காற்றில் வந்த கவிதை/ஒயில் கும்மி
உழவர்கள் வாழும் கொங்கு நாட்டு ஊர்களிலே நடை பெறும் பொங்கல் விழாவிலே ஒயில் கும்பி ஒரு சிறப்பான இடம் பெறுகிறது. ஒயில் என்றால் அழகு என்று பொருள். பலவகையான சந்தங்களுக்கு ஏற்றவாறு ஒயிலாக ஆடிக் கும்மி அடிப்பதால் இதற்கு ஒயில் கும்மி என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.
சாதாரணமாகப் பெண்கள்தான் கும்.மியடிப்பார்கள். கும்மி அவர்களுக்காகவே ஏற்பட்டது என்றுகூடக் கூறலாம். ஆனல், ஒயில் கும்மி பெண்கள் அடிப்பதல்ல. ஆடவர்கள் ஆடிப்பாடி நடிக்கும் ஆட்டம் அது.
எதிர் எதிராக இரண்டு வரிசைகளில் இளங்காளைகள் நின்றுகொள்ளுவார்கள். வரிசைக்குச் சுமார் பத்து அல்லது பன்னிரண்டு பேர் இருப்பார்கள். அவர்கள் தலையிலே நல்ல குஞ்சம் விட்டு அழகாகக் கட்டிய உருமாலைகள் விளங்கும். கையிலே ஒரு சிறிய கைக்குட்டையும் இருக்கும். கைக் குட்டைகளை லாகவமாக வீசிக்கொண்டு அந்தக் காளைகள் பாட்டின் சந்தத்திற்கேற்றவாறு ஆடுவார்கள். பரதநாட் டியத்திலுள்ள அசைவுகள் பலவற்றை இந்த ஆட்டத்திலே பார்க்கலாம். மிகவும் சிரமமான கரடி வித்தையையும் காணலாம்.
வள்ளியம்மன் ஒயில் கும்மிதான் எல்லோரும் விரும்பும் ஆட்டம். சிறுத்தொண்டன் ஒயில் கும்மி போன்ற மற்ற கும்மிகளும் உண்டு என்றாலும், வள்ளியின் அன்பைப் பரிசோதித்து முருகன் அவளை ஏற்றுக்கொள்ளும் கதைதான் மாறாத இன்பத்தை அளிக்கிறது. இரவு முழுவதும் ஒயில் கும்மி நடைபெறும். எல்லோருக்கும் தெரிந்த கதைதான். இருந்தாலும் வள்ளி கதையைக் கேட்பதில் மக்கள் சலிப்படைவதில்லை.
ஒயில் கும்மி அடிக்கும் கோஷ்டிக்கு வழக்கமாக ஓர் ஆசிரியர் இருப்பார். அவர்தான் ஆட்ட வகைகளைக் கற்றுக் கொடுப்பவர். அவர் முதலில் பாட்டைத் தொடங்குவார். பிறகு மற்றவர்கள் பாடிக்கொண்டு ஆடுவார்கள். சுமார் பத்து நிமிஷங்களுக்கு ஒரு முறை பாட்டின் சந்தமும் இசையும் மாறும். அவற்றிற்கேற்றவாறு ஆட்டமும் மாறும். பிள்ளையார் வணக்கம் இல்லாமல் கதை தொடங்காது. ஒயில் கும்மியும் பிள்ளையாருக்கு ஒரு ஒயிலான ஆட்டத்தைக் கொண்டிருக்கும். அது கொஞ்சம் வேகமான ஆட்டம். அதற்கான பாட்டைப் பார்க்கலாம்:
அரசரடியில் வீற்றிருக்கும் ஆனைமுகவோனே
- அதிரசமும் சர்க்கரையும் இங்கு வைக்கிறோமே
முக்கண்ணன் பெற்றெடுத்த மூஷிக வாகனனே
- மோர்க்குழம்பு அப்பளமும் முன்பு வைக்கிறோமே
சொல்லுமிந்தக் கும்மிதனில் சொல்குற்றமிருந்தால்
- சுப்ரமண்யர் கதையெனவே சீரியர்கள் பொறுப்பார்
ஆதிதாளத்துடனே ஆரபியும் சொன்னேன்
- ஆடிவந்து கையமர்ந்து அசைந்து மெள்ள நில்லும்
இப்படிப் பிள்ளையார் வணக்கம் கூறிவிட்டுக் கதை தொடங்கும். வள்ளியம்மை ஒயில் கும்மி ஒரு நீளமான நாடோடிப் பாடல். முழுவதையும் இங்கே தர முடியாது. ஒன்றிரண்டு பகுதிகளை மட்டும் இங்கு மாதிரிக்குக் கொடுக்கிறேன்.
