கலைக்களஞ்சியம்/அகநானூறு

விக்கிமூலம் இலிருந்து

அகநானூறு சங்க இலக்கியமாகிய எட்டுத் தொகையுள் ஒன்று; மற்ற ஏழு தொகை நூல்களைவிட அளவால் பெரியது; அகப்பொருள் பற்றிய தொகை நூல்களுள் சிறந்தது; அதனாலேயே அகம் என்ற பெயரும் பெற்றது. அளவால் குறுகிய அடிகளையுடைய நானூறு பாட்டுக்களைக் கொண்ட குறுந் தொகைக்கு மாறாக நெடுந்தொகை என்னும் பெயரும் இதற்கு உண்டு. பதின்மூன்று அடிமுதல் முப்பத்தோரடிவரையில் கொண்ட பாட்டுக்கள் இதில் அமைந்துள்ளன. பாட்டுக்கள் எல்லாம் ஆசிரியப் பாவால் இயன்றவை.

இந்த நூலைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகன் உருத்திரசன்மன்; தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. இப்பாண்டியனும் புலமை நிரம்பியவன் என்பது இவன் பாடிய செய்யுளால் (அகம்-24) அறியலாம்.

மற்றைத் தொகை நூல்களுக்கு இல்லாத சிறப்புகள் சில இதற்கு உண்டு. அவற்றுள் ஒன்று இந்நூல் களிற்றியானைநிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை என்று மூன்று பகுதியாக அமைந்திருப்பது. ஒவ்வொரு பகுதியும் தனி நூல் போலவே உரையாசிரியர்களால் எடுத்துரைத்து மேற்கோள் காட்டப் படுகிறது. அதனாலேயே அகநானூறு மிகச் சிறப்பாகப் போற்றிக் கற்கப்பட்டது என்னும் உண்மை விளங்குகிறது. களிற்றியானைநிரை என்பது, முதல் நூற்றிருபது பாட்டுக்களை உடையது. அடுத்த நூற்றெண்பது பாட்டுக்கள் மணிமிடைபவளம் எனப்படும். இறுதி நூறு பாட்டுக்கள் நித்திலக்கோவை எனப்படும். பொருட் சிறப்புக் காரணமாகக் களிற்றியானைநிரை என்ற பெயரும், செய்யுளும் பொருளும் ஒவ்வாத அமைப்பால் மணிமிடைபவளம் என்ற பெயரும், செய் யுளும் பொருளும் ஒத்த அமைப்பால் நித்திலக்கோவை என்ற பெயரும் வழங்கியதாகக் காரணம் கூறப்படும். இந்நூலின் மற்றொரு சிறப்பு, பாலை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் ஐந்து திணைகளும் இதில் ஒரு முறைபற்றி அமைக்கப்பட்டுள்ள பொருத்தமாகும். ஒற்றை எண்ணுள்ள பாட்டெல்லாம் பாலைத் திணைக்கு உரியவை; இரண்டும் எட்டுமாக வருவன குறிஞ்சித் திணைப் பாட்டுக்கள். நான்கு, பதினான்கு, இருபத்து நான்கு என வருவன முல்லைத்திணைக்கு உரியவை. ஆறு என வருவன மருதத்திணை பற்றியவை. பத்தாம் எண்ணுள்ளவை நெய்தல்திணை பற்றியவை. பல நூறு பாட்டுக்களிலிருந்து தேர்ந்தெடுத்துத் தொகுத்தவர்கள் இவ்வாறு எண்முறை பற்றி அமைக்க எவ்வளவு முயன்றிருக்க வேண்டும் என்று வியப்படைவதற்கு உரிய அமைப்பு இது. இதனால் பாட்டின் எண்ணை அறிந்ததும் அப்பாட்டு இன்ன திணை பற்றியது என்று தயங்காமல் கூறிவிடலாம்.

அகப்பொருள் பற்றிய பாட்டில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் மூன்றினையும் விடாமல் கூறுதல் சிறப்புடையது. அத்தகைய வாய்ப்பு குறுந்தொகையில் உள்ள சிறு பாட்டுக்கள் பலவற்றிற்கு இல்லை. இந் நூலில் ஏறக்குறைய எல்லாப் பாட்டுகளுக்கும் முதல் கரு உரி மூன்றும் நிறைந்தனவாக உள்ளன.

இந்நூலில் பல பாட்டுக்களில் வரலாற்றுக் குறிப்புக்கள் உள்ளன. பழங்காலத்து அரசர், குறுநில மன்னர் முதலான பலரைப் பற்றிய சிறு குறிப்புக்களும், அக்கால மக்களின் பழக்க வழக்கம் முதலியன பற்றிய குறிப்புக்களும் பல பாட்டுக்களில் உள்ளன.

காதலர்களின் தூய உணர்ச்சிகள், தன்னலம் துறந்த வாழ்க்கை, அன்பின் ஆழம், கடமைப்பற்று, முயற்சிச்சிறப்பு முதலியனவும், தோழியின் அறிவாற்றல், பேச்சுத்திறன் முதலியனவும் இந்நூலால் தெளிவாகின்றன. இதிலுள்ள பாட்டுக்கள் உள்ளத்தின் ஆழ்ந்த நுண்ணிய உணர்ச்சிகளைச் செறிவான தமிழ் நடையில் அமைத்துக் காட்டுகின்றன.

முதல் தொண்ணூறு பாட்டுக்களுக்குப் பெயர் அறியப்படாத ஒருவர் எழுதிய குறிப்புரை ஒன்று உள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த எழுபது பாட்டுக்களுக்கு (91-160) உரை எழுதி வெளியிட்டவர் ஸ்ரீவத்ஸ சக்கரவர்த்தி இராஜகோபாலையங்கார். 1945-ல் பெருநாவலர் வேங்கடசாமி நாட்டாரவர்களும் கரந்தைக் கவியரசு ரா.வேங்கடாசலம் பிள்ளை அவர்களும் நூல் முழுவதற்கும் உரை எழுதியுள்ளனர்.

இதில் உள்ள நானூறு பாட்டுக்களையும் பாடியவர்கள் நூற்று நாற்பத்து நால்வர். முதலில் அமைந்த கடவுள் வாழ்த்தைப் பாடிச்சேர்த்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்; இவரைப் பிற்காலத்தவர் எனச் சிலர் கொள்வர். பார்க்க: எட்டுத் தொகை. மு. வ.