உள்ளடக்கத்துக்குச் செல்

உணர்ச்சி வெள்ளம்/நூல்கள் இன்னும் தேவை

விக்கிமூலம் இலிருந்து

நூல்கள் இன்னும் தேவை

லகத்தமிழர் மாநாட்டிற்கு வந்த தமிழ்ப்பற்று கொண்ட தமிழன்பர்களுக்குத் திருவாரூர் தியாகராசன் இங்கு ஒரு அரிய விருந்து கொடுத்தார்.

அதே திருவாரூரைச் சார்ந்த தம்பி கருணாநிதி எழுதிய சிலப்பதிகார நாடகக் காப்பிய வெளியீட்டு விழாவும் இங்கே நடைபெறுகிறது.

கருணாநிதி பேசும்போது நாங்கள் இருவரும் திருவாரூரைச் சார்ந்தவர்கள் என்று கூறினார்.

நம்முடைய நண்பர் பக்தவத்சலம் அவர்கள் தானும் சேர்ந்து கொள்ளவேண்டுமென்று நான் பெண்ணெடுத்தது திருவாரூர் என்று சொல்லித் தாமும் திருவாரூரைச் சார்ந்தவர் என்று கூறிக்கொண்டார்.

அவர் வேறு ஒன்று கூறுவார் என்று எதிர்பார்த்தேன். தியாகராசனும் கருணாநிதியும் திருவாரூர் என்று கூறியது போல் விழாவுக்குத் தலைமை தாங்குகின்ற அவரும் நானும் தொண்டைமண்டலத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறுவார் என எதிர்பார்த்தேன். திருவாரூரிலும் தஞ்சையிலும் பிற பகுதிகளிலும் இருக்கும் தியாகராசன் போன்றவர்கள் தொண்டை மண்டலத்திலிருந்து சென்றவர்கள்தான். நெடுங்காலத்திற்கு முன்பே அவர்கள் சென்றதால் பந்தங்கள் அறுபட்டிருக்கலாம். ஆனால் இப்படிப் பலரைத் தொண்டை மண்டலம் அனுப்பிக் கொடுத்திருக்கிறது என்பதும் சோழ நாடு பலரை இங்கு அனுப்பிக் கொடுத்திருக்குகிறது என்பதும் தமிழ் நாட்டினுடைய வரலாறாக இருந்திருக்கிறது.

யார் எந்த நாட்டைச் சார்ந்திருந்தாலும் அவர்கள் தமிழர்கள் என்ற முறையில் நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும்.

தமிழ் மொழியின் மாண்பைப்பற்றி நாம். மட்டுமல்ல அனைத்து நாட்டு அறிஞர்களும் இங்கு வந்து எடுத்துரைத்திருக்கிறார்கள்.

எத்தகைய ஏற்றமிகு தமிழ் மொழிக்கு நாம் சொந்தக்காரர்கள் என்ற பெருமித உணர்ச்சி நமக்கு இயற்கையாக வரத்தான் செய்யும்.

அந்த மொழியின் ஏற்றத்திற்கு ஏற்ற அளவில் நாம் ஏற்றம் பெற்றிருக்கிறோமா என்பதுதான். ஐயப்பாடே தவிர அந்த மொழியினுடைய ஏற்றம் குறித்து ஐயப்பாடுகிடையாது.

தமிழிலுள்ள காப்பியங்களும் செய்யுள் நூல்களும் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்றால் உருவத்திலேயும் நாடக வடிவத்திலேயும் கட்டுரை வடிவத்திலேயும் பல நூல்கள் நமக்குத் தேவைப்படுகின்றன.

அந்த வகையில் தம்பி கருணாநிதி சிலப்பதிகாரத்தை நாடக உருவில் தந்திருக்கிறார். தமிழ் கற்ற அனைவரும் இதனைப் பாராட்டுவார்கள். தம்பி கருணாநிதியின் சிறந்த தமிழ் நடை அனைவரும் உணர்ந்தது.

