அறிவுக் கனிகள்/கொள்கை நம்பிக்கை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

28. கொள்கை நம்பிக்கை

493.கொள்கையில் பரிபூரணமான நம்பிக்கை வேண்டியது தான். ஆனால் அது குருட்டுத்தனமானதாய் இருந்து விடக்கூடாது.

ஆவ்பரி

494.காதால் உபதேசம் கேட்பினும் கருத்தில் நம்பிக்கை உண்டாகாவிடின் கடுகளவு நன்மையும் ஏற்படாது.

கதே

495.ஒருவன் அநேக விஷயங்களில் வைதீகமாயிருக்க வேண்டும். இல்லையெனில் அவனுக்குத் தன் சொந்த அவைதீகக் கொள்கையைப் போதிக்க ஒருபொழுதும் நேரமிராது.

செஸ்டர்டன்


496.நாம் அரைகுறையாக அறிவதையே அதிக உறுதியாக நம்பிவிடுகிறோம்.

மான்டெய்ன்

497.உண்மையைக் காண அறிவை அழக்கச் சொல்லுதல் பகலொளியைக் காணக் கண்களை அவித்துக் கொள்ளச் சொல்லுதல் போலாம். அறிவை அழிக்கச் சொல்வது சமயத்தின் சூழ்ச்சி அன்று, மூட நம்பிக்கையினதே.

தாமஸ் வில்ஸன்

498.சரியான நம்பிக்கை இகத்திலிருந்து பரத்துக்குப் பாலம் அமைக்கும்.

யங்

499.சமயவெறி கொண்டார். கொள்கை முறைகள் குறித்துச் சண்டையிடட்டும். வாழ்வைச் சரியாக நடத்தினால் கொள்கை தவறாய்விட முடியாது.

போப்

500.கொள்கையைக் கூறுவதில் காணப்படும் நம்பிக்கையைவிட அதிகமான நம்பிக்கை, கொள்கையைக் குறித்து சந்தேகம் கூறுவதில் காணப்படும்.

டெனிஸன்

501.பிடிவாதமான மூட நம்பிக்கை தனக்குப் பிரியமான ஒரு பொய்யை மணந்துகொண்டால் அதை விட்டுப் பிரியாமல் இறுதிவரை அணைத்துக்கொள்ளும்.

மூர்