உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அனுபூதிக்கலை

விக்கிமூலம் இலிருந்து

அனுபூதிக்கலை என்பது ஆன்மாவானது கடவுளை அனுபவித்து அறிவதாகும். கடவுள் உண்மையை அறிவினால் காண முடியாது. அனுபவித்தே காண முடியும். இந்த அனுபவம் சிலர்க்கு மட்டுமே ஏற்படும் என்பதில்லை. முயன்றால் எல்லோரும் இதைப் பெற முடியும். எல்லா நாட்டு அனுபூதிமான்களும் கூறும் அனுபவம் ஒன்றுபோலவே காணப்படுவதால் அவர்கள் அனுபவம் பெற்றவர்கள் என்பதில் ஐயமில்லை. அதனுடன் கடவுள் அனைவரிடமும் இருப்பதால் அனைவரும் அவருடன் ஐக்கியமாகி அவரை அனுபவிப்பது சாத்தியமே. அனுபூதிமான்கள் பெறும் அனுபவத்தை மொழிகளால் சொல்ல முடியாது. அதனால் அவர்கள் குறியீடுகள் வாயிலாகவே வெளியிடுகிறார்கள். அவர்கள் கையாளும் முக்கியக் குறியீடுகள் காதல், கலியாணம், கள்வெறி ஆகியவையாகும். தம் அனுபவ வேளையில் அனுபூதிமான்கள் வெளியீடுவதெல்லாம் அவர்கள் வாயிலாகக் கடவுள் வெளியிடுவதேயாம்.

ஆனால் இத்தகைய அனுபூதியைப் பெற விரும்புகிறவர் மூன்று விதமான யோகங்களைப் பயில வேண்டும். முதலாவதாகக் கருமயோகம் பயின்று, ஆசையையும் ஆணவத்தையும் அகற்றி, மனத்தைத் தூய்மை பெறச் செய்தல் வேண்டும். இரண்டாவதாக ஞானயோகம் பயின்று, தம்மைத் துறந்து, தியானத்தின் வாயிலாகக் கைவல்லிய சாந்தியை அடைதல் வேண்டும். மூன்றாவதாகப் பக்தியோகம் பயின்று, கடவுளை நேரில் கண்டு, அவருடன் ஐக்கியப்பட்டு நிரதிசய ஆனந்த வெள்ளத்தில் மூழ்கவேண்டும். இதுவே அனுபூதிநிலை.

கருமயோகம் என்பது பலன் கருதாமல் செய்யும் நிஷ்காமிய கருமமாகும். இவ்வாறு நடந்து மனிதன் தன்னுடைய தாழ்ந்த சுயநல ஆசையை அகற்றிவிடவேண்டும். இவ்வாறு செய்ய விரும்புவோர் அகங்காரமமகாரங்களை நீக்கிவிடுவர். எளிய வாழ்க்கையை மேற்கொள்வர்.

ஞானயோகம் என்பது மனத்தைப் புறத்தே சஞ்சரிக்கவிடாமல், ஆன்மாவையே தியானிக்கும்படி செய்வதாகும். இவ்வாறு மனத்தை வயப்படுத்துவதற்காகப் பிராணாயாம முறைகளைக் கையாள வேண்டும். இவ்வாறு மனத்தை அடக்கித் தியானம் செய்தால் ஆன்மா பிரகிருதியினின்றும், அதன் முக்குணங்களினின்றும் விடுதலைபெற்றுச் சாந்தி பெறும். இதையே கைவல்லியம் என்பர்.

