கலைக்களஞ்சியம்/அஷாந்தி
அஷாந்தி என்போர் ஆப்பிரிக்காவிலுள்ள கோல்டு கோஸ்ட் பகுதியின் நடுப்பாகத்தில் வாழ்பவர். அவர்கள் தொகை 80 ஆயிரம். 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷார் வெல்வதற்குமுன் இப்பகுதியிலும், இதற்கு வடக்கிலும் தெற்கிலும் வாழ்ந்து வந்தனர். உடல் அமைப்புப்பற்றிய அளவில் அவர்கள் நீக்கிரோ வகுப்பைச் சார்ந்தவர்கள். அவர்களுடைய மொழி காங்கோ-நைஜர் மொழிக் குடும்பத்தின் அகான் குழுவைச் சேர்ந்ததாகும். அவர்கள் தலையாய தொழில் விவசாயம். இப்போது அவர்கள் பெரும்பாலும் கோக்கோ மரம் பயிரிடுகின்றனர். கலை, தொழில் இரண்டிலும் அவர்கள் மிகுந்த திறமை வாய்ந்தவர்கள். நெசவும் உலோகத் தொழிலும் சிறப்பானவை. ஆதிகாலமுதல் தங்கம் வெட்டி எடுக்கப்பெற்றது. அதை எடை போடப் பயன்படுத்திய நிறை கற்கள் தங்கத்தால் செய்தவை. இப்போதும் அவை கலை எழில் மிக்கனவாகக் கருதப்படுகின்றன. அஷாந்தி மக்களுடைய சமூக அமைப்புச் சிக்கலானது. ஒவ்வொருவரும் சமூக நிலையைத் தாயிடமிருந்தும், ஆன்மாவைத் தந்தையிடமிருந்தும் பெறுவதாகக் கருதுகிறார்கள். அரசர்களுக்குக் கீழே படிப்படியாகப் பல அரசியல் அமைப்புக்கள் உள. ஒவ்வோர் அமைப்புக்கும் ஒரு தலைவன் உண்டு. வரிப்பணத்திலிருந்து அதிகாரிகள் ஊதியம் பெறுகிறார்கள். சமயத்தின் அடிப்படை ஒபோசம் என்னும் இயற்கைத் தேவதை வழிபாடும் மூதாதையார் வணக்கமுமாகும். மதச் சடங்குகள் மிக விரிவுடையன. மெ. ஜே. ஹெ.