உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக் கனிகள்/அனுதாபம்

விக்கிமூலம் இலிருந்து

27. அனுதாபம்

483.எதை நான் இதய பூர்வமாக நம்புகிறேனே. அதையே வேறொரு ஆன்மாவும் நம்புமேல் அப்பொழுது நம்பிக்கை அளவு கடந்து ஆற்றல் பெறும்.

நொவாலிஸ்

484.எவ்வளவு தாழ்ந்தோருடைய அன்பு கிடைத்தாலும் போதும். எந்தக்காலத்திலும் மனிதன் அன்பின்றி மட்டும் வாழ முடியாது.

ரொமெய்ன் ரோலண்டு

485.அருட்கண்ணீர் தோய்ந்த முகத்தினும் உண்மை காட்டும் முகம் கிடையாது. கண்ணீர்விட்டு வருந்துவதைக் கண்டு மகிழ்வதினும் கண்ணீர்விட்டு இரங்குவது எத்துணைச் சிறப்பாகும்!

ஷேக்ஸ்பியர்

486.அன்பால் விடுதலை பெறுபவன் அதிர்ஷ்டசாலி, அதன்பின் அவனுக்குப் பாபமுமில்லை, பாடுமில்லை.

கார்ப்பெண்டர்

487.மனிதன் அடையக் கூடிய உயர்ந்த பொருள் அறிவன்று, அறிவுடன் கூடிய அனுதாபமேயாகும்.

தோரோ

488.மகமது நபியின் அழகிற் சிறந்த இரண்டாம் மனைவி அயேஷா ஒருநாள் “முதல் மனைவி கதீஜாவிட முள்ளதைவிட என்னிடந்தானே தங்கட்கு அதிகப் பிரியம்?” என்று கேட்டபொழுது அவர் "இல்லை இல்லை அல்லா சாட்சியாக இல்லை, என்னைப் பிறர் நம்பாத காலத்தில் ஆதியில் அவள்தான் நம்பினாள். அப்பொழுது அவள் ஒருத்தியே என் நண்பர்” என்று பதிலுரைத்தார்.

கார்லைல்

489. அனுதாபம் காட்டுமளவே அறநெறியில் முன்னேறுவதாகக் கூற முடியும்.

ஜார்ஜ் எலியட்

490.துன்புறுவோர் அனைவரும் சகோதரர். துன்பம் துடைப்போனும் சகோதரனே. அவன் ஒருவன் கிடைத்து விட்டால் அந்த இன்பத்துக்கு இணையேது?

பர்ன்ஸ்

491. பிறரிடம் துக்கத்தைச் சொன்னால் அவர் அதைக் கேட்டு இறுதியில் பெருமூச்சு விடுவரேல் அப்பொழுது துக்கம் ஆறும் என்பதில் ஐயமில்லை.

டானியல்

492.அனுதாபத்தோடு பார்த்தால் தெளிவு ஏற்படாமல் போனாலும் போகலாம். அனுதாபம் இல்லாவிட்டாலோ ஒன்றுமே தெரியாமல் போய்விடும்.

இஸிடோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்_கனிகள்/அனுதாபம்&oldid=1000036" இலிருந்து மீள்விக்கப்பட்டது