இந்த இரண்டு யோகங்களையும் பயின்று சாந்தி பெற்ற ஆன்மா பக்தி யோகத்தால் பரிபூரண பிரமானுபவம் பெறும். இவ்வாறு அனுபவிக்கும்போது ஆன்மாவுக்கு வெளியுலகம் எதுவும் தெரியாது. சமாதி நிலையில் இருக்கும். அப்போது மூச்சு நின்று போகும். உடல் அசையாது நிற்கும். ஆன்மா கடவுளிடத்தில் ஆழ்ந்து ஆனந்த மயமாக ஆகிவிடும். ஆனால் இந்த ஆனந்தம் நிலைத்ததன்று; கணநேரமே நிற்பதாம். ஆயினும் பரலோகத்தில் நிரந்தரமாகப் பெறப்போகும் நித்தியானந்தத்தின் சுவையுடையதாம். முக்தி என்பது பாச பந்தத்தினின்று விடுதலை பெறுதல், பக்தி என்பது கடவுளை அனுபவித்து அறிதல். இறுதியில் பக்தியும் முக்தியும் ஒன்றேயாம்.

இத்தகைய அனுபூதிக்கலையை இந்துமத நூல்களான உபநிடதங்கள், பிரம சூத்திரங்கள், பகவத்கீதை மூன்றும் கூறுகின்றன. புராணங்களுள் பாகவத புராணம் இதை மிகத் தெளிவாக விளக்குகின்றது.

சீனா : சீனாவில் அனுபூதி மார்க்கத்தைத் தாவோக் கொள்கை (த.க.) என்று கூறுவர். தாவோ அனுபூதி மார்க்கமும் புலனடக்கம், ஞான ஒளி, ஐக்கியம் என்ற மூன்று நிலைகளையும் கூறுகின்றது.

கிரீஸ் : கிரீஸ் நாட்டில் வாழ்ந்த பிளேட்டோ (கி.மு. 426-347) என்பவரை ஐரோப்பியத் தத்துவ அனுபூதிக் கலையின் தந்தை என்று கூறுவர். அவருடைய குருவான சாக்கிரட்டீஸ் தத்துவ சாஸ்திரம் என்பது வெறும் தர்க்க ரீதியாக ஆராயும் நூல் அன்று என்றும், அனுபவத்தின் மூலம் ஞானம் தரும் நூல் என்றும் கூறினார். அவர் பல தடவைகளில் அனுபூதி அனுபவம் பெற்றதாகக் கூறுவர். ஆயினும் அனுபூதிக் கலையைக் கிரேக்கர்களிடை அதிகமாக விளக்கியவர் பிளாட்டினஸ் (கி.பி.204-270) என்பவரேயாவர். கடவுள் அறிவிற்கு அப்பாற்பட்டவராயினும் அனுபவ மூலம் அறியக்கூடியவர் என்று அவர் கூறினார். அவர் நான்கு முறை சமாதி நிலையில் இருந்தார் என்று கூறுவர். அவருடைய அனுபூதிக் கலையானது பாஸ்கரருடைய அனுபூதிக்கலையை ஒத்தது என்று அறிஞர் கருதுவர்.

கிறிஸ்தவம்: பொதுவாக யூத மதம் அனுபூதிக் கலை வளர்ச்சிக்கு ஏற்றதாக இல்லாதிருப்பினும், விவிலியநூலின் பழைய ஏற்பாட்டில் 'சங்கீதங்கள்' (Psalms) என்னும் பகுதியில் ஆன்மா கடவுளைக் காதலிப்பதாக வருணித்திருப்பதைக் காணலாம். இயேசு கிறிஸ்து யூதராகப் பிறந்திருப்பினும் கடவுளிடத்தில் காதல் கொள்வதே உண்மையான மதம் என்று போதித்தார். அவருடைய சீடர்களுள் யோவான் அப்போஸ்தலர் பெரிய அனுபூதிமான். ஒரு தடவை அவர் நான்கு நாட்கள் சமாதியில் இருந்தார் என்று கூறுவர். பிற்காலத்தில்

