உள்ளடக்கத்துக்குச் செல்

காற்றில் வந்த கவிதை/மனோரஞ்சிதம் பாலா

விக்கிமூலம் இலிருந்து

மனோரஞ்சிதம் பாலா



ங்கமே தங்கம் என்று முடிகின்ற நாடோடிப் பாடலைக் கேட்டிருக்கிறோம். ஏதில்லலோ லேலோ என்றும், ஏலேலோ ஐலசா என்றும் முடிகின்ற பாடல்களையும் பார்த்தோம்.

மனோரஞ்சிதம் பாலா என்று முடிகின்ற பாடலும் உண்டு. கவர்ச்சியான இசையுடன் பாடுகின்றபோது இந்தப் பாடல்கள் நம் உள்ளத்தைக் கவர்கின்றன.

வயலிலே நாற்று நடவு நட்டுவிட்டு வீட்டை நோக்கித் திரும்புகிறார்கள் கூலிக்காரர்கள். நாளெல்லாம் வேலை செய்த அலுப்பு. ஆனால், அதை நினைத்துக்கொண்டிருந்தால் முடியுமா? ஊரும் பக்கத்தில் இல்லை. இரண்டு கல் தொலைவு நடக்கவேணும். அங்கே போனதும் அடுப்புப் பற்ற வைக்க வேணும். சோறு சமைக்க வேணும். பசியோடு வந்திருக்கும் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் சோறு போடணும். ஆகையால் நடவு நட்டுத் திரும்பும் பெண்கள் சலிப்பைப் பாராமல் வேகமாக நடக்க விரும்புகிறார்கள்.

வயலிலே வரப்பு வெட்டிச் சீர்திருத்த வந்திருந்த ஆண்கள் சிலரும் இந்தப் பெண்கள் கூட்டத்தோடு வீடு திரும்புகிறார்கள். அவர்களில் ஒருத்தன் வேகமாகக் கால் எடுத்து வைக்கக் கூடியவன். அவன் முன்னல் நடக்கிறான். சும்மா நடக்கவில்லை. பாடிக்கொண்டே நடக்கிறான். பாட்டைக் கேட்க வேண்டும் என்ற ஆசையிலே பெண்களும் வேகமாகக் காலெடுத்து வைக்கிறார்கள். சலிப்புப் பறந்து போகிறது. தொலைவும் நெருங்கிவிடுகிறது.

மனேரஞ்சிதம் பாலா என்ற இந்தப் பாடல் செய்கிற அற்புதம் அது. பாடுகிறவன் நடந்துதான் போகிறான். ஆனால், அவன் கோச்சிலே ஒய்யாரமாகப் போவதாகக் கற்பனை செய்துகொண்டு பாடுகிறான்!


நாடு செழித்திடவே மனோரஞ்சிதம் பாலா
நல்லமழை பெய்யவேனும் மனோரஞ்சிதம் பாலா
தேசம் செழித்திடவே மனோரஞ்சிதம் பாலா
செல்ல மழைபெய்யவேணும் மனோரஞ்சிதம் பாலா
கோச்சுமேலே கோச்சுவரும் மனோரஞ்சிதம் பாலா
கோலக்கோச்சு முன்னேவரும் மனோரஞ்சிதம் பாலா
நானும்வரும் கோச்சிலேதான் மனோரஞ்சிதம் பாலா
நாகசுரம் ஊதிவரும் மனோரஞ்சிதம் பாலா
முட்டாக்குப் போட்டவண்டி மனேரஞ்சிதம் பாலா
முகப்புவச்சு காந்தவண்டி மனோரஞ்சிதம் பாலா
காந்தவண்டி போறபோக்கு மனோரஞ்சிதம் பாலா
கண்ணிரண்டும் சோருதடி மனோரஞ்சிதம் பாலா

ஒரே பாட்டிலே வழி தீர்ந்துவிடுமா? இப்படிப் பல பாட்டுக்களைப் பாடுவார்கள். பாட்டுக்கு மத்தியிலே வேடிக்கையாகப் பேச்சும் வரும். ஊர் வம்பும் வரும். சிரிப்பொலியும். கேலியும் கலந்து வரும். கதை சொல்லிக் கொண்டே நடப்பதும் உண்டு,

 ஆனால், பாட்டைப்போல மற்றவையெல்லாம் அத்தனை சுவையாக இரா. மறுபடியும் ஏதாவது பாட்டுப் பாடும்படி கேட்பார்கள்.

இந்தத் தடவை அத்தை மகனாகப் பாட்டுக்காரன் வருகிறான். அவன் கோட்டைக்குப் போகிறான்: மதுரைக்குப் போகிறான்; அவனிடத்திலே ஒரு பெண் உரிமையோடு தனக்கு வேண்டியவற்றை வாங்கி வரும்படி சொல்லுகிறாளாம்.


கோட்டைக்குப் போறவரே-அத்தை மகனே
கொண்டைச் சிப்பு வாங்கிவாங்கோ--அத்தை மகனே
வாங்காமல் வந்துவிட்டால்-அத்தை மகனே
மனசெனக்குக் குளிராது-அத்தை மகனே
மரதைக்குப் போறவரே-அத்தை மகனே
மல்லிகைப்பூ வாங்கிவாங்கோ-அத்தை மகனே
வாங்காமல் வந்துவிட்டால்-அத்தை மகனே
மனசெனக்குக் குளிராது-அத்தை மகனே
பட்டணமே போறவரே-அத்தை மகனே
பட்டுச்சேலை வாங்கி வாங்கோ-அத்தை மகனே
வாங்காமல் வந்துவிட்டால்-அத்தை மகனே
மனசெனக்குக் குளிராது-அத்தை மகனே