அவர், சில விஷயங்களைப் பற்றியும்--சில போக்கைக் கண்டித்தும் எழுதுகிற தமிழாக இருந்தால்கூட படிக்கும் போது--கண்டிக்கப்பட்டவர்கள் கூட அதைப்படிக்கிறபோது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நம்மைத் தவறாகப் புரிந்து கொண்டல்லவா எழுதியிருக்கிறார் என்று கருதிக்கொண்டிருப்பார்களே தவிர அவரது தமிழ் நடையிலே குற்றம் கண்டிருக்க மாட்டார்கள்--அவரது நடையில் இலக்கிய அறிவும் கலைத் திறனும் இருக்கும். அவர் இந்த நாடகக் காப்பியத்தை எழுதுவதற்கு முற்றிலும் பொருத்தமானவர்.

கருணாநிதியின் தமிழ் நூலை ஆங்கிலத்தில் நண்பர் டி. ஜி. நாராயணசாமி நல்லமுறையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

செய்யுள் வடிவமாக இருக்கும் சிலப்பதிகாரத்தை நாடகக் காப்பியமாக ஆக்கிய பிறகு அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது, அதிலும் செய்யுள் உருவில் தருவது என்பது கடினமானது. ஆனால் அச்சுவை கெடாமலும் பயன் மிகுந்தும் காணப்படுகிற அளவில் ஆங்கிலத்தில் இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இன்னும் கருணாநிதி தமிழ்ப்பெருங் காப்பியங்களை நாடகங்களாக ஆக்கித் தரும் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதில் பெருமைப் படுகிறேன்.

இப்படிப்பட்ட தமிழின் பெருமைபற்றி மாநாடுகளில் கூடிப் பேசுவதில் மட்டும் திருப்தியடையாமல் தமிழ் இலக்கியத்தின் கருத்துக்களை எல்லா மக்களும் உணரத்தக்க விதத்தில் இனிய--எளிய நூல்களாக்கி வெளியிடுவதில் முனைந்து நிற்கவேண்டும். அந்தக் காரியத்தில் ஈடுபட்டுள்ள கருணாநிதியை மீண்டும் வாழ்த்துகிறேன்.

ஆங்கில மொழிபெயர்ப்பு நூலைப் பெற்றுக்கொண்ட ஆஸ்திரேலியா நாட்டைச் சார்ந்த நண்பர் ஜோர் தான் அணிந்திருந்த தமிழ் உடையைப் பார்த்தால் அவரும் திருவாரூரோ என்று எண்ணும் அளவில் இருந்தது.

தமிழ் நூலைப் பெற்றுக்கொண்ட இலங்கை அமைச்சர். திருச்செல்வத்தின் துணைவியார் திருமதி திருச்செல்வம் இலங்கையைச் சார்ந்தவர் என்பதைவிட இலங்கையிலுள்ள தமிழன்பர் குடும்பத்தைச் சார்ந்தவர் எனலாம்.

தமிழர் என்று அவர்களை நான் சொல்வதுகூட அவர்கள் நாட்டு அரசியலில் அருவெறுப்பையும் அச்சத்தையும் உண்டாக்கிவிடுமோ? என்பதால் அப்படிக் கூறத் தயக்கப்பட்டேன்.

இலங்கை வெளிநாடு என்றாலும் நமக்கும் அவர்களுக்கும் இடையே இருப்பது இருபது மைல் தொலைவுதான்!

வாடைக் காற்று கொஞ்சம் வேகமாக அடித்தால்கூட அந்தக் காற்று இந்தப் பக்கம், இந்தக் காற்று அந்தப் பக்கம் என்ற நிலையில் இருப்பவர்கள் அப்படி அடிக்கிற அந்தக் காற்றும் நல்ல காற்றாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது கவலை.

சிலப்பதிகார நாடகக் காப்பியத்தை ஆக்கித்தந்த தம்பி கருணாநிதிக்கு மீண்டும் நமது நன்றி.