அகஸ்டின், கிரிகரி, பர்னார்டு ஆகியவர்களும் பெரிய அனுபூதிமான்களாக இருந்தார்கள். ஐரோப்பிய வரலாற்று மத்திய காலமே கிறிஸ்தவ அனுபூதிக் கலையின் பொற்காலமாம். அக்காலத்தில் தலைசிறந்த அனுபூதி மான்களாக இருந்தவர்கள் எக்கார்ட் (1260-1327) என்ற ஜெர்மானியரும் அவருடைய சீடர்களுமாவர். லத்தீன் அனுபூதிமான்களும் ஸ்பானிஷ அனுபூதிமான்களும் துறவு, கடவுள் ஐக்கியம், மனித சேவை ஆகிய மூன்றையும் வற்புறுத்தினார்கள். இவர்களுள் தலை சிறந்தவர் அசிசியைச் சேர்ந்த பிரான்சிஸ், தெரிசா அம்மையார், குருசு ஜான் (John of the cross) ஆகியவர்கள். இயேசு சங்கத்தை நிறுவிய இக்னேஷியஸ்லாயோலா என்பாரும் பக்தி மிக்க அனுபூதிமானாவர். தெரிசா (1491-1556) அம்மையார் இயேசுவை மணமகனாகக் கருதி, அவரிடம் ஆண்டாளுடைய காதல் போன்ற தூய காதல் கொண்டார். சிறந்த இத்தாலிய அனுபூதிமான்கள் புருனோ, கயான் அம்மையார், போமி ஆகியவர்கள். ஆங்கில நாட்டில் வாழ்ந்த ஹில்ட்டன், ஜூலியஸ், ஜார்ஜ் பாக்ஸ் (George Fox), ஜான்பனியன் முதலியவர்களும் அனுபூதிமான்களே.

இஸ்லாம் அனுபூதி மார்க்கம் என்பது சூபிக் கொள்கை (த.க.) எனப்படும். சூபிக் கொள்கையானது கடவுளுடன் ஐக்கியப்படுவதைக் கூறுவதற்கு மது, முத்தம், ஆலிங்கனம் ஆகிய குறியீடுகளைப் பயன்படுத்துகிறது. இக்கொள்கை ராபியா, ஆல்ஹல்லாஜ் என்பவர்களுடன் தொடங்கி அத்தர், ஜலாலுதின் ஆகியவர்களிடம் 13ஆம் நூற்றாண்டில் உச்சநிலை அடைகிறது. சூபிக் கொள்கையானது வைணவத்தை ஒத்ததாகும். அனுபூதி நிலை அடைவதற்கு இஸ்லாமிய வேதக் கட்டளைகளை நிறைவேற்றல், தியானம், ஞானம், ஐக்கியம் ஆகிய நான்கு நிலைகள் வகுக்கப்பட்டுள்ளன.

வட இந்தியா : இராமானுசர் உபதேசத்தில் ஈடுபட்ட இராமானந்தர் (1370-1440) பிரயாகையில் பிறந்தவர். அவரும் அவருடைய பன்னிரு சீடர்களும் பக்தி மார்க்கத்தை இந்துஸ்தானத்தில் பரவச் செய்தார்கள். அச் சீடர்களுள் தலையாயவர் ரவிதாசரும், கபீர் தாசருமாவர். ராஜபுதன இளவரசி மீராபாய் 1504-ல் பிறந்தவர். அவர் தமிழ்நாட்டு ஆண்டாள்போல் கிருஷ்ண பக்தியில் சிறந்தவர். துளசிதாசர் (1532-1623) பெரிய இராம பக்தர். அவருடைய இராமாயணத்தை வடநாட்டு மக்கள் பெரிதும் போற்றுகிறார்கள்.

