கலைக்களஞ்சியம்/ஆசியா
ஆசியா கண்டங்களில் பெரியது. அனேகவிதத் தட்ப வெப்ப நிலைகளையும் நில வகைகளையும் கொண்டது. உலகிலுள்ள மக்களில் பெரும் பகுதியினர் இங்கேயே வசிக்கிறார்கள். சைபீரியாவில் மிகுந்த குளிரும், இந்தியா முதலிய பகுதிகளில் மிகுந்த வெயிலும், மழை சொட்டுக்கூடப் பெய்யாத அரேபியா, மத்திய ஆசியாப் பாலைவனங்களும், மிக அதிகமாக மழை பெய்யும் சிரபுஞ்சியும், மிக உயரமான எவரஸ்ட் முதலிய சிகரங்களையுடைய இமயம் முதலிய மலைகளும் இக்கண்டத்தில் உண்டு. காசி, மக்கா, எருசலேம், கயா, இராமேசுவரம் போன்ற புண்ணியத்தலங்கள் இக்கண்டத்திலேயே உள். இந்துமதம், பௌத்தம், ஜைனம், இஸ்லாம், கிறிஸ்தவம்,கன்பூஷியமதம், சாரதூஷ்டி மதம் முதலிய பெரிய மதங்கள் இக் கண்டத்தில் தோன்றியவையே. மக்கள் தொகை மிக அடர்த்தியான இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும், மிகக் குறைந்த மத்திய அரேபியா முதலிய பகுதிகளும் உடையது.
பரப்பு ஏறத்தாழ 180 இலட்சம் ச. மைல். ஆப்பிரிக்காக் கண்டத்தைப்போல 1 மடங்கு பெரியது; வடதுருவத்திலிருந்து பூமத்தியரேகை வரையில் படர்ந்துள்ளது. ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே யூரல் மலைகள், காஸ்பியன் கடல், கருங்கடல், டார்டனல்ஸ் ஜலசந்தி ஆகியவைகளும், ஆப்பிரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் இடையே சூயஸ் கால்வாய், செங்கடல், பாபல்மான்டெப் ஜலசந்தி, அரபிக்கடல் ஆகியவைகளும் உள்ளன. அமெரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் இடையே உலகிலேயே பெரிய சமுத்திரமாகிய பசிபிக் சமுத்திரம் இருக்கிறதாயினும் வடகிழக்கு ஆசியாவையும் வடமேற்கு அமெரிக்காவையும் குறுகிய பேரிங் ஜலசந்திதான் பிரிக்கிறது. ஐரோப்பியக் கடற்கரையைப் போல ஆசியக் கடற்கரை நல்ல துறைமுகங்களுக்கு ஏற்றதாக இல்லை.
'உலகத்தின் கூரை' என்று சொல்லப்படும் பாமீர் பீடபூமி இந்தியாவிற்கு வடமேற்கேயுள்ளது. இப்பீடபூமி முழுவதும் கடல் மட்டத்திற்கு 10,000 அடி உயரத்திற்குமேல் இருக்கிறது. இப் பீடபூமிக்குத் தெற்கேயுள்ள இமயமலைத்தொடரில் உலகிலேயே மிக உயரமான உச்சியாகிய எவரஸ்ட் உச்சி (29,002 அடி) இருக்கிறது. பாமீருக்குக் கிழக்கேயுள்ளது காராகோரம் மலைத்தொடர். இவ்வாறு இடையிடையே மலைத்தொடர்கள் இருப்பதால் ஆசியாவின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் ஒருவர்க் கொருவர் அதிகத் தொடர்பின்றி வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
திபெத்து, மங்கோலியா, சின் கியாங் முதலிய நாடுகள் மத்திய ஆசியாவிலும், சோவியத் ரஷ்யாவிற்குச் சொந்தமான சைபீரியா முழுவதும் வட ஆசியாவிலும், ஜப்பான், கொரியா, சீனா, பிலிப்பீன் தீவுகள் முதலியவை கிழக்கு ஆசியாவிலும், இமயமலைக்குத் தெற்கேயுள்ள இந்தியா, பர்மா, மலேயா முதலியவை தென் ஆசியாவிலும், அரேபியா,பாரசீகம், துருக்கி முதலியவை தென் மேற்கு ஆசியாவிலும் உள்ள நாடுகள். ஓபு, ஆமூர், யாங்க்ட்ஸீ, மேகாங், ஐராவதி, பிரமபுத்திரா, கங்கை, சிந்து, டைக்ரிஸ், யூப்ரடீஸ், கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகியவை ஆசியாவின் முக்கிய ஆறுகள். இந்த ஆறுகளின் கரைகளில் உள்ள நாடுகள் உலகிலேயே மிகச் செழிப்பானவற்றில் சில.
