உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இத்தாலி

விக்கிமூலம் இலிருந்து

இத்தாலி தென் ஐரோப்பாவின் மத்தியிலுள்ளஒரு தீபகற்பம். இது மத்தியதரைக் கடலுக்குள் நீண்டு இருக்கிறது. பரப்பு : 1,19,710 ச.மைல்; நீளம்: 700 மைல்; அகலம்: 150 மைல். கிழக்கே ஏட்ரியாடிக் கடலாலும், தெற்கே மத்தியதரைக் கடலாலும், மேற்கே டிரீனியன் கடலாலும், வடக்கே ஆல்ப்ஸ் மலைத்தொடர்களாலும் சூழப்பட்டுள்ளது. ஆல்ப்ஸ் கணவாய்களான மான்ட்செனி, செயின்ட் காடர்டு, சிம்ப்லான், செயின்ட் பெர்னார்டு ஆகியவற்றின் வழியே இந்நாட்டின்மீது படையெடுப்பது முற்காலத்தில் எளிதாயிருந்தது.

இத்தாலி

இயற்கைப் பகுதிகள் : இவற்றை மூன்றாகப் பிரிக்கலாம்:1.வடக்கேயுள்ள ஆல்ப்ஸ் பகுதி: இதன் சரிவு இத்தாலியின் பக்கத்தில் செங்குத்தாக உள்ளது; சராசரி உயரம் 10,000 அடி; வடமேற்கே மிக உயரமாயும் குறுகலாயும் உள்ளது. இங்குள்ள பிளாங்க் சிகரம் 15,780 அடி; 2. இதற்குத் தெற்கேயுள்ள போ நதி பாயும் பிரதேசம்: இங்கு முன்பு ஏட்ரியாடிக் கடல் வியாபித்திருந்தது; சுற்றுப்புற மலைகளிலிருந்து வந்த மண் பிற்காலத்தில் இவ்விடத்தை நிரப்பிச் சமவெளியாக்கியது. 3. அப்பினைன் மலைகள்: இவை வடக்கே டிரீனியன் கடலருகே தொடங்கித் தீபகற்பத்தின் இடைப்பகுதியில் ஏட்ரியாடிக் கடல் அருகே வந்து, தென்பகுதியில் மறுபடியும் டிரீனியன் கடல் பக்கம் வந்து முடிகின்றன. ஆர்னோ, டைபர் என்னும் ஆறுகள் இப்பகுதியில் உற்பத்தியாகி டிரீனியன் கடலிற் கலக்கின்றன.

தட்பவெப்பம்: இந்நாட்டின் தீபகற்பப் பகுதியில் மத்தியதரைத் தட்பவெப்பம் காணப்படுகிறது; கோடையில் 75° பா; குளிர்காலத்தில் 40°-45° பா. ஓராண்டில் பெய்யும் மழையின் சராசரி 30 அங். பெரும்பாலும் குளிர் காலத்திலேயே மழை அதிகம். வட இத்தாலியில் மத்திய ஐரோப்பியத் தட்பவெப்பம் காண்கிறது; வெப்ப நிலையில் அதிக வேறுபாடு தோன்றுகிறது; கோடையில் 75° பா. குளிர்காலத்தில் 35° பா.40-60 அங்குல மழை பெரும்பாலும் கோடையில் பெய்கிறது. ஆதலால் மத்தியதரைத் தட்பவெப்பத்தில் உண்டாகும் ஒலிவமரம் வட இத்தாலியில் காணப்படுவதில்லை. அப்பினைன் சரிவுகளில் செஸ்ட்நட் மரங்கள் நிறைந்த காடுகள் மிகுதியாக உள்ளன; அம் மலைகளின் சிறிது உயர்ந்த பகுதிகளில் பைன்களும் தேவதாருக்களும் காணப்படுகின்றன.

மக்கள் தொகை: மக்: 467 இலட்சம் (1951). இது நாடு முழுதும் ஒரே சீராக இல்லை. போ சமவெளியில் இது மிக அதிகம். மக். அடர்த்தி ச. மைலுக்கு 650. மக்களில் 97% கத்தோலிக்க மதத்தினர்; எஞ்சியவர் யூதர்களும் பிராட்டெஸ்டென்டுகளும்.

விவசாயம் (1850): மக்களில் 50% வீவசாயத் தொழில் செய்பவர்கள். மொத்தப் பரப்பு 766 இலட்சம் ஏக்கர். இதில் 91.3% உற்பத்திக்குரிய நிலமாகவும் காடாகவும் உள்ளது. சாகுபடி நிலத்தில் தானியப் பயிர்கள் 55.7%, தீவனப் பயிர்கள் 32.3%, பருப்பினத்தைச் சார்ந்த தாவரங்கள் 6.5%, கைத்தொழிற் பயன்பாட்டு விளைபொருள்கள் 2%, பீட் கிழங்கு 1.5%

விளை
பொருள்கள்

விளையும் நிலப்பரப்பு
(1,000 ஏக்கர்களில்)

கோதுமை 11,649
ரை 212
அரிசி 354
ஓட்ஸ் 1,168
உருளைக்கிழங்கு 946
மக்காச் சோளம் 3,065

உணவுதானியத்தில் கோதுமை முக்கியமானது. இதில் பெரும்பாலும் தீபகற்பப் பகுதியில் விளைகிறது. நாட்டுக்குத் தேவையான அளவு விளையாததால் தேவையில் மூன்றிலொரு பங்கு கோதுமை இறக்குமதி செய்யப்படுகிறது. கோடை மழையுள்ள வட இத்தாலியில் மக்காச்சோளம் அதிகமாக விளைகிறது. போ சமவெளியும் முகத்துவாரப் பசதியும் நெல் விளையும் பிரதேசங்கள். ஒலிவ வித்துக்களும் திராட்சையும் தீபகற்ப இத்தாலியில் மிகுதியாக விளையும் பொருள்கள். இத்தாலி ஒலிவெண்ணெய் உற்பத்தியில் உலகத்தில் ஸ்பெயினுக்கு இரண்டாவதாகவும், மது உற்பத்தியில் பிரான்ஸிற்கு இரண்டாவதாகவும் உள்ளது. ஆளியும் சணலும் வட இத்தாலியில் சிறிது விளைகின்றன.

ஆடுமாடுகள்: இத்தாலியிலுள்ள 74 இலட்சம் மாடுகளில் பெரும்பான்மை வடக்கேயுள்ள ஆற்றங்கரைகளை யடுத்த புல்வெளிப் பிரதேசங்களில் காணப்படுகின்றன. பால் பண்ணைத் தொழில் இங்கு நன்கு நடைபெறுகிறது. ஆடுகள் அப்பினைனைச் சார்ந்த வளங்குறைந்த புல்வெளிகளில் காண்கின்றன. 123 இலட்சம் செம்மறியாடுகளும், 310 இலட்சம் வெள்ளாடுகளும் உள்ளன. வடக்கே பட்டுப் பூச்சி வளர்த்தல் முக்கியமான தொழில்; பட்டு உற்பத்தி செய்யும் நாடுகளில் இத்தாலி ஐரோப்பாவில் முதலாவதாகவும், உலகத்தில் மூன்றாவதாகவும் நிற்கிறது.

மீன் பண்ணை : மத்தியதரைக் கடலிலும், ஏட்ரியாடிக் கடலிலும் மீன் குறைவாதலால் மீன் பிடித்தல் முக்கியத் தொழிலன்று; ஆயினும் பவளங்களும் கடற்பஞ்சுகளும் சேகரிக்கப்படுகின்றன.

தாதுப் பொருள்கள்: இரும்பு, காரீயம், வெள்ளீயம், பாதரசம் ஆகியவை டஸ்கனியில் கிடைக்கின்றன. போ நதிச் சமவெளியில் மட்ட ரக இரும்புத் தாதுமண் சிறிது கிடைக்கிறது. நிலக்கரி இன்மையும் தாதுப் பொருட் குறைபாடும் இத்தாலியின் கைத்தொழில் முன்னேற்றத்திற்குத் தடைகள். சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட மின்சார வசதியால் சில கைத்தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. கிடைக்கக்கூடிய 80 இலட்சம் குதிரைத்திறன் நீர்ச் சக்தியில் 30 இலட்சம் பயன்படுத்தப்படுகிறது.

கைத்தொழில் (1949): வட இத்தாலிதான் நாட்டின் கைத்தொழில் கேந்திரம். பட்டு, கம்பளம், பருத்தி நூல் உற்பத்தியே முக்கியக் கைத்தொழில்கள். கைத்தொழிலுக்கு வேண்டிய பட்டு முழுவதும் நாட்டிலேயே கிடைக்கிறது. கச்சாக் கம்பளமும் பருத்தியும் இறக்குமதி செய்யப்படுகின்றன. 196 டன் பட்டும், 2,08,500 டன் பஞ்சு நூலும், 1,44,250 டன் நூல் துணியும், 45,000 டன் கம்பளித் துணியும் உற்பத்தியாகின்றன. கோமோ, மிலான், பெர்கானோ நகரங்கள் பட்டுத் தொழிலிலும், டூரின் நகரம் பருத்தி நெசவிலும் ஈடுபட்டவை.

உலோகக் கைத்தொழில் குறைந்த அளவிலே இருக்கிறது. 10 இலட்சம் டன் இரும்பும். 25 இலட்சம் டன் எஃகும் உற்பத்தியாகின்றன. டூரின் மோட்டார்க் கார்களுக்கும், மிலான் டயர்களுக்கும், ஜெனோவா கப்பல் கட்டும் தொழிலுக்கும் பேர்போனவை.