வங்காளம்: வங்காளத்தில் அனுபூதி மார்க்கத்தின் தந்தை மாதவேந்திர பூரி கோஸ்வாமி. அவருடைய சீடர் ஈசுவரர். ஈசுவரருடைய சீடர் சைதன்னியர் (இ. 1523). அவர் தம்மை ராதையாகவும் கடவுளைக் கிருஷ்ணனாகவும் பாவித்து வழிபட்டார். அவர் தெற்கே இராமேசுவரம் வரையிலும் மேற்கே பிருந்தாவனம் வரையிலும் சென்றார். கடைசிப் பன்னிரண்டு ஆண்டுக்காலத்தின் பெரும்பாகம் சமாதி நிலையிலேயே கழிந்தது. கிருஷ்ண பக்தி உண்டாக வேண்டுமானால் கடவுளிடமும் வேதங்களிடமும் பக்தி, பக்தர் சகவாசம், மனத்தைத் தூயதாக்கும் பயிற்சி முதலியவை தேவையென்று கூறுகிறார். இவருடைய தலையாய சீடர்கள் அத்வைதரும் நித்தியானந்தருமாவர். வங்காளத்தில் பெரிய அனுபூதிமான்களாக இருந்தவர்கள் மகரிஷி தேவேந்திரநாத் தாகூர், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர் ஆகியோராவர்.

ஆந்திர நாடு: இராமானுசர் காலத்துக்குப்பின் தோன்றிய நிம்பார்க்கர் என்பவர் யாதவப் பிரகாச ருடைய பேதாபேதக் கொள்கைக்கும் இராமானுசருடைய விசிட்டாத்வைதக் கொள்கைக்கும் இடையில் நிற்கும் ஒரு வித பேதாபேதமார்க்கத்தைப் போதித்தார். ஆந்திர நாட்டில் தோன்றிய அனுபூதிமான்களுள் வேமன்னா பேர் பெற்றவர்.

தமிழகம் : தமிழகத்தில் சைவமும் வைணவமும் அனாதிகாலந்தொட்டு இருந்துவந்த சமயங்களாயினும் சமணமும் பௌத்தமும் தழைத்த காலத்தில் அவற்றை நீக்கும்பொருட்டுப் பண்டைச் சமயங்கள் இரண்டும் வீறுகொண்டு எழுந்தன. அது முதல் தமிழ் நாட்டில் சைவசமயத்தவரும் வைணவ சமயத்தவரும் சிறந்த அனுபூதிமான்களாக விளங்கி வந்திருக்கிறார்கள்.

சைவ சமய நூல்களுள் ஆதியாகவுள்ளது திருமூலர் அருளிய திருமந்திரமாம். இந்நூலும், பின்னர் மெய்கண்டார் இயற்றிய சிவஞான போதமும் சைவ அனுபூதிக் கலையின் இணையற்ற தத்துவ நூல்களாகும். சீவன் மும்மலங்களால் கட்டுண்டு, அறிவிழந்து, சிவனை மறந்து துன்புறுகிறது. இந்த உண்மையை அறிந்த ஆன்மா சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு மார்க்கங்களையும் கையாண்டு, தனது மருள் நீங்கவும், சிவனுடைய அருள் கைகூடவும் பெற்றுச் சிவத்துவம் அடைந்து நித்திய இன்ப முக்தி பெறுகின்றது. இவ்வாறு சிவத்துவம் அடைவதற்கு வேண்டியது ஆண்டான் அடிமை உறவாகும். அந்த நிலையில் நின்று அனுபூதி பெற்றவர்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள். அவர்களில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நால்வரும் சைவ சமய குரவர் எனப்படுவர். முதல் மூவரும் தேவாரம் பாடியிருக்கின்றனர். மாணிக்கவாசகர்பாடியது திருவாசகம். இவர்களைத் தவிர, காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள், பட்டினத்துப் பிள்ளையார், கபிலர், நக்கீரர் பரணர், கல்லாடர் போன்ற பலர் பாடிய பாடல்களை 9 ஆம் திருமுறையிலும் 11 ஆம் திருமுறையிலும் காணலாம்.

