அழகம்மை ஆசிரியவிருத்தம்

விக்கிமூலம் இலிருந்து

அழகம்மை ஆசிரிய விருத்தம்[தொகு]

ஆசிரியர்: கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை[தொகு]

காப்பு

உதயமார்த்தாண்ட விநாயகர்
(ஆசிரியர் பிறந்த ஊர் தேரூர். இது, சுசீந்திரத்துக்கு அருகில் உள்ளது.
அங்குள்ள விநாயகர் திருநாமம் ‘உதயமார்த்தாண்ட விநாயகர்’ என்பதாகும்.
தேரூர்,`இரதபுரி` என்றும் அழைக்கப்பெறும்.)
(வெண்பா)
சீருதவும் நல்லூராந் தேரூர் அழகிதிருப்
பேருதவும் பாவினையான் பேசவே - ஓருதய
மார்த்தாண்ட வேழம் வழுவேதும் வாராமல்
காத்தாண்டு கொள்ளக் கடன்.

(பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)

(நூல்)

1. பூவாகி அப்பூப் பொருந்துவண மாகிஅப்

பூவிலுறு மணமு மாகிப்
பூதமாய்ப் புலனாய்ப் புறப்பாழு மாய்அப்
புணர்ப்பைஅறி விக்கும் அறிவாய்
ஓவாத அறிவினுக் குறுமிலக் காகிநின்று
உண்மையை உணர்த்து கின்ற
ஒண்சுடர்க் கற்பூர தீபமாய் வல்லிருள்
ஒழித்தில குநெறி விளக்கும்
மாவேத மாய்ஆக மப்பொருளு மாகியே
மலியுமுன் னருளை யென்றும்
வாயார வாழ்த்தித் துதிப்பதினும், மேலான
வாழ்வேதும் எங்கு முண்டோ?
தேவாதி தேவர்தொழு மூவா மருந்தே!
சிவானந்த போக விளைவே!
தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
தேவி அழகம்மை உமையே!
"கவிமணிக்கு இளமைப் பருவத்திலேயே கவிதை புனையும் ஆற்றல் இருந்தது. அவர் எழுதிய முதல் கவிதை (1895) தேரூர் இறைவிமீது பாடிய அழகம்மை ஆசிரியவிருத்தம் என்பதாகும்.” -முனைவர் வை.கிருஷ்ணமூர்த்தி, 2007.

2. பத்திக்கும் என்மடப் புத்திக்கும் ஓயாத

பகையலால் பட்ச மில்லை;
பஞ்சமா பாதகமும் எஞ்சா தெனக்குற்ற
பள்ளியிற் பாடம், அம்மா!
துத்திக்கும் உன்பதம் சுற்றிப் பணிந்துசிறு
தொண்டுகள் செய்து மறியேன்;
தோத்திரப் பாமாலை சாத்தி யறியேன்,இவை
சொல்லுதற் கொன்றி ரண்டோ?
மத்திக்கும் வெண்தயிரை யொத்துக் கலங்குமென்
மறுக்கம்நீ காண விலையோ?
மைந்தனேன் செய்கின்ற குற்றங்கள் ஏதுமொரு
வகையா யெடுக்க லாமோ?
தித்திக்கும் முக்கனிகள் எத்திக்கும் உதிர்கின்ற
செறிமரச் சோலை சூழும்
தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
தேவியழ கம்மை உமையே!

