உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆறுகள்

விக்கிமூலம் இலிருந்து

ஆறுகள் : புவியின் மேற்பரப்பில் ஓடும் நீர் சரிவுக் கேற்றவாறு சில திசைகளில் சேர்ந்து பாய்ந்து, ஆறு, ஓடை ஆகிய நீரோட்டங்களைத் தோற்றுவிக்கிறது. ஒரு பிரதேசத்தில் ஆறுகளும் ஓடைகளும் உள்ள வகை அதிற் பெய்யும் மழையையும், மழைநீர் ஓடும் நிலப்பரப்புப் பகுதியையும் பொறுத்திருக்கும். நீரைக் கசியவிடாத களிமண் நிலத்தில் இவ்வாறு பாயும் நீர் அதிகமாகவும், நீரைக் கசியவிடும் மணற்பாங்கான நிலத்திலும் காட்டுப்பகுதிகளிலும் இது குறைவாகவும் இருக்கும்.புவியின் நிலப்பரப்புமுழுவதையும் அடையும் மழை நீரில் 28% மட்டுமே நிலப்பரப்பில் ஓடிக் கடலை அடைகிறது. மற்ற 72% ஆவியாகிக் காற்றுமண்டலத்தை மீண்டும் அடைகிறது. நீரோட்டங்களின் திசை மேற்பரப்பில் மேடுபள்ளங்கள் அமைந்துள்ள வகையையும், அதன் புவியியல் அமைப்பையும் பொறுத்திருக்கும். வலிவற்ற பாறைகளையுடைய பிரதேசத்தில் பாயும் நீரோட்டங்கள் பெரியனவாகவும் ஆற்றல் மிக்கனவாகவும் இருக்கும்.

ஓர் ஆற்றின் பரிமாணம் அதில் பாயும் நீரின் அளவினால் அறியப்படும். இந்த நீரின் அளவு வடிநிலத்தின் பரப்பையும் அதை அடையும் மழையையும் பொறுத்திருக்கும். மண்ணின் தன்மையும் தாவரவகையும் இதை மாற்றும். பூமத்தியரேகைப் பகுதிகளிலுள்ள ஆமெசான், காங்கோ போன்ற ஆறுகள் ஏராளமான நீரை உடையவை. ஆமெசானைவிடப் பெரிய நீளமான ஆறான நைல் அவ்வாற்றின் 1/60பகுதி நீரையே கொண்டு செல்கிறது. இதன் நீரில் பெரும்பகுதி பாலைவனத்தின் வழியே பாயும்போது ஆவியாகி விடுகிறது. ஆற்றின் நீளமும், வடிநிலத்தின் பரப்பும் அவ்வப் பிரதேசத்தின் இயற்கைத் தோற்றத்தால் மாறுதலடைகின்றன. இதனால் மேடுபள்ளங்கள் குறைவான மத்திய வடஅமெரிக்கா, சைபீரியா போன்ற பகுதிகளில் மிகப்பெரிய ஆறுகள் காணப்படுகின்றன. முக்கியமான ஆறுகளின் நீளங்களும் வடிநிலத்தின் பரப்புக்களும் நீர் ஒழுக்கின் அளவுகளும் அடுத்த பக்கத்தில் தரப்பட்டுள்ளன.

ஓர் ஆறு வெளியேற்றும் நீரின் அளவு பருவத்தையொட்டி மாறும். வெப்பப் பகுதிகளான அயனமண்டலங்களில் வெப்பநிலையும், நீர் ஆவியாதலும் அதிகம். ஆகையால் இது இங்குப் பெய்யும் மழைக்கு நேர்ப் பொருத்தமாக இருக்கும். பருவங்களுக்கேற்ப மழையின் அளவில் அதிகமான வேறுபாடுகள் இருக்கும் பிரதேசங்களின் ஆறுகளில் மழைகாலத்தில் மட்டும் நீர் இருக்கும். பாலாறு இதற்கொரு நல்ல உதாரணம். மிதத் தட்பவெப்பப் பிரதேசங்களில் ஆற்றுநீரின் அளவை வெப்பநிலை அதிகமாகக் கட்டுப்படுத்துகிறது. குளிர்காலத்தில் வெப்பநிலை நீரின் உறைநிலையைவிடக் குறைவாய்விடும் பிரதேசங்களில் ஆற்றுநீர் உறைந்து போவதால் ஆற்று ஒழுக்குக் குறையும். உறைந்த நீர் கோடையில் உருகி, ஆற்றில் நீர் அதிகமாகும். கானடாவிலும் சைபீரியாவிலும் உள்ள ஆறுகள் இத்தகையவை. பெரிய ஆறுகளில் இத்தகைய பருவ மாறுபாடுகள் மிகச் சிக்கலானவை. ஏனெனில் இவற்றின் உபநதிகளின் ஒழுக்கு ஒரேவகையாக மாறுவதில்லை. உபநதிகளின் நீர் ஆற்றை அடையச் சிறிதுகாலம் செல்வதும் இதற்கு ஒரு காரணமாகும்.


ஆறு

நீளம்
(மைல்களில்)

வடிநிலத்தின்
பரப்பு
(000.
ச. மைல்)

சராசரி
ஒழுக்கு
(000
க.அடிசெக.)