போக்குவரத்து: வட இத்தாலியில் சாலைகளும் ரெயில்வேக்களும் அதிகம்; தென் இத்தாலியில் போதுமான அளவு இல்லை. வடக்கேயுள்ள ரயில்வேக்கள் மிலானிலும் பொலோனாவிலும் வந்து சேர்ந்து, அங்கிருந்து ஆல்ப்ஸ் கணவாய்கள் வழியே செல்லுகின்றன. தெற்கே ரெயில் பாதைகள் கடற்ஈரையை அடுத்தேயுள்ளன. நிலக்கரிக் குறைவால் மின்சார ரெயில்வே முக்கியமாயிருக்கிறது. சாலைகளின் மொத்த நீளம் 1,07,300 மைல் ; ரெயில்வேக்கள் 13,500 மைல்.

வர்த்தகம் (1949): ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகம். கோதுமையும் நிலக்கரியும் பெரும்பாலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்தும் கோதுமை ஆர்ஜென்டீனாவிலிருந்தும் இயக்குமதியாகின்றன. ஐரோப்பாவில், பெரும்பாலும் பிரான்ஸ் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து சில தேவேப் பொருள்களை இத்தாலி பெற்றுக்கொள்கிறது. கச்சாப் பட்டும், பட்டும், போலிப் பட்டும். நூல் துணிகளும் மிகுதியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

முக்கியமான நகரங்கள்: மக்: (1951) ரோம் (16,95,477); மிலான் (12,92,934); நேப்பிள்ஸ் 10,27,900); டூரின் (7,20,032); ஜெனோவா (6,83,023); பாலெர்மோ (5,01,005). ஏ.வ.

வரலாறு: ரோமானிய சாம்ராச்சியம் அழிவுற்றதிலிருந்து இத்தாலியின் வரலாறு தொடங்குகிறது. 5ஆம் நூற்றாண்டில் இத்தாலி ஜெர்மனியிலிருந்து வந்த மிலேச்சர்களால் பலமாகத் தாக்கப்பட்டது. கி.பி. 410-ல் அலாரிக் (Alaric) அரசனும், 455-ல் வாண்டல்கள் (Vandals) என்னும் கூட்டத்தாரும் ரோம் நகரைக் கொள்ளையடித்தனர். 476-ல் ஜெர்மானிய வீரன் ஓடவேசரின் (Odovacer) தாக்குதலுக்கு ஆற்றாது, ரோமானியச் சக்கரவர்த்தி ராம்யலஸ் அகஸ்டஸ் அரசு துறந்தான். இதனுடன் பழைய ரோமானிய சாம்ராச்சியம் மறைந்தது. 493-ல் கிழக்குக் காத்தியர்களின் தலைவன் தியொடோரிக், ஓடவேசரைச் சண்டையில் தோற்கடித்து ராவென்னாவைக் கைப்பற்றினான். இவன் 526 வரை பைசான்டியச் (கிழக்கு ரோமானிய சக்கரவர்த்தியின் சம்மதம் பெற்று அரசன் என்றபட்டம் தாங்கி இத்தாலியை ஆண்டான். இவன் ஆட்சியின் கீழ் இத்தாலி சிறிதளவு ஒற்றுமையையும் அமைதியையும் அடைந்தது. இவன் இறந்த பிறகு கிழக்கு ரோமானியச் சக்கரவர்த்திகள் இத்தாலியைக் கைப்பற்ற முயன்றார்கள். அதனால் இத்தாலியின் அமைதி மறுபடியும் குலைந்தது. கிழக்குச் சக்கரவர்த்தி I-ம் ஜஸ்டினியனின் (527-65) தளபதிகளான பெலிசேரியஸும், நார்செஸும், பல ஆண்டுகள் காத்தியர்களுடன் போர்புரிந்து இத்தாலியைக் கைப்பற்றினார்கள். ஜஸ்டினியனின் பிரதிநிதி ராவென்னாவிலிருந்து இத்தாலியை ஆண்டு வந்தான். ஆனால் காத்தியர்கள் பன்முறை ரோமைத் தாக்கி அந்நகரைப் பாழ்படுத்தினார்கள். அதற்குப் பிறகு லாம்பர்டுகளின் மிகப் பயங்கரமான படையெடுப்பு நடைபெற்றது. லாம்பர்டு தலைவன் ஆல்பாயின், வட இத்தாலிமீது படையெடுத்து 568-ல் லாம்பர்டு ஆட்சியை நிறுவினான். ஆனால் இவனால் இத்தாலி முழுவதையும் கைப்பற்ற முடியவில்லை. ரோமும், ராவென்னாவும், தென் இத்தாலியும், சிசிலியும் பைசான்டியச் சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தின்கீழ் இருந்துவந்தன. ஆனால் ராவெவ்னா 751-ல் லாம்பர்டு ஆட்சியின்கீழ் வந்தது. லாம்பர்டு அரசர்கள் பாவீயா என்னும் தலைநகரத்திலிருந்து இரும்பு முடிதாங்கி, இரண்டு நூற்றாண்டுகள் வட இத்தாலியில் ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் தாம் கைப்பற்றிய நிலங்களை மானியங்களாகத் தம் துணைவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டார்கள். இவற்றில் முக்கியமானவை பிரியூலி, ஸ்பொலீடோ, பெனேவெண்டோ என்பவை. இவை பிற்காலத்தில் சுதந்திர நாடுகளாகி விட்டன. இதேபோல் பைசான்டியச் சக்கரவர்த்தியின் கீழிருந்த இத்தாலியும் தனித்தனி நாடுகளாகப் பிரிந்தது. 8ஆம் நூற்றாண்டின் நேப்பிள்ஸ் ஒரு தனி நாடாயிற்று. ரோமும் போப்பின் தலைமையின்கீழ் ஒரு தனிக் குடியரசாயிற்று. லாம்பர்டுகள் ரோமைத் தாக்கினபோது மதத் தலைவரான போப்பே ரோமைக் காப்பாற்ற வேண்டியிருந்தது. இவ்வாறு ரோமின் முடிதரிக்காத அரசராக விளங்கிய முதல் போப் I-ம் கிரெகரி (590-603 ஆவர். இவர் ரோம் நகரில் அமைதியை நிலைநாட்டி மக்களுக்குத் தைரியத்தையளித்தார். கிரெகரிக்குப் பின்வந்த போப்புக்கள் பிரான்க் (Frank) அரசர்களின் உதவியை நாடவே, பெபினும் அவன் மகன் சார்லமேனும் இத்தாலிமீது படையெடுத்தார்கள். 754-ல் பெபின் ராவென்னாவைக் கைப்பற்றிப் போப்புக்களித்தான். 774-ல் சார்லமேன் பாவீயாவைக் கைப்பற்றி, லாம்பர்டு அரசாட்சியைக் குலைத்து, ரோமிலும் ராவென்னாவிலும் போப்பின் ஆட்சியை நிலைநாட்டினான். இவன் 800-ல் கிறிஸ்து மஸின்போது போப் III-ம் லியோவால், புனித ரோமானியச் சக்கரவர்த்தி என்னும் பட்டத்துடன் ரோமில் முடிசூட்டப்பட்டான். சார்லமேனுக்குப் பிறகு அவனுடைய சாம்ராச்சியம் சிகறுண்டு போயிற்று. இத்தாலியின் சுதந்திர அரசர்களும் படைமானியப் பிரபுக்களும் ஒருவரோடொருவர் சண்டையீட்டுக் கொண்டு இத்தாலியைப் பெருங்குழப்பத்தில் ஆழ்த்தினார்கள். அக்காலத்தில் (800-962) போப்புகள் பலங்குன்றியவர்களா யிருந்தார்கள். முகம்மதியர்கள் 877-ல் சிசிலியைக் கைப்பற்றித் தென் இத்தாலியிலும் பரவினார்கள். மாகியர்கள் வடக்கே படையெடுத்து நாட்டைப் பாழ்படுத்தினார்கள். 962-ல் ஜெர்மானிய அரசனான I-ம் ஆட்டோ, வட இத்தாலியைக் கைப்பற்றி, அமைதியை நிலைநாட்டி. ரோமில் 'புனித ரோமானியச் சக்கரவர்த்தி'யாக முடிசூட்டிக் கொண்டான். ஆட்டோவும் அவன் சந்ததியார்களும் தம்மை இத்தாலியின் சக்கரவர்த்திகள் என்று கூறிக்கொண்ட போதிலும் இவர்களால் தென் இத்தாலியைக் கைப்பற்ற இயலவில்லை.