பாரசீகத்திலும், அரேபியாவிலும், ஈராக்கிலும், பர்மாவிலும் மண்ணெண்ணெய்க் கிணறுகள் மிகுதியாக இருக்கின்றன. வட சீனா, கொரியா, சைபீரியாப் பகுதிகளில் இரும்பு கிடைக்கிறது. சீனாவில் ஏராளமாக நிலக்கரி கிடைக்கிறது. ஜப்பானில் நிலக்கரி கிடைப்பதால் அது ஒரு முக்கியமான கைத்தொழில் நாடாக விளங்குகிறது. இந்தியாவில் நிலக்கரி குறைவாயினும் இரும்பு ஏராளமாகக் கிடைக்கிறது. இந்தியாவிலுள்ள இரும்புத் தொழிற்சாலைகள் உலகப்புகழ் பெற்றவை. இந்தியாவிலும் பர்மாவிலும் வைரம், மாணிக்கம் முதலிய கற்கள் கிடைக்கின்றன. ஆசியாவின் மக் : சு. 140 கோடி (1931). மஞ்சள் நிறமுடைய மங்கொலாயிடுகளும், கரு நிறமுடைய திராவிடர்களும், சிலாவிக், அயினு முதலிய இனத்தவர்களும் ஆசியாவில் உள்ளனர். ஆசிய மக்களுடைய வாழ்க்கைத்தரம் ஐரோப்பிய, அமெரிக்க மக்களுடைய வாழ்க்கைத்தரத்திற்குக் குறைந்ததாக உள்ளது. ஆயினும் இக்கண்டத்தில் வாழும் மக்கள் மூளையாலும் உடலாலும் மிகுந்த வேலை செய்யக்கூடியவர்கள். ரசாயனம், வானவியல், இயற்கணிதம் முதலிய கலைகள் பிறந்த கண்டம் இது.
விவசாயம் பெரும்பாலும் ஆசியாவின் எல்லாப் பகுதிகளிலும் நடைபெறுகிறது. கிழக்கு ஆசியாவின் முக்கிய உணவுத்தானியம் அரிசி; பல பகுதிகளில் கோதுமையும், சோயா அவரையும், பருத்தியும், எண்ணெய் வித்துக்களும் விளைகின்றன. மலைகளிலும் அடுக்கு நிலச்சாகுபடி (த.க.) முறையைக் கையாண்டு, உணவுத்தானியங்களை உற்பத்தி செய்கின்றனர். கிழக்கு ஆசியாவிலும், அஸ்ஸாமிலும், இலங்கையிலும் தேயிலை ஏராளமாகப் பயிராகிறது. சீனர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும் தேயிலைப் பானப் பழக்கம் அதிகம். மற்றெந்தக் கண்டத்தையும்விட ஆசியாவில்தான் மரக்கறி உணவு உண்பவர்கள் அதிகம். வங்காளத்தில் விளையும் சணல், மலேயாவில் உண்டாகும் ரப்பர், தென்னிந்தியாவில் விளையும் மிளகு, இலவங்கம் முதலியவை ஆசியாவிற்கே பெரும்பாலும் உரியவை. சோவியத் ரஷ்யாவிற்குச் சொந்தமான சைபீரியாவில் விஞ்ஞானமுறை விவசாயம் கையாளப்படுவதால் ஏராளமான உணவுத்தானியங்கள் சில ஆண்டுகளாக உற்பத்தியாகின்றன.
புலி, ஓநாய், பாம்புகளும், மயில், கிளி முதலிய பல வகைப் பறவைகளும், ஒட்டகம், குதிரை, யானை முதலியவையும் இக்கண்டத்திற் காணப்படுகின்றன. சிங்கம் ஆப்பிரிக்காவிற்போல அவ்வளவு அதிகமாக இங்கில்லை.
ஜப்பான், சோவியத் ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளைத்தவிரப் பிற நாடுகள் கைத்தொழிலில் முன்னேறவில்லை.
இந்தோ ஐரோப்பிய, அயினு, திராவிட, செமிடிக், ஜப்பானிய, யூரல்ஆல்டேயிக் மொழிவகைகள் ஆசியாவில் பேசப்படும் மொழிகளில் தலையாயவை.
டோக்கியோ, பீக்கிங், கான்டன், ஷாங்காய், கல்கத்தா முதலியவை மிகப் பெரிய நகரங்கள். பம்பாய் ஓர் அழகிய இயற்கைத் துறைமுகம். சென்னை நகரில் உள்ள கண் கவர் தோற்றமுடைய கடற்கரை உலகப் புகழ் பெற்றது.
ஆசியா மிகப் பண்டைய வரலாறுடையது. ஆசிய நாகரிகம் மிகப் பழமையானது. எகிப்தும் கிரீசும் நீங்கலாக, ஏனைய பண்டைய நாகரிகங்கள் எல்லாம் ஆசியாவிலுள்ள சீனா, மெசபொடேமியா, பாலஸ்தீனம், சிரியா, பாரசீகம், இந்தியா முதலிய நாடுகளிலேயே வளர்ந்தன. இந்தியாவில் வேதகாலம் என்பது கிறிஸ்துவிற்குப் பல நூற்றாண்டுகட்கு முந்தியது. மகா அலெக்சாந்தர் காலத்திலிருந்தே ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் தொடர்பு ஏற்பட்டதாயினும், 14-15ஆம் நூற்றாண்டுகட்குப் பின்னரே ஐரோப்பிய நாடுகளின் கடல் வாணிபத்தின் பயனாக இரு கண்டத்தவர்க்கும் தொடர்பு மிகுந்து வந்தது. ஆசியாவிலுள்ள நாடுகளைப் பற்றித் தனிக் கட்டுரைகள் பார்க்க.
