உள்ளடக்கத்துக்குச் செல்

காற்றில் வந்த கவிதை/ராட்டைப் பாட்டு

விக்கிமூலம் இலிருந்து

ராட்டைப் பாட்டு

ராட்டையிலே நூல் நூற்கும் பழக்கம் வெகு காலமாக இந்நாட்டில் இருக்கிறது. இடையிலே இந்தப் பழக்கம் விட்டுப் போயிற்று. மறுபடியும் ராட்டைக்குப் புத்துயிர் கொடுத்தவர் காந்திமகான்.

ஆனால், ராட்டைப் பாட்டு என்ற நாடோடிப் பாடல் இப்பொழுது ஏற்பட்டதல்ல. இது பழங்காலத்திலிருந்து கிராமங்களிலே ஒலிக்கும் ஒரு நகைச்சுவைப் பாட்டு.

ஒருத்தி ராட்டையிலே நூல் நூற்றாளாம். அந்த நூலைச் சந்தையிலே கொண்டுபோய் விற்றாளாம்.

நூலை விற்ற காசைக் கொண்டு அவள் பலவகையான பண்டங்கள் வாங்குகிறாள். அடடா, அவளுக்குக் கிடைத்த காசில் என்னென்ன வாங்க முடிகிறது!

பாட்டைப் பார்ப்போம். முதலில் அவள் நூல் நூற்ற பெருமையைக் கேட்கலாம்.

ராட்டை யென்றால் ராட்டை
கருங்காலி ராட்டை
ஒரு பூட்டு நூலைத்தான்
ஒடி ஒடி நூற்றாளாம்
ஒடி ஒடி தூற்றாளாம்
ஒன்பது பலம் நூற்றாளாம்
பாடிப் பாடி நூற்றாளாம்
பத்துப் பலம் நூற்றாளாம்
வேளை வேளை நூற்றாளாம்
விசுக் கூடையில் போட்டாளாம்.

விசுக் கூடையில் நூலைப் போட்டாயிற்று. இனிச் சந்தைக்குப் போக வேண்டியதுதான். தனியாகச் சந்தைக்குப் போக முடியுமா? துணை வேண்டாமா? அதற்காக அவள் மாமியையும், மதனியையும் மற்றவர்களையும் கூப்பிடுகிறாள். சந்தைக்கு வரவில்லையா என்று அவர்களைக் கேட்கிறாள்.


மாமி வல்லையா சந்தைக்கு
மதனி வல்லையா சந்தைக்கு
சின்னக்கா வல்லையா சந்தைக்கு
பொன்னக்கா வல்லையா சந்தைக்கு
நங்கை வல்லையா சந்தைக்கு
கொழுந்தி வல்லையா சந்தைக்கு


கடைசியிலே அவள் சந்தைக்குப் போகிறாள். ஆனால் ஒரே சந்தையில் அவளால் நூலை விற்க முடியவில்லை. எத்தனையோ சந்தைகளில் நூலை விற்க முயற்சி செய்கிறாள்.

வெள்ளிக்கிழமைச் சந்தைக்குப் போய்
வேண்டாமென்றார் எந்நூலை
புதன்கிழமைச் சந்தைக்குப் போயும்
போகவில்லை எந்நூலும்
திங்கட்கிழமைச் சந்தைக்குப் போய்
சீந்துவாரில்லை எந்நூலை
ஞாயிற்றுக்கிழமைச் சந்தைக்குப் போய்
நாயுங்கூட கேட்கவில்லை.


இப்படிப் பல சந்தைகளிலே நூலை விற்க முடியாமல் கடைசியிலே அவள் ஆலத்துார் சந்தைக்குப் போகிறாள். ஆலத்துரர் அவளுடைய தந்தை வாழும் ஊர். அந்தச் சந்தையிலே பழக்கப்பட்ட ஒருவன் அவள் நூலை வாங்கிக் கொள்கிறான். அவள் காசைப் பெற்றுக்கொண்டு கடைக்குப் போகிறாள்.