3. ஆற்றுப் பெருக்கையொத் தழிகின்ற செல்வத்தை

அடைவதில் விருப்பு மில்லேன்
ஆண்டியாய் வேண்டிப் புசித்துண்டு நாடோறும்
அலைவதில் வெறுப்பு மில்லேன்;
காற்றுப் பெயர்ந்திடிற் காயமோ சூத்திரக்
கயிறற்ற பாவை, அதனால்
காரியம் சிறிதேனு முளதோ? உன்இருபதக்
கஞ்சமே தஞ்ச மென்று
போற்றிப் பெறும்பேறு பெறுதற்கென் உள்ள(ம்)எப்
போதுந் தவிக்கு(து) அம்மா!
பொங்கிடுங் குரவையிட் தெங்குமோ ரொலிசெய்து
பொலிவாக மள்ள ரெல்லாம்
சேற்றுப் பெருக்கூடு நாற்றைப் புதைக்கின்ற
செய்யகஞ் சூழும் ஊராம்
தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
தேவியழ கம்மை உமையே!


4. பொன்னையே பெண்ணையே மண்ணையே எண்ணிஎன்

பொழுதெலாம் போக்கி விட்டேன்,
புண்ணியச் செயலெதும் பண்ணியான் அறிகிலேன்,
பொல்லாங்கு புரியும் நெறியேன்.
முன்னையோர் சொன்னமொழி உன்னாத முழுமூடன்
மூர்க்கரோ டுறவு கொண்டேன்
மூவுலகும் என்னையொப் பாரில்லை, இல்லைஇது
முக்காலும் உண்மை, உண்மை
அன்னையே நின்னையே அல்லாது பின்னையோர்
ஆதாரம் வேறும் உண்டோ?
அறிவற்ற சிறியேனை, அன்பற்ற கொடியேனை,
அடிமையாய் ஆண்டு கொள்வாய்;
தென்னையே புன்னையே மன்னிவளர் சோலைஎத்
திக்கினுஞ் சூழும் ஊராம்
தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
தேவியழ கம்மை உமையே!

5. தையலார் மீதிலே மையலாய் ஓயாது

சண்டாள நெறியி லெல்லாம்
சாடிக்குதித்தோடி அலைகின்ற மனதையான்
சற்றேனும் உன்னை நோக்கிப்
பொய்யிலா மெய்யன்பு பூண்டே துதித்திடப்
போதனைகள் செய்வ தெல்லாம்
பொறியெழும் பாலைவிழு துளியாவ தன்றிஒரு
புண்ணியம் பெறுதல் காணேன்;
மையிலா நெறிகாட்டி, அடியரிற் கூட்டி,உன்
மலர்ப்பதஞ் சென்னி சூட்டி
வற்றாத கருணையாந் தெள்ளமுதம் ஊட்டி,எனை
வாழ்விப்ப தெந்த நாளோ?
மெய்யெலாம் துய்யவெண் சங்கினம் இராப்பொழுது
திங்களின் ஒளியை வீசும்
தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
தேவி அழகம்மை உமையே!

அழகம்மை[தொகு]

6. முக்கோண முதலான கோணங்க ளிட்டுனது

மூலாட் சரத்தை யிட்டு
மும்மலம் அறுக்குமுன் செம்மலர்த் தாளையே
முறையுடன் பூசை புரிவோர்,
மிக்கோ ரென,சித்தி எட்டையும் பெற்றபின்
மேலான வீடும் அடைவார்;
மேதினியில் இவ்வுண்மை அறியாத மாந்தரே
வேறுதெய் வங்கள் பணிவார்;
பொக்கான எள்ளினை மிக்கவே ஆட்டினும்
பூசுதற் கெண்ணெய் தருமோ?
பொய்யான தெய்வங்கள் ஒருகோடி
புண்ணியம் சிறிதும் உண்டேல் போற்றினும்
திக்கா றிரண்டோடு மிக்காறு பாய்கின்ற
செய்யகஞ் சூழும் ஊராம்
தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
தேவியழ கம்மை உமையே!

