உள்ளடக்கத்துக்குச் செல்

காற்றில் வந்த கவிதை/ஒன்று பத்து நூறு

விக்கிமூலம் இலிருந்து


ஒன்று பத்து நூறு


கிராமத்திலே சிறுவர்கள் விளையாடும்போது, "நான் ஆயிரம் எண்ணுகிறேன்; அதற்குள்ளே உன்னல் பாட்டி யைத் தொட்டுவிட்டு வர முடியுமா?' என்று ஒருவன் கேட்பான். விஷயம் தெரியாதவன், "ஒ என்னல் முடியும்” என்று பந்தயம் போடுவான்; ஒடவும் செய்வான். முதலில் இந்த ஒட்டப் பந்தயத்தைப்பற்றிப் பேசியவன், 'அடுப்பு, துடுப்பு, ஆயிரம்" என்று முடித்துவிடுவான். திண்ணையிலே உட்கார்ந்திருக்கும் பாட்டியைத் தொட்டுவிட்டு வர ஒடியவன் பாதி தூரம்கூடச் சென்றிருக்கமாட்டான்; அதற்குள்ளே ஆயிரம் என்று சொல்லி முடிந்துவிடும்.

எல்லோரும் சிரிப்பார்கள். ஒடத் தொடங்கியவன் மட்டும் இவ்வாறு ஆயிரம் எண்ணுவதை ஒப்புக்கொள்ள மாட்டான். மற்றவர்கள் இப்படி எண்ணுவது சரி என்று வேடிக்கையாகச் சாதிப்பார்கள். இது ஒரு விளையாட்டு; பந்தயத்தை ஒப்புக்கொண்டு ஒட முயல்கின்றவனே ஏமாற்றுகிற விளையாட்டு.


ஆளுல் ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசையாக உண்மையிலேயே எண்ணிப் பாடி விளையாடுகிற விளையாட்டுக்களும் உண்டு. கும்மிப் பாட்டு நல்ல உதாரணம்.

கும்மிப் பாடல்கள் ஆயிரக்கணக்கிலே இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அவற்றிலே பல வகைகளும் உண்டு. ஒரு சில கும்மிப் பாடல்கள் இப்படிக் கணக்கெண்ணும் வகையைச் சேர்ந்தவை: பாடுவதற்கும் எளிமையானவை.

ஒரு கல்லை எடுத்து வீசினர்களாம். அது ஆகாயத்தில் கொஞ்ச தூரம் சென்று பிறகு வேகம் குறைந்து சோர்வுற்று நிலத்தில் விழுகிறது. ஓர் ஆயிரம் கிளிகள் அந்தக் கல் வீச்சால் எழுகின்றன; அந்தரத்தில் நின்று பாடுகின்றன. அந்தக் கிளிகள் ஏகாந்தம் பேசுகின்றனவாம்.

பிறகு இரண்டு கல் வீசுகிருர்கள். அப்பொழுது இரண்டாயிரம் கிளிகள் எழுகின்றன. ஆகாயத்தில் நின்று ஏகாந்தம் பேசுகின்றன.

இப்படியே மூன்று கல் வீசும்போதும் நடக்கிறது. நான்கு கல், ஐந்து கல் என்று பாட்டு வரிசையாகத் தொடர்கிறது. இந்தப் பாடலைப் பாடிக்கொண்டு எவ்வளவு நேரம் வேண்டுமானலும் கும்மியடிக்கலாமல்லவா? பாட்டைப் பார்ப்போம்:

ஒரு கல்லு வீசவே ஒரு கல்லும் சோரவே
ஒண்ணு லாயிரம் கிளிகள் வந்து-ஆடவே கிளி பாடவே
ஆடவே கிளி பாடவே அம்பலத்தில் நிற்கவே
அம்பலத்தில் நிற்கும்.கிளி ஆகாயம் பறக்கவே
ஆகாயம் பறக்கும் கிளி ஏகாந்தம் பேசவே
ரண்டு கல்லு வீசவே ரண்டு கல்லும் சோரவே
ரண்டாலாயிரம் கிளிகள் வந்து-ஆடவே கிளிபாடவே