மானிடவியல்: தென்கிழக்கு ஆசியா: மக்கள் இனவியலின்படி பார்த்தால், தென்கிழக்கு ஆசியாவிலுள்ள சமூகங்களின் பண்புகள் இப்பொழுதும் இதற்குச் சற்று முந்திய காலத்திலும் பல அமிசங்களைப் பொறுத்தனவாகவே உள. இந்த அமிசங்கள் சில வேளைகளில் முரண்பட்டும், சில வேளைகளில் முரண்படாமலும் இருந்திருக்கின்றன. இந்தப் பகுதியிலுள்ள நாடுகள் தூரத்தாலும் சீதோஷ்ண நிலைமையாலும் வேறுபட்டிருப்பினும், ஆதிக்குடிகளின் பண்பாடுகள் பெரும்பாலும் அதிக வேறுபாடுகளற்றவையாகவே தோன்றுகின்றன. இப்போது இந்தியாவிலும் இந்தோனீசியாவிலும் சீனாவிலும் நாகரிகம் எளிதில் எட்ட முடியாத இடங்களில் வாழும் மக்களுடைய இன்றைய நிலைமையைக் கவனித்தால், வரலாற்றுக் காலத்துக்கு முன்னிருந்த சமூகங்கள் அரசியல் விஷயத்திலும் பொருளாதார விஷயத்திலும் பெரும்பாலும் வேறுபாடில்லாமல் இருந்திருப்பவையாகவே தெரிகின்றன. ஒவ்வொரு சமூகமும் தனக்கு ஏற்பட்ட பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்குத் தக்கவாறு அமைப்புக்களை உண்டாக்கிக் கொண்டிருந்திருக்கிறது. அவ்வாறே சீனாவிலும் தாய்லாந்திலும் ஜாவாவிலும் விசாலமான பொருளாதார ஏகாதிபத்தியங்கள் தோன்றியிருந்தன.
ஆயினும், சமூகங்களிடையே ஓரளவு வேறுபாடுகள் காணப்பட்டன. சமூகங்களுக்கிடையே உண்டான உறவுகள் அவ் வேறுபாடுகளைக் குறைத்தன. தென் கிழக்கு ஆசியாவின் வரலாறும், வரலாற்று-முன்னும் இன்னும் நன்றாக அறியப்படவில்லை. ஆயினும் அப்பகுதியிலிருந்த மக்கள் குழுக்களிடையே பண்பாட்டு உறவுகளும் மக்கட்கலப்பும் நிறைய இருந்து வந்திருக்கின்றன. மத்திய சீனாவின் சீதோஷ்ண நிலைமை மாறிய காலத்தில் மக்கள் கூட்டமாகத் தெற்கு நோக்கியும் தென்கிழக்கு நோக்கியும் இடம் பெயர்ந்துளர். சில வேளைகளில் உணவுத் தட்டுப்பாடும் மக்களின் இடப் பெயர்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கிறது. சீனர்கள் தென்கிழக்கு நாடுகளை அரசியலிலும் பொருளாதாரத்திலும் தம் வயப்படுத்த முயன்றதாலும் தொடர்பு உண்டாவதற்குஏது உண்டாயிற்று. இந்தியாவிலும் தாய்லாந்திலும் இந்தோனீசியாவிலும் முதலில் இந்து மதமும், பின்னர் பௌத்த மதமும் விரைவாகப் பரவியதாலும் பண்பாட்டு உறவுகள் உண்டாயின. அதுபோலவே முஸ்லிம் உறவுகள் இந்தோனீசியாவில் உண்டாயின. இறுதியாகவுள்ள காலம் ஐரோப்பியர்கள் கீழ்நாடுகளை ஆக்கிரமித்த காலமாகும்.
பூகோள், பொருளாதார, அரசியல், மத விஷயங்கள் வேறுபட்டதன் காரணமாக இந்தப் பகுதியைச் சீனாவும் தென்கிழக்குக் கடல் தீரமும், ஜப்பான், இந்தோனீசியா, இந்தியா என்று நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொன்றிலும் பொருளாதாரம், மதம், மொழி இவற்றில் பெரும்பாலும் ஒற்றுமை உண்டு. இப்பகுதிகளின் பொருளாதாரம் நெற்பயிரை முக்கியமாகக் கொண்ட விவசாயத்தையும், அதற்குத் துணையாகவுள்ள ஆடுமாடு மேய்த்தல் மீன்பிடித்தல் ஆகியவற்றையும் பொறுத்ததாயிருக்கின்றது. கைத்தொழில் பல படிகளில் காணப்படுகிறது; இந்தியாவில் கையால் செய்யும் தொழிலாகவும், சீனாவிலும் ஜப்பானிலும் யந்திரத் தொழில் போன்றதாகவும் இருக்கின்றது. இவ்வாறு வேறுபடுவதற்குக் காரணம் இயற்கைப் பொருள்கள் கிடைப்பது, ஐரோப்பியக் கைத்தொழில் முறைகளை மேற்கொள்வது, அண்மையில் நடந்த போர்களின் தேவைகள் ஆகியவற்றைப் பொறுத்ததாகும். சீனாவிலும் ஜப்பானிலும் வேறு இடங்களிலுள்ள பெரிய நகரங்களிலும் நடைபெறும் எந்திரக் கைத்தொழில்கள் தவிர ஏனையவை சாதி முறைகளையும் மதக் கடமைகளையும் ஆதாரமாகக் கொண்டனவே யன்றிப் பொருள் இலாபத்தையோ அல்லது தொழிலாளர் தேவைகளையோ ஆதாரமாகக் கொண்டனவல்ல. அண்மைக்காலம் வரை. குடியரசு ஏற்படுவதற்கு முன்னர், சீனாவில் சாதிகளையும் குடும்பங்களையும் கொண்ட கிராமங்களே அடிப்படைச் சமூகங்களாக இருந்தன. இப்பகுதிகளில் ஆதியிலிருந்த மதங்கள் மனிதனுக்கு இயற்கையுடனும் இறந்த காலத்துடனும் தொடர்புண்டு என்பதை வற்புறுத்தின. அந்த மதங்களுடன் பகுதிக்கு ஏற்றவாறு பெளத்த மதமோ, ஷின்டோ மதமோ அல்லது இஸ்லாம் மதமோ இணைந்துகொண்டு, தினசரி வாழ்க்கையில் பெரும் பகுதியில் இடம் பெற்றுள்ளன. ஆயினும், இரண்டாவது உலகப்போரும், அதன்பின்னர் எழுந்த கம்யூனிஸ்டுக் கொள்கைகளும் தேசியக் கொள்கைகளும் தென்கிழக்கு ஆசியாவின் சமூக, பொருளாதார வாழ்க்கையிற் பெரிய மாறுதல்களை உண்டாக்கியிருக்கின்றன. இவற்றின் நன்மை தீமைகளை இப்பொழுது மதிப்பிடுவதற்குப் போதுமான சான்றுகள் கிடைக்கவில்லை. எம். ஜே. மெ.
தென்மேற்கு ஆசியா: அறிஞர்கள் வெவ்வேறு மக்கள் வகைகள் வாழும் பகுதிகள் என்று உலகத்தில் குறிப்பிட்டுள்ளவற்றுள் தென்மேற்கு ஆசியா ஒன்று. ஆதிகாலந்தொட்டு மக்கள் வகைகள் அங்கு வருவதும் போவதுமாயிருந்திருக்கின்றன. பூகோள சாஸ்திர முறையில் பார்த்தால், அது மத்திய ஆசியாவின் புல்வெளிகளுக்கும் செங்கடற்கரையிலிருந்து தொடங்கும் ஆப்பிரிக்காவின் விசாலமான பாலைவனங்கட்குமிடையில் இருக்கின்றது. இப்பகுதியிலிருந்து மத்திய ஆசியாவுக்குச் செல்வதற்கான வழி கொராசான் கணவாயாகும். இந்தப் பகுதி மத்தியதரைக் கடற்கரையை ஒட்டியுமிருக்கிறது. 'செழும் பிறை நாடு' (The Fertile Crescent) என்பது தென் பாலஸ்தீனத்திற்கும் பாரசீக வளைகுடாவுக்கும் இடையிலிருக்கின்றது.
இவ்வாறு இப்பகுதி மத்திய ஆசியப் புல்வெளிக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் இருப்பதால் ஆதிமுதல் இப்பகுதி வழியாகவே மத்திய ஆசிய மக்கள் ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் வந்து போக வசதியாயிருந்தது. அதனால் புல்வெளியில் வாழ்ந்த நாடோடி மக்களுக்கும், ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் வாழ்ந்து வேளாண்மையும் வாணிபமும் செய்துகொண்டிருந்த மக்களுக்கும் தொடர்பு உண்டாவதற்கு வசதியாயிருந்தது. இப்பகுதி மக்கள் நைல் நதி தீரத்து மக்களுடனும் தொடர்புடையவர்களா யிருந்தார்கள். செழும்பிறைப் பகுதியில் அசிரியா, பாபிலோன், ஈலம் ஆகிய பண்டைய பெரிய நாகரிகங்கள் தோன்றின.
அநேகமாகப் பிற நாட்டிலிருந்தே நாடோடி மக்கள் தங்கள் கால்நடைகளுக்குத் தீவனமும் தண்ணீரும் தேடி இப்பகுதிக்கு வருவோராயிருந்தனர். பொதுவாக இப்பகுதி மக்கள் வெளிநாடுகளுக்குக் குடியேறிப் போனதில்லை. இதற்கு மிகவும் முக்கியமான விலக்கு, கி.பி.7ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் தோன்றியதன் காரணமாக அரபு மக்கள் பிற நாடுகளுக்குச் சென்றதே யாகும்.
ஆசியாமைனர் என்னும் நிலப்பகுதி கிரீஸ் நாடுவரை கடலுக்குள் நீண்டு உட்சென்றிருப்பதால் கிரேக்கர்களே அப்பகுதிக்கு ஆசியாமைனர் என்ற பெயரை அளித்தார்கள். இப்போது அது ஆட்டமான் அல்லது ஊஸ்மானிய துருக்கியருடைய தாயகமாக இருந்து வருகிறது. ஆதியில் அந்த நாட்டில் மத்திய ஆசியாவிலிருந்து வந்த செல்ஜுக்குகள் வசித்தனர். அதன் பின்னர் வந்தவர்கள் துருக்கியர்கள். அவர்கள் வந்து சுமார் அறுநூறு ஆண்டுகள் ஆகின்றன. ஆயினும் இப்போதுள்ள துருக்கியர்கள் காக்கேசிய, கிரேக்க, லெவான்டைன் மக்களுடன் கலந்தவர்கள். இப்போது அவர்களுக்கும் இப்பகுதியிலுள்ள மற்றவர் களுக்கும் தோற்றத்தில் எவ்வித வேறுபாடும் காணமுடியாது.