ஆமெசான்

....

4,000 2,368 3,300

காங்கோ

....

2,900 1,430 4,500

பரானா

....

2,200 1,100 970

யாங்ஸி

....

3,200 700 800

மிசிசிப்பி

....

4,240 1,258 700

எலிசி(சைபீரியா)

....

3,240 968 620

பிரம்புத்திரா

....

1,240 280 620

லேனா (சைபீரியா)

....

2,850 920 585

கங்கை

....

1,860 920 485

மக்கன்சி

....

2,510 682 500

ஆப்-இர்ட்டிஷ் (சைபீரியா)

....

3,550 1,122 400

வால்கா

....

2,300 563 300

நைல்

....

4,160 1,120 56

கொலராடோ

....

1,700 244 23

வடிநிலத்தின் தன்மையினால் ஓர் ஆறு முதன்மை பெறக்கூடும். ரைன் நதியைவிடக் காங்கோவும் ஆமேசானும் எவ்வளவோ பெரியவை. ஆனால் ரைன் பாயும் பகுதி அபிவிருத்தி அடைந்ததும் ஜனநெருக்கமுள்ளதும் ஆகும். ஆமெசானும் காங்கோவும் அடர்ந்த காடுகளின் வழியே பாய்கின்றன. ஆகையால் ரைன் மிக முக்கியமானதாக உள்ளது. பொதுவாக ஓர் ஆற்றின் முக்கியத்துவம் அதன் மூலத்திலிருந்து முகத்துவாரத்தின் பக்கமாக அதிகமாகிக் கொண்டே வரும். வீடுகளுக்கும் தொழில்களுக்கும் தேவையான நீரை ஆற்றிலிருந்து பெறுவதால் ஆற்றங்கரைகளில் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். மேலும் ஆற்றின் வழியே எளிதிலும் குறைந்த செலவிலும் கனமான பொருள்களைக் கொண்டு செல்ல முடிகிறது. நீர் கிடைப்பது அருமையான வறண்ட பிரதேசங்களில் ஆற்றங்கரைகள் இன்னும் முக்கியமானவை. இதனாலேயே நைல், யூப்ரடீஸ், டைக்ரிஸ், சிந்து ஆகிய ஆறுகளின் பள்ளத்தாக்குகளில் நிலையான உறைவிடங்களைக் கொண்ட ஆதி நாகரிகங்கள் தோன்றின. மழை குறைவான பகுதிகளுக்கு ஆறுகள் பாசன வசதி அளிக்கின்றன. ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் வண்டல் படிந்த பெரிய சமவெளிகள் தோன்றுகின்றன. செழிப்பான இப்பகுதிகளில் மக்கள் திரண்டு வாழ்ந்து விவசாயத்தில் ஈடுபட முடிகிறது. ஹுவாங்-ஹோ, யாங்ட்ஸி சமவெளிகளும் சிந்து கங்கைச் சமவெளிகளும் உலகிலேயே மக்கள் தொகை மிகுந்த பகுதிகளாகும். ஒரு நதியின் முகத்துவாரத்தில் சேரும் படிவுகளைக் கடலின் ஏற்றவற்றம் அகற்றிவிட்டால் அது துறைமுகத்திற்கு நல்ல இடமாகும். லண்டன், நியூயார்க், ஷாங்காய், ராட்டர்டாம், ஹாம்பர்கு, நியூ ஆர்லியன்ஸ், கல்கத்தா, போனஸ் அயர்ஸ் போன்ற பெருநகரங்கள் பல நதி முகத்துவாரங்களில் அமைந்திருப்பது முகத்துவாரத்தின் முக்கியத்துவத்தைக் காட்டும். ஆறு பாயும் நிலத்தின் சரிவு அதிகமாக இருந்தாலும், அதில் நீர்வீழ்ச்சிகள் இருந்தாலும், அந்த இடங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். ஆறுகள் நாடுகளின் அரசியல் எல்லைகளாகவும் அமைகின்றன.

ஆறும் அதன் உபநதிகளும் அவற்றின் வடிநிலத்துடன் ஒருவகைச் சமநிலையில் இருக்கும். ஆகையால் காடுகளை அழித்தோ, அணைகட்டியோ, பாசன வசதிகள் செய்தோ இச்சம நிலையை மாற்றினால், ஆற்றுப் பள்ளத்தாக்கின் மற்றப் பகுதிகளும் இதனால் பாதிக்கப்பட்டு, வெள்ளமோ, வறட்சியோ தோன்றலாம். ஆற்று வடிநிலத்தைக் கூட்டாக அபிவிருத்தி செய்யத் தற்காலத்தில் பல நோக்கத் திட்டங்கள் நிறுவப்படுகின்றன. இந்தியாவின் ஆறுகளுக்கும் அவற்றின் வடிநிலத்திற்கும் உள்ள தொடர்புகளைத் தெளிவாக அறிந்தால்தான் நாம் அவற்றின் முழுப்பயனையும் அடையலாம். ஆறுகளை உயிருள்ளவைகளாகவும், புனிதமானவைகளாகவும் இந்தியர் கருதுவது இவற்றின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. என். அ.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆறுகள்&oldid=1507423" இலிருந்து மீள்விக்கப்பட்டது