ஆடவே கிளி பாடவே அம்பலத்தில் நிற்கவே
அம்பலத்தில் நிற்கும்.கிளி ஆகாயம் பறக்கவே

ஆகாயம் பறக்கும் கிளி ஏகாந்தம் பேசவே
மூன்று கல்லு வீசவே மூன்று கல்லும் சோரவே
மூன்ரு லாயிரம் கிளிகள் வந்து-ஆடவே கிளி பாடவே
ஆடவே கிளி பாடவே அம்பலத்தில் நிற்கவே
அம்பலத்தில் நிற்கும் கிளி ஆகாயம் பறக்கவே
ஆகாயம் பறக்கும்கிளி ஏகாந்தம் பேசவே

இப்படியே பாட்டுத் தொடருகின்றது. பாட்டு ஒரே மாதிரியாக இருந்தாலும் கும்மியடிக்கிற வேகம் அதிகரித்துக் கொண்டே போகும். கிளிகளைப்போல் பறந்து பறந்து கும்மியடிப்பார்கள்.

பனைமரத்திலே ஏறி ஒலை வெட்டுவதும், பனை மட்டையிலிருந்து நார் உரிப்பதும் சுலபமான வேலைகள் அல்ல. அப்படிப்பட்ட வேலை செய்து பலர் வாழ்க்கை நடத்துகிறார்கள். அவர்களைப்பற்றிய கும்மிப் பாட்டும் உண்டு. வேலை செய்து விட்டு இரவிலே நேரங்கழித்து ஒருவன் வீட்டிற்கு வருகிருன். வந்து கதவைத் திறக்கும்படி மனேவியைக் கூப்பிடுகிருன். நேரங்கழித்து வந்தவனோடு அவள் ஊடிக் கதவைத் திறக்கத் தாமதிக்கிருள். இந்தப் பாடலிலும் ஒன்று, இரண்டு, மூன்று என்ற கணக்கு வருகிறது.

ஒன்னும்பனை ஏறுபனை
ஒலைவெட்டி நார் உரிச்சு
நானும் வந்தேன் பொன்னச்சி
நடந்தலுத்தேன் பொன்னச்சி

பொன்னச்சி கதவுதிற
பொன்மயிலே வீடுதிற -
நானெப்படி நான் திறப்பேன்
நடுச்சாமம் வந்தாலே

ரண்டாம்பனை ஏறுபனை
ஒலைவெட்டி நார் உரிச்சு
நானும் வந்தேன் பொன்னச்சி
நடந்தலுத்தேன் பொன்னச்சி
பொன்னச்சி கதவு திற
பொன்மயிலே வீடுதிற
நானெப்படி நான் திறப்பேன்
நடுச்சாமம் வந்தாலே....

மூளும்பனை ஏறுபனை
ஒலைவெட்டி நார் உரிச்சு
நானும் வந்தேன் பொன்னச்சி
நடந்தலுத்தேன் பொன்னச்சி
பொன்னச்சி கதவு திற
பொன்மயிலே வீடுதிற...
நானெப்படி நான் திறப்பேன்
நடுச்சாமம் வந்தாலே...

இந்தக் கணக்கு ஒரு கப்பல் பாட்டிலும் வருகிறது. கிளியாக இருந்தால் என்ன, கப்பலாக இருந்தால் என்ன? பாட்டின் இசையும் அதன் கற்பனையுந்தான் முக்கியம்.

8

ஒரு கப்பல் ஓடிவர-ஐலலோ
      ஓடிவர-ஐலலோ
      ஓடிவர-சொல்லம்மா சொல்லு

ஒத்தக் கப்பல்-ஏலேலோ
      துறைமறிக்க-ஐலலோ
      துறைமறிக்க-சொல்லம்மா சொல்லு

ரண்டு கப்பல் ஓடிவர-ஐலலோ
      ஓடிவர-ஐலலோ
      ஒடிவர-சொல்லம்மா சொல்லு

ரட்டைக் கப்பல்-ஏலேலோ
      துறைமறிக்க-ஐலலோ
      துறைமறிக்க-சொல்லம்மா சொல்லு

மூன்று கப்பல் ஓடிவர-ஐலலோ
      ஒடிவர-ஐலலோ
      ஒடிவர-சொல்லம்மா சொல்லு

மூன்று கப்பல்-ஏலேலோ
      துறை மறிக்க-ஐலலோ
      துறை மறிக்க-சொல்லம்மா சொல்லு