இவர்கள் காலத்துக்குப் பின்னர் வாழ்ந்த, சைவ அனுபூதிக்கலைச் செல்வர்களுள் முக்கியமானவர்கள் அருணகிரி நாதர், குமரகுருபரர், தாயுமானவர், இராமலிங்க சுவாமிகள், முருகதாசர் ஆவர். சமீப காலத்தில் குமரகுருதாச சுவாமிகள், இரமண மகரிஷி முதலிய அனுபூதிமான்கள் திகழ்ந்திருந்தனர்.

தமிழ் நாட்டிலிருந்த வைணவ அனுபூதிமான்களான ஆழ்வார்கள் விசிட்டாத்வைத வேதாந்தத்தைத் தழுவியவர்கள். அதனால் அவர்கள் உபய வேதாந்திகள் என்று கூறப்படுவர். ஆழ்வார்கள் கடவுளிடம் ஆழ்ந்த பக்தி உடையவர்கள். அவர்களுடைய பாடல்கள் அனைத்தும் அவர்களுடைய அனுபூதியினின்றும் எழுந்தவை. ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்களுள் தலையானவர் நம்மாழ்வாரும் ஆண்டாளுமாவர். நம்மாழ்வார் பிரபத்தி அதாவது சரணாகதி வாயிலாகச் சாயுச்சிய பதவி அடையும் வழியை நிறுவியவர் எனப்படுவர். அவருடைய அனுபூதிப் பாடல்களை ஸ்ரீவைணவர்களுள் சிலர் உபநிடதங்களிலும் சிறப்புடையனவாகக் கருதுவர். ஆழ்வார்களுடைய பாடல்களை எல்லாம் நாதமுனிவர் தொகுத்தார். அத்தொகுதி திவ்வியப் பிரபந்தம் என்று பெயர் பெறும். சிவன் கோயில்களில் தேவாரம் தமிழ் வேதமாக ஒதப்பெறுவது போல, வைணவக் கோயில்களில் திவ்வியப்பிரபந்தம் தமிழ்வேதமாக ஓதப் பெறுகின்றது. இவர்களுக்குப் பின்னால் தோன்றிய இராமானுசர் விசிட்டாத்வைத பாஷ்யம் செய்தார். இவர் ஆழ்வார்களுடைய பாசுரங்களையும் உபநிடதங்களையும் ஒன்று போலவே மதித்து, அவ்விரண்டும் உபய வேதாந்தங்கள் ஆகும் என்று கூறினார். சீவன் கடவுளை இடம், காலம் இரண்டையும் கடந்த பரம்பொருளாகக் காணும்பொழுது முக்தி அடைவதாக உபதேசித்தார். இவருடைய கொள்கையை வேதாந்த தேசிகரும் பிள்ளைலோகாசாரியரும் வளர்த்தார்கள். பிரமானுபவத்திற்குத் தூய்மையும் வைராக்கியமும் தேவை என்று தேசிகர் கூறினார். அவற்றுடன் பக்தியும் அருளும் தேவை என்று பிள்ளைலோகாசாரியார் கூறினார். இவர்கட்குப் பின்வந்த மணவாள மாமுனிவர் தென்கலைப் பக்திமார்க்கத்தை உபதேசித்தார்.

மகாராஷ்டிரம்: மகாராஷ்டிரத்து அனுபூதிக்கலை அறிவை அடிப்படையாகக் கொண்டதாகும். அங்குத் தோன்றிய அனுபூதிமான்களைக் கால வரிசையில் ஐந்து குழுக்களாகப் பிரிக்கலாம், இக்குழுக்களில் சேராதவர் முகுந்தராஜர் என்னும் மகான்.

1. முதன்மையும் முக்கியமுமானது குரு ஞான தேவருடைய குழு. அவருடைய ‘அபங்கங்கள்‘ என்னும் பாடல்கள் அவர் கடவுளைத் துய்த்த அனுபவங்களைக் கூறுகின்றன. அவருடைய பாடல்களும், அவருடைய தம்பி, தங்கையர் பாடல்களும் அவர்களுடைய ஆழ்ந்த பக்தியையும் அனுபவத்தையும் காட்டுகின்றன. தங்கை முக்தாபாயின் ஆன்ம மேன்மையைக் கண்டு சங்கதேவர் எனும் சிறந்த ஹடயோகி அனுபூதிமானாக மாறினார். இது ஞானயோகத்தைவிடப் பக்தியோகமே சிறந்தது என்பதற்குத் தக்க சான்றாகும்.