ஆலத்தூருச் சந்தையாம்
அப்பனுாருச் சந்தையாம்
அம்பனூருச் சந்தையிலே
அறிந்த கைக்கோளன் கண்டானாம்
அறிந்த கைக்கோளன் கண்டுமே
அஞ்சரைக் காசுக்கு வாங்கினான்
நூலையெல்லாம் போட்டுவிட்டு
காசைத்தானும் வாங்கிக்கிட்டு
காசைத்தானும் வாங்கியதும்
கடைக்குத்தானும் போனாளாம்

எந்தக் கடைக்கு முதலில் போகிறாள்? பெண்களுக்குப் பூவென்றால் மிகுந்த விருப்பமல்லவா? அதனால் முதலில் பூக் கடைக்குப் போகிறாள். என்னென்ன பூ வாங்குகிறாளென்று பாட்டிலே பாருங்கள்.

என்ன கடைக்குப் போனாளாம்
பூக்கடைக்குப் போனாளாம்
வாடாமல்லிகை ஒருகாசு
வட்டமல்லிகை ஒருகாசு
செண்டுமல்லிகை ஒருகாசு
செவந்திப்பூவும் ஒருகாசு
வாசமல்லிகை ஒருகாசு
மருக்கொழுந்தும் ஒருகாசு
எல்லாங்கூடிக் கணக்குப்பார்க்க
ஒருகாசு மிச்சமிருக்குது

பூவெல்லாம் வாங்கிய பிறகும் ஒரு காசு மீதியிருந்ததாம்! அதை எடுத்துக்கொண்டு அவள் பாத்திரக் கடைக்குப் போகிறாள். அங்கே அவள் வாங்கிய பாத்திரங்களுக்குக் கணக்கே இல்லை. இவ்வளவும் அந்த ஒரு காசில் நடக்கிறது! அது மட்டுமல்ல. எல்லாப் பாத்திரங்களும் வாங்கிய பிறகும் அரைக் காசு மீதியிருக்கிறது! இப்படிப்பட்ட காசு நமக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!


ஒருகாசைக் கொண்டுக்கிட்டு
கன்னாங்கடைக்குப் போனாளாம்
அண்டாப் பானை எடுத்தாளாம்
அடுக்குப் பாத்திரம் எடுத்தாளாம்
குண்டாச்சட்டி எடுத்தாளாம்
குத்துவிளக்கும் எடுத்தாளாம்
சின்னவட்டில் எடுத்தாளாம்
சிப்பிலித்தட்டம் எடுத்தாளாம்
எல்லாங் கூட்டிக் கணக்குப்பார்க்க
அரைக்காசு மிச்ச மிருக்குது



அந்த அரைக் காசை எடுத்துக்கொண்டு அவள் ஆற்றங் கரைக்குப் போகிறாள். எதற்காக? மீன் வாங்க. வகை வ்கையான மீனெல்லாம் வாங்கிக்கொள்கிறாள்.

அரைக்காசைக் கொண்டுக்கிட்டு
ஆற்றங் கரைக்குப் போனளாம்
பேயாமழையும் பெய்ததாம்
பெரியவெள்ளம் வந்ததாம்
ஏருமீனும் ஏறிச்சாம்
அயிரை மீனும் வந்ததாம்
அயிரைமீனு அரைக்காசு
ஆறாமீனு அரைக்காசு
கெண்டைமீனுக் காக்காசு
கெளுத்திமீனுக் காக்காசு
குச்சுமீனுக் காக்காசு
குரத்திமீனுக் காக்காசு

இப்படி மீனெல்லாம் வாங்கிக்கொண்டாள். வீட்டுக்குப் புறப்பட்டாள். வழியிலே போகிறவர்களேயெல்லாம் தன் கணவனைப்பற்றி விசாரிக்கிறாள். தன் கணவனைப்பற்றி விளக்கமும் கொடுக்கிறாள்.


மீனெல்லாம் வாங்கிக்கிட்டு
வீட்டுக்குத்தான் புறப்பட்டாள்
முன்னால்போகும் பெண்டுகளே
பின்னால் தங்கும் பெண்டுகளே
என்புருசன் வல்லரக்கன்
எதிரேவரக் கண்டீரோ

அவிழ்ந்தவேட்டி கட்டாமல்
திறந்தவாயை மூடாமல்
நிழலைக்கண்டால் நிற்காமல்
தண்ணிர்கண்டால் குடியாமல்
மனுசர்கண்டால் பேசாமல்
மாட்டைக்கண்டால் விலகாமல்
என்புருசன் வல்லரக்கன்
எதிரேவரக் கண்டீரோ


கணவனைப்பற்றி விசாரித்துக்கொண்டே வருகிறாள். யாரும் அவனைப் பார்த்ததாகக் கூறவில்லை. அதனால் அவள் வேகமாக வீட்டுக்கு வருகிறாள். வந்ததும் அரிவாள் மனையை எடுத்து வைத்து மீனையெல்லாம் கண்டங் கண்டமாக அரிந்து போடுகிறாள். பிறகு அடுப்பிலே வைத்து அந்தக் கண்டங்களைப் பக்குவம் செய்கிறாள்.