துருக்கியை அடுத்துக் கிழக்கேயுள்ள பாரசீகம் உயர்ந்த பீடபூமி, அங்கே ஐரேனியர்கள் வாழ்கிறார்.கள். ஆதிகால முதல் அது சக்கராதிபத்தியமுள்ள ஒரு முடியாட்சி நாடாகும். அங்கே ஒரே அரசரின் ஆதிக்கத்தில் பல இன மக்கள் வாழ்கிறார்கள். ஆயினும் அவர்கள் அனைவரும் தங்களை ஐரேனியர்கள் என்று அழைத்துக்கொள்வதில் பெருமை கொள்கிறார்கள். வடக்கே வாழும் அசர்பைஜனிகளும் காஷ்கேர்களும் துருக்கி மொழியையும், மேற்கேயுள்ள குர்துக்கள் ஓர் ஆரிய மொழியையும், அசிரோ கால்தேயர்கள் செமிட்டிக் அராமிக் மொழியையும், லூர்களும் பக்தியாரிகளும் பாரசீக மொழியையும், கொராசானிலுள்ள துர்க்கோமர்கள் வேறு மொழியையும் பேசுகிறார்கள். நாட்டின் எல்லைப்புற நகரங்களில் யூதர்களும் சார தூஷ்டிர மதத்தினரும் சிறுபான்மையோராக இருக்கிறார்கள்.
இந்தியாவுக்கும் பாரசீகத்திற்குமிடையிலுள்ள ஆப்கானிஸ்தானத்தைச் சூழ்ந்து இந்துகுஷ் என்ற உன்னதமான மலைகள் இருக்கின்றன. இங்குள்ளவர்களும் ஐரேனிய வகுப்பில் ஒருவகையினரே. அவர்கள் பேசும் மொழி வார்சி (Farsi) என்பது. அங்கே பலவிதமான மக்கள் வாழ்கிறார்கள். மங்கோலிய ஹஜார்கள் மலைச்சரிவுகளிலும், உஜ்பெக்குகளும் துர்க்கேமான்களும் வடபகுதியிலும், பலுச்சியர்கள் தென்பகுதியிலும், பாக்தூன்கள் கீழ்ப்பகுதியிலும், பழுப்பு மயிரும் நீலக்கண்களுமுடைய ஷெக்னர்களும் பாஷாய்களும் உண்மையிலேயே ஆப்கானிஸ்தான் ஆட்சிக்குட்பட்ட வாக்கன் என்னுமிடத்திலும் வாழ்கிறார்கள். காபிர்ஸ்தானம் என்று முன்னால் வழங்கிவந்த பகுதியிலுள்ள நூரிஸ்தானியர் என்போர் அலெக்சாந்தருடன் வந்த மாசிடோனியர்களுடைய வழியினராவர்.
இந்தப் பகுதியில் தென்பாகத்தில் கடலுக்குள் சென்றிருக்கும் அராபிய தீபகற்பம் பெரும்பாலும் பாலைவனங்களால் ஆனதே. அரசியல் விஷயமாக அது சவுதி அரேபியா, யெமென், ஜார்டன் என்று பல பகுதிகளாகப் பிரிக்கப்பெற்றிருக்கிறது. சவுதி அரேபியாவிலுள்ள ஹெட்ஜாஸ் என்னும் கடற்கரை மாகாணத்தில்தான் முஸ்லிம்களுடைய புண்ணியத்தலமாகிய மக்கா நகரம் இருக்கின்றது.
மக்கள் வகையை வைத்துப் பார்த்தால் சிரியாவும் ஈராக்கும் அராபியாவுடன் சேர்ந்தனவாகும். அராபியாவிலுள்ள மக்களும் பாலைவன நாடோடிகளான பெடூயின்களும் அரபு மொழி பேசுகின்றனர். இஸ்லாம்தான் தேசீய மதமாகும். சவுதி அரேபியாவில் மத வைராக்கியம் நிறைந்த வகாபிட் மதவகை காணப்படும். ஈரானைப்போல் ஈராக்கும் ஷியா முஸ்லிம் நாடாகும். மதத்துக்காக உயிர் துறந்த அலியையும் ஹுசேனையும்கொண்டாடப் பெறும் தலங்களாகிய நெஜெப் என்பதும் கெர் பேலா என்பதும் இங்குத்தான் உள்ளன. அராபியர்கள் ஒரு காலத்தில் பெரிய மாலுமிகளாக இருந்தனர். அவர்கள் மலையாளம், இந்தோனீசியா ஆகிய நாடுகளுடன் வாணிபம் செய்து வந்துள்ளார்கள். கி. பீ.
வட ஆசியா : வட ஆசியா என்பது சைபீரியாவினூடே செல்லும் இருப்புப்பாதைக்கு வடக்கேயுள்ள ஆசியப் பகுதியைக் குறிக்கும். அந்தப் பாகத்தில் பண்டைக்கால முதல் பதினாறாம் நூற்றாண்டின் இறுதிவரைப் பல சுதேச மக்கள் வாழ்ந்து வந்தனர். அதன் பின்னர் ரஷ்ய மக்கள் வந்து குடியேறினர். இப்பொழுது ரஷ்யர் தொகையே சுதேச மக்கள் தொகையைவிடப் பெரிதாகும். ரஷ்யர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நிலங்கள் மேற்குச் சைபீரியாவும் விளாடிவாஸ் டாக் என்னும் இடத்தைச் சுற்றியுள்ள பசிபிக் கடற்கரைப் பிரதேசமு மாகும். அவர்களில் மிகச்சிலரே வடக்கிலும் வடகிழக்கிலும் காணப்படுகின்றனர்.
