காற்றில் வந்த கவிதை/ஆக்காட்டி
நம் நாட்டில் எத்தனையோ விதமான பறவைகள் இருக்கின்றன. சில பறவைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். மயில் எவ்வளவு அழகாக இருக்கிறது! சில பறவைகள் இனிமையாகப் பாடும். குயில் கூவும்போது கேட்க ஆனந்தமாக இல்லையா? இப்படி எத்தனையோ வகையான, பறவைகள் இருக்கின்றன. ஆக்காட்டி என்ற ஒரு பறவையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? கிராமத்திலே இருப்பவர்கள் அதைப் பார்த்திருப்பார்கள். பட்டணத்திலே அதைப் பார்க்க முடியாது. ஆக்காட்டி நல்ல பறவை' அதற்குக் கால்கள் உயரமாக இருக்கும். அது நிலத்திலே உட்கார்ந்து இரை தேடிக் கொண்டிருக்கும்; பெரிய சத்த மிட்டுக் கூவும்.
ஆக்காட்டி பாறைகளிலே உள்ள பொந்துகளிலே கூடு அமைத்துக்கொண்டு அங்கே முட்டை வைக்கும். குஞ்சுகளை அன்போடு பாதுகாக்கும். இப்படிப்பட்ட ஆக்காட்டி ஒன்றின் சோகக் கதையைப் பற்றி ஒரு நாடோடிப் பாடல் உண்டு.
ஒரு கிராமத்துக்குப் பக்கத்திலே கருங்காடு என்ற பெயருடைய ஒரு காடு இருந்தது. அதிலே ஒரு பெரிய பாறை உண்டு. பாறைக்குப் பக்கத்திலே தண்ணிர் தங்கியிருக்கும் ஒரு குட்டையும் இருந்தது. அந்தக் கருங்காட்டுப் பாறையிலே ஒரு சந்திலே கல்லையெல்லாம் நன்முக ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு ஆக்காட்டி கூடு கட்டியது. அதிலே நான்கு முட்டை வைத்தது. ஆனல், ஒரு முட்டை கெட்டுப் போய்விட்டது. மூன்று முட்டைகளிலிருந்து மூன்று குஞ்சுகள் வெளிவந்தன. அந்தக் குஞ்சுகளை அந்த ஆக்காட்டி மிக அன்போடு வளர்த்து வந்தது. திசையெல்லாம் பறந்து பறந்து போய் இரை தேடிக் கொண்டுவந்து கொடுத்தது. இப்படி வளர்க்கிற போது ஒருநாள் அந்த ஆக்காட்டி முதல் குஞ்சுக்கு இரைதேடி மூன்று காத தூரம் போய்விட்டு வந்தது. காதம் என்று சொன்னல் சுமார் பத்து மைல் தூரம் இருக்கும். அப்படி அது மூன்று காதம் போய்விட்டு வந்தது. பிறகு இரண்டாவது குஞ்சுக்கு இரை தேடிப் புறப்பட்டது. மூன்று குஞ்சுகளிலே இரண்டாவது குஞ்சுதானே நடுக்குஞ்சு? அந்த நடுக்குஞ்சுக்கு இரை தேடி நாலு காதம் போய்விட்டு வந்தது. பிறகு மறுபடியும் புறப்பட்டது. கடைசிக் குஞ்சுக்கு இரை தேடி ரொம்பதுாரம், கனதுாரம் போய்விட்டு வந்தது.
இப்படி அந்த ஆக்காட்டி போகிறதையும் வருகிறதையும் ஒரு பையன் பார்த்துக்கொண்டே இருந்தான். அவன் அந்தக் கருங்காட்டுப் பாறைக்குப் பக்கத்திலே இருந்த குட்டையிலே துணி துவைக்க வந்தவன். அவன் அந்த ஆக் காட்டியைக் கவனித்துக் கொண்டே இருந்தான். அது கடைசிக் குஞ்சுக்கு இரை தேடிச் சென்ற சமயம் பார்த்து அந்த ஆக்காட்டியின் கூட்டிலே கண்ணி வைத்துவிட்டான். ஆக்காட்டி கூட்டுக்குள்ளே நுழைகிற இடத்திலே அதை வைத்துவிட்டான்.
அந்த ஆக்காட்டி நெடுந்துாரம் சுற்றி இரையெடுத்துக் கொண்டு வேகமாகப் பறந்து வந்தது. கடைசிக் குஞ்சு
பசியினால் வாடுமே என்று அதற்கு அத்தனை அவசரம். அப்படி அவசரமாக வந்ததினலே கண்ணியிருந்ததைக் கவனிக்கவில்லை. அதனுடைய கால்கள் இரண்டும் கண்ணியிலே மாட்டிக்கொண்டன. இறக்கைகளை அது படபடவென்று அடித்துக்கொண்டு துடித்தது; அழுதது. வலையில் அகப்பட்ட அந்தப் பறவை அழுதுகொண்டே இருக்கவே அதன் கண்ணிர் வெள்ளமாக ஒட ஆரம்பித்துவிட்டது. குதிரையைக் கூட அந்த வெள்ளத்திலே கொண்டுவந்து குளிப்பாட்டினர்களாம். ஆடு மாடுகள் எல்லாம் வந்து வெள்ளமாக ஓடும் கண்ணிரையே தாகத்துக்குக் குடித்தனவாம். எல்லோரும் பார்த்து, ஐயோ பாவம்' என்று சொல்லும்படி அந்த ஆக்காட்டி அழுதுகொண்டே இருந்ததாம்.
அந்த ஆக்காட்டியை ஒரு சின்னக் குழந்தை, "ஆக்காட்டியே, நீ எங்கே முட்டை வைத்தாய்?" என்று கேட்டதாம். உடனே அந்த ஆக்காட்டி அந்தக் குழந்தையிடத்திலே தன் னுடைய துன்பக் கதையைச் சொல்லிக்கொண்டே அழுததாம்.
"ஆக்சாட்டி ஆக்சாட்டி எங்கெங்கே முட்டை
வைத்தாய்?"
"கல்லைத் திறந்து கருங்காட்டுப் பாறையிலே
இட்டது நாலு முட்டை, பொரித்தது மூணுகுஞ்சு,
முதற்குஞ்சுக் கிரைதேடி மூனுகாதம் போய்வந்தேன்;
நடுக்குஞ்சுக் கிரைதேடி நாலு காதம் போய் வந்தேன்;
கடைசிக் குஞ்சுக் கிரைதேடிக் கனதுTரம் போய்
வந்தேன்;
வண்ணுரப் பாவி மகன் பார்த்திருந்து கண்ணி
வைத்தான்
காலிரண்டும் கண்ணியிலே கையிரண்டும் மாரடிக்க
நான் அழுத கண்ணிரோ நாடெல்லாம் வெள்ளம்போய்
குண்டு குளம் ரொம்பிக் குதிரை குளிப்பாட்டி
ஆடுகளும் மாடுகளும் அங்கு வந்து நீர் குடிக்க
எங்கும் பரந்ததுவே எல்லோரும் பார்த்துருக."
[குண்டு-குழி, ரொம்பி-நிரம்பி.]
கொங்கு நாட்டுக் கிராமத்திலே மாடு மேய்க்கும் சிறுவர்கள் இந்தப் பாட்டைப் பாடுவார்கள்.
ஆக்காட்டியின் குரலைக் கேட்கும்போதெல்லாம் இந்தப் பாட்டு என் நினைவுக்கு வரும்.