வேகமாக வந்தாளாம்
வீட்டுக்குவந்து சேர்ந்தாளாம்
அரிவாள்மனையை எடுத்தாளாம்
அரிந்தரிந்து போட்டாளாம்
அரிந்தரிந்து போட்டாளாம்
ஐம்பது கண்டம் போட்டாளாம்
நாணிக்கோணிப் பார்த்தாளாம்
நாற்பதுகண்டம் போட்டாளாம்
சாற்றையெல்லாம் கூட்டிக்கிட்டு
அடுப்பிலேதான் வைத்தாளாம்
தீயைநல்லா எரித்தாளாம்
சினுக்குத்தாளம் போட்டாளாம்

பெரியசட்டியில் ஊற்றிக்கிட்டுப்
பெரியதாளம் போட்டாளாம்
சாற்றையெல்லாம் கண்டாளாம்
அகப்பையைத்தான் எடுத்தாளாம்

இன்னும் கணவன் வரவில்லை. அவளுக்கு அவசரம். நாக்கிலே நீர் ஊறுகிறது. அதனால் வீட்டுக் கதவைத் தாள் போட்டுவிட்டுத் தின்ன ஆரம்பித்தாள். மீன் வெந்து விட்டதா என்று பார்ப்பதற்காகக் காரணம் கற்பித்துக் கொண்டு ஒரு கண்டம் தின்றாள். பக்குவம் சரியா இல்லையா என்று ஒரு கண்டம். உப்பிருக்கிறதா என்று பார்க்க ஒன்று. இப்படியாக மீன் எல்லாவற்றையும் அவளே தின்று விடுகிறாள். பிறகு பக்கத்து வீட்டுப் பெண்களோடு வம்பளக்கப் போகிறாள்.

வெந்ததான்னு ஒருகண்டம்
வேகலையென்று ஒருகண்டம்
ஆச்சுதான்னு ஒருகண்டம்
ஆகலையென்று ஒருகண்டம்
உப்புப்பார்க்க ஒருகண்டம்
உரப்புப்பார்க்க ஒருகண்டம்
எல்லாக்கண்டமும் தின்றாளாம்
எதிர்வீட்டுக்குப் போனாளாம்
பக்கத்துவீடு போனாளாம்
பழமைபேசப் போனாளாம்


இந்தச் சமயத்திலே கணவன் வீட்டுக்கு வருகிறான். வந்தவன் சோற்றுச் சட்டியைப் பார்க்கிறான். மீனே அதில் இல்லை. அவனுக்குக் கோபம் வந்துவிடுகிறது. பெண்டாட்டி யைத் தேடி வந்து அவளே அடிக்கிறான். பக்கத்து வீட்டுக்காரர் சமாதானம் செய்கிறார்கள். இதற்குள்ளே இரவு வெகுநேரம் ஆகிவிடுகிறது. எல்லோருக்கும் உறக்கமும் வந்துவிடுகிறது. அதனல் படுத்துத் தூங்கச் சென்று விடுகிறார்கள்.

புருஷன்வந்து பார்த்தானாம்
சாற்றுச்சட்டியைப் பார்த்தானாம்
சாற்றுச்சட்டியைப் பார்த்தபோது
சாறுமட்டும் இருந்ததாம்
கண்டம்ஒன்றும் இல்லையாம்
கடுங்கோபம் அங்கேவந்ததாம்
கோபமாகப் போனானாம்
குடுமியைப்பிடித்து இழுத்தாளும்
நாலுபேரும் பார்க்கப்பார்க்க
நாலுகுத்து வைத்தானாம்
பக்கத்தார்கள் குறுக்கே வந்து
பஞ்சாயத்தும் செய்தார்கள்
பஞ்சாயத்து முடிந்ததும்
படுத்துறங்கச் சென்றார்கள்.

ராட்டைப் பாட்டு நீளமான ஒரு நாடோடிப் பாடல் வேடிக்கையானது. இதைப் பாடிக்கொண்டே ஒயில் கும்மி அடிப்பதுண்டு.