7. சந்ததிக் கேயென்ன என்னைப் பயந்திட்ட

தந்தைதாய் செய்த தவமோ?
தலைநாளில் யான்செய்த புண்ணியமோ? அல்லதுன்
தண்ணருட் பெற்றி தானோ?
சிந்தையுன் பெயரினொடு நாவுனது சீரையும்
திறமென்று கொண்டு, நித்தம்
சீமாட்டி யென்றுனது கால்மாட் டிலேவந்து
சென்னியும் பணிய நின்றேன்;
எந்தநாள் உள்ளமும் இரங்கிநீ ஆள்வையோ?
எவ்விதத் துய்கு வேனோ?
இவ்வுடலை இன்னமும் எடுத்தெடுத் துழல்வனோ?
யாதொன்றும் அறிகி லேனே!
செந்தமிழ் மணத்தினொடு செல்வர்மன முங்கொடைச்
செங்கைதரு மணமும் மாறாத்
தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
தேவியழ கம்மை உமையே!


8. ஆங்காரி ஆனந்தி அம்பிகை நிரந்தரி

அந்தரி ஆளி யூர்தி
ஆரணி சர்வபரி பூரணி நாரணி
அயிராணி புயக வேணி
பாங்கான பார்வதி பார்க்கவி புராதனி
பகவதி வீரி நாரி
பயிரவி மகிடசம் மாரியென் றுனதுபேர்
பல்லா யிரங்கள் சொல்லி,
ஓங்கா தரத்தொடு பணிகின்ற அடியாரின்
அபயபதம் என்ற னக்கிவ்
உலகாளும் இறைவன் கவிக்குமொரு முடியினும்
உயர்ந்ததிரு முடிகள், அம்மா!

சொற்பொருள்

தேங்காமரம்- தேம்+கா+மரம்;
கொக்கு= மாமரம்.

தேங்கா மரத்திலே மாங்கா பறிக்கவொரு
சினைமந்தி கொக்கை நோக்கும்
தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
தேவியழ கம்மை உமையே!


9. வாணிக்கும் நளினிக்கும் அரியதாய் என்றுன்னை

வாயார வாழ்த்தி நின்றேன்;
மந்தாரம் முல்லைஇரு வாட்சிநீ யென்றுதலை
மாலையின் அணிந்து கொண்டேன்;
கோணுக்குள் வளர்கின்ற குயிலென் றுனைத்தினம்
கோணாது பேணு கின்றேன்;
குளிரான திங்களொடு கொண்டலென் றென்பவக்
கோடையுந் தீர வந்தேன்;
மாணிக்கம் வயிரமர கதமும்நீ யென்றென்
மனப்பே டகத்து வைத்தேன்;
வையகத் தெளியேனை ஆட்கொள்ள வந்தகுல
மாதெய் வம்,நீ யல்லவோ?
சேணுக்கு நாட்டுபல தூணுக்கு நிகரெனத்
தெங்கினஞ் சூழும் ஊராம்
தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
தேவியழ கம்மை உமையே!


10. கொண்டலைக் கண்டனைய கூந்தலும், குவியாத

கோகனகம் ஒத்த முகமும்
குண்டலம் திகழ்கின்ற காதும்,ஒப் பின்றிஅருள்
குடிகொண்ட நீண்ட விழியும்
தொண்டையங் கனிவாயும், வெண்மூ ரலும்,ஞான
சுதைதங்கு கும்ப தனமும்,
துடியொத்த இடையு(ம்),ஒரு பிடியொத்த நடையும்
சூலஞ் சுமந்த கரமும்,
பண்டைநாள் சிவனோடு வாதாடி நடமிட்ட
பாதார விந்த மலரும்,
பாலனேன் கண்டுகளி கூரவே, திருவுளம்
பாலிக்க வேண்டும், அம்மா!
தெண்டிரை உடுத்துபூ மண்டலத் தேவந்த
தேவபுரி யொத்த புரியாம்
தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
தேவியழ கம்மை உமையே!

அழகம்மை ஆசிரியவிருத்தம் முற்றும்[தொகு]

கவிமணியின் கவிமலர்கள்
இலக்கிய பஞ்சகம்
கவிதை
கம்பன்
பாரதி
மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி