கலைக்களஞ்சியம்/இக்னியூமன் ஈ
இக்னியூமன் ஈ (Ichneumon fly) ஒருவகைப் பூச்சி. எறும்பு,குளவி, தேனீ முதலியவற்றிற்கு உறவானது. இதில் சுமார் 6,000 இனங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் உலகில் எல்லாப் பாகங்களிலும்இவை காணப்படுகின்றன. வண்ணாத்திப்பூச்சி முதலிய செதிற்சிறகி (Lepidoptera)களின் லார்வா நிலையாகிய புழுவின் உடலிலும், இன்னும் மற்ற வகைப் பூச்சிகளின் லார்வாக்களின் உடலுக்குள்ளும் தாய் இக்னியூமன் ஈ முட்டையிட்டுவிடுகிறது. அந்த முட்டைகளிலிருந்து பொரிக்கும் இக்னியூமன் லார்வா அந்தப் புழுக்களின் திசுக்களைத் தின்று வளர்கின்றது. சில பூச்சி லார்வாக்களின் உடம்பிலிருந்து சிறிய கூட்டுப்புழுக் (Cocoon) கூடுகள் தோன்றுவதையும், அந்தப் புழுக்கள் செத்துப்போவதையும் காணலாம். இந்தக் கூடுகளிலிருந்து இக்னியூமன் ஈக்கள் வெளிவரும். இவை இவ்வாறு பலவகைப் பூச்சிகளின் லார்வாக்களை ஆயிரக்கணக்கில் அழித்துவிடுகின்றன. சிலந்திகளையும் இவ்வாறு அழிக்கின்றன. ஒருவகை இக்னியூமன் ஈ நீரினுள் முழுகிப்போய் நீருக்குள் வாழும் சிலவகைப் பூச்சிகளின் லார்வாக்களுள் முட்டையிடும். சிலவகை இக்னியூமன் ஈக்களுக்குச் சிறகுகள் இல்லை. அவை பார்வைக்கு எறும்பு போலவே தோன்றும்.