11ஆம் நூற்றாண்டில் ராபர்ட் கீஸ்கார் (Robert Guiscard) தலைமையில் நார்மானியர்கள் முகம்மதியர்களிடமிருந்து சிசிலியையும் தென் இத்தாலியையும் கைப்பற்றினார்கள். இவர்கள் பாலெர்மாவைத் தலை நகராகக்கொண்டு அரசு செலுத்தி வந்தார்கள். இந்த நூற்றாண்டின் இறுதியில் போப், சக்கரவர்த்தி ஆகிய இருவருக்குள் யார் உயர்ந்தவர் என்பதைப்பற்றிய நீண்ட சச்சரவு தொடங்கிற்று. பிஷப்புக்களை யார் நியமிப்பது என்பது பற்றிப் போப் VII-ம் கிரெகரியும் (1073-85), சக்கரவர்த்தி IV-ம் ஹென்ரியும் (1056-1106) சண்டையிட்டுக் கொண்டனர். ஹென்ரி 1077-ல் போப் தங்கியிருந்த கனோசா கோட்டைக்குச் சென்று போப்பிடம் அடிபணிந்கான். ஆனால் 1084-ல் இவன் ஒரு சேனையைத் திரட்டி ரோமைத் தாக்கினான். போப் நார்மானியர்களால் காப்பாற்றப்பட்டார். சக்கரவர்த்தி V-ம் ஹென்ரியும், போப் II-ம் காலிக்ஸ்டசும் செய்துகொண்ட வர்ம்ஸ் (Worms) உடன்படிக்கைப்படி இச் சண்டை 1122-ல் முடிவடைந்தது. ஆனால் மற்ற விஷயங்களைப்பற்றி இச் சச்சரவு மீண்டும் தொடர்ந்தது. 11ஆம் நூற்றாண்டில் இத்தாலிய வரலாற்றின் முக்கிய அமிசங்களாய் விளங்கிய வியாபாரக் குடியரசு நகரங்கள் தோன்றி வளர்ந்தன. இந் நகரங்களில் முக்கியமானவை வெனிஸ், பீசா, ஜெனோவா, மிலான் முதலியன. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சார்டீனியாவை முகம்மதிபர்களிடமிருந்து பீசா கைப்பற்றியது. முதலில் படைமானியப் பிரபுக்களாலும், பிறகு பிஷப்புக்களாலும் ஆளப்பட்டுவந்த இந்நகரங்கள் கடைசியில் தத்தம் மக்களாலேயே ஆளப்பட்டன. 11ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 12ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந் நகரங்கள் நகர சபைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கான்சல்கள் (Consuls) என்ற கவர்னர்களால் ஆளப்பட்டு வந்தன. 1085-ல் பீசாவிலும், 1087-ல் மிலானிலும், 1089-ல் ஜெனோவாவிலும் கான்சல்கள் தோன்றினார்கள்.

டஸ்கனியில் 1115-ல் பானிபேஸ் (Boniface) பிரபுவின் மகளான மாடில்டாவின் ஆதிக்கம் மறைந்த பிறகு பிளாரன்ஸ் நகரத்தில் குடியரசு ஏற்பட்டது. காமோ, லோடி, பாவீயா, கிரிமோனா, வெரானா, பாடுவா, பலௌன்யா, மாடெனா, சையனா என்னும் நகரங்கள் ஒவ்வொன்றும் தன் பக்கத்திலுள்ள நாட்டைக் கைப்பற்றுவதிலும், படைமானியப் பிரபுக்களைத் தோற்கடித்து அவர்கள் நிலங்களைப் பிடுங்கிக் கொள்வதிலும், அண்டை நகரத்தின் வியாபாரத்தை நசுக்குவதிலும் முனைந்திருந்தது. இந்தச் சண்டை சச்சரவுகளினின்றும் குவெல்ப், கிபலின் (Gwelphs and Ghibellines) என்ற கட்சிகள் தோன்றின. மேற்கூறிய நகரங்கள் புனித ரோமானியச் சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டபோதிலும், தம் சொந்த, உள்நாட்டு விவகாரங்களில் பூர்ண சுதந்திரத்தைக் கொண்டாடின. இவற்றுள் தலை சிறந்து விளங்கிய மிலான் சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தையே எதிர்த்தது. இதை விரும்பாத சக்கரவர்த்தி பிரெடரிக் பார்பராசா (Frederick Barbarossa, 1152-90) மிலான் மீது படையெடுத்து, அந்நகரின் ஒரு பகுதியை எரித்தான் (1162). இதனால் எச்சரிக்கப்பட்ட வட இத்தாலியின் வியாபார நகரங்கள் 1167-ல் தம் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒன்று கூடி லாம்பர்டு சங்கத்தை நிறுவின. இச் சங்கம் போப்பிற்கும் சக்கரவர்த்திக்கும் நடந்த சண்டையில் போப்பின் சார்பில் சேர்ந்து, 1176-ல் லக்னானோ என்னுமிடத்தில் சக்கரவர்த்தியின் சேனையை முறியடித்தது. கான்ஸ்டன்ஸ் உடன்படிக்கைப்படி (1183) இந்நகரங்கள் தம் சொந்த விவகாரங்களில் பூர்ண சுதந்திரத்தைப் பெற்றன. இதற்குப் பிறகு இந் நகரங்கள் விரைவில் முன்னேற்றமடைந்தன. ஜெனோவாவும் பீசாவும் மிக்க பலம் வாய்ந்த நகரங்களாய்த் திகழ்ந்தன. ஆனால் கப்பற் படையிலும், வியாபாரச் செழுமையிலும், வருமானத்திலும் முதன்மையானது தனியாட்சி நடத்திவந்த வெனிஸ் நகரமே யாகும். இது நாலாம் சிலுவைப் போரைத் தன் சொந்த இலாபத்திற்கே பயன்படுத்திக் கொண்டது.

12ஆம் நூற்றாண்டின் இறுதியில் நார்மானியர்களின் இராச்சியம் புனித ரோமானிய சாம்ராச்சியத்தோடு இணைந்தது. பார்பராசாவின் மகன் ஹென்ரி, நார்மன் இளவரசியும் நார்மன் இராச்சியத்தின் வாரிசுமான கான்ஸ்டன்ஸை மணந்து, 1194-ல் பாலெர்மாவில் சிசிலியின் அரசனாக முடி சூட்டப்பட்டான். இவன் 1197-ல் பிரெடரிக் என்னும் குழந்தையை விட்டு விட்டு இறந்தான். பிற்காலத்தில் 1218-ல் IV-ம் ஆட்டோ இறந்த பிறகு II -ம் பிரெடரிக் என்னும் பட்டத்துடன் இக் குழந்தை சக்கரவர்த்தியாயிற்று. II-ம் பிரெடரிக் போப் III-ம் இன்னசன்டுடன் சண்டையிட்டான். குவெல்ப் நகரங்கள் போப்பிற்கும், சிபலின் நகரங்கள் சக்கரவர்த்திக்கும் உதவி புரிந்தன. பிரெடரிக் இறந்த பிறகு (1250) மான்பிரெடு (Manfred) சிசிலியின் அரசனானான். இப்போது போப்புகள் சிசிலியின் ஆட்சிக்கு உரிமை கொண்டாடினார்கள். 1265-ல் பிரெஞ்சு அரசனுடைய சகோதரனும் ஆஞ்சுவின் இளவரசனுமான சார்வுஸ் ஒரு பெரிய பிரெஞ்சு சேனையுடன் போப் IV-ம் கிளெமென்டின் உதவிக்கு வந்து மான்பிரெடை பெனெவெண்டோவில் தோற்கடித்துச் சிசிலியின் சிங்காதனமேறினான். 1268-ல் பிரெடரிக்கின் பேரன் கான்ராடினோ சிசிலியை மீட்க முயன்றான். ஆனால் இவன் டாக்லியாகாசோவில் தோற்கடிக்கப்பட்டு, நேபிள்ஸில் சிரச்சேதம் செய்யப்பட்டான். தான் இழைத்த அநேக கொடுமைகளினால் சார்லஸ் சிசிலியர்களால் வெறுக்கப்பட்டான். ஒரு சமயம் ஒரு பிரெஞ்சுப் போர் வீரன் ஒரு சிசிலிய மணப் பெண்ணுக்கு இழைத்த தீங்கின் காரணமாகப் பாலெர்மா நகர மாந்தர்கள் கலகம் செய்து, பிரெஞ்சு மக்களையும் போர் வீரர்களையும் கொலை செய்தனர் (மார்ச் 1282). இக் கலகம் சிசிலி முழுவதும் பரவிப் பிரெஞ்சுச்காரர்களின் ஆதிக்கத்தை ஒழித்தது. இதன்பின் சிசிலியர்கள் ஆரகன் அரசன் III-ம் பீட்டரை அழைத்துத் தம் அரசனாக ஆக்கிக் கொண்டார்கள். ஆஞ்சுவியர்கள் நேபிள்ளிலும், அரகானியர்கள் சிசிலியிலுமாகப் பழைய நார்மன் அரசு இரண்டாகப் பிரிந்தது. இவர்களுக்கிடையே தொடர்ந்து யுத்தம் நடந்தது

கான்ராடின் மரணத்தோடு (1268) போப்-சக்கரவர்த்தி சச்சரவு முடிவடைந்தது. இதற்குப் பிறகு போப்பின் பகைவன் போப்பிற்கு உதவி அனுப்பிய பிரெஞ்சு அரசனே யானான். 1296-ல் போப் VIII-ம் பானிபேஸுக்கும் பிரெஞ்சு அரசன் IV - ம் பிலிப்புக்குமிடையே பிரெஞ்சுப் பாதிரிமார்கள் மீது வரி விதித்தலைப்பற்றி ஒரு தகராறு ஏற்பட்டுப் படிப்படியாக முற்றிற்று. கடைசியில் பிலிப்பின் நண்பர்கள் போப் தங்கியிருந்த அநக்னி என்ற ஊருக்குச் சென்று போப்பைக் கைதியாக்கி, அடித்துத் துன்புறுத்தி அவமானப்படுத்தினார்கள். வயது முதிர்ந்த போப் அதிர்ச்சியினாலிறந்தார் (1303). இதன்பின் பிரெஞ்சு அரசன் போப்பைத் தன் நாட்டிற் கருகிலேயே வந்து வசிக்குமாறு வற்புறுத்தினான். 1309 லிருந்து1378 வரை போப்புகள் ரோமைவிட்டு ஆவீன்யான் (Avignon) என்னும் ஊரில் வந்து தங்கினார்கள். இது பாபிலோனியச் சிறைவாசம் (The Babylonish Captivity) என்றழைக்கப்படுகிறது. இதனால் போப்பின் பேரால் இத்தாலியில் இருந்த ஒற்றுமை மறைந்தது. இதன்பின் எஞ்சியிருந்த இத்தாலி 'புனித ரோமானிய சாம்ராச்சி'யத்தின் ஒரு பாகம் என்ற பெயரளவிலேயே இருந்தது. இதுவும் 1313-ல் மறைந்தது. இந்த ஆண்டில் இத்தாலியின் சண்டை சச்சரவுகளை யொழித்து, நாட்டை ஒற்றுமைப்படுத்திப் புனித ரோமானிய சாம்ராச்சியத்தின் ஆதிக்கத்தை நாடு முழுவதும் பரப்ப வேண்டுமென்ற உயர்ந்த எண்ணங்களோடு இத்தாலிமீது படையெடுத்து (1310) வந்த சக்கரவர்த்தி VII-ம் ஹென்ரி ரோமிலிருந்து நேபிள்ஸுக்குப் போகும் வழியில் மரணமடைந்தான். ஆகவே இத்தாலியின் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டுமென்ற இவன் எண்ணம் வெறுங் கனவாக முடிந்தது. இதற்குப் பிறகு இத்தாலியின் அரசுகளும் குடியரசு நகரங்களும் தம்மை இங்கிலாந்தையும் பிரான்ஸையும்போல் சுதந்திர நாடுகளாகவே பாவித்து வந்தன. ஆகவே முறையே போப்பையும் சக்கரவர்த்தியையும் குறித்து வந்த குவெல்ப், கிபலின் என்ற பெயர்கள் 1309, 1313-க்குப் பிறகு ஒரு பொருளுமில்லாமல் வெறுங்கட்சிக் கூச்சல்களாயின. போப் ஆவீன்யானிற்குச் சென்ற பிறகு ரோம் என்றுமில்லாத தாழ்நிலையை யடைந்தது. ரோமின் தெருக்களில் சண்டை சச்சரவுகள் அதிகரித்தன. போப்பின் நிலங்களையும் வீடுகளையும் திருடர்கள் சூறையாடினார்கள். இதைக் கண்ட கோலா டிரியன்சி என்ற இளைஞன் ரோமைப் பழைய உன்னத நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்ற எண்ணத்துடன் 1347-ல் புரட்சி செய்து, இத்தாலி முழுவதிற்கும் ஓர் அரசாங்கத்தை உண்டாக்கி, அதற்கு ரோமைத் தலைநராக்கினான். ஆனால் 1354-ல் இவன் எதிரிகள் கலகஞ் செய்து இவனைக் கொன்றார்கள். இதற்குப் பிறகு ரோமின் பெருமையை மீட்பதற்குப் போப்பை மறுபடியும் ரோமுக்கு வரவழைப்பதுதான் ஒரே வழியென்று கண்ட சையனா நகரத்தில் பிறந்த காதரின் என்ற ஒரு பாதிரி அம்மையார் 1376-ல் ஆவீன்யானிற்குச் சென்று, போப்பைக் கண்டு, ரோமுக்குத் திரும்பி வருமாறு வற்புறுத்தி அழைத்தார். 1377-ல் போப் XI-ம் கிரெகரி ரோமுக்குத் திரும்பினார். இத்துடன் 'பாபிலோனியச் சிறைவாசம்' முடிவடைந்தது. 1378-ல் இரண்டு போப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டதனால் கிறிஸ்தவ சமுதாயத்தில் பெரும் பிளவு (The great schism) தோன்றியது. இந்தப் பிளவு 1415 வரை நீடித்திருந்தது.

நாளடைவில் கட்சிச் சண்டைகளாலும் அதிகாரிகள் அடிக்கடி மாறியதாலும் வெறுப்படைந்த நகர மக்கள் நிலையான அமைதியுள்ள ஓர் ஆட்சியை விரும்பினார்கள். இதே சமயத்தில் ஒவ்வொரு நகரத்தின் பணக்கார வியாபாரக் குடும்பத்தினரும் தத்தம் நகரத்தைத் தாமே எப்போதும் ஆள விரும்பினார்கள். இவர்களைப் பலர் பின்பற்றவே, ஆண்டுதோறும் இவர்களே அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விரைவில் இவர்கள் தேர்தல் இல்லாமலேயே பரம்பரையாகத் தனி ஆட்சி புரியத் தொடங்கினார்கள். இம்மாதிரியான தனிக் குடும்பங்களின் ஆட்சி 1300-க்கு முன்னமேயே தோன்றி 14. 15ஆம் நூற்றாண்டுகளில் வளர்ந்தது. இந்தப் புது ஏகாதிபத்தியக் குடும்பத்தினர்களில் முக்கியமானவர்கள் மிலானை ஆண்டுவந்த வீஸ்கான்டீ (Visconti) வமிசத்தினர். இவர்களில் பெயர் பெற்றவன் கியான் கலியாசோ வீஸ்கான்டீ (1385-1402). இதேபோல் வெரோனாவில் ஸ்கேலா வமிசத்தினரும், பெர்ராராவில் எஸ்டென்சி (Estensi) வமிசத்தினரும், மான்டுவாவில் கோன்சகா வமிசத்தினரும், பலௌன்யாவில் பெபோலிகளும், பிளாரன்ஸில் முதலில் அல்விஸ்ஸிகளும் பிறகு மெடிச்சிகளும் ஆண்டார்கள். இவர்கள் காண்டாட்யெரி (Condottiere) என்ற பெயர் கொண்ட கூலிப் படைத் தலைவர்களின் உதவியினால் மிக்க சக்தி வாய்ந்தவர்களாய் வரம்பில்லா ஆட்சி நடத்தி வந்தார்கள்.

14, 15, 16ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் தோன்றிய மறு மலர்ச்சி இத்தாலியில் ஆரம்பித்தது. மெடிச்சி வமிசத்தைச் சேர்ந்த காசிமோவும் அவன் பேரன் லொரென்சோவும் பிளாரன்ஸை ஆண்டபோது (1434-92) இத்தாலிய மறு மலர்ச்சி உச்ச நிலையை அடைந்தது; இவர்களுக்கு முன்னமேயே பிளாரன்ஸுப் புலவர்களான தாந்தே (1265-1321), பீட்ரார்க் (1304- 74), பொக்காச்சியோ (1313-75) ஆகியோர் கிரேக்க நூல்களை இத்தாலியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார்கள். இத்தாலியச் சிற்பிகளிற் சிறப்படைந்தவர்கள் கிபர்டி (1378-1455), புரூனலெஸ்கி (1379-1446), டொனாடெல்லோ (1386-1466) மைக்கல் ஆஞ்ஜிலோ (1475-1564) முதலானவர்கள். ஓவியக்காரர்களில் உலகப் பிரசித்தி யடைந்தவர் லியனார்டோ டா வீன்சீ (1452-1519). ரோமாபுரியில் போப்புக்களின் ஆதரவின்கீழ்க் கலைகள் முன்னேற்றமடைந்தன. போப் V-ம் நிக்கலஸ் (1447-55) வாட்டிக்கன் நூல் நிலையம் என்ற பெரியதோர் நூல் நிலையத்தை நிறுவினார். ரோமில் மைக்கல் ஆஞ்ஜிலோவும், ராபியலும் (Raphael, 1483-1520), வெனிஸில் டிஷியனும் (1477-1576) பழைய மதக் கட்டுப்பாடுகளை மீறிச் சுதந்திர உணர்ச்சியுடன் உயிர் ததும்பும் ஓவியங்களை வரைந்தனர்.

15ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பிரெஞ்சு அரசர்கள் இத்தாலிமீது படை யெடுத்தார்கள். 1494-ல் VIII-ம் சார்லஸ் பிளாரன்ஸ் பீசா, ரோம், நேபிள்ஸ் முதலிய நகரங்களுட் பிரவேசித்தபோது இவனுக்கெதிராக வெனிஸ் அரசாங்கத்தாரும் போப்பும், ஸ்பெயின் அரசனான பர்டினாண்டும், சக்கரவர்த்தி மர்க்சிமிலியனும் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார்கள். இதை யறிந்த சார்லஸ் இத்தாலியை விட்டு வெளியேறினான். சார்லஸுக்குப்பின் XII-ம் லூயி 1499-ல் இத்தாலி மீது படை யெடுத்தபோது இவனும் பர்டினாண்டும் தென் இத்தாலியைக் கைப்பற்றித் தமக்குள் பங்கிட்டுக் கொள்வதென்று ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இவர்கள் நேபிள்ஸைக் கைப்பற்றிய பிறகு பாகம் பிரித்துக் கொள்ளும்போது சண்டையிட்டுக்கொண்டார்கள். லூயி அநேக முறை தோற்கடிக்கப்பட்டான். லூயிக் கெதிராகப் போப்பும், சக்கரவர்த்தியும், இங்கிலாந்து அரசனான VIII-ம் ஹென்ரியும் பர்டினாண்டுடன் 'ஹோலி லீக்' என்ற புனித உடன்படிக்கையைச் செய்துகொண்டார்கள். மிலான் தவிர மற்ற எல்லாப் பிரதேசங்களையும் லூயி இழந்தான். இச் சச்சரவுகள் மூலம் போப் VI-ம் அலெக்சாந்தரும், அப் போப்பின் புத்திரன் சீசர் போர்ஜியாவும் மிகுதியான இலாபத்தை யடைந்தனர். லூயிக்குப்பின் I-ம் பிரான்சிஸ் இத்தாலிமீது படையெடுத்து, மரிக்னானோ யுத்தத்தில் பெரிய வெற்றி பெற்றான் (1515). ஆனால் இவன் 1525-ல் சக்கரவர்த்தி V-ம் சார்லஸின் சேனைகளால் பாவீயாவில் தோற்கடிக்கப்பட்டுக் கைதி யாக்கப்பட்டான். பாவீயா யுத்தத்திற்குப்பின் வெனிஸும் சவாயும் தவிர, மற்ற இத்தாலிய நாடுகளெல்லாம் சக்கரவர்த்தி V-ம் சார்லஸின் ஆதிக்கத்தின் கீழ் வந்து, அவன் நியமித்த கவர்னர்களாலும் அதிகாரிகளாலும் சுரண்டப்பட்டுத் தாழ்நிலையை அடைந்தன. ஒரு காலத்தில் கொழுத்த செல்வம் படைத்த லாம்பர்டு நகரங்கள் புதிய வியாபார மார்க்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டமையால் தம் வியாபாரத்தை யிழந்து வறுமை நிலையை யடைந்தன. பிளாரன்ஸில் சாவனரோலா (Savonarola) செய்த புரட்சியால் (1494) துரத்தப்பட்ட மெடிச்சி பிரபுக்கள் 1512-ல் திரும்பினர். இவர்கள் மறுபடியும் 1527-ல் வெளியேற்றப்பட்டுக் கடைசியில் 1530-ல் போப், சக்கரவர்த்தி ஆகியோருடைய சேனைகளின் உதவியால் தம் ஆட்சியைத் திரும்பப் பெற்றார்கள். 1527-ல் சக்கரவர்த்தியிடமிருந்து சரியாகச் சம்பளம் பெறாத கான்ஸ் டபிள் டி பூர்பனின் (Constable de Bourbon) சேனைகள் ரோமைக் கொள்ளையடித்துக் கலைக் கருவூலங்களை யழித்தன. இந் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு XIV-ம் லூயியின் யுத்தங்கள் வரை இத்தாலியில் அமைதி நிலவியது. டிரென்ட் கவுன்சில் (1545-63) மூலம் போப் பிராட்டஸ்டென்டு கொள்கைகள் பரவவொட்டாமல் அவற்றைத் தடுக்க முயன்றார். சக்கரவர்த்தி V-ம் சார்லஸ் இறந்த பிறகு மிலானும், நேபிள்ஸும், சிசிலியும் அவன் மகன் ஸ்பெயின் நாட்டு மன்னன் II ம் பிலிப்பை யடைந்தன. இவனோடு போர் புரிந்த II-ம் ஹென்ரி 1559-ல் டஸ்கனி, கார்சிகா, பீட்மான்ட் முதலிய பிரதேசங்களில் சில கோட்டைகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற உரிமைகளைத் துறந்தான். இதன்பின் இத்தாலிய நாடுகள் எல்லாமே ஸ்பெயினுக்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ கீழ்ப்படிந்திருந்தன. இவற்றில் சவாயும் டஸ்கனியும் தவிர மற்றவை பிற்போக்கான நாடுகளாயிருந்தன.

16ஆம் நூற்றாண்டிலும் அதற்குப் பிறகும் சவாய் படிப்படியாக முன்னேறியது. 1562-ல் சவாய்ப் பிரபு இம்மானுவல் பிலிபர்ட் பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து டூரினைக் கைப்பற்றினான். பிலிபர்ட்டுக்குப்பின் வந்த சவாய்ப் பிரபுக்கள் வட இத்தாலியில் தம் ஆதிக்கத்தைப் பரப்ப முயன்றார்கள். ஸ்பானிய வாரிசு யுத்தத்தில் (1701-14) சவாய்ப் பிரபு லூயிக்கு எதிராக யுத்தஞ்செய்து, யூட்ரெக்ட் உடன்படிக்கைப்படி (1713) சிசிலியையும், 'அரசன்' என்ற பட்டத்தையும் பெற்றான். மேலும் இந்த உடன்படிக்கைப்படி ஹாப்ஸ்பர்க் வமிசத்தைச் சேர்ந்த ஆஸ்திரிய அரசனான சக்கரவர்த்தி VI-ம் சார்லஸ் பூர்பன் வமிசத்தைச் சேர்ந்த ஸ்பெயின் அரசனிடமிருந்து மிலானையும், நேபிள்ஸையும், சார்டீனியாவையும், மான்டூவாவையும் பெற்றான். ஆகவே இத்தாலியின் பெரும்பாகம் ஸ்பெயினின் ஆட்சியினின்று ஆஸ்திரியாவின் ஆட்சிக்கு மாறியது. 1720-ல் ஆஸ்திரியா சவாய் அரசனுக்கு சார்டீனியாவைக் கொடுத்துவிட்டுச் சிசிலியைத் தான். ஆக்கிரமித்துக்கொண்டது. ஆனால் இந்த ஹாப்ஸ்பர்க் ஆதிக்கம் நீடிக்கவில்லை. போலந்து நாட்டு வாரிசு யுத்தத்தின்போது பூர்பன் சார்லஸ் ஆஸ்திரியாவிற்கெதிராக யுத்தஞ் செய்து நேபிள்ஸைக் கைப்பற்றினான். நேபிள்ளிலும் சிசிலியிலும் ஸ்பெயினின் ஆதிக்கம் திரும்பவும் நிலைநாட்டப்பட்டது (1738). இதற்குப் பிறகு பிரெஞ்சுப் புரட்சிவரை இத்தாலியில் அரசியல் நிலைமையில் பெரிய மாறுதல் ஒன்றும் ஏற்படவில்லை. ஏற்கெனவே (1735) டஸ்கனியில் மெடிச்சி வமிசம் கியான் காஸ்டோனுடன் முடிவடைந்தபோது டஸ்கனி ஹாப்ஸ்பர்க் பிரதேசங்களுடன் சேர்க்கப்பட்டது. 1768-ல் ஜெனோவா கார்சிகாவைப் பிரான்ஸுக்கு விற்றது.

பிரெஞ்சுப் புரட்சியாற் கிளம்பிய புயல் இத்தாலியின் அரசியல் நிலைமையில் மிகப் பெரிய மாறுதல்களை உண்டாக்கிற்று. பல நூற்றாண்டுகளாக ஒன்றோடொன்று சண்டையிட்டுக்கொண்டு இத்தாலியை ஐரோப்பிய அரசர்களின் போர்க்களமாக்கிய பல்வேறு அரசுகளை நெப்போலியன் நொடிப்பொழுதில் ஒழித்து இத்தாலியில் ஒற்றுமையை நிலைநாட்டினான். முதலில் சார்டீனியா நெப்போலியனுக்குப் பணிந்து நீஸ், சவாய் இரண்டினையும் பிரான்ஸுக்குக் கொடுத்துச் சமாதானம் செய்துகொண்டது (1796). ரிவோலி யுத்தத்தில் (1797) ஆஸ்திரியர்களை முறியடித்த பிறகு மிலான், எமிலியா. ரோமக்னா மூன்றையம்சேர்த்துச் சிசால்பைன் குடியரசை ஏற்படுத்திய நெப்போலியன் வெனிஸை நஷ்டஈடாக ஆஸ்திரியாவிற்குக் கொடுத்தான். ஜெனோவாவில் லிகூரியன் குடியரசும், ரோமில் ரோமானியக் குடியரசும், நேபிள்ஸில் பார்த்தினோபியன் குடியரசும் 1798-ல் ஏற்படுத்தப்பட்டன. போப் பிரான்ஸுக்கும், நேபிள்ஸ் அரசன் சிசிலிக்கும் ஓடினார்கள். 1804-ல் நெப்போலியன் பிரெஞ்சுச் சாம்ராச்சியத்தின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டபோது டஸ்கனி பிரால்ஸுடன் சேர்க்கப்பட்டது. சிசால்பைன் குடியரசு 'இத்சாலிய அரசு' ஆயிற்று; இது பீட்மான்ட் தவிர வடஇத்தாலி முழுவதும் பரவியிருந்தது; இதற்கு நெப்போலியன் அரசனானான். பார்த்தினோபியன் குடியரசு 'நேபிள்ஸ் அரசு' ஆயிற்று. இதற்கு நெப்போலியனின் சகோதரன் ஜோசப் அரசனானான் (1806) 1808-ல் ஜோசப் ஸ்பெயின் அரசனான பிறகு. தளபதி மூரா நேபிள்ஸ் அரசனானான்.