ஒரு பகுதியிலே ஒரு சோலையின் வருணனே வருகின்றது. அந்தப் பாடலைப் பாடியாடும்போது அந்தச் சோலேயே பூத்துக் குலுங்குவது போலத் தோன்றும். இதோ அந்தப் பாட்டைப் பாருங்கள்:
- சோலை சிங்காரம் சொல்ல வெகு கெம்பீரம்
- சீருலாவும் பொய்கை ஒரம் சேருமானநேகம்
- சோலை சிங்காரம் சொல்ல வெகு கெம்பீரம்
(சோ)
- நல்லரளி மல்லிகைப்பூ முல்லையுடன் சாதியே
- செல்வமரிக் கொளுந்து செவந்திப்பூவும் சேருமே
- நல்லரளி மல்லிகைப்பூ முல்லையுடன் சாதியே
(சோ)
- பச்சைசா மந்தியும் பணிக்கு வெட்டி வேருமே
- செச்சை நந்தியாவட்டைசெண்பகப்பூச்சேருமே
- பச்சைசா மந்தியும் பணிக்கு வெட்டி வேருமே
(சோ)
- வண்டினம் புரண்டு மதுவுண்டு பாடும் காந்தாரம்
- கொண்ட செவிக்கானந்தம் குயில் குருவி
- சஞ்சாரம்
- கொண்ட செவிக்கானந்தம் குயில் குருவி
- வண்டினம் புரண்டு மதுவுண்டு பாடும் காந்தாரம்
(சோ)
"சோலை சிங்காரம் சொல்ல வெகு கெம்பீரம்' என்ற அடியை மட்டும் ஆடுபவர்கள் பாடிக்கொண்டே ஆடுவார்கள்,நாரதர் இல்லாவிட்டால் கதை இனிக்காது. அவருடைய 'கலகம்' இருக்க வேண்டும். அது கலகமானலும் கடைசியிலே எல்லாம் மங்களமாக முடிவதற்கு உதவுகிறது.
வள்ளியம்மை ஒயில் கும்மியிலேயும் நாரதர் வருகிருர். அவர்தான் வள்ளியைப்பற்றி முருகனுக்குச் சொல்லி அவரைக் கானகத்துக்கு அழைத்து வருகிருர். அவர் வழி காட்ட வேலன் வருகின்ற விதத்தை ஒயில் பாட்டுக் கூறுகிறது.
வில்லெடுத்து அம்பு தொடுத்து-தகதத்தம்
வேலர் புனம் பார்க்கவே
கன்னி வள்ளி தன்னைக்காண-தகதத்தம்
கந்தர் வனம் தேடிவருகிருர்
தூரவோ வழி கிட்டவோ-தகதத்தம்
சொல்லு மென்று வேலர் கேட்க
ரண்டுநா ழிகைக்குள் வழி-தகதத்தம்
இக்கணமே காண வைப்பேன்
இப்படி நாரதர் கந்தர்-தகதத்தம்
இருவர் தேடி வருகையிலே
ஆலோலம் ஆலோலம்-தகதத்தம்
அதனைக் கந்தர் காதில் கேட்டார்
தகதத்தம் தகதத்தம் தகதத்தம்
ஆடுபவர்கள் தகதத்தம், தகதத்தம் என்று கூறிக் கொண்டே ஆடுவார்கள். கடைசியிலே இப்படிக் கூறும் வேகம் அதிகரித்துக்கொண்டே போகும். வள்ளியைக் காண முருகன் அத்தனை வேகத்தோடு போகிறாரோ என்றுகூட நினைக்கத் தோன்றும்,