காற்றில் வந்த கவிதை/மலைமேலே மஞ்சு
அஞ்சாங்கல் என்ற ஒரு விளையாட்டு உங்களுக்குத் தெரியுமா? ஐந்து சிறு கற்களை வைத்துக்கொண்டு பெண்கள் விளையாடும் விளையாட்டு அது.
ஒரு கல்லை மேலே வீசிவிட்டு மற்ற நான்கு கற்களையும் தரையிலே போடுவார்கள். மேலே வீசிய கல்லைக் கீழே விழாமற் பிடிக்க வேண்டும். பிறகு அந்தக் கல்லே மறுபடியும் மேலே வீசிவிட்டுக் கீழுள்ள கற்களை ஒவ்வொன்ருக எடுத்துக் கொண்டே வீசிய கல்லையும் பிடிக்க வேண்டும்.
பிறகு இரண்டிரண்டாக, மூன்றும் ஒன்றுமாக, நான்கும் சேர்த்து இவ்வாறு பலவகைகளில் கற்களை எடுத்து அஞ்சாங்கல் ஆட்டம் தொடரும். வீசிய கல்லைப் பிடிப் பதிலோ, கீழே உள்ளவற்றை வரிசைப்படி எடுப்பதிலோ தவறு நேர்ந்தால் ஆட்டம் போய்விடும். பிறகு வேறொருத்தி ஆடுவாள்.
இப்படி ஆடும்போது நிலத்தைக் கையால் தட்டுவதும் நெஞ்சைத் தட்டுவதுமாகப் பலவித ஒசைகள் எழுப்பு வார்கள். சில சமயங்களிலே ஆட்டத்தோடு பாட்டும் வரும். பாடிக்கொண்டே அஞ்சாங்கல் ஆடுவார்கள். அப்பொழுது பாடும் பாட்டில் ஒன்றை இப்பொழுது பார்க்கலாம்.
- மலைமேலே மஞ்சு
- மாரியம்மா குண்டம்
- சின்னப்பிள்ளை தண்டம்
- சிறுமணிக் கொப்பு
- அஞ்சுபிள்ளைத் தாய்ச்சி
- கஞ்சிக்கு மடியருள்
- சம்பா நெல்லுக் காய்ந்து கிடக்குது
- கொட்டிக் கொடம்மா கொட்டிக்கொடு.
ஒடி ஒடித் தொடுகின்ற விளையாட்டு ஒன்றும் உண்டு. ஒரு பாட்டை ஒரே மூச்சில் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லிக்கொண்டே ஓடி மற்றவர்களில் எத்தனை பேரைத் தொட முடியுமோ அத்தனை பேரையும் தொட வேண்டும். மூச்சை நிறுத்திவிட்டாலோ அல்ல்து மறுபடியும் மூச்சை உள்ளே இழுக்க ஆரம்பித்தாலோ உடனே நின்றுவிட வேண்டும்.
இப்படி ஒரே மூச்சில் தொடும் விளையாட்டின்போது பாடும் பாட்டுக்கள் சிலவற்றைப் பார்க்கலாம். மூச்சை நன்முக உள்ளே இழுத்துக்கொண்டு பிறகு பாட்டைத் தொடங்குவார்கள். பாட்டின் கடைசியில் வரும் ஒரு சொல்லையோ சொல் தொடரையோ அந்த மூச்சிருக்கும் வரை திருப்பித் திருப்பிக் கூறிக்கொண்டு மற்றவர்களைத் தொட முயல்வார்கள். பாட்டிலே பொருள் இருக்க வேண்டுமென்பதில்லை.
- அத்திப் பட்டை
- துத்திப் பட்டை
மாம்பட்டை
மரப்பட்டை
மக்களாடும்
தென்னம்பட்டை
அத்தி கொண்டு
பூசைகொண்டு
கவ்வாளத்தான்
கவுட்டி
காலு மேலே
மண் வெட்டி...... மண் வெட்டி
மண்வெட்டி, மண்வெட்டி என்று மூச்சிழுக்கும்வரை சொல்லிக்கொண்டே தொட முயல்வார்கள்.
அடியடி வாழை
ஆலாங் குருத்து
பக்கக் கன்று
படி வாசக்கல்
படிவாசக்கல், படிவாசக்கல் என்று கூறும்போது பாட்டில் பொருள் இல்லையே என்று தோன்றலாம். விளையாட்டுக்கு இந்தப் பாடல் உதவுகிறது. அதற்காகத்தானே இந்தப் பாடல்? பொருளைப்பற்றி விளையாடுகின்ற யாரும் கவலைப்படுகிறதில்லை.
இன்னும் ஒரு பாடலைப் பார்க்கலாம்.
- புறாப் புறா முட்டையிட
- புறாச் சங்கிலி கட்டியிட
நானடிக்க நீ யடிக்க
ரத்தங் கட்டிச் சாகடிக்க
சாகடிக்க, சாகடிக்க என்று பல முறை கூறிக்கொண்டு ஒடித் தொட முயலும்போது கொஞ்சம் பயங்கரமாகவே தோன்றும். ஆனால், இந்த விளையாட்டில் அச்சத்திற்கு இடமொன்றுமில்லை.
நெல்லு விளையும் நீலகிரி
நெய்க்கும்பம் சாயும் கள்ளிப்பட்டி
பாக்கு விளையும் பாலக்காடு
பஞ்சம் தெளியும் மஞ்ச வலசு.
மஞ்ச வலசு என்பது ஒர் ஊரின் பெயர். இந்தப் பெயரை விளையாடுபவர்கள் தங்கள் விருப்பம் போல மாற்றிக்கொள்ளுவார்கள். ஒவ்வொருவருக்கும் அவருடைய பிறந்த ஊர்தானே முக்கியமானது? அதனால் நானும் இந்தப் பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறேன்.