கலைக்களஞ்சியம்/ஆசியச் சங்கம்
Appearance
ஆசியச் சங்கம் (The Asiatic Society) 1784-ல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரால் வங்காளத்து ராயல் ஆசியச் சங்கம் என்ற பெயரால் நிறுவப்பெற்று, இப்போது ஆசியச் சங்கம் என்னும் பெயரால் கல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் இருபத்தொரு வயதான எல்லா நாட்டு மக்களும் உறுப்பினராகலாம். கௌரவ உறுப்பினர்களும் உண்டு. நூல்நிலையங்கள், விஞ்ஞான ஸ்தாபனங்கள் முதலியனவும் இதில் உறுப்பினராகலாம். ஆண்டுதோறும் 'ஆண்டு நூல்' ஒன்றும், 'கால் ஆண்டு இதழ்' ஒன்றும் வெளியிடுகின்றனர். இவை தவிர நூல்களும் வெளியீடுகிறார்கள். இச்சங்கத்தின் நோக்கம் ஆசியா என்னும் பூகோள எல்லைக்குள் மனிதனால் செய்யப்படுவதும் இயற்கையில் உண்டாவதுமான எதையும் ஆராய்வது என்பதாம்.