சுதேச மக்களை ஜோக்கல்சன் என்னும் ஆசிரியர் மங்கோலாயிடு, அமெரிக்கனாயிடு எனவும், சாப்பிளிக்கா என்னும் ஆசிரியர் புதுச் சைபீரியர், பழைய சைபீரியர் எனவும் இரண்டு முக்கிய இனங்களாகப் பிரிக்கின்றனர். சோவியத் ஆசிரியர்கள் இவர்களை யூரல் ஆல்டேகியர் என்றும் பழைய ஆசியர் என்றும் பிரிக்கிறார்கள். இம்மூன்று முறைகளும் பெரும்பாலும் ஒரே பொருளையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. சோவியத் அதிகாரிகள் பெரும்பான்மையான சுதேச இனங்களுக்குப் புதிதாகப் பெயரிட்டுளர். அப்பெயர்கள் பெரும்பாலும் சுதேச மக்கள் கையாண்டுவரும் பெயர்களாகவே இருக்கின்றன.
இந்த இரண்டு முக்கிய இனங்களில் அடங்கிய பல குழுக்களைப் பற்றிக் கீழே தரும் விளக்கத்தில் ஒவ்வொரு குழுவுக்கும் முதலில் காணும் பெயர் புதுப்பெயர்; அடுத்து வரும் பெயர் ஆங்கில உருவம் பெற்ற பெயர். மக்களின் தொகை 1926ஆம் ஆண்டுக் கணக்குப்படியுள்ளது.
பழைய ஆசிய இனத்தவர் பெரும்பாலும் ஆசியாவின் வடகிழக்கு மூலையிலேயே வசித்துவருகிறார்கள். லூரோ வெட்லானி (Luorovetlani அல்லது சக்ச்சீ Chuk-chee மக்: 12,332)கடற்கரையில் வசிக்கின் றனர். அவர்கள் மான் வளர்த்தும், வேட்டையாடியும் வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆசிய எஸ்கிமோக்கள் யூயிட் - Yuit என்னும் புதியபெயர் அரிதாகவே வழங்குகிறது ; தொகை: 1293. வேடர்கள்; ராங்கல் (Wrangel) தீவிலும் பேரிங் ஜலசந்திப்பகுதியிலும் வாழ்கின்றனர். உனங்கானியர் (Wnangany அல்லது ஆலூட்கள் Aleuts மக்: 351) பேரிங் ஜலசந்தியிலுள்ள கம்மாண்டர் தீவுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் மீன்பிடிப்போர் ;19ஆம் நூற்றாண்டில் அலூஷியன் தீவுகளிலிருந்து அழைத்து வரப் பட்டவர்கள். இந்த மூன்று குழுவினரும் வட அமெரிக்கப் பூர்வ குடிகளுடன் உடல் அமைப்பு, பண்பாடு, மொழி ஆகியவற்றில் ஒற்றுமை உடையவர்கள். நிமிலானியர் (Nymylany அல்லது கோர்யாக்கர்கள் Koryaks தொகை : 7.439); காம்சட்கா (Kamchatka) தீபகற்பத்தின் வடகோடியிலும், இதல்மனியர் (Itelmeny அல்லது காம்சடலர் Kamchadals தொகை: 4.217); மேற்குக் கரையிலும் வசிக்கின்றனர். இரு குழுவினரும் மீன் பிடிப்பவர்கள்; நிமிலானியர் மான் வளர்க்கவும் செய்கிறார்கள். ஓடுலியர் (Oduly அல்லது யுகாகீர்கள் (Ytkagirs) மக் : 440) ; எடலியர் (Eteli அல்லது சுவாண்டிஸியர் (Chwvantsy மக்: 684) ; ஆகிய இரு குழுவினரும் உறவுடையவர். அவர்கள் பனிமான்களும் நாய்களும் வளர்த்துக் கொண்டு, அனடிர் (Anadyr) நதியின் மேற்பாகத்துக்கும் கொலிமா (Kolyma) நதிக்கும் இடையே வசிக்கிறார்கள். நிவிக்கியர் (Nivkhi அல்லது கில்யாக்கர் Gilyaks மக்: 4,076) மீன் பிடிப்பவர்; சக்காலின் தீவின் வடபாதியிலும் அதற்கு எதிர்த்துள்ள கண்டப் பகுதியின் கரையோரத்திலும் வசிக்கிறார்கள். கேதியர் (Keti அல்லது யெனிசி ஆஸ்டியகர் Yenisey Osty-aks ; மக் :1,500) மேற்குக்கோடியில் யெனிசி நதியின் நடுப்பகுதிப் பிரதேசத்தில் வசிக்கிறார்கள்.