பிரெஞ்சு யுத்த முடிவில் ஏற்பட்ட வியன்னா உடன்படிக்கைப்படி (1815) இத்தாலியில் பழைய அரசுகள் திரும்பவும் ஏற்படுத்தப்பட்டன. 1815-ல் இத்தாலியில் கீழ்க்கண்ட அரசுகள் இருந்தன : சார்டீனியா: இது நிலையும் சவாயையும் திரும்பப் பெற்றதுமல்லாமல் ஜெனோவாவையும் பீட்மான்டையும் கூடப்பெற்றது. லாம்பர்டியும் வெனிஸும் ஆஸ்திரியச் சக்கரவர்த்தியால் அளப்பட்டன. பார்மா, மாடெனா, டஸ்கனி இவை மூன்றும் ஆஸ்திரியச் சக்கரவர்த்தியின் உறவினர்களால் அளப்பட்டன. மத்திய இத்தாலியைச் சேர்ந்த நாடுகள் போப்பால் ஆளப்பட்டன. தெற்கில் நேபிள்ஸ் அரசன் சிசிலியை ஆண்டுவந்தான். இத்தாலி முழுவதிலும் ஆஸ்திரியாவின் ஆதிக்கம் பரவியிருந்தது. போப்பும் நேபிள்ஸ் அரசனும் தத்தம் நாட்டில் கலகங்களை அடக்குவதற்கு ஆஸ்திரியாவின் உதவியை நாடினர். இவ்வாறாகப் பிரெஞ்சு ஆட்சியின் போது இத்தாலியில் ஏற்பட்ட ஒற்றுமை மறைந்தது.

பிரெஞ்சு ஆட்சியின்கீழ் நாட்டை இத்தாலிய அதிகாரிகளும் உத்தியோகஸ்தர்களுமே ஆண்டுவந்தார்கள். இத்தாலியப் போர்வீரர்கள் ஃப்போலியனின் சேனையில் வீரச்செயல் பல புரிந்தனர். கார்சிகாவில் பிறந்த இத்தாலியனான நெப்போலியனின் வெற்றிகள் இத்தாலியர்களுக்கு பழைய ரோமானிய சாம்ராச்சியத்தை நினைவூட்டின. நெப்போலியன் மறைந்த பிறகு இத்தாலியர்களின் உள்ளத்தில் ஒரு தேசிய எழுச்சி தோன்றியது. இது ரீசார்ஜிமென்டோ (Risorgimento) எனப்படும். இத்தாலிய அரசுகளை யழித்து, இத்தாலி முழுவதையும் ஒரு குடியரசாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் 'கார்பானாரி' (Carbonari) முதலான சங்கங்கள் பல் இரகசியமாக வேலைசெய்து வந்தன. இத்தாலியக் குடியரசுக்காகப் பெரும்பாடுபட்டவர் மாட்ஸீனி (1805-72). இத்தாலியர் அனைவரும் குடிகளின் நன்மதிப்பைப் பெற்று ஆட்சிபுரிந்து வந்த சார்டீனிய அரசு இத்தாலி முழுவதையும் ஒன்றுபடுத்தி அரசாளும் என்று எதிர்பார்த்தனர்.

1848-ல் பல ஐரோப்பிய நாடுகளில் பிரதிநிதித்துவ ஆட்சியை வேண்டிக் குடிகள் கலகம் செய்தார்கள். இத்தாலியில் சார்டீனியா, மிலான், வெனிஸ், பார்மா, மாடெனா, டஸ்கனி முதலிய இடங்களில் கலகங்கள் தோன்றின. சார்டீனியா அரசன் கார்லஸ் ஆல்பர்ட் (1831-49) பிரதிநிதித்துவ சர்க்காரை உடனே தன் நாட்டில் ஏற்படுத்தியதுமல்லாமல் ஆஸ்திரிய ஆதிக்கத்திற்கெதிராக இத்தாலியில் நடந்த கலகங்களுக்கெல்லாம் தலைமைவகித்தும் நின்றான். ஆனால் இவனால் ஆஸ்திரியச் சேனைகளுடன் எதிர்த்துப் போராட முடியவில்லை. 1848-49-ல் கூஸ்டோசா. நாவாரா என்ற இரண்டு இடங்களில் நடந்த யுத்தங்களில் ஆஸ்திரியச் சேனைகளால் தோற்கடிக்கப்பட்ட இவன் மனமுடைந்துபோய் அரசு துறந்தாள். இவனுக்குப்பின் இவன் மகன் II - ம் விக்டர் இம்மானுவல் (1849-75) முடிசூட்டப்பட்டான். இதே சமயம் போப்பைத் துரத்திவிட்டு, ரோமில் ஒரு குடியரசை நிறுவிய (1848) மாட்ஸீனியும் அவர் தளபதி காரிபால்டியும் போப்பின் உதவிக்கு வந்த பிரெஞ்சுச் சேனைகளால் ரோமினின்றும் துரத்தியடிக்கப்பட்டார்கள் (1849).

இத்தாலியை ஒற்றுமைப்படுத்தியவன் II-ம் விக்டர் இம்மானுவலின் பிரதம மந்திரி காவூர். இவன் பிரெஞ்சுச் சக்கரவர்த்தி III-ம் நெப்போலியலுக்கு நீஸையும் சவாயையும் கொடுத்துப் பிரெஞ்சு உதவியைப் பெற்றான் (1858) 1859-ல் விக்டர் இம்மானுவல் பிரெஞ்சு உதவியைக் கொண்டு மஜென்டா சால்பெரினோ என்ற இரண்டு இடங்களில் ஆஸ்திரியர்களைத் தோற்கடித்தான். இதற்குப்பிறகு நெப்போலியன் திடீரென்று ஆஸ்திரியர்களுடன் சமாதானம் செய்துகொண்டு யுத்தத்தினின்று பின்வாங்கிக் கொண்டான். இதனால் காவூர் ஏமாற்ற மடைந்தபோதிலும் இத்தாலியர்கள் அனைவரும் விக்டர் இம்மானுவலைத் தம் அரசனாக அங்கீகரிப்பதற்குத் தயாராயிருந்ததைக் கண்டு மகிழ்ந்தான். 1860-ல் பார்மா, மாடெனா, டஸ்கனி பிரதேசங்களின் குடிகள் தத்தம் பிரபுக்களைத் துரத்தவிட்டுச் சார்டீனிய அரசுடன் சேர்ந்தனர். இதே ஆண்டு காவூரால் அனுப்பப்பட்ட காரிபால்டி சிசிலியையும் நேபிள்ளையும் கைப்பற்றினான். ரோமும், அதைச் சுற்றியுள்ள பிரதேசமும் தவிர. மற்றப் போப்பின் நாடுகளான ரோமக்னா, அம்பிரியா, 'எல்லை நாடுகள்' (Marches) முதலியவற்றைச் சார்டீனியாவுடன் சேர்த்துக்கொண்டு, பிப்ரவரி 1861-ல் விக்டர் இம்மானுவல் 'இத்தாலிய அரசன்' என்ற பட்டத்தைத் தரித்துக் கொண்டான். ரோமும் வெனிஸும் மட்டும் இவன் ஆதிக்கத்திற்கு வெளியே நின்றன. 1866-ல் பிரஷ்யாவுக்கும் ஆஸ்திரியாவுக்கு மிடையே தோன்றிய யுத்தத்தில் இத்தாலி பிரஷ்யா பக்கஞ் சேர்ந்து வெற்றிபெற்ற பிரஷ்யாவினால் வெனிஸை இனாமாகப் பெற்றது. 1870-ல் பிரஷ்யாவினால் தாக்கப்பட்ட பிரான்ஸ் ரோமிலிருந்து தன் படையை அழைத்துக் கொள்ளவே, இம்மானுவல் எளிதில் ரோமை அக்கிரமித்துக்கொண்டான். 1865-ல் டூரினிலிருந்து பிளாரன்ஸிற்கு மாற்றப்பட்ட இவன் தலைநகர், 1871-ல் பிளாரன்ஸிலிருந்து ரோமுக்கு மாற்றப்பட்டது.

ஒற்றுமைப்பட்ட இத்தாலிய அரசாங்கம் போக்குவரத்துச் சாதனங்களைச் சீர்திருத்துவதிலும், சதுப்பு நிலங்களைச் சாகுபடி செய்வதிலும், கல்வியின்மையைப் போக்குவதிலும் தன் கவனத்தைச் செலுத்தியது; வெளிநாட்டு விவகாரங்களில் குடியேற்ற நாடுகளைச் சம்பாதிப்பதில் தீவிர முயற்சி செய்தது. தான் ஆக்கிரமித்துக் கொள்ளவேண்டுமென்று நினைத்த டுனீஷியாவை 1881-ல் பிரெஞ்சுக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டபோது இத்தாலிய அரசாங்கம் ஏமாற்றமடைந்து, இத்தாலியின் பாதுகாப்பைக் கருதி ஜெர்மனியோடும் ஆஸ்திரியாவோடும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டது (1882). இந்த மூன்று நாட்டு உடன்படிக்கை 1914 வரை நீடித்திருந்தது. டுனீஷியாவைக் கைவிட்ட இத்தாலியர் 1882- ல் சோமாலிலாந்தில் ஒருபகுதியையும்,1885-ல் எரிட்ரியாவையும் ஆக்கிரமித்துக்கொண்டார்கள். அபிசீனியாவைக்கைப்பற்றப் பிரதம மந்திரி கிரீஸ்பீ அனுப்பிய படை 1896-ல் அடோவா யுத்தத்தில் முறியடிக்கப்பட்டது. உடனே கிரீஸ்பி ராஜினாமா செய்தான். இவனுக்குப் பின் வந்த மந்திரிகள் தீவிரவாதிகளை, முக்கியமாகச் சோஷலிஸ்டுகளை அடக்க முயன்றார்கள். 1900-ல் அரசன் I-ம் ஹம்பர்ட் கொலை செய்யப்பட்டான். இவனுக்குப் பின் இவன் புத்திரன் III-ம் விக்டர் இம்மானுவல் பட்டமெய்தினான். 1911-ல் துருக்கியிடமிருந்து லிபியா கைப்பற்றப்பட்டது.

