உள்ளடக்கத்துக்குச் செல்

காற்றில் வந்த கவிதை/பொங்கலோ பொங்கல்

விக்கிமூலம் இலிருந்து


பொங்கலோ பொங்கல்


பொங்கல் என்ருல் முக்கியமாக விவசாயிகளுக்கு ஒரே கொண்டாட்டம். பண்ணையிலே அநேகமாக வேலையெல்லாம் முடிந்துவிடுகிறது. அரும் பாடுபட்டு உழுது விளைத்த தானி யங்களெல்லாம் வீடு வந்து சேர்ந்தன. இனி அத்தனை வேலை இல்லை. மாடுகளுக்கும் ஒய்வு கிடைக்கிறது. உழவனும் கொஞ்சம் இளைப்பாறலாம். தை பிறக்கப் போகிறது. இனிக் கொண்டாட்டம்தானே?

பொங்கலுக்கு வேண்டிய முன்னேற்பாடுகளெல்லாம் ஒரு மாதமாகவே நடைபெற்று வருகின்றன. எந்தப் பட்டி யைப் பார்த்தாலும் புதுமை பொங்குகிறது. எட்டு மைல் பத்து மைல் சென்று உழவர்கள் மூங்கில் வெட்டி வரு கிருர்கள். புதிய பட்டிப் படல்கள் முடைவதும், பழைய படல்களைச் செப்பம் செய்வதும் ஒவ்வொரு பண்ணையிலும் ஒரு மாதமாகக் காணும் காட்சியாகும். மாடு மேய்க்கும் பையன்கள் புல்லாங்குழல் ஊதித் தங்கள் இசைக்கலையின் ஒத்திகை நடத்துகிருர்கள். பட்டிப் பொங்கலன்று யார் யார் பட்டினி இருந்து விரதம் காத்துப் பட்டி ஆவுடை யாரைத் தொழுது வணங்குவதென்றெல்லாம் வெகு நாட்களுக்கு முன்பே தீர்மானமாகிவிட்டது. பொங்கல் மங்கல நாளை எதிர்பார்த்து எல்லோருடைய உள்ளத்திலும் ஒரே இன்பக் கிளர்ச்சி.

பட்டி ஆவுடையாருக்குப் பொங்கல் வைத்து இரவு எட்டு மணிக்குத் துவரைமார் கொழுந்து விட்டெரியும் வெளிச்சத்திலே பட்டிக்குள்ளே ஆடு மாடுகளின் மேற் பார்வையிலே அவைகள் படுத்துறங்கும் அந்தப் புனித மண்ணிஉலே இலை போட்டுப் பொங்கல விருந்து நடக்கும்.

முதலிலே பட்டி ஆவுடையார்க்குத்தான் விருந்து. அவர்தானே உழவர்களுக்கு உயிர் கொடுப்பவர்? அதனல் அவருக்கு முதல் மரியாதை செய்துவிட்டுத்தான் விருந்துண்பார்கள்.

'கைகழுவு பட்டியாரே கைகழுவு' என்று சொல்லிக் கொண்டே மாட்டுக்காரன் ஒரு செம்பில் தண்ணிர் எடுத்துப் பட்டியைச் சுற்றி ஊற்றிச் செல்வான்.

‘அசனம் பட்டியாரே அசனம்' என்று மற்ருெருவன் கூறிக்கொண்டே அமுது படைப்பான்.

'உண்ணுண்ணு பட்டியாரே, உண்ணுண்ணு' என்று மற்ருெருவன் உபசாரம் செய்வான்.

'வாய் கழுவு பட்டியாரே வாய்கழுவு' என்று கடைசியில் ஒருவன் சொல்லிச் செல்லுவான். இப்படியாகப் பட்டி ஆவுடையாருக்கு முதலில் உபசாரம் செய்துவிட்டுப் பிறகு விருந்து நடக்கும். பட்டி என்ற சொல்லுக்குப் பொருள் சிலருக்கு விளங்காதிருக்கலாம். மூங்கிலால் வேய்ந்த படல்களைச் சதுரமாக வைத்து அதற்குள் ஆடு மாடுகளை அடைப்பார்கள். அதுதான் பட்டி. அன்று இரவு எத்தனையோ விளையாட்டுக்கள்: ஒயில் கும்மி இல்லாத பொங்கல் பொங்கலே அல்ல .

அந்த ஒயில் கும்மிப் பாட்டிலேதான் எத்தனை சுவை! வள்ளி பரண்மீதிருந்து தினைப்புனம் காவல் செய்கிறபோது கிளி கடியும் பாட்டொன்று பாடுகிருள். அந்தப் பாட்டு ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டுப் போகும்படி கூறும் சிலேடைப் பாட்டாக அமைந்திருக்கிறது. பாரத நாடு சுதந்திரமடையாத அந்தக் காலத்தில் பாடியது அப்பாட்டு.

இந்து சகோதரரே
      இங்கிலாந்துப் பட்சிகளே
தந்திரங்கள் செல்லாது போ
      ஆலோலங்கிளிசோ-உங்கள்
மந்திரங்கள் செல்லாது போ
      ஆலோலங்கிளிசோ
வெள்ளை வெள்ளைக் கொக்குகளா
      மிரண்டோடும் பட்சிகளா
தந்திரங்கள் செல்லாது போ
      ஆலோலங்கிளிசோ-உங்கள்
சொந்தவீடு ஏ.கிடுவீர்
      ஆலோலங்கிளிசோ
காடைகவு தாரிகளா
      கரிக்குரிவிப் பேடுகளா
தந்திரங்கள் செல்லாது போ
      ஆலோலங்கிளிசோ-உங்கள்
சொந்த நாடு ஏகிடுவீர்
      ஆலோலங்கிளிசோ

இப்படிப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டே ஒயிலாக ஆடுவார்கள்.

ராட்டைப் பாட்டு என்று ஒரு நாட்டுப் பாடல் இருக்கிறது. அதன் ஹாஸ்யச் சுவையே அலாதியானது. அதைக் கேட்டுச் சிரிக்காதவர்கள் கிடையாது. அந்தப் பாடலுக்கும் ஒயில் ஆட்டம் நடக்கும்.

மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் சிறுமிகளுக்குத் தனிப்பட்ட கொண்டாட்டம். அன்று அவர்கள் மார்கழி மாதமெல்லாம் பிடித்து வைத்த பிள்ளையாரைக் கொண்டு போய் ஆற்றிலே விடுவார்கள். ஊரெல்லாம் அவர்களுடைய கும்மியும் கோலாகலமுமாக இருக்கும்.

அன்று சாதாரணமாக ஆடவர்களெல்லோரும் மாலை கோயிலுக்குச் செல்வது வழக்கம். மாலே கோயிலுக்கு மூங்கிற் குழாயிலே பால் எடுத்துச் சென்று இறைவனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். மாலை கோயிலிலேயும் ஒரு பெரிய திருவிழாத்தான். அங்கேயும் ஒயில் கும்மியாட்டம் பார்க்கலாம். மாட்டுப் பொங்கலன்று பிறந்த காளைக் கன்றுகளே உழவர்கள் கடவுளுக்கென்று யதேச்சையாக விட்டுவிடுவார்கள். அதற்கு ஒரு வேலையும் இல்லை. நன்றாகத்தின்று கொழுத்திருக்கும். அதற்குச் சலகைக் காளே என்று பெயர். அதைக் கொண்டுவந்து மாலை கோயிலிலே ஆட்டம் பழக்குவார்கள். பறை மேளத்திற்குத் தக்கவாறு அது காலெடுத்து வைக்க வேண்டும். பார்க்கிறதற்கே பயத்தை உண்டாக்கும் அக்காளை வாத்தியங்களின் ஒசையாலும், ஜனத்திரளின் புதுமையாலும் மிரண்டு மிரண்டு துள்ளிக் குதிக்கும்.

இப்படியாகப் பொங்கல் என்றால் ஒரே குதுரகலம். பட்டணங்களிலே வசிக்கும் மக்களுக்கு இந்தக் குதுரகலம் புரியாது. கிராமத்திற்குச் சென்று அந்த மக்களோடுக. இருந்து பார்த்தால்தான் பொங்கல் விழாவில் அவர்கள் அனுபவிக்கும் இன்பத்தை அறிந்துகொள்ள முடியும். பட்டி தான் உழவர்களுக்கு உயிர் கொடுப்பது. அதனல் அதற்கு வைக்கும் பொங்கலே அவர்களுக்கு உயர்ந்த விழா.

பொங்கலோ பொங்கல்!
பட்டிப் பொங்கல் பால் பொங்கல்
பொங்கலோ பொங்கல்!