யூரல்-ஆல்டேயிகர் குழு பழைய ஆசியர் குழுவிலும் பெரியது. இதுவும் பின்னோ-உக்ரியனர், சாமோயதர், துருக்கியர், மங்கோலிக்கியர், துங்குர் என ஐந்து பகுதியாகப் பிரிகிறது. (துங்குர்கள் ஆல்டேயிகர் குழுவினர்தாமா என்று ஜோக்கல்சன் ஐயுற்று, யூரல்-ஆல்டேயிக் குழு என்று கூறாமல் மங்கோலாயிடு குழு என்று கூறுகிறார்). பின்னோ உக்ரியனர் முக்கியமாக ஐரோப்பாவில் காணப்படுகின்றனர். கான்டி (Khanty அல்லது ஆஸ்டாயிகர் Ostyaks ; தொகை : 22,300) என்பவரும், மான்சி (Mansi அல்லது வோகல் Voguls; தொகை: 5.754) என்பவருமே ஆசியாவில் உளர். அவர்கள் ஆப் (Ob) நதியின் கீழ்ப்பகுதிப் பிரதேசத்திலேயே வசிக்கிறார்கள். சாமோயது பகுதியினரில் வெண்கடலிலிருந்து யெனிசி ஆறுவரை கடற்கரையோரத்திலுள்ள தூந்துரப் பிரதேசத்தில் வசிக்கும் நென்டிசி (Nentsy அல்லது சாமோயதர் Samoyed ; தொகை: 15.462) என்பவரும், யெனிசி ஆற்றின் கிழக்கே காதங்கா (Khatanga) வரை வசிக்கும் என்டிசி (யெனிசி சாமோயதர்; தொகை: 400) என்பவரும். ஞானசானியர் (Nganasany அல்லது தாவஸ்கி சாமோயதர் அல்லது தாவகிஸ்கியர் அல்லது யுராக்கள்; தொகை : 867) என்பவரும், யெனிசி ஆற்றின் கரைப்பகுதியில் வசிக்கும் செல்குபியர் (Selkupy அல்லது ஆஸ்டியக் சாமோதர்; தொகை: 1,408) என்பவரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் பனிமான் வளர்ப்பவர்கள். துருக்கியக் கூட்டத்தார். சைபீரியாவில் மிகுதியாகக் காணப்படுகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இங்குக் குறிக்கப்படும் ஆசியப்பகுதியின் தென் எல்லையை ஒட்டிய பிரதேசத்திலுள்ள தார்த்தார் மக்களேயாவர். அவர்களுள் முக்கியமானவர் லேனா நதியின் நடுப்பகுதியையும் கரைப் பகுதியையும் அடுத்த பிரதேசத்தில் வாழும் யாகுதி (Yakuty ; தொகை: 2,40,709). பைகால் (Baikal) ஏரியை அடுத்து ஆடு மாடு வளர்க்கும் புரியாத்-மங்கோலியர் (Beryat Mongoly அல்லது புரியாதியர் Buryats; தொகை: 2.37,709) என்பவரே இப்பகுதியில் காணப்படும் மங்கோலிக்கிய மக்களாவர். துங்குர்களே பெரும்பகுதியில் உளர். அவர்களுக்குள்ளும் பெருந் தொகையினராக உள்ளவர்கள் சக்காலின் முதல் யெனிசி வரையுள்ள கிழக்குச்சைபீரியாவில் அங்குமிங்குமாக வாழும் எவன்கி (அல்லது பனிமான் துங்குர்; தொகை : 37,546) என்பவரே யாவர். எவனி (Eveny அல்லது லாமுதர் Lamuts ; தொகை : 12,000); கொல்யாமா வடிநிலத்தில் வசிக்கிறார்கள். இந்தக் குழுவைச் சேர்ந்த சிறு பகுதியினர் காதங்கா பள்ளத்தாக்கில் வசிப்பவரும், யாகுதிகூட்டத்தைச் சேர்ந்தவருமான தோல்கனியர் (Dolgany; தொகை: 1,385) என்பவரும், ஆமுர் ஆற்றுவாய்ப் பிரதேசத்தில் வாழும் எல்கெம்பியர் (Elkembeye அல்லது நெகிர்டலர் (Negidals; தொகை : 680); நானியர் (Nani அல்லது உல்சி Ulchi அல்லது ஒரோக்கி Oroki தொகை: 887); நானே (Nany அல்லது கோல்டியர் Golds ; தொகை: 5,309); ஊடியர் (Ude) என்பவர்களும் ஆவர். டி. ஈ. ஆ.
தென்கிழக்கு ஆசியா : தென்கிழக்கு ஆசியா என்பதில் பர்மா, தாய்லாந்து, இந்தோசீனா, மலேயா, இந்தோனீசியா, பிலிப்பீன் தீவுகள், தென்கிழக்குத் தீவுகள் ஆகியவை அடங்கும். இந்தோனீசியாவில் வியாட்நாம், கம்போடியா, லேவோஸ் ஆகியவை அடங்கும். தென்கிழக்கு ஆசிய மக்களும் பல திறத்தினர். அவர்கள் பண்பாடும் பல திறத்தது. இவர்கள் மலேயர், வியாட்நாமியர், தாயர், பர்மியர் என நான்கு இனமாகப் பிரிவர். இவர்களுள் மலேயரே மிகுந்த தொகையினர். அவர்கள் வாழ்ந்து வருவது இந்தோனீசியா, மலேயா, பிலிப்பைன் தீவுகள் ஆகிய இடங்களிலாகும். இந்தோசீனாவில் முக்கியமான நாடு வியாட்நாம். அதிலுள்ள வியாட்நாமியரை அன்னாமியர் என்று கூறுவர். தாயர் என்பவர் தாய்லாந்திலும் லேவோஸிலும் பெரும்பான்மையாக உள்ளவர்கள். அவர்கள் பர்மாவிலுமுளர். ஆனால் அங்கு ஒரு முக்கியமான சிறுபான்மைக் குழுவினராகவே உளர். பர்மாவிலுள்ள தாயரை ஷீனர் என்று கூறுவர். பர்மியர் பர்மாவின் நடுப்பகுதியிலும் தென் பகுதியிலுமே நிறைந்துளர்.