மே 1915-ல் இரகசிய லண்டன் உடன்படிக்கைப்படி இத்தாலி நேசநாடுகளின் கட்சியில், ஆஸ்திரியாவிடமிருந்து டிரென்டீனோ. டிரீஸ்ட், டால்மேனியா முதலியவற்றைக் கைப்பற்றும் நோக்கத்துடன் முதல் உலக யுத்தத்தில் இறங்கியது. அக்டோபர் 1917-ல் கபாரெட்டோ யுத்தத்தில் ஆஸ்திரிய-ஜெர்மானியச் சேனைகளால் இத்தாலியர் பெருந்த நஷ்டத்துடன் முறியடிக்கப்பட்டனர். ஓர் ஆண்டு கழித்து இத்தாலியர்கள் பிரிட்டிஷ் - பிரெஞ்சுப் படைகளின் உதவியைக் கொண்டு ஆஸ்திரியர்களை விட்டோரியோ வெனிடோ என்னுமிடத்தில் தோற்கடித்து நாட்டைக் காப்பாற்றினர்; யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்டபின் (1919) ஆஸ்திரியாவிடமிருந்து இஸ்டிரியாவையும் டிரென்டீனோவையும் இத்தாலியர் பெற்றனரேயொழிய, அவர்கள் மிகவும் விரும்பிய ஏட்ரியாடிக் துறைமுகப் பட்டினமான பியுமேயைப் பெறவில்லை. இதனால் அதிருப்தியடைந்த டான்னூன்சையோவும் (d' Annunzio) அவன் வாலிபர் படையினரும் பியுமேயை ஆக்கிரமித்துக் கொண்டனர் (1918-21). இத்தாலியில் தொழிலாளிகளின் வேலை நிறுத்தங்களும், கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்புக்களும், மந்திரிசபைகளின் வீழ்ச்சிகளும், பல கட்சிகளின் பேதங்களும் குழப்பத்தை யுண்டாக்கின.

இக்குழப்பத்தினின்றும் முசொலீனியின் பாசிஸ்டுக் கட்சி தோன்றியது. சேனையைப்போல் பயிற்சி பெற்ற பாசிஸ்டுக் கட்சியின் உதவியால் ரோமை ஆக்கிரமித்துக் கொண்ட முசொலீனியை விக்டர் இம்மானுவல் தன் பிரதம மந்திரியாக நியமித்தான் (அக்டோபர் 1922). படிப்படியாக எல்லா விதமான எதிர்ப்புக்களையும் நசுக்கி, முசொலீனி இத்தாலியில் பாசிஸ்டுச் சர்வாதிகாரத்தை நிறுவினான். 1997-ல் முசொலீனி ஏற்படுத்திய 'கார்ப்பரேடிவ்' அரசியலின் கீழ் விவசாயம், கைத்தொழில், கல்வி முதலான துறைகளில் இத்தாலி விரைவாக முன்னேறியது. 1870 முதல் இத்தாலிய சர்க்காரை அங்கீகரிக்காத போப் 1929-ல் லேடரன் உடன்படிக்கைப்படி இத்தாலியச் சர்க்காருடன் சமாதானம் செய்துகொண்டார். 1935-ல் முசொலீனியால் அனுப்பப்பட்ட மார்ஷல் கிரேசியானி அபிசீனியாவைக் கைப்பற்றினான். 1939 ஏப்ரலில் முசொலீனி ஆல்பேனியாவை ஆக்கிரமித்துக் கொண்டான்; 1939 மேயில் ஹிட்லருடன் ஒரு நேச ஒப்பந்தம் செய்துகொண்டான். ஹிட்லர் பிரான்ஸைக் கைப்பற்றிய பிறகு 1940 ஜூன் 10-ல் ஆப்பிரிக்காவிலுள்ள பிரிட்டனின் குடியேற்றங்களையும் எகிப்தையும் குயெஸ் கால்வாயையும் கைப்பற்றும் நோக்கத்துடன் முசொலீனி இரண்டாம் உலக யுத்தத்தில் இறங்கினான். ஆப்பிரிக்காவில் இத்தாலியர்கள் ஆரம்பத்தில் சில வெற்றிகளைப் பெற்றனர். மார்ஷல் கிரேசியானி லிபியாவிலிருந்து எகிப்து வழியாகச் சூயெஸ்கால்வாயை நோக்கிப் படையெடுத்தான். ஆனால் டிசம்பர் 1940-ல் நேசப்படைகள் பார்டியா, டொப்ரூக், டெர்னா, பெங்காசி முதலிய இடங்களைக் கைப்பற்றி, ஆயிரக்கணக்கான இத்தாலியர்களைச் சிறைப்படுத்தின. ஜெர்மானிய ஜெனரல் ராமலின் உதவியைக் கொண்டு இத்தாலியர் தம் நாடுகளைத் திரும்ப அடைந்தனர். ஆனால் ராமல் தோற்கடிக்கப்பட்டபின் இத்தாலியர் 1941 மேயில் ஆப்பிரிக்கச் சாம்ராச்சியம் முழுவதையும் இழந்தனர். 1943-ல் நேசப்படைகள் ஆப்பிரிக்காவிலிருந்து இத்தாலிமீது படை யெடுத்தபோது இத்தாலியர் பாசிஸ்டுக் கட்சியிலும் முசொலீவியின் தலைமையிலும் நம்பிக்கையிழந்தனர். விக்டர் இம்மானுவலின் உத்தரவின் கீழ் முசொலீனி கைது செய்யப்பட்டான். 1943 செப்டம்பர் 3-ல் மார்ஷல் படாக்ளியா (Badoglio) இத்தாலிய அரசாங்கத்தின் சார்பாக நேசப்படைத் தலைவனிடம் சரணடைந்தான். 1944 ஜூன் 4 -ல் நேசப்படைகள் ரோமைக் கைப்பற்றின. ஏப்ரல் 28-ல் ஜெர்மானியர்களால் சிறையினின்றும் விடுவிக்கப்பட்ட முசொலீனி பாசிஸ்டுகளின் எதிரிகளால் கைப்பற்றப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டான். 1947 பிப்ரவரி 10-ல் இத்தாலியுடன் நேசநாடுகள் செய்துகொண்ட உடன்படிக்கைப்படி இத்தாலி தன் ஆப்பிரிக்கச் சாம்ராச்சியத்தை இழக்தது மல்லாமல் டிரீஸ்ட் என்னும் ஏட்ரியாடிக் துறைமுகப் பட்டினத்தையும் ஐக்கிய நாடுகளின் சங்கத்தின் பராமரிப்பின்கீழ் விட்டுவிட்டது வீ. என். ஹ.

அரசியல் அமைப்பு : 1848-ல் பீட்மான்டும் சார்டீனியாவும் ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்பை ஐக்கிய இத்தாலியும் மேற்கொண்டது. முசொலீனி அதிகாரத்திற்கு வரும்வரையில் (1922) இவ்வமைப்பு மாறாமல் இருந்து வந்தது. 1943ஆம் ஆண்டுவரையில் நடைமுறையிலிருந்த பாசிச சர்வாதிகாரத்தின்கீழ், இத்தாலிய அரசியல் அமைப்பு, பெயரளவில் முடியரசாயிருந்ததெனினும், பிரதம மந்திரியாயிருந்த முசொலீனியே இராச்சியத்தின் தலைவனாயிருந்தான். முன்பு பார்லிமென்டிற்குப் பொறுப்புடையதாயிருந்த மந்திரிசபை மாற்றப்பட்டுப் பாசிசக் கட்சி அங்கத்தினர்களே மந்திரிகளாய் விட்டனர்; இவர்கள் முசொலீனிக்கு முழுவதும் அடங்கியவர்கள். பாசிசக் கட்சியின் சின்னமான 'கழிகளின் கட்டு ', அடக்கு முறையைக் குறிப்பிட்டது.

பார்லிமென்டின் கீழ்ச்சபையான ’பிரதிநிதிகள் சபை’க்கு அங்கத்தினர்கள் கீழ்க்கண்டவாறு தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பட்டி இருக்கும். தேர்ந்தெடுப்போர் ஒவ்வொரு பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்காமல் முழுப்பட்டிகளாகவேதேர்ந்தெடுக்க வேண்டும். பெரும்பான்மை வாக்குக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி மொத்தத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஸ்தானங்கள் பெறும். மற்றக் கட்சிகள் தாங்கள் பெற்ற வாக்குக்களுக்குத் தக்கவாறு பெறும். இச்சபை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும்; ஆயினும், அதற்குள்ளாகப் பிரதம மந்திரியால் கலைக்கப்படவும் கூடும். 1933 லிருந்து பிரதம மந்திரி ஒரே பட்டியை வாக்காளர்களுக்கு அனுப்பி, அதை அவர்கள் மொத்தமாகத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. பாசிஸ்டுகளின் ஆதிக்கத்தினால் அக்கட்சியின் பட்டியையே முழுவதும் மக்கள் ஒப்புக்கொள்ளத் தொடங்கினர். பண மசோதாவைப் பிரேரேபிக்கக் கீழ்ச்சபையாருக்கே உரிமையுண்டு; மேல்சபையான செனெட் இம்மசோதாவை எதிர்த்தால், தேவையான அளவு புது அங்கத்தினர்களை மேல்சபைக்கு நியமனம் செய்து எதிரிப்பைச் சமாளித்து விடுவார்கள்.