2. நாமதேவரைத் தலைவராகக் கொண்ட குழுவில் எல்லாச் சாதியாரும் காணப்படுவர். எல்லா மக்களும் சகோதரர்களே என்பது அவர்கள் பாடல்களின் சாரம். அதனால் அவர்களைப் 'பொதுமக்கள் அனுபூதிமான்கள்' என்று கூறுவர். சமூகத்தில் தாழ்ந்தவர்கள் எனச் சாதாரணமாகக் கருதப்படுவோரெல்லாரும் இக்குழுவில் கலந்து கொண்டு அனுபூதி வளர்ச்சி யெய்தினர்.

3. ஏகநாதருடைய அனுபூதிக்கலையானது ஆன்ம வாழ்க்கையும் உலக வாழ்க்கையும் இணைந்ததாகும். இல்லறத்தில் இருந்துகொண்டே இறைவனை அனுபவிக்க முடியும் என்பது இவருடைய சித்தாந்தம். இவர் அனுபூதிக் கருத்துக்களைக் கூறுவதற்கு நாடோடிப் பாடல் முறையையே கையாண்டார். அவற்றைப் 'பருதங்கள்' என்று கூறுவர்.

4. துக்காராம் துய்த்த அனுபூதி நிலையினைத் தெளிவாகக் கூறுவது அவருடைய பாடல்கள். அதனால் அவருடைய மார்க்கத்தைச் ‘சொந்த அனுபூதிக்கலை’ என்பர்.

5. இராமதாசருடைய கொள்கை கருமயோக சம்பந்தமானது. அவருடைய தலைசிறந்த உபதேசங்கள் அடங்கிய நூல் 'தாசபோதம்' என்பதாம். இந்தக் குழுவினரைத் தவிர, 'மகானுபாவர் வழிபாடு,' அதாவது அனுபூதி பெற்றவர் வழிபடும் முறை என்று கூறப்படும் கொள்கையினரும் இருந்தார்கள். இவர்களை மக்கள் இழிவாகக் கருதினர். இவர்கள் நூல்கள் கிடைக்கவில்லை.

இந்தக் குழுவினர் அனைவரும் கூறும் கருத்தின் சாரம் இது : மக்களுள் சிலர் திடீரென்று மனமாற்றம் அடைந்து, உலக இன்பங்களைத் துறந்து, கடவுளைத் துய்க்க ஆசைப்படுவர். அதற்காகப் பக்குவ காலம் வந்ததும் குருவை அடைவர். குருவின் அருளின்றிக் கடவுளைத் துய்க்க முடியாது. அதனால் குருவே கடவுளை விட உயர்ந்தவர். குரு கடவுள் நாமத்தைத் துதிக்கும்படி கூறுவர். ஆதலால் மகாராஷ்டிர அனுபூதிமான்களுடைய பாடல்களில் குருவுக்குக் கூறும் புகழ்மாலை களும், கடவுள் நாமத்தைப் பற்றிய புகழ்மொழிகளும் நிறைந்திருக்கும். சாதகர்கள் வழிபாடு செய்யும்போது சில வேளைகளில் தடைகள் உண்டாகும். கடவுள் சோதனை செய்வார். அக்காலத்தை ‘ஆன்மாவின் இருள் இரவு’ என்பர். சாதகர் படும் வேதனைகளை நாமதேவர், துக்காராம், இராமதாசர் ஆகியோர் கல்லும் கரையும் பாடல்களில் கூறுகிறார்கள். சாதகர்கள் இச்சோதனைகளைக் கடந்து அனுபூதி பெறுவர். கே. வீ. க.