அவர்கள் அனைவரும் வேறு வேறு இனத்தவராயினும், அவர்களிடையே சில பொதுப்பண்புகள் காணப் பெறுகின்றன. அவர்கள் எல்லோரும் ஆசிய மக்கள்; மங்கோலாயிடு இனப் பண்புகள் உடையவர்கள்; ஏறத்தாழ ஐந்தடிக்கு அதிகமான உயரமில்லாதவர்கள். தென்கிழக்கு ஆசியாவில் வேறு சில இன மக்களும் உளர். ஆனால் அவர்கள் மிகச் சிறிய தொகையினர். இவர்கள் தவிரத் தென்கிழக்கு ஆசியாவில் இந்தியரும் சீனரும் குடியேறிய பகுதிகளும் உள.
மேற்கூறிய மக்கள் வேறு வேறு இனத்தவராயிருப் பதோடு அவர்களுடைய மதங்களும் பண்பாடும் வேறுபட்டிருக்கின்றன. இந்தோனீசிய மக்களும் மலேயரும் முஸ்லிம்கள். பிலிப்பீன் மக்களில் பெரும்பாலோர் ரோமன் கத்தோலிக்கர். பர்மியர், தாயர், கம்போடியர் ஆகியோர் பௌத்தர்கள். வியட்நாமியர் கன்பூஷிய மதத்தினர். அவர்களிடையே பொதுமொழி, பொதுவெழுத்து, வரலாற்று முறை எதுவும் காணப்படவில்லை. அவர்கள் அரசியல், சமூக விஷயங்களிலும் வேறுபட்டவராக இருக்கிறார்கள். அவர்களுடைய உணவும், வீடும், வீடுகட்டும் முறையும் வேறு வேறானவையே. ஆயினும் சில தலையாய பண்பாட்டுக் கூறுகள் பொதுவாகவே உள்ளன. அவர்களுடைய முக்கியமான உணவு அரிசி. முக்கியத் தொழில் நெற்பயிரிடுதல். அவர்களுடைய நாடுகளில் பயிர்த்தொழிலே முதன்மையானது, கைத்தொழில் இன்னும் முன்னேறவில்லை. அவர்கள் ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் எருதையும் எருமையையுமே பயன்படுத்துகின்றனர். அவர்கள் இப்போது பல உலக மதங்களைத் தழுவின போதிலும், தேவதைகள் உண்டு என்னும் நம்பிக்கையுடையவராகவே காணப்படுகின்றனர். தென்கிழக்கு ஆசியாவின் வரலாற்றைப் பார்த்தால் அதன் பண்பாட்டின் கூறுகளிற் பல இந்திய நாகரிகத்தினின்றும் சீன நாகரிகத்தினின்றும் வந்தவை என்பது புலனாகும். சீன நாகரிகத்தின் அமிசங்கள் வியாட்நாமிலும், இந்திய நாகரிகத்தின் அமிசங்கள் பிலிப்பீன் தவிர ஏனைய இடங்களிலும் அதிகமாகக் காணப்படும். தாய்லாந்து, கம்போடியா,பர்மா மூன்றும் பௌத்த மதத்தை மட்டுமன்றி, எழுத்தையும் சொற்களையும், சமூக அமைப்பையும் இந்தியாவிலிருந்தே பெற்றன என்று தெரிகிறது. இந்தோனீசியாவில் பாலி (Bali) என்னுமிடத்தைத் தவிர மற்ற இடங்களிலெல்லாம் 15ஆம் நூற்றாண்டு முதல் இஸ்லாம் மதமே காணப்படினும், அந்த நாடும் இந்தியாவின் நாகரிகத்தால் பண்பட்டதாகவே கூறவேண்டும்.
சென்றசில நூற்றாண்டுகளாகத் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள நாடுகள் மேனாட்டாருடைய ஆட்சியிலிருந்து வந்தமையால் பலவிதமான மேனாட்டுப் பண்பாட்டுத் தொடர்புடையவாயின. பிலிப்பீன் தீவுகள் ஸ்பானிய ஆட்சிக்கும், அமெரிக்க ஆட்சிக்கும், இந்தோனீசியா டச்சு ஆட்சிக்கும், பர்மாவும் மலேயாவும் ஆங்கில ஆட்சிக்கும், இந்தோசீனா பிரெஞ்சு ஆட்சிக்கும் உட்பட்டிருந்தன. இவ்வாறு தென்கிழக்கு ஆசிய நாடுகள் பல்வேறு மேனாட்டு நாடுகளின் ஆட்சிக்குட்பட்டிருந்தபடியால், அவை மற்ற ஆசிய நாடுகளினின்றும் வேறுபட்டிருந்ததோடு, தத்தமக்கிடையிலும் வேறுபட்டேயிருந்தன. ஆயினும் அடிமைத்தனத்தை முற்றிலும் நீக்கி விடுதலை பெறவேண்டும் என்ற ஆசை அவை அனைத்திடமும் பொதுவாகக் காணப்படுவதால் அவை இனவேறுபாட்டையும் பண்பாட்டு வேறுபாட்டையும் மறந்து ஒன்றுபட ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரி. ஜே. கா.