செனெட்டில் பெரும்பாலும் நியமன அங்கத்தினர்களும் சில பாரம்பரிய அங்கத்தினர்களுமே உண்டு. கீழ்ச்சபை அலுவல்களைக் கவனிக்க ஒன்பது குழுக்கள் உண்டு. இவ்வவையினர் மந்திரி சபையைக் கேள்விகள் கேட்கலாம். மந்திரி சபை கீழ்ச்சபைக்குப் பொறுப்புள்ளதேயன்றிச் செனெட்டிற்குப் பொறுப்புள்ளதல்ல.

இயற்றப்பட்ட சட்டங்கள் மிகவும் பொதுவான முறையிலேயே இருந்தன. இச்சட்டங்களின் விவரங்களை யெல்லாம் நிருவாகத்தின் அவசரச் சட்டங்கள், விதிகள், உத்தரவுகள் மூலம் விரிவுபடுத்தினர். ஆகையால், நிருவாகத்தார் இயற்றிய சட்டங்கள் ஏராளமாகக் குவிந்தன.

நீதி இலாகாவின் தலைமையில் ஓர் அப்பீல் கோர்ட்டு உண்டு. இதன் கீழ்ப் படிப்படியாகப் பல நீதிமன்றங்கள் இருந்தன. அப்பீல் கோர்ட்டு, கீழ்க் கோர்ட்டு நீதிபதிகளின் அதிகார எல்லையை நிருணயிக்கவும், அவ்வெல்லையை மீறிய நீதிபதிகளைத் தண்டிக்கவும் அதிகாரம் பெற்றிருந்தது. ஜூரி முறை இருந்தது எனினும் அது நன்கு நடைபெறவில்லை. அரசாங்க உத்தியோகஸ்தர்கள் சம்பந்தமான வழக்குக்களுக்கென விசாரணை மன்றங்கள் தனியே இருந்தன. நீதிபதிகளை மந்திரி சபையின் சிபாரிசையொட்டி அரசனே நியமித்தான்.

நாட்டின் 25 மாகாணங்களையும் நிருவகிப்பதற்கு மாகாணத் தலைவர்களும் மந்திரிசபைகளும் இருந்தன. இம்மாகாணத் தலைவர் மத்திய அரசாங்கத்தின் ஏஜன்டாகவே இருந்துவந்தார். நகரங்களும் கிராமங்களும் கம்யூன்களாகப் பிரிக்கப்பட்டன. அக்கம்யூன்களின் மேயர்கள் மாகாணத் தலைவர்களிடமிருந்து உத்தரவு பெற்று அலுவல் பார்த்தனர்.

தொழில்களிலும் உத்தியோகங்களிலுங்கூடப் படிப்படியான ஆதிக்கமுறை இருந்துவந்ததால், எங்கும் பாசிச அதிகாரத்தை நிலைநாட்டும் முயற்சி ஒன்றே நடைபெற்றது. தொழிற்கூட்டுக்கள் நிலவி வந்ததால், பாசிச ஆட்சியைத் தொழிற்கூட்டு இராச்சியம் என்றும் கூறுவதுண்டு.

இத்தாலிக்கு விரோதமாயிருந்த நேச நாடுகளின் முன்னேற்றம் (1943) முசொலீனியின் ஆதிக்கத்தைச் சிதைத்தது. அவர் பதவியினின்றும் விலகிக்கொள்ளவே, அவருக்குப்பின் பிரதமரான மார்ஷல் படாளியா பாசிசக் கட்சியைக் கலைத்துவிட்டான். படாளியாவிற்குப் பின்வந்த அரசாங்கம் விக்டர் இம்மானுவலை அரச பதவியினின்றும் விலகச் செய்து இளவரசனை ரீஜன்டாக நியமித்தது. எல்லாக் கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும் முறையில் அரசாங்கமும் மாற்றியமைக்கப் பெற்றது (1944). நேசநாட்டு ராணுவ அரசாங்கம் ஒன்று, கைப்பற்றிய பிரதேசங்களில் இடையிற் சில காலம் வரையில் அதிகாரம் செலுத்தி வந்தது. பிறகு இத்தாலிய அரசாங்கத்திற்கு முழு ஆதிக்கமும் சர்வதேச அந்தஸ்தும் அளிக்கப்பட்டன.

1946 ஜூனில் ஒரு குடியொப்பத்தின் மூலம் அரச பதவி நிராகரிக்கப்பட்டது. மன்னரும் இளவரசரும் நாடு கடந்தனர். குடியொப்பத்தின் முடிவு பெரும்பான்மையோரின் முடிவேயாயினும், பலர் அம்முடிவை எதிர்த்தும் வாக்களித்தனர். இத்தாலி குடியரசாயிற்று. குடியரசை ஆதரித்த பெரும்பாலோர் வட இத்தாலியைச் சார்ந்தவர்களே. அரச வமிசத்தினர் அயல் நாட்டவராகக் கருதப்பட்டு நாடுகடத்தப்பட்டனர். புதிய திட்டத்தின்படி பட்டங்கள் அளிப்பது நின்றுவிட்டது.

1947 டிசம்பரில் கூடிய ஒரு அரசியல் நிருணய சபை புது அரசியலை வகுத்தது. அது 1948 ஜனவரி 1லிருந்து நடைமுறைக்கு வந்தது. அரசியல் சட்டத்தில் 139 ஷரத்துக்களும் 18 இடைக்கால விதிகளும் அடங்கியுள்ளன. இவ்வரசியல் சட்டத்தின்படி பார்லிமென்டு என்பது பிரதிநிதி சபையும் செனெட்டும் சேர்ந்தது. பிரதிநிதி சபை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வயது வந்தோர் வாக்குரிமைப்படி நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பெறுவது. 80,000 மக்களுக்கு ஒரு பிரதிநிதி யிருக்கவேண்டும். அவர் 25 வயதிற்கு மேற்பட்டவராதல் வேண்டும். செனெட்டு 6 ஆண்டிற்கொருமுறை, பிரதேசவாரியாகத் தேர்ந்தெடுக்கப் பெறும். ஒவ்வொரு பிரதேசத்திலும் 6 அங்கத்தினர்கள் ஆக 2 இலட்சம் மக்களுக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். செனெட் அங்கத்தினர்களில் ஒருவரான ஜனாதிபதி 5 அங்கத்தினர்களைச் செனெட்டிற்கு நியமனம் செய்வார்.

பார்லிமென்டோடு ஒவ்வொரு பிரதேசக் கவுன்சிலிலிருந்தும் 3 அங்கத்தினர்களும் சேர்ந்து ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இத்தேர்தலுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையோர் வேண்டும். ஜனாதிபதி 50 வயதேனும் பூர்த்தியானவரா யிருக்க வேண்டும். அவர் 7 ஆண்டிற்குப் பதவியிலிருப்பார். செனெட்டின் தலைவர் குடியரசின் உபஜனாதிபதியாக இருப்பார். தமது பதவியின் இறுதி ஆறு மாதங்களில் தவிர வேறு காலங்களில் ஜனாதிபதி பார்லிமென்டின் இரு சபைகளில் எதையும் கலைத்துவிடலாம்.

நிருவாகத்திற்காக இத்தாலியை 19 பிரதேசங்களாகப் பிரித்துள்ளனர். பிரதேசங்கள் மாகாணங்களாகவும் கம்யூன்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. பிரதேசங்களின் நிருவாகம், பிரதேசக் கவுன்சிலாலும் நிருவாகக் குழுவாலும் அக்குழுவின் தலைவராலும் நடத்தப்படுகிறது.

பதினைந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புக் கோர்ட்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அரசியலைப் பற்றிய சட்ட நிருணயத்தின் இறுதி அதிகாரம் இதற்கு உண்டு. இக்கோர்ட்டு இராச்சியத்திற்கும் பிரதேசங் களுக்குமிடையே ஏற்படும் தகராறுகளை விசாரிக்கும். ஜனாதிபதியையும் மந்திரிகளையும் கூட விசாரிக்க இக் கோர்ட்டுக்கு உரிமை உண்டு. ரத்து அதிகாரக் கோர்ட்டு ஒன்று ரோமில் இருக்கிறது. சில்லரைச் சிவில் தாவாக்களை விசாரிக்கும் தனிப்பட்ட உத்தியோகஸ்தர் களும் இருக்கின்றனர்.

1929-ல் போப்பிற்கும் இத்தாலிக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் புது அரசியலின் 7 ஆம் ஷரத்துப்படி ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. கத்தோலிக்க மதமே இத்தாலிய இராச்சியத்தின் மதம். சட்டப்படி பிராட்டெஸ்டென்டு முதலிய மதத்தவர்களுக்கும் சம உரிமைகளிருப்பினும், அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். மதஸ்தாபன மேலதிகாரிகளைப் போப் நியமிக்கிறார். நியமனம் செய்யப்படுபவர்களுடைய பெயர்ப்பட்டி இத்தாலிய அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும். சி. எஸ். ஸ்ரீ.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/இத்தாலி&oldid=1463212" இலிருந்து மீள்விக்கப்பட்டது