காற்றில் வந்த கவிதை/பிஸ்ஸாம் பறத்தல்
குழந்தைகளுடைய விளையாட்டுக்குக் கணக்கே இல்லை. பள்ளிக்கூடத்திலே கற்றுக்கொள்ளும் விளையாட்டுக்கள் பல. இவையல்லாமல் குழந்தைகள் தலைமுறை தலைமுறையாக விளையாடி வரும் விளையாட்டுக்கள் எத்தனையோ.
விளையாட்டு என்பது குழந்தையின் பிறப்புரிமை என்று கூறலாம். பூனைக் குட்டிகளைப் பார்த்திருப்பீர்கள். நாய்க் குட்டிகளைப் பார்த்திருப்பீர்கள். அவைகள் விளையாடுவதைப் பார்ப்பதே ஒரு தனி இன்பம். அவை விளையாட்டின் மூலமாகவே வாழ்க்கைக்கு அவசியமான பயிற்சிகளைப் பெறுகின்றன. மனிதக் குழந்தைகளும் அப்படித்தான். விளையாட்டின் மூலம் அவைகளுக்குக் கிடைக்கும் அனுபவம் பெரிதும் பயன்படுகிறது. உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் விளையாட்டு உதவுகின்றது. மற்றவர்களோடு சேர்ந்து பழகுவதிலும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று குழந்தை விளையாட்டின் மூலம் கற்றுக்கொள்கிறது. தனது இன்பம் ஒன்றை மட்டுமே எப்பொழுதும் எண்ணிக் கொண்டிருக்கக்கூடாது என்றும் குழந்தை அறிந்து கொள்கிறது. கூட விளையாடும் மற்றக் குழந்தைகளின் இன்பத்தையும், வசதியையும் கவனிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது முக்கியமான படிப்பினை.
பட்டணங்களிலே குழந்தைகளின் விளையாட்டு ஒரு வகையாக இருக்கும். கிராமங்களிலே வேறுவகையான விளையாட்டுக்களைப் பார்க்கலாம். பட்டணத்துக்கும் கிராமத்துக்கும் பொதுவான விளையாட்டுக்களும் உண்டு.
பிஸ்ஸாம் பறத்தல் என்ற ஒரு விளையாட்டு உங்களுக்குத் தெரியுமா? இரண்டு பெண்குழந்தைகள் எதிர் எதிராக நின்று ஒருத்தியின் வலக்கையை மற்ருெருத்தி இடக்கையாலும், இடக்கையை வலக்கையாலும் மாற்றி மாற்றிப் பிடித்துக் கொள்வார்கள். கால்களை ஒன்றாகச் சேர்த்து வைத்துக்கொண்டு பாட்டுப் பாடிக்கொண்டே வேகமாகச் சுழன்று சுழன்று வருவார்கள். பிஸ்ஸாலே பிஸ், பிஸ்ஸாலே பிஸ் என்று பாட்டின் முடிவிலே பலதடவை வரும். அப் பொழுது சுழலும் வேகமும் அதிகரிக்கும். இப்படிப் பிஸ்ஸாலே பிஸ் என்று கூறுவதைக் கொண்டே அந்த விளையாட்டுக்குப் பிஸ்ஸாம் பறத்தல் என்ற பெயர் வந்திருக்க வேண்டும்.
இந்த விளையாட்டின்போது கிராமத்திலே பாடும் ஒரு பாட்டை இப்போது பார்க்கலாம்.
சுக்குச் சுக்கு
வெங்கக் கல்லு
பொடி நுணுக்கி
சுகமான பட்டுடுத்து
முகம் மினுக்கி தாயும்
தகப்பனும் கையேந்தித்
தாமரைக் குளத்திலே நீராட
வெள்ளி மலையிலே தீயெரிய
வெண்கலப் பாத்திரம் பொங்கிவர
சூட்டடுப்பிலே கத்தரிக்காய்
சுப்பையன் பெண்டாட்டி. ராமக்காள்
கொட்டுங்கோ முழக்குங்கோ
கோணைக் கொம்பை ஊதுங்கோ
பிஸ்ஸாலே பிஸ்
பிஸ்ஸாலே பிஸ்
பிஸ்ஸாம் பறத்தல் உடலுக்கு நல்ல பயிற்சியைக் கொடுக்கும் விளையாட்டு. தும்பி பறத்தலும் இதுபோன்றது தான்.
களைத்துப் போன சமயத்திலே குழந்தைகள் வட்டமாக உட்கார்ந்துகொண்டு பலவகையான பாட்டுக்களைப் பாடுவார்கள். நிலா வெளிச்சம் இருக்கும்போது அவர்களுக்கு உற்சாகம் அதிகம். பெரிய வீட்டு வாசலிலே கூடிவிடுவார்கள். வயது முதிர்ந்தவர்களெல்லோரும் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்திருக்க இவர்களுடைய ஆட்டமும் பாட்டமும் இரவிலே நெடுநேரம் நடைபெறும்.
குழந்தைகள் சேர்ந்து உட்கார்ந்து பாடும் பாடல்களில் ஒன்று.
காக்கையின் குஞ்சுக்குக் கலியாணம். அதைப்பற்றிக் குழந்தைகள் பாடுகிறார்கள்.
காக்காக் குஞ்சுக்குக் கலியாணமாம்
காசுக் கரைப்படி மஞ்சளாம்
துட்டுக் கொடுத்தால் பூசலாம்
துரையைக் கண்டால் டேக்காம்
கொட்டிப் போட்டால் சிவக்குமாம்
கோயிலுக்குப் போனல் மணக்குமாம்
எல்லாப் பெண்களும் வாருங்கோ
அரமணைத் திண்ணையில் சேருங்கோ
பாட்டிருந்தால் பாடுங்கோ
பணமிருந்தால் போடுங்கோ
இது காக்கைக் குஞ்சைப்பற்றிய நாடோடிப் பாடல். கரிக்குருவியைப் பற்றிப் பாடுகிற மற்ருெரு பாடல் உண்டு. அந்தக் குருவியோடு பேசுகிறமாதிரி பாட்டு.
கரிக்குருவி கரிக்குருவி எங்கெங்கே போனாய்?
காராள தேசத்துக்குக் கடவடைக்கப் போனேன்.
என்ன நெல்லுக் கொண்டு வந்தாய்
எனக்குச் சொல்ல வேணும்.
சம்பா நெல்லுக் கொண்டு வந்தேன்
சாதம் நல்லா வேகும்
சம்பா நெல்லுப் போட்டு வைக்கக்
கும்பக் குடம் வேணும்
கும்பக் குடத்துக்குக் காவலிருக்கக்
குழந்தைப் பையன் வேணும்
குழந்தைப் பையனுக்குப் பால் கறக்க
வறட்டெருமை வேணும்
வறட்டெருமைக்குப் பில்லுப் போடப்
பள்ளப் பையன் வேணும்
பள்ளப் பையனுக்குப் படியளக்க
ராஜா வள்ளம் வேணும்
ராஜா வள்ளம் தூக்கியுளக்கப் பூனக்குட்டி வேனும்
ராஜா முத்திரை போட்ட வள்ளத்திலே எருமை மேய்க்கிற பையனுக்குப் படியளக்கப் போகிருர்களாம். ஆனால், அந்த ராஜா வள்ளத்தைத் துளக்கி அளப்பதற்கு ஒரு பூனைக் குட்டி வேண்டுமாம்!