அறிவுக் கனிகள்/அறிவீனம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

16. அறிவீனம்

369.மூடன் தன்னை அறிவாளி என்று மதித்துக் கொள்கிறான். ஆனால் அறிவாளியோ தன்னை முட்டாள் என்று அறிவான்.

ஷேக்ஸ்பியர்

370.தேவர்கள் செல்ல அஞ்சும் இடத்திற்கு மூடர்கள் பாய்ந்து விடுவர்.

போப்
ஸ்பென்ஸர்

371.முட்டாள்கள் தவறு செய்தால் அதனால் அவர்க்கு விளையும் தீமையினின்று அவர்களைக் காப்பாற்றிவிட்டால், உலகத்தை முட்டாள்களால் நிரப்பியவர்களாவோம்.

ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்

372.ஒவ்வொருவனும் பிழை செய்யக் கூடியவனே. ஆனால் மூடனைத் தவிர வேறு யாரும் பிழையை விடாமல் பிடித்துக்கொள்ளார்.

ஸிஸரோ

373.உண்டென்றோ அல்லது இல்லையென்றோ பகுத்தறியாது பகர்வோரே மூடர்கள், அனைவரிலும் தாழ்ந்தவர்.

தாந்தே

374.மூடன் பிறரைக் குறை கூறுவான்; அரைகுறை அறிவாளி தன்னைக் குறைகூறிக் கொள்வான். அறிவு முற்றியவன் தன்னையும் குறைகூறான், பிறரையும் குறை கூறான்.

ஹெர்டர்

375.தங்கள் அபிப்பிராயத்தை ஒரு பொழுதும் மாற்றிக்கொள்ளாதவர் மூடரும் இறந்தவருமே.

லவல்

376.போக்கிரி என்பவன் தலையைச்சுற்றி மூக்கைத் தொடும் முட்டாள்.

கோல்ரிட்ஜ்
377. தவறு—அதில் எவ்வளவு உண்மையுளதோ அவ்வளவு அது அபாயகரமானதாகும்.
அமீல்

378.தன் திருப்தியை நாடாது, உலகத்தின் மதிப்பை நாடி, தன் விருப்பத்திற்கு மாறாகப் பொருளும் புகழும் தேடச் சிரமம் எடுத்துக்கொள்பவன் என் அபிப்பிராயத்தில் முழு மூடன் ஆவான்.

கதே

379.பிறர் நம்மை அறிந்துகொள்ள முடியாதபடி நடந்து கொள்வது நம் வழக்கம். அதன் முடிவு யாதெனில்—நாமே நம்மை அறிந்து கொள்ள முடியாதபடி நடக்கப் பயின்று விடுகிறோம் என்பதே.

பிரெஞ்சுப் பழமொழி

380.மாந்தர் மூடராக வாழலாம், ஆனால் மூடராக இறக்க முடியாது.

யங்