கலைக்களஞ்சியம்/ஆட்சி வேண்டாக் கொள்கை
ஆட்சி வேண்டாக் கொள்கை (Anarchism): உலகத்தில் ஆட்சி முறையென்பதே வேண்டாம் என்னும் கொள்கையுடைய ஒருவன் சமூக விரோதி; அழிவு வேலைக்கும் கொலைக்கும் அஞ்சாதவன் என்றெல்லாம் நாம் பொதுவாக எண்ணுகிறோம். ஆனால் ‘ஆட்சி வேண்டாக் கொள்கை’யின் நோக்கம் அது அல்ல. சமூக அமைப்பைப் பற்றி அதற்குத் தெளிவான இலட்சியமுண்டு. எவ்வித ஆட்சியையும் அது எதிர்க்கிறது. “பலாத்காரத்தை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கம் மனிதனைக் கட்டுப்படுத்தித் துன்புறுத்துகிறது; ஆகவே, சமூகத்துக்கு விடுதலை வேண்டுமானால் அது மறைந்தாக வேண்டும். ஜனநாயக ஆட்சிகூட அவ்வளவு உயர்ந்ததன்று; பெரும்பான்மைக் கட்சியினர் சிறுபான்மையோரை நிர்ப்பந்திக்கும் வழிதானே அது” என்று வாதிக்கிறது. ஆட்சி வேண்டாக்கொள்கையின் குறிக்கோள் தனி மனிதனது சுதந்திரம்.
இக்கொள்கை 19ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் தோன்றிற்று. இதை விளக்கியவர்கள் பாக்குனின் (Bakunin), கிரோபாட்கின் என்னும் இருவர். பாக்குனின் ஒரு பிரபு வமிசத்தவரென்றாலும் தமது வாழ்நாளில் பெரும் பகுதியை நாடு கடத்தப்பட்டும், சிறையிலடைபட்டும் கழித்தார். இவர் கார்ல் மார்க்ஸுடன் சில சமயம் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார். ஆனால் இருவருக்கும் நட்பு இல்லை; கோட்பாடுகளைப் பற்றிய கருத்து வேறுபாடுதான் மிகுதி. இவர் பொதுவாகத் தமது நூல்களில் இன்றைய சமூகத்தைத் தகர்ப்பது அவசியமென்பதை வற்புறுத்துகிறாரே தவிர, புதிய சமூகத்தின் உருவைத் தெளிவுபட எடுத்துக்காட்டவில்லை. கிரோபாட்கின் இக்குறையை ஓரளவு தமது நூல்களில் நீக்கினார். “ஆட்சியில்லாச் சமூகமானது ஒருவிதக் கட்டுப்பாடுமில்லாமல் வாழும்; பல தனி மனிதர்கள் சேர்ந்த குழுக்கள் வலுக்கட்டாயமில்லாத முறையில் நிறுவப் பெறும்; அந்தக் குழுக்கள் மனித வாழ்க்கையைச் சீர்பெறச் செய்யும்” என்பது கிரோபாட்கின் கருத்து.
சோஷலிசம், ஆட்சிவேண்டாமை என்னும் இரு கொள்கைகளுக்கும், நிலமும் மூலதனமும் பொதுச் சொத்தாகிவிடுவது அவசியம் என்பது போன்ற சில அமிசங்களில் ஒற்றுமையிருக்கிறது. ஆனால் சோஷலிசம் அரசாங்க அதிகாரம் பரவ வேண்டுமென்கிறது; இதுவோ அரசாங்கம் கூடவே கூடாது என்கிறது. இக்கொள்கையின் முக்கியக் கோட்பாடு, “சமூக அமைப்புக்குச் சிறிய கிராமத் தொழிற் சங்கங்கள் அடிப்படையானவை; அவற்றிலிருந்து மேலும் மேலும் விரிவடைந்த பெரிய சங்கங்கள் இயங்க வேண்டும்” என்பதாம். சோஷலிசத்தில் அதிகாரம் மேலிருந்து கீழே இறங்கி வரும். ஆட்சியில்லாச் சமூகத்தில் ஒத்துழைப்புப் பல துளி பெருவெள்ளம் என்னும் வகையில் கீழிருந்து மேலே பெருகிக்கொண்டே போகும். இக்கொள்கையை ‘ஆட்சி வேண்டாப் பொது உடைமை’ என்பதுமுண்டு.
மேற்கூறிய கொள்கையினரைத் தவிர, “சாத்விக, தார்மிக முறையில் ஆட்சி நடைபெற இயலுமாயின், ஆட்சி வேண்டப்படுவதேயன்றிப் பலாத்காரம் இன்றி அரசாங்கம் அமையாதாயின் ஆட்சி மறைவதே நல்லது” என்றும் சிலர் கூறுவர். இக்கொள்கையினர் மனிதனது இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு இவ்வாறு கூறுவர். இக்கொள்கையைப் பெரிதும் எடுத்துக் கூறியவர்களில் டால்ஸ்டாய் என்னும் ரஷ்ய அறிஞர் முக்கியமானவர். மகாத்மா காந்தியும் இதே மனப்போக்குடையவர்.
சுதந்திரப்பேச்சுக்கேட்போர் மனத்தில் ஆர்வத்தைத் தூண்டுவது உண்மையே. எனினும் சுதந்திரத்தை இடைவிடாது பிரசாரம் செய்து வந்த ஆட்சிவேண்டாக் கொள்கையினர் பலர் சமூக நலனைக் கெடுக்கும் வழிகளிலேயே சென்றிருக்கின்றனர். புனிதமான இலட்சியம் கூட அதனையுடையவர்கள் ஒழுங்கு தவறான முறைகளைக் கையாளுவதால் மாசடைகிறது. மேலும், எவ்வித அதிகாரமும் ஒழிய வேண்டுமென்ற முழக்கத்தை யெழுப்புவது எளிது; அதிகாரம் மறைந்தபின் சமூக வேலைகளைத் திட்டமாக நடத்துவது மிகவும் அரிது. ஸ்ரீ. தோ.