உள்ளடக்கத்துக்குச் செல்

காற்றில் வந்த கவிதை/மதுரைச் சொக்கர்

விக்கிமூலம் இலிருந்து
மதுரைச் சொக்கர்


ருமையாக ஒரு பொருள் கிடைத்தால் அதைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது. அதைப் பார்த்துப் பார்த்து உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது. தான் மட்டும் இவ்வாறு இன்பம் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றுகிற ஆசை ஒரு வகை.

தனக்கு மிக விருப்பமானதைத் தன் அன்புக்குப் பாத்திர மாணவர்களுக்குக் கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியடைவதைப் பார்த்து உள்ளம் பூரிப்பது மற்றொரு வகையான ஆசை.

தாய்க்கு ஒரு நல்ல மாம்பழம் கிடைக்கிறது. அதை அவளே உண்ண விரும்புவதில்லை. குழந்தைக்குக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.

சிறுவன் தனக்குக் கிடைத்த விளையாட்டுக் கருவியைத் தன் தோழனுக்குக் கொடுக்க விரும்புகிறான்.

காதலன் தன் காதலியை நினைக்கிறான். அவளுடைய மகிழ்ச்சியிலே அவன் பெரியதோர் இன்பங் காண்கிறான். தனக்கு அருமையாகத் தோன்றுகின்றவற்றையெல்லாம் அவன் தன் காதலிக்கு வழங்க நினைக்கிறான். அந்த நினைப்பிலே அவனுக்கு அளவில்லாத இன்பம் பிறக்கிறது.

இதைவிட உயர்ந்த இன்பம் ஒன்று இருக்கிறது. இறைவனுக்கு அளித்துப் பெறுகின்ற இன்பம் அது.

எல்லாம் தருகின்றவன், எல்லாம் நிறைந்தவன் இறைவன். அவனுக்கு நாம் கொடுக்கக் கூடியதொன்றுமில்லை. ஆனால், நமக்குப் பிரியமானதை அவனுக்கு அர்ப்பண மாகக் கொடுப்பதிலே ஒரு தனிப்பட்ட இன்பம் இருக்கிறது. அவன் கொடுத்ததைத் திருப்பி அவனுக்குக் கொடுப்பதேயானுலும் அதில் எல்லையற்ற இன்பம் பொங்குகிறது.

ஒரு பெரியவர் எண்ணிப் பார்த்தார். கடவுளுக்குக் கொடுக்கக்கூடியது தன்னிடத்திலே என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தார். எந்தப் பொருளைப் பார்த்தாலும் அது கடவுள் கொடுத்ததாக அவருக்குத் தோன்றியது. தாமாகவே உண்டாக்கிக்கொண்ட பொருளாகப் பார்த்துக் கடவுளுக்குக் கொடுக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. மேலும் மேலும் ஆராய்ச்சியிலே இறங்கினர். தமது உடைமைகளை யெல்லாம் ஒவ்வொன்ருக எண்ணிப் பார்த்தார்.

கடைசியிலே அவருக்கு வெற்றி கிடைத்தது. கடவுள் கொடுக்காமல் அவரே சம்பாதித்துக்கொண்டவை சில அவரிடத்திலே இருப்பதை அவர் கண்டு பிடித்துக்கொண்டார். உடனே கடவுளின் கோயிலுக்கு ஒடினர். "அப்பனே, இதோ எனக்கே சொந்தமான பொருள்களை உனக்குக் காணிக்கையாகக் கொண்டு வருகிறேன். இவற்றை ஏற்றுக் கொள். நான் செய்த கொடுமைகள், தீமைகள், பாவங்கள் எல்லாம் எனக்கே உரியவை. நீ அவற்றை எனக்குக் கொடுக்கவில்லை. அவற்றை உனக்கு அர்ப்பணம் செய்கிறேன்” என்று அவர் உள்ளம் உருகிக் கூவிஞராம்.

இறைவனுக்குக் கொடுக்கக்கூடிய நல்ல பொருள்கள் எதுவும் அவனருளால் கிடைக்காமல் நமது தனியுரிமையாக வாய்ப்பதில்லை. இருந்தாலும் அவன் கொடுத்ததையாவது. திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிற எண்ணம் பெரிதல்லவா?

அந்த எண்ணம் நம்மைப் புனிதமாக்குகிறது; உயர் வடையச் செய்கிறது. தான் பெற்ற இன்பம் உலகம் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிற உள்ளப்பாங்கு எளிதில் அமைவதில்லை. இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிற ஆசை இந்த உள்ளப் பாங்கை அமைப்பதற்கு வழி செய்கிறது. இறைவனுக்குக் கொடுக்க நினைக்கிறவன் அந்த இறைவன் உறைகின்ற உயிர்களிடத்திலே அன்பு காட்டுவதில் முனைகிறான். ஆருயிர்களுக்கெல்லாம் அன்பு செய்ய வேண்டும் என்று அவன் உறுதி கொள்ளுகிறான். இது இரண்டாவது படி. இந்தப் படியில் கால் வைத்தவன் உண்மையான முறையில் இறைவனே வழிபடுகின்றவன் ஆகிறான். ஆனால், முதற் படியையே காணுதவனுக்கு இரண்டாம் படியில் கிடைக்கும் இன்பம் தெரியாது.

ஒருவனுக்கு ஒரு அழகிய மலர் கிடைக்கிறது. எத்தனேயோ சிரமங்களுக்குப் பிறகு அது கிடைக்கிறது. அதை அவன் தன் காதலிக்குக் கொடுக்க நினைக்கவில்லை. அவளுக்குக் கொடுத்து அதனால் அவளும் அவனும் அடைகின்ற மகிழ்ச்சியைவிடப் பெரியதோர் இன்பத்தை அவன் பெற விரும்புகிறான். காதலியும் தானுமாகச் சென்று வடமதுரைச் சொக்கருக்கு அதை அர்ப்பணம் செய்ய அவன் எண்ணுகிறான்.

எத்தனையோ வகையான திருவிளையாடல்கள் புரிகின்றவர் அந்தச் சொக்கர். அவருக்கு இல்லாததொன்று மில்லை; இருந்தாலும் கிழவியின் பிட்டுக்கு ஆசைப்பட்டுப் பிரம்படி தின்கிறவரல்லவா? அவருக்கு அர்ப்பனம் செய்வதில் உள்ள பேரின்பத்தை அவன் எப்படியோ உணர்ந்து கொண்டான். ஆதலால் மலரை விரும்பும் காதலியை அழைத்துக்கொண்டே சொக்கருக்கு அம்மலரைச் சூட்ட அவன் விழைகின்றான்.
ஏழுமலை கடந்து-பெண்ணே
எடுத்து வந்தேன் செண்பகப் பூ

வாடாமலே குட்டிடுவோம்-நாமும்

வடமதுரைச் சொக்கருக்கே

காதலிக்குச் சூட்டுவது இன்பம்; கடவுளுக்குச் சூட்டுவது மிகமிகப் பெரிய இன்பம். கடவுளைப் பற்றிய நினைவிலே காதலும் நிறைவெய்துகிறது என்பதை அறிந்து கொள்வது வாழ்க்கையின் பெரிய சாதனையல்லவா?





*