன்னியரைப் போலீஸ் படையிலும் நெருப்பணைப்புப் படையிலும் சேருமாறு கட்டாயப்படுத்தலாம். ஆனால் ராணுவத்தில் சேருமாறு கட்டாயப்படுத்த முடியாது.
பிறநாடுவந்துள்ள அன்னியர் தமதுநாட்டிலோ வேறு ஒரு நாட்டிலோ செய்த குற்றத்துக்காக அவரை அந்த நாடுகள் நேரில் வந்து கைது செய்ய முடியாது. ஆனால் அவைகள் அவரைக் கைது செய்து தங்களிடம் ஒப்புவிக்குமாறு அவர் தங்கியுள்ள நாட்டிடம் கேட்கலாம். அவ்வாறு ஒப்படைப்பதை 'அன்னியர் ஒப்படைப்பு' என்று கூறுவர். ஆனால் அரசியல் குற்றவாளிகளை அவ்வாறு ஒப்படைக்கலாகாது. இவ்வாறு பிறநாட்டில் தங்கும் அன்னியர்களை 'அன்னிய நண்பர்' என்று கூறுவர்.
ஒரு நாட்டுடன் போர் தொடுத்துள்ள நாட்டின் குடிகள் 'அன்னியப் பகைவர்' எனப்படுவர். அவர்கட்கு அன்னிய நண்பர்க்குரிய உரிமைகள் இல்லை. அவர்கள் அரசாங்கத்தின் இசைவின்றிக் கோர்ட்டுக்களில் வழக்குத் தொடரவும், வியாபாரமும் தொழிலும் செய்யவும், சொத்து வைத்திருக்கவும் முடியாது. ஓ. எம். ர.